Share

Jul 14, 2016

V.V.சடகோபன்


எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜி.என் பாலசுப்ரமண்யம், என்.சி.வசந்தகோகிலம், எம்.எம்.தண்டபாணி தேசிகர் போன்ற கர்னாடக சங்கீத விற்பன்னர்கள் தமிழ் சினிமாவில் கதை நாயக பிரபலங்களாக இருந்திருக்கிறார்கள். 

வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன் கூட தமிழ் சினிமா கண்ட கதாநாயகர்களில் ஒருவர். வீரவநல்லூர் திருநெல்வேலி பக்கம்.

இவரைப் பற்றி எம்.ஜி.ஆர் ’ நான் ஏன் பிறந்தேன்’ சுய சரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

வி.வி.சடகோபன் படிப்பில் படு சுட்டி. ஆங்கிலம், கணிதம், சம்ஸ்கிருதத்தில் நல்ல மதிப்பெண் பெற்று, பின் ஐ.சி.எஸ் ஆயத்தத்திற்காக சென்னை வந்தவர். A multi faceted genius.
அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ.ரா.வின் பரிச்சயம் இவரை பத்திரிக்கைத்துறையில் ஈடுபடுத்தியது. ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார்.
தமிழ் திரையில் நவயுவன், அதிசயம், மதன காமராஜன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
வேணுகானம்’ படத்தில் வி.வி.சடகோபனுடன் வசந்தகோகிலம்.

பின்னர் கர்னாடக சங்கீத பாடகராக ஆகிவிட்டார்.
(He was trained by Namakkal Sesha Iyangar and Ariyakkudi Ramanujam Iyangar.)

சௌந்தரம் ராமச்சந்திரன் என்று ஒரு பெண் மத்திய அமைச்சர் ஜவஹர்லால் நேருவின் மந்திரிசபையில் இருந்தார். இவர் காந்தி கிராமம் ரூரல் இன்ஸ்டிடியூட் நிறுவி இசைத்துறையின் இயக்குனராக வி.வி.சடகோபனை அமர்த்தினார். நேரு 1959ல் காந்தி கிராமத்தில் சடகோபனின் குறவஞ்சி நடன நாடகத்தைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டார். உடனே டெல்லி பல்கலைக் கழகத்தின் இசைத்துறைப் பேராசிரியராக செல்ல வேண்டியதாகி விட்டது. 1975 வரை இந்த வேலை தான்.தியாகப்பிரும்மம், மகாகவி பாரதி இருவர் மீதும் அளவற்ற அபரிமிதமான பிடிப்பு கொண்டவர் சடகோபன். 
இருவரையும் இணைத்து குழந்தைகளுக்கு இவர் பாடம் நடத்தியிருக்கிறார்.
நர்சரி பாடல்களாக அல்ல. கர்னாடக சங்கீத ராக பாடல்கள் அவை!
’தியாக பாரதி’ என்றே இந்த இயக்கத்தை நடத்தியவர்.
இவர் வாழ்வு சற்றே விசித்திர குணத்தில் தோற்றம் தரும்படியாக நிகழ்ந்து விட்ட விஷயம் மர்மத்தை உள்ளடக்கியதாக ஆகியது.
டெல்லியில் இருந்து சடகோபன் ரயில் பயணம் மேற்கொள்கிறார். ஆந்திர பிரதேசத்தி உள்ள குடூர் ரயில் நிலையத்தில் எதற்கு இறங்கினார். அன்று 1980ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினொன்றாம் தேதி. அதற்குப் பின் அவர் என்ன ஆனார்? மாயமாய் மறைந்தே போய் விட்டார். என்ன நேர்ந்ததென்றே தெரியாத புரியாத புதிர்.
அவருடைய குடும்பத்தினர் அன்றிலிருந்து அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையை இழக்கவே இல்லை.
சடகோபனின் மகள் தேவிகா ராமன். தன் தந்தையின் ‘தியாக பாரதி’ பாடல்களை இரண்டு சி.டி.க்களாக வெளியிட்டிருக்கிறார்.
சடகோபனின் மாணவர் ஸ்ரீராம பாரதி என்பவர் சென்னையை ஒட்டியுள்ள ஜல்லடியாம்பேட்டையில் ஒரு கோவில் கட்டியிருக்கிறாராம். சடகோபனின் இசையைப் பரப்புவதில் ஆர்வமாக இயங்கியிருந்திருக்கிறார்.
……………………………………………….


1 comment:

  1. Thanks for such an interesting post on a rare piece of information sir..You deliver only gems!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.