Share

Showing posts with label கோணங்கி. Show all posts
Showing posts with label கோணங்கி. Show all posts

Mar 22, 2020

" என்னடா இங்க வந்துட்ட"

There are more things in heaven and earth
 than are dreamt of in your philosophy

- Shakespeare in Hamlet

வண்ண நிலவன் 'கடல் புரத்தில்' நாவலை படமாக்க வேண்டும் என
முகேஷ் சுப்ரமணியம் என்று ஒரு இளைஞன் ஆசைப்பட்டு கோணங்கியிடம் சொல்லியிருக்கிறான்.

முகேஷை அழைத்துக் கொண்டு போய்
வண்ண நிலவனிடம் கோணங்கி அறிமுகப்படுத்தி விஷயத்தை சொன்ன போது,
அவர் கோணங்கிக்காக பணம் எதுவும் வாங்க மறுத்து கடல் புரத்தில் நாவலை படமெடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார்.

வண்ண நிலவன் நாவலை மிகுந்த ஈடுபாட்டுடன் முகேஷ் சுப்ரமணியம் படமாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

சர்ச் காட்சிகளில் போர்ச்சுகீஸிய இசை ரீரிக்கார்டிங் ஆக இணைத்து பிரமாதமான அர்ப்பணிப்பு.
படம் முடிக்க முடியவில்லை.

கோணங்கியின் அபிப்ராயத்தில் இந்த படம் முழுமையாக முடிக்கப்பட்டு வெளி வந்திருந்தால் அற்புதமான செல்லுலாயிட் ஓவியம்.

பொருளாதார விஷயம் எப்படியெல்லாம் நல்ல பெரு முயற்சியை காவு வாங்கி விடுகிறது?

ஆனால் எந்த நோக்கத்திலும் வேறு  விதமான சிறப்பான விளைவு இருக்கவே செய்கிறது.

முடியாத கடல்புரத்தில் கதாநாயகி பிலோமியாக நடித்த பெண்ணுக்கும், இயக்குநர் முகேஷுக்கும் காதல் முகில் கூடியது.

அந்த பிலோமியாக வேடந்தரித்த பெண்ணின்
ஊர் சிங்கம்புணரி.

சிங்கம்புணரியில் திருமணம் செய்து கொள்ள
 ஒரு வீடு பத்து நாளுக்கு வாடகைக்கு இந்த இளம் ஜோடி எடுத்திருக்கிறார்கள்.

அந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள கோணங்கி சிங்கம்புணரிக்கு போயிருக்கிறான்.
ப. சிங்காரத்தின் சொந்த ஊர்.

சிங்காரம் தாத்தாவின் ஈமக்ரியை சொந்த ஊரில் தான் இறந்த பின் நடந்திருக்கிறது.

அங்கே இந்த திருமணம் இப்போது.

கோணங்கி அங்கே தெருவில் சிங்காரம் தாத்தா நடந்து வருவதை கண்ணால் பார்த்திருக்கிறான்.

"டேய், என்னடா இங்க வந்துட்ட " - சிரித்த முகத்துடன்
ப. சிங்காரம் கேட்டுக்கொண்டே நடந்து போனாராம்.

One need not be a chamber to be haunted

- Emily Dickinson

கோணங்கி அந்த ஊரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி விட வேண்டும் என்று முடிவே செய்து விட்டான்.

வேலை பார்ப்பவர்க்கு தான் வீடு கொடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்கள்.

கோணங்கியின் திட்டம் இதனால்
தகர்ந்து போனது.

https://m.facebook.com/story.php?story_fbid=2680551848824931&id=100006104256328

..............................................................................................

.

Mar 18, 2020

மதுர கவர்னரும் மதுர காவல் தெய்வமும்

மதுரை டவுன் ஹால் ரோட்டில் ஒப்பனைகள் கலைந்தெறிந்த ஜி.நாகராஜன்,
நிரந்தர தற்கொலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மாநாம்,
மவுண்ட் ரோட்டில் பட்டினியும் வறுமையும் பின் துரத்த சிற்பியின் நரகத்தை எழுதிக்கொண்டிருக்கும் புதுமைப்பித்தன்

- கோணங்கி

கோணங்கியை மிகவும் பாதித்த இரண்டு மதுரை கண்ட எழுத்தாளர்கள்
ப. சிங்காரம், ஜி. நாகராஜன்.

'மதுரைக்கு வந்த ஒப்பணைக்காரன்' கதையிலும் 'சபிக்கப்பட்ட அணில்' சிறுகதையிலும்
ஜி. நாகராஜன் காணக்கிடைப்பார்.

'த ' நாவலில் உள்ளிருக்கும் "மங்கம்மாள் சத்திரம் வால் க்ளாக்"
டிக்டாக் - 1, டிக் டாக் - 2, டிக் டாக்- 3, டிக் டாக்- 4

திண்டுக்கல் ரோட்டில் Y. M. C. A க்கு வந்த பர்மா அகதி ஒருவன் கேட்கிறான் "சிங்காரம் தாத்தா இருக்கிறாரா?"

