Share

Sep 29, 2009

கல்பித சங்கீதம் - கற்பனா சங்கீதம்

''பேகடா ராகம் கமகங்களும் பாய்ச்சல்களுமாக 'தானே' பாடிக்கொண்டிருந்தது . எத்தனை தினுசுகள்! எத்தனை உயிர்கள்! எத்தனை உருவங்கள்! ...இதையெல்லாம் பாட கச்சேரியில் நேரமேது!மூன்று மணிக்குள் நாலு ராகம் , பத்துப் பாட்டு,நாலு துக்கடா ,ஒரு பல்லவி இப்படி வாரப்பத்திரிக்கை மாதிரி நடக்கற கச்சேரியில் பேகடை ராகம் தன் முழு வடிவத்தையும் வெளியிட நேரம் ஏது "

-தி ஜானகிராமன் " மோகமுள் "

...............

திஜாவின் ஆதங்கத்திற்கு ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது . இசைப் பாரம்பரியம் குறித்த பிரக்ஞை தான் காரணம்.

பட்டணம் சுப்ரமணிய அய்யர் பேகடா ராகத்தை மைசூர் அரண்மனையில் பாடியவிதம் :

முதல் நாள் பேகடா ராக ஆலாபனை .

இரண்டாம் நாள் 'தானம் '

'பல்லவியும் ஸ்வரமும் ' மூன்றாம் நாள் !

இப்படி அமர்க்களப்படுத்திய பட்டணம் சுப்ரமணிய அய்யர் அதன் பின் பேகடா சுப்ரமணிய அய்யர் என பெருமைப் படுத்தப்பட்டார் .

தோடி சீத்தாராமய்யர் தோடி ராகத்தை எட்டு நாட்கள் பாடியிருக்கிறார் .

முதல் நான்கு நாட்கள் அக்ஷிப்திகம் ,ராக வந்தினி என மூழ்கி விட்டார் .அடுத்த நான்கு நாட்கள் ஸ்தாயி ,மகரினீ , பல்லவி !

தியாகய்யர் தேவகாந்தாரி ராகத்தை கொவ்வுர் சுந்தர முதலியார் வீட்டில் ஏழு நாட்கள் பாடியிருக்கிறார் ! அந்த பவித்திர புண்ணிய ஏழு நாட்கள் .

சிதம்பரம் நடராஜர் வைபவத்தில் ஒரே ஒரு ராகம் -உசைனி ராகம் இரவு முழுவதுமே !

..

'சங்கீத சிட்சை ' என்று சொல்வதை விட' அத்யயனம் ' என்று சொல்வது சிறப்பு .'சங்கீத அத்யயனம் '. அத்யயனம் மூலம் கிடைப்பது கல்பித சங்கீதம் .குருவிடம் இருந்து கிடைக்கப்பெறுவது . கற்பனா சங்கீதம் சங்கீத ஞானத்தின் வழி கிடைப்பது . ராக ஆலாபனை , ஸ்வர வரிசை பாடும்போது பாடகர் தன் கற்பனா சங்கீத ஞானத்தை வெளிப்படுத்த முடியும் . நல்ல ரசிக சதஸ் பாடகர் முன் இருப்பது அவசியம்! சுருதி தான் சாமி மாதிரி.வயலின் வித்வான் பாடகருடைய வின்யசங்களை பொறுப்பாக பின் தொடரவேண்டும்.

ஜானகிராமன் இதிலுள்ள Eroticism பற்றி கவனப்படுத்துகிறார் : ''ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக் கடுக்கண் வேணும் போலிருக்கும். வர்ணம் வந்தா மயில் கண் வேஷ்டி, மல்லு சட்டை. கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தா தேவலை போல இருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும். அதுக்கப்புறம் சங்கீதம், பிராணன் எல்லாம் ஒன்னொன்னா கரையும் ...............................................பணமும்,பேரும்,துர்நடத்தையும் எங்கே, எங்கே என்று வாயைப் பிளந்து கொண்டு விழுங்க காத்திருக்கும் கலை இது."

ஏதாவது ஒன்று கெட்டுப்போகும் என்றால் அது கட்டாயம் கெட்டுப்போகும்.

பரதநாட்டியம் பயின்றவர் திருமணம் செய்துகொள்வது அவ்வளவு சிலாக்கியமில்லையாம் .

பரதநாட்டியம் பற்றிதிஜாவின் 'மலர் மஞ்சம் ' நாவலில் நட்டுவனார் பெரியசாமி சொல்வதாக வருவது : ''ஒருத்தரோடு அவுராத முடிச்சா முடிஞ்சுக்கிட்டு உக்கார்ந்துகிட்டா அப்புறம் இந்த ஆட்டம் ,பாட்டம் எல்லாம் ஒரு எளவும் வராது. அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும் ...இந்த வித்தையிலே இறங்கறவங்க - ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும் , இல்லே கட்டெல்லாம் அறுத்து எரிஞ்சுப்பிட்டு இஷ்டப்படி இருக்கணும் . நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்யம் இல்லே. இந்த வித்தை ரொம்ப வேடிக்கையான வித்தை.''

1 comment:

  1. actor and dancer shobana has once said this same thing, about dancer and marriage

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.