Share

Showing posts with label RP.ராஜநாயஹம். Show all posts
Showing posts with label RP.ராஜநாயஹம். Show all posts

Aug 20, 2019

ராஜநாயஹம் பற்றி கவிஞர் கலாப்ரியா


கவிஞர் கலாப்ரியா:
” ராஜநாயஹம் பலதுறைகளிலும் ஆழமான வாசிப்பும், யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை அனுபவமும் உடையவர்.
அவர் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர்,
ஆவணப்புதையல் சினிமா, அரசியல் நிகழ்வுகள் பற்றிய என் சந்தேகங்களைப் பல முறை அவரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வேன்.
இப்போதும் நான் ஈடுபட்டிருக்கும் ஒரு நாவல் முயற்சிக்கு அவரிடம் பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். அந்த நாவலை அவருக்கே சமர்ப்பணம் செய்வேன்.”







Dec 20, 2015

சாருவும் திஜாவும் ராஜநாயஹமும்



நவம்பர் முதல் வாரத்தில் மணிஜி தண்டோரா
’தினமணி.காமில் உங்களைப் பற்றி சாரு நிவேதிதா குறிப்பிட்டிருக்கிறார்’ என்றார்.


சாரு சொல்லியிருப்பது”அப்போதெல்லாம் என்னுடைய நண்பர்
 R.P. ராஜநாயஹம் ’தி.ஜா.வின் சிறுகதைகளைப் படித்துப் பாருங்கள்’ என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போதுதான் தெரிகிறது, ராஜநாயஹம் சொன்னது எவ்வளவு சரி என்று.”


தி.ஜா பற்றி எப்போதும் சாரு நிவேதிதா கடுமையாக கடந்த காலங்களில் அலட்சியப்படுத்தி எழுதியவர். ஆனால் இவ்வளவு திறந்த மனதோடு தி.ஜாவை அங்கீகரித்திருப்பது அவருடைய மேலான பண்பை காட்டுகிறது.
சாரு பற்றி நான் எப்போதும் ‘ A saint among the writers!' என்றே மலைத்துப்போய் சொல்லியிருக்கிறேன். என்னுடைய எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது அவருடைய இந்த கூற்று.

ரொம்ப வெள்ளந்தியாக இப்படி மற்ற எழுத்தாளர்கள் யாரும் தங்கள் அபிப்ராயங்கள் தவறு என்றெல்லாம் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.வரட்டுப்பிடிவாதமும், ஹிப்போக்ரஸியும் நிறைந்த இண்டலக்சுவல் பூர்ஷ்வாக்கள் நிறைந்த தமிழ் எழுத்துலகில் சாரு நிவேதிதா உன்னதமானவர்.

இதே போல சுந்தர ராமசாமியின் எழுத்தையும் சாரு நிவேதிதா சீராட்டி பாராட்டும் காலம் வர வேண்டும்!


......................................


Sep 4, 2012

லியர் மன்னன் : சாரு நிவேதிதா

 

25-05-2008

திருப்பூர் வரை சென்று வந்தேன். மரங்களே இல்லாத ஊரைப் பார்க்க மிக வினோதமாகவும் , வேதனையாகவும் இருந்தது. பல வெளிநாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவில் மரங்கள் மிகவும் குறைவு. நூற்றில் ஒரு மடங்கு கூட இல்லை என்று சொல்லலாம். அதன் காரணமாகவே இந்தியாவில் இயற்கை உற்பாதங்களும் அதிகமாக உள்ளன. ஆனால் எவ்வளவு அழிவு வந்தாலும் சரி , நாங்கள் திருந்த மாட்டோம் என்ற மனவுறுதி படைத்தவர்கள் இந்தியர்கள். திருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளின் காரணமாகவே நொய்யல் நதி
சாக்கடையாகி செத்தே விட்டது. இந்த ஊரிலிருந்துதான் மேல் நாட்டுக்காரர்களுக்காக சட்டை உற்பத்தியாகிப் போகிறது. படுபாவிகள் , அதற்காக ஒரு நதியையே கொன்று விட்டார்கள்.
திருப்பூரில் பெயருக்குக் கூட ஒரு மரம் இல்லை. அடுத்த பயங்கரம் ஆட்டோ. ஒரு பர்லாங் தூரத்துக்கு 100 ரூ. கேட்டார்கள். நானும் நண்பரும் சாப்பிடச் சென்றோம். இருவருக்கும் சேர்த்து 450 ரூ. ஆயிற்று. அது ஒன்றும் நட்சத்திர ஓட்டல் அல்ல. மொத்தத்தில் வாழ்வதற்குத் தகுதியே இல்லாத ஊர் திருப்பூர்.


நான் இதுவரை யாரையும் நானாகச் சென்று சந்தித்ததில்லை. அதற்கு எந்த விசேஷமான காரணமும் இல்லை. கூச்சமும் , பொதுவாகவே மனிதர்கள் மீது எனக்குள்ள மனக் கசப்புமே காரணமாக இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட நான் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து அதற்காகவே திருப்பூர் வரை சென்றது இதுவே முதல் முறை.

