Share

Showing posts with label எம்.ஆர் ராதா. Show all posts
Showing posts with label எம்.ஆர் ராதா. Show all posts

Jun 17, 2019

நகைச்சுவை மகா கலைஞர்கள்


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது ஜெயகாந்தனுக்கு மிகுந்த பிரமிப்பு இருந்திருக்கிறது. ’நல்ல தம்பி’ படம் பார்த்து விட்டு ஒரு ரசிகனாக பாராட்டு கடிதம் கூட எழுதியிருந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட தினத்தில் அவரை சந்திக்க வருவதாக அதில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே தோழர் ஜீவாவுடன் என்.எஸ்.கேயை சந்தித்தவர் தான் ஜெயகாந்தன். அதனால் தி.நகர் வெங்கட்ராமய்யர் தெருவில் இருந்த நட்சத்திர நடிகரின் இல்லத்துக்கு போயிருந்திருக்கிறார். அவருக்கு மிகவும் அதிர்ச்சி.

“நடிகர்கள், கலைஞர்கள் ஆகிய இந்தப் பிரபலங்கள் பிறருக்குச் சொல்லுகிற நெறிகளுக்கும் உபதேசங்களுக்கும், தாங்கள் அமைத்துக்கொண்டிருக்கிற சொந்த வாழ்க்கைக்கும் இடையே எவ்வளவு பெரிய இழிந்த இருண்ட பாதாளம் போன்ற இடைவெளியையும் அன்று கண்டேன். அங்கே நான் கண்ட காட்சியை என்னவென்று இங்கு விவரிக்கப்போவதில்லை” என்று ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலில் சொல்கிறார் ஜெயகாந்தன்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராய் இருந்த போது “என்.எஸ்.கே இன்று உயிரோடு இருந்தால் அவரல்லவோ முதலமைச்சர்” என்று பூரிப்புடன் பெருமைப்பட்டார்.

சந்திரபாபுவின் திறமைகளைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அவருடைய ஸ்டைல், டான்ஸ், பாடல்கள் evergreen.
நகைச்சுவை நடிகர்களில் பாபு ஒரு peculiar phenomenon.

சந்திரபாபு தன்னை என்ன பாடு படுத்தினார் என்பதை கண்ணதாசனின் ‘மனவாசம்’ விரிவாக கூறுகிறது. சந்திரபாபுவை வைத்து ’கவலையில்லாத மனிதன்’ படம் எடுத்ததற்கு உலகத்தில் உள்ள அவ்வளவு கவலைகளையும் தான் அனுபவித்ததாக கவிஞர் எழுதியிருந்தார்.
சந்திரபாபு தான் என் குருநாதர் ந.முத்துசாமிக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை கலைஞர். அவரிடம் இருந்த தனித்துவத்தை மிகவும் முத்துசாமி சிலாகிப்பார்.

