Share

Apr 13, 2012

ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்!

இன்றைக்கு அசோகமித்திரனுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து SMSஅனுப்பி ஆசியை வேண்டினேன். அவர் 'God  bless you' என்று பதில் அனுப்பினார். நான் அதற்கு பதிலாக அனுப்பிய SMS 'Great  writers are  the saints  for   the  godless '.


சென்ற ஜனவரி 30 ம் தேதி இங்கே புத்தகக்கண்காட்சியில் தற்செயலாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தேன். என்னை 'சேர்தளம்' திருப்பூர் வலைத்தள எழுத்தாளர்களுக்கு  அறிமுகப்படுத்தினார்(!) அப்போது என்னைப்பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்  சொன்னார் : "  ராஜநாயஹம் - ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்! ரொம்ப வருடங்களாக  இப்படித்தான் இருக்கிறார்!"  


நான் மார்ச் 30ம் தேதி  'நீ ஏய்யா அழற ?' பதிவை எழுதினேன். முந்தாநாள் புதன் கிழமைஏப்ரல் 11 தேதி கடைக்கு வந்துள்ள  குமுதத்தில்(முகப்பில் அச்சில் உள்ள தேதி 18 -4 - 2012 ) ' இன்பக்கனா ' நாடகம்  விபத்து பற்றி புகைப்படம் வந்திருக்கிறது.
நேற்று ஏப்ரல் 12 ம் தேதி  ஆனந்தவிகடனில்(அச்சில் உள்ள தேதி 18 -4 -12 ) 'இன்பக்கனா ' நாடகத்தில் எம்ஜிஆர் நடிக்கும்  ஸ்டில் ஒன்று வந்திருக்கிறது.
எம்ஜியாரை அப்போது  நவீனன் சந்தித்த போது எம்ஜியார் அந்த கால் முறிவு விபத்து பற்றி சொன்னதை பிற்காலத்தில்  நடிகர் ராஜீவிடம்  சொன்னதாக குறிப்பிடும் விஷயங்களில் நாடக சண்டைக்காட்சியில் எம்ஜியாருடன் குண்டு மணி யோடு இணைந்து சண்டையிட்ட மற்றொரு நடிகர் யார்  என்று குறிப்பிடப்படவில்லை. என் பதிவில் நான் தெளிவாக எழுதியிருக்கிறேன். அந்த நடிகர் புததூர் நடராஜன். கால் உடையும் போது  என்னமோ 'களுக் ' என்றது என எம்ஜியார் சொன்னதாக நவீனன் சொன்னதாக ராஜீவ் இப்போது சொல்வதாக குமுதம் குறிப்பிடுகிறது . ஆனால் எம்ஜியார் கால் முறிவு விபத்தில் சம்பந்தப்பட்ட நேரடி சாட்சி புத்தூர் நடராஜன் கால் முறிந்த போது பட்டாசு வெடித்த மாதிரி சத்தம் கேட்டது என்றே சொல்லியிருக்கிறார் .
இந்த புத்தூர் நடராஜன் எம்ஜியாரின் பல படங்களில் நடித்தவர் .தலை மொட்டையாயிருக்கும்.'ஆயிரத்தில் ஒருவன் ' படத்தில் ' ஏன் என்ற கேள்வி ' பாட்டில் எம்ஜியாருடன் நடித்தவர்.  ' நான் ஆணையிட்டால் ' படத்தில் கொள்ளைக்கூட்டத்தில் ஒருவராக வந்து எம்ஜியாரைப் பார்த்து கேட்பார் " திருந்து , திருந்துன்னு சொல்றியே ! திருந்துன்னா என்னா?"  ரகசிய போலிஸ்  115ல் கொள்ளைக்கூட்டத்தலைவனாக நடித்தவர் புத்தூர் நடராஜன் தான்! பல சினிமா  ரசிகர்கள் இவரையும் குண்டுமணி ஆகத்தான் நினைத்துக்கொண்டிருந்தார்கள். தியேட்டரில் இவரை திரையில் காணும்போது 'குண்டுமணி , குண்டு மணி ' என்று கத்துவார்கள் . எம்ஜியார் ரசிகர்கள் இவரை சின்ன குண்டுமணி என்று சொல்வார்கள்.
எம்ஜியார் திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக் கட்சி துவங்கிய பின் இவர் கருணாநிதியின் பாடிகார்ட் ஆக கருணாநிதியுடன் வெளியூர் பயணங்களில்  வருவதை பார்த்ததாக என்னிடம் சிலர் சொல்லி கேள்விப் பட்டேன். அதாவது எம்ஜியாரை விட்டு விலகி எம்ஜியாருக்கே எதிராக மாறினார் என்பதாக.
.....

சில காலம் நான் வலைத்தளத்தில் எழுதாமல் இருந்த காலங்களில் -
2010  ம் வருடம் ஆனந்த விகடனில்  அழகிரி -25 பகுதியில்  நான் என் வலைத்தளத்தில் 2008 ல்  அழகிரி பற்றி  எழுதியதை,  அப்படியே  எடுத்து செய்தி ஆசிரியர் திருமாவேலன்  பயன்படுத்தியிருந்தார் . அழகிரி பற்றிய குறிப்புகளில் இது தான் மிகவும் சுவாரசியமாயிருந்தது. என்னுடைய பிலாகில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை.
நன்றி: RP ராஜநாயஹம் என்று ஒரு வார்த்தை பிராக்கெட்டில் போட்டிருக்கலாம் தானே!




அடுத்து 2008 ல் என் Carnal Thoughts - 6 ல் இருந்து  கால்  'கட்டை விரல் '  சமாச்சாரம்   2010ல் கமல் ஹாசனின் ' மன்மதன் அம்பு ' படத்தில் சாதகமாக பயன் படுத்தப்பட்டிருந்ததை அறிய வந்தேன். மன்மதன் அம்பு  படத்தைப் பற்றி பேசுபவர்கள்  அந்த கட்டை விரல் விசயத்தை  குறிப்பிடுகிறார்கள்.



ப. திருமாவேலனும்  எஸ். கமல்ஹாசனும் வாழ்க !

 ' தெய்வத்திருமகள் ' படத்தில் APPLAUSEவாங்கும் சந்தானம் பேசும் ' கர்ணனுக்கு கவச குண்டலம் '  என்னுடைய ' பொறி சிந்தும் வெங்கனல் ' பதிவில் நான் அப்போதே குறிப்பிட்டிருக்கிறேன்.

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_23.html

2 comments:

  1. நீண்ட நாள் வாசகன்Tuesday, 17 April, 2012

    //அப்படியே எடுத்து செய்தி ஆசிரியர் திருமாவேலன் பயன்படுத்தியிருந்தார் . அழகிரி பற்றிய குறிப்புகளில் இது தான் மிகவும் சுவாரசியமாயிருந்தது. என்னுடைய பிலாகில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை.
    நன்றி: RP ராஜநாயஹம் என்று ஒரு வார்த்தை பிராக்கெட்டில் போட்டிருக்கலாம் தானே!//

    நீங்க ரொம்பத்தான் எதிர்பார்க்கறீங்க.

    மூலம் பத்தியெல்லாம் தமிழ் பத்திரிகைகள் யோசிச்சா ஒரு இஷ்யூ கூட வெளி(க்கு) வராது.

    ReplyDelete
  2. இணையம் ஒரு வசதி, நாம் முன்னரே சொல்லியிருக்கிறோம் என்று நிறுவது எளிது. அந்த திருப்தி போதும்தானே!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.