Share

Showing posts with label பிரமிள். Show all posts
Showing posts with label பிரமிள். Show all posts

Nov 3, 2018

அண்டங்காக்காய தேடி போகணும்


ஒரு கல்லின் மேல் உட்கார்ந்திருந்த பச்சோந்தி தலையைத் தூக்கி, தூக்கி பார்த்துக்கொண்டிருந்தது. அதனை உற்றுப்பார்த்த டால்ஸ்டாய் அதனிடம் சத்தமாக சொன்னாராம் “ஆமாம், நானும் சோகமாக துயர மனநிலையில் தான் இருக்கிறேன்.”
பச்சோந்தி எப்போதும் மரங்களில் தான் மகிழ்ச்சியுடன் இருக்கும். கல்லின் மேல் இருப்பதென்பது  ’ஸ்தான சலனம், கௌரவ பங்கம்’. துக்கமாகத் தானே கல்லில் பச்சோந்தி இருக்க முடியும்.
ஒரு அரபு பழமொழி. “ A Chameleon does not leave one tree until he is sure of another.”
பிரமிள் ஞாபகம் வருகிறது. அவருடைய அருமை தெரிந்தவர்கள் எப்போதும் தங்கள் வீட்டிற்கு சந்தோஷமாக அழைப்பார்கள். அவரும் போவார். ஒரு மாதம், ரெண்டு மாதம், அதற்கு மேலும் கூட தங்குவார். பொதுவாக சண்டை போட்டு விட்டு தான் கிளம்புவார். ஆனால் ஒன்று. அடுத்து அவருக்கான ஒரு தங்குமிடம் பற்றி தெளிவாக உறுதியான பின் தான் இந்த வீட்டில் சண்டை போட்டு விட்டு கிளம்புவார். முத்துசாமிக்கும் எனக்கும் கூட பிரமிள் நண்பர் தான்.
என் வீட்டில் ஃப்ரன்ச் விண்டோவை ஒட்டி நிற்கும் பாதாம் மரம். அதில் இரண்டு அண்டங்காக்காய்கள் கிளையில் அமர்ந்திருக்கின்றன.
கூத்துப்பட்டறையில் ஊஞ்சலில் அமர்ந்து நான் முத்துசாமி சாருடன் பேசிக்கொண்டிருக்கும் போது மரங்களை அவருடைய கண்கள் துலாவிய பின் வானத்தை வெறித்து பார்த்து விட்டு அமைந்த குரலில் சொல்வார். “அண்டங்காக்காய தேடி போகணும்” ’அண்டங்காக்காய்கள் ஏன் காணப்படவில்லை’ என்பார். இப்படி ஒரு தடவை இரு தடவையல்ல. பல முறை சொல்லியிருக்கிறார்.

அவை என் வீட்டில் இப்போது தென்படுகின்றன. நான் உரத்த குரலில் இன்று காலை சொன்னேன்.

“அடப்பாவிகளா, முத்துசாமி உங்களை தேடிக்கொண்டிருந்தார் தெரியுமா?”

அந்த அண்டங்காக்காய்கள் என்னை கவலையோடு பார்த்தன. அதற்கு அர்த்தம் ”இனி என்ன செய்ய?    ஒரு நாள் முத்துசாமி வீட்டு முன் போய் நின்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தோம். எப்போதும், எல்லோரும் இங்கேயே இருப்போம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு தவறு.”

நான் ”அட ஆண்டாளே, தேடுறார்னு தெரிஞ்சே தான் கண்ணாமூச்சி விளையாடுனீங்களா?”

Listen to the tree, animals, birds and the reptiles. They talk.

( என் வீட்டு பாதாம் மர அண்டங்காக்காய்கள் இரண்டை மூத்த மகன் கீர்த்தி
படம் பிடித்தான்.)

"என் நினைவில் பதிந்த முதல் மரம் பாதாம் மரம். நான் படித்த எலிமெண்டரி ஸ்கூலில் ஒரு வாதா மரம் இருந்தது. பாதாம் பருப்பு கிடைக்குமோன்னு உடைச்சி,உடைச்சி பார்ப்போம். பெரிசா ஒன்னும் இருக்காது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மரம்” இப்படி ந.முத்துசாமி என்னிடம் சொல்லியிருக்கிறார்.



Jul 6, 2018

தூங்கும்போது வரும் கனவு

ஆழ்ந்த தூக்கத்தில் கனவு வருகிறதா? தூக்கம் முடிகிற நேரத்தில் கனவு வருகிறதா? இரவின் பின் பாதியில் கனவா?
Dreams while sleeping
காரணங்கள் என்பதற்கு தேவை எந்தக் கனவிலும் கிடையாது. யதார்த்தத்தை முற்றிலும் மறுதலிக்கும் கனவு.
சென்ற வாரம் புது ஊரில் சரியான தூக்கம் இல்லாத நிலையில் கூட ஒரு சிறு கனவு.
கனவில் வந்த இரவின் இருட்டில் இரண்டு குட்டி நாய்கள். ரொம்ப குட்டியான நாய்கள். ஒரு குட்டி கழுதையைப் பார்த்து குரைக்கின்றன. குட்டி கழுதை கொஞ்ச நேரம் நாய்க்குட்டிகளை பார்த்து விட்டு பதிலுக்கு மழலையாக கத்துகிறது. நாய்க்குட்டிகள் மிரண்டு குரைப்பதை நிறுத்துகின்றன.
இரண்டு நாட்களுக்கு பின் ஒரு கனவு. ஒரு நிகழ்ச்சி. அதில் பலர் கூடியுள்ள நிலையில் ஒரு பெண் என்னிடம் ஏதோ சொல்ல நெருக்கமாக வருகிறாள். அவள் ஏதோ சொல்லத்தான் செய்கிறாள். அப்போது அவள் என் மீது முழுவதுமாக சாய்ந்து விட்டதை கவனிக்கிறேன். அவள் சொல்வது என்ன என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. அவள் முதுகை என் நெஞ்சில் சார்த்தி வைத்துக்கொண்டு தொடர்ந்து நீளமாக பேசுகிறாள்.
Siesta. Daytime napping. நேற்று இங்கே வீட்டில் பகலில் சற்று அயர்ந்த போது ஒரு தெளிவான கனவு.

