Share

Showing posts with label சிட்டி. Show all posts
Showing posts with label சிட்டி. Show all posts

Sep 12, 2017

புதுமைப்பித்தன் தழுவல் கதைகள் பிரச்னையில் ராஜநாயஹத்தின் குரல்


1991ல் சிவசுவின் ’மேலும்’ சிறுபத்திரிக்கையின் ஆகஸ்ட் இதழில் நான் எழுதிய கட்டுரை இது. இப்போது 26 வருடங்களுக்குப்பின் மீண்டும் பதிவிடுகிறேன்.
..........................


நெஞ்சஞ்சுட வுரைத்தல் நேர்மையென கொண்டாயோ?
- R.P.ராஜநாயஹம்
பொதியவெற்பனின் ’பறை 1990’ ல் மயிர் சுட்டு கரியாகுமா? என்று ஒரு கவிதை?யும் திருச்சிற்றம்பலக் கவிராயருக்குத் திறந்த மடல் ஒன்றும் எழுதியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ’மன நிழல்’ கதை விவகாரம் பற்றிப் பேச வேண்டியதாகிறது. சென்ற வருடம் ‘குங்குமம்’ பத்திரிக்கை ‘புகழ் பெற்ற காதல் கதைகள்’ தலைப்பில் சிறுகதைகளை வெளியிட்டது. 20.4.1990 தேதியிட்ட இதழில் புதுமைப்பித்தனின் ‘மன நிழல்’ பிரசுரமானது. அடுத்த வாரம் ஒரு வாசகர் கடிதம். யார் என்றால் கமலா விருத்தாச்சலம். ‘ அது நான் எழுதிய கதை. என் சிறுகதையை ஸ்டார் பதிப்பகம் தெரியாமல் ‘ அன்று இரவு’ தொகுப்பில் சேர்த்து விட்டார்கள்.’
நாமெல்லாம் எங்கே போய் முட்டிக்கொள்வது? முதல் பதிப்பில் ஏற்பட்ட தவறை அடுத்த பதிப்பிலாவது தவிர்த்திருக்க முடியாதா? அதன் பிறகு எத்தனை பதிப்புகள் ‘அன்று இரவு” வெளிவந்து விட்டது. மிகச் சமீபத்திய ஐந்திணை பதிப்பக வெளியீட்டிலும் அந்தக் கதை இடம்பெற்றுள்ளதே. கமலா விருத்தாச்சலம் தன்னுடைய கதையை புதுமைப்பித்தனின் தொகுப்பில் இருந்து அகற்ற முயற்சியே செய்யாமல் இருந்தது ஏன்? ’காசுமாலை’ என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு தன் பெயரில் வெளியிட்டு இலக்கியவாதியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட அம்மையாருக்கு இது தன் கணவர் புதுமைப்பித்தனுக்குச் செய்யப்படும் துரோகம் என்று புரியவில்லையா? தமிழ்ச்சிறுகதையை உலகத்தரத்துக்கு உயர்த்திய உன்னத கலைஞனின் தொகுப்பில் இப்படி சராசரிக்கும் கீழான கதையைக் கலப்பது எந்த வகையிலான இலக்கியக்குற்றம்.
புதுமைப்பித்தன் சாதாரண கதைகளும் எழுதியிருக்கிறார். இப்ப என்ன? என்பதான சால்ஜாப்பு சரிதானா?
க. நா.சு. தன் காலமெல்லாம் புதுமைப்பித்தனைப் போற்றி எழுதினாரே. அவருக்கு இந்த ‘மன நிழல்’ விவகாரம் தெரிந்திருந்ததா?
புதுமைப்பித்தன் வரலாறு எழுதிய ரகுநாதன் இந்த விஷயம் பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தாரா?
புதுமைப்பித்தனை இந்திய இலக்கிய சிற்பியாக சாகித்திய அகாதெமிக்காக எழுதிக்கொடுத்த வல்லிக்கண்ணன் அறிவாரா?
புதுமைப்பித்தனிடம் காணப்படுவது Wit அல்ல, அது Power என்று எடுத்தியம்பிய தர்மு சிவராமுவுக்கு ’மன நிழல்’ ஊழல் தெரியுமா?

