Share

Showing posts with label அண்ணாத்துரை. Show all posts
Showing posts with label அண்ணாத்துரை. Show all posts

Dec 15, 2016

’மா பசி’ ம.பொ.சி


1950களில் ம.பொ.சியின் தமிழரசு கழகம், அண்ணாத்துரையின் தி.மு.க இரண்டு கட்சிக்குமே தங்கள் பொது எதிரியாக அறியப்படும் காங்கிரஸை விட பரஸ்பரம் ஒரு துவேசம் இருந்திருக்கிறது. 

1946ல் தமிழரசு கழகத்தை ஆரம்பித்த ம.பொ.சி 1954 வரை காங்கிரஸில் இருந்தவர் தான்.

தமிழரசு கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டுமே தமிழர் நலன் சார்ந்தே இயங்கியவை. இரண்டுமே சிறந்த மனிதர்களாக அடையாளம் கொண்டவர்களினால் சூழப்பட்டிருந்தன.
சிலம்புச்செல்வர் என்று ம.பொ.சிக்கு பேராசிரியர் ரா.பி.சேது பிள்ளை பட்டம் சூட்டினார்.
அறிஞர் என்று அண்ணாத்துரை கட்சிக்காரர்களால் கௌரவப் படுத்தப்பட்டார்கள்.
தமிழரசுக்கழகத்தில் கா.மு.ஷெரிப், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி போன்ற திரை ஆளுமைகள் (கவிஞர்கள்) மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
கவிஞர் கண்ணதாசன் தி.மு.கவில் சிக்கிக்கொண்டார்.
ஏ.பி. நாகராஜன் தமிழரசு கழக ஆதரவாளர்.

1951ல் முதல் தி.மு.க மாநாட்டிலேயே புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மேடையேறி விட்டார்.

நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத், மேதை மதியழகன்.

என்.வி நடராசனுக்கு எதுவும் பட்டம் இருந்ததாகத்தெரியவில்லை.

சிந்தனைச் சிற்பி சிற்றரசு.

ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரல்லாதவராயிருந்தாலும் இன்னொருவர்- (தக்ஷ்ணாமூர்த்தி!)- கலைஞர் மு. கருணாநிதி என்று அறியப்பட்டார்.

பேருக்கு ஆசிரியராய் இருந்த Tutor -
’பேராசிரியர்’ அன்பழகன்.
குட்டிப்பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி.
இப்படி கலர் கதாநாயகன்களால் தி.மு.க ஜொலித்தது.
தமிழரசுக்கழகத்தில் ஜிகினாத்தலைவர்கள் யாரும் இல்லை போலும்.
முக்கிய வேற்றுமை தமிழரசு கழகம் கடவுள் நம்பிக்கை கொண்ட இயக்கம்.
தி.மு.க தலைவர் அப்போதெல்லாம் ‘ஒருவனே தேவன்’ பிரகடனம் செய்திருக்கவில்லை. திருப்பதிக்கு சென்ற சிவாஜிகணேசன் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டு “ தம்பி! எங்கிருந்தாலும் வாழ்க!” என்று ஆசீர்வதிக்கப்பட்டார்.
மாணவர்களிடையே அன்று தி.மு.க., தமிழரசு கழகம் இரண்டின் ஈடுபாடு பாதிப்பு இருந்திருக்கிறது.

மாயவரம் முனிசிபல் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த ந.முத்துசாமி தி.மு.க. 

அவருடைய வகுப்புத்தோழர் கவிஞர் ஞானக்கூத்தன் தமிழரசு கழகம். 

இந்த அரசியல் சிறுவர்களான முத்துசாமியையும் ஞானக்கூத்தனையும் பிரித்திருக்கிறது. இருவரும் அந்த சின்ன வயதில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால் நட்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.

முத்துசாமி அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இண்டர்மீடியட் படிக்கும் போது (1955- 1957) சிதம்பரத்தில் ஒரு தி.மு.க மீட்டிங்.
அண்ணாத்துரையுடன் தம்பித்தலைவர்களும் மேடையில்!
தம்பித்தலைவர்கள்!
ம.பொ.சிக்கு எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்ற ’மாபசி’! – இப்படித்தான் அன்று கிண்டலாக குறிப்பிடும் வழக்கம்.
மதராஸ் மனதே என தெலுங்கர்கள் சொன்ன போது அதை எதிர்த்து சென்னை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார்.
திருவேங்கடத்தை தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் தான் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும்
செங்கோட்டை( நெல்லை)யும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

சிதம்பரம் தி.மு.க மேடையில் பேசிய தம்பித்தலைவர்கள் அனைவரும் ம.பொ.சியை கடுமையாக விமர்சித்து திட்டி பேசியிருந்திருக்கிறார்கள். கடைசியில் அண்ணா எழுந்திருக்கிறார். அவருடைய மேலான நல்ல விஷயங்கள் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு தம்பித்தலைவர்களைப்பார்த்து கேட்டிருக்கிறார்: ”இப்படிப்பட்ட நல்லவரை நீங்கள் தாக்குவது என்ன நியாயம்?”

உடனே அந்த மேடையிலேயே அத்தனை தம்பித்தலைவர்களும் தங்கள் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ’அண்ணா! மன்னித்துக்கொள்ளுங்கள். ம.பொ.சியின் அருமை புரியாமல் பேசி விட்டோம்.’
ந.முத்துசாமி கல்லூரி மாணவராயிருந்த போது சிதம்பரத்தில் நடந்த இந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்வு இன்றும் பசுமரத்தாணி போல அவர் மனதில் நிறைந்திருக்கிறது.
1967ல் காங்கிரசை தமிழகத்தில் எதிர்ப்பதில் தி.மு.கவுடன் ராஜாஜியின் சுதந்திரா கட்சி கூட்டு சேர்ந்த போது ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இணைந்து நின்றது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியின் ரசிகராக மாறினார். 
எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி.ஆர் அபிமானியாகி ம.பொ.சி தமிழக மேல் சபை தலைவராக இருந்தார்.
……………………………………..

