Share

Jan 6, 2024

R.P. ராஜநாயஹம் எழுத்து பற்றி கதிரேசன் சுப்ரமணியம்

Kathiresan Subramaniyam 

கதிரேசன் சுப்ரமணியம்:

"கிட்டதட்ட 25 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் நிருபராகவும் உதவி ஆசிரியராகவும் பயணித்து வந்த நான், ஏழாம் வகுப்பிலேயே துறையூர் கிளை நூலகத்தில் ராணி புத்தகமும் கோகுலம் புத்தகமும் வாசிக்கத் தொடங்கியவன்.

 எங்கள் ஊர் நூலகத்தில் இருக்கும் அத்தனை சிறுவர் சிறுகதைகளையும் இந்திரஜால காமிக்ஸ் முத்து காமிக்ஸ் என காமிக்ஸ் வகையறாக்களையும் அணில், முயல், அன்னம் என்று வெளிவந்த சிற்றிதழ்கள் தொடங்கி, அனைத்தையுமே பத்தாம் வகுப்புக்குள் வாசித்து முடித்தவன். இதில என்ன பிற்றிக்கொள்ள இருக்கிறது என்கிறீர்களா?
சும்மா ஒரு தகவலுக்காகத்தான்.

நான் எஸ்.எஸ்.எல்.சி படிக்க துவங்கிய போது,  புதுமைப்பித்தன் கதைகள்,`ஜெயகாந்தன் சிறுகதைகள்’ தொடங்கி `சில நேரங்களில் சில மனிதர்கள்’ `பாரிசுக்கு போ’ சிவசங்கரியின் `ஒரு சிங்கம் முயலாகிறது’ சுஜாதாவின் `வசந்த கால குற்றங்கள்’ பாலகுமாரனின் `மெர்குரி பூக்கள்’ கவிஞர் கண்ணதாசனின் `அர்த்தமுள்ள  இந்து மதம் தொடங்கி மேற்கூறிய எழுத்தாளர்களின் படைப்பாளிகளின் படைப்புகளை எல்லாம் ஓரளவுக்கு வாசித்தவன்.  அப்புறம் நா.காமராசன் தொடங்கி  வானமாமலை ஆய்வு வரை புதுக்கவிதை மேய்ச்சல்.

சிறுகதை எழுதும் முயற்சி, கவிதை எழுதும் முயற்சி திரைக்கதை எழுதும் முயற்சி என பல வேலைகளை செய்து பார்த்தவன் அதன் பின்னர் பத்திரிகை துறைக்கு வந்து வார இதழ்கள் பலவற்றில் பணிபுரிந்தேன்.

இப்படிப்பட்ட நிலையிலே 70 களில் படிக்க தொடங்கியவன் 2020க்கு பிறகு வாசிப்பு மனநிலை என்னவோ என்னை விட்டு விலகிச் செல்லத் தொடங்கியது. ஏனென்றால், இப்போதெல்லாம் எழுத்தாளர் என்று தனியாக ஒரு ஜாதி இல்லை. எழுதுபவனும் வாசிப்பவனும் ஒரே ஜாதியாக போய்விட்டார்கள்.

 வாசக மனநிலை மிகவும் குறைவாகவே இருக்கிறது அதற்குரிய காரணங்கள் வாட்ஸ் அப், யூடியூப் என்று சோசியல் மீடியாக்களின் அதீத வளர்ச்சியும் அசுர வளர்ச்சியும் காரணம்.

 இதன் விளைவு எழுதுவது, படிப்பது என்பதில் இருந்த ஆர்வம் போய், `கேட்பது பேசுவது’ என்பதில் எனக்கு மிகுதியான ஆர்வம் வந்துவிட்டது.

 நீயா நானா தொடங்கி தமிழா தமிழா என பல டாக் ஸோக்களை கேட்பது வழக்கம். பல மனிதர்களின் வரலாறுகள் அரசியல் வாக்குவாதங்கள் பெரிய மனிதர்களின் பேட்டிகள் இவற்றை கேட்கும் போது ஒரு பேரார்வம் எனக்குள் கடந்த மூன்று ஆண்டுகளாக எழத் தொடங்கிவிட்டது.

 கிட்டதட்ட ஒரு நாளில் பல மணி நேரங்கள் youtube வழியாக, அனேக விஷயங்களைக் கேட்கின்றேன் என் பள்ளி நாட்களில் எனக்கு ஓவிய ஆசிரியராக இருந்த சேதுராமன் அவர்கள் மிக அழகாக ஒன்றைச் சொல்லுவார். நாம் ஆட்டை சாப்பிடுகின்றோம். ஆட்டை நரி சாப்பிடுகிறது. நரிக்குறவர்கள் நரியை சாப்பிடுகிறார்கள். ஆக இரண்டு சத்தும் அவர்களுக்குக் கிடைக்கும். எது புத்திசாலித்தனம்? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்று வேடிக்கையாகச் சொல்வார்.

அதைப்போல பத்து நூல்களை வாசிப்பதில் கிடைக்கக்கூடிய ஒரு அனுபவம், 
நம் R.P. ராஜநாயஹம் அவர்கள் எழுதக்கூடிய ஒற்றை நூலில் 
எனக்கு கிடைக்கிறது.

 அதனால், எனக்கு இப்போது மீண்டும் வாசிப்பு பழக்கம் வந்திருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் நம் ராஜநாயஹம் அவர்களுடைய எழுத்தும், எழுத்து நடையும் விஷயங்களைச் சொல்லுகின்ற பாங்கும் திடுதிப்பென வெளிப்படும் ஆங்கில பொன்மொழி பிரயோகங்களும் தான் என்றாலும், பாயசத்தில் கிடைக்கும் முந்திரி, திராட்சை போல் பெரிதும் மகிழச் செய்கின்றன.

 இவ்வளவு ருசியான ஒரு எழுத்துநடையை என்னால் வேறு எவரிடமும் பார்க்க முடியவில்லை. எத்தனை முறை திருப்பதி லட்டை சாப்பிட்டோமென்றாலும் அதன் சுவையோ மணமோ இனிப்பு குறைவதில்லை.

 அப்படித்தான் R.P.ராஜநாயஹம் அவர்களின் எழுத்துக்களும் இருக்கின்றன.
 இன்னும் சொல்லப்போனால், அவரது எழுத்துக்கள் ஒரு பெரிய ராஜபோதை போல் ராஜ நாகத்தின் விஷத்தைப் போல் மனதுக்குள் அப்படியே ஒட்டிக் கொள்கின்றது.

 எனக்கு மிகுந்த கிறுகிறுப்பை ஏற்படுத்துகின்றது. அவர் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும். வாசிப்பு உலகம் இன்னும் விரிவாக்கம் பெற வேண்டும். வெகுஜன பத்திரிகைகள் ஏனோ அவரைப் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்பது எனக்கு மிகுந்த வருத்தமாகவே இருக்கின்றது. ஆனாலும், தன் முயற்சியில் சற்று மனம் தளராத விக்ரமாதித்தனாய் அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.