Share

Showing posts with label கமல் ஹாசன். Show all posts
Showing posts with label கமல் ஹாசன். Show all posts

Jan 17, 2021

Bigg Boss 4 Grand finale கூட்டுக்குடும்பி

 Bigg Boss 4  grand finale 


ஒண்டுக் குடித்தன கூட்டுக் குடும்பி

கண்டு பிடித்தது ரப்பர் வளையல்.


- எழுதியவர் கவிஞர் நீலமணி. 


கமல்ஹாசன் சொல்வது போல 

சுப்ரமணிய ராஜு அல்ல. 

தவறாக சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார். 


கமல் இப்படியே பல காலமாக நம்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு 

 நீலமணி என்று எடுத்துச் சொல்ல யாருமில்லை.

.... 

Dec 17, 2020

இவ்விருவரின் ரசிகர்கள்

 கமல் ஈகோ பார்க்காமல் ரஜினியுடன் கூட்டு சேரத்தயார்.

 ரஜினி இன்னும் respond பண்ணவில்லை. 

ஒரு வேளை இருவரும் கூட்டணி அமைத்தாலும் 

இவ்விருவரின் ரசிகர்கள் எப்படி சுமுகமாக ஏற்று இணைந்து தேர்தல் பணியாற்றுவார்களோ? 


என்னுடைய மாப்பிள்ளை ஒருவர்

 ரஜினியின் தீவிர ரசிகர். 

அவரிடம் கிண்டல் செய்ய வசதியாக 

நான் கமலின் தீவிர ரசிகர் என்கிற மாதிரி

 ஒரு முரட்டு முகமூடியை அணிந்து கொண்டு தான் சற்று மிகையான பாவனைகளுடன்

 பேசுவது வழக்கம்.


அப்போது ’மைக்கல் மதன காமராஜன்’ படம் வெளியாகியிருந்தது.


கடை வீதியில் பஸ் ஸ்டாண்ட் ஒட்டி இருந்த அவருடைய கடையில் அவரை சந்தித்த போது

 “ அத்தான், வாங்க, உள்ள வாங்க”


“ மாப்பிள்ள, எங்காளு ( கமல்) படம் ரிசல்ட் பத்தி ஏதாவது கேள்விப்பட்டீங்களா? யாராவது படம் பாத்திருப்பாங்களே” பரிட்சை  ரிசல்ட் கேட்க தவிக்கும் மாணவ சிறுவன் போல நான் கேட்டேன்.


உடனே அவர் முகம் சற்று சோகமாக மாறியது. நான் எதிர் பார்க்கிற நல்ல ரிசல்ட் கிடையாது என்று அர்த்தம்.


ஒரு பெரு மூச்சு விட்டு “ உள்ள வாங்களேன். சொல்றேன்”


நான் சற்று அவசரமாக பதற்றத்துடன் “ என்ன மாப்பிள்ள?” என்றேன்.


”சிவகாசி,ராஜபாளையம் இரண்டு ஊர்களிலும் போய் படம் பார்த்துட்டு வந்துட்டாங்கே…. உங்க ஆளு ஒர்த்தன் (ஒரு கமல் ரசிகன் என்று அர்த்தம்) இப்பத்தான் வந்து அழுதுட்டு போறான்.”

 சற்று நிறுத்தி விட்டு கடைக்கு வந்திருந்த கஸ்டமர்களை கவனிக்க ஆரம்பித்து 

காசு வாங்கிப்போட ஆரம்பித்து விட்டார்.


என்னை அவர் இடையிடையே பார்க்கும்போதெல்லாம் நான் முகத்தில் -----’சீக்கிரம் சொல்லுங்க மாப்பிள்ள’ ------- பாவனையில் தவிக்க ஆரம்பித்தேன்.


கஸ்டமர்களை அனுப்பி விட்டு திரும்பி 

“ எத்தான், நீங்களே சொல்லுங்க…

 ஒர்த்தன் பேரு மைக்கலாம். 

இன்னொருத்தன் பேரு மதனாம்.. இன்னொருத்தன் காமன்..

 நாலாவது ஆளு ராஜனாம்…

 இதெல்லாம் என்ன நல்லாவா இருக்கு? சொல்லுங்க நீங்களே சொல்லுங்க?”


பதில் இப்படி வரவேண்டும் என்பது இந்தக்கேள்வியில் உள்ள கொக்கி - “ ஆமா நல்லாவே இல்லையே ”


நான் பதிலே சொல்லாமல் நகத்தை கடித்தேன்.


அவர் எனக்கு ஆறுதல் சொல்லும் பாவனையில் பெருந்தன்மையுடன் “ எத்தான், ராமராஜன் படம், விஜயகாந்து படம் எல்லாம் ஓடும்போது 

உங்காளு படம் ஓடுனா எங்களுக்கு ( ரஜினி ரசிகர்களுக்கு) என்ன வேண்டாம்னா இருக்கு”


என் கவலையான முகத்தை அவரும் வரவழைத்துக்கொண்ட இறுக்கமான முகத்துடன் பார்த்து சொன்னார் “ உங்காளு சரியில்லை அத்தான். நான் நடு நிலையா சொல்றேன் பாத்துக்கங்க”

நடு நிலையாம். 


