Share

Showing posts with label சிவாஜி கணேசன். Show all posts
Showing posts with label சிவாஜி கணேசன். Show all posts

Oct 2, 2020

யார் வாழ்வு தான் சதம்?


'எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது 

அது எந்த தேவதையின் குரலோ' 


வாணி ஜெயராமின் இந்த பாடல் ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் போதே சிவாஜி முகம் குளோஸ் அப். 

உடனே, உடனே கொணஷ்டையை காட்டி விடுவார்.

 நடை கூட சரியாய் இராது. தொடர்ந்து அந்த பாடல் முழுவதும் தேவையில்லாத போஸ் கொடுத்துக்கொண்டு, நாடகபாணி தற்பெருமை புன்னகை செய்து, செயற்கையாக நடித்து

 பாட்டை கொன்று வென்றிருப்பார். 


எம். ஜி.ஆர் பாடல் காட்சிகளில் கோமாளி மாதிரி வேடிக்கையாக  வினோத உடை அலங்காரத்தில் நடித்திருக்கிறார் என்று நாக்குல பல்லு போட்டு கிண்டல் பண்ணுவார்கள். 

அவர்கள் திரிசூலம் படத்தில் எஸ். பி. பி பாடிய 'என் ராஜாத்தி வாருங்கடி, 

புதிய ராஜாவைப் பாருங்கடி' க்கு சிவாஜி கணேசன் ஆடை அலங்காரத்தை பார்க்க வேண்டும். சிவப்பு கழுதை காலர் சட்டை, குஞ்சம் வைத்த கோட்டு, பெல் பாட்டம் பேண்ட்டில் கேஸனோவா நெனப்போட, பெருமிதமாக 

ஆடிப் பாடுவது பற்றி 

மதுர சல்லி கமெண்ட்

 'ஐயய்ய.. மொத்தம் ஒவ்வாம, ஒட்டவே ஒட்டாம..

தாழன் சைஸ் சரியில்ல' 


'ரத்த பாசம்' படத்தில்

  பப்பள பள பள ஆடையில் 

எம். ஜி.ஆருக்கு சவால் விடும் 

இளம் வாலி'பபப'ராக 

 'பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ? 

தேன் மணக்கும் மேனியெல்லாம் தேவ காவியமோ?' ஆட்ட பாட்டம்



Jul 21, 2020

கல்யாண்குமார் காரில் சிவாஜி

1960 களில் நடந்த சம்பவம் ஒன்றை 
'நெஞ்சில் ஓர் ஆலயம்'கல்யாண்குமார் 
என்னிடம் 1992ல் சொன்னார். 

மௌன்ட் ரோட்டில் கல்யாண் குமார் 
தன்னுடைய அந்த நேரத்து மாடர்ன் காரை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார். 
சிவாஜி கார் இவரை தாண்டிப் போயிருக்கிறது. 

 ஓவர் டேக் செய்து போகும் போதே கல்யாண்குமாரை சிவாஜி கவனித்து விட்டார். 
சிவாஜியின் கார் டிரைவர் 
இவரை காரை நிறுத்த சொல்லி
 சிக்னல் செய்து, காரை தானும் 
இந்த கார் முன் நிறுத்தி விட்டார். 

ஜன நடமாட்டமுள்ள மௌன்ட் ரோட்டில், கடைகளில் உள்ளவர்களும் கவனிக்கும் முன் சிவாஜி அவர் காரில் இருந்து கல்யாண்குமார் காரில் மின்னலென நுழைந்திருக்கிறார். 

"டேய், எப்படா இந்த கார் வாங்குனே"

"எங்கடா போற "

கல்யாண் ஸ்டுடியோ பெயரைச் சொல்லியிருக்கிறார். 

" எனக்கும் அங்க தான்டா ஷுட்டிங் "

சிவாஜிகணேசனின் டிரைவர் வந்து எட்டிப்பார்த்திருக்கிறார். 

சிவாஜி "நான் இவன் கூட வந்துடறேன்டா. நீ ஸ்டுடியோவுக்கு போயிடு" 

டிரைவரை தன் கார் எடுத்துக் கொண்டு போக பணித்து விட்டார். 

கல்யாண்குமார் செல்ஃப் டிரைவிங். 

ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார். ஒரு நூறடியில் கார் நின்று விட்டது. 

என்ன முயன்று பார்த்தும் கார் கிளம்பவில்லை. 

சிவாஜிகணேசன் பதற்றம் அதிகமாகி 
திட்ட ஆரம்பித்து விட்டார். 

" பாவி, ஒன்னய நம்புனது தப்பாயிடுச்சேடா, ஏமாந்துட்டேனேடா, 
எவனாவது ஒர்த்தன் பாத்துட்டான்னா
 'சிவாஜி, சிவாஜி' ன்னு கூப்பாடு போட்டு 
கூட்டம் கூடிடுவானுங்களேடா"

'அண்ணே, அண்ணே மன்னிச்சிக்கங்க,
 ஐ ஆம் சாரி ' தவிப்பில் உளறியிருக்கிறார். 

சிவாஜிக்கு பங்க்சுவாலிட்டி
 வேறு ரொம்ப முக்கியம். 

கல்யாண் குமாருக்கு சிவாஜி சாருக்கு இப்படி
 ஒரு கஷ்டத்தை கொடுக்கும்படி ஆகி விட்டதே என்ற 
தர்ம சங்கடம். 

கல்யாண் குமார் சொன்னதில் இது வரை தான்                       எனக்கு இப்போது ஞாபகம் இருக்கிறது. 

அதன் பிறகு என்ன ஆயிற்று என்பது
 எவ்வளவு யோசித்தாலும் 
குழப்பம் தான் மிஞ்சுகிறது.

It's in my memory locked. 
- Shakespeare in Hamlet 

இது இயல்பான ஒன்று. 
நினைவில் நிழல் விழுவதும் 
ஞாபக சிக்கல் ஏற்படுவதும்.

What if?

பெரியப்பா. 

நாகையில் சுங்கத்துறை கண்காணிப்பாளராக                இருந்த போது Night patrolling போது
 நடந்த சம்பவம். 
 
