Share

Sep 7, 2022

சினிமா எனும் பூதம் பாகம் - 2 பதிப்புரை

சினிமா எனும் பூதம்
பாகம்- 2 
நூலுக்கு தோட்டா ஜெகன் எழுதியுள்ள
பதிப்புரை

வசிப்பதே வாசிப்பதற்காக தானோ என நான் ஐயம் கொள்ளும் அளவில் அய்யா R. P. ராஜநாயஹம் அவர்களின் வாசிப்பறிவு மிக, மிக விசாலமானது. அந்த பரந்த வாசிப்பின் காரணமாய், அவரால், அவரால் மட்டுமே, ஷேக்ஸ்பியரின் மக்பெத் பற்றி கட்டுரை எழுதும் போது மௌனியின் வரிகளை உள்ளே கொண்டு வர முடிகிறது. 

மிகவும் செல்வந்த, அதிகாரமிக்க குடும்பத்தில் பிறந்தவர் 
R. P. ராஜநாயஹம் அவர்கள்.  வாசித்ததை மட்டுமில்ல, கேட்டது, பார்த்தது, அனுபவித்தது, உணர்ந்தது என அனைத்தையும் எழுத்தில் எல்லோரும் விரும்பவது போல கொண்டு வருவது எல்லோருக்கும் சாத்தியமானது கிடையாது.  அவரது இசையறிவும், ரசனையும், பரந்த வாசிப்பும் உயர்தரமானது மட்டுமல்ல உண்மையானதும் உன்னதமானதும் கூட.

எப்படி இந்த மனிதரால் ஜெயகாந்தனை பற்றியும் எழுத முடிகிறது, ஜோதிலட்சுமி பற்றியும் எழுத முடிகிறது என் வியந்திருக்கிறேன். சுந்தரராமசாமி பற்றி சொல்கிறார், அதே வேளையில் ஸ்ரீதேவி பற்றியும் எழுதுகிறார். மதுரை சோமுவின் கச்சேரியை ரசித்ததை பற்றியும் எழுத முடிகிறது, அதே சமயம் மம்முட்டி நடித்த மலையாள படத்தையும் பற்றியும் பேச முடிகிறது. போர்ஹேவின் சிறுகதையை சிலாகிக்கும் அவரால், டி.எஸ்.பாலையாவின் Family tree பற்றியும் பேச முடிகிறது. 

அவருக்கு மட்டும் எப்படி இப்படி அனுபவங்கள் அமைகின்றன என நான் பொறாமைப்பட்டதும் உண்டு. யாருக்கும் கிடைக்காத இடங்களில், நேரங்களில் உண்மைக்கு ஒரு சாட்சியாய் அவர் இருந்திருக்கிறார். 

 என்னை பொறுத்தளவில், வெவ்வேறு துறைகளிலும் இதுவரையிலான சிறந்த தமிழ் ஆளுமைகளை கணக்கெடுத்தால், அதில் கண்டிப்பாக இடம் பெறுவார்  R.P.ராஜநாயஹம்.  

R. P. ராஜநாயஹம் எழுதிய 'சினிமா எனும் பூதம்'  ( முதல் பாகம் ) புத்தகத்தை வாசித்த, மாண்புமிகு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தனது ட்வீட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில், கீழ்க்கண்ட விமர்சனத்தை ஜூலை 6, 2020ல் பதிவு செய்தார். 

"ஒவ்வொருவரையும் கூகுள்செய்து கண்டறிந்து, ‘ஓ, இவரா… இவருக்குப்பின் இப்படியொரு கதையா’ என்று ஆச்சரியப்படும் வகையில் திரைத்துறையை ‘சினிமா எனும் பூதம்’ நூலில் அடக்கி நமக்குள் கடத்துகிறார் 
R. P. ராஜநாயஹம். 
எண்ணிலடங்கா தகவல்களை எளிமையாக நேர்த்தியாக எப்படிச்சொல்ல முடிகிறது என மலைத்தேன்.

இதில் ‘கலைந்த ஒப்பனை’ என்றொரு பகுதி. வேறொருவர் நடிக்க வேண்டியது, அவர் திடீரென இறந்ததால் அவ்வாய்ப்பு இவருக்கு வரும். நடித்துவிடுவார். அக்காட்சிகள் எடிட்டிங்கில் போய்விடும். அதைப் படிக்கும்போது ஒரு பக்கம் நகைச்சுவையாகவும், மறுபக்கம் எவ்வளவு போராட்டம் என்று வருத்தமாகவும் இருந்தது.

இதில் ‘movie connoisseur’ என்ற வார்த்தை பிரயோகம் வரும். அதாவது சினிமா வல்லுநர்.உண்மையில் 
R. P. ராஜநாயஹம்
 ஒரு movie connoisseur. சினிமா குறித்து பலர் எழுதியிருந்தாலும் பலரும் மறந்த கலைஞர்களை நினைவுகூர்கிறீர்கள். வாழ்த்துகள் சார். நிறைய எழுதுங்கள்!"

மேலே கூறிய நிகழ்வே, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

R. P. ராஜநாயஹம் அய்யா அவர்களின் எழுத்துக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான அன்பர்களில்  நானும் ஒருவன். அந்த ஒரு தகுதியோடு அவரது இந்த நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். 

உண்மையுடன்,
'தோட்டா' ஜெகன்

https://m.facebook.com/story.php?story_fbid=3407078352838940&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.