Share

Jun 18, 2016

மின்னம்பலத்துக்காக ஓவியர் நடேஷிடம் ராஜநாயஹம் நடத்திய நேர்காணல் - 1

மின்னம்பலத்துக்காக ஓவியர் நடேஷிடம்
ராஜநாயஹம் நடத்திய நேர்காணல் - 1
"எதுவும் கம்ப சூத்திரம் கிடையாது"- ஓவியர் மு.நடேஷ் பேட்டி
வெள்ளி, 17 ஜுன் 2016 minnambalam.com
மு.நடேஷ். ஓவியர், நாடக இயக்குநர், நாடக ஒளியமைப்பாளர், நடிகர், கூத்துப்பட்டறையின் தலைசிறந்த ஆசிரியர். இன்ஸ்டாலேஷன் ஆர்ட் எனப்படும் நிர்மாண கலைப் படைப்புகளை தமிழ்நாட்டில் உருவாக்கிய முன்னோடி. இவரது தந்தை பத்மஸ்ரீ ந.முத்துசாமியுடன் சேர்ந்து
கூத்துப்பட்டறையை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிய கலைஞர். அறிவுஜீவி. மொத்தத்தில் ஒரு பன்முக ஆளுமை.

ஜெயமோகனால் ‘காலச்சுவடின் ஒற்றன்’ எனவும், எஸ்.ராமகிருஷ்ணனால் ‘ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்’ எனவும், சாரு நிவேதிதாவால் ‘லியர் மன்னன்’ ஆகவும், ‘எழுத்தாளரின் எழுத்தாளர்’ என்று யமுனா ராஜேந்திரனாலும், ‘வசீகரக் கோமாளி’ என்று கோணங்கியாலும் அழைக்கப்பட்டவர் R.P.ராஜநாயஹம். தேர்ந்த வாசிப்பாளர். தனி நடை எழுத்தாளர். தற்போது, கூத்துப்பட்டறையில் ஆசிரியராக உள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஹிந்து நாடக விழாவில் ந.முத்துசாமியின் 'வண்டிச்சோடை' நாடகத்தை இயக்கவிருக்கிறார்.