வருடம் 1978
நல்ல நள்ளிரவு நேரம். 

நாகையை விட்டு தொலைவில் 

பெரியப்பா ஜீப்பில் உட்கார்ந்திருக்கிறார். 

ஒரு கார் வருகிறது. 

இன்ஸ்பெக்டர்கள் இருவர்
 ரோட்டோரமாக நிற்கிறார்கள். 

காரை நிறுத்தியிருக்கிறார்கள். 

காரில் இருந்து ஒரு கடுமையான சத்தம். 

'Sivaji Ganesan is on his way to Madras.'

ஜீப்பில் உட்கார்ந்திருந்த பெரியப்பாவுக்கு இந்த வார்த்தைகள் தெளிவாக கேட்கிறது. 
உடனே கேட்கிறார். "What if?" 

ஜீப்பை விட்டு இறங்கி காரை நோக்கி நடக்கும் போதே மீண்டும் கேட்கிறார் : "What if?" 

கடும் அமைதி. 

காருக்குள் இருட்டு.
 அந்த குரல் 
சிவாஜியுடையதும் அல்ல. 

பெரியப்பா கமாண்டிங் வாய்ஸில்
 "Switch on the light" 

காருக்குள் விளக்கு எரிந்த அதே நொடியில் 
அந்த விசேஷ குரலுடன் 
தலையை நளினமாக ஆட்டியவாறு சிவாஜி 
"Yes, I'm GANESAN "

லைட்ஸ் ஆன், ஸ்டார்ட் கேமரா, ஆக்சன் என்றவுடன் எத்தனை காலமாக இயங்கிய சட்டென்று இயங்கிய தேர்ந்த கலைஞன். 

'Please do check' மிக கனிவாக கணேசனின்        அடுத்த வார்த்தை. 

முன் சீட்டில் ஒருவர். அவர் தான் காரை நிறுத்தியவுடன் முதலில் கடுமையாக சீறியிருக்கிறார்.

சிவாஜியை பெரியப்பா 1962ல்
 திண்டுக்கல் அங்கு விலாஸ் முத்தையா பிள்ளை இல்ல திருமண விழாவில் சந்தித்திருக்கிறார். 

அப்போது இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது எடுக்கப் பட்ட புகைப்படம் 
பெரியப்பா வீட்டிலும், எங்கள் வீட்டிலும் இருந்தது. 

சிவாஜி வேட்டி, அரைக்கை சட்டையுடன். (அந்தக் காலத்தில் சிவாஜி தான் வேட்டி சட்டையில் எவ்வளவு அழகாக தோற்றம் தருவார்) 
பெரியப்பா பேன்ட், சர்ட்டில் 'இன்' செய்து பெல்ட் போட்டு இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தவாறு 
பேசுகிற போது, 
போட்டோ ஃப்ளாஷுக்கு கணேசன் சற்று எதிர் பாரா ஆச்சரிய பாவங்காட்டி கண் விரிக்கிற அந்த புகைப்படம் கண்ணுக்குள்ளேயே இன்றும் இருக்கிறது. 

1980களில் கூட எங்கள் வீடுகளில் இருந்தது. எத்தனை தடவை சிறுவனாக அதை நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன். 
எவ்வ்வ்வளவு விசேஷ புகைப்படங்கள் இன்று காணக்கிடைக்காமல் 
தொலைந்து போய் விடுகின்றன. 

பெரியப்பா 1972ல் ஒரு ஸுட்டிங்கில் சிவாஜியை சந்தித்ததுண்டு. 

Patrolling போது இதையெல்லாம் 
பெரியப்பா நினைவு கூர்ந்து 
அந்த நள்ளிரவு நிகழ்வு 
சிவாஜியுடன் ஒரு உணர்வு பூர்வமான சந்திப்பு.

https://m.facebook.com/story.php?story_fbid=2775950852618363&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=2775854145961367&id=100006104256328

Apr 15, 2020

காருக்குறிச்சி அருணாசலத்தின் கோவில்பட்டி பங்களாவில்

 புகைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், காருக்குறிச்சி அருணாசலம், சிவாஜி கணேசன்
மூவரும் இருக்கிறார்கள்.
கொஞ்சம் சலங்கை 1962.
இப்படி இது போல அவர்கள் மூவரும் சௌஜன்யமாக பேசிக்கொண்டிருப்பது
அதற்கும் முந்தைய காலம்
என்று தெரிய வந்துள்ளது.
ஏ. பி. என் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி நடித்த வடிவுக்கு வளைகாப்பு கூட 1962 தான்.
அடுத்த வருடம் சிவாஜியை குலமகள் ராதையில் சிவாஜியை ஏ. பி. என் இயக்கினார்.
1964 ல் சிவாஜியின் நூறாவது ரன் நவராத்திரி
ஏ. பி. என் கை வண்ணம் தான்.
அந்த வருடம் தான் காருக்குறிச்சியின்
அகால மரணம்.
இந்த புகைப்படம்.

Every picture tells a story.
காருக்குறிச்சி அருணாசலத்தின்
கோவில்பட்டி பங்களாவில்
இந்த உரையாடல்.
ஏ. பி. நாகராஜன் வரும் போதெல்லாம் காருக்குறிச்சியின் மனைவி
ராமலட்சுமி அம்மாளிடம்
வத்தக்குழம்பு கேட்பாராம்.
நாகராஜனும், கணேசனும், அருணாசலமும்
கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்' நாவலை படமாக்குவது பற்றி விவாதித்து இருக்கலாம்.
The possibility of the future.
விகடனில் தொடராக வந்த போது
வாசகர்கள் ஒன்றிப் போன தொடர்கதை.
கடைசியில் கதை நாயகனுக்கும், நாயகிக்கும் திருமண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு விகடன் இதழோடு தரப்பட்டது.
விகடனுக்கு ஏகப்பட்ட கல்யாண வாழ்த்து தந்திகள் குவிந்தன என்று சொல்வார்கள்.
1968 ம் ஆண்டு தான் தில்லானா மோகனாம்பாள் வெளி வந்தது.
நிச்சயம் ஏ. பி. நாகராஜனும், சிவாஜி கணேசனும்
அந்த சமயத்தில் நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாச்சலத்தை நினைவில்
பெரு மூச்சு விட்டிருப்பார்கள்.
Life is what happens when you make other plans.