படைப்புக்கு முன்னாலேயே, அதன் கிளை படரும் காட்சிகளை உணர்வதற்கு முன்னாலேயே, ’புதுமைப்பித்தன்’ என்று தனக்குப் பெயர் சூட்டிக்கொண்ட தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து, அவரது மனக்குகை ஓவியங்களை ரசித்த சுந்தர ராமசாமி ‘மன நிழல்’ கதையைப் படிக்காமலா இருந்திருப்பார்?
இப்போது மீண்டும் ஒருமுறை புதுமைப்பித்தனின் படைப்புலகத்திற்குள் ஆட்பட்டு மீளமுடியாமல் மூச்சுத்திணறி முக்குளித்தபோது பொதிய வெற்பன் கூடத்தானே மன நிழலை வாசித்திருப்பார்!
அந்த மகத்தான கலைஞனின் இதயம் இந்தக்கதையில் இல்லாததை இவர்களெல்லாம் எப்படி கண்டுபிடிக்கத் தவறினார்கள். இந்த கலப்படம் இந்த வல்லுனர்களின் கண்ணில் மண்ணைத் தூவியிருப்பது விந்தையாயிருக்கிறது.
கமலா விருத்தாச்சலம் ‘அது என் கதை’ என்ற போது தமிழ் கூறு நல்லுலகம் ஒரு அதிர்ச்சியையாவது வெளிக்காட்டியதா?
பாரதியின் கவிதைகளுக்கிடையில் செல்லம்மாள் தன் பாடலையும் செருகியிருப்பாளோ?!
புதுமைப்பித்தன் சாகக்கிடந்த வேளையில் அவருக்கு சினிமாவில் எழுதிய பணம் வந்த போது, அவரோடு சைனா பஜாருக்கு போய் தனக்குப் பட்டுப் புடவைகள் எடுத்து வந்து, பின்னர் லோகநாதன் என்ற நண்பர் போய்க் கெஞ்சிக் கூத்தாடி கடைக்காரனிடம் புடவைகளை திருப்பிக்கொடுத்து, திருவனந்தபுரம் சானிட்டோரியத்திற்கு இருவரையும் ரெயிலேற்றிவிட்ட கதையெல்லாம் தெரிந்த விஷயம் தானே?
இப்போது “அவர் உயிரோடு இருந்தால் தெரியும் சேதி’ என சிட்டியைப்பார்த்து கமலா விருத்தாச்சலம் பிலாக்கணமிடுவது அபத்தமாக இருக்கிறது.
எல்லாக் கலைஞர்களுக்கும் பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது. புதுமைப்பித்தன் மட்டும் விதிவிலக்கா? காமவல்லி,வசந்தவல்லி என்று சினிமாவுக்கு வசனம் எழுதவில்லையோ? ’பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்’ படக்கம்பெனி ஆரம்பித்து ஓஹோ புரொடக்ஷன்ஸ் செல்லப்பா கூத்தெல்லாம் நடத்தியவர் தானே புதுமைப்பித்தன்?
தி.ஜானகிராமன் எழுதிய நாடகங்களை என்னவென்று சொல்வது?
கு.அழகிரிசாமி மதுரையில் எவனோ ஒரு ஒன்னரையணா எழுத்தாளனுக்கு Ghost writer ஆக இருக்க நேர்ந்திருக்கிறதே.
’புதுமைப்பித்தனை மிஞ்ச ஆளேயில்லை!’ என்று சொல்லிக்கொண்டே க.நா.சு., தான் மௌனி கதைகளுக்கு எழுதிய முன்னுரையில் ஒரு ஒன்பது பெயர்களைச் சொல்லி ’இவர்களில் மூன்று பெயர்களைக் காலம் அடித்துவிடும். ஆனால் அந்த மூன்று பெயர்களில் மௌனி பெயர் மட்டும் உறுதியாக இருக்காது’ எனும்போது புதுமைப்பித்தனுக்கு guarantee கொடுக்க மறுக்கிறார் என்று தான் அர்த்தம்.
’எழுத்து’ சி.சு.செல்லப்பா தமது வழிபாட்டுக்கு இலக்காகியிருந்த பிச்சமூர்த்தியுடன் புதுமைப்பித்தனை ஒப்பிட்டு முன்னவரைப் பெரிய ரிஷியென்றும், புதுமைப்பித்தனை மட்டமான மனிதர் என்றும் ஸ்தாபிக்க முயன்றார் என “லயம்” 3வது இதழில் பிரமிள் எழுதியிருக்கிறார்.
அசோகமித்திரன் சாப விமோசனம் கதையில் ஒரு Logical errorஐ சுட்டிக்காட்டுகிறார். இது தப்பில்லை. தொடர்ந்து அவர் புதுமைப்பித்தன் கதைகள் காலப்போக்கில் இன்று அவை வகிக்கும் அந்தஸ்தை இழந்து விடுமோ என்று சங்கடப்பட்ட விஷயம் பலரைக் கொந்தளிக்க வைத்து விட்டது.
சுஜாதா பல வருடங்களுக்கு முன் கணையாழியின் கடைசிப்பக்கத்தில் போட்ட மானசீகத் தொகுப்பில் ‘ரொம்ப யோசனைக்குப் பிறகு, புதுமைப்பித்தன் இல்லை’ என்றார். இப்போது ’Shock valueக்காக அப்படிச் சொன்னேன். அப்ப எனக்கு என்ன வயசுங்கிறீங்க?’ என்று கணையாழியில் ஜோக்கடிக்கிறார்.
காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும். விமரிசனம் செய்வதும் ஆய்வு செய்வதும் வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் அவரை சுத்தமாக ignore செய்யும் இன்றைய இளைய தலைமுறை இலக்கிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை போப் போலப் பாவித்துக் கொண்டு செய்யும் புனிதப் பட்டமளிப்புகளை இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்வது முக்கியமாகிறது.
’பால்வண்ணம்பிள்ளை’ என்ற புதுமைப்பித்தனின் கதாபாத்திரத்தைத் தன்னுடைய புனைபெயராகக் கொண்டு ஒரு காலத்தில் எழுதிக்கொண்டிருந்த கோணங்கி இரண்டு வருடங்களுக்கு முன், ‘ பழைய ஆட்களில் மௌனி, இப்போ பிரமிள். ரெண்டே பேர் தான். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.ஐ செத்த எலி மாதிரி தூக்கிப் போட்டுடனும்’ என என்னிடம் கூறினார்.
’ரப்பர்’ ஜெயமோகன் தமிழில் ஜே.ஜே சில குறிப்புகள் ஒன்று தான் உருப்படி. வேறு எதுவும் கிடையாது. மலையாளத்தில் தான் நிறைய இருக்கிறது என்று கூறி சு.ராவுக்கு மட்டும் ஞானஸ்நானம் செய்து அருளும் ஆசியும் வழங்கி விட்டார்.
இன்னும் ஒரு படி மேலே போய் பிரேமும் ரமேஷும் ( கிரணம் பிரேதாக்கள் ) ’தமிழிலே எல்லாமே குப்பை’ என்று என்னிடம் கூறினார்கள். அவர்களிடம் நான் ‘புதுமைப்பித்தனை நான் வாசித்ததால் தான், இன்றைக்கு பிரேதாவையும் தெரிந்துகொள்ள முடிகிறது’ என்றேன். மீண்டும் பிரேம் அழுத்தமாக சொன்னார். “ தமிழில் எல்லாத்தையும் எரிச்சுடலாமே. லத்தீன் அமெரிக்காவில தான் நிறைய இருக்கு”
இவர்கள் இப்படிச் சொல்வது பற்றி சாரு நிவேதிதாவிடம் விளக்கம் கேட்டேன். அவர் அழகாகச் சிரித்துக்கொண்டு ஒரு போடு போட்டார் :‘சிவசங்கரி, இந்துமதி, புஷ்பா தங்கதுரையெல்லாம் குப்பைன்னு நீங்க சொல்லலியா? அது மாதிரி தான்.’
பொதியவெற்பன் இவர்களைச் சுட்டியும் ‘ மயிர் சுட்டு கரியாகுமா – இரண்டாம் பாகமும், திருச்சிற்றம்பலக்கவிராயருக்கு இரண்டாவது திறந்த மடலும் ‘ பறை 1991’ல் எழுதலாமே. கமலா விருத்தாச்சலத்தின் பிலாக்கணம் “ அவர் உயிரோடு இருந்தால் தெரியும் சேதி “ வழக்கம் போல இடம் பெற வேண்டும்!
’மணிக்கொடி இலக்கிய போக்கிற்கும் அதன் பொற்காலத்தை இன்று சுவீகரித்துக்கொள்ள முயல்கிற சிட்டிக்கும் சம்பந்தமில்லை’ – இப்படி அ. மார்க்ஸ் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது.
வ.ரா, சொக்கலிங்கம் தலைமையில் புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, ந.பிச்சமூர்த்தி ஆகிய சாதனையாளர்களுடன் சி.சு.செல்லப்பா, சிட்டி, சிதம்பர சுப்ரமணியன், கி.ராமச்சந்திரன் ஆகிய படைப்பாளிகளும் இணைந்து பங்காற்றியதைப் பற்றி பி.எஸ்.ராமையாவின் ‘மணிக்கொடி காலம்’ படம் பிடித்துக் காட்டுகிறது.
மணிக்கொடி மறுமலர்ச்சியில் பிரமிப்பான விஷயம், எழுத்தாளர்கள் எல்லோரிடமும் இருந்த INDIVIDUALITY தான், ஒவ்வொருவரும் வெவ்வேறு VARIETY. ஒருவர் சாயல் துளி கூட மற்றவரிடம் கிடையாது. பின்னால் வந்த லா.ச.ரா, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமியிடமும் விசேஷமான தனித்தன்மை இருந்ததென்பதும் தமிழிலக்கியத்தின் அதிர்ஷ்டம்.
சிட்டி வ.ராவின் சீடர். மகாகவி பாரதி பற்றி மிகச் சரியான நேரத்தில் கு.ப.ராவுடன் இணைந்து ‘கண்ணன் என் கவி’ புத்தகம் எழுதியவர். மணிக்கொடியில் அவர் எழுதிய ‘அந்தி மந்தாரை, ’ரப்பர் பந்து’, ’உடைந்த வளையல்’ போன்ற கதைகள் குறிப்பிடத்தகுந்தவை.
சு.வேங்கடராமன் ‘ மேலும்’ 5வது இதழில் தமிழ் சிறுகதை வரலாற்று நூலை விமர்சித்து முடிக்கும்போது கூறுவதை பொதியவெற்பன் மேற்கோள் காட்டுகிறார். அதில் சு. வேங்கடராமன் ‘கல்வி நிறுவனம் சாராத சுதந்திர விமர்சகர்கள் விமர்சனம் செய்யவே யோக்கியதையற்றவர்கள். பண்டிதர்கள் தான் விமர்சனம் செய்ய யோக்கியதையுள்ளவர்கள்’ என்பதாக மறைமுகமாகச் சொல்கிறார். இதை எந்த சட்டதிட்டத்தில் சேர்க்கலாம் என்று தெரியவில்லை.


