Share

Jan 8, 2013

குஷ்வந்த் சிங் மனைவி





சுய சரிதை என்பது என்ன?  வான்கோழி கையில் மயிலிறகு என்று தமிழன்பன் கவிதை சொல்வது நினைவுக்கு வருகிறது.

ஆனால் குஷ்வந்த் சிங் சுய சரிதை Truth, Love and a Little Malice படிக்கும்போது எழுத்தின் நேர்மை பற்றி நினைக்க வேண்டியிருக்கிறது.

குஷ்வந்த் சிங் Autobiography is the child of ageing lions என்கிறார்.

குஷ்வந்த் சிங் மிகப்பெரிய குடும்பத்தை சார்ந்தவர். அவருடைய அப்பா புது டெல்லியில் பல முக்கிய கட்டிடங்களை நிர்மாணித்தவர். வெள்ளைக்காரனால் சர் பட்டம் கொடுக்கப்பட்ட ஷோபா சிங். அவருடைய மனைவி குடும்பமும் மிகவும் பிரபலமான பணக்கார பாரம்பரியம் கொண்டது.மனைவியின் அப்பா கூட சர் பட்டம் வாங்கிய சிங் தான்.

குஷ்வந்த் சிங்கின் பூர்வீகம் லாகூர்.
இந்த சுய சரிதையில் இல்லாத விஷயம் குஷ்வந்த அப்பா ஷோபா சிங்  தான் டெல்லி அசெம்பிளி  குண்டு வெடிப்பில் பகத் சிங்கை அடையாளம் காட்டிய கணவான்.


’பந்தியிலே சாப்பாடு கெட்டாலும் வீட்டிலே பெண் கெட்டாலும் வெளியே சொல்லக்கூடாது ?!’
குஷ்வந்த் சிங் தன் மனைவியை சத்திய சோதனை செய்துள்ளார்.

லண்டனில் இவர் அந்தப்பெண்ணை சந்தித்த காலத்தில் அவள் உலக அழகிக்கான அங்க அமைப்பு தனக்கு இருப்பது பற்றிய பிரக்ஞையுடன் இருந்திருக்கிறாள். அவளிடம் இதயத்தை பறிகொடுத்தவர்கள் பற்றி ஒரு லிஸ்ட் குஷ்வந்த் சிங் தருகிறார். பிரதாப் லால், அமர்ஜீத், பரத்ராம். இவர்களில் பரத்ராம் திருமணமாகி குழந்தையும் உள்ளவன். குஷ்வந்த் சிங் அந்த பெண் கவல் மலிக் திருமண நிச்சயதார்த்த்ம் நடந்த பிறகு இந்த பரத்ராம் குடும்பத்துடன் கவல் மலிக் ஜெர்மனிக்கு போகிறாள்.
மங்கத் ராய் மட்டும் குஷ்வந்த் சிங் தன் மனைவியை த் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்து விட்டதாக திரும்ப திரும்பச் சொல்கிறான்.
திருமணம் செய்த பின் தன் மனைவி இன்னும் கன்னி கழியாதவள் என்று தேன் நிலவின் போது தெரிய வரும்போது குஷ்வந்த் சிங் ஆச்சரியப்படுகிறார்.
 ஆனால் குஷ்வந்த் சிங் திருமணம் செய்து கொண்ட பின் அவர் மனைவியை தான் உயிருக்குயிராய் காதலித்ததாக  மங்கத் ராய் சொல்கிறான். தினமும் தான் கவல் மாலிக்கை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சிக்கேட்கிறான்…குஷ்வந்த் சிங் சம்மதிக்கிறார்!
மங்கத் ராய் ஆக்கிரமிப்பின் காரணமாக கவல் மாலிக் ஓவியம் வரைவதையும் டென்னிஸ் விளையாடுவதையும் கை விட்டு விட்டு மங்கத் ராயுடன் சைக்ளிங் செல்கிறாள்.