Sep 15, 2008

காலா காந்தியின் கோட்சே !


இந்த விஷயம் முதல் முறையாக தி.மு.க ஆட்சிக்கு வந்த போது நடந்த விஷயம் .

சிட்டி தான் என்னிடம் சொன்னார். சிட்டியும் அண்ணாத்துரையும் பச்சையப்பன் கல்லூரியில் வகுப்புத்தோழர்கள.

பலவருடங்களுக்கு பின் சிட்டியை அண்ணாதுரை முதல்வராக சந்தித்தவுடன் ஆனந்த கண்ணீர் வடித்தாராம். அப்போது சிட்டி அகில இந்திய வானொலி யில் உயர் அதிகாரி . அகில இந்திய வானொலிக்காக அண்ணாவை பேட்டி எடுத்து விட்ட பின், அன்றைக்கு பரபரப்புக்கு காரணமாக இருந்த
விருதுநகர் பெ. சீனிவாசனை பேட்டியெடுக்க நினைத்து அதையும் சிட்டி செயல் படுத்தினார் .

உடனே கருணாநிதி சிட்டியிடம் வந்து ' என்ன சார் .இப்படி செய்திட்டீங்க . அண்ணாவை பேட்டி எடுத்துட்டு அடுத்ததா பெ .சீனிவாசனை பேட்டி எடுக்கிறீங்க .இவன் ஒரு பொறுக்கி சார். இவனுக்கு என்ன யோக்யதை இருக்குன்னு இவனையெல்லாம் பெரிய ஆளாக்கிறீங்க . காமராஜரை அவமானப்படுத்த இவனை அவரை எதிர்த்து தேர்தல்லே நிறுத்தினோம் . ஜெயிச்சிட்டான் . ஜெயிச்சதுக்கு காரணம் இவனா சார் . சும்மா குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை. தமிழகத்திலே எங்க கட்சிக்கு ஆதரவா எழுந்த அலையிலே சும்மா குருட்டு அதிர்ஷ்டத்திலே ஜெயிச்சவன் . "

கருணாநிதியின் முன் ஜாக்கிரதையை இந்த சம்பவம் சுட்டுகிறது .தீர்க்க தரிசனத்தையும் கூட .
ஐம்பெரும் தலைவர்களில் அண்ணா தவிர பிறரை படிப்படியாக பின்னகர்த்தி, அடுத்த இரண்டே வருடத்தில் அண்ணா மறைந்த போது கட்சியையும் ,முதல்வர் பதவியையும் கைப்பற்றிய மிக பெரிய புத்திசாலியின் பதற்றம்!
பெ.சீனிவாசனும் பின்னர் கருணாநிதி சொன்னது சரிதான் என்பதை தன் நடத்தைகளால் நிரூபித்தார் . இப்போது பல இடம் தாவி விட்டு அண்ணா தி.மு.க.வில் இருக்கிறார்.. அல்லது அங்கிருந்தும் விரட்டப்பட்டு விட்டாரா?
சீனிவாசன் , கோவை செழியன் ,ஜி .விசுவநாதன் மூவரும் நாங்கள் தான் உண்மையான அண்ணா தி.மு.க என்று பிரகடனம் செய்து எம்ஜியாருக்கு எதிராக அவர் முதல் முதலாக ஆட்சிக்கு வந்த கட்டத்தில் அடித்த கூத்து ! அதன் பின் சிதறு தேங்கா போல மூவரும் பிரிந்து தனி தனி கட்சி யில் இணைந்தது இதெல்லாம் நினைத்து பார்க்க வேடிக்கையான அரசியல் காட்சிகள்.

பாவம் பெ . சீனிவாசன்! காலா காந்தியை தேர்தலில் தோற்கடித்ததால் தமிழ் நாட்டை பொறுத்தவரை ஏதோ கோட்சே போல் ஆகி மக்களாலும் அரசியல்வாதிகளாலும் கூட வெறுத்து ஒதுக்கப்பட்டவர் .
சினிமா நடிகை 'தேன் நிலவு' வசந்தியை திருமணம் செய்து......அப்புறம் ஒரு வேடிக்கை . சிவகாசி யில் 1989 ல் நடிகை ஸ்ரீதேவியின் அப்பா ஐயப்பனையும் சட்ட சபை தேர்தலில் தோற்கடித்தார் .
நல்ல பேச்சாளர் ! பத்து ஆண்டு முன் என்று நினைக்கிறேன்.. ஒரு முறை தேர்தலில் போட்டியிட்ட நிலையில் ஸ்ரீவில்லி புத்தூரில் முச்சந்தியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த போது தன் திருமணத்திற்காக காமராஜரை அழைக்க போய் பத்திரிகை கொடுத்ததையும் அந்த எளிமையான அருந்தலைவர் பெருந்தன்மையுடன் இவர் திருமணத்திற்கு வந்ததையும் அழகாக விவரித்து பேசினார் பெ . சீனிவாசன்.
" திருமண மேடையில் நான் அமர்ந்திருக்கிறேன் . படிக்காத மேதை , ஏழைபங்காளன், பெருந்தலைவர் அந்த திருமண அரங்கினுள் நுழைந்தார் . நீண்ட நெடிய கொடிமரம் மெல்ல அசைந்து அசைந்து வருவதை போலிருந்த காட்சி இன்றும் என் கண்ணுக்குள் விரிகிறது ."

.................................................