சென்னையில் ஒரு உணவு விடுதியில் சாப்பிடுவதற்காக சிட்டி நுழைகிறார். மேற்பார்க்கும் ஒருவர் சிட்டியிடம் ஒரு அறையை காட்டி சொல்கிறார் :“ Non-Brahmins எல்லாம் அங்கே போங்க”
தான் ஒரு பிராமணன் தான் என்று ஸ்தாபிக்க முயற்சி ஏதும் செய்யாமல் பிராமணரல்லாதோர் சாப்பிடும் பகுதியில் போய் சிட்டி அமர்கிறார்.
தஞ்சையில் ஸ்வாமினாத ஆத்ரேயனை அவரது கடையில் சிட்டி சந்திக்கிறார். அவரிடம் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி ஆத்ரேயன் தன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். வீட்டில் வெளியே திண்ணையில் வைத்தே சாப்பாடு பரிமாறுகிறார்கள். சிட்டி ‘ மாமி, நானும் பிராமணன் தான்’ என்றெல்லாம் எதுவுமே சொல்லாமலேயே சாப்பிட்டு விட்டு விடைபெறுகிறார்.
பொதியவெற்பனின் “ஏங்காணும் சிட்டி! யாரிடம் உமது நூலாட்டல்” கொக்கரிப்பு
திரௌபதியைத் துகிலுரிந்த துச்சாதனத் திமிர் தான்.


