Share

Showing posts with label செ.ரவீந்திரன். Show all posts
Showing posts with label செ.ரவீந்திரன். Show all posts

Jan 21, 2020

காரணச் செறிவு




திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில்                         பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. 
அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை.”
நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.
பாலகுமாரனின் கவிதைவரிகள் உடனே நிழலாடியது.
“ சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத்தெரியாக்குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையைக் கல்லென்று நினைக்க வேண்டாம்”
பாலகுமாரன் மிகவும் தளர்ந்து கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார்.எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்!
மிகவும் தளர்ந்து போய் இருந்த அவர் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை,
தள்ளாடிய பாலகுமாரனை
நான் அவர் கை பிடித்து நடத்தி
மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.
ஞானக்கூத்தன் பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்தார். சென் ட்ரல் லயன்ஸ் கிளப்பில் அழகான உரை நிகழ்த்தினார்.
அன்று அவர் அங்கு சொன்னதை இந்த திருவல்லிக்கேணி இரங்கல் கூட்டத்தில்
நான் நினைவு கூர்ந்தேன்.
“ராஜநாயஹம் கவிஞர் அல்ல. ஆனாலும் கவிஞர் ஞானக்கூத்தனின் மாணாக்கன் என்று சொல்லிக்கொள்ள முழு உரிமை இவருக்கு உண்டு.”

பாலகுமாரனும் ந.முத்துசாமியும் மறைவதற்கு சில மாதம் முன் ஒரு உணவுக்கூடத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.

அடுத்தடுத்து சில மாதங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து மறைய இருந்த தருணம் அது.
இருவருமே TAFE ல் வேலை பார்த்தவர்கள்.
இருவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலை.
பேராசிரியர் செ.ரவீந்திரன் கூட அப்போது முத்துசாமியுடன் இருந்திருக்கிறார்.
வர்த்தக எழுத்தாளர் பாலகுமாரன் மனம் விட்டு நெகிழ்ந்து முத்துசாமியை கனப்படுத்தி சொல்லியிருக்கிறார்.
“ முத்துசாமி மட்டும் இல்லேன்னா நான் TAFE ல கடைசி வரை க்ளார்க்காவே தான் இருந்திருப்பேன்.”
....
புகைப்படம் உதவி : ரவிவர்மா.
கூத்துப்பட்டறை நடிகர்.
பின்னால் சிரித்துக்கொண்டு நிற்பவர்

Jan 15, 2017

தி தினத்தந்தி - தி இந்து


 ’தினத்தந்தி’ P.வாசு

P.வாசு இப்ப கூட ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கார் போல இருக்கு. சிவலிங்கா. இது ஏதோ அந்தப் படத்துக்கான inner promoன்னு நினச்சிடாதீங்க.
 வாசுவை stylish director ன்னு
ஒரு நடிகர் புகழ்ந்ததை டி.வியில் இன்று பார்த்தேன்.


இவர் அப்பா பீதாம்பரம். வாசுவுக்கு தமிழில் இனிசியல் போட்டால் அவ்வளவு நல்லாயிருக்காது. வாசு தன் பெயரை P.வாசு என்று டைட்டிலில் போஸ்டரில் போடுவது தப்பே இல்லை. அப்பா பெயர் பீட்டர், பீர் முகமது, பீதாம்பரம் என்றிருந்தால் ஆங்கிலத்தில் இனிசியல் இருப்பது தான் நல்லது. தனித்தமிழ் வெறியர்களுக்கு இதெல்லாம் புரியாது. அப்பா பெயர் பீ என்று பிடிவாதமாக பீ.வாசு என்று எழுத வேண்டுமா? தமிழில் பி.வாசு என்று எழுதினால் அப்பா பெயர் பிரபாகரா, பிச்சைமுத்துவா,பிள்ளையாரா ஆங்கில இனிசியல் P என்பதை எதற்காக ’பி’ என்று ஏன் எழுதுகிறான்கள்? இங்கிலீஷ்ல இனிசியல் போடுகிற சுதந்திரம் பிறப்புரிமைடா.
ஒரு தனித்தமிழ் வெறியன் ‘ இங்கிலீஷ்ல இனிசியல் போடுறவனெல்லாம் இங்கிலீஷ்காரனுக்கு பொறந்தவனுங்க’ என்று அபத்தமாக மைக்ல கூப்பாடு போட்டான்.
’தி இந்து’ என்று தமிழில் பத்திரிக்கை பெயர். பத்திரிக்கை பெயரிலேயே தமிழ் கிடையாது. என் பெயரை என் விருப்பப் படி R.P.ராஜநாயஹம் என போட மறுத்து இனிசியலை தமிழில் தான் போடமுடியும் என்று ’தி இந்து’ தமிழ் பிடிவாதம் பிடித்தது. நான் எழுதிய கட்டுரைகளில் என் பெயர் ஆர்.பி.ராஜநாயஹம் என்று தான் பிரசுரிக்கப்பட்டது.

