Share

Showing posts with label காருக்குறிச்சி அருணாச்சலம். Show all posts
Showing posts with label காருக்குறிச்சி அருணாச்சலம். Show all posts

Sep 28, 2020

காருக்குறிச்சி அருணாசலம்

 'சிங்காரவேலனே தேவா’ ஆபேரி ராக பாடலுக்கு                 நாதசுரம் வாசித்த காருக்குறிச்சி அருணாச்சலம். 


தன் பெயர் ‘கோவில் பட்டி அருணாச்சலம்’  

என்று குறிப்பிடப்பட்டால் விரும்ப மாட்டார்.

 ‘காருக்குறிச்சி அருணாச்சலம்’ என்று குறிக்கப்படவேண்டும் என்பார். 


ஒரு புகைப்படம் அபூர்வமானது. அதில் மூன்று மனைவிகளோடு அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. 


தன்னுடைய குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போலவே தானும் மூன்று பொண்டாட்டிக்காரன் என்று காருக்குறிச்சி சொல்லிக்கொள்வார்.


1921ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதி பிறந்த காருக்குறிச்சி 1964ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி மறைந்திருக்கிறார்.

 மாரடைப்பால் இறந்தார்.



காருக்குறிச்சியின் முதல் மனைவியின் அப்பா முத்தையா புலவர். 

கி.ராவிற்கு அருணாச்சலத்தின் ஷட்டகர் பொன்னுசாமி மிகவும் பரிச்சயமானவர்.


முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி உடனே மறைந்திருக்கிறார். ஆனதால் முதல் மனைவியின் உறவினரான மற்றொரு    பெண்ணை மணந்தார் காருக்குறிச்சி. அவருக்கு குழந்தைகள் பிறந்தார்கள்.

 பின்னர் நடிகை ஈ.வி.சரோஜாவின் 

ஒன்று விட்ட சகோதரியை கல்யாணம் செய்து கொண்டார். தஞ்சாவூர்க்காரர். இவருக்கும் குழந்தைகள் உண்டு.


எல்லா குழந்தைகளையும் மூத்த முதல் மனைவி அன்போடு வளர்த்து ஆளாக்கினார்.


‘கொஞ்சும் சலங்கை‘ யில் நாகஸ்வர வித்வானாக ஜெமினி கணேசன் நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போய் காருகுறிச்சி

 “அது எப்படிய்யா? நாகஸ்வரம் இந்த இடத்தில் மேலே தூக்கணும், இங்க இறக்கணும், 

சீவாளியை இப்படி இப்படிச் சுத்தம் பண்ணணும் இவ்வளவு நேர்த்தியா உன்னால முடிஞ்சது. எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடேன்” என்று மனம் விட்டுப் பாராட்டியதைப் பற்றிப் புளகாங்கிதத்துடன் என்னிடம் சொன்னபோதே, காருகுறிச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி, நெகிழ்ந்து உடைந்த குரலில்,

 ‘ நல்ல மனுஷனெல்லாம் அற்பாயுசிலே

 போய்ச் சேந்துட்டான்’ என்று என்னிடம் ஏங்கினார் ஜெமினி.




நான் காருக்குறிச்சியின் கடைசி மகள் ராஜத்திடம் விசாரித்தேன். 

ஜெமினி கணேசன் பணம் எதுவும் தரவில்லையாம். 

 கோவில்பட்டி செல்லையா தேவர் தான் கோவில்பட்டி காருக்குறிச்சி அருணாசலம் மணிமண்டபம் கட்டுவதற்கு பொருளுதவி செய்திருப்பதாக தெரிகிறது. கமிட்டி தலைவராக வசூல் செய்திருக்கிறார். 


சாவித்திரியோடு வந்து ஜெமினி கணேசன் மணிமண்டபத்தை 

திறந்து வைத்திருக்கிறார். 

கல்வெட்டில் நன்கொடை ஜெமினி கணேசன் - சாவித்திரி என செல்லையா தேவர்                   பெயருக்கு மேலே குறிக்கப்பட்டிருக்கிறது. 


