Share

Sep 28, 2018

ஏவிஎம் ஸ்டுடியோ - அந்த நாள் ஞாபகம்


2015ல் சென்னைக்கு வந்த பத்து நாட்களில் வேறு வீடு பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது நானும், என் இளைய மகன் அஷ்வத் துணையுடன் என் ஸ்கூட்டரில் கோயம்பேடில் இருந்து கிளம்பி சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து திடீரென்று ஒரு சந்தில் இருந்து வெளி வந்த அந்த வினாடி மறக்கவே முடியாது. எதிரே ஏ.வி.எம் ஸ்டுடியோ.
பக்கத்து ஏவிஎம் ராஜேஷ்வரி தியேட்டரில் கூட்டம். விஜய் படம் ரிலீஸ்.
சென்னை பெரிதாக மாறி எனக்கு topography சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை.
தினமும் நான் அலுவலகம் போல வந்து போய்க்கொண்டிருந்த ஏ.வி.எம்.ஸ்டுடியோ.
அன்றைக்கு இருந்த துக்கத்துடன், பழம் நினைவுகள் மேகமாய் என்னை மூடியது.
அதன் பின் நெற்குன்றத்தில் இருந்த போதும், ஆலப்பாக்கம் வந்து விட்ட பின்னும் எவ்வளவு தடவை அந்த ஆற்காடு ரோட்டிலும், அருணாச்சலம் ரோட்டிலும் கடந்து செல்லும் போதெல்லாம் ஏ.வி.எம்.ஸ்டுடியோவிற்குள் போய் அந்த ஞாபக அடுக்கின் நினைவுகளை மேலெலுப்பி விட வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.
சென்ற ஞாயிறன்று மாலை பஸ்ஸில் இருந்து இறங்கி ஏ.வி.எம். குளோப் உருண்டை கொண்ட கேட்டில் நுழையும் போது சில பத்து வருடங்களுக்கு முன் தினம் அந்த கேட்டை நான் நெருங்கி உள் நுழையும் போதெல்லாம் கூர்க்காவால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் கொல்ட்டி பெண்கள் கூட்டம் என்னைப் பார்த்து இறைஞ்சும் குரலில் சொல்லும் வார்த்தைகள் : ’ஏமண்டி, சூட்டிங் சூடாலண்டி….. செப்பண்டி..”

இப்போது அந்த நீண்ட பாதையில் செல்கிறேன்.
ஏ.வி.எம். 'ஜி' தியேட்டர் இப்போது ‘ஜி’ஸ்டுடியோ?
நான் நினைவில் வைத்திருந்த காட்சிகளை இன்றைய சூழல் நிர்த்தாட்சண்யமாக சிதைத்து, உருமாற்றி இருக்கிறது. முழுக்க வேறு கட்டடங்கள். அபார்ட்மெண்ட்ஸ்.

ஆனால் ஏ.வி.எம் எடிட்டிங் பகுதி மட்டும் என்னை திகைக்க வைக்கும்படி மாறாமல், காலத்தின் தவிர்க்க முடியாத தீற்றல்களுடன் அப்படியே இருக்கிறது. ஆர்.ஆர் தியேட்டர் எங்கே என்று நான் பார்க்கவில்லை.

The past beats inside me like a second heart.

Really,one might almost live one's life over, if only one could make a sufficient effort of recollection.
- John Banville in his novel " The Sea"
அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமை நான் பார்த்தது இங்கே தான். பீம்சிங்கின் எடிட்டர் பால்துரை சிங்கம், லெனின், கே.ஆர் ராமலிங்கம் எடிட்டிங் ரூம்கள். அதன் முன் இப்போதும் இரண்டு பெஞ்ச்கள்.
புட்டண்ணா கனகல், (கிருஷ்ணன்) பஞ்சு இருவரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருக்க நான் பக்கத்தில் நின்ற காட்சி.
கமல் ஹாசன், மகேந்திரன், எஸ்.பி.முத்துராமன், ஜி.என்.ரங்கராஜன் அங்கே உழன்று கொண்டிருந்த அந்த கடந்த நாட்கள்.
கண்ணதாசன் மகன் கலைவாணன் “ அழகே, அழகு. தேவதை” என்று வாய் விட்டு ஒரே பாட்டை பாடிக்கொண்டே எடிட்டிங் அறையில் என் போல அஸிஸ்டண்ட் டைரக்டராக சுழன்ற இறந்த நாட்கள்.
Nostalgia..reminiscence.. Evocation.
அந்த சுருள் படிக்கட்டில் அந்தக் காலத்தில் இயக்குனராகத் துடித்த ஒருவன் என்னை உட்கார வைத்து தன் திரைக்கதையை விவரிக்க ஆரம்பித்து, அவன் கண்ணீர் விட்டு, தேம்பிக்கூட அழுத போதும் நான் கல் நெஞ்சுடன் முகத்தை Placid ஆக வைத்திருப்பதைப் பார்த்து “ என்னங்க, கொஞ்சம் கூட என் கதையில் இன்வால்வ் ஆக மாட்டேன்றீங்களே? “ என்று முகம் சுண்டி கேட்டானே.
ரத்தவேர்வையுடன் ஜீசஸ் தவித்த போது உறங்கிக்கொண்டிருந்த சீடர்கள். Gethsemane crisis?


