Share

Showing posts with label எஸ்.வி.சுப்பையா. Show all posts
Showing posts with label எஸ்.வி.சுப்பையா. Show all posts

Oct 3, 2019

”R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா” - சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா இன்று என் பதிவு எஸ்.வி.சுப்பையா படித்து விட்டு ”R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா” என்ற தலைப்பிட்டு எழுதியுள்ள கட்டுரை கீழே
R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா
October 3, 2019
நாகூரில் சிறுவனாக இருந்த போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஒரு எழுத்தாளன் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்த போது தெரிந்த முதல் ஊர் தில்லி. அங்கேதான் இந்திரா பார்த்தசாரதி, என்னுடைய பிரதி பிம்பம் என்று நான் சின்ன வயசிலேயே நம்பிய ஆதவன், கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன், என் குருநாதர் என மதித்த க.நா.சு., வெங்கட் சாமிநாதன் போன்ற பலர் வசித்தார்கள். தி. ஜானகிராமனும் அங்கேதான் இருந்தார். ஆனால் அவர் எழுத்து மீது அப்போது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் தில்லி போய்ச் சேர்ந்ததும் மேலே குறிப்பிட்ட யாரையும் பார்க்காமல் கடைசியில் குறிப்பிட்ட வெங்கட் சாமிநாதன் பார்வையில் விழுந்தேன். வெ.சா.விடம் ஒரு அபூர்வமான சக்தி இருந்தது. அவரிடம் வந்தவர்கள் மற்ற யாரையும் சந்திக்க மாட்டார்கள். எல்லோருமே வீண் என்று நம்மிடம் நிரூபித்து விடுவார். எனக்கு ரொம்பவும் பிடித்த ஆதவனைக் கூட நான் சந்திக்கவில்லை. வெ.சா.வின் காந்தப் பிடியிலிருந்து நான் விடுபட்ட போது தில்லியிலிருந்து சென்னை வந்திருந்தேன்.
வெ.சா.வின் உலகில் வாழும் போது நமக்குள் பல கட்டுக்கதைகளும் (myth), நம்பிக்கைகளும் இறங்கியிருக்கும். அப்படிப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றுதான், தமிழ் சினிமா ஒரு குப்பை. ரொலான் பார்த்தின் Image, Music, Text-ஐப் படிக்கும் வரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். வெகுஜன கலாச்சாரத்தைச் சேர்ந்த எல்லாமே குப்பை. அதனால்தான் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முதல் முதலாக வெகுஜன கலாச்சாரத்தைச் சேர்ந்த அக்னி நட்சத்திரம் சினிமாவை சென்னை அபிராமி தியேட்டரில் பார்த்த போது அதில் நடித்திருந்த நட்சத்திரங்களைப் பார்த்து அது யார் இது யார் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். 1978-இல் தில்லி சென்றேன். 1988 வாக்கில் சென்னை வந்த போது அக்னி நட்சத்திரம் பார்த்தேன். படம் வெளியாகி 200 ஆகியிருந்தது. பக்கத்தில் இருந்தவரிடம் ”படம் இவ்ளோ நல்லா இருக்கு, ஏன் கூட்டமே இல்லை?” என்று நான் கேட்டபோது அவர் அந்த விபரம் சொன்னார். அவரிடம்தான் ”அப்பாவாக நடிப்பவர் நன்றாக நடிக்கிறாரே, யார் அது?” என்று கேட்டேன். அந்த அளவுக்கு வெகுஜன கலாச்சாரத்திலிருந்து விலகி இருந்தேன்.
