Share

Showing posts with label மா.அரங்கநாதன். Show all posts
Showing posts with label மா.அரங்கநாதன். Show all posts

May 29, 2020

மா. அரங்கநாதனின் 'அசலம்'

The theatre is so endlessly fascinating because it’s so accidental. It’s so much like life.” – Arthur Miller

ஆர்தர் மில்லர் பிரபலமான அமெரிக்க நாடகாசிரியர் என்று முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது.
  மர்லின் மன்றோவுக்கு 
ஒரு ஐந்து வருடம் வீட்டுக்காரர். புருஷன். 
நாடகாசிரியராக புலிட்சர் விருதெல்லாம் 
வாங்கிய கலைஞர். 

கூத்து நாடகம் என்பது இருக்க 
நாடகம் மேடையேற்றத்தில் நடக்கும் 
விபரீத விபத்தாக நடந்த கூத்து ஒன்றை
 மா. அரங்கநாதனின் 'அசலம்' சிறுகதையில் காணலாம். 

ராமன் வேடங்கட்டிய முத்துக்கறுப்பன் அந்த கூத்தை தன் எண்பதாவது வயதில் சாட்சாத் ஸ்ரீ ராமனிடம் சொல்கிறார். 

" நான் அந்த இடத்தில் ( குடிசைகள் உள்ள குப்பம்) 
இராமன் வேடங்கட்டி சீதா கல்யாணம் நாடகம் போட்டிருக்கேன்.. 
அடுத்த வருசமே அந்த நாடக வாத்தியாரு செத்துப் போனாரு - சீதையா நடிச்சது யாரு தெரியுமா - மேலத்தெரு ஆவுடையப்பன் - இன்னும் இருக்கான். 
என்ன பண்ணினான் தெரியுமில்லே. இராவணன் கழுத்திலே மாலையைப் போட்டுட்டான். "

இராவணன் வில்லை ஒடிச்சுச் தொலைச்சிட்டான். 
லேசா அதைத் தொட்டு கீழே வைக்க வேண்டியது தானே - வித்தையெல்லாம் காட்டி நடிச்சான் - வில்லு படார்னு ஒடிஞ்சது. சீதை என்ன செய்வா - சொல்லிக் குடுத்த மாதிரி 
ஒடிச்சவனுக்கு மாலையிட்டா" 

"வாத்யாரு நேரே வந்து மேடைன்னு கூட பாக்காம அந்த ஆவுடையப்பன அடிச்சாரு பாரு - நான் வந்து வெலக்கினேன் - கொன்னு போட்டிருப்பாரு "

" பொறகு ஒரு வழியா வில்லை திரும்பவும் கட்டி வச்சு இராவணன் ஒடிச்சது வேற வில் - சரியான வில்லு இது தான்னு சனக மகாராசா சொல்லி, நான் ஒடிக்க வந்தேன். என்ன ஆச்சுங்கறே - 
அந்த மாதிரி இருகக் கட்டி வச்சா யார் தான் ஒடிக்க முடியும்.. ? சீதைக்குக் கிடைச்சது எனக்கும் திரை மறைவிலே கிடைச்சது"

https://m.facebook.com/story.php?story_fbid=2737865726426876&id=100006104256328

.... 

Apr 28, 2020

இசைப்பேரறிஞர் மதுரை சோமுவின் விழா - 2019


மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்திற்கு நான் 1983ம் ஆண்டு மதுரை சோமு கச்சேரி கேட்பதற்காக போயிருக்கிறேன்.
அதன் பிறகு 36 வருடங்களுக்குப்பிறகு
சென்ற 2019 ஏப்ரல் 28ம் தேதி மதுரை சோமு நூற்றாண்டு விழாவில்
தொடக்கவுரை நிகழ்த்துவதற்காக.

சிலிர்ப்பு ஏற்பட்டது.
Everything is governed by an intelligence and not by chance.