நாகேஷின் ஈடு இணையில்லாத சாதனை.
ஸ்ரீவித்யா முதல் முதலாக ராமண்ணாவின் ’மூன்றெழுத்து’ படத்தில் நடிக்க ஸ்டுடியோவிற்குள் நுழைந்த அன்று நாகேஷ் குடித்து விட்டு செய்த கலாட்டாவைப் பார்த்து மிரண்டு ச்சீ என்று அருவருத்து வெறுக்க நேர்ந்ததாக சொல்லியிருக்கிறார்.
1971ல் அவரை பெரிய இயக்குனர்கள் கைவிட்டார்கள்.
ஸ்ரீதர் அவரை ஓஹோ ப்ரொடக்ஸன்ஸ் செல்லப்பாவாக்கியவர். 1971ல் ’அவளுக்கென்று ஓர் மனம்’ நாகேஷிற்கு இடம் கொடுக்கவில்லை.
’பணமா பாசமா’வில் நாகேஷை தூக்கிப்பிடித்த கே.எஸ்.ஜி. 1971ல் ‘மாலதி’ யில் இடம் தரவில்லை.
திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி என்று என்று அழகு பார்த்த ஏ.பி.என் 1971ல் சுருளிராஜனை வைத்து “கண்காட்சி’’ எடுத்தார்.
எம்.ஜி.ஆரே ரொம்ப முன்னரே நாகேஷை ஒதுக்கி வைத்திருந்தார். தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன் படங்களெல்லாம் நாகேஷ் இல்லாமல் தான். 1971ல் குமரிக்கோட்டம், ரிக்‌ஷாக்காரன், நீரும் நெருப்பும். எதிலும் நாகேஷ் கிடையாது.
நாகேஷ் இயக்குனர் பாலச்சந்தரையே என்ன பாடு படுத்தினார். 1972ல் ’கண்ணா நலமா’வில் நாகேஷ் கிடையாது. எம்.ஆர்.ஆர். வாசு தான். ’வெள்ளி விழா’வில் தேங்காய் சீனிவாசனை நடிக்க அழைத்தார்.
நாகேஷின் கால பிரமாணம் எத்தகைய ஆச்சரியகரமானது. அவருடைய மின்னல் வேகம்.
இன்றும் தமிழ் திரையின் நகைச்சுவைக்கு ஒட்டு மொத்த சாதனை என்றால் நாகேஷ், கவுண்டமணி, வடிவேல் மூவரும் தானே.
எப்பவும் காண்ட்டுலேயே இருக்கும் கவுண்டமணி கலக்கல்.
எத்தனை தடவை நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு நகைச்சுவை காட்சிகளை பார்த்தாலும் சலிப்பதேயில்லை.
ஒரு ப்ரொடக்ஸன் அஸிஸ்டண்ட் அரண்டு சொன்ன விஷயம். “அய்யோ கவுண்டமணி தண்ணி போட்டுட்டா மிருகம். உயிர எடுத்துடுவான். கை நீட்டிடுவான். அடிச்சிடுவான்”

ஆர்.சுந்தர் ராஜனுக்கும் கவுண்டமணிக்கும் நிகழ்ந்த மோதல்.


வடிவேலு பற்றி இன்றைய காலத்தில் யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அளப்பரிய சாதனை. பிரமிக்கத்தக்க நடிப்பு.
அனைவர் வாழ்விலும் ஒன்றி விட்ட கலைஞன்.
எல்லாருக்கும் vocabulary எவ்வளவு supply செய்து விட்டார் வடிவேலு.
எவ்வளவு சாதாரண படத்திலும் அவருடைய விஸ்வரூபம்.
மார்க்கெட் போய் விட்டதாம். தினமும் வடிவேலு தானே சஞ்சாரம்.
கதாநாயகர்கள் உட்பட இன்று வரை வந்துள்ள மிகப்பெரிய நடிகர்கள் அனைவரையும் நடிப்பில் மிஞ்சிய வடிவேலுவின் ஈடு இணையற்ற ஃபார்ம்.
எம்.ஆர்.ராதா ஒருவர் தான் இன்றும் வடிவேலுவுக்கு சவாலான அமரத்துவ கலைஞர்.

வடிவேலு பற்றி தான் எவ்வளவு பரபரப்பு.
நம்பிராஜன் என்ற சின்னாளப்பட்டிக்கார நடிகர், ஜெயமணி ஆகியோருடன் கைகலப்பு.
சிங்கமுத்து ரியல் எஸ்டேட் வில்லங்கம்.
விஜயகாந்த் வீட்டு இழவு ஒன்றில் காரை எடுக்கச்சொல்லி கலவரம். அடி கூட வடிவேலுக்கு விழுந்ததாமே.
வாழ்வு கொடுத்த ராஜ்கிரணிடம் நன்றி காட்டவில்லை.
ஜி.வி. தற்கொலை செய்து கொண்ட போது அவரிடம் வாங்கிய ஐந்து லட்சத்தை வடிவேலு பாவப்பட்ட ஜி.வி குடும்பத்திற்கு கொடுக்க மறுத்தது.
தயாரிப்பாளர் ஒருவரிடம் விமானத்தில் போய் வர எட்டு மணி நேரம் ஆனதற்கும் ஒரு கால்ஷீட் கணக்காக்கி ரெட்டை இலக்க இலட்சத்தில் வடிவேலு சம்பளம் கேட்ட விவகாரம்.