Apr 14, 2020

சிவாஜியும் காருக்குறிச்சியும்

'சிங்கார வேலனே, தேவா'
பாடல் ஜானகியும், காருக்குறிச்சியும் பாடி பதிவு செய்யப்பட்டிருந்தது. பாடலின் தரம் ஜானகியின் குரலோடு காருக்குறிச்சியின் ராட்சச வாத்தியத்தின் காற்றால் உன்னத உச்சத்தை எட்டி விட்டது.
(இன்றும் அந்த ஆபேரி ராக பாடல் கேட்கும்போதும் கண்ணீரை கட்டுப்படுத்த முடிந்ததில்லை.)

தமிழ் திரையுலகமே இந்த பாடல் பற்றி பேச்சு. ஜெமினி கணேசனின் அந்த கொஞ்சும் சலங்கை பாடலை நான் அமெரிக்காவுக்கு போவதற்கு முன்னர் கேட்டே ஆக வேண்டும் என்று சிவாஜி விரும்பியிருக்கிறார்.
When Caesar says do it, it is performed.
பாடலை கேட்டு விட்டு தான் விமானத்தில் ஏறினாராம்.
'வச்சிக்றேன். இதுக்கு என் பாணியில் பதில் சொல்றேன்'என்று தானே நினைத்திருப்பார்.
பிரபலமான மார்லன் ப்ரான்டோ - சிவாஜி கணேசன் புகைப்படம் அந்த அமெரிக்க விஜயத்தின் போது எடுக்கப்பட்டது தான்.
பின்னால் அந்த அசுர வாத்தியத்தை இந்த தமிழ் திரையுலகின் அசுர குழந்தை தில்லானா மோகனாம்பாளில் எத்தகைய உச்சத்திற்கு தன் நடிப்பால் உயர்த்தி சாதனை புரிந்தார்.

காருக்குறிச்சி அப்போது மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவரல்லவோ தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசித்து உன்னத நிலைக்கு கொண்டு சென்றிருப்பார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை எப்போது பார்க்க நேர்ந்தாலும் இந்த எண்ணத்தை தவிர்க்க முடிந்ததில்லை. 
சேதுராமன் - பொன்னுசாமி சகோதரர்களும் நிறைவாகவே செய்திருந்தார்கள்.
இந்த புகைப்படங்களில் சிவாஜி, காருக்குறிச்சி அந்நியோன்யத்தை பாருங்கள்.

Aug 11, 2019

கும்பளாங்கி, வேலூரு, உயர்ந்த மனிதன்



கும்பளாங்கி நைட்ஸ் ஒரு வழியா நானும் கூட பாத்துட்டேன்.

எப்பவுமே ஒரு சிக்கல் உண்டு. ஒரு நல்ல மளையாளப்படம் பார்க்க வாய்த்து விட்டால் தொடர்ந்து ஒரு பத்து மளையாளப்படம் பார்த்தே தீர வேண்டும் என்று temptation கொன்று எடுத்து விடும். The one thing I can't resist is, this Malayala movies temptation.
செம்மீன்ல இருந்தே இப்படித்தான். சத்யன், ப்ரேம் நசீர், மது, ஷீலா, சாரதா, ஜெயபாரதி, ஸ்ரீவித்யா, சோமன், ஜெயன், பிரதாப் போத்தன் துவங்கி மோகன்லாலும், மம்முட்டி, திலகன், எல்லாம் வரிசை கட்டி நினைவில் நிற்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
'பாவாட ப்ராயத்தில் நின்னை ஞான் கண்ட'
வாய் முணுமுணுக்கிறது.




......

வேலூர் ஜகஜ்ஜால வேடிக்கையில 
மந்திரவாதி யாரு?
ரத்தங்கக்குனது யாரு?



....



'உயர்ந்த மனிதன்' சிவாஜியின் 125 வது படம். 
124 படங்கள் நடித்த பின், புதிதாக ஒரு பாத்திரத்தை சிறப்பாக சித்தரிப்பதில் நயமான நேர்த்தியை நிகழ்த்திக்காட்டியதில் இருக்கிறது நடிகர் திலகத்தின் சாதனை வீச்சு. உயர்ந்த மனிதன் சிவாஜி கணேசன்



Jun 23, 2017

வித்யாலட்சுமி


திருச்சி முதலியார் சத்திரம். அங்கே ஒரு முதிய பெண்மணி.
இவர் சங்கிலியாண்ட புரத்தில் பல வருடங்களுக்கு முன் இருந்தவர்.
இருட்டினால் எப்போதும் ஒரு
ரொம்ப பழைய காலத்து விஷயத்தை நினைவு கூர்வார்.( 1930களில் நடந்த விஷயம்) 

’ இன்னேரம் இருட்ட ஆரம்பிக்கிற நேரம் எப்பவும் சிவாஜி கணேசனுடைய அம்மா விளக்கு பொருத்த வேண்டி ஒவ்வொரு வீடா போய் ‘கொஞ்சம் விளக்குக்கு எண்ணை கிடைக்குமா அம்மா’ என்று கெஞ்சுவா…..’
அப்போது சிவாஜி உச்சத்தில் இருந்த காலம். 



’குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்’ பாடலில் ஒரு வரி -
 “ராஜாமணி எனும் அன்னை முகத்தில் விளங்கிடும் மங்கலக் குங்குமம்”
தன் தாயை மகாராணியாக்கி விட்டார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்.

அவருடைய வித்தை – நடிப்பு – அவரை எங்கோ கொண்டு போய் விட்டது. செல்வம், செழிப்பு, புகழ்.

சங்கிலியாண்டபுரத்திலேயே ஒரு சிவாஜி காலனியே இருந்தது. எம்.ஆர்.ராதா காலனியும் கூட.