காருக்குறிச்சிக்கு  சரவண பவன் என்று 

ஒரு மகன். 

டாக்டர் ச. வீரப்பிள்ளை என்பவர் கிராவுக்கும் எனக்கும் நல்ல நண்பர். 

சரவண பவனை காரைக்காலில் சந்தித்ததாக கிராவிடம் சொன்னார் வீரப்பிள்ளை.


கி.ரா பழைய நினைவில் மூழ்கி 

என்னிடம் சொன்ன விஷயம் ஒன்று.

காருக்குறிச்சியின் மகனை நாகசுர வித்வானாக்க வேண்டும் என்று கி.ரா வற்புறுத்தியிருக்கிறார். காருக்குறிச்சி அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

 மறுத்துத்தலையை ஆட்டினார்.

 ’நாகசுரம் வாசிப்பவனுக்கு சரியான மரியாதையை இந்த சமூகமும் சங்கீத உலகமும் தருவதேயில்லை’ என காரணம் சொன்னாராம்.


காரு குறிச்சியின் 'சகானா' வாசிப்பு 

ஒலி நாடாவில் கேட்கும்போது 

ஒரு தடவை 

எனக்கு 'இப்போதே மரணம் வாய்த்து விடாதா'

 என ஒரு நிறைவு ஏற்பட்டது.

………

May 22, 2020

ஏலி, ஏலி, லேமா சபக்தானி



முந்தைய நாள் மயங்கி விழுந்தவர் காருக்குறிச்சி அருணாச்சலம் மருத்துவ மனையில் அடுத்த நாள் கண் விழித்த போது ஆறாத்துயருடன் வாய் திறந்து சொன்ன வார்த்தைகள்
'எனக்கு இப்படி ஆயிடுச்சே,
நான் புள்ளக்குட்டிக்காரன் '
இது தான் கடைசி வார்த்தை.  கோமாவுக்கு போய் விட்டார். மறு நாள் மறைந்தார்.

க.நா.சு இறந்த பின் அவருடைய மனைவியார் டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய போது        முன்றில் மா. அரங்கநாதனும், சா.கந்தசாமியும் மயிலாப்பூர் சென்று துக்கம் விசாரித்தார்கள்.
"நான் தூங்கிவிடக்கூடாது - தூங்கினால் போய் விடுவேன் " என்றும் தன் அம்மாவின் உருவம் தெரிகிறது என்றும் க. நா. சு கடைசியாகக் கூறினாராம்.

கே.பாலசந்தர் மரணப்படுக்கையில் இருக்கும்போது
தன்னிடம்  சொன்னதாக வசந்த் சொன்னது -
“ வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்பது இப்பத்தான்டா புரியுது..”

பாலு மகேந்திரா இறப்பதற்கு கொஞ்ச நேரம் முன்
பாலாவிடம் சொன்னாராம்: “என் கண்ணை கவனிக்கச் சொல்லி டாக்டரிடம் சொல். என் கண்ணில் தான் அடிபட்டிருக்கிறது. கண் தான் எனக்கு முக்கியம்...”

......