...

Feb 1, 2019

மேடையில்




தோழர் ஜீவா அறுபது வருடங்களுக்கு முன் அமெரிக்கன் கல்லூரி மேடையில் பேசும்போது குறிப்பிட்டாராம். “ பாரதி அமுத இலக்கியம். பாரதி தாசன் நச்சு இலக்கியம்.”

அருணாச்சலம் ரோட்டில் முருகாலயா ஸ்டுடியோவில் சினிமா ஷூட்டிங் நடக்கும். இப்போது இந்த ஸ்டுடியோ இருந்த இடத்தில் தான் சூரியா ஹாஸ்பிட்டல் இருக்கிறதா? உறுதியாக தெரியவில்லை.


இந்த முருகாலயா ஸ்டுடியோவில் கவிஞர் கே.டி.சந்தானத்தோடு நான் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஒரு விஷயம் சொன்னார். “ தோழர் ஜீவா மேடையில் உணர்ச்சி வேகமாகப் பேசும் போது மைக்கை விட்டு பக்கவாட்டில் நகர்ந்து ஓரமாக போய் விடுவார். மீண்டும் மைக்கிற்கு வந்து பேசுவார். திரும்பவும் மைக்கை விட்டு ரொம்ப விலகி நகர்ந்து விடுவார்.”


தோழர் ஜீவா பற்றி நினைத்தாலே சுந்தர ராமசாமி எழுதிய “ காற்றில் கலந்த பேரோசை “ ஞாபகம் வரும். “இப்படி மண்ணாந்தையா போயிட்டோமே”

தோன்றிற் புகழோடு தோன்றுக. எனக்கு பிறக்கும் போதே ஒரு பெருமை கிடைத்தது. தோழர் ஜீவா பிறந்த ஆகஸ்ட் 21ம் தேதி தான் நானும் பிறந்தேன்.
தொடர்ந்த ஏழ்மைக்கு நேர்மை தான் காரணம்.

எம்.ஆர் ராதா சிறையிலிருந்து வந்த பின் மதுரை  மேல மாசி வீதியில் நாடகம் போட்டார். சரியான கூட்டம். ஆனாலும் அவருடைய முகபாவங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தெளிவாக ஏதோ க்ளோசப் போல தெரிந்தது.

மேடையில் ராதாவை பார்ப்பது ஒரு வித்தியாசமான ஒன்று. “டேய், நடிப்ப பாருங்க. ரசிங்க. ஆனா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடாதிங்கடா பாவிங்களா”

மேல மாசி வீதியில் மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே முகம் சுண்டி முன் பகுதியை பார்த்து “அங்க யார்ரா அவன்? கஜகஜன்னு பேசிக்கிட்டு.. அவன அடிச்சி தூக்கி வெளிய போடு. நான் இங்க கத்திக்கிட்டிருக்கேன். அவன் அங்க கத்திக்கிட்டிருக்கான். கச,கசன்னு. போலீஸ் என்ன பண்றான். அவன அடிச்சி தூக்கி வெளிய போடு.” இப்படி சொல்லி முடித்து விட்டு ஒரு இரண்டு செகண்ட் விட்டு “அடி காந்தா.. தேவடியாள் பெற்ற திருமகளே” என்று கதாபாத்திரமாக பேச ஆரம்பித்தார்.