……………………………………………..

’போடா போடா பொக்கே எள்ளுக்காட்டுக்கு தெக்கே’ ஜானகி பாட்டுக்கு ஒரு கிழவி நடித்திருப்பார். அந்த கிழவியின் கணவர் மணி என்று ஒரு வயசாளி ஒரு விஷயம் சொல்வார்.

சிவாஜி பராசக்தியில் நடிப்பதற்கு முன் இவரிடம் ஏக்கமும் விரக்தியுமாக கேட்பாராம் ‘ மணியண்ணே.. நானெல்லாம் என் வாழ்க்கையில ஒரு நூறு ரூபா நோட்ட கண்ணுல பாப்பனாண்ணே….’

சிவாஜி கணேசனின் பொருளாதார போராட்டமெல்லாம் அவருடைய இருபத்தி நான்கு வயதிற்குள்ளே தான். அதன் பின் வறுமை என்பதை அவர் எங்கே பார்த்திருப்பார்?

பராசக்தி படத்திற்கு பின் வித்யாலட்சுமியின் அருள் பரிபூர்ணமாக கிடைத்து விட்டது. He never looked back.

கற்ற வித்தை மூலம் எல்லோரும் பெரும் சம்பாத்தியம் செய்து விடுவதில்லை. அதற்கு அஷ்டலக்ஷ்மிகளில் ஒருத்தியான வித்யாலட்சுமியின் அருள் வேண்டும் என்பது ஐதீகம்!
சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் ஆகாது என்பார்கள். ஆனால் ’வித்யா லட்சுமி’யில் தான் இருவரும் இணைகிறார்கள். ’வித்யாலட்சுமி’யின் விசித்திர தனித்துவம் இது! 






………………………….

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_21.html

Jun 6, 2017

வெள்ளி தாம்பாளம்



ஆறுமுகம் செட்டியார் தயாரிப்பாளர்.
பி.ஆர்.சோமு இயக்குனர்.
’தேவன் கோவில் மணியோசை’ – இந்தப்பெயரில் ஒரு படத்தை எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.


பி.ஆர்.சோமு கதை சொல்வது பிரமாதமாக இருக்கும்.
படம் எப்படி உருவாகிறது என்பது வேறு விஷயம். கதை சோமு மாதிரி சொல்ல முடியாது. The only director who delivered his story with re-recording music effect.
சோமு கதை சொன்னா கடன் வாங்கி படம் எடுப்பாங்க.

பி.ஆர்.சோமு அழகா பேசுவார்.அளவுக்கு அதிகமாவும் பேசுவார்.

அந்த நேரத்தில் தெய்வ சங்கல்பம், உயிர், எங்கள் குலதெய்வம் போன்ற படங்கள் அவர் இயக்கத்தில் வந்திருந்தன. எல்லாப்படத்திலும் முத்துராமன் நடித்தார். தெய்வ சங்கல்பத்தில் ஏ.வி.எம் ராஜனும் நடித்திருந்தார்.

சோமு தீவிர சிவாஜி ரசிகர். அதனால் சிவாஜியை வைத்து ஒரு படம் இயக்க முடியாதா என்ற தவிப்பில் இருந்தவர்.

சிவாஜி  ’தேவன் கோவில் மணியோசை’ கதாநாயகன்!
கொஞ்சம் டல்லாய் இருந்த அவருடைய மார்க்கெட் ’தீபம்’ படம் ரிலீசான பின்  சம்பளம் அப்போது ஏழு லட்சமாக உயர்ந்திருந்தது.

அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும்.
யார் சொன்ன ஐடியாவோ? எவ்வளவு பெரிய நடிகர். அவருக்கு லட்ச ரூபாயை கௌரவமாக கொடுக்க வேண்டும்.
கனமான பெரிய வெள்ளி தாம்பாளம் வாங்கியிருக்கிறார் ஆறுமுகம் செட்டியார்.

ஒரு பொருளை தாம்பாளத்தில் வைத்துக்கொடுத்தால் பொருளை எடுத்துக்கொண்டு தாம்பாளம் திருப்பிக்கொடுக்கப்படும்.

சிவாஜி வீட்டிற்கு போய் ஆறுமுகம் செட்டியாரும், பி.ஆர்.சோமுவும் லட்ச ரூபாயை அந்த வெள்ளித்தட்டில் வைத்து அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். சந்தோஷமாக சிங்கத்தமிழன் பெற்றுக்கொண்டார்.

பணத்தோடு வெள்ளித்தட்டும் உள்ளே போய்விட்டது.
பணத்தை எண்ணிப்பார்த்து எடுத்துக் கொண்ட பின் தாம்பாளம் திருப்பித்தரப்படுமாக்கும் என்று எட்டி, எட்டிப்பார்த்திருக்கிறார்கள்.
தாம்பாளம் திரும்பி வரவில்லை. விடை கொடுக்கப்பட்டு தயாரிப்பாளரும், இயக்குனரும் கிளம்ப வேண்டியிருந்தது.

அப்போதைக்கு சிவாஜி கணேசனை வைத்துப் படம் பண்ணப்போகிற சந்தோஷம் போதுமானதாயிருந்தது.

ஜெயலலிதா கதாநாயகியாக புக் செய்யப்பட்டார்.

’உயிர்’ படத்தின் இசையமைப்பாளர் ரமணாஸ்ரீதர் எனப்படும் விஜய்ரமணி தான் ’தேவன் கோவில் மணியோசை’ இசையமைப்பாளர். இவரும் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகராயிருந்தவர். பின்னால் வைதேகி காத்திருந்தாள், சிந்து பைரவி, விக்ரம் போன்ற படங்களில் இவர் ராகவேந்தர் என்ற பெயரில் நடிகராக பிரபலமானார்.

’தேவன் கோவில் மணியோசை’படம் ஒரு ஷெட்யூலோடு நின்றது. நின்றது நின்றே விட்டது.
 ஏதோதோ காரணம். சிவாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் மனஸ்தாபம் என்றும் சொல்லப்பட்டது.