May 14, 2020

காருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்

காருக்குறிச்சிக்கு ஆருடக்குறிப்பு மூலம்
நேரம் சரியில்லை என தெரிந்ததால்
சில நாட்களுக்கு முன்பு திருநள்ளாறு
சென்று விட்டு வந்திருக்கிறார்.
மதுரையில் மெடிக்கல் செக் அப் செய்த பின் டயட் கன்ட்ரோல். இரவில் கோதுமை கஞ்சி.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
காருக்குறிச்சி அருணாசலம் கோவில்பட்டி பங்களாவில் மதிய உணவு சாப்பிடுகிறார்.
அவருடைய முதல் மனைவி ராமலட்சுமி தான் வீட்டின் பட்டத்தரசி.
தன்னுடைய ஓரகத்திகளின் பன்னிரெண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியவர். சமையல் பக்குவத்திலிருந்து கணவருக்கு
முகம் கோணாமல் பறிமாறுவது வரை
பார்த்து பார்த்து செய்பவர்.
சாப்பிட்டு முடித்தவுடன் திருநெல்வேலி கிளம்புகிறார்.
அங்கே ஒரு கச்சேரி. அது முடிந்தவுடன்
கலெக்டரை சந்திக்க வேண்டியிருக்கிறது.
காருக்குறிச்சி 'நாதஸ்வரம் குரு குலம்' நடத்தும் திட்டம் வைத்திருந்தார்.
அதற்கு திருநெல்வேலி கலெக்டர் நிலம் கடலையூர் சாலையில் ஒதுக்கித்தர இசைந்திருந்தார்.
அவரையும் சந்திக்க வேண்டும்.
கச்சேரி முடித்து விட்டு கலெக்டரை சந்திக்கிறார்.
இரவு ஏழு மணி. பேசுக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்திருக்கிறார்.
திருநெல்வேலி ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்.
அவருடன் உப நாயனம் வாசிப்பவர், அவர் பெயரும் அருணாசலம் தான். அந்த அருணாசலம் உடனேயே கோவில்பட்டி வருகிறார்.
அப்போது அவருடைய மனைவியர், புத்திரங்கள் அனைவரும் தியேட்டரில் 'அல்லி' படம் பார்த்து விட்டு அப்போது தான் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
உப நாயனம் அருணாசலம் தகவல் சொல்கிறார்.
குடும்பம் திருநெல்வேலி பயணம்.
மறு நாள் காருக்குறிச்சிக்கு நினைவு திரும்பி
கண் விழித்து பார்த்த போது துயரத்துடன்
வாய் விட்டு சொல்லியிருக்கிறார்.
"எனக்கு இப்படி ஆயிடுச்சே. நான் புள்ளக்குட்டிக்காரன்"
சுற்றிலும் மனைவியரும் குழந்தைகளும்.
மீண்டும் நினைவு மறந்த நிலை.
அந்த திங்கள்கிழமை, அடுத்த நாள் செவ்வாய் கிழமை இரண்டு நாளும் சுயநினைவு
இல்லாமல் தான் படுக்கையில்.
ஆனால் மறக்கவே முடியாத படி
ஒரு பவித்ர நிகழ்வு.
அவ்வப்போது அவர் வாய் ஸ்வரங்களை முணுமுணுக்கிறது.
கைகள் நாதஸ்வரம் வாசிக்கிற பாவனையில் இயங்குகின்றன.
செவ்வாய் கிழமை அவர் மரணமடைந்து விட்டார்.
Medical report - 'Diabetic Coma.
கோவில்பட்டி கடலையூர் சாலையில் கலெக்டர் கொடுத்த நிலத்திலேயே
காருக்குறிச்சி அருணாசலம் சமாதி.
கோவில்பட்டியில் காருக்குறிச்சி சிலை அமைக்க 
நிதி உதவி ஜெமினி கணேசன் - சாவித்திரி.
திருநெல்வேலி கலெக்டர் எம்.எம்.ராஜேந்திரன் தலைமையில்
ஜெமினி கணேசன் தான் சிலையை திறந்து வைத்திருக்கிறார்.
பின்னாளில் தமிழக தலைமை செயலராக உயர்ந்து,
ஒரிசா மாநில கவர்னர் பதவியும் வகித்த பெருந்தகை எம். எம். ராஜேந்திரன் அவர்கள்.  

Apr 15, 2020

காருக்குறிச்சி அருணாசலத்தின் கோவில்பட்டி பங்களாவில்

 புகைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், காருக்குறிச்சி அருணாசலம், சிவாஜி கணேசன்
மூவரும் இருக்கிறார்கள்.
கொஞ்சம் சலங்கை 1962.
இப்படி இது போல அவர்கள் மூவரும் சௌஜன்யமாக பேசிக்கொண்டிருப்பது
அதற்கும் முந்தைய காலம்
என்று தெரிய வந்துள்ளது.
ஏ. பி. என் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி நடித்த வடிவுக்கு வளைகாப்பு கூட 1962 தான்.
அடுத்த வருடம் சிவாஜியை குலமகள் ராதையில் சிவாஜியை ஏ. பி. என் இயக்கினார்.
1964 ல் சிவாஜியின் நூறாவது ரன் நவராத்திரி
ஏ. பி. என் கை வண்ணம் தான்.
அந்த வருடம் தான் காருக்குறிச்சியின்
அகால மரணம்.
இந்த புகைப்படம்.

