Share

Dec 7, 2018

மொட்டயனும், சப்பக்காலனும்


'மால்' வாங்கப்போன மொட்டயன் வரணுமே என்று தவிப்பில் குருவி மண்டயன், மண்ட மூக்கன், ஆட்டு மூக்கன், ஒத்தக்காதன், முட்டாள் தாசு.
மீனாட்சி தியேட்டர் பள்ளம் சரக்கு செமயா இருக்கும்.
குருவி மண்டையன் இந்த அடிக்சன் குறித்து நெஞ்சம் குமுறி பாடுவான் “ பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்”
சப்பக்காலன் கஞ்சா, கலக்குமுட்டி எதுவும் வேண்டாதவன். ஆனால் அந்தக்கூட்டத்தோடு இருப்பான். அவனுக்கு பாஸிங்ஷோ சிகரெட்டும் டீயும் தான். வேறு எதுவும் தேவையில்லை.
மற்றவர்களுக்கோ மொட்டயன் எப்பயும் பொட்டலத்திலிருந்து ஒரு கள்ளி, சடைய ஆட்ட போட்டுடுவான் என்ற கவலை நிரந்தரமானது.
’திருந்தவே மாட்டானேடா’.
மீனாட்சி தியேட்டர் பள்ளத்தில் கஞ்சா வாங்கி வந்த மொட்டையனிடமிருந்து அவன் சுதாரிப்பதற்குள் பொட்டலத்தை பிடுங்கி அந்த காக்கி பேப்பரை பிரித்தான் மண்ட மூக்கன். அதிர்ச்சியாகி மற்றவர்கள் பார்க்கும்படி காட்டினான். பிரித்த பொட்டலத்தில் கஞ்சாவின் மேல் பகுதி குழியாக. ஒரு சடைய மொட்டயன் ஏற்கனவே அதிலிருந்து எடுத்து விட்டான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மண்டமூக்கன் உள்ளங்கை  குறைப்  பட்ட பொட்டலம்.
பாஸிங் ஷோ சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து விட்டு கிணற்றிற்கு எட்டிப்பார்க்கும் தோரணையில் சப்பைக்காலன் விரிக்கப்பட்ட பொட்டலத்தின் உள்ளே பார்த்து விட்டு அடுத்த வினாடியே மொட்டயன நிமிர்ந்து பார்த்து உச்சஸ்தாயியில் பாடினான்: சபாஷ் தம்பி, உன் ”செய்கை”யை போற்றுகிறேன். நீ ஒருவன் மட்டும் துணையாய் இருந்தால் உலகை மாற்றுகிறேன். சபாஷ் தம்பி…”
மதுரையில் தொர்ரி, ஆட்ட என்ற வட்டார வழக்கு வார்த்தைகளை தூய தமிழில் ’திருட்டு’ என பகராமல் ‘செய்கை’ என்றும் சொல்வது மரபு.
- நியு சினிமா தியேட்டருக்கு ”You can’t win them all” படம் பார்க்க போயிருந்த போது இடைவேளையில் அங்கே யாரோ ஒரு முகந்தெரியாதவன் “ஐயோ, என் மோதிரத்த காணோம்” என அலறினான். கதறினான் என்ற வார்த்தை தான் பொருந்தும். மொட்டயன் தான் அந்த ஆள கூடவே சேர்ந்து ரொம்ப தேடினான். ’அழாதய்யா…இந்தாளு பாவம்யா’ ம்ஹூம். மோதிரம் கிடைக்கவில்லை. பறி கொடுத்தவன் இடைவேளக்கி பிறகு ஏங்கி ஏங்கி விசும்பிக்கொண்டே ”என் மோதரம்”னு அரற்றிக்கொண்டே தான் படம் பார்த்தான். ‘பாவம்யா இந்தாளு..அழாம படத்த பாருய்யா..” டோனி கர்ட்டிசும் சார்லன் பிரான்சனும் நடித்த படம் அது.
மறு நாள் மொட்டயன் சிவப்பு பேண்டுக்குள்ள கிளிப்பச்ச கலர் சட்டய இன் பண்ணி, மூஞ்சில பவுடர அப்பி, கூலிங்க்ளாஸ மாட்டிக்கொண்டு ஏ.ஏ. ரோட்டில பந்தாவா நடந்து வந்தான்.