சோமு உடனே ஆறுமுகம் செட்டியாரை சமாதானப்படுத்தி இன்னொரு கதை பிரமாதமாக சொல்லி சின்ன பட்ஜெட்டில்
“நினைவில் ஒரு மலர்” படம் பூஜை. முத்துராமன், ரவிச்சந்திரன், சுமித்ரா, சுருளிராஜன், என்னத்தை கன்னையா நடிக்க, கிட்டத்தட்ட முழு படமும் முடிவடைந்த நிலையில் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் யாரும் வாங்கத் தயாராக இல்லாத நிலை. படம் வெளி வரவேயில்லை.

ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ’ அழைத்தால் வருவேன்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்த பி.ஆர் சோமுவை பார்க்க கவலை தோய்ந்த முகத்துடன், கவலை தோய்ந்த என்ன, பேய் அறைந்தாற் போல ஆறுமுகம் செட்டியார் வரும்போதெல்லாம் தாம்பாளமும் கை விட்டுப் போய் விட்ட சோகத்தை டைரக்டரே ஞாபகப்படுத்துவார்.

”சாதாரண தாம்பாளத்தில லெட்ச ரூபாய வச்சு கொடுத்திருக்கலாம். தப்பு பண்ணிட்டோம்.”
..............................................................

http://rprajanayahem.blogspot.in/2012/03/blog-post_30.html

http://rprajanayahem.blogspot.in/2012/12/herculean-task.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_22.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/2012/12/taste-differs.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/over-action.html

http://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_18.html




Feb 10, 2017

சிவாஜியின் சரித்திர புராணப்படங்கள்


( ’அந்தி மழை’ பிப்ரவரி 2017 இதழில் பிரசுரமாகியுள்ளது)

அப்போது பராசக்தி பட வேலை முடிந்திருந்தாலும் ரிலீஸ் ஆகியிருக்கவில்லை. எம்.ஜி.ஆர் நடித்த” அந்தமான் கைதி” படம் தோல்வி. சமூகப்படம்.
சிவாஜி கணேசனின் திருமணம் சுவாமி மலையில் நடந்தது.திருமணத்திற்கு தாமதமாக வந்த எம்.ஜி.ஆர் பந்தியில் அமர்ந்திருக்கும் போது புதுமாப்பிள்ளை சிவாஜி ஏதோ எம்.ஜி.ஆரை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார்.
“ நீங்க ஏன்னே கோட்டும் சூட்டும் போட்டு ஆக்ட் பண்றீங்க. நீங்க கத்திய எடுத்து சுழட்டுனா ரசிகர்கள் கை தட்டுவாங்களே’’

திரும்பிச்செல்லும்போது அரங்கண்ணலிடம் எம்.ஜி.ஆர்
‘கணேசு என்னைப் பார்த்து என்ன கேட்டது பார்த்தீங்களா? இருக்கட்டும்.. பாத்துக்கறேன்.”
பின்னால் ஃபுல் சூட்டில் மாடர்னாக எப்படியெல்லாம் புரட்சி நடிகர் கலக்கினார்.

தமிழ்த்திரையில் எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவரும் இணைந்து நடித்த சமூகப்படம் கூண்டுக்கிளி ராமண்ணா இயக்கத்தில் வெளியான அதே வருடத்தில் சிவாஜி சரித்திரப்படங்களிலும் நடிக்கத்தான் செய்தார்.

“மனோகரா”. பராசக்தி சமூகப்படத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதி வசனம் எழுதிய சரித்திரப்படம். எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார்.
வாள் வீச்சு விஷயத்தில் எம்.ஜி.ஆரை மிஞ்ச முடியாது என்பதால் கணேசன் சரித்திரப்படங்களில் கனல் தெறிக்க வாய் வீச்சு தான் செய்தார். “குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே”

தூக்கு தூக்கி – ’கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொடுத்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர்காப்பான் தோழன்’ சிவாஜிக்கு மட்டுமல்லாமல் கூண்டுக்கிளி படத்தில் ‘சரியா தப்பா’, தூக்குத் தூக்கியின் பாடல்கள் டி.எம்.சௌந்தர்ராஜனை பிஸியான பின்னணி பாடகராக நிறுத்தி வைத்தன.

நானே ராஜா என்ற ஒரு சரித்திரப்படம்.’ மேகத்திரை பிளந்து, மின்னலைப் போலே நுழைந்து வில்லினிலிருந்து வெளிப்பட்ட அம்பு போலே அங்கே போகுது பார் வெண்புறா!’ சிவாஜிக்கு தம்பியாக வில்லன் பாத்திரத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்திருந்தார்.

தெனாலிராமன் கதையும் திரையில் வந்திருக்கிறது. பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் கிருஷ்ண தேவராயராக என்.டி.ராமாராவ் நடித்தார். அப்பாஜியாக வி. நாகையாவும் ராஜகுருவாக நம்பியாரும் பங்காற்றினார்கள். பானுமதியும் ஜமுனாவும் நடித்திருந்தார்கள். “உலகெலாம் உனதருளால் மலரும் கிருபாகரியே, மஹேஸ்வரியே” விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்.

ராஜாராணி சரித்திரப்படமல்ல. ஆனால் அதில் சேரன் செங்குட்டுவனாக மேடையில் நடிக்கும் சிவாஜியின் வசனம்
“காவிரி தந்த தமிழகத்து புதுமணலில் களம் அமைத்து சேர, சோழ, பாண்டிய மன்னர், கோபுரத்துக் கலசத்திலே யார் கொடி தான் பறப்பதென்று போர் தொடுத்துக்கொண்டிருந்த காலமது,” என ஆரம்பித்து நான்கரை நிமிடங்களுக்கு ஒரே ஷாட்.

தங்கமலை ரகசியம் “ அமுதைப் பொழியும் நிலவே” என்று கு.மா.பாலசுப்ரமண்யம் எழுதிய பாடலுக்கு ஆடிப்பாடிய ஜமுனா பாடல் காட்சி முடியும் போது காட்டுமிராண்டியாக சிவாஜியைப் பார்த்து அலறும் காட்சி.

வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும் போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.

’அம்பிகாபதி’ பாடல்கள் எஸ்.ராமனாதன் இசையால் ஜீவிதத்தன்மை பெற்றன. ’சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே’
இந்தப் பாடலை சிவாஜி பாடுகிற காட்சியில் அந்தப் பாடல் வரிகளை ஏ.கருணாநிதி உடனே பதிவெடுப்பதாக இருக்கும். பாடல் வரிகளை கவனித்து உடனே எழுதும்
ஏ. கருணாநிதியின் gesture, expression! ஆஹா! குழந்தைத்தனமான காமெடியன்! பக்கத்தில் டனால் தங்கவேலு! பானுமதி, எம்.கே.ராதா, நம்பியார்.
”மாசிலா நிலவே நம் காதலை மாநிலம் கொண்டாடுதே, கண்ணே’'

டி.பிரகாஷ்ராவ் இயக்கிய ’உத்தமபுத்திரன்’ பி.யு.சின்னப்பா நடித்த படத்தின் ரிமேக்.

காத்தவராயன் மற்றுமொரு சின்னப்பா பட (ஆரியமாலா) ரீமேக். ” வா கலாப மயிலே, ஓடி நீ வா கலாப மயிலே…. ஆரியமாலா! ஆரியமாலா!”
சாவித்திரியும் சிவாஜியும் காதல் பார்வை பரிமாறிக்கொள்ளும் காட்சி ஒன்று உண்டு. அதனால் தான் இவர் நடிகையர் திலகம்! அவர் நடிகர் திலகம்!

சம்பூர்ணராமாயணம் பார்த்த ராஜாஜி பாராட்டு “பரதனை மிகவும் ரசித்தேன்”

எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

சின்ன அண்ணாமலை சிவாஜி ரசிகர் மன்றங்களை வழி நடத்தியவர்.
’சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதில் ஒரு சுவாரசிய நிகழ்வை எழுதியிருக்கிறார்.
இவர் காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு தியேட்டரில் ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்திருக்கிறது. படம் ’வீரபாண்டிய கட்டபொம்மன்.’ இவர் காரிலிருந்து இறங்கி பார்த்திருக்கிறார். எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இவர் ரொம்ப சோகமாய் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி ’படம் எப்படி இருக்கு?’ என்று கேட்டிருக்கிறார். அந்த ரசிகர் உடனே ரொம்ப வேதனையுடன் சொல்லியிருக்கிறார் “ என்னங்க படம் இது. சிவாஜி சரியில்லீங்க. இதுவே எங்க எம்.ஜி.ஆரா இருந்தா சண்டை போட்டு அவ்வளவு வெள்ளைக்காரனுங்களையும் அடிச்சி விரட்டியிருப்பாரு! பானர்மேன தூக்குல தொங்கவிட்டுருப்பாரு! இப்படி சிவாஜி மாதிரி தூக்குல தொங்கியிருக்கவே மாட்டாரு.”


குறவஞ்சி படத்தில் கணேசனின் குமுறல்“ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்.”

சிவாஜி நடித்தும் ஒரு ‘ஸ்ரீவள்ளி’ வந்திருக்கிறது.

அரிச்சந்திரா ஜி.வரலட்சுமியின் கணவர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் சிவாஜி நடித்த புராணப்படம். பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கவேண்டியிருந்ததும்
மனைவியையும், மகனையும் ஏலம் விடுகிற காட்சியில் “ இந்த உலகம் அறியாத புதுமை, என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது இந்த உலகம் அறியாத புதுமை”. Classic Situation! சிவாஜியின் வழக்கமான பீறிட்டுகொப்பளிக்கும் சோகத்தை இதில் பார்க்க முடியாது. மிக நேர்த்தியாக உள்ளடக்கிய துயரத்தை காட்டியிருந்தார்.

கப்பலோட்டிய தமிழன் பார்த்த வ.உ.சி.யின் மகன் விம்மினார். “என் அப்பாவை மீண்டும் பார்த்தேன்”

சரித்திர நிகழ்வுகள் பற்றிய சரியான, முறையான புரிதல் தன்மையின்றி தான் இந்தப்படம்.

பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்களுக்குப் பிறகு -
ஒரு ஸ்டுடியோவில் சிவாஜி ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார்.
மேக் அப்புடன் ஒரு மரத்தடியில்.
பக்கத்தில் பந்துலு வருகிறார்.
' யோவ்! என்ன அத்திப்பூத்தாப்பலே.... காத்து இந்தப்பக்கம் அடிக்குதா... '
பந்துலு ' பவ்யம் பாவ்லா ' எதுவும் செய்ய மாட்டார். மரக்கிளை ஒன்றில் பார்வை நிலைத்துள்ள நிலையில் சிரித்துக்கொண்டே உட்கார்வார்.
பந்துலு மெதுவாக வேறுபக்கம் பார்த்துக்கொண்டே சொல்வார் ''புதுசா ஒரு படம் பண்ணப்போறேன் . ''
சிவாஜி " என்ன கதை "
பந்துலு " மகாபாரதத்திலே இருந்து ''
சிவாஜி '' படத்து பேர் என்னவோ "
பந்துலு " கர்ணன் "
சிவாஜி கொஞ்சம் முகத்தை சுருக்கி கொஞ்சம் இடைவெளி விட்டு
" யாரு ஹீரோ ?"
பந்துலு வானத்தை தற்செயலாக பார்த்தவாறு விட்டேத்தியாக " சிவாஜி கணேசன் யா "
சிவாஜி கண்ணை விரித்து , மூக்கை விடைத்து , குரலை செருமி விட்டு ஒன்றும் சொல்லாமல் இருக்கும்போதே பந்துலு எழுந்து விடுவார் .
" நாளைக்கு பூஜை ."
மறு நாள் அதிகாலை,
சூரியன் உதிப்பதற்கு முன்பே
முழு மேக் அப்புடன்
பந்துலு பட பூஜையில் சிவாஜி ஆஜர் !

பந்துலு -சிவாஜி நட்பும் தொழில் பங்களிப்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது.