அவர் எதிர் பார்த்த படி நான் முகத்தை ரொம்பத்தொங்க போட்டுக்கொண்டு

 “ எனக்கு என்னன்னோ வருது மாப்பிள்ள “


ரஜினி ரசிகரான மாப்பிள்ள “ நீங்க ரஜினி ரசிகரா மாறுங்க அத்தான். என் ஃப்ரெண்ட்ஸ் எத்தன கமல் ரசிகங்க நான் சொல்லி ரஜினி ரசிகரா மாறிட்டாங்கெ தெரியுமா”

“ மாப்பிள்ள, நான் அனுமார் மாதிரி மாப்பிள்ள. மறந்தும் புறம் தொழ மாட்டேன். மாட்டவே மாட்டேன்.”


”புரியலத்தான்…”


”நான் எப்பவும் கமல் ரசிகன் தான். 

மாறவே மாட்டேன்.”


“ ச்சே, உங்களயெல்லாம் திருத்தவே முடியாதுத்தான்..”

என்னுடைய மாப்பிள்ளையாவே இருந்தாலும்         இந்த ரஜினி ரசிகரோட சேந்து நான்                   எப்படிங்க தேர்தல் பிரச்சார வேலை பாக்க முடியும்? 

.. 


..................


Oct 24, 2020

Bigg Boss 4 and C-A-M-U-S

 Bigg Boss 4

1st day. 


அனிதா சம்பத்திடம் பிக்பாஸ் முடித்து

 வீட்டுக்குப்

போன பின் 

புத்தகம் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 

ஆல்பர் காம்யுவின் ( C-A-M-U-S spelling எல்லாம் சொன்னார் ) 

'Pandemic ' படிக்க வேண்டிய நாவல் என்று குறிப்பிட்டார். 

The essence of snobbery. 

Great fodder for comedy. 


அந்த நாவல்' The Plague.' 

சரி Plague கூட Pandemic தான். 

ஆனால் நாவல் பெயரை தப்பாக சொல்லக்கூடாது.


காம்யு 'The Plague' நாவலை கமல் படிக்கவில்லை.


Hypocrite reader - my fellow - my brother!

- Charles Baudelaire 


https://m.facebook.com/story.php?story_fbid=2840755346137913&id=100006104256328


http://rprajanayahem.blogspot.com/2018/09/blog-post_5.html?m=0

Oct 5, 2020

Bigg Boss 4

 Bigg Boss 4


அனிதா சம்பத்திடம் பிக்பாஸ் முடித்து

 வீட்டுக்குப்

போன பின் 

புத்தகம் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 

ஆல்பர் காம்யுவின்( C-A-M-U-S spelling எல்லாம் சொன்னார்) 

'Pandemic ' படிக்க வேண்டிய நாவல் என்று குறிப்பிட்டார். 

அந்த நாவல்' The Plague.' 

சரி Plague கூட Pandemic தான். 

ஆனால் நாவல் பெயரை தப்பாக சொல்லக்கூடாது.

காம்யுவின்  'The Plague' நாவலை                                               கமல் படிக்கவில்லை.

Sep 25, 2020

கமல் - பாலு

 அமிதாப் பச்சன் தாதா சாகேப் விருது பெற்றிருக்கிறார் எனும் போது 

அடுத்து இந்த விருது பெற தகுதியானவர்

 கமல் ஹாசன். 


 ஒரு டி. வி. நிகழ்ச்சியில் 

எஸ். பி. பாலசுப்பிரமணியம்,

 கமலுடன் கலந்து கொண்ட போது 

'கம்பன் ஏமாந்தான்' பல்லவியை பாடினார். 

கமல் அதற்கு நேர்த்தியாக உடன்  வாயசைத்தார். 

பாலு உணர்ச்சி வசப்பட்டு  சொன்னார். 

"The one and only actor, with whom 

I always feel comfortable when I sing "


கவலைக்கிடமாக இருந்த எஸ். பி. பி. உடல் நிலை பற்றி விசாரிக்க மருத்துவ மனைக்கு சென்ற கமல்ஹாசன். 


இன்று பாலு போய் விட்டார். 


கமல் பாரத ரத்னா பெறவும் தகுதியானவர். 

ஏழு வருடம் முன்னரே எழுதியிருக்கிறேன்.


இன்று அரசியலில் இறங்கியிருக்கிற நிலையில் அவருக்கு இந்த கௌரவங்கள் 

கொடுக்க முன் வர மாட்டார்கள். 


.. 


பரோட்டா சூரி சொல்வது " மற்ற நடிகர்கள் 

எந்த மொழியிலும் நடித்து விடலாம். 

காமெடி நடிகர்கள் பிற மொழிகளில் 

நடிக்க முடியாது" 


நகைச்சுவைக்கு வட்டார வழக்கு முக்கியம். தாய்மொழி வட்டார வழக்கு பேச்சு மொழி. 


இதையும் கூட ஒரு காமெடி நடிகர் உடைத்திருக்கிறார். 


இயக்குநர் ராதா மோகன் படம் 'மொழி' படத்தில் நடித்த பிரம்மானந்தம். 

"எனக்கு ஒர்த்தர பிடிக்கலன்னா மூஞ்சயே

 நான் பாக்க மாட்டேன்.. " 


விஷேச திறமை கொண்ட பிரம்மானந்தம் 

பல தமிழ் படங்களில் கலக்கியிருக்கிறார். 

Scene Stealer. 


.. 


 ஹிண்டு பார்க்கும் போது ஆபிச்சுவரி எப்போதுமே கவனிப்பேன்.

 இன்று பார்த்துக் கொண்டிருக்கும் போது பழசானதெல்லாம் ஞாபகம் வந்தது. 


