Share

Showing posts with label எழுத்தாளர் சுஜாதா. Show all posts
Showing posts with label எழுத்தாளர் சுஜாதா. Show all posts

Feb 27, 2021

சுஜாதா

 ராஜேஷ் குமார் அந்தக் கால நாவலுக்கு

 விளம்பரம் - போஸ்டர் கீழ்கண்டவாறு


கல்கிக்கு ஒரு "பொன்னியின் செல்வன் "


தி .ஜானகிராமனுக்கு ஒரு " மோக முள் "


ராஜேஷ் குமாருக்கு ஒரு " ஒரே ரத்தம் "


 கல்கிக்கும் ராஜேஷ் குமாருக்கும் இடையில் கிடுக்கிப்பிடியில் தி.ஜானகிராமன். 


சுஜாதா ஒரு தமிழில் trend setter. 

அவருடைய சிறுகதைகள். அப்புறம் அந்த 'வானமென்னும் வீதியிலே', 'நைலான் கயிறு'


அதோடு வாசகனுக்கு சீரியஸ் வாசிப்புக்கு 

நல்ல வழிகாட்டி. 

அவருடைய 'விருப்பமில்லாத திருப்பங்கள் ' நாயகன் கையில் பூமணியின் "பிறகு".


கணையாழியின் கடைசிப்பக்கங்கள். 


அறிவியல் கட்டுரைகள்.


அவருடைய பத்தி எழுத்து. 


சுஜாதாவை ' கரையெல்லாம் செண்பகப்பூ '

 டப்பிங் போது அவரை மிக அருகில் இருந்து

 ஒரு இரண்டு மணி நேரம் 

கவனித்துக் கொண்டிருந்தேன்.


 மனோரமா வந்தவர் உடனே 

டப்பிங் பேச ஆரம்பித்தார். 

விளக்கை மீண்டும் போட்டவுடன் மனோரமா சுஜாதாவை பார்த்து விட்டு

 'அய்யோயோ சார் நீங்க இங்கேயா உட்கார்ந்திருந்தீங்க? நீங்க இருப்பது தெரிந்திருந்தா பயத்திலே என்னாலே பேசியிருக்கவெ முடிந்திருக்காது.

உளறி கொட்டியிருந்திருப்பேன் ' என்றார். 


பச்சை கட்டம் போட்ட சட்டை

 போட்டிருந்தார் சுஜாதா. 

மனோரமாவிடம் அவர் பார்த்த

 'திருமலை தென்குமரி ' படத்தில்

 அவருடைய நடிப்பில் 

ஒரு குறிப்பிட்ட இடம் பற்றி

 " ஒரு எழுத்தாளருக்குடைய அப்சர்வேசன் அது" என பாராட்டினார்.


மனோரமா எப்போதும் போல் பரவசமாகி 

'சார் உங்க கிட்ட பாராட்டு வாங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்.' என்றார். 


டப்பிங்குக்காக 

லூப்களை பின்னோக்கி ஓட்டும்போது 

ரிவர்சில் நடிகர்கள் அபத்தமாக விகாரமாக செய்கைகள் மாறுவது பற்றி

 " கொடுமை, கொடுமைங்க. சம்பந்தபட்டவங்க பார்க்கும்போது நொந்து போயிடுவீங்களே" என்று மனோரமா, ஸ்ரீப்ரியா, தப்புத்தாளங்கள் சுந்தர் ஆகியோரை கிண்டல் செய்தார். 


நான் அவரிடம் பேசவே இல்லை.

 இரண்டு மணி நேரமும் அவரை அப்சர்வ் செய்துகொண்டிருந்தேன். 

அவரோடு வாசகனுக்கு பேசும் சூழல் 

இல்லை அது. 

சினிமாக்காரர்கள் சூழ 

சினிமா கனவுகளுடன் அந்த சுஜாதா. 


மேலும் நானும் அப்போது அவரை (அதுவரை அவர் எழுதியிருந்த அத்தனையும் )முழுமையாக படித்திருந்த போதும் ரொம்ப சின்னவயது. 


அன்று அதன் பின் எனக்கு ஒரு ஓட்டை சமாதானம் செய்து தேற்றி கொண்டேன். ஒரு நொண்டி சாக்கு.

அவருடைய வார்த்தைகள் " உண்மையான ரசிகர்கள், வாசகர்கள் நேரில் சந்திக்கிற, 

பேசுகிற ஜாதியில்லை."


... 



