Share

Showing posts with label எஸ்.எஸ்.ராஜேந்திரன். Show all posts
Showing posts with label எஸ்.எஸ்.ராஜேந்திரன். Show all posts

Jun 22, 2018

வில்லுப்பாட்டு


பள்ளிப்படிப்பின் போது அடிக்கடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும். மொத்தத்தில் ஒரு இருபது தடவைகளாவது வில்லுப்பாட்டு நிகழ்த்தியிருக்கிறேன்.
சிறுவனாக நான் வில்லுப்பாட்டு பிரமாதமாக பாடி பேசி நடிப்பதாக எல்லோரும் அப்போது சொல்வார்கள்

கல்லூரி காலத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வாய்ப்பே கிட்டவில்லை. அந்நியமாகி விட்டது.
 பால் பருவத்து என் வில்லுப்பாட்டு அப்படியே பசுமையாக நினைவில் இருக்கிறது. பாடல் வரிகள்.

“தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட வந்தருள் சந்தான தெய்வமே
சந்தத்தோடு பானை தாளம்
சித்துடுக்கை பம்பையுடன்
பஞ்ச பூதங்கள் அழித்த
பரமன் கதை நானுரைக்க
பாதக மானிடன் மீட்பை
பாங்குடனே நான் விளக்க
வந்தெனக்கு துணையிருப்பாள்
துர்க்கையம்மனே
அந்த வடிவழகி பாதம் போற்றி!”

” பாடறியேன் படிப்பறியேன்
அந்த பாட்டிலுள்ள பொருளறியேன்
பாடறியா நாளையிலே
என்னை படிக்க வைத்தார்
என் தாய் தந்தையர்
படிக்காமலே தறுதலையாய்
நான் ஊர் சுற்றினால் என்ன செய்வார்?
நான் ஒரு நாள் மறந்தாலும், மறந்தாலும்
என் நினைவொரு நாள் மறப்பதில்லே
என் நினைவொரு நாள் மறந்தாலும், மறந்தாலும்
என் நெஞ்சொரு நாள் மறப்பதில்லே”

இந்த ’பாடறியேன் படிப்பறியேன்’ பின்னால் இளையராஜாவால் 'சிந்து பைரவி' படத்தில் நாட்டுப்புற பாடலாக பிரபலமானது.

பழங்காலத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வில்லுப்பாட்டு பற்றி நிறைய சொல்வார்கள்.

நடிகர் எஸ்.எஸ்.ஆர் பல காலம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். ஆனால் எனக்கு அவருடைய நிகழ்ச்சி பார்க்க கிடைத்ததில்லை. எஸ்.எஸ்.ஆரையே நான் நேரில் பார்த்ததில்லை.


’வில்லடிச்சான் கோவிலிலே விளக்கு வைக்க நேரமில்லை’ என்ற அளவிற்கு கோவில்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ரொம்ப காலத்திற்கு இருந்திருக்கிறது.