1992ல Hindu Obituary column பார்த்து இந்திரா மாமி மறைந்த விஷயம் தற்செயலாக தெரிய வந்தது. இந்திரா பார்த்தசாரதியின் மனைவி. 


1999ம் ஆண்டு ஹிண்டு ஆபிச்சுவரியில் தான் நடிகை சந்திர கலா மரணம் பற்றி பார்த்தேன்.


 அந்த இரங்கலில் இன்னொரு செய்தி தெரிந்தது. சந்திர கலா முஸ்லிமாக மதம் மாறி வாழ்ந்தவர். அந்த முஸ்லிம் பெயர் அதில் இருந்தது. 


பிராப்தம் எல் ஆர் ஈஸ்வரி பாடல் 'இது மார்கழி மாதம், முன் பனி காலம், கண்ண மயக்குது மோகம், ஏன் நடுங்குது தேகம் ' சந்திர கலா. 


'வசந்தத்தில் ஓர் நாள், மணவறை கோலம், 

வைதேகி காத்திருந்தாளாம் '

 மூன்று தெய்வங்கள் 


எம். ஜி. ஆருடன் 'தங்கத்தோணியிலே, 

தவழும்  பெண்ணழகே' 


புகுந்த வீடு ஏ. எம். ராஜா, ஜிக்கி 'செந்தாமரையே, செந்தேன் இதழே' 


சந்திர கலா வீடும், 

இயக்குநர் புட்டன்னா வீடும்

 சென்னையில் 

அடுத்தடுத்து இருந்து, 

முன்னே நான் பார்த்த நினைவு. 


..

Sep 25, 2019

மூணு பேராவில மூணு சமாச்சாரம்


அமிதாப் பச்சன் தாதா சாகேப் விருது பெறவிருக்கிறார்.

அடுத்த வருடம் இந்த விருது பெற தகுதியானவர் கமல் ஹாசன்.
கமல் பாரத ரத்னா பெறவும் தகுதியானவர். ஐந்து வருடம் முன்னரே எழுதியிருக்கிறேன்.

இன்று அரசியலில் இறங்கியிருக்கிற நிலையில் அவருக்கு இந்த கௌரவங்கள் கொடுக்க முன் வர மாட்டார்கள்.

..

பரோட்டா சூரி சொல்வது " மற்ற நடிகர்கள் எந்த மொழியிலும் நடித்து விடலாம். காமெடி நடிகர்கள் பிற மொழிகளில் நடிக்க முடியாது"

நகைச்சுவைக்கு வட்டார வழக்கு முக்கியம். தாய்மொழி வட்டார வழக்கு பேச்சு மொழி.

இதையும் கூட ஒரு காமெடி நடிகர் உடைத்திருக்கிறார்.

இயக்குநர் ராதா மோகன் படம் 'மொழி' படத்தில் நடித்த பிரம்மானந்தம். "எனக்கு பிடிக்கலன்னா மூஞ்சயே நான்  பாக்க மாட்டேன்.. "

விஷேச திறமை கொண்ட பிரம்மானந்தம் பல தமிழ் படங்களில் கலக்கியிருக்கிறார்.

..

 ஹிண்டு பார்க்கும் போது ஆபிச்சுவரி எப்போதுமே கவனிப்பேன். இன்று பார்த்துக் கொண்டிருக்கும் போது பழசானதெல்லாம் ஞாபகம் வந்தது.

1992ல Hindu Obituary column பார்த்து இந்திரா மாமி மறைந்த விஷயம் தற்செயலாக தெரிய வந்தது. இந்திரா பார்த்தசாரதியின் மனைவி.

1999ம் ஆண்டு ஹிண்டு ஆபிச்சுவரியில் தான் நடிகை சந்திர கலா மரணம் பற்றி பார்த்தேன். அந்த இரங்கலில் இன்னொரு செய்தி தெரிந்தது. சந்திர கலா முஸ்லிமாக மதம் மாறி வாழ்ந்தவர். அந்த முஸ்லிம் பெயர் அதில் இருந்தது.

பிராப்தம் எல் ஆர் ஈஸ்வரி பாடல் 'இது மார்கழி மாதம், முன் பனி காலம், கண்ண மயக்குது மோகம், ஏன் நடுங்குது தேகம்' சந்திர கலா.

புகுந்த வீடு ஏ. எம். ராஜா, ஜிக்கி 'செந்தாமரையே, செந்தேன் இதழே'

சந்திர கலா வீடும், இயக்குநர் புட்டன்னா வீடும் சென்னையில் அடுத்தடுத்து இருந்து, முன்னே நான் பார்த்த நினைவு.

..

Mar 8, 2019

நண்டு வளையில நானும் தான் இருக்கேன்


நிஜமாலுமே கமல் பாராளுமன்ற தேர்தலில் தனி ஆவர்த்தனம் தானா?
’நண்டு வளையில நானும் தான் இருக்கேன்னு மூக்க நொளச்சி’ அவர் தேமுதிகவுடன் கூட்டணிக்கு தயார் என்ற அர்த்தத்தில் சொன்ன வார்த்தைகள் தேர்தல் சலசலப்பில் கவனம் பெற்றதா?
சறுக்கல்.