மொட்டயன் எப்போதும் ஒரு தொர்ரி பண்ணா, ஆட்டய போட்டா, அந்த செழிம்பில (செழிப்பு என்பதற்கு வட்டார வழக்கு செழிம்பு) உடனே மறு நாள் பேண்ட் உள்ளே சட்டய இன் பண்ணி, மூஞ்சில பவுடர அப்பி, கூலிங்க்ளாஸ் போட்டு வந்து நிக்கறத பார்த்தா, சுருக்கமா அந்த அழகு, நேர்த்தி பற்றி சொல்லணும்னா ’சூத்தாம்பட்டக்கி மை போட்ட கத’ தான். கண்ணுக்குத் தான மை?
(Dissolve)
ஆண்டுகள் பல கடந்தன.
மொட்டையன் ஃபுல் போதையில அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் உள்ள டீக்கடையொன்றை பார்த்தான். அங்கே சப்பக்காலன் டீ குடித்து விட்டு ஒரு பாஸிங் ஷோ சிகரெட் பற்ற வைத்து சுகமாக வாயில் வைத்து உள்ளிழுத்து ஊதுவதைப்பார்த்தான். தள்ளாடி அவனிடம் வந்தான்.
’டேய் சப்பக்காலா, டேய்’
சப்பக்காலன் சட்டையே பண்ணாமல் வெற்றுப்பார்வை பார்த்தான்.
டீக்கடை ரேடியோவில் “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்” பாட்டு.
மொட்டையன் “டேய் என்ன நினைச்சே இந்தப்பாட்ட எழுதியிருக்கான். என் வாழ்க்க தான்டா இந்தப் பாட்டு.”
ரேடியோ ”பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது? பொல்லாத மனமென்று பேர் வந்தது”
”டேய் சப்பக்காலா, என்னடா இது அப்படியே என் மனசுல உள்ளத பாட்டா எழுதுனான். என் கதயவே ஒரு பாட்டா எழுதிட்டான். நான் பாட வேண்டிய பாட்டுடா இது.”
மொட்டையன் சில வருடங்களுக்கு முன் இதே டீக்கடையில் ஒரு பய அவன் அண்ணன் குழந்தய தூக்கிட்டு வந்த போது அந்த குழந்தய வாங்கி கொஞ்சி விட்டு, நைசாக காலில் உள்ள கொலுசுகளை கழட்டி வித்து அந்தக் காசில் சப்பக்காலன தத்தனேரி மாருதி டூரிங் டாக்கிஸுக்கு செகன்ட் ஷோ கூட்டிட்டு போய், மொட்டயன் தான் கொலுசை ஆட்டய போட்டவன் என்று ஊர் உலகத்துக்கு தெரிய வந்து… இதனால் சப்பக்காலனுக்கும் அவமானமும், துயரமும் நிகழ்ந்த கதையொன்று உண்டு.
இப்ப மொட்டயன் பூப்போன்ற என்னுள்ளம் யார் கண்டது என்று தன்னிரக்கத்தில் உருகுறான்.
மொட்டயன் “ டேய் சப்பக்காலா, நான் ரொம்ப காலம் உயிரோட இருக்க மாட்டன்டா. ஆனா ஒன்னு. டேய் நான் செத்தன்னா ( குரல் தளும்புகிறது) நான் செத்தன்னா மொத மால நீ தான்டா போடனும்.”

மேற்கண்ட சம்பவத்தை என்னிடம் விவரித்த சப்பக்காலன்
“பொறுத்துப்பொறுத்து பாத்தேன்.” என்று pause விட்டான். 
ஓங்கி சுரீர் என்று மொட்டயன் கன்னத்தில் ஒரு அடி கொடுத்திட்டான் போலன்னு அந்த வினாடியில் நான் எண்ணும்படியாகி விட்டது.


ஆனால் சப்பக்காலன் “ மொட்டயன் ‘நான் செத்தா மொத மால நீ தான் போடணும்’னு திரும்பத்திரும்ப அனத்துனான். பொறுத்துப்பொறுத்துப் பாத்தேன்.
‘சரி’ன்னுட்டேன்.”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.