Share

Dec 5, 2015

கூத்துப்பட்டறை ”பத்மஸ்ரீ” ந.முத்துசாமி



கூத்துப்பட்டறை ந.முத்துசாமி சிங்கப்பூர் சமீபத்தில் போயிருந்தார்.
ஒருவர் தன் குழந்தையைத் தோளில் வைத்துக்கொண்டு போவதைப் பார்த்திருக்கிறார். உடனே இவருக்கு தன் அப்பா ஞாபகம் வருகிறது. தன் ஏழாவது வயதில் இழந்து விட்ட அப்பா…

 முத்துசாமி சார் மனதில் குழந்தையாய் இருந்த போது பார்த்த அப்பா இன்றும் பசுமையாக இருக்கிறார். இரவு தூங்கப்போகும்போது ‘ நற்றுணையப்பா!’ என்று வாய் விட்டு சொல்லும் அப்பா.
’நற்றுணையப்பன்’ இவர் பிறந்த ’புஞ்சை’யின் சிவபெருமான் பெயர். ஆதித்த கரிகாலன் கட்டிய கோயிலின் தெய்வம்.
 ’நற்றுணையப்பன்’ என்ற அருமையான நாடகமும் கூட முத்து சாமி எழுதியிருக்கிறார். அவருடைய மகன்
மு. நடேஷ் இந்த நாடகத்தை இயக்கியதுண்டு.

‘அப்பாவும் பிள்ளையும்’ என்ற அவருடைய பிரபலமான நாடகம். ‘எனக்கும் எங்கள் அப்பாவுக்கும் இடையிலான உறவை வைத்துக்கொண்டு எழுதப்பட்டது. ’என்னுடைய ஏழாவது வயதிலேயே எங்கள் அப்பா இறந்து விட்டார். அது வெகுவாக என்னை பாதித்தது.’ என்பார்.

”இன்னக்கி செத்தாப்பலே இருக்கு…இன்னும் கொஞ்சம் வயசு வந்த பின்னாலே மட்டும் செத்து இருந்தார்னா?...
இந்த அப்பாவாலே வந்த வினை. இன்னும் கொஞ்ச காலம் மட்டும் இருந்திருப்பார்னா?” – ‘அப்பாவும் பிள்ளையும்’ நாடகத்தின் கெட்டியான வசனம்!

இவர் பாலகனாய் இருக்கும்போதே முத்துசாமியின் அப்பா மறைந்திருக்கிறார்.
க.நா.சு., சுந்தர ராமசாமி இருவரையும் தகப்பனார் உறவு மிகவும் ஆக்கிரமித்திருக்கிறது.  இந்த இருவரின் நாற்பதையொட்டிய மத்திய வயது வரை தகப்பனார் உயிரோடிருந்திருக்கிறார்.
அசோகமித்திரன் இருபதையொட்டி தகப்பனாரை இழந்தவர். 'என் அப்பா செத்துப்போய் விட்டார்.....'
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டிருக்கிறார் அசோகமித்திரன்.



புதுவையில் ஒரு நாடக விழாவில் 1990ல் முத்துசாமியை நேரில் பார்த்தேன். அவரோடு அளவளாவிய விஷயங்கள் இன்றும் மறக்க முடியவில்லை.
இன்று இருபத்தைந்து வருடங்களுக்குப் பின் சென்னை ஸ்ரீ அய்யப்பா நகரில் மீண்டும் ’கூத்துப்பட்டறை’யில் சந்தித்தேன்.
தி.ஜானகிராமனின் மோகமுள்ளில் ரங்கண்ணா பற்றி பாபு சொல்லும் வார்த்தைகளை கடன் வாங்கி, நான் இப்போது முத்துசாமி சார் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.
” சமுத்திரம் மாதிரி இருக்கிறது அவர் ஞானம்! அதை விடப் பெரிதாய் இருக்கிறது அவர் குணம்!”


சி.சு.செல்லப்பாவின் ’எழுத்து’ மூலம் தெரிய வந்தவர்.
சிறுகதை ஆசிரியராகத் தான் அசாதாரணமான சாதனை படைப்பாளியாக பரிமளித்தவர். ”நீர்மை” என்ற கனமான தொகுப்பு மறக்கவே முடியாதது. களம் மாறி நாடகம் மீது இவர் கவனம் முழுமையாக திசை திரும்பியது.
எது, என்ன என்பது எல்லாம் நெற்றியில் நற்றிணையப்பன் எழுதியிருக்கிறான்!

டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் பயின்று ராமானுஜம் போன்றவர்கள் தமிழ் நாடக இயக்கத்துக்கு வந்தார்கள் என்றால், அதற்கு முற்றிலும் மாறாக ’எழுத்து’ பத்திரிக்கையின் வழித்தோன்றல் ‘கூத்துப்பட்டறை’ என்ற பெருமிதம் முத்துசாமிக்கு உண்டு.


”சங்கீதத்தை நோக்கிய தயாரிப்புக்கான செறிவு நாடகத்திற்கு இருக்கிறது. நுணுக்கமான உணர்வுகள்,கருத்துப்பரிமாற்றங்கள்,தத்துவங்கள் எல்லாம் நாடகத்தில் இருக்கிறது. சங்கீதத்தின் சாகித்யம் தாங்கும் ராகபாவத்தில் இருக்கிறது. அந்த ராகத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தும் வார்த்தைச் சேர்க்கைகளும் ஒழுங்கும் அந்த சாகித்தியத்தில் இருக்கிறதா என்பது மட்டுமே அங்கு பார்க்கப்படுகிறது. நாடகத்தில் கருத்தும் முதலானது. சப்த ரூபங்கள், உணர்ச்சி பாவங்கள், அர்த்த பாவங்கள் அனைத்தையும் கொண்டது நாடகத்தின் சாகித்தியம். சங்கீதத்தின் அர்த்த பாவம் எளிமையானது. நாடகத்தின் அர்த்த பாவம் மிகவும் சிக்கலானது. இவை பிடிக்கப்படும்போது நாடகம் சங்கீதத்தை விட எந்த வகையிலும் இரண்டாந்தரமானது அல்ல என்பது பிடிபடும். மேடையில் நாடக நிகழ்வு மிகச்சிறந்த ஒரு கச்சேரியை ஒத்ததாக இருக்கும்!” என்பார் ந.முத்துசாமி.

சினிமாவில் கூத்துப்பட்டறை நடிகர்கள் விஜய் சேதுபதி, பசுபதி, விமல், விதார்த், கலைராணி, தேவி, மீனாட்சி, ஜார்ஜ்,ஜெயராவ்,ஜெயக்குமார்,
குரு சோமசுந்தரம், குபேரன், சஞ்சீவி, கவின் ஜெ.பாபு என்று பலர்.


‘ ந.முத்துசாமி நாடகங்கள் ‘ இப்போது வெகு சிறப்பாக வெளி வந்திருக்கிறது.

.................................................................

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.