ஒரு ஐந்து வருடத்திற்கு பின் பெரியகுளம் எக்ஸிபிசனில் எம்.ஆர்.ராதாவின் அதே ’ரத்தக்கண்ணீர்’ நாடகம் பார்த்தேன். கூட்டமே இல்லை. சொற்பமாக ஜனங்கள். அப்போதும் ராதா மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே  “ அங்க யார்ரா அவன்? கஜகஜன்னு பேசிக்கிட்டு.. அவன அடிச்சி தூக்கி வெளிய போடு. நான் இங்க கத்திக்கிட்டிருக்கேன். அவன் அங்க கத்திக்கிட்டிருக்கான். கச,கசன்னு. போலீஸ் என்ன பண்றான். அவன அடிச்சி தூக்கி வெளிய போடு.” என்று சத்தமாக கத்தினார்.

https://www.youtube.com/watch?v=vSdeFZb52Lg&t=116s

Dec 2, 2016

தங்க கட்டுப்பாடு


தங்க கட்டுப்பாடு வந்து விட்டதா? என்று ஒரு வரி
கவிஞர் கலாப்ரியா ஃபேஸ்புக்கில் பார்த்தேன்.
எனக்கு பழைய ஞாபகம். என் தகப்பனார் மத்திய சுங்க இலாகா அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் அவரை ஒவ்வொரு விதமாக குறிப்பிடுவார்கள். பழனியில போயில இன்ஸ்பெக்டர்.
போயில = புகையிலை! புகையிலைக்கு வரி.

திருச்சியில தங்கக் கட்டுப்பாடு இன்ஸ்பெக்டர். நாகையில கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர்.
மதுரையில் சென்ட்ரல் எக்ஸைஸ்.
பின்னால் இந்த ஊர்களிலெல்லாமே ப்ரமோஷனில் சூப்ரண்ட் ஆகவும் இருந்தார்.


 தங்கக்கட்டுப்பாடு அதிகாரியாக இருந்த போது
 1967ல் ’எம்.ஜி.ஆர் சுடப்பட்டார்- எம்.ஆர் ராதா சுட்டார்.’ தினத்தந்தி தலைப்பு செய்தி. அடுத்ததாக அதே முதல் பக்கத்தில் பெரிய அளவில் தங்கம் பிடிபட்ட செய்தி.
என் தகப்பனாரின் தங்க வேட்டை பற்றிய பரபரப்பான செய்தி. ”தங்கம் பிடிபட்டது. சுங்க இலாகா அதிகாரி கைப்பற்றினார்”. 

 Morarjibhai Desai's Gold control!
அன்று ஒரு வேளை எம்.ஜி.ஆர் சுடப்பட்டிருக்காவிட்டால் இந்த தங்கம் பிடிபட்ட செய்தி தான் திருச்சி தினத்தந்தியில் தலைப்பு செய்தியாயிருந்திருக்கும் என்று பேச்சு!

நாங்கள் 1966ல் திருச்சியில் குடியிருந்த தெருவிற்குள் ஒரு நாள் அப்போது நிறைய தங்கத் தொழில் செய்யும் வியாபாரிகள் நுழைந்தார்கள். என் அப்பா வீட்டிற்கு வெளியே ஈசி சேரில் உட்கார்ந்திருந்தார். அப்பா அந்த கூட்டத்தைப் பார்த்து சத்தமாக
 ‘ யாரும் தெருவிற்குள் நுழைய வேண்டாம். திரும்பிப் போய் விடுங்கள். நாளை ஆஃபீஸ் வாருங்கள்” என்று சொன்னார். ஆனால் அவர்கள் “சார்! சார்!” என்று இறைஞ்சிக்கொண்டே முன்னேறினார்கள். அப்பா “ திரும்பிப்போயிடுங்க” என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொன்னவுடன் தயங்கியவாறு வெளியேறிப்போனார்கள். 

 என் பெற்றோர் திருமணத்திற்கு தாலி செய்த ஆசாரியையே திருச்சியில் கைது செய்ய நேர்ந்த போது  அப்பா தேம்பி அழுதார்.

Sep 16, 2012

சிறை மீண்டு ராதா மீண்டும்


எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா விடுதலையாகி வெளி வந்த பின் அவருக்கு மங்குதசை தான்.
பாகவதர் புகழின் உச்சியில் இருக்கும்போது லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கைதாகி என்.எஸ்.கே.,ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருடன் குற்றவாளியாகி சிறை சென்று விடுதலையானபின்னால் அவருக்கு சாதிக்க எதுவுமே இல்லையென்றானது.