....................................................................


குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை
1991 ல் "மேலும் " பத்திரிகையில் " நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மைஎன கொண்டாயோ ?"- இந்த தலைப்பில் நான் எழுதி ஒரு கட்டுரை வெளியானது. புதுமைப்பித்தன் சர்ச்சை பற்றியது.
உடன் பொதியவெற்பன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
" மரணப் படுக்கையில் இருக்கும் கமலா விருத்தாச்சலத்தை புண் படுத்தி விட்டீர்கள்"
கமலா விருத்தாசலம் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவியார்.
இதற்கு ஒரு கார்டில் நான் எழுதிய பதில்:
“My intentions are genuine. I don’t see the need to retaliate .”

Mar 26, 2017

தி.ஜா மரணமும் அசோகமித்திரன் தகவல் பிழையும்


வரலாறு நிகழ்வுகளை சரியாக பதிகிறதா ?
சமீபத்திய மரணங்கள் பற்றியே கூட உண்மையை அறிவதில் குழப்பங்கள் நேர்கிறது .எனும்போது பல நூற்றாண்டு சம்பவங்களின் நம்பகத்தன்மை என்ன ?
தளையசிங்கம் மரணம் பற்றி ஜெயமோகன் பெரிய பொய்யை சொல்லி அதனை கேள்விக்கு நான் உள்ளாக்கி,
சுந்தர ராமசாமி களமிறங்கி,
மு.பொன்னம்பலம் சு.ரா எழுதிய தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் கட்டுரையில் தளைய சிங்கம் மரணம் பற்றி தகவல் பிழை எதுவும் இல்லை என்று ஜெமோவின் முகத்திரை கிழித்தார்.
அப்புறமும் கூட நாஞ்சநாட்டான் ஒர்த்தன் 'அய்யோயோ நான் உண்மையின் பக்கம் நின்னு வெள்ளவேட்டியிலே புல்லழுக்கு, புடுக்குலே சொறி சொரங்காயிடுச்சி' ன்னு புலம்புனான்.
சாரு நிவேதிதா வின் Mummy returns – part 3 யில் ஜெயமோகன் எனக்கு தளையசிங்கம் மரணம் பற்றி எழுதிய கடிதத்தை வெளியிட்டு முழுசா அம்மண குண்டியா நிக்கும்படி பண்ணியாச்சு.

ப்ருனோ லத்தூர் அறிவியல் உண்மைகளை விஞ்ஞான விஷயங்களையே கேள்விக்குள்ளாக்கி விட்டார். இதை விட பெரிய சாதனை என்ன இருக்கிறது!
1973 ல் நடந்த தளையசிங்கம் மரணம் பற்றி இவ்வளவு போராட வேண்டி வந்துச்சு.

1982 ல் நடந்த தி .ஜானகிராமனின் மரணம் பற்றி ஒரு விஷயத்தை நான் பேசி விடுகிறேன்.
'ஜானகிராமனை மருத்துவமனையில் ஒரு நர்ஸ் அவமானப்படுத்தி விட்டார் . சில மணி நேரத்தில் அவர் மரணம் நிகழ்ந்தது. இது ஜானகிராமனுக்கு மட்டுமல்ல சாதாரணமாக யாருக்குமே நடந்திருக்க கூடாது ' என்கிற அர்த்தத்தில் அப்போது கணையாழியில் அசோகமித்திரன் எழுதியிருந்தார்.
வாசகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி! ஜீரணிக்க மிகவும் கஷ்டமாய் இருந்தது . ஜானகிராமனுக்கு மரணமடையும்போது இப்படி ஒரு அவமானமா ?
இந்த ஜானகிராமன் பற்றிய செய்தி அசோகமித்திரனின் கட்டுரைகளில் உள்ளது.

1988 ல் சிட்டியிடம் நான் இந்த விஷயம் பற்றி பிரஸ்தாபித்த போது ' இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை ' என உறுதியாக மறுத்தார். வேதனை பட்டார் . அப்படி எந்த அவமானமும் ஜானகிரமானுக்கு நடக்கவில்லை.
எனக்கு ஆச்சரியாமாக இருந்தது .

1989 ல் மார்ச் மாதம் நான் சென்னை சென்றிருந்த போது
ஜானகிராமனை கடைசி நேரத்தில் ஆஸ்பத்திரியில் கவனித்து கொண்டிருந்த மணிக்கொடி சிட்டியின் மகன்களில் ஒருவரான சங்கரை சந்திக்க விரும்பினேன்.
இவர் தான் ஜானகிராமன் இறந்த நேரத்தில் அவர் அருகில் இருந்தவர். தூர்தர்சனில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் .
சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரம் தான் என்னை சங்கர் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
சங்கரிடம் கேட்டேன். ஜானகிராமனுக்கு இறப்பதற்கு முன் அவமானம் ஏதும் யாராலும் நடக்கவில்லை என்பதை சங்கர் உறுதிபட சொன்னார்.

இதில் அசோகமித்திரனுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்து அவர் கொஞ்சம் அவசரப்பட்டு கணையாழியில் அப்படி எழுதியிருக்கிறார் என்றே அனுமானிக்க வேண்டியிருக்கிறது .

அசோகமித்திரனிடம் அவரை புதுவையில் சந்தித்த போதும்
பின் என் முயற்சி காரணமாக அவர் ஸ்ரீவில்லி புத்தூர் வந்து பென்னிங்க்டன் நூலகம் நடத்திய விழாவில் (எழுத்தாளர் அறிமுகம் ) அசோகமித்திரனை அறிமுகப்படுத்தி நான் பேசிய பின் மறு நாள் அவரை வழியனுப்பும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திலும் அவரிடம் சொல்லிவிட்டேன்.

