Share

Sep 12, 2017

புதுமைப்பித்தன் தழுவல் கதைகள் பிரச்னையில் ராஜநாயஹத்தின் குரல்


1991ல் சிவசுவின் ’மேலும்’ சிறுபத்திரிக்கையின் ஆகஸ்ட் இதழில் நான் எழுதிய கட்டுரை இது. இப்போது 26 வருடங்களுக்குப்பின் மீண்டும் பதிவிடுகிறேன்.
..........................


நெஞ்சஞ்சுட வுரைத்தல் நேர்மையென கொண்டாயோ?
- R.P.ராஜநாயஹம்
பொதியவெற்பனின் ’பறை 1990’ ல் மயிர் சுட்டு கரியாகுமா? என்று ஒரு கவிதை?யும் திருச்சிற்றம்பலக் கவிராயருக்குத் திறந்த மடல் ஒன்றும் எழுதியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ’மன நிழல்’ கதை விவகாரம் பற்றிப் பேச வேண்டியதாகிறது. சென்ற வருடம் ‘குங்குமம்’ பத்திரிக்கை ‘புகழ் பெற்ற காதல் கதைகள்’ தலைப்பில் சிறுகதைகளை வெளியிட்டது. 20.4.1990 தேதியிட்ட இதழில் புதுமைப்பித்தனின் ‘மன நிழல்’ பிரசுரமானது. அடுத்த வாரம் ஒரு வாசகர் கடிதம். யார் என்றால் கமலா விருத்தாச்சலம். ‘ அது நான் எழுதிய கதை. என் சிறுகதையை ஸ்டார் பதிப்பகம் தெரியாமல் ‘ அன்று இரவு’ தொகுப்பில் சேர்த்து விட்டார்கள்.’
நாமெல்லாம் எங்கே போய் முட்டிக்கொள்வது? முதல் பதிப்பில் ஏற்பட்ட தவறை அடுத்த பதிப்பிலாவது தவிர்த்திருக்க முடியாதா? அதன் பிறகு எத்தனை பதிப்புகள் ‘அன்று இரவு” வெளிவந்து விட்டது. மிகச் சமீபத்திய ஐந்திணை பதிப்பக வெளியீட்டிலும் அந்தக் கதை இடம்பெற்றுள்ளதே. கமலா விருத்தாச்சலம் தன்னுடைய கதையை புதுமைப்பித்தனின் தொகுப்பில் இருந்து அகற்ற முயற்சியே செய்யாமல் இருந்தது ஏன்? ’காசுமாலை’ என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு தன் பெயரில் வெளியிட்டு இலக்கியவாதியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட அம்மையாருக்கு இது தன் கணவர் புதுமைப்பித்தனுக்குச் செய்யப்படும் துரோகம் என்று புரியவில்லையா? தமிழ்ச்சிறுகதையை உலகத்தரத்துக்கு உயர்த்திய உன்னத கலைஞனின் தொகுப்பில் இப்படி சராசரிக்கும் கீழான கதையைக் கலப்பது எந்த வகையிலான இலக்கியக்குற்றம்.
புதுமைப்பித்தன் சாதாரண கதைகளும் எழுதியிருக்கிறார். இப்ப என்ன? என்பதான சால்ஜாப்பு சரிதானா?
க. நா.சு. தன் காலமெல்லாம் புதுமைப்பித்தனைப் போற்றி எழுதினாரே. அவருக்கு இந்த ‘மன நிழல்’ விவகாரம் தெரிந்திருந்ததா?
புதுமைப்பித்தன் வரலாறு எழுதிய ரகுநாதன் இந்த விஷயம் பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தாரா?
புதுமைப்பித்தனை இந்திய இலக்கிய சிற்பியாக சாகித்திய அகாதெமிக்காக எழுதிக்கொடுத்த வல்லிக்கண்ணன் அறிவாரா?
புதுமைப்பித்தனிடம் காணப்படுவது Wit அல்ல, அது Power என்று எடுத்தியம்பிய தர்மு சிவராமுவுக்கு ’மன நிழல்’ ஊழல் தெரியுமா?