தர்மு சிவராம் வருகிறார். சிவப்பு கலரில் ஒரு branded readymade shirt போட்டிருக்கிறார். கனவில் வந்த சிவராம் ஒல்லியாக இல்லை. சற்றே பூரித்த உடம்பு. ரொம்ப ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.
’போட்டோவில் பிரமிள் ரொம்ப அட்டகாசமான அழகுடன் இருப்பார். அவருக்கு போட்டோஜீனிக் ஃபேஸ்’ என்று சுந்தர ராமசாமி சொன்னது என் கனவிலேயே நினைவிற்கு வருகிறது.

நான் ஒரு மொட்டை மாடியில் நிற்கிறேன். பிரமிள் பக்கத்து வீட்டு மொட்டை மாடி. என்னைப் பார்த்து “துரை” என்று கூப்பிட்டு கையசைக்கிறார். துரை என்ற என் பெயர் பிரமிளுக்கு எப்படி தெரிந்தது!
உடனே அவர் அந்த மொட்டை மாடியிலிருந்து நான் இருக்கும் மொட்டை மாடிக்கு தாவுகிறார். இரண்டு கட்டடங்களும் பல மாடி கொண்டவை. நான் இருக்கும் கட்டடடத்தில் ஜன்னலோ எதிலோ அவருடைய பாதங்கள் நின்ற அடுத்த சில நொடியில் நழுவி கீழே விழுகிறார்.
ஐயோ…
அவருடைய ‘தன்னழிவு’ கவிதை முழுவதுமாக கனவில் என் நினைவில் தெளிவாக வருகிறது.
“கண்ணில் கருக்கொண்ட
மணல்
ஏதோ ஒரு ஒளியின்
ஊற்றாகிறது.
பாலை
புனலாகிறது.
இக்கணம்
இதயத்துள் வேரூன்றி
நிலைத்தது நனவு.
முளைத்தெழுந்து
பழுத்தது
சாவு.”
என் பதற்றத்தில் நான் மிரட்சி நீங்காதிருக்கிறேன். சில நிமிடங்களில் படியில் யாரோ வரும் சத்தம்.
மொட்டை மாடிக்கு வந்து விட்ட அந்த மனிதர் பிரமிளே தான்.
ஆகாய நீல வண்ணத்தில் நல்ல முழுக்கை நீள சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு பிரமிள் என்னைப்பார்த்து சிரிக்கிறார். ஸ்கை ப்ளு ரெடி மேட் சர்ட். நல்ல செழிப்பான பூசின உடலும் பூரித்த முகமுமாக பிரமிள்.
கனவுகள் ஆன்மாவின் மொழி. Dreams and the relevance they play in the journey of life. பௌலோ கொய்லோவின் Alchemist நாவல் நிழலாடுகிறது.
செத்தபின் சாவு என்னும் தூக்கத்தில் என்ன கனவு வரும் என்பார் ஷேக்ஸ்பியர்.
In that Pramil’s sleep of death what dreams may come!

….............

Sep 25, 2012

பசுத்தோல் போர்த்திய புலி

Nov 3, 2008


நம்பியார் சுவாமி சினிமாவில் வில்லன். நிஜ வாழ்க்கையில் புனிதர் . இப்படி பலரும் நினைத்துகொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் எம்ஜியார் படங்களில் வில்லன் ஆகியதால் பெண்களின் கடுமையான வசவுக்கும் சாபத்துக்கும் ஆளானவர். பின்னர் பொது மக்கள் மத்தியில் ஐயப்ப பக்தர் என்பதனாலும் பலருக்கும் சினிமாவுலகில் மாலை போட்டவர் என்பதால் ஒரு Saintly Image இவருக்கு உண்டாகி, மேலும் சினிமாவை புரிந்து கொண்ட பெருமையும் சினிமா வில்லன் நிஜ வாழ்க்கையில் உத்தமன் என்பதை உறுதி செய்ய கிடைத்த Role Model ஆக்கி நம்பியாரை தூக்கி பிடித்தார்கள்.


நம்பியாரை பற்றிய நிஜம் ஒன்று. அவர் பேச்சில் ஆபாசம்,விரசம் இருக்கும்.Vulgarity! ஏதோ ஒழுக்க கண்ணோட்டம் கொண்டு நம்பியாரை அளந்து பார்ப்பதாக எண்ணிவிட வேண்டாம். ஆனால் ஐயப்ப விரதம் என்பது சுத்தத்தை அடிபடையாக ஏற்று கொண்டு உணவு, லாகிரி, செக்ஸ் எல்லாவற்றையும் புறந்தள்ளி கடுமையான ஒழுக்க கோட்பாடுகளின் அடிப்படையில் நம்பிக்கை வைத்து மேற்கொள்ளப்படுவது என்பதை நினைவிற்கொள்க. அதோடு இந்த பரிசுத்த நம்பிக்கையின் குருசாமியாகி பலருக்கு மாலை போட்டு தனக்கு ஒரு புனித பிம்பத்தையும் ஏற்படுத்திக்கொண்டு ஏற்றுகொண்ட அனுஷ்டானங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டாமா !