ம்ஹும்.. யார் வாழ்வு தான் சதம்?

ராதாவும் சிறையிலிருந்து விடுதலையானபின் அவருடைய முந்தைய சாதனைகளுக்கு ஈடாக திரைப்படங்களில் எதுவும் பெரிதாய் சாதிக்கமுடியவே இல்லை.

பரபரப்பான சூழ்நிலையில் மதுரை மேலமாசிவீதியில் நடந்த ராதா நாடகத்திற்கு அவரைப் பார்க்கிற ஆர்வத்தில் சரியான கூட்டம்.
 நாடகத்தில் வழக்கம்போல அவருடைய சுதந்திர வசனம்.
’நான் நடிகன். அதுக்காக எனக்கு ரசிகர் மன்றமெல்லாம் ஆரம்பிச்சிடாதீங்க.’

‘அங்க யாரு கச,கசன்னு பேசிக்கிட்டிருக்கிறான்.நான் இங்க கத்துறேன். அவனும் கத்துறான்.போலீஸ் என்ன செய்ற? அவனை அடிச்சி தூக்கி வெளியே
 வீசு.’

ராதாவின் மாறும் முகபாவங்கள் தூரத்தில் நிற்பவர்களாலும் மிக தெளிவாக க்ளோசப் ஷாட் போல காண முடியும்.

சில படங்கள் ராதா நடிப்பதாய் தினத்தந்தியில் முழு பக்க விளம்பரங்கள் பிரமாண்டமாய் வந்தன.

“அண்ணா பேரை சொல்லி”

”சுட்டான் சுட்டேன்”


அவ்வளவு தான்.பருப்பு வேகவில்லை. படம் எதுவும் வரவில்லை.தேங்காமூடி படங்கள்.

சிறை மீண்ட ராதாவை சிவாஜிகணேசன் ஆதரிக்கவில்லை.  அவருடைய படங்களில் எம்.ஆர்.ஆர்.வாசுவுக்கு வாய்ப்பளித்த சிவாஜி ஏனோ ராதாவை ஒதுக்கிவிட்டார்.

மங்கு தசையில் வாய்ப்பு எப்படி இருக்கும். ஜெய்சங்கர் படமும் மு.க.முத்து படமும் தான் ராதாவுக்கு கிடைத்தன.

கே.எஸ்.ஜியின் தசாவதாரம் படத்தில் ஒரு வாய்ப்பு.

1976ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில்  பலரும் மிசாவில் கைது செய்யப்பட்டபோது மீண்டும்  ராதா சிறை செல்ல வேண்டியிருந்தது.
ஒரு பிரமுகரை சிறைஅதிகாரிகள் அப்போது கடுமையாக தாக்கியபோது ராதா தைரியமாக ”அடிக்க வேண்டாம்” என்று சொன்னாராம்.

பஞ்சபூதம், வேலும் மயிலும் துணை, கந்தர் அலங்காரம் இப்படி சாகும் வரை நடித்தார்.
பழைய scene stealer காணாமலே போய்விட்டார்!
‘ஸ்டார்ட் கேமரா, க்ளாப்,ஆக்‌ஷன்’ என்றவுடன் சீறி நடிக்கும் முதியவர் ராதா ’கட்’ சொன்னதும் உட்கார்ந்து இரைத்து இளைப்பார்.
கடைசி வரை நாடகங்கள் போடுவதை நிறுத்தவில்லை. சிங்கப்பூர்,மலேசியா என்று போய்க்கொண்டிருந்தார்.


”ரெண்டு பேர் கையிலும் துப்பாக்கி இருந்தது.சுட்டுக்கிட்டோம்” என்றே கடைசி வரை மேடைகளில் சொன்னவர்.

....................................