’எல்லோரையும் போலத்தான் நானும்’னு தானே இதற்கு அர்த்தம். நம்பகத்தன்மையை இழக்கிறார். இவர் அரசியலை சுத்தம் செய்ய புறப்பட்டவர்!
கமல் நீட்டிய நேசக்கரத்தை தே.மு.தி.க. மதித்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. Rejection. It's a disgrace.
ரஜினி கிட்ட சப்போர்ட் கேட்பேன் என்கிறார். கட்சி சவலப்பிள்ளை போலத்தான். கமலுக்கே புரிந்து விட்டது. தாங்குவார் இல்லன்னு தவித்து தக்காளி விக்கிறார்.
சித்திரக்குள்ளன் சினேகன் கூடவே இருப்பது வேறு அபஸ்வரம் போல தோற்றம் தருகிறதே.

அரசியலுக்கு வந்து பிரசங்கம் ஆரம்பித்த போது மய்யமாக இவர் ஏதோ பேசியதற்கே முகத்தில் அடித்தார் வைகோ “ Mr.Kamal, mind your words.”
யார்,யாரையோ போய் பார்த்த கமல் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கம் ஒரு புறம் இருக்கத்தான் செய்யும்.
முன்னயே சாரு ஹாசன் ஆசீர்வாதம் கமல் கட்சி ஆரம்பிக்க நினைப்பது பற்றி இளக்காரமாக.
தமிழகத்த முன்னேற்ற முன்னெடுத்த பழைய முயற்சியெல்லாம் இங்கே எடுபட்டதில்லை.
ஆனா ஒன்னு. இந்த தேர்தல்ல நின்னு தோத்து ஓட்டுக்கணக்கு போட்டு, இவ்வளவு ஓட்டு வாங்கியிருக்கோம்னு காட்டி அடுத்த சட்ட சபை தேர்தலில் பெரிய கட்சிகளிடம் பா.ம.க. தே.மு.தி.க. ம.தி.மு.க, விடுதலைச்சிறுத்தைகள் போல சீட்டுக்கு சின்ன பேரம் பேச வசதியுண்டு.
மற்றொரு உதிரிக்கட்சி மக்கள் நீதி மய்யம்? இல்ல.இல்ல. மற்றுமொரு கார்ப்பரேட் நிறுவனம்.


Jun 17, 2018

பாட்டுல டயலாக்


நல்ல போதையில் ஒருவர். பொது இடம். ஒரு பாடல் கேட்கும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
’ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
ஆடிப்பாடுங்கள் இன்றாவது’
பாடலை போதைக்காரர் காது கொடுத்து நன்கு கவனித்து கேட்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.
இந்த மாதிரி ஆட்கள் எப்படியும் எப்போதும் ஏதேனும் ஒரு வகையில் react செய்வார்கள். நான் நின்று அவர் கவனிக்காத வகையில் அவரை கவனிக்க ஆரம்பித்தேன்.
பாடலின் ஒவ்வொரு சரண முடிவில் எஸ்.பி.பி தத்துவமாக டயலாக் சொல்கிறார். ரொம்ப நெனப்போடு அந்த டயலாக்குகள்.
’நாம் பிறந்த மண்’ படத்தில் கமல் கூட ரொம்ப ஓவர் நெனப்போடு தான் பாடலின் டயலாக்குகளுக்கு நடித்திருப்பார் என்பது நினைவுக்கு வந்தது.
’கட்டிடம் ஜொலிக்கிறது..அஸ்திவாரம் அழுகிறது.’
’இன்பங்கள் தூங்குவதில்லை.. துன்பங்களும் அப்படித்தான்’
அப்படி இரு சரண முடிவில் டயலாக் வரும்போதும் குடிகாரர் முகம் சுளித்து ‘ச்சே’ என்பதாக தலையை உதறினார்.
மூன்றாவது சரணம் முடியும் போது டயலாக்
’உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்’
உடனே போதைக்காரர் ஒரு கூப்பாடு போட்டார்
“உழுதவர்கள் ஒழ்க்கிறார்கள். ஒங்கள குனிய வச்சு தள்ளுவார்கள்.
அறுத்தவர்கள் புழுத்துவார்கள். பாடச்சொன்னா ஒழுங்கா பாட்ட பாடுங்கடா.. ஏண்டா தேவையில்லாம பேசிறீங்க. பெரிய தத்துவப்புழுத்திங்க..”
Children, fools and drunkards have a beautiful vision.
………………….
மதுரையில் ஒரு சினிமா பாடல் கச்சேரி. பாடகர் ”தேவனே, என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று பாட ஆரம்பித்தார்.
தோரணையெல்லாம் சிவாஜி பாணியில். ஏதோ அந்தப்பாடலை அந்த மேடைப்பாடகரே எழுதி இசையமைத்து பாடுவதாக ஒரு பெருமிதமான அங்க சேஷ்டைகள்.
“உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன” என்று இரண்டு விரல் நீட்டி கையை ஆட்டிக்காட்டி டயலாக் சொன்னார்.
ஏற்கனவே ஏதாவது உடைசல் கொடுக்கும் முடிவில் முன்னால் நின்று கொண்டிருந்த குருவி மண்டையன் உடனே ஒரு கூப்பாடு போட்டான் “ அவை இரண்டும் கருத்தக்கண்ணு கசாப்புக்கடையில் அறுக்கப்பட்டு விட்டன”
.................................

கஜல், சூஃபி பாடல்களில் இடையிடையே பேசுவதை கேட்பதற்கு எவ்வளவு இதமாக, பாந்தமாக இருக்கிறது. பாடல்களுக்கு இடையே பேசுவதற்கு ஒரு நேர்த்தியான இயல்பு தன்மை இருக்கிறது.
............