’குமுதம்’ வாரப்பத்திரிக்கை என் பெயரை என் விருப்பப்படி என் கட்டுரைகளில் ’R.P.ராஜநாயஹம்’ என அச்சிட்டிருந்தது. அருண் சுவாமிநாதனுக்கு நன்றி.


கோவை ஞானி பலவருடங்களுக்கு முன் இந்திரா பார்த்தசாரதியின் ‘ கிருஷ்ணா, கிருஷ்ணா’ நாவலுக்கு ஒரு விமர்சனம் கேட்டார். நான் ‘லீலார்த்தம்’ தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன்.
கோவை ஞானி ’ராஜநாயஹம் என உங்கள் பெயரை பிரசுரிக்க மாட்டேன். ராஜநாயகம் தான். ’ஹ’ போட மாட்டேன்..’

நான் ‘ ராஜநாயஹம் என்று என்னை சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், பிரமிள் ஆகியோர் கூட குறிப்பிட்டிருக்கிறார்களே’

கோவை ஞானி ‘ அவங்க எல்லாம் மனுசங்க தானா? எனக்கு சந்தேகமாயிருக்கு. நான் ராஜநாயகம்னு தான் அச்சிடுவேன்.’

நான் ‘ நீங்க என் லீலார்த்தத்தை பிரசுரிக்க வேண்டாம். கிழிச்சிப்போட்டுடுங்க’
பிறகு எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில் ’லீலார்த்தம்’ பிரசுரமானது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பி.வாசுவுக்கு சினிமாவில ரொம்ப நல்ல செல்வாக்கு. பாக்யராஜ் சொந்தப்படம் ‘அம்மா வந்தாச்சு’ படத்திற்கு இயக்குனர் வாசு தான்.
டைரக்டர் P.வாசு சித்தப்பா கேமராமேன் M.C.சேகர்.  'ராசுக்குட்டி' படத்தில் இவர் கேமராமேனாக இருந்த போது சேகர் சொன்ன விஷயம்.
“ வாசு அந்த காலத்தில தினத்தந்தி படிக்கிறதத்தான் நான் எப்போதும் பாத்திருக்கேன். தினத்தந்திய வாசிப்பான்.உருப்படியா புத்தகம் எதுவும் அவன் வாசிச்சதேயில்லை.”
வாசுவிடம் பெரிதாய் நல்ல வாசிப்பு எல்லாம் இருந்ததில்லை என்பதை சுட்டிக்காட்டும்போது இதனை குறிப்பிட்டுச் சொன்னார்.
.....................................

வர்ஜனம் = புறக்கணிப்பு

”அன்று (28-08-2016) மியூசியம் அரங்கில் கூத்துப்பட்டறையின் வண்டிச்சோடை நாடகமேடையேற்றத்தின் இறுதியில் கூத்துப்பட்டறையின் நடிகர் பிரசன்னா பங்கேற்பாளர்கள் பற்றிய அறிமுகம் செய்த பிறகு அன்று நாடகம் பார்க்க வந்திருந்த நாடகாசிரியர் கூத்துப்பட்டறை நிறுவன இயக்குநர்
ந.முத்துசாமி, நாடகத்தை இயக்கிய R.P.ராஜநாயஹம் முதலானவர்களுக்கு ஒரு மரியாதை நிமித்தமாக ஒரு மலர்ச்செண்டாவது கொடுத்து கௌரவித்திருக்கலாம். அந்த சுரணையெல்லாம் தி இந்து நாடகவிழா அமைப்பாளர்களுக்குக்
கிடையாது என்பதைச் சொல்ல வேண்டும்.”
- பேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரன்
” நாடகவரங்கில் ஓர் ஒளியமைப்பாளனின் நினைவுக்குறிப்புகள்” மணல் வீடு 27வது இதழ்.
................................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html

