Share

Dec 15, 2015

எஸ்.வி ரங்காராவ்



கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம்.’’



ரங்காராவுக்கு எப்பேர்ப்பட்ட மகுடம்!


டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்கமுடியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர் கூட இதுவரை மிகப் பெரிய நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது. ரங்காராவின் தனித்துவத்திற்கு இது கூட உதாரணம். அவ்வளவு நுட்பமானது அவரது நடிப்பின் பரிமாணங்கள்!முதியவராக நடித்தார். ஆனாலும் இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து Brandசெய்துவிட முடியாது.

தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள் (1950களில்,1960களில்,1970களின்முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்


தெலுங்கு,தமிழ் படங்களில் நடித்தவர் . தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்ரவர்த்தி ' என பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.
அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர். எஸ்.வி.ரங்காராவ் B.Sc.
நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor!
நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப் படங்களில் புராண கதா பாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார்.

ஒரு தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.
Scene Stealer! ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் இவர் தான் Scene Stealer!எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்

தேவதாஸ், மிஸ்ஸியம்மா ஆரம்பித்து
'நானும் ஒரு பெண் 'மாமனார் -மருமகள் உறவு'.விஜயகுமாரியின் மாமனாராக.
'கற்பகம் ' ஜெமினி கணேஷின் மாமனாராக.
'அப்பா ' ரோல் திரைப் படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.
'கண் கண்ட தெய்வம் ' படத்தில் சுப்பையாவின் 'அண்ணன் ' ரோல்!
அவர் செய்த புராண பாத்திரங்கள்.

வில்லனாக 'நம் நாடு ' படத்தில் 'பக்த பிரகலாதா'வில்.
 
'மாயா பஜாரில் ' கடோத்கஜனாக "கல்யாண சமையல் சாதம் !"

சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை.

தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. இயக்குனரும் கூட!
இந்தோனேசியாவில் ஒரு திரைப்படவிழாவில் இவர் 'நர்த்தன சாலா' என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார்

மற்ற படி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் இவருக்கு கிடைத்ததில்லை.
உலகத்தின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.

 ………….


நானும் ஒரு பெண்(1963) படப் பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர் .ராதா சரியான 
நேரத்தில் வந்து காத்திருந்து பொறுமை இழக்கின்ற நிலை. ரங்காராவ் ரொம்ப தாமதமாக உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே
கமென்ட் அடித்திருக்கிறார்  
 " கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு. ஒரு ஒழுங்கு இல்ல.படாத பாடு படுத்துறான்."  ரங்கா ராவ் ரொம்ப  மனம் புண்பட்டு இயக்குனரிடம்
''இன்றைக்கு  விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங் வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள் .
எனக்கு உடம்பு சரியில்லை.ஆனால்   அது பற்றி கவலையில்லை." என்று ரோசத்தோடு சொல்லி அதன் படியே நடித்துக்கொடுத்தாராம்.
நானும் ஒரு பெண்ணில் மரணப் படுக்கையில் இருக்கும் ரங்காராவை " அத்தான்... ஒரே ஒரு கையெழுத்து போடு அத்தான்...." 
- ராதா படாத பாடு படுத்துவார்.

................................................  

 எந்தப்படத்திலாவது சந்திர பாபு செட்டில் இருந்தால் எப்போதும் ரெங்காராவிடம் அத்து மீறி விளையாடுவாராம்.
இவரால் தாங்கமுடியாத அளவுக்கு கலாய்ப்பார்.சகிக்க முடியாத 
அளவுக்கு பாபுவின்  நடவடிக்கை  இருக்கும் போது ரங்காராவ் ரொம்பவே
மூட் அவுட் ஆகிவிடுவாராம்
…………………………….

ரங்காராவ்ஆதி பராசக்தி’ படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் காட்சி ஷூட்டிங் போது"கட் கட் " என கேமராவை நிறுத்தச் சொல்லி கே.எஸ்.ஜி "என்னய்யா,எருமை மாடு மாதிரி நிக்கிறியேய்யா " என ரங்காராவை   திட்டினாராம். செட்டில் அப்போது இருந்தவர்களுக்கு இவ்வளவு பெரிய நடிகரைப்பார்த்து  இப்படி சொல்லுகிறாரே என்று என்னமோ போலாகி விட்டதாம்.