Oct 7, 2017

பப்பள பள பள கோஷ நர்த்தனம்


இப்போது ரஜினியும், கமலும் அரசியல் ஆர்வம் காட்டுவது ஏன்? ஜெயலலிதா இருக்கும்போது இவர்கள் ஏன் விரலைக்கூட ஆட்டவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதிக்கெதிராக அரசியல் விஜயகாந்த் தான் செய்தார், நாக்கை துருத்தி பல்லை கடித்தார் என்று சொல்வது பற்றி.. Output என்ன? டெப்பாசிட் இழந்தது தான் மிச்சம்.
எம்.ஜி.ஆர், கருணாநிதிக்கு எதிராக டி.ராஜேந்தர் அரசியல் செய்திருக்கிறார். Output என்ன?
விஜயகாந்த் சினிமாவில் மார்க்கெட் இழந்த பின் தான் அரசியலுக்கு தாவினார். அப்போது கமல், ரஜினி இருவர் தொழிலும் உச்சத்தில் பிரமாதமாய் இருந்தது. இது ஒரு எளிய உண்மை.
இப்போதும் இருவரும் மார்க்கெட்டில் தான் இருக்கிறார்கள்.
விஜயகாந்தை விட அந்தஸ்தில் கமலும் ரஜினியும் நூறு மடங்கு மேல். யோக்யதாம்சம் என்றால் கமல் தான் உச்சம்.

வீட்டில யார் நல்ல பிள்ளை என்ற கேள்விக்கு பதில்: ”கூரையில கொள்ளிக்கட்டைய வச்சி விளையாடுறானே!அவன் தான் நல்லவன்!”

இன்று கமல் இவ்வளவு நாள் அரசியல் அக்கறை இல்லாமல் இருந்தது பற்றி சற்று வருத்தமும் தெரிவிக்கிறார்.

விஜயகாந்த் ஒரு டெம்பஸ்ட் ஸ்டீபனோ என்று நான் 2010லேயே சொன்னேன். அது தான் இன்று நடந்திருக்கிறது.
"What a thrice-double ass was I to take this drunkard for a god,
and worship this dull fool.” என சலித்து விட்டு கட்சியிலிருந்த ஒவ்வொருவரும் வெளியேறி விஜயகாந்த் கட்சி காலி கூடாரமாகிவிட்டது. இப்பவும் அவர் புலம்புகிறார். ‘ங்கொப்பன் மகனே, நான் சிங்கம்டா’
ரஜினி பிரகடனம் -’யுத்தத்துக்கு தயாராகுங்கள்’
புலிக்கு பயந்தவர்கள் என் மேல் படுத்துக்கொள்ளுங்கள்.
தயக்கம் இன்னும் வெளிப்படையாக தெரிகிறது.
ரஜினி அரசியலுக்கு அவர் உடல் நிலையே முதல் எதிரி.
இன்றைய ரஜினி வைக்கோல் கன்றுகுட்டி.
ரஜினிக்கு உடல் ஆரோக்கியம் எதிரி என்றால் கமலுக்கு நாக்கு.
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளராம்.
சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்.
Every hero becomes a bore at last.
கமலிடம் ஒரு பாய்ச்சல் மின்னுகிறது. மின்னல் போல மறையுமா? நிலைத்து நிற்குமா?
ரஜினி அரசியலில் on your marks சொல்லும்போதே, முதல் அடி எடுத்து வைத்த நிலையில், கமல் தீவிர ட்விட்டர் யுத்தம், மீடியா பேட்டிகளில் “முதல்வர் ஆக தயார்” பிரகடனத்தில் ரஜினியை கவிழ்த்து விளையாடுகிறார்.
தமிழருவி மணியனின் ரஜினிகாந்த கோஷம் மங்கிடுச்சே.
ரஜினிக்கு உள்ள சினிமா கமர்சியல் வேல்யூ, ரசிக பட்டாள செல்வாக்கு கமலுக்கு கிடையாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ரஜினி தும்பிக்கய ஊனும் முன்னே கமல் ஊனி சங்கு சக்கரமா சுத்துறார். வால மரத்தில தொங்கப்போட்டு ஊஞ்சலாடுறார். விகடனில் பல பக்கத்துக்கு புயல கிளப்புறார்.

டேய்! டி.விக்காரங்களா! Breaking News போட்டுக்கிட்டே இருங்கடா! இப்படி ஒரு Addiction வந்திடுச்சே! பட படன்னு என்னன்னோ வருதே.. விரல்லாம் நடுங்குதே.....Breaking News புதுசா புதுசா வேணுண்டா..ஐயோ  couch potato ஆக்கிட்டீங்களேடா மக்கள...
கமல் கிட்ட ஒரு Consistancy உக்கிரமா இருக்கு.
ரஜினி “ அரசியல் வெற்றிக்கு சினிமா புகழ் மட்டும் போதாது”
சிவாஜி கணேசன் மண்ணை கவ்விய விஷயத்தை கமலுக்கு எச்சரிக்கையாக.
’நான் சொல்றது என்னன்னா’ன்னு சாருஹாசன் குழப்புவது இப்படி - ’ரஜினியும் அரசியலுக்கு வரமாட்டார். என் தம்பியும் வர மாட்டார்,வந்தாலும் முதல்வராக முடியாது’

விஜயகாந்த் அபிப்ராயம் : “ கமலும் ரஜினியும் சம்பாதிச்ச பணத்தை அரசியல்ல செலவு பண்ண விரும்ப மாட்டாங்க”

ஓ! Spend  பண்ணி  Loss பண்ண மாட்டாங்களாமா?