2008ல் என் ப்ளாக்கில் இதை எழுதியிருக்கிறேன்.
........................................................

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/3.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-34.html

Dec 1, 2016

அப்படி காலத்தில் இப்படியும் பிறவி!


மணிக்கொடி சிட்டி என்ற பெ.கோ.சுந்தரராஜன் தெலுங்கு பிராமணர். நல்ல கறுப்பு நிறம்.
சென்னையில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப்போகிறார். “ Non brahmins சாப்பிடுவதற்கு அடுத்த ரூம். இங்கே பிராமணா தான் சாப்பிடுவா” என்று அவரிடம் சொல்கிறார் ஒரு சர்வர். சிட்டி தன்னை ஒரு பிராமணர் ஆக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பிராமணரல்லாதவரோடு உட்கார்ந்து சாப்பிடுகிறார்.
ஸ்வாமினாத ஆத்ரேயன் கு.ப.ராவின் சிஷ்ய பரம்பரை. ’
மாணிக்க வீணை’ சிறுகதை எழுதியவர். தி.ஜானகிராமனின் நண்பர். தஞ்சாவூருக்கு போயிருந்த சிட்டி, ஸ்வாமினாத ஆத்ரேயனைப் பார்க்க அவருடைய ‘லலிதமஹால் ஸ்டோர்ஸ்’ போகிறார். ஆத்ரேயனுக்கு சந்தோஷம். கடைப்பையனை அவருடன் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் அவரை சாப்பிட வைக்கச் சொல்கிறார்.
அங்கே சிட்டியை Non- brahmin என்று நினைத்து அவருக்கு திண்ணையிலேயே சாப்பாடு பரிமாறுகிறார்கள். தன்னை பிராமணராக காட்டிக்கொள்ளாமல் சிட்டி சாப்பிட்டு விட்டு கிளம்புகிறார்.

................................................................................




photos
1. சிட்டி தம்பதியருடன் ராஜநாயஹத்தின் மூத்த மகன் கீர்த்தி
2. சிட்டியுடன் ராஜநாயஹம்

Mar 16, 2013

சிட்டியை சந்தித்த விதம்




30 வருடத்திற்குப் பின் மீண்டும் ’நடந்தாய்; வாழி, காவேரி!’ படிக்கிறேன். லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் 1971ல் வெளியிட்ட நூலை 1983ல் வாங்கிப் படித்த என்னிடமிருந்து உறவினர் ஒருவர் 1984ல் இரவல் வாங்கிச்சென்று விட்டார்.அப்போது இந்த நூலுக்கு மறு பிரசுரமும் கிடையாது. அதனால் எங்கும் கிடைக்காது. அவரிடம் படித்து விட்டுத் திருப்பித் தரும்படி கெஞ்சியும் கிடைக்கவில்லை. இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். 2007ல் இருந்து 2011க்குள் நான்கு பதிப்பு வந்து விட்டது!


 தி.ஜானகிராமனுக்கு  நினைவு மதிப்பீட்டு மடல் பழனியில் நான் ஃபுட் ஆயில் பிசினஸ் செய்து கொண்டிருந்த நேரத்தில் முதல் முறையாக என் பிரத்யேக, வித்தியாசமான இன்லண்ட் லெட்டரில் அச்சிட்டு ஐநூறு பேருக்கு தபாலில் அனுப்பி வைத்தேன். மறு வருடம் பாண்டிச்சேரியில் என் லெட்டர் ஹெட்டில் அச்சிட்டு ஆயிரம் பேருக்கு அனுப்பியிருக்கிறேன்.

பழனியில் இருந்து நான் அனுப்பிய  தி.ஜா நினைவு மதிப்பீட்டு மடலை விஜயா பதிப்பகம் வேலாயுதத்திடம் பார்த்த ஒரு நண்பர்- மறைந்த கல்கண்டு தமிழ்வாணனின் நண்பராம் –  சிட்டியிடம் கொண்டு வந்து காட்டியிருக்கிறார். 

அதைப் பார்த்து விட்டு சிட்டி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
 “ அன்பு மிக்க நண்பர் ராஜநாயஹத்துக்கு, சிட்டி வணக்கம். என்னைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நான் தி.ஜானகிராமனுடன் நெருங்கிப் பழகியவன். தி.ஜா. நினைவின் பலனாக உங்கள் நட்பு கிடைப்பதில் மகிழ்ச்சி.” 

