Share

Showing posts with label இயக்குனர் பாலா. Show all posts
Showing posts with label இயக்குனர் பாலா. Show all posts

Jan 31, 2013

ஏதோ கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கே!



பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி ’எனக்கு இந்த பத்ம பூஷன் விருது வேண்டாம்’ என்று நிராகரித்ததை பலரும் பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
அவர் கால தாமதமாக வந்த விருது என்பதால் நிராகரிக்கிறாராம். சரி.அதோடு அவர் நிறுத்தி விடவில்லை. ’பாரத் ரத்னா விருது என்றாலாவது பரவாயில்லை......வாங்கியிருப்பேன்.....’ என்று தொடர்ந்து சொல்கிறார்!

இந்திய அரசாங்க விருதுகள் தேவை தானா என்பது முக்கிய கேள்வி.
 
நிற்க.
 எஸ்.ஜானகி இப்படி பகீரங்கமாக ’பாரத் ரத்னா விருது என்றால் வாங்கியிருப்பேன்’ என்பதன் அபத்தம் பற்றி யாரும் கவனித்ததாக தெரியவில்லை.

கமல் ஹாசன் தவிர இன்று இந்திய திரையுலகைச் சார்ந்த வேறு எவருக்குமே பாரத் ரத்னாவுக்கு தகுதியிருப்பதாகத் தோன்றவில்லை.
பாராட்டியவர்கள் யாரும் Janaki Amma ! Please don’t think too much of yourself !” என்று சொல்லவே இல்லை.

இந்தியாவில் பாரத் ரத்னா விருது பெற்ற பெண்கள் நால்வர்.
இந்திரா காந்தி, மதர் தெரசா, எம்.எஸ். சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர் ஆகியோர். இவர்களோடு தோளோடு தோள் நிற்க ஜானகி ஆசைப்படுகிற அபத்தம் பற்றி யாருக்கும் உறைக்கவே இல்லை.


 இங்கே பத்மஸ்ரீ விருது கூட உன்னத கலைஞன் நாகேஷுக்கு கிடைத்ததில்லை.
எம்.எஸ்.விக்கு கூட பத்ம விருது கிடைத்ததில்லை.

    இசைக்கலைஞர்கள் ஐந்து பேருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, ரவிசங்கர், லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லாகான், பண்டிட் பீம்ஸென் ஜோஷி ஆகியோர். இவர்களோடு ஜானகியை பாரத் ரத்னா வாகப் பொருத்திப் பார்க்கமுடியுமா!

இவர்களில் லதா மங்கேஷ்கர் மட்டும் திரை இசை பின்னனி பாடகி. இதனால் தான் ‘எனக்கு பாரத் ரத்னா விருது கொடுத்தால் வாங்கியிருப்பேன்’ என்று ஜானகி சொல்கிறார் போலும். பாவம் பி.சுசிலா! அந்த அம்மா எஸ்.ஜானகிக்கு சீனியர். அதோடு சுசிலா மெல்லிசை திரையிசைப் பாடகி என்ற அளவில் ஜானகிக்கு எந்த வகையிலும் கொஞ்சமும் குறைந்தவரே அல்ல!


தமிழ் நாட்டில் இருந்து பாரத் ரத்னா விருது பெற்றவர்கள் ராஜாஜி( பாரத ரத்னா விருது முதன் முதலில் உயிரோடு இருக்கும்போதே பெற்றவர்) சர். சி.வி.ராமன், திருத்தணிக்காரரை சேர்க்கலாம் என்றால் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், ( ஆந்திராக்காரர் என்று சொல்பவர்கள் சொல்வார்கள் ) காமராஜர், எம்.ஜி.ஆர் ( மலையாளி என்று சொல்லி விடாதீர்கள்.) எம்.எஸ். சுப்புலட்சுமி, அப்துல் கலாம். இந்த வரிசையில் நாம் வேற்று மொழி எஸ். ஜானகியையும் பெருந்தன்மையாக பொருத்திப் பார்க்க முடியுமா? CALIBER ஒத்துப் போகுமா?

இந்த பாரத் ரத்னா விருது வழங்கப்பட்ட ’வரிசை’ பார்த்தால் கூட வேடிக்கையாக இருக்கிறது. இன்று வரை 41 பேர் பாரத ரத்னா என தீர்மானிக்கப்பட்டிருக்கிறார்கள்.(?!) ஒருவர் வெளி நாட்டுக்காரர் நெல்சன் மண்டேலா. மதர் தெரசாவை வெளி நாட்டுக்காரர் என்று சொல்ல முடியுமா?
எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பின் இரண்டு வருடம் கழித்து பி.ஆர்.அம்பேத்கரை விட்டு விட்டோமே என்று ஞாபகம் வந்து பாரத் ரத்னா விருதை சட்ட மேதைக்கு கொடுத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு கொடுத்து மூன்று வருடம் கழித்துத் தான் இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லப் பாய் பட்டேலுக்கு சாவகாசமாக பாரத் ரத்னா விருது கொடுத்திருக்கிறார்கள்!  
………….