மின்னம்பலத்துக்காக ஓவியர் நடேஷிடம் ராஜநாயஹம் நடத்திய நேர்காணல்

ராஜநாயஹம்: நாடறிந்த எழுத்தாளர் ந.முத்துசாமி - சங்கீத ஞானமிக்க குஞ்சலி மாமி இருவருக்கும் நீங்கள் தலைமகன். அதுவும் நீங்கள் பிறந்த சூழல் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கு மிகவும் வித்தியாசமான ஒரு சூழல். ஒரு மீனவர் உலகத்தில், வாசலைவிட்டு வெளியே வந்தால் தெருவில் கருவாடு காய்ந்துகொண்டிருக்கும் இடத்தில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். 5 வயதிலேயே நீங்கள் ஓவியங்கள் வரைய ஆரம்பித்துவிட்டதாக மாமி சொல்வார். இதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
நடேஷ்: மாக்கல் என்று சொல்வார்கள். கல்சட்டி, மாக்கல்சட்டி அதை வைத்து கீழே கோடு போட்டால் வெள்ளையாகக் கோடு வரும். குழந்தைகள் அதை வைத்துத்தான் பொம்மை போட்டு விளையாடுவார்கள். அந்தக்காலத்தில் உடைந்துபோன மாக்கல்சட்டி எல்லா வீடுகளிலும் இருக்கும். எங்கள் வீட்டிலும் அது நிறைய கிடந்தது. அதை வைத்து வீட்டின் மொத்த தரையையும் பொம்மைகளால் நிரப்பி விடுவேன். எங்கள் பாட்டிதான் தரை நிரம்பியதும் அதை அழிப்பார். அந்த வயதில் ஆரம்பித்ததுதான். என் அப்பா ‘ஃபேண்டம் காமிக்ஸ்’னு தமிழில் ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்தாங்க. பிறகு, நான் அதை ஆங்கிலத்தில் வாங்க ஆரம்பித்தேன். ஃபேண்டமின் குதிரை, கரடி, சிங்கம் எல்லாவற்றையும் காமிக்ஸ் புத்தகத்திலிருந்து எடுத்து, எங்கம்மா கவர்மெண்ட்ல டைப்பிஸ்ட்டா வேலை பார்த்ததால அவங்க வீட்டுக்கு வரும்போது எனக்கு கட்டுக்கட்டா பேப்பர் கொண்டு வருவாங்க. அந்தப் பேப்பர்களில் நிரப்பிவிடுவேன். அப்போதே கலைக்கு மரியாதை கிடையாது. அதனால், படிச்சுட்டு ஏதாவது ஒரு வேலைக்குப் போகணும் என்ற எண்ணம்தான் இருந்தது. 11வது படிக்கும்போதே ஒரு நாளைக்கு 13 மணி நேரம்வரை கூடப் படிப்போம்.
ராஜநாயஹம்: பொதுத்தேர்வில் பரீட்சையே எழுத முடியாமல் இருந்த சூழலில் பிரில்லியண்ட்டா பரீட்சை எழுதி, நல்ல மார்க் வாங்குறீங்க. அந்தப் போராட்டமான வாழ்க்கைக்குப் பிறகு லயோலா காலேஜில் சேர்ந்து காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸுக்குப் போறீங்க? அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்.
நடேஷ்: இடையில் ஏழாம் கிளாஸுக்குப் பிறகு, நான் டிராயிங் எதுவும் வரையவில்லை. 12 வயது தொடங்கி, கிட்டத்தட்ட 20 வயது வரைக்கும் டிராயிங் போடாத நிலையில்தான் மெட்ராஸ் ஆர்ட் கிளப்ல சேர்ந்தேன். 8 வருஷமா டிராயிங் போடாததால் வரையும் பழக்கம் என்னை விட்டுப் போய்விட்டது. கையில் ஒரு பேப்பரையும் பென்சிலையும் வைத்துக்கொண்டு வரைவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். 
அப்போதுதான், அவர் (ஆர்.பி.பாஸ்கரன்) வந்து நான் கஷ்டப்படுகிற கட்டத்தில் சரியாக பென்சிலை வாங்கி, கஷ்டத்திலிருந்து
எப்படி விடுவிக்கணும்னு எனக்கு ஒரு ஸ்ட்ரோக் போட்டுக் காண்பித்தார்.
அவ்வளவுதான். அவர் ஒரு ஜென் மாஸ்டர் மாதிரி. நான் எங்கு தடுமாறுகிறேன் என்பதைக் கண்டுபிடித்து சரியா, அங்கே வந்து அதை உடைத்துவிட்டார். அடுத்த நாள் முதல் பாக்கெட்டில் ஒரு பென்சில். சின்னக் குழந்தையில் செய்ததைப்போல் ரீம் ரீமா வரைய ஆரம்பித்தேன். 

சின்னக் குழந்தையில் கட்டுக்கட்டாக சின்ன ஏ4 சைஸ் அளவு பேப்பர். ஆனால், இப்போது டபிள் டெம்மி பேப்பரில் வரைந்து ஆணி
போட்டு அடிச்சு, சார்ட் கோல், பென்சில், மேலும் நான்ஸ்டாப்பா ஹ்யூமன் ஸ்டெடி, அந்த ஸ்டெடி, இந்த ஸ்டெடி என்று எல்லா ஞாபகத்தையும் படமா பண்ணிப் பார்க்குறது. கலைச்செயல்னு சொல்றதைவிட கலை பண்ணுதல்னுதான் சொல்லணும். செயல் என்பது ரொம்ப சாதாரணமான வார்த்தையாக மாறிவிட்ட காரணத்தால், ஒரு ஓவியத்தைப் பண்ணுவது என்பதுதான் சரி. அதுல ‘பண்’ங்குற வார்த்தை வேற இருக்கே.