நான் அந்தக்கடிதத்திற்கு எழுதிய பதிலில் அவர் 1934ல் புரசைவாக்கம் ராக்ஸி தியேட்டரில் Queen Christina படம் பார்த்த போது பி.எஸ்.ராமையாவிடம் அடித்த ஜோக், 1988ல் வ.ரா.நூற்றாண்டு நிகழ்ச்சியில் சிட்டி அடித்த ஜோக் பற்றியெல்லாம் குறிப்பிட்டு, சி.என். அண்ணாத்துரையின் பச்சையப்பன் கல்லூரி வகுப்புத்தோழர் என்பதோடு, மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி எழுதிய அந்தி மந்தாரை, ரப்பர் பந்து, உடைந்த வளையல் போன்ற கதைகளையும் பற்றி, கு.ப.ராவும் சிட்டியும் இணைந்து எழுதிய ’கண்ணன் என் கவி’ நூல் பற்றி,தி.ஜானகிராமனுடன் சேர்ந்து அவர் எழுதிய “ நடந்தாய் வாழி காவேரி” நூல்பற்றியெல்லாம் எழுதி விட்டு வ.ரா., தி.ஜா போன்ற இலக்கிய மகான்களுடனெல்லாம் நெருங்கிப்பழகிய நீங்கள் ஒரு சாதாரண வாசகனான ராஜநாயஹத்தின் நட்பையும் மகிழ்ச்சியோடு  ஏற்றுக்கொள்வது என்பது ’காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று சொன்ன பாரதியின் பரந்த மனசு தான்” என்று முடித்திருந்தேன்.


 சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரம் சொல்லியிருக்கிறார். “ அப்பா! எப்படியும் ராஜநாயஹத்துக்கு நிச்சயம் உன் வயசு இருக்கும். நீ 1934ல் அடித்த ஜோக்கையெல்லாம் எழுதியிருக்கிறார்.” சிட்டிக்கு அப்போது 80 வயது.
தமிழ்வாணனுடைய நண்பர் சொன்னாராம் ” எப்படியும் அறுபது வயசுக்கு குறையாது.”

கோவைக்கு தன்னைப் பார்க்க வரமுடியுமா என்று கேட்டு சிட்டி கடிதம் எழுதினார்.
நான் கோவைக்குப் போய் அவரைப்பார்த்தேன்.
விஸ்வேஸ்வரம் : ராஜநாயஹம்! உங்களுக்கு எங்க அப்பா வயசு இருக்கும்னு சொல்லிண்டிருந்தேன்.உங்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணனும்னு நெனச்சிண்டிருந்தேன். இப்படி இவ்வளவு சின்ன வயசா வந்து நிக்கிறேளே!

…………………………………………………………………………..