பிறகுதான் வெகுஜன கலாச்சாரம் பற்றிய ரொலான் பார்த்தின் ஆய்வுகளைப் படித்துத் தெளிந்தேன். அதன் பிறகு தமிழ் சினிமாவை என்னால் குப்பை என்று ஒதுக்க முடியவில்லை. பராசக்தி என்ற படத்தைப் பார்க்காமல் திராவிட இயக்கத்தின் எழுச்சியை ஒருவர் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? நாடோடி மன்னனில் நாடோடி எம்ஜியார் “நான் ஆட்சிக்கு வந்தால்…” என்று சொல்லி சில வாக்குறுதிகளை அளிப்பார். அப்போதெல்லாம் அவர் அதிமுக என்று ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வருவார் என்று யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. 1958-இல் வெளிவந்தது இந்தப் படம். அதிமுக ஆரம்பித்தது 1972. நாடோடி மன்னன் வசனத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என ஆக்குவேன் என்று வரும். கார்ல் மார்க்ஸ். வசனம் எழுதியவர் கண்ணதாசன். அந்தக் கால தமிழ் இலக்கியத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சி பற்றி நாம் ஒரு வார்த்தை காண முடியாது. அப்படி அவசியமும் இல்லை. சுதந்திரப் போராட்டம் பற்றியே நம் முன்னோடிகள் யாரும் – செல்லப்பாவைத் தவிர – எழுதவில்லை என்கிற போது திராவிடக் கட்சிகள் பற்றியும் நாம் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் பற்றி ஒருவர் ஆய்வு செய்ய வேண்டுமானால் வெங்கட் சாமிநாதன் திரும்பத் திரும்ப குப்பை என்று சொல்லிக் கொண்டிருந்த – நானும் சில காலம் அப்படி நம்பிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில்தான் அதற்கான தரவுகள் கிடைக்கும்.
அதேபோல் தமிழ் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒருவர் அணுக வேண்டிய இடம், தமிழ் சினிமா. தமிழர்களின் முக்கியமான குணம், இனப் பெருமை. வீரம். நட்புக்காக உயிரையும் கொடுப்பேன். மானம். என் கணவனை அநியாயமாகக் கொன்றால் என் முலையைப் பிடுங்கி எறிந்து ஊரையே எரிப்பேன். என் நடிகனின் படம் வெளியானால் அவனுக்கு அறுபது அடி கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணுவேன். அதற்கு ஆகும் செலவுக்கு என் பொண்டாட்டியின் தாலியை விற்பேன். என் தலைவி ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போனால் அல்லது தேர்தலில் தோற்றால் திருப்பது உண்டியலில் என் நாக்கை அறுத்துக் கொடுப்பேன்.
தமிழனின் இந்த முக்கியமான உளவியலை (psyche) புரிந்து கொள்ள தமிழ் சினிமாவில் கிடைக்கும் ஒருசில signifierகளில் ஒருவர்தான் எஸ்.வி. சுப்பையா. சிக்னிஃபயருக்குத் தமிழில் என்ன சொல்வார்கள் என்று எஸ். சண்முகத்தைத்தான் கேட்க வேண்டும். சிக்னிஃபயருக்கான கூகிள் விளக்கம்: In Saussurean analysis, which Barthes largely uses, the distinction between signifier and signified is crucial. The signifier is the image used to stand for something else, while the signified is what it stands for (a real thing or, in a stricter reading, a sense-impression).
தயவுசெய்து எஸ். சண்முகம் இதை இன்னும் விரிவாக விளக்க வேண்டும்.
திடீரென்று காலங்காலையில் நான் இந்த நினைவுகளில் மூழ்கக் காரணம், R.P. ராஜநாயஹம். எஸ்.வி. சுப்பையா பற்றிய அவர் பதிவைப் படித்ததும் எனக்கு இதெல்லாம் ஞாபகம் வந்தது. ராஜநாயஹத்திடம் அவ்வளவாக தன்முனைப்பு கிடையாது. இந்த அபூர்வமான குறிப்புகளெல்லாம் தொகுக்கப்பட்டு நூலாக வர வேண்டும். நானும் இந்தப் படங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு இந்த விஷயத்தில் எல்லாம் ஞாபக சக்தி அறவே கிடையாது. ராஜநாயஹத்தின் ஞாபக சக்தியும் அபூர்வமானது. அபாரமானது. கீழே ராஜநாயஹத்தின் பதிவு:
....