நான் வேலை பார்த்த படத்தில் மனோரமா நடித்தார். கதாநாயகனின் தாயாக. பிரசாத் தோட்டத்தில் அந்த படத்தின் சண்டைகாட்சி எடுக்கப்பட்ட போது மனோரமா வேறொரு ஷூட்டிங்கில் அங்கே அருகில் இருந்தார். அவருடைய ஹேர் ட்ரெஸ்ஸெர் கலா என்பவர் ஆச்சி ஷூட்டிங்கில் இருப்பதை தெரியப்படுத்தி வந்து பாருங்கள் என்றார்.

மனோரமா கோபிசெட்டிபாளையத்தில் இரவு பத்து மணிக்கு நான் சின்ன வாக் போய்க்கொண்டிருந்த போது என்னை அடையாளம் கண்டு தன் காரை நிறுத்தி ' ஏம்பா , காரில் ஏறிக்கொள்ளுங்கள்.ஏன் நடக்க வேண்டும் ' என்று பரிவோடு ஒரு முறை சொன்னார்.
நான் ' இல்லை அம்மா நீங்க போங்க .நான் தூங்கு முன் சின்ன வாக் போகிறேன் .' என்று சொன்னேன்.எல்லோரும் அக்கா என்று தான் அவரை அழைப்பார்கள். நான் அம்மா என்று தான் சொல்வேன்.

ஆச்சியை அந்த ஷூட்டிங்கில் நான் பார்க்க போன போது கயிற்று கட்டிலில் இவருடன் நம்பியார் சாமி மறு பக்கமாக திரும்பி அமர்ந்திருந்தார்.ஆர்க் புரூட் எனும் சக்திவாய்ந்த விளக்கு என் மீது அப்போது தற்செயலாக திருப்பப்பட்டது.

மறு நாள் டப்பிங் தியேட்டர் வேலையின் போது மனோரமா அங்கு வந்தவர் முந்தைய நாள் ஷூட்டிங்கில் நம்பியாரை திட்டியதை சொன்னார் .
' இனிமே இப்படி அசிங்கமா ஆபாசமா பேசுனா அப்புறம் பார்த்துக்குங்க. ஏன் கிட்ட பேசவே வேண்டாம் '

அவருடைய உதவியாளரை கூப்பிட்டு ' என்னப்பா இவரு இப்படி எப்பவுமே அசிங்கமா பேசுறாரே ' ன்னு சொன்னேன். அதுக்கு அந்த ஆள் ' ஐயோ அதை ஏன் கேக்கறீங்க. பூஜையில இவரு ஒக்காந்திருக்கும் போது மகளும் மருமகனும் வந்தாங்க. இவரு ' ரூம்லே போய் வச்சுக்கங்க. இது பூஜை பண்ற இடம். உங்க பூஜையை ஒங்க பெட் ரூம் போய் வச்சுக்கங்க ' ன்னு சொன்னாரு. மகளிடமே அப்படி தான் பேசுறாரு ' ன்னு சொல்றான்.பார்த்துக்கங்க .' என்று சொன்ன மனோரமா உரத்த குரலில் நம்பியார் பற்றி " பசுத்தோல் போர்த்திய புலி " என்றார்.

நம்பியார் விரசமாய் பேசுபவர் என்பது திரைப்பட துறையில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று தான்.
மனோரமா யாரைப்பற்றியும் தைரியமாக வெளிப்படையாக கம்மன்ட் அடிப்பார். நான் கூட ஆச்சரியப்படுவேன். 'இந்த மாதிரி லூஸ் டாக் செய்பவர் எப்படி திரையுலகில் நிலைத்து நிற்க முடிகிறது '
...


சித்தர்கள் மத அனுஸ்டானம், பூஜை புனஸ்காரம், சாஸ்த்திர சம்பிரதாயங்களை,சமுக கட்டுப்பாடுகளை உதறி வாழ்ந்தவர்கள்.

கெட்ட வார்த்தை,கோபம் நிரம்பிய சாமியார் இலங்கையில் இருந்தார்.யோகர் என்று பெயர்.இவர் பற்றி பிரமிள் சொல்வார்.

யாராவதுயோகர் சுவாமியிடம் தன் கஷ்டத்தை முன் வைத்தால் அவர் பதில் ' ஒரு பொல்லாப்பும் இல்லே. எப்போவோ முடிஞ்ச காரியம்டா புண்டை மகனே ' என்பார்.
பிரமிள் சொல்வார். ' ஆனால் அவர் அருகில் நாம் இருக்கும்போது அருவி சாரல் அருகில் இருப்பது போன்றுஜிலு ஜிலுன்னு இருக்கும்! ரொம்ப விஷேசமான ஆத்மீக அனுபவம்!'

Sep 10, 2012

பிரமிள்


மைலாப்பூர் கற்பகம் லாட்ஜ். மாடியில் ஒரு டீலக்ஸ் ஃபேமிலி ரூம்.நான்,என் மனைவி,மகன் கீர்த்தி மூவரும் இருக்கிறோம் சின்னவன் அஷ்வத் அப்போது பிறந்திருக்கவில்லை. வருடம் 1989.மார்ச் மாதம் 27ம்தேதி.
காலிங்பெல் சத்தம்.கதவு தட்டப்படுகிறது. கதவைத்திறக்கிறேன். பிரமிள் நிற்கிறார்.கூடவே கைலாஷ் சிவன் பிரமிளின் அடியாராய். பின்னாலேயே ஜெயந்தன்.’வாங்க வாங்க’ என வரவேற்கிறேன்.

பிரமிளையும் ஜெயந்தனையும் தனித்தனியாக சந்திப்பது தான் என் திட்டம்.