அக்டோபர் 29, 2008

புதுவை தமிழ் துறையில் தி சானகிராமன்



அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக ( இரண்டாம் முறையாக ) ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன் . புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு ஆள் அனுப்பி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து என்னை வைத்து உடனே தி.ஜா வுக்காக ஒரு கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டார்.
. .அறவாணன் அப்போது தமிழ் துறை தலைவர்.
'தி.சானகி ராமன் கருத்தரங்கம் ' என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது .என் பெயர் ஆர்பி ராசநாயகம் ! கிரா (அப்போது புதுவை பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியர் )பெயர் கி 'ராச'நாராயணன் . விழாவுக்கு போனவுடன் இபா 'என்ன ராச நாயகம் , ராச நாராயணன்'என்று கிண்டல் செய்தார் . கிரா " நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன் !"என்று பட்டிகாட்டானாக மாறி இந்திரா பார்த்த சாரதியை பார்த்து சிரித்தார் . தி.ஜா படத்திலும்' தி சானகி ராமன்' என்று எழுதியிருந்தார்கள் .
பூனைக்கு யார் மணி கட்டுவது ? நான் எதற்கு இருக்கிறேன் ! பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன்! பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்று பலர் வேறு அந்த சபையில் .
நான் பேசும்போது இந்த தமிழ் வெறியை குறிப்பிடாமல் விடவில்லை.
I broke the ice!
" தமிழில் 'ஷ் , 'போன்ற வார்த்தைகள் இல்லை என்று சொல்வதை கேட்கும்போது நம்ம கன்னத்திலேயே இரண்டு கைகளாலும் அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.  இருக்கிற சிறகை பிய்த்து விட்டு தனி தமிழ் சிறகு ஒட்டவைப்பது அபத்தம்” - இப்படி தி ஜானகிராமன் சொல்வார். அவர் பெயரையே அவர் படத்திலும் அவர் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழில் அபத்தமாக ஆபாசமாக எழுதிவிட்டீர்கள் " என்று என் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தேன்.
அவ்வளவு தான் . தனித் தமிழ் வெறியர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். உடனே . .அறவாணன் மேடைக்கு வந்து மன்றாடினார் 'தயவு செய்து எல்லோரும் அமருங்கள் .உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் '
தமிழ் பேராசிரியர் அறிவு நம்பி ' தயவு செய்து ராசநாயகத்திடம் சானகிராமன் பற்றி மட்டும் கேளுங்கள். தனித்தமிழ் பற்றி தயவு செய்து கேட்கவேண்டாம் . உங்களை கையெடுத்து கும்பிட்டு மன்றாடி கேட்டுகொள்கிறேன் '
விழா முடிந்த பிறகு புதுவை தமிழ் துறைக்கு பல 'கன்னட' கடிதங்கள் அது என்ன அது ஆங் .. கண்டன கடிதங்கள் !
"தமிழ்த் துறை நடத்திய விழாவில் ஒருவன்  தமிழை பழிக்கிறான் . எங்கள் கையையும் வாயையும் கட்டிப்போட்டு விட்டீர்களே "
டெல்லியில் இருந்து திஜாவின் மகன் சாகேத ராமன் எனக்கு ஒரு கடிதம் நொந்து எழுதினார்.
"சாணி உலகம் ! இந்த சாணியில் 'சானகிராமன்'தான் நிற்க முடியும். "

………………………………………………………………………………………

செப்டம்பர் 8, 2008

என் கனவில் தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமனை நான் நேரில் பார்த்ததில்லை . ஆனால் இன்று கனவில் வந்தார் .இது வரை கனவில் கூட வந்ததே இல்லை .

அவரை பார்த்தவுடன் அழுகை வந்தது . என் வாழ்க்கையின் அதிர்ச்சிகள் சோகங்கள்  எல்லாவற்றையும் சொல்லி அழுதேன்.  காலம் கற்பித்த பாடத்தின் அடி தாள முடியாமல் தப்பித்து திருப்பூர் வந்ததை சொன்னேன். ‘ கேளுமையா கதை கேளுமையா வாழ பிறந்தோர் நிலை பாருமையா’  என்றும் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் என்று திருப்பூர் வந்த கதையை சொல்லி தேம்பி தேம்பி  அழுதேன்.
தொலைத்து விட்ட எல்லாவற்றையுமே  அவரிடம் வரிசைப்படுத்தி சொன்னேன்.  காயங்கள் ,அவமானங்கள் ,சிறுமை எல்லாவற்றையுமே சிறு குழந்தை போல விக்கி அழுதுகொண்டே .........
அவருடைய ' சத்தியமா ' கதையில் வருகிற மாசில்லா சிறுவன் நான் தான் , அந்த' பரதேசி வந்தான் ' கதையில் வருகிற பரதேசி யும் நான் தான் என்றேன் .

அந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை இருந்த போது பூஜை அறையில் பிள்ளையார்,முருகன் ,லிங்கம் , விஷ்ணு , ஆண்டாள்  படங்களுடன் தி.ஜா படத்தையும் வைத்து கும்பிட்ட கதையை சொன்னேன் . இதை சொன்னவுடன் மட்டும் வேதனையுடன் முகம் சுழித்து " ஏன் அப்படி செய்தீர்கள் " என்று பதறி வருத்தப்பட்டார் .

கனவு எப்போது முடிந்தது .
தெரியவில்லை .
கனவுக்கு அர்த்தம் என்ன ? கடவுளை தூக்கிபோட்டு விட்ட  என்னால் தி. ஜா படைப்புகளை புறம் தள்ள முடியவில்லை . தி.ஜா வும் என்னோடு இருக்கிறார் .
ஒரு நாள் என் கனவில் அந்த ரஷ்யனும் வருவான் . வெகு துயரங்களை அனுபவித்தவன் , கரமசாவ் சகோதரர்களை எழுதிய கலைஞன் . இது என் நம்பிக்கை . அவனிடமும் நான் தேம்பி தேம்பி அழுவேன்.

...................................................



http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_23.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html