எஸ்.வி.சுப்பையா


நள்ளிரவு.
"சுப்பையா " - காஞ்சி பரமாச்சாரியாள் திரும்ப திரும்ப அழைப்பதாக தூங்கிக் கொண்டிருந்த
எஸ். வி. சுப்பையாவுக்கு உறுதியாக தோன்றுகிறது.
ரெட்ஹில்ஸ் பண்ணை வீட்டில் இருந்து உடனடியாக கிளம்பி இருட்டில் விடிய, விடிய நடந்தே போய் காஞ்சிபுரம் அடைந்து, காலையில் பரமாச்சாரியாள் முன் கண்ணீர் வடித்தவாறு நிற்கிறார்.
இப்படிப்பட்ட ஆன்மீக தேடல் கொண்ட வித்தியாசமான அபூர்வ நடிகர்.
செங்கோட்டை வி. சுப்பையா
சுப்பையாவின் பணிவு மிகவும் குழைவாக இருக்கும்.
" முதலாளி" என்று துண்டை இடுப்பில் கட்டும் பணிவு,
அதே முதலாளியிடம் கோபத்தைக்காட்டும் போது நெஞ்சை நிமிர்த்தி அவர் கோபப்பார்வை பார்க்கும் போது மற்றொரு எதிர்மறை சுப்பையாவாகி விடுவார்.
கனிவாய் சாந்தமாய் பார்க்கும் சுப்பையா ஒரு எல்லை என்றால் அருவருத்து எரிமலையாய் மாறி அரிவாளைத்தூக்கிவிடும்போது மற்றொரு எல்லையில் நிற்பார்.
அவர் மூக்கை துறுத்தி புன்னகைக்கும் அழகு.
வாய் திறந்து அழாமல் கண் கலங்கி கண்ணை மூடித் திறந்து கண்ணீரை சிந்தும் உருக்கம்.
பாகப்பிரிவினை படத்தில் பாலையாவுக்கு தம்பியாக வாயில் துண்டை வைத்து அழுகையை அடக்கும் சுப்பையா
"வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று மறைவது தான் வாழ்வில் பாதி!
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்று தான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்று தான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்று தான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்"
- களத்தூர் கண்ணம்மாவில் சாவித்திரியின் அப்பாவாக கண்ணீர் வடிக்கும் சுப்பையா. சிதம்பரம் ஜெயராமன் பாடல்
கண் கண்ட தெய்வம் படத்தில் ரெங்காராவுக்கு தம்பியாக, தான் சாவதற்கு கொஞ்சம் முன் அண்ணன் ரெங்காராவிடம் வந்து சுப்பையா
" உன்னை பார்க்கனும்னு தோணுச்சி. பாத்துட்டேன். வர்றேன்."
கப்பலோட்டிய தமிழன் படத்தில் மகாகவி பாரதியாக கோர்ட்டில் " எமக்குத் தொழில் எழுத்து, இமைப் பொழுதும் சோராதிருத்தல்!"

பாரதி பாடல் காட்சிகளில் சுப்பையா கண்ணை இமைக்கவே மாட்டார்.
"ராமு" படத்தில் மன நிலை பிறழ்ந்த தமிழாசிரியராக -
சிறுவன் ராமுவின் அன்பில் நெகிழ்ந்து
"தெய்வத்துக்கு ஆயிரம் கையிருக்குன்னு சொல்வாங்க. அதில் ஒரு கை கூட என் கண்ணீரைத் துடைத்ததில்லை. எனக்கு ஒரு வாய் சோறு கொடுத்ததில்லை. "
'சொல்லத்தான் நினைக்கிறேன்'
- 'மன நோயாளி' எஸ்.வி.சுப்பையாவிற்கு மூன்று பெண் மக்கள்.
பெண் பார்க்க வருபவர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று சொன்ன மகளை நோக்கி சைகையில் (ரெண்டே வார்த்தை பேசிக்கிறேன்...ரெண்டே வார்த்தை..) கெஞ்சும் சுப்பையா, பேச அனுமதி கிடைத்ததும் செய்யும் கர்ஜனை " எழுந்திருச்சி வெளியே போங்கடா முண்டங்களா"
அடுத்த முறை பெண் பார்க்கும் படலத்தின் முடிவில் வேதனையுடன் கண்ணை மூடி அமைதியாக சொல்வார்
" பொண்ணாப் பிறக்கறதே பாவம்.. பொண்ணாப் பிறக்கறதே பாவம்.."
"அரங்கேற்றம்" - எம்.என்.ராஜன்'ஆம்பளைங்கறது மரத்துப் போச்சின்னு சொல்றா..' சுப்பையா ' இன்னொருக்கச் சொல்லு..இன்னொருக்கச் சொல்லு..'
'ஆம்பளைங்கறதே மரத்துப் போச்சின்னு சொல்றா'
சுப்பையா முகம் பிரகாசமாகி ' ஆம்பளைன்றது மறந்து போச்சின்னு சொல்றாடி.. அவ அம்பாள்டி!'
'தாலியா சலங்கையா?' படத்தில் தன்னுடைய illegitimate daughter வாணிஸ்ரீயை சந்திக்கிற காட்சியில் சுப்பையாவின் கனிவான நடிப்பு.
நடிகர் ஆக இல்லாமல் சுப்பையா என்ற மனிதரின் சொந்த வாழ்வு பற்றி நடிகர் சிவகுமார் " இது ராஜ பாட்டையல்ல" நூலில்
சில மிக அபூர்வத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.அவற்றைப் படித்தால் சித்தர் போன்றவர் சுப்பையா என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.
சுப்பையாவிற்கு மறையும்போது ஐம்பத்தேழு வயது தான். அவருக்கு பாலகனாக ஒரு மகன் அப்போது இருந்தான்.
................................