கண் தெரியாத டெலிபோன் பூத் இளைஞன் சொல்கிறான் "சிங்கம்புணரிக்கு போயிருக்கிறார்"

இந்த குருடன் தீவிர வாசகன். டெலிபோனில் பிறரை வாசிக்க சொல்லியே நிறைய நூல்களை படிக்கிறவன்.

திருமங்கலத்திற்கு போன் போட்டு ஜி. நாகராஜன் எழுத்திற்காக தேடுகிறான்.

ஒரு பெண் குரல் வாசித்து காட்டுகிறது.

கோணங்கியிடம் பேசுவது விசேஷமானது.

மதுரை கவர்னர் ப. சிங்காரம்.
மதுரை நகரின் காவல் தெய்வம் ஜி. நாகராஜன் என்ற கோணங்கியின் உருக்கம் உறுதியானது.

மதுரை இலக்கியம்னு போறவன அதிசய புகைக்காரனா மாத்திடும்.

எல்லா குதிரை வண்டிக்காரனும், ரிக் ஷா வண்டிக்காரனும் ஜி. நாகராஜன் தான்.

மதுர குதிரை வண்டிக்காரனெல்லாம் பதினென் கீழ் சித்தர்கள்.

இலக்கியவாதிகள நீட்ஷே ஆக்கி விடும் மதுர.

ப. சிங்காரம் டால்ஸ்டாய்னா ஜி. நாகராஜன் செக்காவ் தான்னு கோணங்கியின் திண்ணம்.

'மங்கம்மாள் சத்திரம் வால்க்ளாக்'ல ப. சிங்காரமும் ஜி. நாகராஜனும்.

மதுரை VTC பிரின்சிபால் ஜெகதீசன், STC பிரின்சிபால் சங்கர நாராயணன் ஆகிய இரண்டு டுட்டோரியல் காலேஜ்காரர்களோடு ஜி. நாகராஜன் சேர்ந்து போய்
ப. சிங்காரத்தை சந்திப்பதுண்டு.
Y.M.C.A யை ஒட்டியிருந்த மாடர்ன் ரெஸ்ட்ரெண்ட்டில் காபி சாப்பிட்டுக்கொண்டே பேசுவார்கள்.

பின்னாளில் கோணங்கியிடம் ப. சிங்காரம்
தான் 'தெற்கில் ஒரு இடம்' என்று ஒரு நாவல் எழுத இருப்பதாக கூட அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

கோணங்கி அந்த திண்டுக்கல் ரோட்டில் அவரை பார்க்க போனாலே Y. M. C. As இருந்து கிளம்பி மாடர்ன் ரெஸ்ட்ரெண்ட் தான்.

கோணங்கிக்கு டி. ஹெச். லாரன்ஸின் ரெயின் போ
ப. சிங்காரம் கொடுத்திருக்கிறார். இது போல முருகேச பாண்டியனுக்கும் ஒரு புத்தகம் கொடுத்தாராம்.

ப. சிங்காரத்தின் மரணத்திற்கு  பிறகு அவருடைய சொந்த ஊரான சிங்கம்புணரிக்கு
ஒரு கல்யாணத்திற்கு கோணங்கி போயிருந்த போது
ப. சிங்காரம் ''டேய் என்னடா, இங்க வந்துட்ட " என்று கேட்டுக் கொண்டே  தெருவில் நடந்து போனாராம்.

(தொடரும்)

Aug 17, 2019

வல்லிக்கண்ணனும், தி.க.சிவசங்கரனும், போஸ்ட் கார்டும்


”செய்துங்கநல்லூரை பார்க்கும் போதெல்லாம் ’ராஜநாயஹம் ஊர் இது’ என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன்.பஸ்ஸில் போகும்போது, ரயிலில் போகும்போது” வல்லிக்கண்ணன் போஸ்ட் கார்டில் இது போல இன்னும் எவ்வளவோ அடிக்கடி அன்றெல்லாம் நிறைய எழுதியிருக்கிறார்.

 ”உங்கள் உறவினர் திருநெல்வேலி உட்லண்ட்ஸ் ஓட்டல் முதலாளி ’நெல்லைத் தமிழர்’
இல. ராமகிருஷ்ணன் எனக்கு நண்பர் தான்” என்று ஒரு போஸ்ட் கார்டில் எழுதியிருந்தார்.

தி.க.சியின் கடிதங்கள். 

”தி.ஜாவின் நளபாகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஒரு இரண்டு பக்கம் எழுதி எனக்கு அனுப்புங்கள்”
’ராஜநாயஹம்,இப்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டு எழுதுவார்
வண்ணதாசனின் ’சின்னு முதல் சின்னு வரை’ படித்து விட்டு பரவசமாக தி.க.சிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
’என் மகன் எழுத்து பற்றி நான் எதுவும் அபிப்ராயமாகக் கூட சொல்வதில்லை.’ என பதில் எழுதியவர் அடுத்தவர்கள் எழுத்து பற்றி கிட்டத் தட்ட மூக்கை நுழைப்பது போல அவ்வளவு வேகத்துடன் அக்கறை எடுத்து செயல்படும் வேகம்.