உள்ளே வந்த ஜெயந்தனையும் பிரமிளையும் உட்காரச்சொல்கிறேன். இருவரும் உட்கார்வதற்கு முன் கைலாஷ் சிவன் சந்தோஷமாக ஒரு சேரில் உட்கார்கிறான்.  என்றாலும் பிரமிள் இருப்பதால் ரொம்ப பவ்யம்,ரொம்ப,ரொம்ப அடக்கம்.எனக்கு பிரமிளும் ஜெயந்தனும் ஒன்றாக வந்திருக்க முடியுமா? என்ற குழப்பம். குழப்பம் உடனே முடிவுக்கு வந்தது. ”சார் யார்?” பிரமிளைப் பற்றி ஜெயந்தன் கேட்டார். ஓ! அப்படியானால் இருவரும் ஒரே நேரத்தில் கதவைத்திறந்தவுடன் நின்று கொண்டிருந்தது மிக தற்செயல் தான்.
நான் ஜெயந்தனிடம் பிரமிளை அறிமுகப் படுத்தினேன். “ இவர் தர்மு சிவராம்!”

 ”அடடே. ராஜநாயஹம். பிரமிளா? நான் அந்த காலத்தில் மதுரை காலேஜ் ஹவுஸில் தங்கியிருந்த வெங்கட்சாமிநாதனையும் இவரையும் சந்தித்திருக்கிறேன். எவ்வளவு காலம் ஆகிவிட்டது!” என்கிறார் ஜெயந்தன்.

நான் பிரமிளிடம் “இவர் எழுத்தாளர் ஜெயந்தன்!” என்று சொல்கிறேன். பிரமிள் எரிச்சலாகி,சலிப்புடன் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டார்.ஜெயந்தனை சந்திப்பதை பிரமிள் விரும்பவில்லை.கைலாஷ் சிவன் பிரமிளின் மனமறிந்து ஜெயந்தனை மேலும் கீழும் பார்த்தான். உடனே எனக்கு ஒரு பதற்றம்.ஜெயந்தனுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்தும் வேதனை.
நான் சூழ்நிலையின் இறுக்கத்தை குறைக்க கேமராவை எடுத்தேன்.

பிரமிளை ஃபோகஸ் செய்தேன். பிரமிள் “ என்னை போட்டோ எடுக்கக்கூடாது.” என்று ஆவேசமாக விரல் நீட்டி எச்சரித்தார். ஜெயந்தனை ஃபோகஸ் செய்தேன். அவர் அவமானத்தை மறைத்துக்கொண்டு சந்தோஷமாக உட்கார்ந்தவாறே ‘எடுங்கள்’ என்றார்.
நான் வெயிட்டரை உள்ளே அழைத்தேன். “மூன்று பாஸந்தி, மூன்று ஸ்பெஷல் தோசை,சாப்பிட்ட பின் டிகிரி காஃபி கொண்டுவா.” என்றேன்.
ஸ்வீட்,டிபன் காபி சாப்பிட்ட பின் பிரமிள் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.
ஜெயந்தன் இயல்பாக சொன்னார்.” இலக்கிய சிந்தனை அமைப்பில்  சிறந்த சிறுகதை தேர்ந்தெடுக்க அழைக்கப் பட்டிருந்தேன். நான் பிரமிளின் ‘லங்காபுரி ராஜா’வை அந்த ஆண்டிற்கான சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அங்கே மற்றவர்கள் இந்துமதி கதையை சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்தார்கள். நான் என் எதிர்ப்பைத் தெரிவித்து வெளியேறிவிட்டேன். அதன் பின் இலக்கியசிந்தனை பக்கமே திரும்பிக்கூட பார்க்கவில்லை”
பிரமிள் இப்போது நட்புடன் சிரித்து ஜெயந்தனைப் பார்த்தார். கைலாஷ் சிவனும் குறிப்புணர்ந்து புன்னகை சிந்தினான்.
ஜெயந்தன் உட்கார்ந்திருக்க அவர் பின் பிரமிள் நின்று கொண்டு இருவரையும் புகைப்படம் எடுக்கச்சொன்னார். கைலாஷிடம் கேமராவை வாங்கி பிரமிள்,ஜெயந்தனோடு என்னை சேர்த்து புகைப்படம் எடுக்கசொல்லி உத்தரவிட்டார்.கைலாஷ் சிரமேற்கொண்டான்.


அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த கண்ணாடி முன் பிரமிள் நின்று கொண்டு, வித்தியாசமாக, புகைப்படம் எடுக்கும் நானும் கண்ணாடியில் தெரியுமாறு புகைப்படம் எடுக்கச் சொன்னார்.


அப்படி ஒரு விஷேச புகைப்படம் எடுத்தேன். என் மகன் கீர்த்தியை தூக்கிக்கொண்டு இரண்டு புகைப்படங்கள் என்னை எடுக்கச் சொன்னார்.


(பின்னால் இந்த புகைப்படத்தை ரொம்ப காலம் கோணங்கி தன் பர்ஸில் வைத்துக்கொண்டான். “இரண்டு குழந்தைகள்” என்று காட்டுவான்.)

அவருடைய லங்காபுரி ராஜா, ஆயி, சாது அப்பாத்துரையின் தியானதாரா,ஸ்ரீலங்காவின் தேசீயத்தற்கொலை போன்ற நூல்களில் கையெழுத்து போட்டார்.

தொடர்ந்து இலக்கிய உலகில் அவர் எதிர்கொண்ட துரோகங்கள் குறித்து பிரமிள் பேசினார்.மௌனி...லா.ச.ரா...சுந்தர ராமசாமி..வெங்கட்சாமிநாதன்..

“பாரதி தாசன் எப்போதும் பாரதியை ஐயர் என்றே குறிப்பிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்
‘ பாரதி ஒருத்தர் தான் ஐயர்! மத்தவன்லாம் பாப்பான்!’ ” பிரமிள் இதை சொல்லிவிட்டு ரசித்து ஹா..ஹா..என்று சிரித்தார்.