http://rprajanayahem.blogspot.in/…/the-hindu-subha-intervie…

http://rprajanayahem.blogspot.in/…/an-email-interview-by-hi…


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.html

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_23.html

http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_06.html

Nov 30, 2016

முதலில் ‘ நடை’ அப்புறம் ’கசடதபற’


மனுஷ்யபுத்திரன் ’விகடன் தடம்’ அக்டோபர் இதழில்  "கவிதை பற்றிய பார்வைகள்" கட்டுரையில் ‘1970களில் வெளி வந்த ‘கசடதபற’ இதழ் நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அதன் வழியே உருவாகி வந்த கவிஞர்களில் முதன்மையானவர் ஞானக்கூத்தன்.’ என்று எழுதியிருப்பதால் ஒன்றை சுட்டிக்காட்டுகிறேன்.

எழுத்து பத்திரிக்கையில் பிரசுர வாய்ப்புக்காக ஞானக்கூத்தன் ஐந்து கவிதைகளை சி.சு.செல்லப்பாவிடம் கொடுத்திருந்தார். கவிதைகள் பிரசுரிக்கப்படவேயில்லை. கவிதைகளில் இலக்கணம் இருக்கிறதாக சி.சு.செல்லப்பாவின் அபிப்ராயம்.

சி.மணி, ந.முத்துசாமி முயற்சியில் ’நடை’ பத்திரிக்கை கோ.கிருஷ்ணசாமியை ஆசிரியராகக் கொண்டு 1968ல் துவக்கப்பட்டது.

சி.சு.செல்லப்பாவிடம் இருந்த ஞானக்கூத்தனின் ஐந்து கவிதைகளை ந.முத்துசாமி போய் வாங்கி வந்தார். 
மீட்கப்பட்ட(!) அந்த ஐந்து கவிதைகளும் ’நடை’ முதல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதனால் நவீன தமிழ் இலக்கிய உலகில் ஞானக்கூத்தனுக்கு பிள்ளையார் சுழி.

அதன் பிறகு தான் 1970ல் ’கசடதபற’ பத்திரிக்கையில் ஞானக்கூத்தன் கவிதைகள் பிரசுரமாயின.
’நடை’ தான் கசடதபற இதழுக்கு முன்னரே நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ’நடை’ மூலம் ஞானக்கூத்தன் உருவாகி வந்தார். கசடதபற பங்களிப்பை மறுக்கவில்லை.
..........................
ஒரு நல்ல ஜோக்

பேராசிரியர் செ. ரவீந்திரன் ஆரம்ப காலத்தில் தன் பெயரை ’இரவீந்திரன்’ என்று தான் எழுதி வந்துள்ளார்.
’இ’ரவீந்திரன்.
ஒரு அமெரிக்க பெண் தமிழ் கற்றுக்கொள்ள மதுரை யுனிவர்சிட்டிக்கு வந்தவள்
இவர் பெயரை ” இரவு இந்திரன்” என்று உச்சரித்திருக்கிறாள்! அப்புறம் தான் தன் பெயரில் உள்ள ’இ’ யை ’நீக்கல்’ செய்து விட்டார்.

Jun 14, 2016

ஆன்ம லாபம்


கமல் ஹாசனும் ரகுவரனும் இணைந்து நடிக்கும் படம் வரவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்படி நடக்கவேயில்லை. ஏன்? ரஜினி படம் தாண்டி இந்திப்படங்களில் கூட நடித்த ரகுவரன். 

