Share

Showing posts with label ஏ.பி.நாகராஜன். Show all posts
Showing posts with label ஏ.பி.நாகராஜன். Show all posts

Apr 15, 2020

காருக்குறிச்சி அருணாசலத்தின் கோவில்பட்டி பங்களாவில்

 புகைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், காருக்குறிச்சி அருணாசலம், சிவாஜி கணேசன்
மூவரும் இருக்கிறார்கள்.
கொஞ்சம் சலங்கை 1962.
இப்படி இது போல அவர்கள் மூவரும் சௌஜன்யமாக பேசிக்கொண்டிருப்பது
அதற்கும் முந்தைய காலம்
என்று தெரிய வந்துள்ளது.
ஏ. பி. என் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி நடித்த வடிவுக்கு வளைகாப்பு கூட 1962 தான்.
அடுத்த வருடம் சிவாஜியை குலமகள் ராதையில் சிவாஜியை ஏ. பி. என் இயக்கினார்.
1964 ல் சிவாஜியின் நூறாவது ரன் நவராத்திரி
ஏ. பி. என் கை வண்ணம் தான்.
அந்த வருடம் தான் காருக்குறிச்சியின்
அகால மரணம்.
இந்த புகைப்படம்.

Every picture tells a story.
காருக்குறிச்சி அருணாசலத்தின்
கோவில்பட்டி பங்களாவில்
இந்த உரையாடல்.
ஏ. பி. நாகராஜன் வரும் போதெல்லாம் காருக்குறிச்சியின் மனைவி
ராமலட்சுமி அம்மாளிடம்
வத்தக்குழம்பு கேட்பாராம்.
நாகராஜனும், கணேசனும், அருணாசலமும்
கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்' நாவலை படமாக்குவது பற்றி விவாதித்து இருக்கலாம்.
The possibility of the future.
விகடனில் தொடராக வந்த போது
வாசகர்கள் ஒன்றிப் போன தொடர்கதை.
கடைசியில் கதை நாயகனுக்கும், நாயகிக்கும் திருமண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு விகடன் இதழோடு தரப்பட்டது.
விகடனுக்கு ஏகப்பட்ட கல்யாண வாழ்த்து தந்திகள் குவிந்தன என்று சொல்வார்கள்.
1968 ம் ஆண்டு தான் தில்லானா மோகனாம்பாள் வெளி வந்தது.
நிச்சயம் ஏ. பி. நாகராஜனும், சிவாஜி கணேசனும்
அந்த சமயத்தில் நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாச்சலத்தை நினைவில்
பெரு மூச்சு விட்டிருப்பார்கள்.
Life is what happens when you make other plans.