வல்லிக்கண்ணன், தி.க.சி இருவருமே எனக்கு எத்தனை கடிதங்கள் தான் எழுதியிருப்பார்கள்.
எவ்வளவு உற்சாகமான கடிதங்கள் அவை. எப்பேர்ப்பட்ட உன்னத உள்ளங்கள்.
எந்தரோ மஹானுபாவலு. இப்படி உயர்ந்த உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள் காணக்கிடைக்கவே மாட்டார்கள்.
’உங்களிடமிருந்து கடிதம் வரவில்லையே? உடம்பு சரியில்லையா? வேலைப்பளு அதிகமா?’ என்று கூட வினவி ஒரு போஸ்ட் கார்ட் எழுதுவார்க்ள்
இளைய இலக்கியவாதிகளுக்கு இந்த இரண்டு ரிஷிகளும் எவ்வளவு கடிதங்கள் எழுதியிருப்பார்கள்.
பிரதிபலன் எதுவுமே இருவருமே எதிர் பார்த்ததில்லை என்பதை மறக்க முடியுமா?
போஸ்ட் கார்டில் அழகான கையெழுத்தில் எவ்வளவு நம்பிக்கையோடு, நம்பிக்கையை ஊட்டும் எண்ணங்கள்.
ஏதேனும் ஒரு கிராமத்தில் ஒரு சிறு பத்திரிக்கை என்றாலும் அதற்கும் ஒவ்வொரு இதழுக்குமே கடிதம் எழுதும் மேலான ஆத்மாக்கள்.
அரசாங்கம் ஒரு வேளை ‘இனி போஸ்ட் கார்டு கிடையாது’ என்று தடை போட்டிருந்தால் தி.க.சியும் வல்லிக்கண்ணனும் விக்கித்து, திகைத்துப் போயிருப்பார்கள்.
கோணங்கியிடம் எனக்கு வல்லிக்கண்ணனுடனும் திகசியுடனும் உள்ள கடிதத்தொடர்பு பற்றி சொன்ன போது, நிறைய கடிதங்கள் எனக்கு எழுதிக்கொண்டிருப்பது பற்றி நான் சொல்ல நேர்ந்த போது சிறுவனின் பலூனை உடைப்பது போல பதில் : “யோவ், வல்லிக்கண்ணனும், தி.க.சியும் கடிதம் எழுதுவது என்பது பல் விளக்குவது போல, குளிப்பது போல, சாப்பிடுவது போல நித்திய செயல். போஸ்ட் கார்டில் எழுதுவது அனிச்சை செயல். வல்லிக்கண்ணன் காலையில் எழுந்தார், பல் விளக்கினார், குளித்தார், சாப்பிட்டார், கடிதம் போஸ்ட் கார்டில் எழுதினார். அவ்வளவு தான். இதிலென்ன அதிசயம் இருக்கு”

கோணங்கியின் இயல்பு அது. குழந்தையின் பலூனை உடைப்பது போல தான் அவன் பேச்சு.

Jun 7, 2019

Continually changing


க்ளோரியா ஸ்டீனெம். அம்மணி அமெரிக்க நியூயார்க் பத்திரிக்கையின் காளம்னிஸ்ட். பெண்ணியவாதி. நிறவெறிக்கு எதிரானவர். ’முதலில் கறுப்பர்களுக்கு அதிகாரம். அப்புறம் தான் பெண் விடுதலை’ என்று முழங்கிய பெண்.

’கல்யாணமெல்லாம் அடிமைத்தனம்’ என்றவர்.
வாழ்க்கை விசித்திரம். தன் அறுபத்தாறு வயதில் அப்போது அறுபது வயதான டேவிட் பேல் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.
வாழ்வில் ஒரே ஒரு திருமணம்.
“நான் ஒன்னும் மாறலை.
Marriage changed. முப்பது வருஷமா திருமண சட்டங்களில் மாற்றங்களுக்காக நான் பாடு பட்டிருக்கிறேன். கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய வயதில் நான் திருமணம் செய்து கொண்டிருந்தால் அம்பேல். அவ்வளவு தான். நாசமாப்போயிருப்பேன்.”

டேவிட் பேலுக்கு இது மூன்றாவது திருமணம். மூன்றாவது திருமண வாழ்வு மூன்றே வருடம் தான் வாய்த்தது. செத்துப்போய் விட்டார்.
டேவிட் பேல் உடனான திருமணம் க்ளோரியா ஸ்டீனெம் வாழ்க்கையில் இன்னொரு அடையாளத்தை நிர்ப்பந்தமாக தந்தது. கிறிஸ்டியன் பேல் இவருக்கு step son.