Oct 27, 2020

அந்திம காலம்



எழுத்தாளர் சுஜாதா தான் மறைவதற்கு சில வருடங்களுக்கு முன் தன் அந்திம காலம் பற்றிய துக்கத்தை வெளிப்படுத்தினார் :

" நீண்ட வாழ்வின் இறுதியில் உள்ள சோகங்கள் சற்றே துருத்தி நிற்கின்றன.

வானவில் கனவுகள் 

நிறமிழந்து விட்டது தெரிகிறது."


'To view with hollow eye and wrinkled brow

An age of poverty.'

- Shakespeare - The Merchant of Venice 


" மீனோட்டம் " சிறுகதை தொகுப்பு முன்னுரையில் லா.ச.ரா வாழ்க்கையின் மாலையில் தான் இருப்பதாக குறிப்பிட்டு விட்டு ' மாலை என்ன ..அந்தியே வந்தாச்சு " என்பார். 

இப்படி சொன்னது 

லா.ச.ரா இறப்பதற்கு

 கால் நூற்றாண்டுக்கு முன்னரே. 


"Age, with his stealing steps,

Hath clawed me in his clutch." 

- Hamlet


இளமையில் உலகின்பக்கேணியில் மூழ்கி முக்களித்த பின் அந்திம காலம் தரும் துயரம். 

' அந்தி ' என்ற தலைப்பில் ஆதவன்

 ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார். 


முதுமை மரணம் பற்றி ' கழுகு ' என்ற கதை தி .ஜானகிராமன் எழுதியிருக்கிறார். 


முதுமையின் வக்கிரம் பற்றி 'பாயசம் ' என்ற கதை, 'அவலும் உமியும்' குறுநாவல் எழுதியிருக்கிறார்.


"And as with age his body uglier grows,

So his mind cankers."

- The Tempest


 முதுமையின் அவலம் " விளையாட்டு பொம்மை '' என்ற திஜாவின் அபூர்வமான சிறுகதை.

பிராயமான காலத்தில் பிரகாசிக்கும் கூர்ந்த ஊடுருவும் புத்தி சக்தி 

கடைசியில் எப்படியெல்லாம் மழுங்கி விடுகிறது. 


" Sir, I am too old to learn."

- King Lear 


இந்திரா பார்த்தசாரதியின் 'வெய்யில் 'மறுபக்கம் ' என்று திரைப்படமானது .


பல எழுத்தாளர்கள் கடைசியில் வயதான காலத்தில் குருவிமுட்டைகளை போடடுத்தளளுவார்கள். மழுங்கிய எழுத்து.

"When the age is in, the wit is out"

- The Merchant of Venice 


கடைசி காலம் தன் தோல்விகள் பற்றி 

அசை போடும்போது தான் காணாத

 வெற்றிகளை தன் புத்திரன் காணவேண்டும்

 என மனித மனம் ஏங்கும். 

ஒருவர் தன்னை மற்றவர் ஜெயிக்கவேண்டும் என்று விரும்புவது தன் மகன் விஷயத்தில் தான். 

 " புத்ராத் இச்சேத் பராஜயம் "


ஆர்தர் ரைம்போ நல்ல இளமையில் இருக்கும்போதே முதுமை பற்றி கவிதை எழுதிவிட்டான் - நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பு :

புறப்பாடு

"போதும்

பார்த்தாகி விட்டது. 

எல்லாவிதமும்

சந்தித்தாகி விட்டது

பார்வையதை. 

போதும். 

நகரங்களின்

மாலையின்

கதிரவனின்

சந்தடி போதும் எப்போதுமாக. 

போதும்

அறிந்தாகிவிட்டது

வாழ்க்கையின் நிறுத்தம் பல

ஓசை பல

பார்வையும்


இனி புறப்பாடு."


இக்கட்டான சோகமான நிலையை,

பரிதவிப்பான நிலையை

Moment of Calvary என சொல்வார்கள்.                    முதுமைக்கால மன நிலையே,

மரணத்தை மட்டுமே எதிர்கொள்ளும் நிலையே Moment of Calvary தானே.

.. 

Jun 11, 2017

கொண்டாடி கொடமுடைச்சி………


ஊரும் உலகமும் சேர்ந்து ஒருவரை புனிதர் ஆக்கி கொண்டாடி கொடமுடைச்சி………
Reputation is an idle and most false imposition, oft got without merit and lost without deserving.
- Shakespeare in ‘Othello’





திருச்சி செயிண்ட் ஜோசப்ஸில் எழுத்தாளர் சுஜாதாவின் க்ளாஸ்மேட் தான் அப்துல் கலாம்.