Every picture tells a story.
காருக்குறிச்சி அருணாசலத்தின்
கோவில்பட்டி பங்களாவில்
இந்த உரையாடல்.
ஏ. பி. நாகராஜன் வரும் போதெல்லாம் காருக்குறிச்சியின் மனைவி
ராமலட்சுமி அம்மாளிடம்
வத்தக்குழம்பு கேட்பாராம்.
நாகராஜனும், கணேசனும், அருணாசலமும்
கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்' நாவலை படமாக்குவது பற்றி விவாதித்து இருக்கலாம்.
The possibility of the future.
விகடனில் தொடராக வந்த போது
வாசகர்கள் ஒன்றிப் போன தொடர்கதை.
கடைசியில் கதை நாயகனுக்கும், நாயகிக்கும் திருமண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு விகடன் இதழோடு தரப்பட்டது.
விகடனுக்கு ஏகப்பட்ட கல்யாண வாழ்த்து தந்திகள் குவிந்தன என்று சொல்வார்கள்.
1968 ம் ஆண்டு தான் தில்லானா மோகனாம்பாள் வெளி வந்தது.
நிச்சயம் ஏ. பி. நாகராஜனும், சிவாஜி கணேசனும்
அந்த சமயத்தில் நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாச்சலத்தை நினைவில்
பெரு மூச்சு விட்டிருப்பார்கள்.
Life is what happens when you make other plans.

Apr 14, 2020

சிவாஜியும் காருக்குறிச்சியும்

'சிங்கார வேலனே, தேவா'
பாடல் ஜானகியும், காருக்குறிச்சியும் பாடி பதிவு செய்யப்பட்டிருந்தது. பாடலின் தரம் ஜானகியின் குரலோடு காருக்குறிச்சியின் ராட்சச வாத்தியத்தின் காற்றால் உன்னத உச்சத்தை எட்டி விட்டது.
(இன்றும் அந்த ஆபேரி ராக பாடல் கேட்கும்போதும் கண்ணீரை கட்டுப்படுத்த முடிந்ததில்லை.)

தமிழ் திரையுலகமே இந்த பாடல் பற்றி பேச்சு. ஜெமினி கணேசனின் அந்த கொஞ்சும் சலங்கை பாடலை நான் அமெரிக்காவுக்கு போவதற்கு முன்னர் கேட்டே ஆக வேண்டும் என்று சிவாஜி விரும்பியிருக்கிறார்.
When Caesar says do it, it is performed.
பாடலை கேட்டு விட்டு தான் விமானத்தில் ஏறினாராம்.
'வச்சிக்றேன். இதுக்கு என் பாணியில் பதில் சொல்றேன்'என்று தானே நினைத்திருப்பார்.
பிரபலமான மார்லன் ப்ரான்டோ - சிவாஜி கணேசன் புகைப்படம் அந்த அமெரிக்க விஜயத்தின் போது எடுக்கப்பட்டது தான்.
பின்னால் அந்த அசுர வாத்தியத்தை இந்த தமிழ் திரையுலகின் அசுர குழந்தை தில்லானா மோகனாம்பாளில் எத்தகைய உச்சத்திற்கு தன் நடிப்பால் உயர்த்தி சாதனை புரிந்தார்.

காருக்குறிச்சி அப்போது மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவரல்லவோ தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசித்து உன்னத நிலைக்கு கொண்டு சென்றிருப்பார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை எப்போது பார்க்க நேர்ந்தாலும் இந்த எண்ணத்தை தவிர்க்க முடிந்ததில்லை. 
சேதுராமன் - பொன்னுசாமி சகோதரர்களும் நிறைவாகவே செய்திருந்தார்கள்.
இந்த புகைப்படங்களில் சிவாஜி, காருக்குறிச்சி அந்நியோன்யத்தை பாருங்கள்.