Jun 10, 2018

தகவல் பிழை


ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் லட்சுமி நாராயணன். நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் போது என் பக்கத்து வீட்டுக்காரர் வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர்.
இவருடைய மனைவி (பெயர் ஜெயலட்சுமி என்று நினைவு.) குற்றாலம் பராசக்தி கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மகளிர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார்.
லட்சுமி நாராயணன் தென்காசியில் சொந்த வீட்டுக்காரர். அவ்வப்போது தென்காசிக்கு ஒரு சில நாட்கள் செல்ல வேண்டியிருக்கும். அந்த சமயங்களில் யூ.கே.ஜி படித்துக்கொண்டிருந்த என் இளைய மகன் அஷ்வத் தான் மாமியோடு கூட துணைக்கு படுத்துக்கொள்வான். சுட்டிப்பயல். ஒரு சில நாட்களில் பெட்டிலயே ஒன் டாய்லட் போய் விடுவான். ஆனால் மாமி அதை பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வார்.
லட்சுமி நாராயணன் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் போது கூட அவரிடம் அஷ்வத் “ நீங்க எப்ப ஊருக்கு போவீங்க. நீங்க ஊருக்கு போங்க. நான் மாமியோடு படுத்துக்கிறேன். நீங்க ஊருக்கு போங்க.. நான் மாமியோடு படுத்துக்கிறேன்.” என்று அனத்துவான். “டேய், என்ன இங்க இருக்க விட மாட்டியா..என்னடா என் பொண்டாட்டி கூட படுத்துக்கிறேன்னு ஏங்கிட்டவே சொல்றே… சரி… நான் போகும்போது சொல்றண்டா..” என்று ஜாலியாக அவர் பதில் சொல்வார்.
எங்கள் வீட்டிலும் அவர் வீட்டிலும் சீனியம்மா என்ற அருந்ததியப் பெண் வேலை பார்த்தாள். வீட்டு வேலை பார்க்கும்போது அவளுடைய குழந்தையை தூங்க வைப்பது, கவனித்துக்கொள்வது எல்லாம் லட்சுமி நாராயண அய்யங்கார் தான். சீனியம்மாவின் குழந்தையை சீராட்டுவார்.
என்னுடைய அமெரிக்கன் கல்லூரி தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா, மணோன்மணியம் சுந்தரனார் கல்லூரி முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் ஆகியோருடைய வகுப்புத்தோழராக லட்சுமி நாராயணன் தன்னைப் பற்றி சொல்வார். க.ப.அறவாணன் இவருடைய பெயரை தூய தமிழில் மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவாராம். இவர் மறுத்து விட்டாராம். அப்போது பாப்பையா தன் பெயரை ‘வளவன்’ என்று தூய தமிழில் மாற்றிக்கொண்டிருந்தாராம்.
என்னிடம் பேசும்போது அடிக்கடி ஒரு விஷயம் குறிப்பிட்டதுண்டு. ‘ஜெமினி கணேசன் மனைவியும் லா.ச.ராமாமிருதம் மனைவியும் கஸின்ஸ். ஜெமினி பற்றி லா.ச.ரா ‘ நான் கேரக்டர் இல்லாத மனிதனை மதிப்பில்லை’ என்று சொல்வார்.
இதனை என் பதிவுகளில் லட்சுமி நாராயணன் சொன்னதாகவே நான் எழுதியிருந்தேன்.

இப்போது ஜெமினி மனைவி பாப்ஜியும் லா.ச.ரா மனைவியும் உறவினர்கள் அல்ல என்று எனக்கு தெரிய வந்தது. உடனே அதை என் பதிவில் இருந்து நீக்கி விட்டேன். என் பதிவுகளில் தகவல் பிழை இருப்பது உறுதியாக தெரிந்தால் நான் எப்போதும் அதை திருத்திக்கொள்வேன்.
முன்பு எஸ்.எஸ்.ஆரின் நெருங்கிய உறவினன் ஒருவன் 2002ல் என்னிடம் அவருக்கு 80 வயது என்று சொன்னான். என்னால் நம்ப முடியவே இல்லை. ஆனால் அவன் எஸ்.எஸ்.ஆர் வயது எண்பது தான் என அடித்து சொன்னான்.

2008ல், 2013ல் என் பதிவுகளில் எழுதியிருந்தேன். ஆனால் பின்னர் அவன் சொன்னது உண்மையல்ல என்பது உறுதியாக தெரிய வந்தது. உடனே அதனை என் பதிவுகளிலிருந்து நீக்கியிருக்கிறேன்.
எஸ்.எஸ்.ஆர் இறந்த போது நான் தான் ’இந்தியா டுடே’யில் இரங்கல் எழுதியிருந்தேன்.
அதற்கு முன் ஜெமினி மறைந்த போது ’காலச்சுவடு’ அஞ்சலி நான் எழுதியது தான்.

அது எப்படி லட்சுமி நாராயணன் என்னிடம் இப்படி இல்லாத ஒரு விஷயத்தை பேசியிருக்க முடியும். அப்படியென்றால் லட்சுமி நாராயணன் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார் என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