கிறிஸ்டோபர் நோலன் படங்களின் நாயகன் கிறிஸ்டியன் பேல். Batman. அந்த பிரமாதமான Prestige.
இவருடைய அப்பா தான் க்ளோரியாவுடன் மூன்று வருடங்கள் வாழ்ந்து மறைந்த டேவிட் பேல். டேவிட் பேலின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேல். ’அடேய் தகப்பா, டேய் டேவிட் பேல்’
இப்போது எண்பத்தைந்து வயதிலும் சமூக ஆர்வலராக களப்பணி செய்ய அமெரிக்காவிலிருந்து வெளிநாட்டுக்கெல்லாம் பறந்து கொண்டிருக்கிறார் க்ளோரியா ஸ்டீனெம்.
கல்யாணம் எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிச்சயம் ஆகியிருந்த சமயம். நான்கு மாதங்களுக்கு முன்னரே நிச்சய தாம்பூலம். நவம்பரில் கல்யாணம்.
ஆகஸ்ட் மாதம். மதுரையிலிருந்து ஃபரூக்குடன் குற்றாலம் போய்க்கொண்டிருந்தேன். கோவில்பட்டியில் அவருக்கு பிசினஸ் கலெக்சன். பஜாரில் அவர் ஒரு கடைக்கு முன் காரை நிறுத்தி விட்டு கடைக்குள் நுழைந்தார். நான் பஜாரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
 கோவில் பட்டி தானே கோணங்கியின் ஊர் என்று எண்ணம் எழுந்த அதே நேரம் கண்ணில் அவன் தட்டுப்பட்டான். Think of the devil.

பார்த்து விட்டான். “யோவ், என்னய்யா”
விஷயத்தை சிம்ப்பிளாக சொன்னேன்.
அப்போது கோவில்பட்டி கோ ஆப்பரேட்டிவ் சொஸைட்டியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
“பிடிக்கவில்லை. ஆனால் சூழ்நிலை நிர்ப்பந்தம்.” தன் பிரத்யேக உடல்மொழியுடன் சொன்னான்.”சீக்கிரம் வெளியே வந்திடுவேன்”
இன்று எண்ணிப்பார்க்கும்போது, அனேகமாக அவன் பார்த்த ஒரே வேலை அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
சிறு பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தான்.
அவனுடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘மதினிமார்கள் கதை’ கூட அப்போது வெளியாகியிருக்கவில்லை. ’கல்குதிரை’யெல்லாம் ரொம்ப பின்னால் தான் ஆரம்பித்தான்.
எனக்கு திருமணமாகப்போகிற விஷயத்தை சொன்னேன். புதிய தொழில் (திருமணத்திற்கு முன்னரே நான் பிராந்தி கடையில் மனைவியின் தந்தையுடன் பங்கு தாரர்.) குறித்தும் சொன்னேன்.
கோணங்கியின் பிரியாவிடை பதில் “கல்யாணமாயிட்டா குடும்ப அமைப்புல நீ மூழ்கிடுவ. பிசினஸ் பிரச்னைகள் உன்னை மழுங்கச்செய்து விடும். இனி நீ இலக்கியத்திற்கு அன்னியமாகிடுவ. அவ்வளவு தான்.”
I have yet to hear a man asking for advice on how to combine marriage and carrier.
- Gloria Steinem
திருமண நிகழ்வு மகத்தான விஷயங்கள் அடங்கிய சிறப்பான புத்தகம். என் திருமண வாழ்வு பெரும் வெற்றி. ஒக்க பத்னி.
தொழில் அனுபவங்கள் நூறு நூல்கள் வாசித்த அனுபவம்.
சவால்களும் சிக்கல்களும் புடைத்து பெருத்த சூழலிலும் இலக்கிய வாழ்வும் வாசிப்பு, எழுத்து, தேடல், சங்கீத ரசனை, நடிப்பு, பாட்டு என்று என்னில் கலைகளாக, மாற்றங்களுடன் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

https://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post.html







Aug 30, 2018

கோணங்கியும் முருகபூபதியும் மொட்டையும்


பத்து நாட்களுக்கு முன் இருக்கலாம். ஒரு வெள்ளிக்கிழமை கோணங்கியின் தம்பி ச.முருகபூபதி கூத்துப்பட்டறைக்கு வந்திருந்த போது சந்தித்தேன்.

பல வருடங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோணங்கி என்னிடம் 
“இவன் என் தம்பிடா. பாண்டிச்சேரி நாடகத்துறையில் படிக்கிறான்” என்று அறிமுகப்படுத்தியிருக்கிறான்.


ஒரு பத்திரிக்கையில் அப்போது என்னைப்பற்றி அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், மணிக்கொடி சிட்டி, புதுவை முன்னாள் துணை வேந்தர் சொன்ன விஷயங்கள் பிரசுரமாகியிருந்தது. அதன் நகல் ஒன்றை கோணங்கியிடம் கொடுத்தேன். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவனை சந்தித்த போது என்னிடம் சொன்னான். “ என் தம்பி கிட்ட அதை கொடுத்தேன். அவன் சொன்னான் ‘இந்த ஆளை இவங்க நல்லா மொட்டை அடிச்சிருக்காங்க.’
உண்மையில் ஜாம்பவான்கள் என்னைப்பற்றி சொன்ன விஷயங்கள் பற்றி விளக்குவது என்றால் ஒவ்வொன்றுமே ஒரு சிறுகதை போல விரியும்.
ஆனால் கோணங்கி இப்படி மட்டையடி தான் அடிப்பான். 


கோணங்கிக்கு நான் எவ்வளவோ செலவழித்திருக்கிறேன். அப்படி பார்த்தால் என்னை மொட்டையடித்தது என்றால் அதில் பிரதான இடம் கோணங்கிக்கு உண்டு தான்.
Invariably, a taker and not a giver. Precisely, Konangi is a sponger.