நான்கு வயது கீர்த்தி கதவை திறந்து திறந்து சாத்த ஆரம்பித்தான். கதவின் சத்தத்திற்கு பிரமிள் முகத்தில் இடி விழுந்த மாதிரி எக்ஸ்பிரஷன். பிரமிள் குழந்தையை தன்னிடம் வருமாறு அழைத்து “ இதனால் உனக்கு என்ன பிரயோஜனம்.ஏண்டா இப்படி செய்கிறாய்” என்றார். கீர்த்தி “போடா” சொன்னான்.
எனக்கு பயம். மதுரை சௌராஸ்டிரா காலேஜ் புரொபசர் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாய்ப் போயிருந்த பிரமிள் அவருடைய குழந்தை சேட்டை செய்த போது அடி வெளுத்து விட்டார்.
 இங்கே கீர்த்தியோ பிரமிள் பேசுவதைக் கேட்டு விட்டு அவரைப் பார்த்து விவரம்புரியாமல் சிரிக்கிறான். ’டேய்’ சொல்கிறான். கொஞ்ச நேரத்தில் கீர்த்தியும் பிரமிளும் ஜாலியாக விளையாட ஆரம்பித்தார்கள்.

(கீர்த்தியை சிட்டி மடியில் வைத்து கொஞ்சியிருக்கிறார்.அவர் இறப்பதற்கு முந்திய வருடம் கூட ஆசி வழங்கினார். கி.ரா. கீர்த்தியுடன் விளையாடியிருக்கிறார். அவன் சிரிப்பை விவரித்து, தனக்கு அவன் கைகொடுத்த அழகைப் பற்றி கடிதத்தில் கூட குறிப்பிட்டிருக்கிறார். இந்திரா பார்த்தசாரதி ஆசி வழங்கியிருக்கிறார்.)



என் ’டேட் ஆஃப் பர்த். விசாரித்த பிரமிள் ரொம்ப சீரியஸாக என் பெயரை R.P.RAJANAYAHEM என்று 37 எண் வரும்படி மாற்றிக்கொள்ளச்சொன்னார்.
’நான் 21 தேதியில் பிறந்தவன். 37ல் மாற்றிக்கொள்ளச்சொல்கிறீர்களே.’

‘ஜே.கிருஷ்ணமூர்த்தி( J.Krishnamurti) 12 தேதியில் பிறந்தவர். கருணாநிதி( M.Karunanidhi) 3ம் தேதி பிறந்தவர்.இருவருக்கும் 37ல் தான் பெயர். அதனால் 21ல் பிறந்த உங்களுக்கும் 37 கைகொடுக்கும். 3 வரிசையில் பிறந்தவர்களுக்கு 37 அதிர்ஷ்ட எண்’ பிரமிள் ஆணித்தரமாக  சொன்னார்.
சம்பிரதாயமாக சொல்லவில்லை.கிளம்பும் வரை R.P.Rajanayahem என்று பெயர் மாற்றம் குறித்து வலியுறுத்தியவர் கடைசியாகக் கூட அதையே சொன்னார்.

அன்று முதல் நான் அவர் சொன்ன பெயரில் தான் இருக்கிறேன். பிரமிள் யாருக்குத்தான் பெயர் மாற்றி வைக்கவில்லை. ஆனால் அவர் சொன்னபடி பெயரைஅப்படியே மாற்றிக் கொண்டவர்கள் என்னைப் போல் எத்தனை பேர்?

அவர் கிளம்பியபின் ஜெயந்தன் கிளம்புமுன் பிரமிள் பற்றிச் சொன்னார். ’ இவர்களுக்கு மூளை ஒரு பக்கம் கூர்மையாகும்போது இன்னொரு பக்கம் பழுதாகிவிடும்.”

கொஞ்ச நேரத்தில் கைலாஷ் சிவன் மீண்டும் இரைத்துக்கொண்டு வந்தான்
.” ராஜநாயஹம்,பிரமிளை பஸ் ஏற்றி அனுப்பி விட்டேன். ஒரு விஷயம்.பிரமிள் மூன்று நாளாக எதுவும் சாப்பிட இல்லாமல் பட்டினி. ”
 எனக்கு கோபம். என்னிடம் இவன் அவர் இருக்கும்போதே தனியாக ரகசியமாக சொல்லியிருக்கவேண்டும்.நான் அவர் புத்தகங்கள் அனுப்பி வைக்கச் சொல்லியாவது கணிசமாக பணம் கொடுத்திருப்பேன்.இன்னும் அவரை நன்றாக சாப்பிடச்செய்திருப்பேன்.பண உதவி நேரடியாக செய்தால்
 ‘ நான் பிச்சைக்காரனா?’ என்று கோபப்பட்டுவிடக்கூடியவர்.

அதன் பின் அவருக்கு,ஜெயந்தனுக்கு அன்று எடுத்த புகைப்படங்கள் அனுப்பி வைத்தேன். பதில் கடிதத்தில் புகைப்படம் எடுத்த நானும் அவருடன்கண்ணாடியில் தெரியும்படி உள்ள படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்க முடியும் என்று அபிப்ராயம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறார்.
பாண்டிச்சேரியில் இருக்கும்போது அவர் ஒரு முறை தனக்கு டைப் ரைட்டர் வாங்க கொஞ்சம் பணம் அனுப்ப முடியுமா? என்று கடிதம் எழுதினார். ஒரு நல்ல தொகை அனுப்பினேன்.
பொங்கல் வாழ்த்து கூட அனுப்பியிருக்கிறார்.Write on your heart that every day is the best day of the year!