தென்காசியில் லா.ச.ரா வங்கி ஒன்றில் பணி புரிந்த போது தான் லட்சுமி நாராயணன் அடிக்கடி சந்தித்திருக்கிறார். இன்னொன்றும் தோன்றுகிறது. லட்சுமி நாராயணன் என்னிடம் பொய் சொல்லவில்லை என்றால் லா.ச.ரா ஏன் அப்படி அவரிடம் பொய் சொல்ல வேண்டும். குழப்பமாயிருக்கிறது. இருவரும் இப்போது உயிருடன் இல்லை. ஜெமினி கணேசனும் தான் இல்லை. அவருடைய முதல் மனைவி பாப்ஜியும் தான்.
லட்சுமி நாராயணன் சொன்ன மற்றொரு விஷயம் பற்றி என் “ உண்டிங்கு ஜாதி எனில்” கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளை. அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார்.
ஆனால் அதனை ஒரு எள்ளலோடு வேடிக்கையாக தாமரை இலை தண்ணீராக அந்த விஷயத்தில் ஒட்டாமல் எழுதியிருந்தேன்.
ஏனென்றால் நம்மாழ்வார் காலத்தில் அவர் ஜாதி பற்றி இப்படி உறுதிப்படுத்துவதெல்லாம் அபத்தம்.
எங்கள் சொந்த ஊர் செய்துங்க நல்லூருக்கு அருகில் ஆழ்வார்திருநகரி. அப்படியானால் என் தாத்தா செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளையின் முன்னோராக நம்மாழ்வார் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதே. ஆண்டாள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள ப்ரீதி கூட இந்த வைஷ்ணவப் பாரம்பரிய உணர்வினால் தானோ? என்றெல்லாம் புல்லரித்து, செடியரித்து, மரமரித்து……
………………………………………………………….



.

May 12, 2013

எஸ்.எஸ்.ராஜேந்திரன்

  
பெரியகுளம் தலைமை தபால் நிலையத்தில் நான் வேலை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நாள் இலட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனின் உடன் பிறந்த தம்பி பாஸ்கர் தபால் ஆபீஸ் வந்து என்னிடம் "தம்பி , இன்று மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுங்கள். அண்ணன் மதுரையிலிருந்து கிளம்பி இங்கே வருகிறார் .போன் இப்ப வந்தது ." என்றார். எனக்கு சந்தோசம். சென்னையிலிருந்து மதுரைக்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவர் பெரியகுளத்தில் இருக்கும் அப்பாவையும் தம்பியையும் பார்க்க S.S.R வருகிறார். அவரை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு.
மதியம் 12 மணிக்கு ஆபீஸ் PERMISSIONபோட்டு விட்டு பாஸ்கர் வீட்டுக்கு போய் விட்டேன்.  எஸ்.எஸ்.ஆருடைய தகப்பனார் சேடபட்டி சூரிய நாராயண தேவருக்கு அப்போது வயது ஒரு 75 இருக்கும். என்னிடம் நன்றாக பேசுவார்.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் தம்பி திலகர் மருது என் பால்ய நண்பன். ஓவியர் மருது ஒரு முறை பெரியகுளம் வந்திருந்த போது எஸ்.எஸ்.ஆருடைய இன்னொரு தம்பி கதிர் வேல் (போலீஸ் அதிகாரியாக இருந்தவர்) மகன் பாண்டியனுடன் என் அறைக்கு வந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
உண்மையில் ஓவியர் மருது வின் அப்பா மருதப்பனும் ( இவர் ஒரு ஞானி ) நானும் மதுரையில் தல்லாகுளத்தில் ரோட்டில் சந்தித்தால் கூட இரண்டு மணி நேரம் பேசி கொண்டிருப்போம். அவர் தான் எனக்கு என் பதினெட்டு வயதில், ரஸ்ஸல் எழுதிய “WHY I AM NOT A CHRISTIAN” நூலை படிக்க கொடுத்தவர். மருது வீட்டில் ஒரு நூலகம் உண்டு. "இயேசுவின் மரணம் காஷ்மீரத்திலே " என்ற ஒரு விசித்திரமான நூல் கூட அவரிடம் இருந்து வாங்கி நான் படித்திருக்கிறேன். S.S.R க்கு இவர் சித்தப்பா. அதனால் தான் பெரியகுளத்தில் பாஸ்கர் எனக்கு அறிமுகம். ஓவியர் மருதுக்கு S.S.R அண்ணன் முறை.

