Share

Sep 16, 2016

"அத்தக்கி சக்கர நை!"


குழந்தையாய் இருக்கும்போது நான் மற்றக்குழந்தைகள் போல் மழலைப்பேச்சு பேசவில்லை. என் செல்லப்பெயர் ’துரை’. தொர என்று தான் அழைப்பார்கள். பேசாமல் ஊமையாக இருந்ததால் குடும்ப அளவில் எனக்குப்பெயர் ’ஊமத்தொர’. மூன்றரை வயதுக்கு மேல் தான் கொஞ்சம் புரியும்படியாக மழலை பேசினேனாம்.
ஆண் குறியை ’சக்கரை’ என்பார்கள். எனக்கு ’குறி’ பெயர் தெரிந்து விட்டது. சக்கரை! என் குறியை காட்டி ‘சக்கர’ என்பேன்.
பக்கத்து வீட்டு அத்தை வீட்டுக்கு சென்றிருக்கிறேன். அந்த அத்தை குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு மூன்று வயது பையனாக நான் வருவதைக் கண்டு அவர் கலவரப்பட ஏதுமில்லை அல்லவா? அவர் இயல்பாக குளிக்கும்போது நான் curious child என்பதால் இரண்டு தொடைக்கு இடைப்பட்ட பகுதியை உற்றுக் கவனித்து அத்தைக்கு என்னிடம் இருப்பது போல ’சக்கரை’ இல்லை என்பதை உணர்ந்து திருவாய் மலர்ந்திருக்கிறேன். ‘ அத்தக்கி சக்கர நை!’. அந்த பக்கத்து வீட்டு அத்தை புரிந்து கொண்டு செல்லமாக ‘ போடா! படுக்காளிப்பையா!’ என்று சொல்லி விட்டு தலையைத் துவட்டியிருக்கிறார்.
நான் வீட்டிற்கு வந்து சொன்னேன்.
‘ அம்மா! அத்தைக்கு சக்கர நை!’ என் அப்பா ஆஃபீஸ் விட்டு வந்தவுடன் அவரிடமும் ‘அத்தக்கி சக்கர நை’ என்றேன்.
பக்கத்து வீட்டு அத்தையைப் பார்க்கும்போதெல்லாம் வாயில் வலது கை ஆள் காட்டி விரலை விட்டு கன்னத்தின் உள் தொட்டுக்கொண்டு, மறுகை விரல்களை விரித்து, லேசாக ஆடியவாறு ‘அத்தக்கி சக்கர நை!’ என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். அத்தையின் கணவரிடம் “மாமா, அத்தக்கி சக்கர நை!”…அத்தையின் என் வயதேயான மகனிடம் சொன்னேன் - ”அத்தக்கி சக்கர நை!”… தெருவில் என் வயது குழந்தைகளிடம், என்னை தன் பள்ளிக்கு ஒரு நாள் அழைத்துக்கொண்டு போன, மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எதிர்த்த வீட்டு கமலாக்காவிடம் கூட இதை சொன்னேன்.
அக்கம்பக்கத்து பெண்கள் எல்லோரும் எப்போதும் என்னை இதை சொல்லச்சொல்லி கேட்டு விட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்.
……………………………………………………………………….

வயதுக்கு வராமலே வாழ் நாள் பூராவும் முதிர்கன்னியாக இருக்கும் சில பெண்கள்…

இந்த அபூர்வமான உடல் ரீதியான பெண் சிக்கல் பற்றி 1975ல் ’தென்னங்கீற்று’ திரைப்படம் கோவி.மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. நடிகை சுஜாதா கதாநாயகியாக நடித்திருந்தார்.
அந்தக் கால நடிகைகள்  இருவர் இப்படி மாதவிலக்கு ஆகாமல் இருந்தவர்களாக சொல்லப்பட்டதுண்டு.
பெண் எழுத்தாளர்களில் ஒருவர் இப்படி ’சடங்கு’ ஆகாமல் வாழ்ந்ததாக ஒரு செவி வழிச் செய்தி.

இது போன்ற விஷயங்கள் பெரிய ரகசியமாக இருக்க முடியாது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் கவலை, ஆதங்கம் மூலமாகவே விஷயம் பலருக்கும் தெரிய வாய்ப்புண்டு. சம்பந்தப்பட்ட பெண்களே கூட வேதனையுடன் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொல்ல நேரும். இதற்கான மருத்துவ ஆலோசனை காரணமாகவும் இதை மற்றவர்கள் அறியக்கூடும்.

இது ஒரு குறைபாடு. ஊனம் போலவே வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்தும் பிரச்னை. வகைப்படுத்த வேண்டிய கடும் நெருக்கடி. கௌரவ பங்கம் இதில் என்ன இருக்கிறது? சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இதனால் இழுக்கு, அவமானம் எதுவும் கிடையாது.

........................................................................................"சடங்காகாத வயதான பெண்களை இங்கே 'இருசி' என்பார்கள்... “ இருசி காட்டேரி இத்துன்ப சேனையும்... என்ற கவசப்பாட்டில் வருவது என்பார்கள்."
கலாப்ரியா
……………………………………………….

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.