Share

Mar 6, 2013

பிள்ளைப் பிராயத்திலே







ஐந்தாம் வகுப்பு  படித்து முடித்திருந்த நேரம். ரிசல்ட் வரவில்லை. 
மே மாத லீவு. அடுத்த மாதம் ஆறாம் வகுப்பு போகிற த்ரில். 
பக்கத்து வீட்டு பையன் ஒருவன் ’ஆறாவது வகுப்பு ரொம்ப கஷ்டம்.ரொம்ப ரொம்ப கஷ்டம். ஐந்தாவது மாதிரி ஜாலியா இருக்கலாம் என்று நினைச்சுக்காதே’ என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் அப்போது ஆறாம் வகுப்பு பரிட்சை எழுதியிருந்தான்.
மே மாத லீவு என்பதால் எதிர்த்த வீட்டுக்கு தேவகோட்டையில் இருந்து ஒரு பையன் – பெயர் ராஜாராம் – வந்திருந்தான். துறு துறு என்று இருந்தான். 
என்னிடம் வந்தான். ’துரை! இந்த திருச்சியில் காவிரியாறு பார்த்திருக்கியா? உச்சிப்பிள்ளையார் கோவில் போயிருக்கியா? பொன்மலை பார்த்திருக்கியா?’ என்றான். ’இல்லண்ணா! உன் பேரு ராஜாராமா?’
 ’ஆமா. தேவகோட்டையில் ஏழாங்கிளாஸ் படிக்கிறேன். அடுத்த வருடம் எட்டாப்பு’
‘ஆறாங்கிளாஸ் ரொம்ப கஷ்டமாண்ணா! ’
’யாரு சொன்னா! ரொம்ப ஈசி. ஒன்னு தெரிஞ்சிக்க. பயந்தீன்னா எதுனாலும் கஷ்டம் தான்.’
’சரி. இன்னைக்கி பொன்மலைக்கு போவமா?’
’வழி தெரியாதேண்ணா!’
’போறப்ப விசாரிச்சிக்கிட்டே போலாம். நான் இந்த ஊரே கிடையாது. நான் உன்னை கூட்டிட்டுப் போறேன் பாரு.’

வீட்டிலிருந்து கிளம்பி பொன்மலையைப் பார்த்துக்கொண்டே, வழி விசாரித்துக்கொண்டே போய் மலையில் ஏறி உச்சியில் உட்கார்ந்தோம். விமான நிலையம் தெரிந்தது. நல்ல உச்சி வெய்யில். ஒரு விமானம் வந்து இறங்கியது. ரொம்ப சந்தோஷம். குஷி. பின் விமானம் கிளம்பியது. பத்து வயதுக்கு இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமாயிருந்தது. இந்த அட்வெஞ்சர் பெருமையாயும் இருந்தது.
அடுத்த நாள் உச்சிப்பிள்ளையார் கோவில். அதற்கடுத்த நாள் காவிரியாறு.
இந்த மூன்று நாளில் வீட்டில் இருந்த நேரங்களில் ராஜாராம் அண்ணா ஒரு Folk song சொல்லிக்கொடுத்தான்.
பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது. ராஜாராம் அண்ணா ஒவ்வொரு வரியாக சொல்லிக்கொடுத்தான்.
ஒரு கோமாளியிடம் அவன் பெண்டாட்டி வேலை செய்யலாம் வா என்று  சொல்வதாகவும் அதற்கு அந்தக் கோமாளி தட்டிக்கழித்துப் பதில் சொல்வதாகவும் அந்த நாடோடிப் பாடல்.
”கீரை வெதப்போம் கீரை வெதப்போம் வாடா கோமாளி
கீரை வெதச்சா கோழி கிண்டும் போடி நா மாட்டென்.
கோழி கிண்டுனா வேலி கட்டுவொம் வாடா கோமாளி
வேலி கட்டுனா வெள்ளாடு தாவும் போடி நா மாட்டென்.
வெள்ளாடு தாவுனா கால வெட்டுவொம் வாடா கோமாளி
கால வெட்னா தெண்டம் விழும் போடீ நா மாட்டென்
தெண்டம் விழுந்தா வேலை செய்வோம் வாடா கோமாளி
வேல செஞ்சா முதுகு வலிக்கும் போடீ நா மாட்டென்
முதுகு வலிச்சா சோறு தர்றேன் வாடா கோமாளி
சோறு தின்னா ஏப்பம் வரும் போடீ நா மாட்டேன்
ஏப்பம் வந்தா ( உன்ன ) குழியில வக்கிறேன் வாடா கோமாளி
குழியில வச்சா கறையான் பிடிக்கும் போடீ … நா… மாட்டென்.”