ராஜநாயஹம்: மிகையான விஷயம் இல்ல. வித்வத் வேறு பிராபல்யம் வேறு, நான் பலபேரிடம் பேசும்போது நடேஷின் ஸ்டாண்டர்டே வேறன்னு சொல்லி எம்.எஃப். ஹூசைன் அளவுக்கெல்லாம் உங்களைப்பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். பொதுவா, ஓவியர்கள் எல்லாம் இலக்கிய சிறு பத்திரிகைகள்ல வரைஞ்சு தங்களை ஸ்தாபித்துக் கொள்வதில் ரொம்பவும் குறியா இருப்பாங்க. ஆனா, எழுத்துக்கு ஓவியம் வரையுற ஆள் நான் கிடையாதுன்னு சொல்லி, மற்றவங்களை மாதிரி சிறு பத்திரிகைகள் தொடங்கி வர்த்தகப் பத்திரிகைகள் வரைக்கும் வரைஞ்சு உங்கள ஸ்தாபிச்சுக்காம இருந்தீங்களே? இதை தியாகம்னு சொல்றதா? இல்லை தவம்னு சொல்றதா?
நடேஷ்: நிராகரிப்புதான். அதாவது, காலையில் சூரியன் உதிப்பதையும் அஸ்தமனமாவதையும் ஒரு பாடகன் பார்க்கிறான். ஒரு கவிஞன் பார்க்கிறான். ஒரு நாவலாசிரியன் பார்க்கிறான். ஒரு சிறுகதை எழுத்தாளன் பார்க்கிறான். ஒரு ஓவியனும் பார்க்கிறான். 
அதேமாதிரி, அரசியல் தகராறுகளையும் ஏமாற்றங்களையும் தகிடுதத்தங்களையும் எல்லாரும்தான் பாக்குறோம்; எல்லாரும்தான் திட்டுறோம். ஒரே காலகட்டத்தில்தானே எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
அப்படி என்றால், நான் போடும் கோடு நீ வரையும் எழுத்தில் இருந்து எந்த வகையில வேறுபடுகிறது. இரண்டும் ஒன்றுதான்.
நான் போடுகிற கோட்டில் நீ சொல்லும் பேச்சு இருக்கும். மாறாக, நீ பேசும் ஒரு விஷயத்துக்கு நான் படம் போடவேண்டிய அவசியம் இல்லை. நான் போட்டிருக்கும் ஏகப்பட்ட படங்களில் எது உனக்குப் பொருந்தும் என்று பார். தேவை என்றால் அதை பயன்படுத்திக்கோ. இப்போ நீ எழுத உட்காரும்போது, ஒரு நாற்பது ஐம்பது பக்கம் எழுதினபிறகுதான் அந்த இடத்தைவிட்டு எழுந்துருக்கிற. அதேமாதிரி, நான் படம்போட உக்கார்ந்தேன் என்றால் ஒரு நாளைக்கு எப்படியும் ஒரு 30, 40 படம் வந்துவிடும். அதுபாட்டுக்கு வரிசையா வந்துகொண்டே இருக்கும். நான் அதை திருத்தியெல்லாம் போடுவது கிடையாது. 50 வருட அனுபவம் இருப்பதால் கோடு தானே வரும். சிலசமயம் தவறும்வரும். ஆனால், தவறைத் திருத்தமாட்டேன். பல பேருக்கு வாழ்க்கையே தவறாப் போகுது. எதை எதையோ ஒண்ணுமே திருத்தமுடியாமப் போகுது. கோட்டை மட்டும் திருத்தி என்ன பிரயோஜனம்? தப்பான கோட்டுக்குப் பக்கத்திலேயே இன்னொரு கோடு பிரமாதமாக வரும். அந்த வடிவத்தை சரியாகக் காட்டும்.
ஒருநாள், நான் ரோஜாப்பூவை வரைந்து கொண்டிருந்தேன். 
மாடியில் இருந்து ஒரு பொண்ணு ‘ஏய்... நடேஷூ நல்லாருக்குது மாங்கா’ன்னு சொல்லுச்சு. அவ்வளவு திறமையிருந்தாலும், அவ்வளவு பயிற்சி இருந்தாலும் அது சரியாத்தான் இருக்கும்னு சொல்ல முடியாது. தப்பாகவும் போகும்.