நாதஸ்வர பெருங்கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலம்


நாதஸ்வர பெருங்கலைஞர்
காருக்குறிச்சி அருணாசலம்
தன் மூன்று மனைவியருடன் இருக்கும்
அபூர்வ புகைப்படம் இது.
முதல் மனைவி ராஜலட்சுமி அம்மாள்.
இவர் தனக்கு குழந்தையில்லாததால் உறவிலேயே
ஒரு பெண்ணை கணவருக்கு
திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
அந்த பெண் உயிருடன் இருக்கவில்லை.
உடனே இறந்து விட்டார். அதனால் மற்றொரு உறவுப்பெண் பாக்யலட்சுமியை தன் கணவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
பாக்யலட்சுமி அம்மாள் மூலம் புத்ர பாக்யம்.
ஒரு மகன் சரவணபவன்.
மற்றும் ஐந்து பெண் புத்திரங்கள்.
காருக்குறிச்சி அருணாசலம் அடுத்து
மணம் புரிந்த ராஜலட்சுமி அவர்கள்
பழம்பெரும் நடிகை ஈ. வி. சரோஜாவின்
ஒன்று விட்ட சகோதரியாவார்.
இவர் மூலம் மூன்று ஆண் குழந்தைகளும்
மூன்று பெண் குழந்தைகளும்.
ஆக மொத்தம் காருக்குறிச்சிக்கு
பன்னிரெண்டு குழந்தைகள்.
நாற்பத்திரண்டு வயதில் பெருங்கலைஞர்
தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்பது பெருந்துயரம்.
ராஜலட்சுமியின் ஒரு மகளை பழம் பெரும் நடிகர்
எம். கே. ராதாவின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
மற்றொரு மகளை பழம்பெரும் நடிகை குசல குமாரியின் மகன் மணந்தார்.
பாக்யலட்சுமியின் மகள் சுப்புத்தாயின் கணவர் அக்ரிகல்சுரல் ஜாயிண்ட் டைரக்டர்.
இந்த சுப்புத்தாய் அம்மாளின் மகன் சதீஷ், சதீஷின் மகன் தீபக் இருவரோடும் நான் மொபைலில் பேசும் வாய்ப்பு  கிடைத்தது.
காருக்குறிச்சியின் மகள் சுப்புத்தாய் அம்மாளும்
என்னிடம் பேசினார் என்பது என் பாக்யம்.
காருக்குறிச்சியின் பேரன் சதீஷும்,
கொள்ளுப் பேரன் தீபக்கும் கொடுத்த அபூர்வ புகைப்படங்கள், தகவல்கள் விசேஷமானவை.
இதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
....

Sep 27, 2016

காருக்குறிச்சி அருணாச்சலம்


’சிங்காரவேலனே தேவா’ ஆபேரி ராக பாடலுக்கு நாதசுரம் வாசித்த காருக்குறிச்சி அருணாச்சலம்!



தன் பெயர் ‘கோவில் பட்டி அருணாச்சலம்’  என்று குறிப்பிடப்பட்டால் விரும்ப மாட்டார். ‘காருக்குறிச்சி அருணாச்சலம்’ என்று குறிக்கப்படவேண்டும் என்பார். 


ஒரு புகைப்படம் அபூர்வமானது. அதில் மூன்று மனைவிகளோடு அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது!
தன்னுடைய குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போலவே தானும் மூன்று பொண்டாட்டிக்காரன் என்று காருக்குறிச்சி சொல்லிக்கொள்வார்.


1921ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதி பிறந்த காருக்குறிச்சி 1964ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி மறைந்திருக்கிறார்.
 மாரடைப்பால் இறந்தார்.