ஸ்டாலின், எடப்பாடி, ஓ.பி.எஸ், ( பன்னீருக்கு கூட செல்வாக்கு இருப்பதாக பத்திரிக்கைகள் கணிப்பு வெளியிட்டு கொண்டிருந்தன) சசிகலா, தினகரன் இன்ன பிற தமிழக அரசியல் தலைவர்களை விட கமல் தகுதி, யோக்கியதை குறைந்தவரல்ல.
முதல்வராக தயாராகும் கமல். ஓ.பி.எஸ், எடப்பாடியெல்லாம் உட்கார்ந்த சீட்டில கமல் உட்காரக்கூடாதா? கமலுக்கென்ன, தங்காத்து!
பரோலில் வெளி வந்த சின்னம்மா சசிகலாவுக்கு என்ன ஒரு குதூகல வரவேற்பு.
எடப்பாடியயும் கும்பிடுறாங்கெ.. தினகரனயும் சசிகலாவயும் தூக்குறாங்கெ.. தீபா பின்னாலயும் அதிமுக தொண்டர்கள் பிரகாசம் காட்டுறாங்கெ… கட்சி எத்தன பிரிவா உடஞ்சாலும் கூட்டம் காட்டுறாங்கெ…. பப்பள,பள.பளபள ஜிகினா அரசியல்.
தமிழிசை, ஹெச்.ராஜா, திருநா, திருமா, சீமா..,  கிச்சாமி... ஜெ.தீபா...

நல்ல பல அரசியல் விதூஷகர்கள் அவ்வப்போது தங்கள் விஷேச விசித்திர வித்தைகள் மூலம் தமிழர்களை மகிழ்விக்கிறார்கள். 
எதெதெற்கோ உன்னத அர்த்தம், புளகாங்கிதம்.
அற்பம், சாதாரணம்,மலிவானது எல்லாவற்றிற்கும் கொடி கட்டுகிற செம்மறி ஆடுகள். கோஷங்களின் நர்த்தனம்.

இப்படி புல்லரிப்பு,செடியரிப்பு, மரமரிப்பு இல்லாத ஒருவர் தில்லையம்பல நடன நடராஜனை பார்த்த பார்வை
’கொசு கடித்ததால் நடராஜர் காலை தூக்கியிருப்பார்.’
- க.நா.சுப்ரமணியம்

..............................................................................





Jul 31, 2014

Reel names and Real names


ராஜேஷ் கன்னாவின் இயற்பெயர் ஜட்டின் கன்னா. தர்மேந்திராவின் பெயர் தரம் சிங் டியோல். சஞ்சீவ் குமார் பெயர் ஹரிபாய் ஜரிவாலா.
அண்ணன் ராஜ் கபூர்  மட்டுமல்ல,  தம்பிகள் ஷம்மி கபூர், சசி கபூர் கூட ராஜ் கபூர் தான்.
 ஷம்மி கபூர் - ஷாம்ஷர் ராஜ் கபூர்
சசி கபூர் - பல்பீர் ராஜ் கபூர்
இவுங்க அப்பா ப்ருத்வி ராஜ் கபூர்.

அசோக் குமார் - குமுத் கங்குலி
 தம்பி கிஷோர் குமார்  பெயர் அபாஸ் குமார் கங்குலி.

அமிதாப் பச்சன் - அமித் ஸ்ரீவத்சவா?

ரஜினிகாந்த் - சிவாஜி ராவ் கெயிக்வாட்

கமல் ஹாசன் தான் இயற்பெயரோடு இருப்பவர். கமல் ஹாசன் மட்டும் வீட்டில் அப்பா சீனிவாசன் வைத்த பெயரோடு இருப்பவர். தன் பெயரில் ஒரு புள்ளி வைத்து, கமல ஹாசன் என்ற பெயரை கமல் ஹாசன் என்று மாற்றிக்கொண்டார் என்று அபத்தமாக கண்டு பிடித்துச் சொல்லக் கூட ஆட்கள் உண்டு. அது பெரிய கண்டுபிடிப்பு என்று பெருமைப்படுவது மிகப்பெரிய அபத்தம்.
 

 ஆனால் விதியை என்னவென்று சொல்ல?
Fun Facts  India என்ற நூல் பிரபலமான Rupa Publisher வெளியீடு. டெர்ரி ஒ' ப்ரையன் ஆசிரியர். 
இதில் கமல் ஹாசனின் இயற் பெயர் 'ஆள்வார் பேட்டை ஆண்டவர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெர்ரி ஒ' ப்ரையன் கோஷம் 'Read, Record, Recall '. கமல் ஹாசன் இயற்பெயர் ஆள்வார் பேட்டை ஆண்டவர் என்று எவ்வளவு பேர் read பண்ணி record பண்ணி recall பண்ண வேண்டியிருக்கும்.

திராவிட இயக்கத்தலைவர்கள் பலரும் 1940களில் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டவர்கள்.
ஆச்சரியமான விஷயம்.
மு. கருணாநிதி( தட்சிணாமூர்த்தி) ஏன் அழகன், செழியன்,மாறன் என்று மாற்றிக்கொள்ளவில்லை!. அவர் இயல்புக்கு இது ரொம்ப அதிசயம்!

.........................................................................



Apr 5, 2013

அந்த நாள் குழந்தை நட்சத்திரங்கள்



குழந்தை நட்சத்திரங்களில் துறுதுறுப்பு, நல்ல எக்ஸ்ப்ரஸன், ரசிகர்களை ஈர்த்த நடிப்பு என்று கலக்கியவர் டெய்சி ராணி. ’யார் பையன்’(1957)படத்தில் டெய்சி ராி சிறு பையனாக டைட்டில் ரோல்! இந்தி குழந்தை நட்சத்திரம்.