சோமு கச்சேரியின் போது ஜெயகாந்தன் முதல் வரிசையில். அதே வரிசையில் ஒரு இரண்டு சீட் தள்ளி தான் நானும் A.K.ரவியும் அமர்ந்திருந்தோம்.
சோமு பாடும் போதே பாடலில் ஒரு வரியாக 'எங்கள் ஜெயகாந்தா' என்று முன் வரிசை எழுத்தாளரை பார்த்து பாடினார். ஜெயகாந்தன் அதற்கு தலை வணங்கி சோமுவை அப்போது நமஸ்கரித்தார். மறக்க முடியாத காட்சி.
சோமு பாடும் போது ரொம்ப அற்புதமான அனுபவமாய் எப்போதும் இருக்கும். ஒரு கீர்த்தனையின் போது பக்கவாட்டில் ஒரு சில வினாடிகள் படுத்து விட்டார்.
”என்ன கவி பாடினாலும்” பாடினார்.
நாட்டக்குறிஞ்சி 'மாணிக்க மூக்குத்தி அலங்காரி'யும்.
சோமு கச்சேரி காட்சியின்பம். குருநாதா என்பார். முருகா என்பார். வயலின் வாசிப்பவரை பார்த்து பாராட்டாக “ஐயோ” என்பார். எதிரே உட்கார்ந்திருப்பவரோடு பேசுவார். சமிக்ஞை செய்வார். குழந்தைமையும் கள்ளமின்மையும் கொண்ட ஜீவன்.
The child in him was battling with the man in him.
நாடகக்கலையையும் இசைப்பாட்டில் இணைத்தவர்.
 Undoubtedly, Madurai Somu was a theatre personality.
2019 சோமு நூற்றாண்டு விழாவில்
நீதியரசர் அரங்க மஹாதேவனின் சந்திப்பு
இனிய நிகழ்வு.

என்னை சந்தித்தவுடன் நான் முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
விழா முடிந்தவுடன் என்னிடம் “உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ். நீங்கள் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது” என்று நீதியரசர் சொன்ன போது என்ன பதிலும் சொல்ல முடியாமல்
அசந்து போய் விட்டேன்.
அவருடைய தந்தை ம.அரங்கநாதனின் ”வீடு பேறு” சிறுகதை தொகுப்பு எத்தகைய கனமான ஒன்று. ”பொருளின் பொருள் கவிதை” என்ற மற்றொரு நூலும்.
அரங்கநாதன் நடத்திய ”முன்றில்” பத்திரிக்கையின் சந்தாதாரர் நான்.
(மா.அரங்கநாதன் மொத்த படைப்புகள்
இப்போது நற்றிணை பதிப்பக வெளியீடு.)
க.நா.சு முன்றில் பத்திரிக்கையில் அப்போது எழுதிய கட்டுரையொன்றில் “ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதையெழுதி விடுகிறார்கள்” என்ற ஒரு வரியால் துடித்துப்போய் நான் அந்த வயதின் ஆவேசத்தை காட்டி
ஒரு கடிதம் 1988 டிசம்பர் 1ம்தேதி அவருக்கு எழுதி அதை ஜெராக்ஸ் செய்து முன்றில் உட்பட 200 பேருக்கு போஸ்ட் செய்தேன்.
டிசம்பர் 16ம் தேதி க.நா.சு மறைந்தார் என்பதெல்லாம் மறக்க முடியுமா?
முன்றில் பத்திரிக்கையின் முழுப்பொறுப்பும் அன்று அரங்கநாதனின் மகன் மகாதேவன் தான் சுமந்தார்.
பிழை திருத்தம் துவங்கி தபாலில் பத்திரிக்கை பிரதிகளை சேர்ப்பது வரை பார்த்து பார்த்து பத்திரிக்கையை நடத்தியவர் தான் இன்றைய உயர் நீதி மன்ற நீதிபதி மஹாதேவன்.
இன்னொரு விஷயம். பிரமிளின் நெருங்கிய நண்பர்.
விழாவில் நீதியரசர் மஹாதேவனின் பேச்சு மிகவும் பிரமிக்கும்படி அமைந்தது.
தெளிந்த நீரோடை போல அப்படி ஒரு அருமையான பிரசங்கம்.
மதுரை சோமுவிற்கு முழுமையான அஞ்சலி.
என்னிடம் மொபைலில் பேசும்போது சொன்னார் ”சார் என்று கூட வேண்டாம். மஹாதேவன் என்றே சொல்லலாம்.
” A great man is always willing to be little.
வழக்கறிஞர் பா.அசோக் என்னிடம் காட்டிய அன்பு பற்றி நான் விவரிக்கவே கூடாது. ஸ்தம்பித்துப்போய் அவரிடம் என்ன பேசுவது என்று திகைத்து நிற்கிறேன்.