கோவில்பட்டியில் காருக்குறிச்சிக்கு உள்ள சிலை ஜெமினி கணேசன் உபயம். மகா கஞ்சன் என்று ஜெமினி கணேசன் பற்றி சொல்வார்கள். ஆனால் அவர் தேவையான, நியாயமான காரியங்களுக்கு நல்ல நன்கொடை கொடுத்ததுண்டு.

கி.ராஜநாராயணனிடம் பேசும் போது காருக்குறிச்சி பற்றி எப்போதும் ஏதாவது சொல்வார்.
காருக்குறிச்சியின் முதல் மனைவியின் அப்பா முத்தையா புலவர். கி.ராவிற்கு அருணாச்சலத்தின் ஷட்டகர் பொன்னுசாமி மிகவும் பரிச்சயமானவர்.
முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி உடனே மறைந்திருக்கிறார். ஆனதால் முதல் மனைவியின் உறவினரான மற்றொரு    பெண்ணை மணந்தார் காருக்குறிச்சி. அவருக்கு குழந்தைகள் பிறந்தார்கள்.
 பின்னர் நடிகை ஈ.வி.சரோஜாவின் ஒன்று விட்ட சகோதரியை கல்யாணம் செய்து கொண்டார். தஞ்சாவூர்க்காரர்.

“கச்சேரிகளுக்கு செல்லும்போது பல மாதிரி கெட்டுப் போக வாய்ப்பு அதிகம். அதனால் இந்த  மனைவியைக் கூட அழைத்துப் போய் சோதனைகளைத் தவிர்க்க முடியும்.”
இவருக்கும் குழந்தைகள் உண்டு.

எல்லா குழந்தைகளையும் மூத்த முதல் மனைவி அன்போடு வளர்த்து ஆளாக்கினார்.
‘கொஞ்சும் சலங்கை‘ யில் நாகஸ்வர வித்வானாக ஜெமினி கணேசன் நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போய் காருகுறிச்சி “அது எப்படிய்யா? நாகஸ்வரம் இந்த இடத்தில் மேலே தூக்கணும், இங்க இறக்கணும், சீவாளியை இப்படி இப்படிச் சுத்தம் பண்ணணும் இவ்வளவு நேர்த்தியா உன்னால முடிஞ்சது. எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடேன்” என்று மனம் விட்டுப் பாராட்டியதைப் பற்றிப் புளகாங்கிதத்துடன் என்னிடம் சொன்னபோதே, காருகுறிச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி, நெகிழ்ந்து உடைந்த குரலில், ‘ நல்ல மனுஷனெல்லாம் அற்பாயுசிலே போய்ச் சேந்துட்டான்’ என்று ஏங்கினார் ஜெமினி.


காருக்குறிச்சியின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் இந்திரா பழனியில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன் தகப்பனுக்காக அங்கு ஒரு மணி மண்டபம் கட்டினார் இந்த இந்திரா.
காருக்குறிச்சிக்கு  சரவண பவன் என்று ஒரு மகன். அந்தப் பையன் ஒரு எஞ்ஜினியர்.
டாக்டர் ச. வீரப்பிள்ளை என்பவர் கிராவுக்கும் எனக்கும் நல்ல நண்பர். சரவண பவனை காரைக்காலில் சந்தித்ததாக கிராவிடம் சொன்னார் வீரப்பிள்ளை.

கி.ரா பழைய நினைவில் மூழ்கி என்னிடம் சொன்ன விஷயம் ஒன்று.
காருக்குறிச்சியின் மகனை நாகசுர வித்வானாக்க வேண்டும் என்று கி.ரா வற்புறுத்தியிருக்கிறார். காருக்குறிச்சி அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மறுத்துத்தலையை ஆட்டினார். ’நாகசுரம் வாசிப்பவனுக்கு சரியான மரியாதையை இந்த சமூகமும் சங்கீத உலகமும் தருவதேயில்லை’ என காரணம் சொன்னாராம்.

காரு குறிச்சியின் 'சகானா' வாசிப்பு கேட்கும்போது ஒரு தடவை 
எனக்கு 'இப்போதே மரணம் வாய்த்து விடாதா' என ஒரு நிறைவு ஏற்பட்டது.