ராஜநாயஹம்: 52 வருட ஓவிய வாழ்க்கையில் ‘என் பத்து விரல்களின் நுனியில் கோட்டுச்சித்திரம் வரைய என் உயிர்நாடியை ஒரு 50 வருடப் பயிற்சியால் கொணர்ந்து நிறுத்தியுள்ளேன். அதை விளக்கவே முடியாது’ என்று சொல்லி இருக்கிறீர்கள். அந்த சாபமாகவே ஆகிவிட்ட போதையின் ஆழம் பற்றியும் சமச்சீரை நோக்கிய போராட்டம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.
நடேஷ்: மருந்து கொடுத்திடலாம். நோயைக் குணப்படுத்திடலாம். சாகும் நிலையில் இருப்பவனைக்கூட காப்பாற்றி விடலாம். ஆனால், உயிர் என்பது என்ன? உயிரைக்கூட உண்டாக்கிட்டான். அவனோட பேரு மறந்து போச்சு ஜான் வெர்னரோ என்னமோ. அதை உண்டாக்கி, கிட்டத்தட்ட ஒரு ஆறேழு வருஷம் ஆகுது. உயிரணுவை உண்டாக்கியாச்சு. அது உயிரா மாறி குழந்தையாவோ, பன்றியாவோ, நாயாவோ நடந்து வரலை. ஆனால், அது வந்துவிட்டது. உயிருக்கான அந்த அணுவை உண்டாக்கியாச்சு.
உயிர் என்பது எல்லா உடம்பிலும் இருக்கு. காலை 9 மணியில் இருந்து சாயங்காலம் 5 மணி வரைக்கும் மாங்குமாங்குன்னு வேலை பார்க்கும்போது, உயிர் எப்படி இருக்கு, உயிர் என்னவெல்லாம் பண்ணுது, என்னென்ன உணர்ச்சிகள் உயிருக்குள்ள போகுது, எதெல்லாம் அதுக்குத் தெரியுது, எதெல்லாம் அதை உள் வாங்குது என்ற சிந்தனையை, உயிரோட்டத்துடன் இருப்பதை இந்த வேலை ஒழிச்சுக்கட்டுது. அதாவது, ஒரே வேலையையே திரும்பத் திரும்பச்செய்து ஒரு ஆளை கிளார்க்காக
மாற்றி, முக்கால்வாசி இந்த கிளார்க் வேலையைத்தாண்டி இங்க ஒண்ணும் இல்ல. Research and Development என்பதே இங்கு மிகவும் குறைவு. அப்படியே
இருந்தாலும் அதுவும் வெள்ளைக்காரனிடமிருந்து காப்பி அடிச்சதாத்தான் இருக்கு.
அவனே இங்கே வந்து செட் பண்ணுறான். எனக்கு தெரிஞ்சு கல்கத்தாவுல அம்பாசிடர் தொழிற்சாலை இருந்தது. இவ்வளவு பெரிய நாட்டுக்கு Research and Development என்பதே ரொம்பக் குறைவு. அதுக்கான வேலைகள் புதிதான ஒன்றைக் கண்டுபிடிப்பது. ஆனால், இங்கு அப்படி எல்லாம் கிடையாது. வெள்ளைக்காரன் தன்னோட ஊரில் இருந்து தனக்குத் தேவையான மாடலைச் சொல்லி இங்க தயாரிக்கிற மாதிரிதான் இருக்கு. ஏன் இப்படி? ஏன் என்றால், உயிரோடு இருக்கக்கூடிய தொடர்பு விட்டுப்போகுது. இந்த கணக்குப்புள்ளை கலாச்சாரத்துல உங்களுக்கு எப்படி
உயிரோட தொடர்பு இருக்கும்.
ஒரு சின்னப் பையன் மைதானத்தில் வேகமா ஓடி, தொடங்கின இடத்துக்கே வந்து நிற்கிறான். அவன் ஒரு றெக்கையைப்போல் பறந்து போகிறான். என்னோட 60 வயசுல றெக்க மாதிரி பறக்க முடியாது. அதை வேடிக்கைத்தான் பார்க்கமுடியும். ஆனால், அந்த உயிரோட்டம் இருக்கிறது இல்லையா? அதை கிரஹிக்க முடியும். உங்க உடம்புலையும் ரத்தம் ஓடிக்கிட்டிருக்கு. ஆனால், உங்களால் அதை கிரஹிக்க முடியாது. அந்த கிரஹிக்கும் விஷயத்தை, அந்த உணர்வை, ஒரு இடத்தில் கொண்டுவந்து நிறுத்தமுடியும். முதுகுக்கு கீழ்ப் பக்கத்தில் இருப்பதை நெற்றியின் நடுவில் கொண்டுவந்து நிறுத்துவதாக குண்டலினியில் சொல்கிறார்கள். அவையெல்லாம் பொய் கிடையாது. உண்மைதான்.
