Share

Showing posts with label பிரான்சிஸ் கிருபா. Show all posts
Showing posts with label பிரான்சிஸ் கிருபா. Show all posts

Oct 8, 2020

வார்த்தைகள் விரைந்து செல்லும் எறும்புகள்

 'நினைவுப்பாதை' 

நாவலில் நகுலன் சொல்வார் 

"காகிதத்தின் மீது 

விரைந்து செல்லும் எறும்புகள் தானே வார்த்தைகள்" 


இப்போது லேப்டாப், மொபைலில் வாசிக்க காணும் வலைத்தள எழுத்தும் கூட நகுலன் சொல்வது போல 

" கொசுக்கள் பந்து போல் திரளாக 'நொய்' என்று சப்திப்பது போல் வார்த்தைகள் சப்திக்கின்றன. விரைந்து செல்லும் எறும்புகள். 

வலைத்தள தட்டச்சில் பிறந்து கணினியில் சலிக்கும் உருவங்கள்."

.. 


இருக்கிறபடி பார்த்த புரிதல்படி 

அப்படியெல்லாம் கூப்பிடக்கூடாது என்று

 இங்கே கொஞ்ச காலம் 

அரசியல் மிதப்பில் சொக்கிக்கொண்டிருந்த 

ஜெ. தீபா சொல்லிச்சு. 

" என்னுடைய டிரைவர் ராஜாவை

 டிரைவர் என்று யாரும் சொல்லக்கூடாது "


இல் பொருள் உவமை அணி. 


தீபாவின் பேரவை கட்சி முக்கிய பதவி கூட 

அந்த டிரைவருக்கு கிடைத்தது. 

தீபா கணவரிடம் அந்த டிரைவர் சீற்றத்துடன் 

" நகைய தூக்கிட்டுப் போன

 திருடன் தானடா நீ"ன்னு 

சண்டை போட்டதை

 டிவி செய்தியில் காட்டினார்கள். 

இல் வாழ்க்கை 

பிறன் பழிப்பதில்லாயின் நன்று. 


பாசம் படத்துல தன்னைச் சுற்றியுள்ள மூன்று அனுகூல சத்ருக்களைப் பார்த்து எம். ஆர். ராதா சொல்வார் : 'நீங்கள்ளாம் எதிரி இல்ல. திரி.' 


திரி டிரைவரா? கணவரா? 


மன நிலை பொறுத்து 

ஒரு நேரம் திரி, மறு நேரம் எதிரி. 


கொஞ்ச காலம் தான் என்றாலும் 

மறக்க முடியாத Funny Politician தீபா. 


.. 


எப்போதும் இருக்கும் யதார்த்த பழமொழி 

 இந்த கோவிட் 19 காலத்தில் 

முழு அர்த்தம் கொள்கிறது. 

ஜீவிதம், ஜீவனம் இரண்டுமே 

கடுமையான சவாலாகியுள்ளது. 

'மனுஷ்ய ஜீவிதம் அநித்யம். 

மனுஷ்ய ஜீவனம் அசத்யம்'


குறள் - சாதலின் இன்னாததில்லை 


There is a cure for everything except death. 


ஃப்ரான்சிஸ் கிருபா கவிதை 


'படைச்சி படைச்சி 

சலிச்சி போச்சி என்றான் 

கடவுள் 


அழிச்சி அழிச்சி 

சடைஞ்சி போச்சி என்றான் 

சாத்தான்


வாழ்ந்து வாழ்ந்து 

புளிச்சிப் போச்சி என்றான் 

ஒரு மனிதன் '

Sep 28, 2020

அச்சத்தின் மச்சங்கள்

 'ஷோர்' ரொம்ப பழைய இந்தி படம். 

இரைச்சலால் துன்புறுவது. 

கதாநாயகனாக மனோஜ் குமார். 

மிஸ்டர் பாரத். 

தேச பக்திக்கு இங்கே அர்ஜுன் படங்கள் போலே                   அந்தக் காலத்தில் இவருடைய படங்கள் 

அங்கே இந்தியில். 


ஷோர் படத்தில் வேலை பார்க்கிற ஃபேக்டரி யந்திரங்களின் தாளாத இரைச்சல்.

 ட்ராஃபிக் வாகனங்களின் இரைச்சல், 

வானத்தில் விமான சத்தம்,

 ஜனங்களின் கூப்பாடு. 

கடைசியில் கதாநாயகனின் காதுகள்

 செவிடாகிப் போய் விடும். 

சப்தமில்லாத மௌன உலகை 

விந்தையுடன் கவனிப்பதாக படம் முடியும். 


எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்' 

 'வெளிச்சந்தடி எனில் காதுகளைப் பொத்திக்கொள்ளலாம். 