 பாலாவின் ’அவன் இவன்’ படத்தைப்பற்றி…
இந்தப் படத்தில் விஷால், ஆர்யா, ஜி.எம் குமார் நடிப்பு பற்றி சொல்ல வேண்டும். 

இந்த மூன்று பேரின் கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா கண்ட முழுமையான கதாபாத்திரங்கள் வரிசையில் சேர்க்கப்படவேண்டியவை.
ஒரே வார்த்தை தான்.விஷாலுக்கு அந்த வருடம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும். விஷாலின் நடிப்பைப் பற்றி விவரிப்பது அவ்வளவு எளிதானதல்ல. ரொம்ப பிரமாதம்! ’தெய்வத்திருமகள்’ விக்ரம் ’அவன் இவன்’ விஷாலுக்கு ஈடாகவே முடியாது.

ஆர்யா ரொம்ப லூஸ் டாக் செய்வது பற்றி சில விமர்சனங்கள் சரியல்ல. அப்படிப் பட்ட நபர்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு. ஆர்யா பாத்திரத்திற்கு நல்ல நியாயம் செய்திருக்கிறார். அட்டகாசமான நடிப்பு. இந்த கதாபாத்திரத்திற்கும் பாஸ் என்ற பாஸ்கரனுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு!

ஜி.எம்.குமார் பெர்ஃபாமன்ஸ் சூப்பர்ப். ரத்தமும் சதையுமாக அவருடைய கதாபாத்திரத்தை ரொம்ப அற்புதமாக செய்திருக்கிறார். வெள்ளந்தியான அந்த ஹைனஸ்!வாழ்ந்தவர் கெட்டால்! நெஞ்சை விட்டு அகலாத பாத்திரம்.




இந்தப் படத்தில் மிக பரிதாபமான பலிகடா ஆனந்த் வைத்திய நாதன்! இந்த இசையறிஞர் இப்படி ஈனத்தனமான பாத்திரத்தின் மூலம் அறிமுகமாகியிருக்க வேண்டுமா? ஈனமான கதாபாத்திரம் கூட சரியாக வார்க்கப்பட்டு இயக்கப்பட்டிருந்தால் இப்படி மட்டரகமாக ஊசிப்போய் ஊசலாடியிருக்காது. பாலா எப்போதும் பாத்திர வார்ப்பில் கவனமாயிருப்பார். ம்ம்.. Even Homer sometimes nods!
 

என்ன வரம் வேண்டும்
என்கிறார் கடவுள்.
அது தெரியாத
நீர் என்ன கடவுள்?

நீலமணி எழுதிய மேற்கண்ட கவிதை இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்யா தான் கேட்கிறார் “ அது தெரியாத நீ கடவுளா? “



 
  
 




Aug 27, 2012

பாலா படங்கள்

Feb 8, 2009


பாலா படங்களில் சில விஷயங்கள் Repeatஆகின்றன. Similarities தெரிகின்றன.எல்லா படங்களுமே Morbid வகையாய் இருக்கின்றன. கதாநாயகர்கள் ரொம்ப மூர்க்கமானவர்கள்.