களத்தூர் கண்ணம்மா(1960) படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல் ஹாசன் பார்த்தால் பசி தீரும்(1962) படத்தில் இரட்டை வேடம்! பாதகாணிக்கை (1962), வானம்பாடி (1963), ஆனந்த ஜோதி (1963) படங்களில் நடித்த பின் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. ஏனோ வாய்ப்பு தான் இல்லையோ அல்லது வேறு காரணமோ. டி.கே.எஸ் நாடகக்குழுவில் பயிற்சி.



களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலுடன் நடித்த தசரதன் ’நானும் ஒரு பெண்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகனாக நடித்திருப்பார். மேஜர் சந்திரகாந்த் படத்தில் நாகேஷுடன் ‘கல்யாண சாப்பாடு போடவா! தம்பி கூடவா!’ பாடலில் நடித்தவர். நினைவில் நின்றவள், வா ராஜா வா என்று நினைவில் நிற்கும்படி நடித்தவர் தான் தசரதன்.

’என்னோடு களத்தூர் கண்ணம்மாவில் நடித்த தசரதன் இன்று நான் காரில் போகும்போது ரோட்டில் நடந்து போகிறார்.’ என்று பல வருடங்களுக்கு முன் கமல் ஹாசன் வருத்தப்பட்டார்.


 காதர் பாசமலரில் துவங்கி, மதராஸ் டூ பாண்டிச்சேரியில் பக்கோடா காதர் ஆக பிரபலமானவர்!



தசரதனும், பக்கோடா காதரும் கணக்கே இல்லாமல் பல படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக தலை காட்டினார்கள். இருவருமே இறந்து விட்டார்கள்.
 

கமல் ஹாசனின் குழந்தை நட்சத்திர வாழ்வு முடிவுக்கு வந்த பின் கர்ணன்(1964) படத்தில் மாஸ்டர் ஸ்ரீதர் என்ற பையன் தலை காட்டினான். கமலுக்கும் ஸ்ரீதருக்கும் வயதில் பெரிய வித்தியாசமெல்லாம் கிடையாது. ஒருவேளை கமல் தொடர்ந்து சினிமாவில் நடித்திருந்தால் இந்த ஸ்ரீதர் செய்த ரோல்கள் தான் செய்திருக்க முடியும். கந்தன் கருணை(1967)யில் பாலமுருகனாக நடித்த மாஸ்டர் ஸ்ரீதர் பின் சத்தியம் தவறாதே(1968), தெய்வீக உறவு(1968) என்ற படங்களில் நாடக வசனம் பேசி பக்கா நாடக நடிக சிறுவனாக வளர்ந்து நம்ம குழந்தைகள் (1970) படத்தில் நாடகபாணியிலிருந்து மீள முடியாத, வளர்ந்து விட்ட, வயதுக்கு வந்து விட்ட பையனாக இருந்தான். 

சிவாஜியின் இடத்தைப் பிடிக்கலாமா? எம்.ஜி.ஆர் இடத்தைப்பிடிக்கலாமா? என்று கனவுடன் மாஸ்டர் ஸ்ரீதர் வாலிபனாக சினிமாப் பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துக்கொண்டு..!

 குட்டி பத்மினி பாசமலர்(1961)படத்தில் குழந்தை சாவித்திரியாகத் தலைகாட்டி, நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) படத்தில் பிரபலம். கமலின் குழந்தை நட்சத்திர வாழ்வு முடிவுக்கு வந்த பின் குட்டி பத்மினி பிஸி! நவராத்திரி(1964) க்கு பின் குழந்தையும் தெய்வமும் (1965). குழந்தையும் தெய்வமும் தான் குட்டி பத்மினிக்கு இன்று வரை சிறந்த படம்! குட்டி பத்மினியும் எதிர் கால கதாநாயகி நான் தான் என்ற பெருமிதத்தில் தான் இருந்தார். சிவாஜி அங்கிளுடன் ஜோடியாக நடிப்பேன்.எம்.ஜி.ஆர் அங்கிளுடன் ஜோடியாக நடிப்பேன் என்று தான் பேட்டிகளில் சொல்லிக்கொண்டே! 


நம் நாடு(1969) படத்தில் குட்டி பத்மினிக்கு தம்பியாக நடிகை ஸ்ரீதேவி. துணைவன்(1969) படத்தில் தேவர் அறிமுகப்படுத்திய குழந்தை நட்சத்திரம்.ஆதி பராசக்தி (1971) தெய்வக்குழந்தைகள் (1973) என்று ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்த முக்கிய படங்கள்.


கற்பகம்(1963) படத்தில் பேபி ஷகிலா குழந்தை நட்சத்திரம். ”அத்தை மடி மெத்தையடி! ஆடி விளையாடம்மா!”
பேபி ஷகிலாவின் பிற படங்கள்- எங்க வீட்டுப்பிள்ளை, இருவல்லவர்கள், எங்க பாப்பா.

ரோஜா ரமணி சிறுவனாக பக்த பிரகலாதா(1967)ல், இருமலர்கள்(1967), என் தம்பி(1968), சாந்தி நிலையம்(1969) போன்ற படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம். மணிரத்தினத்தின் அஞ்சலி(1990)யில் ரோஜாரமணியின் மகன் தருண் தான் ரேவதி - ரகுவரனுக்கு மகன்.