கலாமின் புகழ் அவர் தகுதிக்கு ரொம்ப அதிகம் என்பதாக சுஜாதாவே அவருடைய பாணியில் மேலோட்டமாக, கொஞ்சம் பூடகமாக ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். ’மிகையான புகழ்’.அப்போதும் அதை எவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சகா பற்றிய புகைச்சல், பொறாமை என்று நினைத்தவர்கள் கூட இருந்திருக்கலாம் தான்.
......


“மறுதுறை மூட்டம்” நூலில் நாகார்ஜுனன் சொல்வது:

” தமிழ் நாட்டில் பிறந்து எஞ்ஜினியரான ஒருவர் இந்திய அரசின் ஏவுகணைப் பரிசோதனைகளில் ஈடுபட்டபோது, அவர் செல்லும் திசையை ’அக்னி’ பற்றிய என் கட்டுரையில் கணித்து எழுதினேன். அணுகுண்டு பரிசோதனை நடத்தியதில் பங்கேற்ற ஒரு technician என்ற நிலையில் இருந்த அவரை எல்லோரும் விஞ்ஞானியாக்கி விட்டார்கள்! இப்படி அவர் குடியரசுத் தலைவராகவே மாறினார். ஓய்வு பெற்றும் அணுமின்சக்தி வேண்டுமென்று சாகும்வரை பிரச்சாரம் செய்தார். தமிழ்நாட்டில் உள்ளவை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் அவர் ஹீரோ….இப்போது கடற்கரைச் சாலை ம்யூஸியத்தில் பங்கேற்கப் போகிறார். சில வேளையில் அவரைப் பார்த்த போது ஜெர்மனியின் Pied piper of Hamlin கதை வேறு நினைவில் வந்து தொலைத்தது…”





 (1.the hero of a German folk legend, popularized in The Pied Piper of Hamelin (1842) by Robert Browning. 2. (sometimes lowercase) a person who induces others to follow or imitate him or her, especially by means of false or extravagant promises.)


“ஊடக உலகில் உச்சமான பிபிஸியில் சேர்ந்து இயங்கிய நான் அதிலிருந்தும் விலகி, பிறகு சொந்த வலைப்பதிவைத் தொடங்கி அதையும் நிறுத்தி விட்டேன். மற்றவர்களுக்கோ ஊடக உலகுக்குள் நுழைய இன்று போட்டா போட்டி. நுழைய முடியாதவர்களுக்கு இருக்கிறது வலைப்பதிவும் முக-நூலும்,ட்விட்டரும்.. இவை தரும் பிரபல்யத்தில் தமிழ் எழுத்தாளர்கள் வரை இப்போது முழுமையாக மூழ்கி விட்டார்கள்….”


............................................................

http://rprajanayahem.blogspot.in/2014/08/blog-post.html


Oct 31, 2009

குழந்தையும் காலமும்

புதுமைப் பித்தன் கதையொன்றில் ஆற்று நீரில் தன் கால்களை விட்டு விளையாடும் குழந்தை ஒன்று . வானில் சூரியன் தவிப்பான் . குழந்தையின் பாததரிசனம் வேண்டி. குழந்தையின் பாதங்கள் எப்போது நீரில் இருந்து வெளிவரும் என ஏங்கும் சூரியன். அவ்வளவு சுலபமாய் கிடைத்து விடுமா குழந்தையின் பாத தரிசனம் என புதுமைப்பித்தன் கேட்பார்.வெங்கட் சுவாமிநாதன் துவங்கி பலரும் இந்த 'புதுமைப் பித்தன் பன்ச் ' பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.
காலச்சக்கரம் சுற்றியது.காலம் நகர்கிறது , காலம் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஓடியது. காலம் ஓடிவிட்டது. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற காலம் Cliché கள் நாம் வாசித்து ,கேட்டு சலித்தவை தான்.
சமீபத்தில் முகுந்த் நாகராஜனின் கவிதை பரவசம் தந்தது
"தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை
சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "

.....................