நான்காவது நாள் ராஜாராம் அண்ணா ஊருக்கு கிளம்பி விட்டான்.
அந்த நான்கு நாள் நட்பு இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.


இந்த நாட்டுப்புறப் பாடலைப் பள்ளியிலும் பின் கல்லூரியில் படிக்கிற காலங்களிலும் எத்தனையோ முறை நான் பாடியிருக்கிறேன்.


இப்போது டி.வி.யில் சமீபத்தில்  ஏதோ சேனலில் அஜீத் படப் பாடலாக இதே பாடல் பார்க்கக் கிடைத்தது.

……………………..

அறிவாலயத்தில் ஒரு திருமணம். உறவினர் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ( ஷேணி ) ஒரு முன்னாள் எம்.பி. அவர் மகன் கல்யாணத்திற்குப் போயிருந்தேன்.
பழைய நண்பர்கள் பலரையும் பார்க்க முடிந்தது. அப்படியிருந்தும் அந்தத் திருமணத்திற்கு வந்திருந்த என் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் R.நெடுமாறனை நான் அன்று சந்திக்க முடியாமல் போனது என் துரதிர்ஷ்டம். உறவினர்களிடம்
“ துரை வந்திருக்கான் பார்த்தியா” என்று என்னைப் பற்றி சொல்லும் ஷேணி, அமெரிக்கன் கல்லூரி நண்பர்களிடம்
“ கேபி வந்திருக்கான். என்றார். நானும் அவரும் சென்னையில் தங்கியிருந்த எம்.இ.எஸ். ஹாஸ்டல் நண்பர்களிடம் என்னை அடையாளப்படுத்த “ டைரக்டர் வந்திருக்கார்!” என்றார்.
பொண்ணு மாப்பிள்ளையுடன் புகைப்படம் எடுக்கும்போது ஷேணி என்னிடம் “ உனக்கு உடம்பு சரியில்லாமப் போனப்ப அபுபக்கர் என்ன கொடுத்தார்னு எனக்கு ஞாபகம் இருக்கு” என்றார். அபு பக்கர் வெள்ளந்தியாய் சிரித்தார்.
அபு பக்கர் தலைசிறந்த மனிதாபிமானி. எல்லோரும் ஹாஸ்டலை விட்டுக் கிளம்பிய பின் எனக்கு போரடிக்கக்கூடாதே என்று படங்களுடன் கூடிய பிரமாதமான ஒருசெக்ஸ் புக்’ கொடுத்து விட்டு ஆபீஸ் கிளம்பியவர்.
  
ஐகோர்ட் ஜட்ஜ் அக்பர் அலி. செங்கல்பட்டு ஜட்ஜாயிருக்கும்போது காஞ்சி சங்கராச்சாரியாரைத் தூக்கி உள்ளே வைத்தவர் இவர் தான்!

இவரும் கலாமும் எம்.இ.எஸ் ஹாஸ்டலில் ட்வின்ஸ் போல சேர்ந்தே தான் இருப்பார்கள்.

என்னைப் பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த  நண்பரிடம் உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி சொன்னார். 
 I meet this BOY after thirty years!
அவருக்கு இவ்வளவு காலம் கழிந்தபின்னும் இப்போதும் நான் பையனாகவே தோற்றம் தருகிறேன் என்பது சற்று வித்தியாசமாக, சந்தோஷம் தருவதாக இருந்தது. காலயந்திரத்தில் ஏறி பின்னோக்கி பயணம் செய்த சந்தோஷம்!









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.