சிவாஜியாகவே கர்ணன் பாத்திரம்.


தமிழ் திரை கண்ட அசுர நடிகன் சிவாஜியின் நடிப்புப் பாணிக்கு மிகைத்தன்மை கொண்ட புராண அதீத கதாபாத்திரங்கள் தேவையாகத்தான் இருந்தன.

...................

ஏ.பி. நாகராஜன் – சிவாஜி பிணைப்பு புராணங்களை திரையில் காட்சிப்படுத்தியதில் முக்கிய பகுதியெனச் சொல்ல வேண்டும்.

பரம சிவனாக நடித்த ’திருவிளையாடல்’ உள்ளடக்கிய நட்சத்திரக் குவியல் பிரமிக்க வைக்கிறது. சாவித்திரி, கே.பி.சுந்தராம்பாள், டி.எஸ்.பாலையா, நாகேஷ், டி.ஆர்.மஹாலிங்கம், தேவிகா, முத்துராமன், ஒ.ஏ.கே.தேவர் இவர்களோடு நக்கீரனாக ஏ.பி. நாகராஜனும்.
’சரஸ்வதி சபதம்’ கல்வியா? செல்வமா? வீரமா?
நாரதராகவும், சரஸ்வதி அருள் பெற்று பெரிய அறிவாளியாக மாறிய ஒரு மூட ஊமையாகவும் இரண்டு வேடம்.
அலைமகள் கிருபையால் மகாராணியாக மாறிய பரம ஏழைப்பெண்ணாக கே.ஆர் விஜயா. “ ராணி மகாராணி, ராஜ்ஜியத்தின் ராணி, வேகவேகமாக வந்த நாகரீக ராணி”
சரஸ்வதியாக சாவித்திரியும் பார்வதியாக பத்மினியும்.
எபிசோட் பாணியை அதிக பட்சமாக தன் படங்களில் திரளான நட்சத்திர நடிகர்களை வைத்து ஏ.பி.என் திறம்பட செய்து காட்டிய இயக்குனர்.

’திருவருட்செல்வர்’- தொகையறா முடிந்து பல்லவியின் முதல் வரி ’மன்னவன் வந்தானடி’க்கு ஒரு நடை நடக்கும் போது தியேட்டரில் பரவச ஆர்ப்பரிப்பு.
காஞ்சி பெரியவரை இமிடேட் செய்து முதிய அப்பராக சிவாஜி நடித்து பாராட்டு பெற்ற படம் திருவருட்செல்வர்.
”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே” பாடலுக்கு ஜெமினி கணேசன். ஒரு சிறிய பாத்திரத்தில் சாவித்திரி. முத்துராமனின் மனைவியாக. தான் நடித்த படங்களில் இதில் தான் ஊதிப்பெருத்துப் போய் தோற்றம் தந்தார் நடிகையர் திலகம்.

’திருமால் பெருமை’ ஆழ்வார்களாக சிவாஜி. ’மலர்களிலே பல நிறம் கண்டேன், திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்’ ’பச்சை மாமலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா, அமரரேறே, ஆயர்தம் கொழுந்தே…’ ‘கோபியர் கொஞ்சும் ரமணா, கோபால கிருஷ்ணா’


’கந்தன் கருணை’ ஜெமினி,சாவித்திரி,அசோகன், சிவகுமார் எல்லோரும் நன்றாகவே நடித்திருப்பார்கள்.
சிவாஜி தான் வீரபாகுவாக வந்தவுடன் குண்டியை நெளித்து நடந்து, குசு போட்டு, புருவத்தை நிமிர்த்தி, மூக்கை விடைத்து ஓவர் ஆக்சன் செய்து.....


சிவாஜி நடித்த சரித்திர, புராண படங்களில் தில்லானா மோகனாம்பாள் பற்றியும் குறிப்பிடுவது சரிதானா?
1968ல் வெளி வந்த இந்த படம் பாரம்பரியமிக்க கலைகள் சம்பந்தப்பட்டது. ஆனந்த விகடனில் தொடராக கொத்தமங்கலம் சுப்பு எழுதினார். வாசகர்கள் சிக்கல் சண்முகசுந்தரத்தையும்,
மோகனாம்பாளையும் மிகவும் நேசித்து படித்தார்கள்.
நாயகன் – நாயகி இருவரும் கல்யாணம் செய்து கொள்வதாக அழகான கல்யாண பத்திரிக்கையே ஆனந்த விகடனில் இணைத்த போது நிறைய வாழ்த்து தந்திகள் பத்திரிக்கை அலுவலகத்தில் குவிந்தனவாம்.

கதை நடக்கும் காலம் 1940களில் இருக்கலாம். ஏ.பி. நாகராஜனின் மாஸ்டர் பீஸ் என்று தில்லானா மோகனாம்பாளை சொல்ல வேண்டும். ’சங்கராபரணம்’ எடுத்த கே.விஸ்வநாத் வரிசையில் வைத்து மதிக்கப்பட வேண்டிய இயக்குனர் நாகராஜன்.
நாகேஷ் செய்த வைத்தி பாத்திரம் விசேசமானது. (திருவிளையாடலில் தருமி) பாலையாவின் தவில் வித்வான் பாத்திரம். சிவாஜிக்கும் பத்மினிக்குமே மிக முக்கியமான படம் தில்லானா மோகனாம்பாள்.


இதற்கு அடுத்த வருடம் பிரமாண்ட எதிர்பார்ப்புகளுடன் வெளி வந்த ஸ்ரீதரின் சிவந்த மண் கூட பீரியட் பிக்சர் வகை தானே. சரித்திரப்படமா அல்லவா என்பது பற்றிய குழப்ப தன்மையை கொண்ட விசித்திர தன்மை.
’தர்மம் எங்கே’ இயக்கியவர் சிவாஜிக்கு மிகவும் பிடித்த ஏ.சி.திருலோக்சந்தர். ஜெயலலிதா, முத்துராமன், நம்பியார், நாகேஷ் நடித்திருந்தார்கள்.
’சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்’
’வீரமென்னும் பாவை தன்னை கட்டிக்கொள்ளுங்கள். வெற்றி எனும் மாலை தன்னை சூடிக்கொள்ளுங்கள்’ விசேஷமாக சொல்ல ஏதுமில்லை.

