Funny face என்பதற்கு சரியான உதாரணம்.
நல்ல குள்ளமான உருவம்.
சிவாஜிகணேசனின் பால்ய நண்பன்.
ஆயிரம் படம் கண்ட மனோரமாவுக்கு முதல் படம் ‘மாலையிட்ட மங்கை’(1958)யில் முதல் ஜோடியாக நடித்தவர்.
கவிஞர் கே.டி.சந்தானம் என்னிடம் சொன்னார்.“ எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நாடகக் கம்பெனிக்கு சிவாஜியை சிறுவனாக அவருடைய அம்மா கொண்டு வந்து சேர்த்த அதே நாளில் தான் மற்றொரு சிறுவன் காக்கா ராதாகிருஷ்ணனையும் அவருடைய தாயாரும் அழைத்துக்கொண்டு வந்தார்.”
பி.யு.சின்னப்பாவின்”மங்கையற்கரசி”(1949) படத்தின் மூலம் தான் திரையில் காக்கா அறிமுகமானார்.
காக்கா பிடித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்பதைக் கேட்க நேர்ந்த ராதாகிருஷ்ணன் சிரத்தையுடன் நிஜமாகவே ஒரு காக்கையைப் பிடித்துக்கொண்டு வருவார்! அதனால் தான் காக்கா ராதாகிருஷ்ணன்!
காக்கா ராதாகிருஷ்ணனை நினைத்தவுடன் நினைவுக்கு வரும் படம் மனோகரா(1954) அதில் சிவாஜிக்கு step brother.
ஏனோ பால்ய நண்பனுக்கு சிவாஜி கணேசன் தன் படங்களில் முக்கிய கதாபாத்திரம்,பெரிய வாய்ப்பே தந்ததேயில்லை.
சந்திர பாபு,தங்கவேலு,நாகேஷ் போல முதல்நிலை காமெடியனாக காக்காவால் ஆக முடியவில்லை.
நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் எம்.ஜி,ஆரை எதிர்த்து காக்கா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டவர்! இதனால் கூடவோ என்னவோ 1960களி்ல்,1970களில் திரையுலகில் சரியான, நல்ல வாய்ப்பு இல்லாமல் தான் இருந்தார்.
முத்துராமன்,வாணிஸ்ரீ நடித்த கே.எஸ்.ஜியின் ”தபால்காரன் தங்கை’(1970) யில் தியேட்டரே கலகலக்க ”காதர் பாட்சா” என்ற அவர் வசனம் பிரபலம்.
அந்தக் காலங்களில் ஏதோ தலையை காட்டுகிற சிறிய கதாபாத்திரங்கள் தான்.
காக்கா ராதாகிருஷ்ணன் பற்றி நாகேஷ் அன்றே குறிப்பிட்ட வார்த்தைகள் மிகையல்ல.” நேரம் மட்டும் கூடி வந்திருந்தா, இவன் என்னையும் மிஞ்சி எங்கேயோ போயிருக்கக்கூடிய அசகாய நடிகன்!”
1992ல் ‘’தேவர்மகன்” படத்தில் மீண்டும் சிவாஜிக்கு தம்பியாக
நடிக்க வாய்ப்பு.விசேஷமான நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் என்பதை உணர்த்தினார்.
விசித்திரமாக கடந்த 15 ஆண்டுகள் காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஓய்வு பெற வேண்டிய முதுமையில் திரை வாய்ப்புகள் கிடைத்தன! ”காதலுக்கு மரியாதை“ படத்தில் ஆரம்பித்து ”வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’’தாண்டியும் எத்தனை படங்கள்.
மிக சாதாரணமான படங்கள் எதிலும், மிக சாதாரண பாத்திரத்திலும் கூட அவர் நடிப்பு சோடை போனதேயில்லை.Classic Comedian!
சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தியது.
காக்கா ராதாகிருஷ்ணன் சிவாஜியின் பிணத்திடம் பேசிய தழுதழுத்த வார்த்தைகள் ” ஏண்டா இப்படி செஞ்சே.. ஏன் இப்படி செஞ்சே..”
http://rprajanayahem.blogspot.in/2008/08/ok-young-man-i-am-leaving.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_8985.html
Can you please share with us the story behind 'kaka'
ReplyDelete