Share

Showing posts with label டைரக்டர் ஸ்ரீதர். Show all posts
Showing posts with label டைரக்டர் ஸ்ரீதர். Show all posts

Mar 26, 2018

சுப்புவும் வைத்தியும்


கலைக் கோவில் 1964ம் வருடம் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளி வந்த படம்.
இதற்கு முன் ‘காதலிக்க நேரமில்லை’ அதே வருடம் சக்கை போடு போட்ட படம்.
கலைக் கோவில் படுதோல்வியடைந்த படம்.
இருபத்தி ஆறு நாளில் எடுக்கப்பட்டதாம்.
பாலமுரளி கிருஷ்ணாவின் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பி.பி.எஸ் “ முள்ளில் ரோஜா” “நான் உன்னை சேர்ந்த செல்வம்” பாடல்கள்.
”தேவியர் இருவர் முருகனுக்கு”
இன்ஸ்பெக்டர் சாந்தாவுக்கு ’வரவேண்டும் ஒரு பொழுது, வராமலிருந்தால் சுவை தெரியாது’ கிளப் டான்ஸ். நாகேஷுடன் சர்வர் சுந்தரம் படத்தில் ’அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடலில் கலக்கிய இன்ஸ்பெக்டர் சாந்தா.
சிட்டிபாபுவின் வீணை.
முத்துராமன் ரோலை செய்ய வீணை பாலசந்தர் ஆசைப்பட்டிருக்கிறார். ஸ்ரீதர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் சிட்டிபாபுவின் வீணை படத்தில் இசை பொழிந்தது.
கலைக் கோவில் சுப்பு பாத்திரம் நாகேஷுக்கு.

”லோகம்னு இருந்தா துரோகம்னு இருக்கத்தான் இருக்கும். ஏன்டாப்பா முதல் முதல்ல உங்கிட்ட அவள அறிமுகப் படுத்தும் போது நளாயினின்னா சொன்னேன்”
நாகேஷின் கலைக் கோவில் சுப்பு பாத்திரம் அதன் பின்னர் நான்கு வருடங்களில் ஏ.பி.நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் செய்த வைத்தி மாஸ்டர்பீஸ் ரோலுக்கு அண்ணன்.

இரண்டு கதாபாத்திரமும் ஒன்றே எனும் அளவுக்கு ஒற்றுமை.
எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், ராஜஸ்ரீ, சந்திரகாந்தா, வி.கோபாலகிருஷ்ணன் யாரும் ஜொலிக்கவில்லை.
சுப்பையா, முத்துராமன் தூங்கு மூஞ்சித்தனமாக நடிப்பு.
நாகேஷ் மட்டும் அமர்க்களம். என்ன ஒரு Form! இந்த படம் ஓடியிருந்தால் வைத்தி பாத்திரம் சுப்புவின் காப்பி என்று கூட சொல்லியிருந்திருப்பார்கள்.
“இந்த வைத்தி இல்லன்னா இந்த லோகத்தில நல்லதும் நடக்காது..கெட்டதும் நடக்காது.”
’கலைக் கோவில்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.வி இசை பிரமாதம். அந்த அளவுக்கு ஸ்ரீதர் அவ்வளவாக மெனக்கிடவில்லை. தண்டவாளத்தை விட்டு தடம்புரண்ட மாதிரி இயக்கம்.
...................................

மாலியின் கச்சேரி ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது அவருடைய தந்தை அந்த சபாவுக்குள் நுழைகிறார். மாலி புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தி விட்டார். மூட் அவுட். சரியான கோபம். “ அவரை போக சொல்லுங்கள். அவர் போனால் தான் வாசிப்பேன்.” 
மாலியின் அப்பாவை அங்கிருந்தவர்கள் வெளியே அனுப்பி வைத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அவர் வெளியேறிய பின்னர் தான் புல்லாங்குழல் மீண்டும் இசைத்திருக்கிறது.