நந்தா சூரியா, பிதாமகன் விக்ரம், நான் கடவுள் ஆர்யா மிகவும் பலசாலிகள். போலீஸ் இவர்களை கண்டு மிரள்கிறது .
நந்தா சூரியா, நான் கடவுள் ஆர்யா தாய்உறவு சீராக இல்லை. நந்தா சூரியா தாயின் உதாசீனம் கண்டு மன உளைச்சல் அடைகிறார். நான் கடவுள் ஆர்யாவின் உதாசீனம் தாயை கலங்கி தவிக்க விடுகிறது. நந்தா சூரியா மைனர் ஜெயில் என்றால் நான் கடவுள் ஆர்யா பால்யத்தை காசி மடம்.
கதாநாயகி சேது விக்ரமிடம் ,நந்தா சூரியாவிடம் , நான் கடவுள் ஆரியா விடம் அப்ரோச் செய்யும் காட்சிகள் ஓரளவு ஒத்த தன்மை கொண்டவை . பயந்து பயந்து பேசுவது.
பழைய பாடல்களுக்கு சூரியா சிவாஜி, சந்திரபாபு மாதிரி சிம்ரனுடன் ஆடுவார் .
நான் கடவுளிலும் எம்ஜியார், சிவாஜி, ரஜினி வேசமிட்டு பல பாடல்களுக்கு ஆடுகிறார்கள். கதாநாயகி நிறைய பழைய பாடல்கள் பாடுகிறார்.
பிதாமகன், நான் கடவுள் கதாநாயகர்கள் இருவருமே எதிரியை துவம்சம் செய்ய, சூழலை புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். உசுப்பி விட்ட பிறகு தான் கொந்தளித்து எழுகிறார்கள்.இருவருமே உலக அளவுகோலின் படி மன நிலை பிறழ்ந்தவர்கள்.அப்படி தான் வேறுபட்ட கதாபாத்திரங்களையும் மீறி தெரிகிறார்கள்.
'சேது' படத்தில் நெஞ்சை உருக்கும் மனநிலை பிறழ்ந்த பைத்தியங்கள். 'நான் கடவுள் ' படத்தில் நெஞ்சை நிம்மதியில்லாமல் அடித்து காயப்படுத்தி ரணப்படுத்தி விடும் மறக்கவே முடியாத உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். எல்லா பிச்சைக்காரர்களின் முகங்களும் அவர்களின் ஊன வுருவங்களும் படம் பார்த்து விட்டு வந்த பின்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன.
கவிஞர் விக்கிரமாதித்தன் நடிகராக ஒரு நல்ல ரௌண்டு வந்து நிறைய சம்பாதிக்கவேண்டும். என் ஆசை இது.
வடிவேலை சில பல படங்களில் நிம்மதி இழக்கச்செய்யும் 'அந்த நான் கடவுள் முருகன் ' இந்த படத்தில் செமை நடிப்பு .
'நான் கடவுள் 'கதை யாருடையது ? பாலாவுடையது என்று தான் டைட்டில் வருகிறது . ஆனால் படத்திற்கு வசனம் எழுதிய ஆள் தன்னுடைய'ஏழாவது உலகம் 'நாவல் தான் 'நான் கடவுள் ' படத்தின் கதை என்று ஆங்கிலப்பத்திரிக்கையில் கூட குறிப்பிடுகிறார் . அப்படியானால் ' கதை ' தன்னுடையது என்று ஏன் பாலா போட்டுக்கொள்ள வேண்டும் .திரைக்கதை இவருடைய பெயரில் வருவது யதார்த்தமானது தான் . இயக்குனர் பெயரில் வருவது நியாயம் கூட .
பாலா ! Your whole future is before you! வயதும் காலமும் , திரையுலகின் மரியாதை,மதிப்பும் இன்னும் நிறைய உங்களிடம் இருப்பதால் இன்னமும் கூட தமிழ் திரையுலகத்தின் முதல் தர நம்பிக்கை நீங்கள் தான் !
Miles to go before you sleep!
இந்த 'நான் கடவுள் 'படத்தை எடுக்க மூன்று வருடம் தேவை தானா? ரொம்ப ஓவரா தெரியலே!
படத்தில் லாஜிக் ரொம்ப இடிக்கிறது.
மலையாள ப்ரோக்கரை துவம்சம் செய்யும்போது ஆர்யா ஒரு பார்வை பார்த்ததும் மலைகோயில் பக்தர்கள் ஓடி ஒளிவது, அந்த மலையாள ப்ரோக்கரை ஆர்யா என்ன செய்தார் என்பதை ஒருத்தர் கூடவா ஒளிந்திருந்து பார்க்க முடியாது. போலீஸ் ரொம்ப திணறி.......

தீவிரவாதிக்குரிய சகல கல்யாண குணங்களும் பாலாவின் நாயகர்களுக்கு இருக்கின்றன.நந்தா சூரியா வுக்கு ஒரு ராஜ்கிரண். நான் கடவுள் ஆர்யாவுக்கு ஒரு காசி சாமியார்.கதாநாயகி கடைசியில் கதாநாயகனால் கொலை செய்யப்பட காசி சாமியாரின் மூளை சலவை தான் காரணமா? காசி சாமியார் சொன்ன ஒரு வாக்கியம் கதாநாயகனின் நினைவிற்கு வந்தவுடன் கொலை செய்யும் கதாநாயகன். இது தான் தீர்வா ?

இப்படி காட்சி பார்க்கும்போது ஸ்ரீராம் சேனா, பஜ்ரங் தள தொண்டர்கள்,சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய கொலைகாரன் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் எல்லோரும் ஏன் கொள்கை ஓநாய்கள் ஆகிறார்கள் என்பது நினைவுக்கு வருகிறது.

"கொலை " என்பது ஏனைய சினிமாக்காரர்களுக்கு "சாதாரண கத்திரிக்காய் " !பாலாவுக்கும் அப்படித்தான் என்பது அவருடைய படங்களிலிருந்து தெரியவருகிறது.
'பருத்தி வீரன்' அமீர் , 'சுப்ரமணியபுரம்' சசிகுமார் ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்களும் தங்கள் அடுத்த முயற்சிகளில் இந்த' கொலை 'என்ற தீர்வை உதறி தள்ளி நல்ல படைப்பை தரவேண்டும். படம் பார்ப்பவனின் கபாலத்தில் தாக்கி காயப்படுத்த இந்த 'கொலை'யை விட்டால் வேறு தீர்வே கிடையாதா?

'அன்பே சிவம்' படத்தில் நிறைய உரையாடல் கமல், மாதவன் இடையே அந்த படத்தின் கதையை செழுமைப்படுத்தியது. ' நான் கடவுள் ' தீம் 'அகம் பிரமாஸ்மி' பற்றி விளக்கம் ஏதும் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது. இதுவும் ஏதோ காசி சாமியாரின் ஒற்றை வாக்கிய மூளைசலவை போல பதிவாகிவிட்டது.