காதுகளே கூச்சலிட்டால் என்ன செய்ய முடியும்? '


இன்று விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேக்கு இங்கிலாந்து சிறையில் 

இந்த பிரச்சினை. 


வெங்கட்ராம்  அந்திம காலத்தில் செவிடர் தான். 


கு. ப. ரா வின் சிஷ்ய பரம்பரையில் 

வந்தவர் தான் எம். வி. வி. 


பொதுவாக  அபிப்ராயத்தில் குருவை 

யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். 


காதுகள் நாவலில் 

" பிச்சமூர்த்தி, கு. ப. ரா இருவரையும் இரட்டையர்கள் என்கிறார்கள். அண்டை வீட்டுக்காரர்கள், ஏக காலத்தில் ஒரே பத்திரிக்கையில் எழுதிய நண்பர்கள் என்கிற அளவில் அது சரியாக இருக்கலாம். 

ஆனால், 

பிச்சமூர்த்திக்கும், புதுமைப்பித்தனுக்கும்

 அடுத்த இடம் தான் 

நான் கு. ப. ரா வுக்குத் தருவேன் "

என்கிறார். 


(ஒரு விஷயம். ந. பிச்சமூர்த்தி, 

கு. ப. ராஜ கோபாலன் இருவரின் 

குடும்பமும் ஒரே வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள்.) 


தமிழ் தாத்தா சாமிநாதய்யருக்கு 

 தன் குரு பற்றி 

உள்ள மரியாதையும், பக்தியும் 

எல்லோருக்கும் தெரிந்ததே. 


அவர் ராமசாமி முதலியார் என்பவருடன் 

பழக வாய்த்தது.


ராமசாமி முதலியாரை சந்தித்த உ.வே.சாமிநாதய்யர்

’எங்க வாத்யாருக்கே ( மீனாட்சி சுந்தரம் பிள்ளை) இவ்வளவு விஷயம் தெரியாது’ என்றாராம். 


..... 


கோவிட் 19 காட்டும் திகில். 


வீட்டை விட்டு வெளியே வந்தால்

சகல மனிதர்களின், கடைகளின் 

சோகம், தவிப்பு, தத்தளிப்பு காணக்கிடைக்கிறது. 


ஃப்ரான்சிஸ் கிருபாவின் 

'நகரில் சிக்கியவன்' கவிதையின் கடைசி வரிகள் 


"வளையிலிருந்து வெளியே வந்து, 

பகலில் நகரச்சாலையோரம் 

திடுக்கிட்டுத் திடுக்கிட்டு 

இரை தேடும் எலியின் கண்கள் 

அச்சத்தின் மச்சங்கள் "

Jun 13, 2019

கடல் நனைத்த ’ரெண்டு’ கவிதைகள்



’என் அன்பின் சிப்பியை
யாரும் திறக்க
வரவில்லை
கடல்களுக்குக்கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஓட்டமும் நடையுமாய்’
- தேவதச்சன்


’சிலிர்க்க சிலிர்க்க
அலைகளை மறித்து
முத்தம் தரும்போதெல்லாம்
துடிக்க துடிக்க ஒரு மீனைப்பிடித்து
அப்பறவைக்கு தருகிறது
இக்கடல்’

Jun 17, 2017

What to do with the time given?


சார்த்தரின் நாடகம் No Exit. மீளமுடியுமா? என்ற பெயரில் தமிழில் வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்த பழைய க்ரியா வெளியீடு.

இந்த நாடகம் அந்தக்காலத்தில் மு. நடேஷ், கலைராணி நடிப்பில் அரங்கேறியதுண்டு.

வெளியேற வழி இல்லை.
புலி வாலைப்பிடித்தாற் போல என்று ஒரு சொலவடை.

நரகம் என்பது மற்றவர்கள் தான். பிரச்னையற்ற மனித உறவுக்கு வழியேயில்லை.

மற்றவர்களும், போலி மனசாட்சியும் நிரந்தர தொந்தரவு தான்.
எப்போதுமே சீக்கிரமாக சாக வேண்டியிருக்கிறது அல்லது ரொம்ப தாமதமாக காலம் கழித்து. முடிவு பெற்ற வாழ்க்கை ஒன்று உள்ளது. நீ என்பது உன் வாழ்க்கை மட்டுமே.


What to do with the time given?
…………….

’தூண்டில்காரனிடம்
சிக்கி விட்ட மீன்
நாசியில் ஊசி நுழைந்த வேதனையோடும்
புதிய நம்பிக்கையோடும்
மீதி வாழ்வின் முன் வாசலில்
மெல்ல நீந்திப் பார்க்கிறது
பாதியளவு நீர் நிரம்பிய தோள்பையுள்’

- பிரான்சிஸ் கிருபா

“Poetry is written with tears, fiction with blood, and history with invincible ink.”
- ’The shadow of the wind’ – a novel by Carlos Ruiz Zafon.