Feb 9, 2019

Inter personal relationship


’உரை நடையென்பது திமிங்கலத்தின் முதுகில் பயணிப்பது போன்றது.’
- யவனிகா ஸ்ரீராம்
என்னுடைய பதிவு “ புகழ் பூட்டு” படித்து விட்டு ஃபேஸ்புக்கில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் போட்டிருந்த கமெண்ட் “ க்ளாசிக்”.
வெற்றிகரமாக திமிங்கலத்தின் முதுகில் நான் பயணிக்கிறேன் என்பது சந்தோஷமாயிருக்கிறது.
அறுபது வருடங்களுக்கு முன் பல திரை பிரபலங்கள் கூடியிருந்த நிலையில், ஏ.பி.நாகராஜன்   தனியறைக்கு வரும்படி எம்.ஆர்.ராதாவை அழைத்தாராம்.
ராதா அவருடன் அறையில் நுழைந்திருக்கிறார். தடால் என்று சாஸ்டாங்கமாக ராதா காலில் ஏ.பி.என் விழுந்திருக்கிறார்.
ராதா வெளியே வந்தவுடன் மற்றவர்களிடம் வெளிப்படையாக உடைத்துச் சொன்னாராம். “அயோக்கிய பய. பிச்சக்காரப்பய. என் கால்ல இவன் விழுகிறத மத்தவங்க பாக்கக்கூடாதுன்னு நினக்கிறான். தனியா அறைக்கு கூட்டிட்டு போய் ரகசியமா கால்ல விழுறான்.”
எனக்கு தெரிந்த மனிதரின் மகன் வெளி நாட்டில் படித்தவன். தன்னுடன் படித்த வெளி நாட்டு வெள்ளைக்கார நண்பர்களுக்கு கல்யாண நிச்சயத்தின் போது ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு பார்ட்டி கொடுத்திருக்கிறான். அதில் இங்கே உள்ள அவனுடைய நண்பன் தன் மனைவியுடன் கலந்து கொண்டிருக்கிறான். வெளி நாட்டில் படித்த அந்த மாப்பிள்ளை கல்யாணமான தன் பால்ய நண்பனை அறிமுகப்படுத்தியிருக்கிறான். பெண்ணும் ஆணுமான அந்த வெளி நாட்டு இளைஞர்கள் இந்த தம்பதியரை பார்த்திருக்கிறார்கள் “So you are already married” பரவசமாய் கண்களை விரித்திருக்கிறார்கள்.
அவனுடைய கல்யாணம் ஆறு மாதத்திற்கு பின்னால் நடந்த போது வெள்ளைக்கார வகுப்பு தோழர்கள் வருவார்கள் தானே? வந்தார்கள். பெண்கள் நம் கலாச்சாரப்படி சேலை. ஆண்கள் வேட்டி சட்டையில். மாப்பிள்ளை உபயம். கல்யாண மாப்பிள்ளையின் பால்ய நண்பன் தன் மனைவியோடு அவர்களை வரவேற்றிருக்கிறான். ஒரு வெள்ளைக்காரன் வரவேற்றவனைப்பார்த்து ஆச்சரியமாக கூவியிருக்கிறான் – “ Are you still married?!”
செய்திகள் பற்றி அன்றாடம் எந்த கவலையும் கிடையாத ஒரு அஞ்ஞானி – டி.வி., செய்தித்தாள் எதுவும் பார்க்கும் வழக்கமில்லாதவர் - செவி வழி செய்தியொன்றை அரைகுறையாக கேட்டு விட்டு ரோட்டில் அன்றைக்கு சத்தமாக அரசியல் பேசினார் “எப்படியோ இன்னைக்கு எவ்வளவு பெரிய தேசிய கட்சிக்கு அழகிரி தலைவராயிட்டாரே. என்னமா தம்பி முகத்தில மாவீரன் கரிய பூசிட்டாரு.”
பிசியான ஒரு பெட்ரோல் பங்க் அருகில் இருந்த ஒரு கடை முன் ஒரு Used condom அழுக்காக கிடந்தது. ராத்திரி பரபரப்பு அடங்கியவுடன் சாலையில் எக்ஸ்ப்ரஸ் வேக சரச சல்லாப நிகழ்வு சர்க்கஸ் போல. Rooster Fuck? விடிய, விடிய வாகனங்கள் போய் வருகிற பகுதி.
ஒரு அரசாங்க ஆஃபிஸ் போக வேண்டியிருந்தது. வாசலில் இருந்த ஒரு செக்யூரிட்டியிடம் பேச்சு கொடுத்தேன். இறுக்கமாய் இருந்த அவர் சகஜமானவுடன் என்னிடம் சொன்னார் “நான் ராத்திரி ஷிப்ட் பார்க்கறப்ப இங்க அஞ்சாறு ஆட்டோ ஆஃபிஸ் முன்னாடி நிக்கும். ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வருவார். ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் கிட்டயும் பேசுவார். அவங்க பணம் கொடுப்பாங்க. சரி தான். பவர காட்டி ’பவுசு’ வாங்கிக்கறார்னு நெனச்சேன். ஒரு நாள் ஆட்டோக்காரர்ட்ட கேட்டேன். அப்ப தான் தெரிஞ்சது. எஸ்.ஐ தான் அந்த ஆட்டோக்களின் ஓனராம். தினம் கலக்சன் பணம் வாங்கத்தான் வர்றாராம்.”
……………

Nov 22, 2012

ஏ.பி.நாகராஜன்



ஆரம்பகாலத்தில் நாடகத்தில் ஸ்திரிபார்ட் ரோல் செய்தவர்.

டி.கே.எஸ் பிரதர்ஸ் ’குமாஸ்தாவின் பெண்’ நாடகமாக நடத்தப்பட்டபோது அதில் கதாநாயகியாக நடித்தவர் ஏ.பி.நாகராஜன்!

நால்வர்(1953),பெண்ணரசி(1955),நல்லதங்காள்(1955) ஆகிய படங்களில் கதாநாயகன் ஏ.பி.நாகராஜன்! இந்தப்படங்களுக்கு வசனமும் இவரே தான். சாண்டோ சின்னப்பதேவரின் முதல் படம் ’நல்ல தங்கை’(1955)க்கு வசனம் எழுதியதும் நாகராஜன் தான்.