வீணை எஸ். பாலசந்தருக்கும் கூட அவருடைய அப்பாவிடம் இப்படி விரோத மன நிலை இருந்திருக்கிறதாம்.

கலைக் கோவில் படத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு.
வீணை வாசிக்கும் முத்துராமன் அரங்கத்தை விட்டு எஸ்.வி.சுப்பையாவை வெளியேற்றச் சொல்வார்.
ஸ்ரீதர் இந்த மாலி சமாச்சாரம் பற்றி கேள்விப்பட்டு தான் அப்படி ஒரு காட்சி அமைத்திருப்பாரோ என்னவோ?
.....................................








Jan 22, 2013

அரைத்த மாவு



சினிமாவை ப்பொறுத்தவரை சில எவர் கிரீன் சப்ஜெக்ட் உண்டு.
அண்ணன் தங்கை பாசம். சிவாஜியே இதில் பாசமலர், பச்சை விளக்கு, அன்புக்கரங்கள் , தங்கைக்காக என்று பலவாறு சலிக்காமல் நடித்தார்.
எம்.ஜி.ஆர் துவங்கி பிற கதாநாயகர்களின் பல குடும்ப படங்களில் தங்கை ட்ராக் ஒன்று  கலந்தே தான் இருக்கும்.
பாரதி ராஜா வின் ’கிழக்குச் சீமையிலே ’ தாண்டி பாக்யராஜ் கூட விஜய்காந்தை போட்டு ’சொக்கத்தங்கம்’- அண்ணன் தங்கை பாசப்படம் இயக்கியிருக்கிறார்.

இன்னொரு எவர் கிரீன் சப்ஜெக்ட். ’அடங்காப்பிடாரி பெண்ணை அடக்குகிற கதாநாயகன்.’ மாமியாரோ, கதாநாயகியோ ரொம்ப திமிராயிருப்பாள். இந்தப்படங்களுக்கு பெண்கள் கூட்டம் மோதி அலைபாயும். வசூல் அள்ளும்.

சிவாஜியின் அறிவாளி, எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப்பெண் இந்த வகை.
 பட்டிக்காடா பட்டணமா, கல்யாணமாம் கல்யாணம், சகலகலா வல்லவன், மன்னன் என்று கதாநாயகியின் திமிர் ஒடுக்கும் படங்கள்.

மாமியார் திமிர் ஒடுக்கும் படங்களில் பணமா பாசமா, பூவா தலையா, மாப்பிள்ளை போன்ற படங்களுடன் மீண்டும் பட்டிக்காடா பட்டணமாவையும் சேர்க்க வேண்டும்.
அடங்காப் பிடாரி வில்லி பெண்களை ஒடுக்கி ஜெயித்தாலும்
( படையப்பா ) ரசிகப்பெருமக்கள் பெரும் ஆதரவு தரும் உத்தரவாதம் உண்டு.

இந்த Triangle subject ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் துவங்கி இளமை ஊஞ்சலாடுகிறது வரை. ஒரு பெண், இரு ஆண்கள்.

இதே ட்ரையாங்கிளில் ஜெமினி கணேசன் என்றால் இரு கதா நாயகிகள் !


ஸ்ரீதரின் கல்யாண பரிசு, அவளுக்கென்று ஓர் மனம்.

கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம், இருகோடுகள், வெள்ளி விழா.
  
திரைப்படங்களில் ஒரே பெண்ணை இரண்டு பேர் காதலிப்பது என்பது எப்போதும் கொஞ்சம் சீரியஸான விஷயம். ஏனென்றால் அது Classic situation என்பதாக எல்லோரும் நம்புவார்கள்.  ஆனால் அதுவே மூன்று பேர் ஒரே பெண்ணுக்கு நூல் விடுவது என்றால் கேலிக்கூத்தாகி விடுகிறது !