Sep 13, 2008



எம் ஆர் ராதா

எம்.ஆர் .ராதா தன் சந்தேகம் ஒன்றை பெரியாரிடம் கேட்டாராம்.
"அய்யா ஒரு சந்தேகம் "


பெரியார் குறுநகையுடன் தலையை ஆட்டினாராம் .இவன் ஏதோ விவகாரமாக தான் பேச ஆரம்பிக்கிறான் என்பதை புரிந்து கொண்டு தான் அப்படி குறு நகையுடன் தலையை ஆட்டி காதை கொடுத்திருக்கிறார்.

" இந்த இங்கிலீஷ்லே ஏதோ சொல்லி அதுக்கு தமிழ்லே அர்த்தம் சொல்றான். அது புரியது. தெரியாத பாஷையிலே உள்ளதை தமிழ்லே சொல்றது நியாயம் ...சம்ஸ்க்ரிதத்திலே ஸ்லோகன் சொல்லி தமிழ்லே அர்த்தம் சொல்றான் .சரி ... நியாயம் ...
தமிழ்லேயே ஸ்லோகன் சொல்லி அதுக்கு ... தமிழ்லேயே அர்த்தம் சொல்றானே .. இது என்ன .. எனக்கு புரியலெயே ....."

பெரியாருக்கு சிரிப்பை அடக்க முடியலையாம்.
பண்டிதத்தை ,புலமையை இதை விட அழகாக நையாண்டி செய்ய முடியுமா? Snobbery க்கு சரியான சூடு! செத்து உறைந்து போன தமிழ்!

         எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் கோர்ட்டில் இரண்டு பேருடைய வக்கீல்களும் சீரியஸா வாதாடிகொண்டிருந்த போது ' பாவம் இவங்க என்னனதையோ போட்டு குழப்பிக்கிட்டு தவிக்கிறாங்க. ஆனா உண்மை என்னன்னு எனக்கும் எம்ஜியாருக்கும் தான் தெரியும். என்ன ராமச்சந்திரா !'- இப்படி கோர்ட்டிலேயே எம்ஜியாரைப் பார்த்து படு ஜாலியாக கேட்டவர் ராதா. நீதிபதி,வக்கீல்கள் எல்லோரும் இவருடைய இயல்பை கண்டு அசந்து போனார்கள்.

           ராதா ஷூட்டிங்கிற்காக அதிகாலை காரில் வந்து ஸ்டுடியோவில் இறங்குகிறார். செட்டிற்கு வெளியே அஞ்சலி தேவி அசத்தலாக உட்கார்ந்திருந்தாராம். இவர் இறங்கியவுடன் உடைகளை கழட்ட ஆரம்பித்திருக்கிறார். அஞ்சலி தேவிக்கு கொஞ்சம் தர்ம சங்கடம். அண்டர் வேர் உடன் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

அஞ்சலி தேவி ' அண்ணே என்னன்னே இது '
ராதா ' என்ன '
'பொம்பிளை நான் இங்கே இருக்கிறேன். நீங்க பாட்டுக்கு உடுப்பை பூரா கழட்டிட்டு இப்படி அண்டர் வேரோட இப்படி.. '
ராதா ' நீ இருக்கிறியேன்னு தான் அவசர அவசரமா டிரஸ கழட்டிட்டு நிக்கிறேன்!'

எம் ஆர் ராதாவும் கண்ணதாசனும் அந்த காலத்தில் நடிகைகளை பற்றி செய்துள்ள கிண்டலும் நையாண்டியும் கடுமையானது.
இந்த காலத்தில் இந்த வைரமுத்து கொஞ்சம் வருடம் முன் நடிகைகளை தரக்குறைவாக என்னவோ ஏதோ சொல்லி விட்டார்.அல்லது எழுதி விட்டார்.
நடிகர் சங்கத்தில் வைத்து அவ்வளவு முன்னணி நடிகைகளும் (இதில் எம் ஆர் ராதிகாவும் அடக்கம் ) கூந்தலை விரித்து போட்டு சிலம்பை உடைச்சி ஒத்த முலையை பிச்சி போட்டு ... ...பத்திகிட்டு எரிஞ்சிச்சு ..
வைர முத்து உடனே தோப்புகரணம் போட்டு உடனே கால்லே விழுந்து ......உடனே மாப்பு கேட்டு ...