பக்த பிரகலாதா (1967) படத்தில்  ரண்யகசிபு வாக ரங்கா ராவ் நடித்தார். ஷூட்டிங்குக்கு ரங்காராவ் சரியாக
ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர்  .வி.மெய்யப்ப செட்டியார் காதுக்கு தகவல் போனது.
'முழுக்க ஷூட்டிங்கில் நடிக்க  மறுக்கிறார். ஒரு நாளில் மூன்று நான்கு மணி நேரம் ஆகிவிட்டால்
கிளம்பி விடுகிறார்.'
செட்டியார் கோபமாகி விட்டார்."நான் இன்று  
செட்டுக்கு வருகிறேன்.
ரங்காராவை பார்த்துக் கொள்கிறேன்"
ஷூட்டிங் ஆரம்பித்து சிலமணி நேரத்தில் 
 செட்டியார் ஆஜர். ரங்கா ராவுக்கு சூட்சுமம் புரிந்து விட்டது 
கம்ப்ளைன்ட் ஆகியிருக்கிறது. ஷாட் ப்ரேக்கில்  அவரே செட்டியாரிடம் வந்து அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களைஎல்லாம் கழற்றி விட்டு சொன்னார் 
" மிஸ்டர்  செட்டியார்! இந்த நகைகளை பிடியுங்கள் "
செட்டியார் கையில் வாங்கியிருக்கிறார். சரியான கனம் ! "இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு 
 புராண வசனமும் பேசி 
எவ்வளவு நேரம் நான் உழைக்க  முடியும் சொல்லுங்கள்.நான் வீட்டுக்குப் போனபின்னும்
இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது " 
செட்டியார் கோபம் பறந்து விட்டது. பரிவுடன் சொன்னாராம்  "நீங்கள் செய்தது சரிதான் "
.......................

ரங்காராவ் நடித்த காட்சிகள் மிகவும் விஷேசமானவை. படிக்காத மேதையில் முதல் முதலாக படம்பிடிக்கப்பட்ட காட்சி ரொம்ப பிரபலமான நெஞ்சை உருக்கும் காட்சி. ரெங்காராவ் வேலைக்காரன் சிவாஜியை வீட்டை விட்டு வெளியே போய் விடும்படி சொல்லும் காட்சி. “ மாமா… நிஜமாவே போகச்சொல்றீங்களா மாமா!’’

“இந்தக்காட்சியைத் தான் முதலில் படமாக்குவது என்று முடிவு செய்து விட்டோம். ம்ம்.. எழுது வசனம்….” என்று தயாரிப்பாளர் என்.கிருஷ்ணசுவாமி சொன்னவுடன் கதையை முழுக்க அசை போட்டு விட்ட வசனகர்த்தா கே.எஸ்.ஜி. பதறி, தழுதழுத்தக்குரலில் சொன்ன வார்த்தைகள் “ குடல புடுங்கி வக்க சொல்றீங்களே முதலாளி…”

………………..

அந்த கால குணச்சித்திர நடிகர்கள் ரெங்காராவ், பாலையா, எஸ்.வி.சுப்பையா மூவரும் முதுமையை காணாமல் மறைந்தார்கள்.
இவர்களுக்கு நல்ல சீனியர் எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை பார்த்து விட்டு 72 வயதில் இறந்தார்.
 பாலையாவுக்கு 58 வயது. சுப்பையாவுக்கு 57 வயது.

வினோதம் என்னவென்றால் படங்களில் பெரிசுகளாக இவர்கள் நடித்த காலத்தில் இளம் வாலிபர்களாக நடித்த கதாநாயகர்கள் எல்லோரும் நல்ல முதுமையைப்பார்த்து விட்டுத்தான் இறந்தார்கள். 52 வயதில் இறந்த முத்துராமன் தவிர

எம்ஜிஆருக்கு சாகும்போது official age 70!
சிவாஜி மரணமடைந்த போது 74 வயது.ஜெமினி கணேஷ் 85 வயதில் இறந்தார்.ஜெய் சங்கருக்கு சாகும்போது 62 வயது.
ரவிச்சந்திரன் மரணம் 71 வயதில். எஸ்.எஸ்.ஆர் 85வயதில்.

 .வி.எம் ராஜனுக்கு இன்று 82 வயது. சிவகுமாருக்கு 73 வயது.

…………………………………………………………………..


 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.