என் இளைய மகன் அஷ்வத் யு.கே.ஜி படிக்கும்போது அப்பாஸும் வினித்தும் தபுவை காதலிக்கிற ’காதல் தேசம்’ படம் பார்க்கும்போது “கதை சரியில்ல... ஆளுக்கு ஒரு அக்காள லவ் பண்ண வேண்டியது தான... ஏன் இப்படி ஒரே அக்காவ ரெண்டு பேரு லவ் பண்றாய்ங்க.....?” என்று குழம்பிப் போய் என்னிடம் கேட்டான்.


உத்தரவின்றி உள்ளே வா (1971) ஸ்ரீதரின் சித்ராலயா தயாரிப்பில் என்.சி.சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளி வந்தது. வசனம் கோபு.
ஸ்ரீதரிடமிருந்து பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் போன பின் என்.சி.சக்ரவர்த்தி தான் அசோசியேட் டைரக்டர். என்.சி.சக்ரவர்த்தி இயக்குனரான பின்னும் ஸ்ரீதரோடேயே தான் இருந்தவர். ஸ்ரீதர் எப்போதும் ’டே சக்கி டே சக்கி ‘ என்று சொல்லிக்கொண்டே தான் இயக்குவார்.இயங்குவார்.

படத்தில் ரவிச்சந்திரன், நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி , மாலி நால்வருமே கதாநாயகி ஜானகி என்ற பெயரில் வரும் நடிகை காஞ்சனாவை சீரியஸாக காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
”டேய் ஜானகியப் பத்தி என்னடா நினைக்கிறீங்க” என்ற ரவிச்சந்திரனின் கேள்விக்கு  “ ரொம்ப நினைக்கிறோம். ராத்திரி ஒரு பய தூங்கலே” என்ற  நாகேஷின் பதிலுக்கு தியேட்டரே அதிரும்.

’உத்தரவின்றி உள்ளே வா’ பாடல் காட்சியில் ரவிச்சந்திரன், நாகேஷ் வெண்ணிற ஆடை மூர்த்தி மூவருக்கும் காஞ்சனாவோடு டூயட் பாடுவதாக கனவு. மாலி அந்த பாடலிலேயே ’எனக்கு வேண்டாம்’ என்று தலையை ஆட்டி ஒதுங்கி விடுவார். 
( மாலி தன் சித்தப்பா சாயலில் இருப்பதாக காஞ்சனா சொல்லி விடுவார்!) 

காஞ்சனா மீதான நாகேஷின் மையல், தவிப்பு சொல்லி முடியாது. விரட்டி விரட்டி சைட் அடிப்பார். ஒரு வழியாக ரவிச்சந்திரன் தான் காஞ்சனாவை தட்டிக்கொண்டு போய்விடுவார். அதன் பின் நாகேஷ் பாதி மனசோடு வேறு வழியே இல்லாமல் ரமா பிரபாவோடு எரிச்சலாக செட்டிலாவார். வெண்ணிற ஆடை மூர்த்தி விரக்தியோடு சச்சுவோடு சேர்வார்.

சி.வி.ராஜேந்திரன் இயக்கிய கலாட்டா கல்யாணத்தில் ஒரு சுவையான காட்சி. சிவாஜியின் காதலி ஜெயலலிதாவைப் பார்த்தவுடன் நாகேஷ் நடிப்பு! தனக்காக சிவாஜி பார்த்திருக்கிற பெண் தான் என நினைத்து நாகேஷ் கொஞ்ச நேரம் செய்யும் சேட்டை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.

’இன்று போய் நாளை வா’ படம் சித்ராலயாவின் ’உத்தரவின்றி உள்ளே வா’ வெளி வந்து சரியாக பத்தாண்டுக்குப்பின் வெளி வந்தது.
அப்போது ஸ்ரீதரோ, என்.சி.சக்ரவர்த்தியோ,கோபுவோ கொந்தளித்து எங்க படம் ’உத்தரவின்றி உள்ளே வா’ படத்தின் காப்பி இந்த ’இன்று போய் நாளை வா’ என்று கோபப்பட்டு செட்டில்மென்ட் வேண்டும் என்று கேட்கவில்லை.