பத்து பேர் இருக்குற ஒரு இடத்தில் இன்னும் கொஞ்சநேரத்தில் என்ன நடக்கும் என்றுகூட ஒருவரால் சொல்ல
முடியும். அந்த சக்தி மேன்மையடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேமாதிரி, தேவையான வஸ்துவை ஒரு இடத்துல சேர்த்து வைப்பதும் நடக்கும் காரியம்தான். அது பொய் கிடையாது. நான் என்னோட விரல் நுனியில், 10 விரல் நுனியிலும் அதை வைத்திருக்கிறேன். கொஞ்சநாள் கழிச்சு அதை கூப்பிட்டாகூட உடனே வந்துடுங்குறதெல்லாம் பொய். ஒரு நாலஞ்சு டிராயிங் தப்பு தப்பா வரும். கெட்டுப்போகும். ஒரே குழப்பமா இருக்கும். அந்தக் குழப்பத்தில் இருந்து அடுத்த டிராயிங் போடுவோம் அவ்வளவுதான். அதேமாதிரி பலர், தான் ஒரு கலைஞன்னு நினைச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க இல்லையா? அவங்களுக்கு நான் சொல்லுவேன். வாழ்க்கையில எழுதவேண்டிய எல்லாத்தையுமே ஒரே நாவல்ல எழுதணும் என்பது இல்லை. ஒரு விஷயத்தை ஆரம்பி, முடி, ஏறக்கட்டு. விட்டுப் போனதை ரெண்டாவது நாவலில் எழுது. அதேமாதிரி, இரண்டு டிராயிங் கெட்டுப்போய் விடுகிறது.
மூன்றாவது டிராயிங்கை ஒரு புத்துணர்ச்சியோடு தொடங்கும்போது, அதற்கு வேற ஒரு வடிவம்தானே வந்து சேரும். முடியும் என்பது ஒரு நம்பிக்கை மட்டும்தான். இங்க ஒண்ணும் கம்ப சூத்திரம் கிடையாது. திரும்பத் திரும்ப போனா எல்லாமே சமச்சீரில்தான் (Symmetry) ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த சமச்சீரைப் பிடிப்பதுதான் பெரிய வேலை. அதை இயற்கை இயல்பா பண்ணுது. இயற்கையில் இருப்பதை ஒரு கோடு போட்டு ஒரு இது பண்ணும்போது அந்த வடிவம் உங்களுக்கு கிடைக்குதான்னு பார்த்தால் கிடைக்காது. கொஞ்சம் கஷ்டம் கொடுக்கும். மீறி அதுக்கு வடிவத்தைக் கண்டுபிடிச்சு, அதை கேன்வாஸ் மேலயோ பேப்பர் மேலயோ கடத்தணும். அந்த வேலைதான் கலை. அந்த சமச்சீர் ஏன் வேண்டும் என்றால் நவீன ஓவியத்தில் மனதை தான் நாம் படமாக வரைகிறோம். அழகியலுக்கு மீறியது மனம். அதைத்தான் பண்ணனும். நாம எவ்ளோதான் குருவி, குதிரைன்னு வரைஞ்சாலும். ம்ம்ம் குருவி ம்ம்ம்ம் குதிரைன்னு சொல்லிவிட்டுப் போய்டுவாங்க. வேற ஏதாவது வரைஞ்சாத்தான், இதுல என்னமோ இருக்குன்னு உங்ககிட்ட கேள்வி கேட்பாங்க. பார்க்கிற மக்கள் அவங்களுக்குள்ளேயே பேசிப்பாங்க. அந்த மாதிரிதான் நாம வேலை செய்யணும்.
(தொடர்கிறது)
*********************************************************************************

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.