அங்கே பக்கத்தில் இருந்த ரொம்ப ரொம்ப சின்ன தியேட்டரில்  ‘மனுசங்கடா’ படம் பிரிவியூ.
அழையா விருந்தாளியாக சென்ற நான் படம் பார்த்தேன்.
கதை இன்றைய காலத்தில் நடப்பதாக இயக்குனர் சொன்னார். அப்படியானால் தலித் தலைவர்கள், தலித் இயக்கங்கள் கவனத்திற்கு இந்த கதை எப்படி வராமல் போயிருக்க முடியும். ’முன்னே இப்படி நடந்திருக்கலாம். இப்ப நடக்க விட மாட்டோம்’ என்று கண்ணும் கருத்துமாக இருக்கும் தலித் அரசியல் இயக்கங்கள் கவனத்தை மீறி இப்படி நடந்திருக்கிறதா? அது சாத்தியமா? உண்மை சம்பவம் தான் என்று தான் சொல்கிறார்.
தீண்டாமை என்பதை இந்த மொபைல் போன் யுகத்தில் மேல் ஜாதியினரால் இப்படி இந்த படத்தில் காட்டப்படுவது போல செயல் படுத்த முடியுமா?

புதுமைப்பித்தனின் ’புதிய நந்தன்’ 
கு.ப.ராவின் 
‘பண்ணை செங்கான்’ ‘வாழ்க்கை காட்சி’ ந.பிச்சமூர்த்தியின் ‘அடகு’ 
தி.ஜானகிராமனின் ‘எருமைப்பொங்கல்’ போன்ற சிறுகதைகள் எல்லாம் நினைவில் நிழலாடுகிறது.
ஹை கோர்ட் ஜட்ஜ்மெண்ட்டை நடைமுறைப்படுத்த விடாமல் எவ்வளவு பிரக்ஞைபூர்வமாக ஆர்.டி.ஒ, போலீஸ் துறை தடுத்து விடுகிறது. அவர்களுக்கு இருக்கும் ஒரு துருப்புச் சீட்டு “ சட்டம் ஒழுங்கு பிரச்னை.”
“Contempt of court” என்ற வார்த்தை இன்று அரசியல் தலைவர்களை மிரட்டவே பயன் படும் நிலையில் ஒரு கிராமத்து உயர் ஜாதியினரை லோக்கல் அதிகார வர்க்கம் ஒன்றும் செய்ய முடியவில்லை.
விட்டோரியா டெசிக்காவின் “பைசைக்கிள் தீவ்ஸ்” படத்தில் திருடு போகிற சைக்கிளை சுற்றி கதையென்றால் ”மனுசங்கடா”வில் அப்பாவின் பிணம். A death is the problem of survivors. An emotionally devastating event.

ஹை கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு போய், ஆர்டர் வாங்க வழி செய்து, காரில் ”சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே” பாடலை முழுமையாக பாடும் அந்த Big Brother பின் பகுதியின் இறுக்கமான தீவிர சூழலில், அரைக்கிணறு தாண்டிய நிலையில் படத்தில் இருந்து காணாமல் போவது உறுத்துகிறது. அவருக்கு அடுத்த பல சமூக பிரச்னைகளை கவனிக்க செல்ல வேண்டியிருந்தது என்று சாதாரணமாக சொல்லி முடியுமா?
ஐம்பது லட்சம் செலவில் இருபத்து மூன்று நாட்களில் “மனுசங்கடா” படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தைப்பற்றிய தலித் தலைவர்கள், தலித் இலக்கியவாதிகளின் அபிப்ராயங்கள் முக்கியம்.
இந்த பணம் மீட்கப்பட நல்ல படம் தேடும் நல்லவர்கள் மட்டுமின்றி இன்னும் மற்றவர்களும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். 
”மேற்கு தொடர்ச்சி மலை” பார்த்தது சமீபத்திய சந்தோஷம். நெஞ்சில் மிக கனமாக உட்கார்ந்த மேற்கு தொடர்ச்சி மலை. மலையிலிருந்து இன்னும் இறங்கவே முடியவில்லை.விரிவாக எதுவுமே பேச அவசியமில்லாமல் செய்த கண்ணீர் சாம்ராஜ்ஜியம்.
………………………………………………………………..



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.