எனக்குப் பொதுவாக என்னுடைய படிப்பைப் பற்றி ஒரு செருக்கு உண்டு. அந்தச் செருக்கைத் தலையில் தட்டி ஒரு மூலையில் உட்கார வைத்தவர் அரவிந்தன். அந்த அளவுக்குப் படித்தவர். அது மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்கள் உள்ளன. மொத்தத்தில் என்னை வியக்க வைத்த ஒரு மனிதர். இதுவரை நான் சந்தித்த மனிதர்களிலேயே என்னை வெகுவாகக் கவர்ந்தவர் என்றும் சொல்லலாம். இப்போதைய தமிழக முதல்வரின் மருமகன் என்பதால் அவரைப் பற்றி அதிகம் எழுத முடியாது. அவருக்கு அடுத்து என்னைத் தன் அறிவினால் வியக்க வைத்தவர் R.P. ராஜநாயஹம். 18 ஆண்டுகளுக்குப் பிறகு இவரைச் சந்திக்கிறேன். மனிதர் அப்படியே இருக்கிறார். இறைவன் இவருக்குக் கொடுத்த வரம் இளமை. மற்றொரு வரம் இவரது மனைவி. அவந்திகாவைப் போல் தெய்வீக அருள் பெற்றவர்களை நான் துறவிகளாகத்தான் பார்த்திருக்கிறேன். இல்லற வாழ்வை மேற்கொண்டவர்களாகக் கண்டதில்லை. இப்போது அவந்திகாவுக்கு அடுத்த படியாக அப்படி ஒரு தெய்வீக அருள் பெற்ற ஒரு பெண்ணைப் பார்த்தேன். நற்குணங்கள் மட்டுமே வாய்க்கப் பெற்ற ஒரு நங்கை. இந்தக் காலத்தில் கூட இப்படிப் பட்ட பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. உதாரணமாக , தன் கணவர் ஒரு நாத்திகர் என்பதால் தானும் கோவிலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டாராம் மலர். பெயருக்கேற்ற தோற்றமும் , குணமும் கொண்டவர். ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிரபலமான அரசியல்வாதியாக இருந்த எஸ்.எம்.டி. சந்திரன் என்பவரின் புதல்வி.
ராஜநாயஹம் முன்பு போலவே பெரும் செல்வந்தராக வாழ வேண்டும் என்று அடிக்கடி பிரார்த்தித்துக் கொள்வேன். ஆனால் இனி அப்படி பிரார்த்திக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால் , அவருடைய மனைவி மலர்தான் அவருடைய மிகப் பெரிய செல்வம்.

ராஜநாயஹமும் என்னைப் போலவே ஒரு வெகுளியாகவும் , வெள்ளந்தியாகவும் இருந்தது மற்றொரு ஆச்சரியம். அதன் காரணமாகவும் , தான தர்மத்தினாலும் தன்னுடைய எக்கச்சக்கமான சொத்துக்களை இழந்து விட்டு இப்போது ஜீவனோபாயத்துக்காக ஏதோ ஒரு சிறிய வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் சீரும் சிறப்புமாக இருந்த போது அவரிடம் வாங்கித் தின்ற ஒருவர் , இப்போது ராஜநாயஹம் நலம் விசாரித்து ஒரு மின்னஞ்சல் போட்டாரென்று தாம் தூமென்று குதித்தாராம். ("எப்படி நீர் எனக்கு மின்னஞ்சல் போட்டு என் நேரத்தை வீணடிக்கலாம் ; என் மின்னஞ்சல் முகவரி உமக்கு எப்படிக் கிடைத்தது ?") குதித்தவர் ஒரு எழுத்தாளர்! ' ம்... பிச்சைக்காரப் பயல்கள் ' என்று நினைத்துக் கொண்டேன்.
இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் "வீழ்ந்தாலும் லியர் மன்னன் மன்னன்தானே ?" என்று எழுதினேன்.
குட்டிக் கதைகளில் Kiss of the Spider Woman பற்றி எழுதியிருந்தேன் அல்லவா , மனிதர் அந்த நாவலைப் பற்றியும் , அது சினிமாவாக வந்தது பற்றியும் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்து விட்டார். அப்போதுதான் தோன்றியது , இந்த ஆச்சரியமான மனிதரை நேரில் பார்த்து விட வேண்டியதுதான் என்று.
ஒரு நாள் முழுவதும் பேசினோம். சங்கீதத்திலும் கரை கடந்த ஞானமுள்ளவர் ராஜநாயஹம். உலக இலக்கியத்திலும் அப்படியே. இப்படிப் பட்ட ஒருவரையா அந்த முழு மூடனான எழுத்தாளன் ' அரைகுறை ' என்று எழுதினான் என்று ஆச்சரியமாக இருந்தது. அது சரி , மூடனுக்கு அப்படித்தானே தெரியும் ?
***

Oct 3, 2008

R P ராஜநாயஹம் பற்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

R P ராஜநாயஹம் இப்போது பதிவெழுதுகிறார். இவரது எழுத்துகளை அங்குமிங்குமாக 1990களிலிருந்தே படித்துவருகிறேன். இப்போது, அவரது பெயரை நாகார்ஜூனன் பதிவொன்றின் பின்னூட்டத்தில் பார்த்து கிளிக் செய்து அவரது பக்கத்திற்குப் போனேன். பிறகு ரீடரில் வைத்துத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ராஜநாயஹம் என்றாலே சிலருக்கு மு தளையசிங்கம் / தொழுகை / ஊட்டி / ஜெமோ இந்தப் பெயர்கள் உடனடியாக நினைவிற்கு வருபவை! இவரது பதிவைப் பற்றி இதுவரை சாரு நிவேதிதா, பிரகாஷ், ஸ்ரீதர் நாராயணன் எழுதியிருக்கிறார்கள்.இப்போது தமிழ்மணத்திலும் அவரது பதிவுகள் வருகிறது. அவருடைய sadism பதிவு தமிழ்மணத்தில் வந்ததா எனத் தெரிந்துகொள்ள ஆவல். எனக்கு அந்த இடுகை பிடித்திருந்தது. பாண்டிச்சேரியிலிருப்பவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை!!