குஷ்வந்த் சிங்கின் மனைவி அவர் பேச்சைக்கேட்காமல் பரத் ராம், மங்கத்ராய் சொல்பேச்சைத்தான் கேட்டுக்கொண்டிருந்ததால் சிங்கின் தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

லண்டன் தூதரகத்தில் தான் வேலை பார்த்த போது ஹைகமிஷனர் கிருஷ்ணமேனன் ஆக்கிரமிப்பில் குஷ்வந்த் சிங்கின் மனைவி இருந்ததைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பிஜு பட்நாய்க் ( முன்னாள் ஒரிசா முதல்வர் தான். இன்றைய ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாய்க்கின் தந்தை! ) தன் மனைவிக்கு நூல் விட்டுப்பார்த்து படியுமா என்று ட்ரை பண்ணிய விஷயத்தை குஷ்வந்த் சிங் எழுதியிருக்கிறார்.

ஃப்ரான்சில் UNESCO வில் வேலை பார்த்த போது பரத்ராம் இவர் மனைவி மீது ஜொள்ளு விட்டு தேடி வந்ததைப்பற்றி குறிப்பிடுகிறார். கவல் மாலிக்கை ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துச்செல்ல விரும்புவதாக அனுமதி கேட்ட போது பாரீஸ் சில் மிக காஸ்ட்லியான ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துக்கொண்டு போகச்சொல்லி சிபாரிசு செய்து விட்டு குஷ்வந்த் சிங் தன் மனைவியிடம் “ இந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு உன் வாழ்வில் நீ இந்த ஒரு முறை மட்டும் தான் போகமுடியும்!” என்கிறார். ஆனால் அந்த ரெஸ்டாரண்ட் மெனு கார்ட் பார்த்து விட்டு மிரண்டு போய் பரத்ராம் கவனமாக நழுவி வேறொரு சாதாரண ரெஸ்டாரெண்ட்டுக்கு அவளை அழைத்துச் செல்கிறான்.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி எடிட்டராக குஷ்வந்த் சிங் இருந்த போது அவர் பேரும் புகழும் அடைந்த கால கட்டத்தில் மனைவியாலும் மகள் மாலாவாலும் தனக்கு கௌரவ பங்கம் ஏற்பட்டதாக போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.
கடவுள் நம்பிக்கையைத் துறந்தவர். ஆனால் மனைவி தன்னை விட்டு நிரந்தரமாகப்பிரிய விரும்புவதாகச் சொன்னபோது குருத்வாராவில் இரவு முழுதும் மனம் உடைந்து பிரார்த்தனை செய்திருக்கிறார். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம்.ஐம்பதை ஒட்டிய வயதிலும் கூட இவர் மனைவி டைவர்ஸ் வாங்க முயற்சித்திருக்கிறார்.
மனைவியுடனான உறவு மிகவும் மோசமானதைப்பற்றி குறிப்பிடுகிறார்.


இவ்வளவிலும் இருவரும் அறுபத்து மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு மகன் ராகுல் சிங். மகள் மாலா. முதுமையில் தன் மனைவி Alzheimer’s diseaseல் பாதிக்கப்பட்ட நிலையில் உருக்கமாக எழுதுகிறார். தன் மனைவி இறந்து விட்டால் தான் எழுதுவதை நிறுத்தி விடுவேன் என்று தான் சுயசரிதையை முடிக்கிறார்.
I was always certain she would outlast me by many years. I am no longer sure that she will. But I have a gut feeling that if she goes before me, I will put away my pen and write no more.
இது தான் கடைசி வரிகள்.

குஷ்வந்த் சிங் மனைவி இந்த புத்தகம் வெளி வந்த 2002ல் இறந்து விட்டார்.

தன் 90 வயதில் குஷ்வந்த் சொன்னார்: ’என் மனைவி இறந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன.ஆனால் நான் இன்னும் எழுதி சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.’


’இன்னும் நான்கைந்து வருடத்தில் வரப்போகும் சாவை எதிர்கொள்ளத் தயாராயிருக்கிறேன்’ என்று அப்போது சொன்ன குஷ்வந்த் சிங்கிற்கு அடுத்த மாதம் பிப்ரவரியில் 98 வயது நிறைவடைகிறது.

2 comments:

  1. சார் உண்மையாலுமே உங்க பதிவகள் வரலாற்று மேல என்னக்கு அதீத ஈர்ப ஏற்படுத்துது. இன்னும் நேற்றைய வரலாற படிக்க தூண்டுது.

    Thanks for giving interesting facts about the past. The angle of your writing is completely different from others and the informations your are giving is really new to us which we hardly get from any media.

    ReplyDelete
  2. RP, WILL YOU PLEASE SHARE YOUR NUMBER..THANKS.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.