ரகுவரன் நடிப்பை கமல் ஹாசன் பயன்படுத்தியிருக்க வேண்டும். பூவிழி வாசலிலே, பாட்ஷா, முதல்வன் பாணி வில்லனாகத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றில்லாவிட்டாலும் 
கூட்டுப்புழுக்கள்,அஞ்சலி ரக ரகுவரனாகவாவது கமல் படமொன்றிலாவது நிறுத்திப் பார்த்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் கமல், ரகுவரன் இருவருக்குமே ஒரு நல்ல வித்தியாசமான படம் கிடைத்திருக்கும். காலம் இருக்கிறது. எப்போதாவது நடக்கும் என்று எண்ணியிருந்ததுண்டு. 

காலன் ரகுவரனைக் கொண்டு போய் விட்டான். Scene Stealer ரகுவரன்!

கதாநாயகிகளில் நதியா அப்போது கமலுடன் ஜோடி சேர்ந்ததில்லை.

கமல் ஹாசன் தன் படங்களில் மாதவனுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார். முன்னதாக, கமல் ஹாசன் ஏதேனும் ஒரு படத்தில் அரவிந்த் சாமிக்கு ஒரு நல்ல வாய்ப்பு தருவார் என்றும் எதிர்பார்த்திருந்ததுண்டு. 

மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் தெளிவாகத் தெரிந்த விஷயம் –மீண்டும், மறுபடியும் அரவிந்த்சாமி நல்ல ஃபார்மில் இருக்கிறார்! 

ஜெயம் ரவியின் தனி ஒருவனில் நடித்த அரவிந்த் சாமி அடுத்து ஒரு ’போகன்’ ஆக இணைவதை அறியும் போது கமல் ஹாசனுடன் ரோஜா நாயகனை பார்க்கும் ஆர்வம் அதிகமாகிறது.இதுவே இரண்டு கமல் படங்களில் சேர்ந்திருந்தால் (Ifs and Buts!) பிரமாதமாயிருக்குமே! கமலுக்குத்தான் அவர் சரியான Supporting Actor!

காலம் இருக்கிறது!

…………………………………………

மூன்று மாதங்களுக்கு முன் கூத்துப்பட்டறைக்கு ந,முத்துசாமி சாரை பார்க்க நடிகர் பசுபதி வந்திருந்தார். அவருடைய மனைவியும் உடன் வந்திருந்தார்.
புதிதாக மூன்று நாட்களுக்கு முன் தத்து எடுத்திருந்த மராட்டி பெண் குழந்தையை முத்துசாமி சாரிடம் காட்டி ஆசி பெறுவதற்காக. மூன்றரை வயது குழந்தை!
பசுபதி பற்றி முத்துசாமி சார் நிறைய சொல்வார். 17 ஆண்டுகள் கூத்துப்பட்டறை நடிகராக இருந்தவர். எங்கே ட்ரெயினிங் அனுப்பினாலும் உடனே சென்று வருவார். 

……………………………………………………

பேராசிரியர் செ.ரவீந்திரன் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்று பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.
அவரை சந்தித்த போது எனக்கு ஐன்ஸ்டீன் ஞாபகமும் வந்தது. டி.கே.சி ஞாபகமும் வந்தது. ரவீந்திரனின் கண்கள் சிரிக்கிறது. புருவம் சிரிக்கிறது. மீசை சிரிக்கிறது. அவரது தலை முடி சிரிக்கிறது.


மு. நடேஷுக்கு எத்தனையோ குரு நாதர்கள். நாடக மேடை ஒளியமைப்புக்கு குரு செ.ரவீந்திரன்.


”நீராகாராம்” அருந்திக்கொண்டிருக்கிறேன் என்று செல் பேசியில் அவர் சொன்ன போது முதலில் புரியவில்லை. ”மது”வைத் தான் ”நீராகாரம்” என்கிறார்! ”நீரின்றி அமையாது உலகு” என்றார். அவரைப்பொறுத்தவரை “When your pocket and body permit, you can go on drinking!”
....................................


நான் சிகரெட்டோ, மதுவோ தொடாதவன்.
உறவும் சுற்றமும் நட்பும் கேட்கிறார்கள் : "என்ன வைராக்கியம்? மது,புகை,சூது இல்லாமல் இருந்து என்ன சாதித்தாய்? செல்வமெல்லாம் இழந்து இன்று அன்றாடங்காய்ச்சியாய்த்தானே இருக்கிறாய்?என்ன லாபம் கண்டாய்?”
என் பதில் : “ஆன்ம லாபம்”