புதுவை பல்கலைக் கழக துணைவேந்தர் என் எதிர் வீட்டுக்காரர். அவரிடம் பிரமிளின் நூல்களைக் கொடுத்து, பிரமிளுக்கு ஏதேனும் கௌரவமாக உதவ முடியுமா என்று மிகவும் வேண்டிக்கேட்டேன்.மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்தினேன். அவர் சொன்னார்” கட்டாயம் நான் ஏதாவது செய்கிறேன். அவரை பல்கலைக் கழகத்தில் பயன்படுத்த முடியுமா என்று நீங்கள் சொன்னதிலிருந்து யோசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.”
க.நா.சுவையும் கிராவையும் வருகை தரு பேராசிரியராக ஆக்கியவர். இந்திரா பார்த்த சாரதியை நாடகத்துறை தலைவராக்கி, பின் துனணவேந்தருக்கு அடுத்த பதவியில் அமர்த்தியவர்.பிரபஞ்சனுக்கு நாடகத்துறையில் வேலை கொடுத்தவர்.
பிரமிளுக்கு நேரம் சரியில்லை என்று சொல்வது அபத்தம். யாருடைய உதவியையும் அபத்தமாக்கிவிடும் TROUBLE MAKER என்றே அவரைப் பற்றி வேண்டியவர்கள் கூட அபிப்ராயம் கொண்டிருக்கும் போது என்ன சொல்ல?
என்னையே அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று ரொம்பப்பெரியவர்கள் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர் மீது கொண்ட வெறுப்பு என்பதை விட என் மீது உள்ள அக்கறையினால்.

Sep 9, 2012

பின்னிய மேகச்சடை

Oct 29, 2009


பின்னிய மேகச்சடை

திஜானகிராமன் மோகமுள் நாவலில் :" நிலவொளியில் வெண்மை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக் கொண்டிருந்தன. வில்லடித்த பஞ்சுப் படலம் ஒன்றின் மீது சந்திரன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது,வலையில் படாமல் ஓடுவது போல."

எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் கவிஞர்களைப் பற்றி சிலாகித்து சொன்ன வார்த்தைகள்-
" காலக்கறையானால் அரிக்கப்படாத பூமரங்கள் கவிஞர்கள். நிழலும் நறுமணமும் நல்கும் இத்தருக்கள் தான் வறண்ட நம் சமூக வாழ்வின் அரிய செல்வங்கள்."

கவியுள்ளம் பெறுவதற்கு ' உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு வேண்டும். உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு கூட வேண்டும் ' என்பார் பிரமிள். 'புட்டிகுடியையும் குட்டி அடியையும் அவுத்து அவுத்துக் காட்டிவிட்டால் கவிதை ஆகுமா?' என ஆவேசமாக கேட்டவர் அவர் .

நிலவு.அதைச்சுற்றி மேகங்கள் .இதை இரவில் பார்க்கிறார் பிரமிள்.
"நிலவை மழித்தான் தேவ நாவிதன்
சிகையாய் முகில்கள் வானில் விரிந்தன "


இது தான் உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு!



எஸ் வைத்தீஸ்வரன் : 'வானம் கட்டுப்பாடற்று பெற்றுத்திரியவிட்ட
மேகங்கள், பொல்லாவாண்டுகள். நினைத்த இடத்தில்,கவலையற்று,நின்று தலையில் பெய்துவிட்டு,மூலைக்கொன்றாய் மறையுதுகள் வெள்ளை வால்கள் !'

சுக்கிரத்தவிப்பு!

சாதாரண உண்மைகளை ஒரு சரியான தலைப்பு கொடுத்துக்கூட நல்ல கவிதையாக்கிவிட முடியும் . புரட்சி என்ற தலைப்பில் ராஜசுந்தரராஜன் எழுதிய கவிதை அப்படி ஒரு கவிதையை உருவாக்கியது . அந்த 'புரட்சி ' என்ற தலைப்பு இல்லாவிட்டால் அது கவிதையே அல்ல என்றாகி விடும் .
புரட்சி
மேகத்தில் இருந்து
மழை மட்டுமல்ல
மின்னலும் பிறக்கும் .

இது உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு !

.......

Oct 31, 2009


குழந்தையும் காலமும்

புதுமைப் பித்தன் கதையொன்றில் ஆற்று நீரில் தன் கால்களை விட்டு விளையாடும் குழந்தை ஒன்று . வானில் சூரியன் தவிப்பான் . குழந்தையின் பாததரிசனம் வேண்டி. குழந்தையின் பாதங்கள் எப்போது நீரில் இருந்து வெளிவரும் என ஏங்கும் சூரியன். அவ்வளவு சுலபமாய் கிடைத்து விடுமா குழந்தையின் பாத தரிசனம் என புதுமைப்பித்தன் கேட்பார்.வெங்கட் சுவாமிநாதன் துவங்கி பலரும் இந்த 'புதுமைப் பித்தன் பன்ச் ' பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.
காலச்சக்கரம் சுற்றியது.காலம் நகர்கிறது , காலம் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஓடியது. காலம் ஓடிவிட்டது. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற காலம் Cliché கள் நாம் வாசித்து ,கேட்டு சலித்தவை தான்.
சமீபத்தில் முகுந்த் நாகராஜனின் கவிதை பரவசம் தந்தது
"தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை
சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "

.....................



பெரியவர்கள் உலகில் உழைக்க உகுக்கப்படும் சிறுவர் சிறுமிகளின் labour பற்றி பிரச்சார சத்தமில்லாத கவிதை ஒன்று -
"தீப்பெட்டியைத் திறந்து
பார்த்தேன்
அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "
மறைந்த கந்தர்வன் கவிதை ????

சுஜாதா கூட குழந்தைத்தொழிலாளி பற்றி ஒரு கவிதை முன்னர் எழுதியிருக்கிறார் .
அதில் ஒரு வரி இன்னும் மறக்க முடியவில்லை . ஏனென்றால் வெளியூர் போக நேரும்போது அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருப்பதால் .
" ஹோட்டலில் சாப்டவுடன் இலை எடுப்பாய் "

...........................