’பொன்னே,புதுமலரே,பொங்கிவரும் காவிரியே 
மின்னும் தாரகையே வெள்ளி நிலவே………
அம்புலி வேண்டுமென்றே அடம்பிடித்தே அழுவாய்
பிம்பம் காட்டி உந்தன் பிடிவாதம் போக்கிடுவேன்
அந்த நாள் மறைந்ததம்மா ஆனந்தம் போனதம்மா’

இந்த டி,எம்.எஸ் பாடல் ’நல்லதங்காள்’ படத்தில் ஏ.பி.நாகராஜனுக்குத்தான்.

’நால்வர்’ படத்தில் என்.என்.கண்ணப்பாவும் நடித்தார்.விஜயகுமாரி கூட ஒரு சின்னரோலில் நால்வர் படத்தில் நடித்தார்.

அதே வருடம் கே.சோமு இயக்கி கண்ணப்பா கதாநாயகனாக நடித்த டவுன் பஸ் படத்திற்கு ஏ.பி.என் தான் வசனம்.

கே.சோமு யூனிட்டில் நாகராஜன் அவர்களின் பங்கு மகத்தானது. 


கே.சோமு இயக்கிய ’சம்பூர்ண ராமாயணம்’(1958) படத்திற்கும் வசனம் இவரே.
 
 கே.சோமுவின் இந்தப் படத்தை ராஜாஜி பார்த்துவிட்டு ’பரதனை மிகவும் ரசித்தேன்’ என்றார். என்.டி.ராமாராவ் ராமனாக நடித்த இந்தப்படத்தில் பரதனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.

(வாசனின் ஔவையார்(1953) படத்தை அதற்கு முன்னதாக இரு முறை பார்த்த ராஜாஜி தன் டைரிக்குறிப்பில்(10-08-1953) அந்தப்படம் பற்றி சிலாக்கியமாக எழுதாமல் குறை கூறி எழுதியிருந்தார் என்று அசோகமித்திரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.)


திரையுலகில் பல மாற்றங்கள்,மேடுபள்ளங்கள் கண்ட ஏ.பி.நாகராஜன் வாழ்வு பிறரிலிருந்து மிகவும் வேறுபட்டது.

அரசியல் நோக்கு கொண்டிருந்தார்.
ம.பொ.சியின் தமிழரசுக்கழகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். 
திரையுலகில் கவி.கா.மு.ஷெரிப் தமிழரசுக்கழகத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்.



நாடகஸ்திரிபார்ட்,திரைப்படகதாநாயகன்,வசனகர்த்தா,தயாரிப்பாளர் என்று பலவித அனுபவங்களுக்குப்பிறகு தான் மிகச்சிறந்த சாதனை இயக்குனர் ஆக பரிமளித்தார்.

வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து சிவாஜி,பானுமதி நடித்த ’மக்களைப் பெற்ற மகராசி’,எம்.ஆர் ராதா நடித்த ‘நல்ல இடத்து சம்பந்தம்’ போன்ற படங்களைத் தயாரித்தார். வி.கே.ஆர் நட்பு கசந்ததில் பின்னால் இவர் பெரிய இயக்குனரான போது ஏபிஎன் படங்களில் வி.கே.ராமசாமி நடித்ததேயில்லை.
பொருளாதாரப் பிரச்னை வாழ்நாள் முழுவதும் இருந்தது.
கடும் நெருக்கடியின்போது எம்.ஆர்.ராதா உதவி செய்தபோது எம்.ஆர்.ராதாவை பக்கத்து அறைக்கு அழைத்து காலில் விழுந்து கும்பிட்டார்.ராதா தன் இயல்புப்படி ’எல்லார் முன் காலில் விழ வெட்கப்பட்டு ரகசியமாக பிறர் அறியாமல் நாகராஜன் என் காலில் விழுகிறான்.’ என்றார்.
ராதாவும் கூட இவர் பின்னால் இயக்கிய எந்தப் படத்திலுமே நடித்ததில்லை.

வடிவுக்கு வளைகாப்பு,குலமகள் ராதை படங்களை இயக்கிய பின் சிவாஜியின் 100வது படம் ’நவராத்திரி’  இயக்கிய பெருமை.
 
 அதன் பின் வாழ்வில் ஒரு மாற்றம். திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்,கந்தன்கருணை, திருவருட்செல்வர்,திருமால் பெருமை போன்ற படங்களை இயக்கினார். இதனால் இன்று வரை ஏ.பி.என் என்றால் புராணப்பட இயக்குனர் என்றே பரவலாக அறியப்படுகிறார்.

திருமால் பெருமை வந்த அதே வருடம் தான் ஏ.பி.நாகராஜனின் மாஸ்டர் பீஸ் ’தில்லானா மோகனாம்பாள்’ கூட வெளிவந்தது. 
       