பின்னால் ’முந்தானை முடிச்சு’ படம் வெளி வந்த போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பதறி ரொம்ப கோபப்பட்டு “ என்னுடைய ’கற்பகம்’, ’சித்தி’ படங்களை முந்தானை முடிச்சில் பாக்யராஜ் காப்பியடித்து விட்டார்’’ என்று பெருங்கூப்பாடு போட்டார்.



”கண்ணா லட்டு தின்ன ஆசையா’’ பாக்யராஜின் படம் வெளி வந்து முப்பத்திரெண்டு வருடத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
இப்படி ’இன்று போய் நாளை வா’ வை ஈயடிச்சான் காப்பியடித்து
’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் எடுத்திருக்க வேண்டாமே!





Oct 25, 2008

ஸ்ரீதரும் கல்யாண் குமாரும்

ஸ்ரீதர் இறந்தது எல்லா தமிழர்களையும் பாதித்திருக்கிறது . அவர் "நானும் ஒரு தொழிலாளி" படம் இயக்கும்போது பார்த்திருக்கிறேன் .( ஆரம்பமே பிசிறு தட்டுகிறதா ? ஸ்ரீதரை பற்றி பேச இந்தப்படம் தான் கிடைத்ததா ?) அவர் சிகரெட் ஊதும் ஸ்டைல் , அந்த பெண்மையான பாவனைகள் , நகத்தை கடிப்பது ( தெய்வ மகனில் சிவாஜி யின் ஒரு கதாபாத்திரம் ஸ்ரீதரை இமிடேட் செய்ததை அறிவீர்கள் . இரண்டாவது மகன் ). ஷூட்டிங் போதுசிந்தித்து கொண்டே திடீரென்று " டே சக்கி !" என்று கூப்பிடுவது ....( என்.சி . சக்கரவர்த்தி - இவர் 'உத்தரவின்றி உள்ளே வா 'இயக்குனர் . சி வி ராஜேந்திரனுக்கு பிறகு ஸ்ரீதரின் வலது கரம் . )

' நெஞ்சில் ஓர் ஆலயம் ' 'நெஞ்சம் மறப்பதில்லை ' இரண்டு ஸ்ரீதர் படத்தின் கதா நாயகர் கல்யாண் குமார் . இவரிடம் நான் பேசும்போது ஸ்ரீதர் பற்றி நிறைய கேட்பேன் . தேவ சேனா புகைப்படம் ஸ்ரீதர் காட்டிய போது ' இந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளுங்கள் ' என்று கல்யாண் குமார் பாசிடிவ் ஆக அவரிடம் சொன்னதை என்னிடம் சொன்னார் .
'சரி . அந்த இரு படத்தில் வேலை பார்த்த பிறகு பிற்காலத்தில் அவரை எப்போதெல்லாம் சந்தித்தீர்கள் ?'- என் கேள்வி !
கல்யாண் குமார் பதில் " சந்தித்ததே இல்லை "
'சந்தித்ததே இல்லை . அவரும் என்னை சந்தித்ததில்லை . நானும் தேடிபோய் சந்தித்ததில்லை '
கல்யாண் குமார் எழுபதுகளில் எல்லாவற்றையும் இழந்து விட்டு சொந்த வீடு கார் எதுவும் இல்லாமல் நான் சந்தித்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாக இருந்தவர் . சாகும் வரை அதே நிலை தான் . நாற்பது வருடங்களுக்கு மேல் சென்னையிலேயே தான் கல்யாண் குமார் வாழ்ந்திருக்கிறார் .
அதே சமயம் ஸ்ரீதர் அந்தஸ்திலிருந்த பிற கதாநாயகர்கள் ஜெமினி ,சிவாஜி , எம்ஜியார் ஆகியோருடன் மட்டுமல்ல கமல் ,ரஜினி என்ற வரை “Rapport” சரியாக Maintain பண்ணியிருக்கிறார்.

சினிமாவில் மனித உறவுகள் இந்த அளவுக்கு தான் .