விஷயத்திற்கு வருகிறேன். பாஸ்கர், அண்ணன் S.S.R வரப்போகிறார் என்ற பதற்றத்தில் இருந்தார்.  நான் பாஸ்கர் கேட்பதற்காக HITS OF S.S.RAJENDRAN ஆடியோ கேசெட் கொடுத்திருந்தேன். கேசெட்டை போட்டு கேட்பதற்காக என் டேப் ரெக்கார்டரையும் கொடுத்திருந்தேன். எஸ்.எஸ்.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய பாடல்கள் தனி சிறப்புடையவை. அந்த பாட்டு எல்லாம் கேட்கும் போதே எஸ்.எஸ்.ஆர் அதற்கு பாவத்துடன் வாயசைப்பதை உணர முடியும். "ரொம்ப நல்லா இருந்தது. இது மாதிரி ஒரு டேப் ரெக்கார்டர் ஒண்ணு வேணும் " என்று சூரிய நாராயண தேவர் சொல்லிகொண்டிருந்தார். சூரிய நாராயண தேவர் குழந்தை போல.
ஒரு போன் வந்தது அப்போது . பாஸ்கர் ஏமாற்றத்தோடு என்னிடம்
" அண்ணன் அவசரமாக சென்னை திரும்பி போகிறாராம். அடுத்த முறை பெரியகுளம் வருகிறேன் என்று சொல்லி விட்டார் தம்பி " என்றார்.
அன்று தவறிபோனவாய்ப்பு ! காலம் ஓடி விட்டது.
அதன் பிறகு இன்று வரை இலட்சிய நடிகரை நான் பார்த்ததில்லை! பார்க்க வாய்ப்பு கிடைத்ததே இல்லை.


இந்த விஷயங்களை ஓவியர் மருது இங்கே திருப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு வருடம் முன் வந்திருந்த போது நான் மத்திய அரிமா சங்க மேடையிலேயே பேசினேன். எம்.எல்.ஏ. கோவிந்தசாமி அவர்கள் மருது பற்றி நான் பேசிய விஷயங்கள் பிரமிப்பாய் இருப்பதாக குறிப்பிட்டார்.


எஸ் எஸ் ஆர் திமுக உடைந்த போது திமுக வில் தான் இருந்தார். அவர் மகன் ராஜேந்திர குமார் அதிமுக வில் உடனே சேர்ந்து விட்டார்.
அப்போது எம்ஜியாரை தாக்கி எஸ் எஸ் ஆர் ஒரு அறிக்கை விட்டார்.
 http://i1.ytimg.com/vi/T8zinD5mwmc/hqdefault.jpg

" அன்றைய தினம் 'ராஜா தேசிங்கு' படத்தில் என்னுடன் திருமதி பத்மினி அவர்கள் நெருங்கி நடிக்கக்கூடாது என்பதற்காக எம்ஜியார் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா?"

துக்ளக் சோ வுக்கு இந்த மாதிரி விஷயம் கிடைத்தால் நையாண்டிக்கு கேட்க வேண்டுமா ?
" எஸ் எஸ் ஆர் சார் ! கேட்கவே பதறுகிறதே.நெஞ்சு கொதிக்கிறது . இப்படியெல்லாம் அநியாயமா ? எப்பேர்ப்பட்ட அநீதி இது? இதையெல்லாம் இந்த நாடு மறந்தால் இந்த நாட்டிற்கு விமோசனம் ஏது? இந்த நாடு நன்றி கொன்ற நாடு ஆகிவிடாதா ?" என்று செமையாக கலாய்த்திருந்தார்.

எஸ் எஸ் ஆர் அவர்களுக்கும் எம்ஜியார் அவர்களுக்கும் பெரிய பனிப்போர் நடந்திருக்கிறது.

எம் ஆர் ராதா - எம்ஜியார் துப்பாக்கி சூடு நடந்த அந்த நேரத்தில் விஜய குமாரியின் தங்கை திருமணம் நடந்ததாம். அந்த திருமண நிகழ்வில் உரையாடலின் போது எஸ் எஸ் ஆர் சொன்னாராம் ' இப்போ கூட எம்ஜியாரிடம் துப்பாக்கி கொடுத்து யாரை யாவது சுட சொன்னா அவர் எம் ஆர் ராதாவை சுட மாட்டார் . எஸ் எஸ் ஆரை தான் சுடுவார் '

 

ஐம்பதுகளில் இருந்து திரை ,திமுகஅரசியல் இரண்டிலும் எஸ் எஸ் ஆர் முக்கிய பங்கு வகித்தவர்.

திண்டுக்கல் பாராளு மன்ற உறுப்பினர்  ராஜாங்கம் இறப்பதற்கு முந்திய தினம் மதுரை திலகர் திடலில் நடந்த கூட்டத்தில் பேசும்போது சொன்னார்.  
' எனதருமை நண்பன் எஸ் எஸ் ராஜேந்திரனை திரையுலகில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜியார் தான் .'
இரவுகூட்டம் முடிந்த அன்று சில மணி நேரங்களிலேயே ராஜாங்கம் மாரடைப்பால் இறந்து விட்டார்.

