Share

Jan 19, 2026

டிசம்பர் மார்கழி ஜனவரி - தித்தித்தது சிவகுமார் கணேசன் மதிப்பீடு


சிவகுமார் கணேசன் மதிப்பீடு:


தித்தித்தது
டிசம்பர் மார்கழி ஜனவரி
கட்டுரைகள்
R.P.ராஜநாயஹம்
ஜெய்ரிகி பதிப்பகம்
பக்கங்கள் 234,236
விலை ரூபாய் 300,300

தித்தித்தது புத்தகத்தில் 97, டிசம்பர் மார்கழி ஜனவரியில் 95 கட்டுரைகள்.

அவரது வலைப்பூவில்,முகநூலில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

முரசு தொலைக்காட்சியில் அவர் பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து சுவையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

எனக்கு ராஜநாயஹம் நன்கு அறிமுகம் ஆனவர் என்பதால் கட்டுரைகளை வாசிக்கையில் அவர் நேரில் அருகில் அமர்ந்து பேசுவதைக் கேட்பது போலவே இருந்தது.பெரும்பாலும்,சுவையாகப் பேசுபவர்களுக்கு சுவாரஸ்யமாக எழுத வராது and vice versa. ராஜநாயஹம் சார் ஆச்சர்யமான விதிவிலக்கு.பேச்சிலும்,எழுத்திலும் அத்தனை சுவாரஸ்யம்.

திரைப்படத் துறையிலும்,வணிகத்திலும் ஈடுபட்டு அவற்றின் அத்தனை ஆழங்களையும் கண்டுணர்ந்தவர். அதனால்,அவரது எழுத்தில் உண்மை சுடர்கிறது.

தன் அனுபவங்களை சுவையாகச் சொல்லும் அதே நேரத்தில்,தன் பேரிழப்புகளையும்,துயரங்களையும் கழிவிரக்கமின்றி சொல்லக் கூடியவர்.

தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு இலக்கியங்கள், தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு எழுத்தாளர்கள், தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு ஓவியர்கள், தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு கவிஞர்கள், தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு இசை மேதைகள்,இசை அனுபவங்கள், தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு திரைப்படங்கள்,திரை நட்சத்திரங்களின் வாழ்வு,தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள்,நண்பர்கள்,உடன் பழகியவர்கள்,ஆட்டுப் புழுக்கை போல கவிதைத் தொகுப்புகளைப் போட்டு அதை மோந்து பார்க்கச் சொல்பவர்கள்,மதுரையின் அடித் தட்டு மக்களின் வாழ்வியல்,தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களுடான நெருக்கம் தந்த நல்ல,மோசமான அனுபவங்கள் என அவர் சொல்லிக் கொண்டே போவதைக் கேட்கிற நாம் நெகிழ்கிறோம். சிரிக்கிறோம். புன்னகைக்கிறோம். துயருறுகிறோம். ஆச்சர்யப்படுகிறோம்.அறிந்து கொள்கிறோம்.பிரமிக்கிறோம். 

கார்த்திக் நாயகனாக நடிக்கும் திரைப்படமொன்றில் இவரை நடிக்க வைத்து சில காட்சிகளை எடுக்கிறார் நலன் குமாரசாமி. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.சத்யராஜ் நடிக்கிறார்.வழக்கம் போல் a slip between the cup and the lip என்று அவர் இயல்பாகக் கடந்து போகிறார்.

அந்தத் திரைப்படம் எதுவென்று தெரிகிறதா?வா வாத்தியார்.நல்லவேளை.தப்பித்தீர்கள் சார்.

பேசுவதற்கும்,எழுதுவதற்கும் அவருக்கும்,கேட்பதற்கு நமக்கும் இன்னும் ஏராளமாய் அவருக்கு அனுபவங்கள் மீதமிருக்கின்றன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.