Share

Nov 24, 2015

’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார்






’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமாரிடம் இருந்து ஒரு கால்.

”சார்!கேரளா போயிருந்தேன். காரை நானே ஓட்டிக்கொண்டு 650 கிலோ மீட்டர் சுற்றி விட்டு வந்தேன். மாஹி போயிருந்தேன். ’உஸ்தாத் ஹோட்டல்’ மலையாள படம் எடுக்கப்பட்ட கடற்கரையைப் பார்த்தேன்.”

பத்து வருடங்களுக்கு முன் திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் க்ளப்பில் நான் ஹெமிங்வேயின் “ ஓல்ட் மேன் அன் த சீ ” நாவல் பற்றி, யான் மார்ட்டலின் “லைஃப் ஆஃப் பை” நாவல் பற்றி, ஜே.எம். கூட்ஸியின் “டிஸ்க்ரேஸ்” பற்றியெல்லாம் பேசிய போதும், “ போஸ்ட்மேன் “ “ஜூலியஸ் சீஸர்” ”காலிகூலா” திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது அவை பற்றி உரை நிகழ்த்திய போதெல்லாம் குழந்தை முகம் கொண்ட ஒரு பையன் ஆர்வமாக அதிலெல்லாம் கலந்து கொள்வார். எப்போதும் சிரித்த முகம். எனக்கென்னவோ அந்த கண்கள் கூட சிரிப்பதாகத் தோன்றும். அவ்வளவு உற்சாகம். ஆனால் அதிசயிக்கத் தக்க அடக்க சுபாவம். அறிவை ஒளித்து வைத்த இயல்பான சுபாவம். ’நீங்க ப்ராமினா?’ என்று நான் கேட்டிருக்கிறேன். ’இல்லீங்க.. நான் ப்ராமின் இல்ல.என் பெயர் ரவிக்குமார்.’


குறும்படங்கள் இயக்க ஆரம்பித்திருந்தார் ரவிக்குமார். அவருடைய படங்கள் கூட சென்ட்ரல் லயன்ஸ் க்ளப்பில் பார்க்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுண்டு. ஒரு குறும்படம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் எடிட்டிங் பற்றி ஒருவர் ஏதோ குறை சொன்ன போது, ’அது குறையே யல்ல. லாஜிக் இருக்கிறது’ என்று நான் விளக்கினேன்.

என் வீட்டிற்கு ரவிக்குமார் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்ததுண்டு.

திருப்பூர் பி.என்.ரோட்டில் ஹாலிவுட் படங்கள் பற்றி பேசிக்கொண்டு சில்லி சிக்கன் இருவரும் சாப்பிட்டிருக்கிறோம். எனக்கு நல்ல ஹாலிவுட் படங்கள் டி.வி.டி கிடைக்கும் என்று புது பஸ்டாண்ட் பக்கம் ஒரு கடையை ரவிக்குமார் காண்பித்தார்.

”என்ன புத்தகம் படிக்கிறீர்கள் இப்போது?’ என்று கேட்டபோது “மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள்” என்றார்.

நான் ”கூத்துப்பட்டறை ந.முத்துசாமி தெரியுமா?
அவருடைய நாடகங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, வண்ண நிலவன், விமலாதித்த மாமல்லன்,சாரு நிவேதிதா ஆகியோரை படிக்கச்சொன்னேன்.

எப்போதும் ஏதாவது நல்ல நூல் படித்தவுடன்,உலகப்படம் பார்த்தவுடன் எனக்கு போன் செய்து உடனே அது பற்றி ரொம்ப உற்சாகமாகப் பேசுவார்.
நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் என் பெரியமாமனார் இறந்த இழவு வீட்டில் இருந்த போது ரவிக்குமார் போன். ”சார்! நீங்க சொன்ன எழுத்தாளர்களையெல்லாம் தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.” நான் “ You have a flair and so you have a very promising future!”

என்னுடைய “Child is the father of the man” படித்து விட்டு “ சார்! இதை நான் குறும் படமாக எடுக்க ஆசைப்படுகிறேன்” என்று அடிக்கடி சொன்னதுண்டு. ப்ளாக்கில் நான் எழுதியவற்றையெல்லாம் ஆர்வமாய் படித்திருக்கிறார். ஹிட்ச்காக்கின் “The Birds” பற்றி நான் எழுதிய போது ரவிக்குமார் போட்ட கமெண்ட் இன்னும் இருக்கிறது.

வருடாவருடம் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் உலகத்திரைப்படங்கள் திரையிடும் பகுதியில் மிகவும் பிஸியாக ரவிக்குமார் இயங்கிக்கொண்டிருப்பார்.

டி.வி.யில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒரு குறும்படம். ரவிக்குமாரை அந்த நிகழ்ச்சியில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதன் பிறகு அவர் சென்னையில் சினிமாவுலகில் போராடியதெல்லாம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ’சூது கவ்வும்’ உதவி இயக்குனர் என்பதும் தெரியாது. ‘இன்று நேற்று நாளை’ படம் இயக்கியது பற்றியும் எனக்குத் தெரியாது.

தற்செயலாக ஆனந்தவிகடன் பார்த்தபோது ரவிக்குமார் புகைப்படத்துடன் வெளியான பேட்டியைப் பார்த்தபோது தான் ’ஆஹா! நம்ம ரவிக்குமார் தான் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனரா!’ என்று ஆச்சரியப்பட்டேன்.



இதே போல ’முண்டாசு பட்டி’ ராம்குமார் புகைப்படம் முன்னர் ஆனந்த விகடனில் பார்த்த போது தான் ‘ ராமு தான் முண்டாசுபட்டி ராம்குமாரா!’ என்று வியந்திருக்கிறேன்.

ராமுவும் திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ்க்ளப் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். இவரும் எப்போதும் சிரித்தமுகமாகவே தான் இருப்பார். அப்போது குமுதம், ஆனந்தவிகடனில் வெளியாகும் தன் ஜோக்குகளை என்னிடம் காட்டியிருக்கிறார் பின்னாளில் ’முண்டாசுபட்டி’ இயக்கிய ராம்குமார்.


..........................................

1 comment:

Note: Only a member of this blog may post a comment.