சில நாளில் பத்திரிகை செய்தி ” ராஜாங்கம் சமாதியில் ராஜேந்திரன் கண்ணீர் "


திண்டுக்கல் இடைதேர்தலில் அண்ணா திமுக வுக்கு முதல் வெற்றி .

தொடர்ந்து அடுத்து மூன்று வருடங்களில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு மிசா கொடுமைகளில் சிக்கிய போது எஸ் எஸ் ஆர் திமுக தலைவர் பதவியில் இருந்து கருணாநிதி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். செயற்குழுவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். பின்னால் ம.தி.மு. க விற்குப் போய்விட்டு மீண்டும் தி.மு.கவிற்குத் திரும்பிய  மு கண்ணப்பன் தான் எஸ் எஸ் ஆரை விரட்டி விரட்டி தாக்கினார். அவருடைய கார், மூக்கு கண்ணாடி நொறுக்கப்பட்டது .இந்த இடத்தில் கொஞ்சம் திரும்பிப்பார்க்க வேண்டும் .எம்ஜியார் கட்சியை விட்டு விலக்கப்பட்டதற்கு திமுக கூறிய காரணம் ' பொதுக்குழுவில் பேசவேண்டிய விஷயங்களை பொதுக்கூட்டத்தில் பேசினார்'
- பொதுக்குழுவில் எம்ஜியார் பேசியிருந்தால் உயிர் பிழைத்திருப்பாரா?

கோர்ட்டில் வக்கீல் எஸ் எஸ் ஆரிடம் ' அன்பகத்தில் அன்று நடந்த சம்பவம் நினைவிருக்கிறதா ?' என கேட்ட போது எஸ் எஸ் ஆர் ' மறக்க முடியுமா'
என்கிறார் . கோர்ட்டில் அமர்ந்திருந்த கருணாநிதி கண்ணாடியை கழட்டி கண்களை துடைத்து கொள்கிறார்.

திமுக விலிருந்து எஸ்.எஸ்.ஆர் விலக்கப்பட்ட போது வந்த பதிவு தபாலில் கூட அவர் ' எஸ்.எஸ் ராஜேந்திரன், தி.மு.க’ என்று தான் ஒப்பமிடுகிறார்.

வேறு வழியில்லாமல் அண்ணா திமுக வில் இணைந்து விட்டார்!

பின்னர் ஆண்டிப்பட்டி யில் பொதுத்தேர்தலில் எம் எல்ஏ வாக அதிக வாக்கு வித்தியாசத்தில் ( அகில இந்திய அளவில் ) எம்ஜியார் செல்வாக்கில் வெற்றி பெறுகிறார்.
எம்ஜியார் அடுத்த தேர்தலில் அமெரிக்கா வில் நோயாளியாய் இருந்த போது இவருக்கு சீட்டு மறுக்கப்பட்ட போது சேடப்பட்டி தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளரை ( சேடபட்டி முத்தையா)எதிர்த்து படு தோல்வியடைந்து டெபாசிட் இழக்கிறார்.இந்த அளவில் எஸ் எஸ் ஆரின் அரசியல் வாழ்வு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.

ஆனால்அதன் பிறகு திருநாவுக்கரசு கட்சி, அதன் பின் அந்த கட்சி அண்ணா திமுக வில் இணைந்த போது போய் கூட்ட நெருக்கடியில் தள்ளாடி கீழே விழுந்து வேதனையுடன் ' நேரம் , நேரம் ' என்று வாய் விட்டு சொன்னது,
2006 சட்ட மன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்து அண்ணா திமுகவில் இணைந்தது எல்லாம் பேச வேண்டிய விஷயங்கள் அல்ல.

ஆனால் உண்மையிலேயே
' நாடு மறக்குமா ' என்று சுட்ட வேண்டிய நிகழ்வு ஒன்று.
ராஜ மான்ய ஒழிப்பு தீர்மானம் பாராளுமன்றத்தில் எஸ் எஸ் ஆர் வயிற்று வலி (!)காரணமாக ஒட்டு போடாததால் ராஜ்ய சபாவில் தோல்வியடைந்த நிலையில் 1971ல் இந்திரா காந்தி இந்திய பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு இடைதேர்தலை அறிவித்த நிகழ்வைத்தான்!

................