Oct 20, 2009


கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே


புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமியும் " சிறுகதையில் கந்தசாமியிடம் கடவுள் எச்சரிக்கையுணர்வுடன் சொல்வார் :" உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம், உடன் இருந்து வாழ முடியாது "
கந்தசாமி இதற்கு கடவுள் முகத்தில் அடித்தாற்போல பதில் சொல்வார் ." உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு."

பிரபலமான தேவதேவன் கவிதை ஒன்று

"காட்சியளிப்பதே தன் கடமையென உணர்ந்தவராய்
எழுந்தார்
துயர் குழப்பமிக்க இவ்வுலகில்
தன் கடமை என்னவென்ற வெகு
யோசனைக்குப் பின் கடவுள் "


என்ன தான் எச்சரிக்கையாகவும் கௌரவ பிரக்ஞையுடனும் கடவுள் இருந்தாலும் அவரை டென்சன் ஆக்காமல் மானிட ஜன்மங்கள் இருப்பதில்லை . சமீபத்திய ஆனந்தவிகடன் ஒன்றில் 'யூத்து கூத்து' பகுதியில் ஒரு ஜோக் .
" கடவுள் எப்போ டென்சன் ஆவாரு "
" கல்யாணம் ஆகாத பொண்ணு கர்ப்பமாகி வயிறு ஊதிபோய் நிற்கும்போது அவங்க வீட்டிலே " ஐயோ கடவுளே ! இப்படி பண்ணிட்டியே !" ன்னு புலம்புறப்ப தான் "
....


ஊருக்கு சொல்லுமாம் பல்லி!கழனியில் விழுமாம் துள்ளி ! - இது சொலவடை .
பல்லி விழும் பலன் என்று சோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதி உண்டு . " பல்லி தலையில் விழுந்தால் மரணம் " - இப்படி பீதி கிளப்பும் பலன்கள் !
வாலிழந்த பல்லியைப் பார்த்து பிரமிள் எது கவிதை எனக்கேட்டு எழுதிய கவிதை .
"கவிதை -
இறக்கத்துடிக்கும் வாலா?
உயிரோடு மீண்ட உடலா ?"

சுவரில் நிற்கும் பல்லி ஏன் அசையாமல் நிற்கிறது . சுவற்றையே தான் தான் தாங்கி சுமந்துகொண்டிருப்பதாய் பல்லி நினைக்குமாம் . தான் அசைந்தால் சுவர் விழுந்து வீட்டில் உள்ள மனிதர்கள் செத்து விடக்கூடாதே என்று ஆடாமல் அசையாமல் நிற்குமாம்!செருக்கு!நினைப்புக்கார பல்லி!


சுவற்றில் உள்ள பல்லியை பாப்லோ நெருடோ தன் கவிதையில் கூறுகிறார் :
“ A Drop of Crocodile on the wall”


மாம்பழத்தைப் பிழிந்தால் துளித்துளியாக மாம்பழச்சாறு தான் வரும் . திராட்சையைப் பிழிந்தால் துளித்துளியாக திராட்சைச்சாறு கிடைக்கும். ஆனால் கவிதைக்கனி பிழிகையில் வெளிவரும் சாறு அப்படியல்ல . -பல்லி A Drop of Crocodile ஆகிப் போகிறது.
.......

Sep 8, 2009


புல்லை நகையுறுத்தி

புல்லை நகையுறுத்தி , பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி என்று குயில் பாட்டில் பாரதி சூரிய நமஸ்காரம் செய்வார் .

' புல்லை நகையுறுத்தி '
சூரியோதயம் புல்லை நகையாக்குகிறது . அல்லது புல்லுக்கு நகை தருகிறது .பாரதி புல்லை நகையாக்கினார் .
தாணு பிச்சையா என்ற தங்க நகை செய்யும் ஆசாரி ,தங்கத்தொழிலாளியின் கவிதை தொகுப்பு 'உறை மெழுகின் மஞ்சாடிப் பொன் '. அதில் ஒரு தங்கமான கவிதை -
காதில் தங்கத்தில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள வசதியில்லாத ஏழைப்பெண் . என்றாவது காதில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள முடியும் என்ற ஆசையும் நம்பிக்கையும் போகுமோ ? காதின் துளை மூடிவிடாமல் இருக்க வேப்பங்குச்சியை ஒடித்து சொருகியிருக்கிறாள் . மழை பெய்கிறது . மழைத்துளிகள் ஏழைப்பெண் காதில் வழிகிறது . காதில் உள்ள வேப்பங்குச்சியிலிருந்து சொட்டு சொட்டாக தொங்கட்டான் ஆகி .....
" ஓடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப் போலுள்ள
மழைத்துளிகளை "

விவசாய எதிர்பார்ப்பை பொய்க்க வைத்த மழை பற்றி தேர்ந்த முதிர்ந்த விவசாயி " நேத்து பெஞ்சது என்ன மழையா ? மாமியா செத்ததுக்கு மருமக அழுத மாதிரில்லே இருந்துச்சு . மழைன்னா புருஷன் செத்தா பொண்டாட்டி அழுதமாதிரி இருக்கணும் ."

எஸ்.வைத்தீஸ்வரன் கவிதை - மேகங்களின் சேட்டை பற்றி :
வானம் கட்டுப்பாடற்று
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள் ,
பொல்லா வாண்டுகள் .
நினைத்த இடத்தில் ,கவலையற்று ,
நின்று தலையில் பெய்துவிட்டு ,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்
வெள்ளை வால்கள் !"

மழை ,மேகங்கள் எனும்போது மின்னல் பளிச்சிடும் .
பிரமிளின் மின்னல் படிமங்கள் - ககனப் பறவை நீட்டும் அலகு, கடலில் வழியும் அமிர்த தாரை

'யது நாத்தின் குருபக்தி 'சிறுகதையில் தி.ஜானகி ராமன் :மின்னலின் அழகைக் காண ஒரு கணம் போதாதா ? ஒரு கணத்திற்கு மேல் தான் கிடைக்குமா ?'