நாகேஷ் நடித்த தருமி,வைத்தி கதாபாத்திரங்களை இயக்கி அவரை சிகரத்துக்கு கொண்டு சென்ற இயக்குனர்.

நவராத்திரி,திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள் இவரை இன்று அமரத்துவம் பெறச்செய்து விட்டன.

சிவாஜி ஏனோ அவரை இயக்கிய இயக்குனர்களில் அவருக்குப் பிடித்தவராக ’தெய்வமகன்’ ’பாரத விலாஸ்’ ’பாபு’ படங்களை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தரைத்தான் சொல்வார்.

திருவிளையாடலில் சிவாஜி,நாகேஷ் நடித்த அந்த பிரபல எபிசோடில் நக்கீரனாக ஏ.பி.என். பிரமாதமாக நடித்தார்.ஆனால் அதன் பின் அவர் இயக்கிய படங்கள் எதிலும் நடித்ததில்லை.

மிக பிரமாண்ட படங்களாக எடுத்த பின் சின்ன பட்ஜெட் படங்களாக திருமலை தென்குமரி,கண்காட்சி எடுத்தார். பின் சின்ன பட்ஜெட் அகத்தியர்,திருமலை தெய்வம் புராணப்படங்கள்.
மீண்டும் பிரமாண்டமாக  ‘ராஜராஜசோழன்’சினிமாஸ்கோப்( டைட்டில் கார்ட்- நடிகர் திலகம் உயர்திரு சிவாஜிகணேசன்)

கமல் இவர் இயக்கத்தில் சிவகுமாருடன் குமாஸ்தாவின் மகள்(1974) – இந்தப் படம் 1941ல் டி.கே.எஸ் சகோதரர்கள் நடித்து வெளி வந்த குமாஸ்தாவின் பெண் ரீமேக். இந்த நாடகத்தில் தான் ஏபிஎன் கதாநாயகியாக நடித்திருந்தார்! இவர் இயக்கிய போது அதில் கதாநாயகி ஆர்த்தி புட்டண்ணா.

கமல் நடித்த இன்னொரு ஏபிஎன் படம் ’மேல் நாட்டு மருமகள்’ அதில் ஒரு நடனமாட பம்பாயிலிருந்து வந்த வாணி கணபதியை  பின்னால் முதல் மனைவியாக்கியது.

ஏபிஎன் வாழ்வில் கடைசியாக  பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக  எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்கி அவருக்கு ஒன்பது நாயகியர் என்று ’நவரத்தினம்’ படத்தை இயக்கினார்.

நாகராஜனின் குரல் விஷேசமானது.அவர் படங்களில் “ பேரன்பு மிக்க ரசிகப்பெருமக்களுக்கு என்று ஆரம்பித்து படத்தைப் பற்றி பேசுவார்.

கண்காட்சி படத்தில் கே.டி.சந்தானத்தின் சந்தப்பாடல் ’அனங்கன் அன்பன் வசந்தன் மன்மதன் என்று வணங்கும் என்னுயிர் மன்னவா’விற்கு துவக்கத்தில் தொகையறாவாக ஏபிஎன் குரல்:

“வெண்ணிலவைக் குடை பிடித்து வீசு தென்றல் தேரேறி

மென்குயில் தான் இசை முழங்க, மீன் வரைந்த கொடியசைய

கண்கவரும் பேரழகி,கனகமணி பொற்பாவை

அன்ன நடை ரதியுடன்,அழகு மதன் வில்லேந்தி

தண்முல்லை,மான்,தனி நீலம்,அசோகமெனும்

வண்ணமலர் கணை தொடுத்தான்

வையமெல்லாம் வாழ்கவென்றே!”


ஏபி நாகராஜனுக்கு மனைவி மக்கள் இருந்தார்கள்.
நடிகை வடிவுக்கரசியின் அப்பா ராணிப்பேட்டை சண்முகமும் நாகராஜனும் சகலைபாடிகள். வடிவுக்கரசியின் பெரியப்பா ஏ.பி.என்.

நடிகை குமாரி பத்மினி இவருடைய நிழலில் தான் வாழ்ந்தார். கண்காட்சி,திருமலை தென்குமரி போன்ற படங்களில் நடித்தவர்.

ஏபிஎன் மறைந்து பல வருடங்களுக்குப் பின் இந்த நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

.........

ஏபிஎன் டப்பிங் தியேட்டரில் அவர் புராணப்படங்களுக்காக ரெஃபெர் செய்த புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன்.புரட்டி வாசித்தும் இருக்கிறேன்.