’சித்ரா பௌர்ணமி’ தான் சரித்திரக் கதை வகை படங்களில் கடைசியாக நடிகர் திலகம் நடித்த படம்.
’வந்தாலும் வந்தான்டி ராஜா,அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா’
’என்னடி சின்னக்குட்டி போட்ட புள்ளி சரிதானா?’
பி.மாதவன் இயக்கத்தில் ஜெயலலிதா, முத்துராமன், விஜயகுமாரி, சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர் நடித்திருந்தார்கள். தோல்வியடைந்தது.

சிவந்த மண் போல தர்மம் எங்கே, சித்ரா பௌர்ணமி இரண்டிலும் அநியாய சர்வாதிகார ஆட்சிக்கெதிரான புரட்சிக்காரன் கதை தான். எல்லாவற்றிலும் முத்துராமனுக்கும் எப்படியாவது முக்கியமான வேலை இருந்தது.


Dec 15, 2012

Taste differs

புத்தனே
ஞானம் வாய்த்த பின்
அழக்கூடுமோ
உன்னால்
- கலாப்ரியா


அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் வருகிற ராம ஐயங்கார் பாத்திரம் ஜெமினி அதிபர் வாசன் தான். அதே போல இந்த நாவலில் வருகிற டைரக்டர் ராம்சிங் பதிபக்தி,பாகப்பிரிவினை,பாசமலர்,பாலும்பழமும்,பார்த்தால் பசி தீரும்,பந்த பாசம் படங்களை இயக்கிய பீம்சிங் தான்.
கரைந்த நிழல்கள் நாவலின் ஆறாவது அத்தியாயத்தில்
செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து வந்த விருந்தினர்களுக்கு ராம்சிங் படம் திரையிடப்படுகிறது. அந்தப்படத்தை டைரக்ட் செய்ததற்காக ராம்சிங்குக்கு ரொக்கப்பரிசும் கிடைத்திருந்தது.வெளியே போகமுடியாத சூழ்நிலையிலிருந்த செக்கோஸ்லோவாக்கியர்கள் பார்த்தார்கள். டெலிபோன் பேசவேண்டியிருப்பதைக் காரணமாக வைத்துக் கொட்டகை வெளியில் வந்த வர்த்தகசபைத் தலைவர்,பிரஸ் இன்பர்மேஷன் அதிகாரியிடம் ‘நீங்க அந்தப்படத்தைப்பார்க்கலியா?’என்று கேட்கிறார். பதில்’அந்தத் தலைவலியை யார் பார்த்துச் சகிச்சுக்கிறது?’
அன்று மாலை செக் விருந்தினர்களுக்கு  ராம்சிங்கை பிரஸ் இன்பர்மேஷன் அதிகாரி தான் அறிமுகப்படுத்துகிறார்.’இவர் படத்தைத் தான் நீங்கள் இன்று காலை பார்த்தீர்கள்,’
செக் தலைவர் ’ஓ…. அப்படியா! ..ரொம்ப நல்ல படம் !சோக அம்சம் தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது, ‘
அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நன்றாகப் பாடி விளையாடிக்கொண்டிருந்த வாலிபக் கதாநாயகனுக்குக் கை போய், கல்யாணமான பிறகு தாய், சொத்து, பிறந்த குழந்தை இவை எல்லாம் போய்க் குருடனாகவும் ஆகிவிடுகிறான்.
செக் காரர் இறுதியாக சொல்வது”உங்கள் கதாநாயகர்களுக்குப் பெண்மை சிறிது அதிகமாக இருப்பதாகப்பட்டது.அதிலும் உங்கள் படத்து நடிகர் எல்லாவற்றிற்கும் அழுது விடுகிறார்.”
எல்லாரும் லேசாகச் சிரித்தார்கள்.ராஜ்கோபால் சிறிது உரக்கச்சிரித்துவிட்டான்.
உலகத்திலேயே தலைசிறந்த நடிகர் என்று நாட்டின் ’ஒருசிலரால்’ கொண்டாடப்படும் அந்த நடிகர் வலுவான சுவாசம் கொண்டவர்.
அசோகமித்திரன் மேற்கண்டவாறு விவரிக்கும் அந்த நடிகர் யார் என்பது படிப்பவர் யாருக்கும் புரியும். சிவாஜி கணேசன்.!
…..
89 வயது மிருணாள் சென் பெங்காலி டைரக்டர். புவன் சோம், கோரஸ், ஒக்க ஊரி கதா, பரசுராம், காந்தார்,காரிஜ்,ஏக் தின் அச்சானக் போன்ற திரை ஓவியங்களை தீட்டிய மேதை.
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்ஸியா மார்க்யுசுக்கு நண்பர்.
எத்தனையோ உலகத்திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் பரிசு வாங்கியிருக்கின்றன.பல திரைப்பட விழாக்களில் இவர் ஜட்ஜ் ஆக கௌரவிக்கப்பட்ட கலை மேதை.
மிருணாள் சென் தனக்கு கமல் ஹாசன் நடிப்பு தான் பிடிக்கும் என்று 1998ல் எஸ்.விஜயன்(சினிமா நிருபர்) அவர்களிடம் 14 வருடம் முன்
( தினமலர் வாரமலர் 25,அக்டோபர்,1998)சொன்னாராம்.’அப்படியென்றால் சிவாஜி நடிப்பு?’ என்று கேட்டதற்க்கு ஒரு மாதிரியாக முகத்தை சுளித்தாராம்.’எனக்கு அழுது நடிப்போரைக்கண்டாலே பிடிக்காது.ஆண்கள் அழுவது கூடாது ‘ என்றாராம். அழுகையும் ஒரு நடிப்பு தானே?’ என்று இவர் கேட்ட போது மிருணாள் சென் பதில் ‘நோ நோ’
...

http://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_17.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/child-is-father-of-man.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_23.html