திருப்பூரில் இருந்த நாட்களில் ஒரு முறை நான் போன் பேசிய போது கோணங்கி சொன்னான் “தமிழ்நாட்டில ஒருத்தன் திருப்பூருக்கு போயிட்டான்னா அவன் அகதின்னு தான் அர்த்தம். ராஜநாயஹம் நீ அகதி ஆயிட்டியேப்பா.”

இப்படி என்னிடம் பல சலுகைகள் அனுபவித்த ஒருவர் பேசுவது எரிச்சலாக இல்லையா என்றால் இல்லை.  இல்லவே இல்லை


ஒரு பத்திரிக்கையில் சில மாதங்களுக்கு முன் படித்தேன். தனுஷ்கோடியில் கோணங்கி தன் அம்மாவை நினைத்து கதறி அழுததாக.

‘என் பிள்ளை அழுங்குரல் கேட்குதே’ என்று கடலம்மையாய் அலைகள் தவித்திருக்கும் வாசக ஷற்புத்திரரே.
”சிருஷ்டியின் எண்ணற்ற மாய உருக்கள் தோற்றத்திலும் மொழியிலும் வடிவமாகக் கூடுகிறதே” என்பான் கோணங்கி.
”அம்மா மறைந்துலவும் இந்நாட்களில் நைந்து போன ஹிருதய பூமியில் வளரும் மரத்தைப் பாதுக்காக்கவே அகதிப்பறவைகளின் உதிர் இறகுகளோடு திரிந்து கொண்டிருக்கிறேன்” என்பவை ச.முருகபூபதியின் வரிகள்.

Apr 18, 2014

Paradise will be a kind of library

 
1995 செப்டெம்பர் மாதம் கோணங்கியின் கல்குதிரை சிறப்பிதழ் ஒன்று வெளிவந்தது. கேபோவுக்குத் தான். லத்தீன் அமெரிக்க உலகம் அன்போடு கேபிரியல் கார்ஸியா மார்க்வஸ் என்பவரை ”கேபோ” என்று தான் குறிப்பிடும்.

மாஜிக்கல் ரியலிசம்...1982ல் வாங்கிய நோபல் பரிசு... பாப்லோ நெரூடாவின் நண்பர்.. ஃபிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர் ......

கல்குதிரைக்கு GABRIEL என்ற பெயரைக் குறிப்பிடுவதிலேயே ரொம்ப சிரமம் இருந்தது. அட்டையில் ’காப்ரியல்’.  முதல் பக்கத்தில் ’காப்ரியேல்’ என்று சந்தேகத்துடன் இரண்டு விதமாக அச்சேற்றியிருந்தார்கள். இத்தனைக்கும் கேபிரியல் என்ற கிறிஸ்தவப் பெயர் ஒன்றும் அன்னியமானது ஒன்றும் இல்லை.
அதோடு அதற்கு பல வருடங்களுக்கு முன்னாலே GABRIEL Shock absorbers விளம்பரம் மிகவும் பிரபலம்.

பைபிளில் கன்னி மேரியிடம் காட்சி தரும் ஏஞ்சல் “ I am Gabriel! The angel of God!" என்று தன்னை சுய அறிமுகம் செய்து கொள்கிற காட்சி உண்டு.

 நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கு இவ்வளவு குழப்பம் கேபிரியல் என்ற பெயரில் இருந்த போது கல்குதிரை அவர் படைப்புகளை ஆங்கில வழியாக தமிழில் மொழி பெயர்ப்பதில் எத்தகைய துயர அனுபவமாய் இருந்திருக்கும் என்பதை சொல்லவேண்டியதே இல்லை.


 அப்போதெல்லாம் கல்குதிரை ஒவ்வொரு இதழுக்கும் கணிசமான தொகை நான் நன்கொடையாக கொடுப்பது வழக்கம். முதல் இதழை கோணங்கி என்னிடம் கொடுத்த போது, நான் ஒரு நன்கொடை கொடுத்தேன்.அவன் சொன்னான்.- “ வண்ணதாசன் கூட இவ்வளவு பெரிய தொகை தரவில்லை.”

கேபிரியல் கார்ஸியா மார்க்வஸ் சிறப்பிதழ் கல்குதிரையின் 12 வது இதழ்.


GABRIEL என்ற பெயரை கேப்ரியல் என்று எழுதுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ”ப்” என்பது ”B” உச்சரிப்பாக இல்லாமல்  ”P” உச்சரிப்பாக அதாவது GAPRIEL என்று மாற வாய்ப்பு அதிகம் என்பதால் ’கேப்ரியல்’ என்று எழுதாமல் ’கேபிரியல்’ என்றே எழுத வேண்டியுள்ளது.
கிறிஸ்தவர்களிலும் ப்ராட்டஸ்டண்ட் இனத்தவர்கள் சரியாக ’கேபிரியல்’ என்று சரியாக உச்சரிக்கிறார்கள். ஆனால் ரோமன் கத்தோலிக்க பிரிவினர் GABRIEL என்பதை தமிழ்ப் படுத்தி ”கபிரியேல்” என்று பாடாய் படுத்துகிறார்கள்.