எனக்கு ஒரு மகன் தான் அசோக்.
என்னை ரொம்ப நேர்த்தியாக சபைக்கு அறிமுகப்படுத்திய அழகு. 
“ குடத்தில் இட்ட எரிமலை ராஜநாயஹம்”

அசோக் அவர்களின் சித்தப்பா பி.வரதராஜன் விழாவை பிரமாதமாக நடத்தினார்.
இந்த விழாவின் மூலமாக அறிமுகமான வழக்கறிஞர் விக்டோரியா கௌரி    அவர்களைப் பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும்.
இன்னொருவர் ஜி.நாகராஜனின் நண்பர்
எழுத்தாளர் டெய்லர் கர்ணன்.

Apr 26, 2020

நிராதரவும் சக்தி படைத்த ஒன்று தான்


'நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்'
 நேர்த்தியான வார்த்தைகள்.

"மா. அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்று விடுவதில்லை. உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள் "
அசோகமித்திரனின் கணிப்பு.

 மா. அரங்கநாதனின் 'தேட்டை' சிறுகதை
காட்டும் காட்சி.


'நான் இவரோடு வாழ மாட்டேன் ' உதறி விட்டு
இங்கே பாண்டிச்சேரி வந்து சமையல் வேலை செய்து காலம் தள்ளும் அந்த நாகம்மாவை பார்த்து விட தேடிக்கொண்டு வரும் அத்தை என்றழைக்கப்படும் மூதாட்டி

'ஒன்னக் கட்டிக்கிட்டதாலே எனக்கு இந்த நிலை ' என்ற கணவனையும், பெற்ற மகனையும் விட்டு விலகிய நாகம்மா,

யாருமில்லை - ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டால் -
அவ்வாறு உணரப்பட்டு விட்டால் - இன்னொன்று வருவதற்கு வழி வகை ஏற்படும் என்கிறார்
 மா. அரங்கநாதன்.

பல கதைகள் இந்த வட்டத்துக்குள் தானே சுழலும்.
ஆனால் இதில் வெகு இயல்பாக தலை காட்டும் அந்த முத்துக்கறுப்பன் ஸ்டோர்ஸ்
 பலசரக்கு கடைக்காரர் மூலம்
ஒரு அற்புத தரிசனம்.

இந்த அபூர்வம் தான் மகத்தான மா. அரங்கநாதன்.

அரங்கநாதன் கதைகளில் தொடர்ந்து வரும் முத்துக்கறுப்பன் யார்? என்று கேட்டால்
 "என்னால் விளக்கிச் சொல்ல முடியாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு                  உதவி செய்கிறவன் முத்துக்கறுப்பன்."
என்று தான் சொன்னார்.

அஸ்திரம் தான் முத்துக்கறுப்பன்.

மற்றவரைப்பற்றி கவலைப்படுபவர் இல்லை என்று  சொல்லி விட முடியாது.
நிராதரவும் சக்தி படைத்த ஒன்று தான்.

Jun 3, 2019

1988ல் ராஜநாயஹம் ’முன்றில்’ இதழுக்கு சந்தாதாரர்


நேற்று ஞாயிறு இந்து தமிழ் (02.06.2019) பத்திரிக்கையில் மா.அரங்கநாதன் பற்றிய கட்டுரையில் “அரங்கநாதன் 1990ல் ’முன்றில்’ இதழ் துவங்கினார்’’ என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் பிழை.

நான் 1988லேயே ’முன்றில்’ இதழின் சந்தாதாரர்.






ஓவியம் :  லண்டன் சௌந்தர் வரைந்துள்ள ராஜநாயஹத்தின் சித்திரப்படம்

புகைப்படங்கள்
1. மா.அரங்கநாதன்
2. அரங்கநாதனின் புதல்வர் உயர் நீதிமன்ற நீதியரசர் மஹாதேவனுடன் R.P.ராஜநாயஹம்
3. மதுரையில் நடந்த சோமு நூற்றாண்டு விழா போஸ்டர்