பெரியவர்கள் உலகில் உழைக்க உகுக்கப்படும் சிறுவர் சிறுமிகளின் labour பற்றி பிரச்சார சத்தமில்லாத கவிதை ஒன்று -
"தீப்பெட்டியைத் திறந்து
பார்த்தேன்
அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "
மறைந்த கந்தர்வன் கவிதை ????
சுஜாதா கூட குழந்தைத்தொழிலாளி பற்றி ஒரு கவிதை முன்னர் எழுதியிருக்கிறார் .
அதில் ஒரு வரி இன்னும் மறக்க முடியவில்லை . ஏனென்றால் வெளியூர் போக நேரும்போது அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருப்பதால் .
" ஹோட்டலில் சாப்டவுடன் இலை எடுப்பாய் "

Oct 6, 2008

சுஜாதா

அன்புள்ள ராஜ நாயஹம்,
சுஜாதா என் ஆதர்ஷ எழுத்தாளர். அவரை, அவரது எழுத்துப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? சாரு என்னிடம் ஒரு முறை ப.சிங்காரம் அவரையும் தாண்டிய ஒருவர் எனச் சொல்லி உள்ளார். முகுந்த் நாகராஜனின் கருதும் அதுவே. நீங்களும் என்னிடம் புயலில் ஒரு தோணி படிக்கச் சொல்ல் உள்ளீர்கள்.
சுஜாதாவிடம் நேரடி அனுபவம் உண்டா? ஏதேனும் சுவையான சம்பவங்கள்?
சுஜாதா ஒரு Trend setter என்பதில் மாற்றுக் கருத்து உண்டா?
அன்புடன்
சூர்யா.
பின் குறிப்பு 1- இதை முதல் கேள்வியாய்க் கொண்டு கேள்வி பதில் பகிதி ஆரம்பிக்கலாம்.
2 மேற்கண்ட கேள்வியை மாற்றிக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு

......

அன்பு மிக்க மும்பை சூர்யா
உங்களுடைய ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா என்று சொல்லிவிட்டீர்கள் . இவரோடு பாலகுமாரனையும் உங்கள் ஆதர்ஷ எழுத்தாளர் என முன்பே சொல்லி விட்டீர்கள் .
உங்கள் கேள்வியில் ஓங்கி தெரிவது உங்கள் ஆக்ரமிப்பு . ஒருவகையான மிரட்டல் .
சுஜாதாவையும் ப . சிங்காரத்தையும் ஒப்பிடவே முடியாது .கூடவே கூடாது .
இன்னொன்று இங்கே ஒரு பதிவிற்கான பின்னூட்டத்தில் என்னை பாலகுமாரனுடைய உடையார் படிக்க சொல்கிறீர்கள் . Balakumaran – Poorman’s Janakiraman!
நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் . நான் சொல்கிற சில எழுத்தாளர்களை நீங்கள் படித்து விட்டு பின் பால குமாரன் பற்றி உடையார் பற்றி முடிவெடுங்கள் .உங்களுக்கு நான் பட்டியலிட வேண்டுமா . அசோகமித்திரன் , சுந்தர ராம சாமி ,புதுமைபித்தன் , ந .பிச்ச மூர்த்தி , கு.ப .ரா , மௌனி , தி .ஜா , எம் வி வெங்கட் ராம் , கரிச்சான் குஞ்சு , இந்திரா பார்த்தசாரதி , கி.ரா . ஆதவன் , சம்பத்,ஜி .நாகராஜன் , ப .சிங்காரம் ,நகுலன் ,பிரமிள் ,வண்ண நிலவன் போன்றவர்களை படித்து முடித்த பின் பால குமாரன் பற்றி முடிவெடுங்கள் .
நான் படிக்க நிறைய புத்தகங்கள் வரிசையில் உள்ளன . அந்த வரிசையை உடைத்து உடையாருக்கு முன்னுரிமை தந்து படிக்கவே மாட்டேன் .
பரந்த வாசிப்பு இல்லாத தாங்கள் சுஜாதாவையும் , பாலகுமாரனையும் ஆதர்சம் என்று சொல்கிறீர்கள் . நிறைய படித்து விட்டு இந்த முடிவுக்கு வரவே முடியாது .
இந்த தோரணையில் ஒரு ரமணி சந்திரன் , இந்திரா சௌந்தரராஜன் ரசிகர் கூட அவர்கள் நாவலை படிக்க சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தால் என்னாவது ? சொல்லுங்கள் .
இந்த ரமணி சந்திரன் போஸ்டர் நேற்று கவனித்தேன் .ஊர் பூரா ஒட்டியிருந்தது .
ரமணி சந்திரன் சொல்கிறார் : என்னுடைய ஹீரோக்கள் , ஹீரோயின்கள் உருவாவது எப்படி ?
இப்படி ஒரு போஸ்டர் . இந்த சூட்சுமத்தை படித்து கற்று தேறி எத்தனை குட்டி எழுத்தாளர்கள் உருவாக போகிறார்களோ ?
சில வருடம் முன் ராஜேஷ் குமார் நாவலுக்கு விளம்பரம் -போஸ்டர் கீழ்கண்டவாறு
கல்கிக்கு ஒரு "பொன்னியின் செல்வன் "
தி .ஜானகிராமனுக்கு ஒரு " மோக முள் "
ராஜேஷ் குமாருக்கு ஒரு " ஒரே ரத்தம் "