இப்போது காலச்சுவடு க்ளாசிக் வரிசையில் வரிசை வெளியீடு “தனிமையின் நூறாண்டுகள்” நூலில் “ காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு : சுகுமாரன்.



  
ஆல்பர் காம்யூ பெயரை ஒவ்வொருவரும் ஒவ்வோர் விதமாக உச்சரிப்பதைப் பற்றி சுந்தர ராமசாமி ’ஜேஜே சில குறிப்புகள்’நாவலில் குறிப்பிட்டு விட்டு தன் அத்தை மகள் பெயர் காமு என்பதால் ’ நான் வசதிக்காக  காமு என்று சொல்ல ஆரம்பித்தேன்’ என்பார்.


லத்தீன் அமெரிக்கப் படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பாகப் படிப்பது தான் ஓரளவு நல்லது.  தமிழ் மொழிபெயர்ப்புகளில் படிப்பது தலைவிதி தான். ஆங்கிலம் தெரியாத வாசகர்களும், எழுத்தாளர்களும் தமிழ் இலக்கிய உலகில் மிக, மிக அதிகம். மொழி பெயர்ப்பே மூல ஆசிரியரை சிதைக்கிற விஷயம் என்கிறபோது ஆங்கிலமொழிபெயர்ப்பின் வழியாக தமிழில் மொழிபெயர்த்து, அதை படிப்பதென்பது ஒருவகை ’ஊனம்’.


  

ஆல்பர் காம்யூ வின் ’அந்நியன்’ பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதால் விசேஷமானதாய் இருந்தது.

நாகார்ஜுனன் பிரஞ்சு மொழியிலிருந்து ரைம்போ, பாதலேர் கவிதைகளை ஆங்கில வழியாக அல்லாது தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

சாதாரணமாக ஒரு முதியவர் இறப்பென்பது அனுபவச்செறிவு காரணமாக துயரமானது. ஒரு நூலகம் மறைந்து போவதைப் போன்றது.
  I have always imagined that Paradise will be a kind of library.

போர்ஹே சொல்வார்: சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்? எனக்கென்னவோ சொர்க்கம் என்பது ஒரு வகையான லைப்ரரி தான் என்பார்.

87 வயதில் கேபிரியல் கார்ஸியா மார்க்வெஸ் இறந்திருக்கிறார்.

ஒரு முதிய எழுத்தாளரின் மறைவு நிஜமாகவே மிக மகத்தான இழப்பு தான். ஒரு பிரமாதமான, பிரமிப்புக்குரிய அற்புத நூலகம் திடீரென்று காணாமல் போய் விடுகிறது என்றால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வேதனையின் பரிமாணம் கூடிப்போய் விடுகிறது.

Aug 6, 2012

கோணங்கி என்ற பொன்வண்டு

மீள் பதிவு 28-07- 2008


புதுவைக்கு ஒரு புத்தக சந்தைக்கு வந்திருந்த கோணங்கி யை புதுவையிலேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியை அப்போது ரவிக்குமார் ( இப்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர்-காட்டு மன்னார் கோவில் ) எடுக்க விழைந்தார்.

என்னிடம் கேட்டார். 'உங்களால் கோணங்கிக்கு ஒரு வேலை கொடுக்க முடியுமா?'

எங்கள் தொழிற்சாலை நிறுவனப்பணியில் கட்டட வேலை sedarapattu industrial estate ல் நடந்து முடிந்திருந்தது.மின் வேலைகள் முடிந்து யந்திரங்கள் நிறுவப்படும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது 25 லக்ஷம் செலவில் உருவான நிறுவனம் . நான் சரியென்றேன். நல்லது தான். அந்த காலத்தில் 600 ரூபாய் சம்பளம் தர ஒப்புக்கொண்டு factory க்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினேன் . அப்போதே இரண்டு பேர் என்னிடம் application கொடுக்க நிற்பதை கோணங்கி பார்த்தான். ( கோணங்கியை ஏகாரத்தில் குறிப்பிடுவது தான் இயல்பாக இருக்கும். கோணங்கியைபற்றி அவர்,இவர் என்று குறிப்பிடுவது தான் ரொம்ப செயற்கையான விஷயம் ) 'சரி இங்கு வந்து விடுகிறேன்.இப்ப நான் மைலம் போய் அங்க அஷ்வகோஷ் - அவரை பார்த்துட்டு அப்படியே கோவில்பட்டி.பெட்டி படுக்கையோட வந்திடறேன் .'

லாஸ்பேட்டை கி. ரா வாசஸ்தலம் போயிருந்தேன். கோணங்கி வரப்போகும் விஷயத்தை கி.ராவிடம் சொன்னேன். புன்னகைத்தார்.

நானிருந்த பிருந்தாவன் காலனிக்கு அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது மறு நாளே. இப்படி எழுதியிருந்தார் 'கோணங்கி என்ற பொன்வண்டு நீங்க போடுற கருவ இலையை தின்று கொண்டு உங்க தீப்பெட்டியில் அடங்கி முட்டையிடுமா?'