பேபி ராணி நடித்த படங்கள் 
பேசும் தெய்வம்(1967),குழந்தைக்காக(1968), கண்ணே பாப்பா (1969) ஆகியவை.

கமல் குழந்தை நட்சத்திரமாக இல்லாத தமிழ்த்திரையில் ஆக்கிரமித்த மற்றொரு நடிகர் மாஸ்டர் பிரபாகர். பிஸியான குழந்தை நட்சத்திரம். பாமா விஜயம்(1967), இருகோடுகள்(1969) என்று தொடர்ந்த மாஸ்டர் பிரபாகர் கதாநாயகனாக வா ராஜா வா(1969) வில் முக்கியத்துவம்!

 அனாதை ஆனந்தனில் டைட்டில் ரோல் செய்த(1970) மாஸ்டர் சேகர் குடியிருந்த கோவில் (1968) படத்தில் இரட்டை சின்ன எம்.ஜி.ஆர்.
அகத்தியர்(1972) மணிப்பயல்(1973) சொல்லத்தான் நினைக்கிறேன்(1973) வரை பையனாக நடித்தவர் தான் மாஸ்டர் சேகர். இன்று இவர் உயிருடன் இல்லை.

ராமு (1966) படத்தில் அறிமுகமாகி பெற்றால் தான் பிள்ளையா(1967), சபாஷ் தம்பி(1967) ஆகிய படங்களில் நடித்த மாஸ்டர் ராஜ்குமார்.

 குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் Miniature Adults” என்ற மிகையில் தான் நின்றனர். கொழந்தங்க வசனமெல்லாம் ’டயலாக்கா’ பெரிய மனுஷ தோரனையில தான்!

குழந்தை நட்சத்திரங்கள் அனைவருமே எதிர் காலத்தில் திரையில் கதாநாயகன், கதாநாயகிகளாக வலம் வருவோம் என்று நம்பியவர்கள் தான். 

கமல் ஹாசன் பதின்வயதில் டான்ஸ் அஸிஸ்டண்ட் ஆக இருந்தார்.
மாணவன் (1970) படத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் குட்டி பத்மினியுடன் ஒரு பாடல் காட்சியில் ஆடிப்பாடினார். “விசிலடிச்சான் குஞ்சிகளா! குஞ்சிகளா! வெம்பிப் பழுத்தப் பிஞ்சுகளா! பிஞ்சுகளா!” இந்தப் பாடலில் கமலுக்கு ஒரு குளோசப் ஷாட் கூட கிடையாது.


தொடர்ந்து கமல் டான்ஸ் அஸிஸ்டண்ட் ஆகத்தான் கொஞ்சகாலம். அன்னை வேளாங்கண்ணி(1971)யில் அஸிஸ்டண்ட் டைரக்டர். அதில் ஸ்ரீவித்யாவுடன் நடித்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஜெமினி கணேசன் டைரக்டர் ஸ்ரீதரிடம் கூட்டிக்கொண்டு போனார். கமலைப் பார்த்து விட்டு ஃபோட்டோஜீனிக் ஃபேஸ் கிடையாது என்று அபிப்பராயப்பட்ட டைரக்டர் ஸ்ரீதர் அஸிஸ்டண்ட் டைரக்டராகச் சேர்த்துக்கொள்ளமுடியும் என்று சொன்னாராம். 

குறத்தி மகன் (1972) படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்க வாய்ப்பே இல்லாமல், முக்கிய ரோல் செய்த செயற்கையான நாடக பாணி நடிகர் மாஸ்டர் ஸ்ரீதரைப் பார்த்து “ ராஜா வாழ்க” என்று கோஷம் போட்டுக்கொண்டு நடிக்க வேண்டியதாகிப்போனது. ஆர்.சி. சக்தியிடம் கமல் “ படத்தில என்னை கே.எஸ்.ஜி ஒரு ஓரமாக நிறுத்திட்டாருண்ணே ” என்று தேம்பினார்.

அடுத்து அரங்கேற்றம் (1973) படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. முன்னூறு ரூபாய் தான் கொடுத்தார்களாம். பாலச்சந்தரிடம் முறையிட்டபோது அவர்-“ பின்னால் நல்ல சம்பளம் கிடைக்கும். கவலைப்படாதே” 

சொல்லத்தான் நினைக்கிறேன்(1973) படத்தில் வில்லன் ரோல். அந்தப்படத்தில் ரசிகர்கள் கவனம் பெற்று விட்டார்.
 " அடே! டேய்! களத்தூர் கண்ணம்மாவில நடிச்ச பயடா!”

அவள் ஒரு தொடர்கதை (1974), அபூர்வ ராகங்கள் (1975), மன்மதலீலை (1976) அதன் பின் நடந்ததெல்லாம் சரித்திரம்.


1976 ல் நடிகை ஸ்ரீதேவி கமலுடன் மூன்று முடிச்சு படத்தில் நடித்தார். அபூர்வ ராகங்களில் சுருதி பேதமாக தலை காட்டிய ரஜினி காந்த் மூன்று முடிச்சில் தேள் கொடுக்கு போல வித்தியாசமான வில்லனாக கவனம் பெற்று விட்டார்!

குழந்தை நட்சத்திரங்களில் கமல் ஹாசனும் ஸ்ரீதேவியும் மட்டுமே அகில இந்திய அளவில் நட்சத்திரமாக பிரகாசித்து, சாதித்து விட்டார்கள்.