இதுவும் ஒரு வகையான மிரட்டல் தான் . கல்கிக்கும் ராஜேஷ் குமாருக்கும் இடையில் கிடுக்கிபிடியில் தி.ஜானகிராமன் !
சுஜாதா பற்றி எல்லோரும் இப்போது தான் நிறைய சொல்லி முடித்திருக்கிறார்கள் .
அவரை பற்றி சொல்ல இனி ஒன்றுமில்லை .
சுஜாதா ஒரு தமிழில் Trend setter என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்கமுடியாது .
ஆனால் சுஜாதாவை நான் முழுமையாக படித்தவன் .அவருடைய சிறுகதைகள் கனமானவை . அப்புறம் அந்த 'வானமென்னும் வீதியிலே' , நைலான் கயிறு '
அதோடு நல்ல வழிகாட்டி . அவருடைய 'விருப்பமில்லாத திருப்பங்கள் ' நாயகன் கையில் பூமணியின் "பிறகு " .
கணையாழியின் கடைசிப்பக்கங்கள் . அறிவியல் கட்டுரைகள் .
அவருடைய பத்தி எழுத்து .
சுஜாதாவை ' கரையெல்லாம் செண்பகப்பூ ' டப்பிங் போது அவரை மிக அருகில் இருந்து ஒரு இரண்டு மணி நேரம் கவனித்து கொண்டிருந்தேன் . மனோரமா வந்தவர் உடனே டப்பிங் பேச ஆரம்பித்தார் . விளக்கை மீண்டும் போட்டவுடன் மனோரமா சுஜாதாவை பார்த்து விட்டு 'அய்யோயோ சார் நீங்க இங்கேயா உட்கார்ந்திருன்தீங்க ? நீங்க இருப்பது தெரிந்திருந்தா பயத்திலே என்னாலே பேசியிருக்கவெ முடிந்திருக்காது .உளறி கொட்டியிருந்திருப்பேன் ' என்றார் . பச்சை கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தார் சுஜாதா . மனோரமா விடம் அவர் சமீபத்தில்பார்த்த 'திருமலை தென்குமரி ' படத்தில் அவருடைய நடிப்பில் ஒரு குறிப்பிட்ட இடம் பற்றி " ஒரு எழுத்தாளருக்குடைய அப்சர்வேசன் அது ' என பாராட்டினார் .மனோரமா எப்போதும் போல் பரவசமாகி ' சார் உங்க கிட்ட பாராட்டு வாங்க கொடுத்து வச்சிருக்கணும் சார் . ' என்றார் .
டப்பிங் காக லூப்களை பின்னோக்கி ஓட்டும்போது ரிவர்சில் நடிகர்கள் அபத்தமாக விகாரமாக செய்கைகள் மாறுவது பற்றி " கொடுமை கொடுமைங்க . சம்பந்தபட்டவங்க பார்க்கும்போது நொந்து போயிடுவீங்களே " என்று மனோரமா , ஸ்ரீப்ரியா , தப்புத்தாளங்கள் சுந்தர் ஆகியோரை கிண்டல் செய்தார் . நான் அவரிடம் பேசவே இல்லை . இரண்டு மணி நேரமும் அவரை அப்சர்வ் செய்துகொண்டிருந்தேன் . அவரோடு வாசகனுக்கு பேசும் சூழல் இல்லை அது .சினிமாக்காரர்கள் சூழ சினிமா கனவுகளுடன் அந்த சுஜாதா .
மேலும் நானும் அப்போது அவரை (அதுவரை அவர் எழுதியிருந்த அத்தனையும் )முழுமையாக படித்திருந்த போதும் ரொம்ப சின்னவயது .
அன்று அதன் பின் எனக்கு ஒரு ஓட்டை சமாதானம் செய்து தேற்றி கொண்டேன் . ஒரு நொண்டி சாக்கு .
அவருடைய வார்த்தைகள் " உண்மையான ரசிகர்கள் , வாசகர்கள் நேரில் சந்திக்கிற ,பேசுகிற ஜாதியில்லை ."
உங்கள் நண்பர் முகுந்த் நாக ராஜன் கவிதைகளை எனக்கு பிடிக்கும் .