Jul 10, 2019

No Resemblance without Strangeness


மேட்டூர் அருகே நெரிஞ்சிப்பேட்டையில் ஒரு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது
மனோரமா ஒரு நடிகனை பார்த்து “இவன பாத்தா எனக்கு யாரோ ஒருத்தர் ஞாபகம் வர்றாரு. இவன் சாயல் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் ஞாபகம் வருது” என்று சொன்னார்.
நான் மட்டுமே இதை ஆர்வமாக கவனித்தேன்.

மறு நாள் காலையிலும் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போதே மனோரமா மீண்டும் சொன்னார் ”யாரோ ஒர்த்தர் இவன மாதிரியிருப்பாரே..ன்னு தோணுது”
நான் மனோரமாவிடம் “ யாருன்னு ஞாபகம் வரலியாம்மா?”
மனோரமா “ சொல்றேன். எப்படியும் ஞாபகம் வந்துடும்”
என்னுடைய இயல்பான ஆர்வம். மறு நாள் நானே கேட்டேன்.
சாயல் என்பதே ஒவ்வொருவர் கண்ணுக்கு ஒவ்வொரு விதமாக தோற்றம் கொள்ளும். இன்னொருவர் பொதுவாக அதை “சே..சே.. அவருக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்கும்படியாக இருக்கும்.
அடுத்த நாள் நான் “கண்டுபிடிச்சிட்டீங்களா?”
மனோரமா “ அவர் ஒரு நடிகர் தான்..எப்படியும் சொல்லிடுறேன்”

கொஞ்ச நேரத்தில் என்னிடம் மனோரமா “ ஞாபகம் வந்துடுச்சி..சுப்பையா அண்ணன்! சுப்பையா அண்ணன் சாயல் இவன் கிட்ட இருக்கு”

எஸ்.வி.சுப்பையாவை குறிப்பிடுகிறார்.
Strange!

எஸ்.வி.சுப்பையா எப்பேர்ப்பட்ட நடிகர். (அப்போது அவர் இறந்து  12 வருடங்கள் ஆகியிருந்தது.)
அவர் சாயல் இந்த நடிகனிடம் மனோரமாவுக்கு தெரிந்திருக்கிறது.

இவனுக்கு  சுட்டுப்போட்டாலும் நடிப்பே வராது.

கேமராமேன் எம்.சி. சேகர் ( இயக்குனர் P.வாசுவின் சித்தப்பா) ரொம்ப மூட் அவுட் ஆகிக்கொண்டிருந்தார். ’இவன் நடிக்கிற ஷாட் ஓகே ஆக ரொம்ப டேக் ஆகி விடுவதால் களைப்பு அதிகமாகிறது. ஃபில்ம் ஏராளமா வேஸ்ட் ஆகிறது.”
இந்த நடிகனை  இப்போது நான் வீட்டில்  சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது
ஒரு நாள் டி.வியில் ஓடிய சீரியல் ஒன்றில் மீண்டும் பார்த்தேன்.





Oct 3, 2014

எஸ்.வி. சுப்பையா

இது என்னுடைய 700வது பதிவு!

செங்கோட்டை வி. சுப்பையா.
 

சுப்பையாவின் பணிவு மிகவும் குழைவாக இருக்கும். " முதலாளி" என்று துண்டை இடுப்பில் கட்டும் பணிவு, அதே முதலாளியிடம் கோபத்தைக்காட்டும் போது நெஞ்சை நிமிர்த்தி அவர் கோபப்பார்வை பார்க்கும் போது மற்றொரு எதிர்மறை சுப்பையாவாகி விடுவார்.