படைப்புக்கு முன்னாலேயே, அதன் கிளை படரும் காட்சிகளை உணர்வதற்கு முன்னாலேயே, ’புதுமைப்பித்தன்’ என்று தனக்குப் பெயர் சூட்டிக்கொண்ட தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து, அவரது மனக்குகை ஓவியங்களை ரசித்த சுந்தர ராமசாமி ‘மன நிழல்’ கதையைப் படிக்காமலா இருந்திருப்பார்?
இப்போது மீண்டும் ஒருமுறை புதுமைப்பித்தனின் படைப்புலகத்திற்குள் ஆட்பட்டு மீளமுடியாமல் மூச்சுத்திணறி முக்குளித்தபோது பொதிய வெற்பன் கூடத்தானே மன நிழலை வாசித்திருப்பார்!
அந்த மகத்தான கலைஞனின் இதயம் இந்தக்கதையில் இல்லாததை இவர்களெல்லாம் எப்படி கண்டுபிடிக்கத் தவறினார்கள். இந்த கலப்படம் இந்த வல்லுனர்களின் கண்ணில் மண்ணைத் தூவியிருப்பது விந்தையாயிருக்கிறது.
கமலா விருத்தாச்சலம் ‘அது என் கதை’ என்ற போது தமிழ் கூறு நல்லுலகம் ஒரு அதிர்ச்சியையாவது வெளிக்காட்டியதா?
பாரதியின் கவிதைகளுக்கிடையில் செல்லம்மாள் தன் பாடலையும் செருகியிருப்பாளோ?!
புதுமைப்பித்தன் சாகக்கிடந்த வேளையில் அவருக்கு சினிமாவில் எழுதிய பணம் வந்த போது, அவரோடு சைனா பஜாருக்கு போய் தனக்குப் பட்டுப் புடவைகள் எடுத்து வந்து, பின்னர் லோகநாதன் என்ற நண்பர் போய்க் கெஞ்சிக் கூத்தாடி கடைக்காரனிடம் புடவைகளை திருப்பிக்கொடுத்து, திருவனந்தபுரம் சானிட்டோரியத்திற்கு இருவரையும் ரெயிலேற்றிவிட்ட கதையெல்லாம் தெரிந்த விஷயம் தானே?
இப்போது “அவர் உயிரோடு இருந்தால் தெரியும் சேதி’ என சிட்டியைப்பார்த்து கமலா விருத்தாச்சலம் பிலாக்கணமிடுவது அபத்தமாக இருக்கிறது.
எல்லாக் கலைஞர்களுக்கும் பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது. புதுமைப்பித்தன் மட்டும் விதிவிலக்கா? காமவல்லி,வசந்தவல்லி என்று சினிமாவுக்கு வசனம் எழுதவில்லையோ? ’பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்’ படக்கம்பெனி ஆரம்பித்து ஓஹோ புரொடக்ஷன்ஸ் செல்லப்பா கூத்தெல்லாம் நடத்தியவர் தானே புதுமைப்பித்தன்?
தி.ஜானகிராமன் எழுதிய நாடகங்களை என்னவென்று சொல்வது?
கு.அழகிரிசாமி மதுரையில் எவனோ ஒரு ஒன்னரையணா எழுத்தாளனுக்கு Ghost writer ஆக இருக்க நேர்ந்திருக்கிறதே.
’புதுமைப்பித்தனை மிஞ்ச ஆளேயில்லை!’ என்று சொல்லிக்கொண்டே க.நா.சு., தான் மௌனி கதைகளுக்கு எழுதிய முன்னுரையில் ஒரு ஒன்பது பெயர்களைச் சொல்லி ’இவர்களில் மூன்று பெயர்களைக் காலம் அடித்துவிடும். ஆனால் அந்த மூன்று பெயர்களில் மௌனி பெயர் மட்டும் உறுதியாக இருக்காது’ எனும்போது புதுமைப்பித்தனுக்கு guarantee கொடுக்க மறுக்கிறார் என்று தான் அர்த்தம்.
’எழுத்து’ சி.சு.செல்லப்பா தமது வழிபாட்டுக்கு இலக்காகியிருந்த பிச்சமூர்த்தியுடன் புதுமைப்பித்தனை ஒப்பிட்டு முன்னவரைப் பெரிய ரிஷியென்றும், புதுமைப்பித்தனை மட்டமான மனிதர் என்றும் ஸ்தாபிக்க முயன்றார் என “லயம்” 3வது இதழில் பிரமிள் எழுதியிருக்கிறார்.
அசோகமித்திரன் சாப விமோசனம் கதையில் ஒரு Logical errorஐ சுட்டிக்காட்டுகிறார். இது தப்பில்லை. தொடர்ந்து அவர் புதுமைப்பித்தன் கதைகள் காலப்போக்கில் இன்று அவை வகிக்கும் அந்தஸ்தை இழந்து விடுமோ என்று சங்கடப்பட்ட விஷயம் பலரைக் கொந்தளிக்க வைத்து விட்டது.
சுஜாதா பல வருடங்களுக்கு முன் கணையாழியின் கடைசிப்பக்கத்தில் போட்ட மானசீகத் தொகுப்பில் ‘ரொம்ப யோசனைக்குப் பிறகு, புதுமைப்பித்தன் இல்லை’ என்றார். இப்போது ’Shock valueக்காக அப்படிச் சொன்னேன். அப்ப எனக்கு என்ன வயசுங்கிறீங்க?’ என்று கணையாழியில் ஜோக்கடிக்கிறார்.
காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும். விமரிசனம் செய்வதும் ஆய்வு செய்வதும் வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் அவரை சுத்தமாக ignore செய்யும் இன்றைய இளைய தலைமுறை இலக்கிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை போப் போலப் பாவித்துக் கொண்டு செய்யும் புனிதப் பட்டமளிப்புகளை இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்வது முக்கியமாகிறது.
’பால்வண்ணம்பிள்ளை’ என்ற புதுமைப்பித்தனின் கதாபாத்திரத்தைத் தன்னுடைய புனைபெயராகக் கொண்டு ஒரு காலத்தில் எழுதிக்கொண்டிருந்த கோணங்கி இரண்டு வருடங்களுக்கு முன், ‘ பழைய ஆட்களில் மௌனி, இப்போ பிரமிள். ரெண்டே பேர் தான். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.ஐ செத்த எலி மாதிரி தூக்கிப் போட்டுடனும்’ என என்னிடம் கூறினார்.
’ரப்பர்’ ஜெயமோகன் தமிழில் ஜே.ஜே சில குறிப்புகள் ஒன்று தான் உருப்படி. வேறு எதுவும் கிடையாது. மலையாளத்தில் தான் நிறைய இருக்கிறது என்று கூறி சு.ராவுக்கு மட்டும் ஞானஸ்நானம் செய்து அருளும் ஆசியும் வழங்கி விட்டார்.
இன்னும் ஒரு படி மேலே போய் பிரேமும் ரமேஷும் ( கிரணம் பிரேதாக்கள் ) ’தமிழிலே எல்லாமே குப்பை’ என்று என்னிடம் கூறினார்கள். அவர்களிடம் நான் ‘புதுமைப்பித்தனை நான் வாசித்ததால் தான், இன்றைக்கு பிரேதாவையும் தெரிந்துகொள்ள முடிகிறது’ என்றேன். மீண்டும் பிரேம் அழுத்தமாக சொன்னார். “ தமிழில் எல்லாத்தையும் எரிச்சுடலாமே. லத்தீன் அமெரிக்காவில தான் நிறைய இருக்கு”
இவர்கள் இப்படிச் சொல்வது பற்றி சாரு நிவேதிதாவிடம் விளக்கம் கேட்டேன். அவர் அழகாகச் சிரித்துக்கொண்டு ஒரு போடு போட்டார் :‘சிவசங்கரி, இந்துமதி, புஷ்பா தங்கதுரையெல்லாம் குப்பைன்னு நீங்க சொல்லலியா? அது மாதிரி தான்.’
பொதியவெற்பன் இவர்களைச் சுட்டியும் ‘ மயிர் சுட்டு கரியாகுமா – இரண்டாம் பாகமும், திருச்சிற்றம்பலக்கவிராயருக்கு இரண்டாவது திறந்த மடலும் ‘ பறை 1991’ல் எழுதலாமே. கமலா விருத்தாச்சலத்தின் பிலாக்கணம் “ அவர் உயிரோடு இருந்தால் தெரியும் சேதி “ வழக்கம் போல இடம் பெற வேண்டும்!
’மணிக்கொடி இலக்கிய போக்கிற்கும் அதன் பொற்காலத்தை இன்று சுவீகரித்துக்கொள்ள முயல்கிற சிட்டிக்கும் சம்பந்தமில்லை’ – இப்படி அ. மார்க்ஸ் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது.
வ.ரா, சொக்கலிங்கம் தலைமையில் புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, ந.பிச்சமூர்த்தி ஆகிய சாதனையாளர்களுடன் சி.சு.செல்லப்பா, சிட்டி, சிதம்பர சுப்ரமணியன், கி.ராமச்சந்திரன் ஆகிய படைப்பாளிகளும் இணைந்து பங்காற்றியதைப் பற்றி பி.எஸ்.ராமையாவின் ‘மணிக்கொடி காலம்’ படம் பிடித்துக் காட்டுகிறது.
மணிக்கொடி மறுமலர்ச்சியில் பிரமிப்பான விஷயம், எழுத்தாளர்கள் எல்லோரிடமும் இருந்த INDIVIDUALITY தான், ஒவ்வொருவரும் வெவ்வேறு VARIETY. ஒருவர் சாயல் துளி கூட மற்றவரிடம் கிடையாது. பின்னால் வந்த லா.ச.ரா, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமியிடமும் விசேஷமான தனித்தன்மை இருந்ததென்பதும் தமிழிலக்கியத்தின் அதிர்ஷ்டம்.
சிட்டி வ.ராவின் சீடர். மகாகவி பாரதி பற்றி மிகச் சரியான நேரத்தில் கு.ப.ராவுடன் இணைந்து ‘கண்ணன் என் கவி’ புத்தகம் எழுதியவர். மணிக்கொடியில் அவர் எழுதிய ‘அந்தி மந்தாரை, ’ரப்பர் பந்து’, ’உடைந்த வளையல்’ போன்ற கதைகள் குறிப்பிடத்தகுந்தவை.
சு.வேங்கடராமன் ‘ மேலும்’ 5வது இதழில் தமிழ் சிறுகதை வரலாற்று நூலை விமர்சித்து முடிக்கும்போது கூறுவதை பொதியவெற்பன் மேற்கோள் காட்டுகிறார். அதில் சு. வேங்கடராமன் ‘கல்வி நிறுவனம் சாராத சுதந்திர விமர்சகர்கள் விமர்சனம் செய்யவே யோக்கியதையற்றவர்கள். பண்டிதர்கள் தான் விமர்சனம் செய்ய யோக்கியதையுள்ளவர்கள்’ என்பதாக மறைமுகமாகச் சொல்கிறார். இதை எந்த சட்டதிட்டத்தில் சேர்க்கலாம் என்று தெரியவில்லை.