சில நாளில் கோணங்கியிடமிருந்து ஒரு கடிதம் . ' நீ எனக்கு கொடுக்கிற வேலையை எனக்கு பதிலா நம்ம அண்ணாச்சி இலக்கிய வெளிவட்டம் நடராஜனுக்கு கொடு' -- -இப்ப்படி! '

'சரி அண்ணாச்சியை உடனே வர சொல் ' -பதில் எழுதினேன்.
நடராஜன் அண்ணாச்சி = ஜனகப்ரியா.

தொடர்ந்து லாஸ் பேட்டையிலிருந்து ராஜ் கௌதமன் ஒரு கடிதம் எனக்கு எழுதியிருந்தார். ' இலக்கிய வெளி வட்டம் நடராஜன் இங்கு வரமாட்டார். அவர் சொந்த கிராமத்திலிருந்து வேறு ஊர்களுக்கு பிழைப்புக்காக போகக்கூடியவர் அல்ல். தன் ஊரிலேயே சவால்களை சமாளிப்பவர். இது கோணங்கி யின் வழக்கமான கோணங்கித்தனங்களில் ஒன்று.'

கி.ரா எழுதியதும் ராஜ் கௌதமன் எழுதியதும் தான் சரியாகிப்போனது.

ரவிகுமாரிடம் அப்புறம் நான் சொன்னேன் "கோணங்கி நமக்கு அல்வா கொடுத்து விட்டான் ! "

நாடோடி மன்னன் ஆச்சே. அவனை ஒரு ஊரில் அடைக்க முடியுமா ?

காலச்சுவடில் இரண்டு வருடம் முன் "விருது வாங்கலையோ " என்று சிலருக்கு விருது கொடுத்த போது

கோணங்கிக்கு கொடுக்கப்பட்ட விருது
" நாடோடி மன்னன் "

ரவிகுமார் -" திராவிட மாயை"

R.P. ராஜநாயஹம் - " ஊட்டி வரை உறவு ".


.........................................

மீள் பதிவு  24-08- 2008
குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதைகள்

க.நா.சு க்கு 1.12.1988 அன்று ஒரு கடிதம் எழுதினேன் .அமரர் தி.ஜானகி ராமனை பற்றி அலட்சியமாக, முன்றில் பத்திரிகையில் சேறு தெளித்து எழுதிவிட்டார்.

க.நா.சு எழுதிய அந்த ஒரு வரி “ ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதை எழுதி விடுகிறார்கள்.”
அதற்கு பதிலாக ஒரு கோபமான rejoinder அவருடைய சென்னை விலாசம், டெல்லி விலாசம்,முன்றில் மற்றும் அந்த நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலக்கிய பத்திரிகைகள், புத்தக பதிப்பாளர்கள்,எழுத்தாளர்களில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சிட்டி,ஜெயந்தன் துவங்கி கோணங்கி வரை , மேலும் பேராசிரியர்கள் பலர், வாசகர்கள்,என் நண்பர்கள் பலருக்கும் zerox நகல் நூறுக்கும் மேல் தபாலில் அனுப்பி வைத்தேன்.

16.12.1988 அன்று க.நா.சு இறந்துவிட்டார்.டெல்லி வானொலியில் காலை ஒலிபரபபில் தமிழ் செய்திகளில் கேட்டு அதிர்ந்து போனேன்.

க .நா. சு . நல்ல படைப்பாளி .அவருடைய பொய்த்தேவு ,ஒரு நாள் , அவருடைய முதல் நாவல் சர்மாவின் உயில், அசுர கணம் ....சொக்க வைக்கும் படைப்புகள்.
  உண்மையில் "உரைநடை விறுவிறுப்பு" என்றால் முதலில் க . நா .சு அடுத்து தி. ஜா .. தொடர்ந்து சுஜாதா. இப்படித்தான். அசோக மித்திரன், சுந்தர ராம சாமி பிரத்யேக நடை தனி விஷேசம். கி .ரா . எப்போதும் தனிக்காட்டு ராஜா! இ.பா . சுஜாதாவுக்கே வாத்தியார்!

கொஞ்சம் தடம் புரண்ட திறனாய்வாளர் க .நா. சு.

பொய் சொல்வார்.தன் தந்தையிடம் இருந்து இந்த பொய் சொல்லும் பழக்கம் தன்னை தொற்றிகொண்டதாக அவரே எழுதியிருக்கிறார்.

இப்ப உள்ள வில்லன்கள் அவரை ரொம்ப நல்லவர் ஆக்கிவிட்டான்கள்! இந்த ஜெகம் பிராடுகளோடு க.நா.சு வை ஒப்பிடவே கூடாது.

க .நா. சு . மரண செய்தி ஒலிபரபபான அந்த நிமிடமே மணிக்கொடி சிட்டி ஒரு கடிதம் எனக்கு உடனே ,உடனே எழுதி போஸ்ட் செய்துவிட்டார். மறு நாள் எனக்கு கிடைத்தது .

சிட்டி எழுதியிருந்தார்.
"உங்கள் அற சினத்தின் விழைவு போல் க.நா.சு மறைந்து விட்டார் போலும் ."