கனிவாய் சாந்தமாய் பார்க்கும் சுப்பையா ஒரு எல்லை என்றால் அருவருத்து எரிமலையாய் மாறி அரிவாளைத்தூக்கிவிடும்போது மற்றொரு எல்லையில் நிற்பார்.

அவர் மூக்கை துறுத்தி புன்னகைக்கிற அழகு. 

வாய் திறந்து  அழாமல் கண் கலங்கி கண்ணை இறுக்கி கண்ணீரை சிந்தும் உருக்கம்.


பாகப்பிரிவினை படத்தில் பாலையாவுக்கு தம்பியாக வாயில் துண்டை வைத்து அழுகையை அடக்கும் சுப்பையா

"வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று மறைவது தான் வாழ்வில் பாதி!
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்று தான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்று தான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்று தான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்"
- களத்தூர் கண்ணம்மாவில் சாவித்திரியின் அப்பாவாக கண்ணீர் வடிக்கும் சுப்பையா

 கண் கண்ட தெய்வம் படத்தில் ரெங்காராவுக்கு தம்பியாக, தான் சாவதற்கு கொஞ்சம் முன் அண்ணன் ரெங்காராவிடம் வந்து சுப்பையா" உன்னை பார்க்கனும்னு தோணுச்சி. பாத்துட்டேன். வர்றேன்."


 கப்பலோட்டிய தமிழன் படத்தில் மகாகவி பாரதியாக கோர்ட்டில் " எமக்குத் தொழில் எழுத்து, இமைப் பொழுதும் சோராதிருத்தல்!"
 பாரதி பாடல் காட்சிகளில் சுப்பையா கண்ணை இமைக்கவே மாட்டார்.

"ராமு" படத்தில் மன நிலை பிறழ்ந்த தமிழாசிரியராக -
சிறுவன் ராமுவின் அன்பில் நெகிழ்ந்து
"தெய்வத்துக்கு ஆயிரம் கையிருக்குன்னு சொல்வாங்க. அதில் ஒரு கை கூட என் கண்ணீரைத் துடைத்ததில்லை. எனக்கு ஒரு வாய் சோறு கொடுத்ததில்லை. "

'சொல்லத்தான் நினைக்கிறேன்' - 'மன நோயாளி' எஸ்.வி.சுப்பையாவிற்கு மூன்று பெண் மக்கள்.
பெண் பார்க்க வருபவர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று சொன்ன மகளை  நோக்கி சைகையில் (ரெண்டே வார்த்தை பேசிக்கிறேன்...ரெண்டே வார்த்தை..) கெஞ்சும் சுப்பையா, பேச அனுமதி கிடைத்ததும் செய்யும் கர்ஜனை
" எழுந்திருச்சி வெளியே போங்கடா முண்டங்களா"
அடுத்த முறை பெண் பார்க்கும் படலத்தின் முடிவில் வேதனையுடன் கண்ணை மூடி அமைதியாக சொல்வார்
 " பொண்ணாப் பிறக்கறதே பாவம்.. பொண்ணாப் பிறக்கறதே பாவம்.."

"அரங்கேற்றம்" -
எம்.என்.ராஜம் 'ஆம்பளைங்கறது மரத்துப் போச்சின்னு சொல்றா..'
சுப்பையா ' இன்னொருக்கச் சொல்லு..இன்னொருக்கச் சொல்லு..'
'ஆம்பளைங்கறதே மரத்துப் போச்சின்னு சொல்றா'
சுப்பையா முகம் பிரகாசமாகி ' ஆம்பளைன்றது மறந்து போச்சின்னு சொல்றாடி.. அவ அம்பாள்டி!'

'தாலியா சலங்கையா?' படத்தில் தன்னுடைய illegitimate daughter வாணிஸ்ரீயை சந்திக்கிற காட்சியில் சுப்பையாவின் கனிவான நடிப்பு. நெகிழ்ந்த புன்னகையையே மகளுக்கு பதிலாக தருவார்.

நடிகர் ஆக இல்லாமல் சுப்பையா என்ற மனிதரின் சொந்த வாழ்வு பற்றி நடிகர் சிவகுமார் " இது ராஜ பாட்டையல்ல" நூலில்
சில மிக அபூர்வத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.அவற்றைப் படித்தால் சித்தர் போன்றவர் சுப்பையா என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

சுப்பையாவிற்கு மறையும்போது  வயது ஐம்பத்தேழு. அவருக்கு பாலகனாக ஒரு மகன் அப்போது இருந்தான்.