மேக்பெத் நாடகத்தின் முதல் வசனம்
“When shall we three meet again?
In thunder,lightning or in rain




....



Oct 29, 2009

பின்னிய மேகச்சடை

திஜானகிராமன் மோகமுள் நாவலில் :" நிலவொளியில் வெண்மை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக் கொண்டிருந்தன. வில்லடித்த பஞ்சுப் படலம் ஒன்றின் மீது சந்திரன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது,வலையில் படாமல் ஓடுவது போல."

எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் கவிஞர்களைப் பற்றி சிலாகித்து சொன்ன வார்த்தைகள்-
" காலக்கறையானால் அரிக்கப்படாத பூமரங்கள் கவிஞர்கள். நிழலும் நறுமணமும் நல்கும் இத்தருக்கள் தான் வறண்ட நம் சமூக வாழ்வின் அரிய செல்வங்கள்."

கவியுள்ளம் பெறுவதற்கு ' உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு வேண்டும். உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு கூட வேண்டும் ' என்பார் பிரமிள். 'புட்டிகுடியையும் குட்டி அடியையும் அவுத்து அவுத்துக் காட்டிவிட்டால் கவிதை ஆகுமா?' என ஆவேசமாக கேட்டவர் அவர் .

நிலவு.அதைச்சுற்றி மேகங்கள் .இதை இரவில் பார்க்கிறார் பிரமிள்.
"நிலவை மழித்தான் தேவ நாவிதன்
சிகையாய் முகில்கள் வானில் விரிந்தன "


இது தான் உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு!



எஸ் வைத்தீஸ்வரன் : 'வானம் கட்டுப்பாடற்று பெற்றுத்திரியவிட்ட
மேகங்கள், பொல்லாவாண்டுகள். நினைத்த இடத்தில்,கவலையற்று,நின்று தலையில் பெய்துவிட்டு,மூலைக்கொன்றாய் மறையுதுகள் வெள்ளை வால்கள் !'

சுக்கிரத்தவிப்பு!

சாதாரண உண்மைகளை ஒரு சரியான தலைப்பு கொடுத்துக்கூட நல்ல கவிதையாக்கிவிட முடியும் . புரட்சி என்ற தலைப்பில் ராஜசுந்தரராஜன் எழுதிய கவிதை அப்படி ஒரு கவிதையை உருவாக்கியது . அந்த 'புரட்சி ' என்ற தலைப்பு இல்லாவிட்டால் அது கவிதையே அல்ல என்றாகி விடும் .
புரட்சி
மேகத்தில் இருந்து
மழை மட்டுமல்ல
மின்னலும் பிறக்கும் .

இது உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு !




..

Sep 8, 2009

புல்லை நகையுறுத்தி

புல்லை நகையுறுத்தி , பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி என்று குயில் பாட்டில் பாரதி சூரிய நமஸ்காரம் செய்வார் .
' புல்லை நகையுறுத்தி '
சூரியோதயம் புல்லை நகையாக்குகிறது . அல்லது புல்லுக்கு நகை தருகிறது .பாரதி புல்லை நகையாக்கினார் .
தாணு பிச்சையா என்ற தங்க நகை செய்யும் ஆசாரி ,தங்கத்தொழிலாளியின் கவிதை தொகுப்பு 'உறை மெழுகின் மஞ்சாடிப் பொன் '. அதில் ஒரு தங்கமான கவிதை -
காதில் தங்கத்தில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள வசதியில்லாத ஏழைப்பெண் . என்றாவது காதில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள முடியும் என்ற ஆசையும் நம்பிக்கையும் போகுமோ ? காதின் துளை மூடிவிடாமல் இருக்க வேப்பங்குச்சியை ஒடித்து சொருகியிருக்கிறாள் . மழை பெய்கிறது . மழைத்துளிகள் ஏழைப்பெண் காதில் வழிகிறது . காதில் உள்ள வேப்பங்குச்சியிலிருந்து சொட்டு சொட்டாக தொங்கட்டான் ஆகி .....
" ஓடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப் போலுள்ள
மழைத்துளிகளை "

விவசாய எதிர்பார்ப்பை பொய்க்க வைத்த மழை பற்றி தேர்ந்த முதிர்ந்த விவசாயி " நேத்து பெஞ்சது என்ன மழையா ? மாமியா செத்ததுக்கு மருமக அழுத மாதிரில்லே இருந்துச்சு . மழைன்னா புருஷன் செத்தா பொண்டாட்டி அழுதமாதிரி இருக்கணும் ."
எஸ்.வைத்தீஸ்வரன் கவிதை - மேகங்களின் சேட்டை பற்றி :
வானம் கட்டுப்பாடற்று
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள் ,
பொல்லா வாண்டுகள் .
நினைத்த இடத்தில் ,கவலையற்று ,
நின்று தலையில் பெய்துவிட்டு ,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்
வெள்ளை வால்கள் !"

மழை ,மேகங்கள் எனும்போது மின்னல் பளிச்சிடும் .
பிரமிளின் மின்னல் படிமங்கள் - ககனப் பறவை நீட்டும் அலகு, கடலில் வழியும் அமிர்த தாரை
'யது நாத்தின் குருபக்தி 'சிறுகதையில் தி.ஜானகி ராமன் :மின்னலின் அழகைக் காண ஒரு கணம் போதாதா ? ஒரு கணத்திற்கு மேல் தான் கிடைக்குமா ?'
மேக்பெத் நாடகத்தின் முதல் வசனம்
“When shall we three meet again?
In thunder,lightning or in rain