கோணங்கி சொன்னான் " க. நா. சு உன் கடிதத்தை படித்திருப்பார் . மேல போயும் உன்னை நினைச்சிகிட்டு தான் இருப்பார் ."
_________________________________

1991 ல் "மேலும் " பத்திரிகையில் " நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மைஎன கொண்டாயோ ?"- இந்த தலைப்பில் நான் எழுதி ஒரு கட்டுரை வெளியானது. புதுமைப்பித்தன் சர்ச்சை பற்றியது.

உடன் பொதியவெற்பன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
" மரணப் படுக்கையில் இருக்கும் கமலா விருத்தாச்சலத்தை புண் படுத்தி விட்டீர்கள்"

கமலா விருத்தாசலம் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவியார்.


இதற்கு ஒரு கார்டில் நான் எழுதிய பதில்.

“My intentions are genuine. I don’t see the need to retaliate .”


http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_02.html


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_2925.html





Jul 28, 2008

கோணங்கி என்ற பொன்வண்டு

புதுவைக்கு ஒரு புத்தக சந்தைக்கு வந்திருந்த கோணங்கி யை புதுவையிலேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியை அப்போது ரவி குமார் ( விடுதலை சிறுத்தை.இப்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர்-காட்டு மன்னார் கோவில் ) எடுக்க விழைந்தார்.

என்னிடம் கேட்டார். 'உங்களால் கோணங்கிக்கு ஒரு வேலை கொடுக்க முடியுமா?'

எங்கள் தொழிற்சாலை நிறுவனப்பணியில் கட்டட வேலை sedarapattu industrial estate ல் நடந்து முடிந்திருந்தது.மின் வேலைகள் முடிந்து யந்திரங்கள் நிறுவப்படும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது 25 லக்ஷம் செலவில் உருவான நிறுவனம் . நான் சரியென்றேன். நல்லது தான். அந்த காலத்தில் 600 ரூபாய் சம்பளம் தர ஒப்புக்கொண்டு factory க்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினேன் . அப்போதே இரண்டு பேர் என்னிடம் application கொடுக்க நிற்பதை கோணங்கி பார்த்தான். ( கோணங்கியை ஏகாரத்தில் குறிப்பிடுவது தான் இயல்பாக இருக்கும். கோணங்கியைபற்றி அவர்,இவர் என்று குறிப்பிடுவது தான் ரொம்ப செயற்கையான விஷயம் ) 'சரி இங்கு வந்து விடுகிறேன்.இப்ப நான் மைலம் போய் அங்க அஷ்வகோஷ் , அவரை பார்த்துட்டு அப்படியே கோவில்பட்டி.பெட்டி படுக்கையோட வந்திடறேன் .'

லாஸ்பேட்டை கி. ரா வாசஸ்தலம் போயிருந்தேன் . கோணங்கி வரப்போகும் விஷயத்தை கி.ராவிடம் சொன்னேன் . புன்னகைத்தார் . நானிருந்த பிருந்தாவன் காலனிக்கு அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது மறு நாளே .இப்படி எழுதியிருந்தார் 'கோணங்கி என்ற பொன்வண்டு நீங்க போடுற கருவ இலையை தின்று கொண்டு உங்க தீப்பெட்டியில் அடங்கி முட்டையிடுமா?'

சில நாளில் கோணங்கியிடமிருந்து ஒரு கடிதம் . ' நீ எனக்கு கொடுக்கிற வேலையை எனக்கு பதிலா நம்ம அண்ணாச்சி இலக்கிய வெளிவட்டம் நடராஜனுக்கு கொடு' -- -இப்ப்படி! '

'சரி அண்ணாச்சியை உடனே வர சொல் ' -பதில் எழுதினேன். நடராஜன் அண்ணாச்சி - ஜனகப்ரியா.

தொடர்ந்து லாஸ் பேட்டை இலிருந்து ராஜ் கௌதமன் ஒரு கடிதம் எனக்கு எழுதியிருந்தார்.' இலக்கிய வெளி வட்டம் நடராஜன் இங்கு வரமாட்டார். அவர் சொந்த கிராமத்திலிருந்து வேறு ஊர்களுக்கு பிழைப்புக்காக போகக்கூடியவர் அல்ல . தன் ஊரிலேயே சவால்களை சமாளிப்பவர் . இது கோணங்கி யின் வழக்கமான கோணங்கிதனங்களில் ஒன்று .'

கி.ரா எழுதியதும் ராஜ் கௌதமன் எழுதியதும் தான் சரியாகிப்போனது .

ரவிகுமாரிடம் அப்புறம் நான் சொன்னேன் "கோணங்கி நமக்கு அல்வா கொடுத்து விட்டான் ! "
நாடோடி மன்னன் ஆச்சே. அவனை ஒரு ஊரில் அடைக்க முடியுமா ?

காலச்சுவடில் இரண்டு வருடம் முன் "விருது வாங்கலையோ " என்று சிலருக்கு விருது கொடுத்த போது

கோணங்கிக்கு கொடுக்கப்பட்ட விருது
" நாடோடி மன்னன் "

ரவிகுமார் -" திராவிட மாயை"

R.P. ராஜநாயஹம் - " ஊட்டி வரை உறவு ".