Share

Apr 14, 2017

சித்திரை வேப்பம்பூ பச்சடி


’சித்திரை ஒன்னாம் தேதி. தமிழ் வருஷப்பிறப்பு. வேப்பம்பூ பச்சடி செய்யனுமே. வேப்பம்பூ வேணும்’ மிக சிரமமான உடல் நிலையிலும் குஞ்சலி மாமிக்கு தவிப்பு.
ந.முத்துசாமியிடமும் மாமியிடமும் சொன்னேன். “நான் அதை கொண்டு வரப்பார்க்கிறேன்.”
வேப்பமரத்தை கண்டு பிடித்தாலும் கிளை எட்டும் நிலையில் இல்லை. சின்மயா நகர் பஸ் ஸ்டாப் அருகில் பிஸியான மெயின் ரோட்டில் மூன்று மரங்களை பார்க்க முடிந்தது. வேப்பம்பூக்கள் நிறைய தான். நிறைய கொத்து கொத்தாக உயரத்தில்.
ஒரு மரத்தில் கொஞ்சம் முயற்சி செய்தால் பறித்து விடலாம். அதை ஒட்டிய ஒரு கடையில் பிளாஸ்டிக் சேர் வெளியில் இருந்தது. அந்தக் கடைக்காரரிடம் “ ஒரு கொத்து வேப்பம்பூ சித்திரை வருஷப்பெறப்புக்கு தேவைப்படுகிறது. இந்த சேரில் ஏறிப்பறிக்க முடியும். தரமுடியுமா?”
கடைக்காரர் “ தாராளமா எடுத்துக்கங்க. ஆனா இதுல ஏறினாலும் பறிக்கமுடியாதுன்னு நினைக்கிறேன். உயரத்தில கிளை இருக்கு”
நான் சேரைப்போட்டு ஏறினேன். சேர் நிலையாக இல்லாமல் ஆடியது. கால்கள் நடுங்கியது.
Vertigo, High Anxiety பிரச்னை எனக்கு உண்டு.
நிச்சயமா சேர் சாய்ந்து விழுந்து விடுவேன் என்று தெரிந்தது. ரொம்ப உயரத்திற்கு போகவேண்டிய அவசியம் இல்லாமலே சாதாரணமாகவே ஒரு ஸ்டூல் மேல் ஏறினாலே எனக்கு 'வெர்டிகோ ஃபோபியா'  சர்வ நிச்சயம்.
வேப்பம் பூ கிளையை எட்டவே முடியவில்லை.


பக்கத்தில் ஒரு பையன் நின்று கொண்டிருந்தான். அவனை இந்த வேப்பம்பூ விஷயத்திற்கு உதவ வேண்டினேன். அவன் மெல்ல சேரில் ஏறி கிளையை எட்ட வசதியாய் இருந்த ஒரு இலைக்கொத்தை பறித்து விட்டான். விஷயம் இன்னும் சிக்கலாய் விட்டது. அந்த இலைக் கொத்தை இழுத்தால் வேப்பம்பூ உள்ள இலைக்கொத்து கைக்கெட்டும் என்ற நிலை இப்போது எட்டாமல் போய் விட்டது.
ஒரு உயரமான ஆட்டோக்காரர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் இந்த வேப்பம்பூ விஷயத்தில் உதவ இணையச்சொன்னேன். அவர் சேரில் தவித்து தக்காளி வித்துக்கொண்டிருந்த பையனிடம் “ அந்த இலைய இழுடா” என்றார். அவன் அதை இழுத்தவுடன் இவர் உடனே கிளை கீழே இறங்கும்படியாக தாவி இழுத்து வேப்பம்பூ உள்ள இலைக்கொத்தை காம்போடு பறித்து என்னிடம் கொடுத்து விட்டார்.
கடைக்காரர், ஆட்டோக்காரர், பையன் மூவருக்கும் நனி நன்றி நவின்றேன்.

கூத்துப்பட்டறை வந்தேன். வேப்பம்பூ கொண்டு வந்த என்னை பார்த்தவுடன் முத்துசாமி சார் முகமலர்ந்து உற்சாகமாக குரல் கொடுத்தார்.“ குஞ்சலி இங்க பாரு. ராஜநாயஹம் கொண்டு வந்துட்டார் பாரு!”
குஞ்சலி மாமிக்கு மிகுந்த ஆசுவாசம்.






……………………………………….

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html

https://www.facebook.com/rprajanayahem/posts/1482726581940803?pnref=story


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.