சென்னையில் ஒரு உணவு விடுதியில் சாப்பிடுவதற்காக சிட்டி நுழைகிறார். மேற்பார்க்கும் ஒருவர் சிட்டியிடம் ஒரு அறையை காட்டி சொல்கிறார் :“ Non-Brahmins எல்லாம் அங்கே போங்க”
தான் ஒரு பிராமணன் தான் என்று ஸ்தாபிக்க முயற்சி ஏதும் செய்யாமல் பிராமணரல்லாதோர் சாப்பிடும் பகுதியில் போய் சிட்டி அமர்கிறார்.
தஞ்சையில் ஸ்வாமினாத ஆத்ரேயனை அவரது கடையில் சிட்டி சந்திக்கிறார். அவரிடம் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி ஆத்ரேயன் தன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். வீட்டில் வெளியே திண்ணையில் வைத்தே சாப்பாடு பரிமாறுகிறார்கள். சிட்டி ‘ மாமி, நானும் பிராமணன் தான்’ என்றெல்லாம் எதுவுமே சொல்லாமலேயே சாப்பிட்டு விட்டு விடைபெறுகிறார்.
பொதியவெற்பனின் “ஏங்காணும் சிட்டி! யாரிடம் உமது நூலாட்டல்” கொக்கரிப்பு
திரௌபதியைத் துகிலுரிந்த துச்சாதனத் திமிர் தான்.


....................................................................


குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை
1991 ல் "மேலும் " பத்திரிகையில் " நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மைஎன கொண்டாயோ ?"- இந்த தலைப்பில் நான் எழுதி ஒரு கட்டுரை வெளியானது. புதுமைப்பித்தன் சர்ச்சை பற்றியது.
உடன் பொதியவெற்பன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
" மரணப் படுக்கையில் இருக்கும் கமலா விருத்தாச்சலத்தை புண் படுத்தி விட்டீர்கள்"
கமலா விருத்தாசலம் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவியார்.
இதற்கு ஒரு கார்டில் நான் எழுதிய பதில்:
“My intentions are genuine. I don’t see the need to retaliate .”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.