அப்புறம் இந்த தங்கர் பச்சானும் தான் மாட்டிக்கொண்டு பாவம் ....

.....

http://rprajanayahem.blogspot.in/2012/06/carnal-thoghts-32.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_13.html

Aug 30, 2012

எம் ஆர் ராதா வாழ்வில் பிராமணர்கள்

நேற்று  2.9.12 தேதியிடப்பட்ட ஜூனியர் விகடனில் கழுகார் பதிலில் இந்த பதிவின் முதல் பாராவில் உள்ள விஷயம்  இடம்பெற்றுள்ளது.அதனால் இந்த பதிவு மீள் பதிவு செய்யப்படுகிறது.

 ‘பி.எஸ்.ஞானம்’ என்ற என் பதிவில் பாசமலர் படம் பார்க்கும் பெண்கள் எப்படி அந்த வில்லி நடிகையை திட்டுவார்கள் என்று எழுதியிருந்தேன். அதன் பின்னர் ஆனந்த விகடனில்  வெளியான சுகாவின் தொடர்கட்டுரையில் ஷோலே படம் பார்ப்பவர்கள் தியேட்டரில் அம்ஜத்கானை எப்படித்திட்டுவார்கள் என்று எழுதப்பட்டிருந்தது

Nov 23, 2009



 சங்கரதாஸ் சுவாமிகளை " நாடக உலகத்தந்தை " என எல்லோரும் சொல்வதை எம்.ஆர் .ராதா ஏற்றவரல்ல.' நாடக உலகின் தந்தை ஜெகந்நாதய்யர் தான் 'என எப்போதும் உறுதியாக ராதா சொல்வார்.

" மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சபா." முதலாளி ஜெகந்நாத அய்யர்.

ஜகன்னாத அய்யர் நூறு வருடங்களுக்கு முன் தன் நாடகக் கம்பெனியில் நடிகர்களிடம் ' சம பந்தி போஜனம் ' கொண்டு வந்து புரட்சி செய்தவர் .

கிட்டப்பா இந்த நாடக கம்பெனியில் சேர தன் அண்ணன் தம்பிகள் ஐந்து பேரோடு வந்தார் ." கிட்டப்பா ஒருத்தனுக்காக இத்தனை பேரை வெச்சி என்னாலே சமாளிக்க முடியாது ''ன்னு சொல்லி ஜகன்னாத அய்யர் திருப்பி அனுப்பி விட்டார்.

ஜகன்னாத அய்யர் கம்பெனியிலிருந்து என் . எஸ் . கே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி கொல்லம் போய் டி .கே .எஸ் . கம்பெனியில் சேர்ந்து விட்டார். ஜகன்னாத அய்யர் உடனே போலீசில் ' கம்பெனி நகையை திருடி விட்டான் ' என்று என் .எஸ் .கே மீது புகார் கொடுத்து விட்டார் . போலிஸ்
என் .எஸ் . கே யை விலங்கிட்டு அவரை ஜகன்னாதய்யரிடம் அழைத்து வந்தார்களாம் . மீண்டும் கம்பெனியில் சேர்ந்தார் என் .எஸ் .கே .

எம் . ஆர் .ராதாவின் நடிப்பு வாழ்க்கைக்கு அஸ்திவாரம் பலமாகப் போட்டவர் ஜகன்னாத அய்யர் தான் . இவர் மீது ராதாவுக்கு மிகுந்த மரியாதை.

ராதா தன் வாழ்க்கையில் ரொம்ப உயர்ந்த இடத்தில் வைத்து தொழுகையே நடத்திய உத்தமர் ஒருவர் உண்டு . அவர் ஜட்ஜ் கணேசய்யர் ."கண் கண்ட தெய்வம் கணேசய்யர் " என்று நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.
"விமலா அல்லது விதவையின் கண்ணீர் " என்ற நாடகத்திற்கு நாகையில் சனாதனிகள் தடை செய்யவேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது அந்த நாடகத்தை ஜட்ஜ் கணேசய்யர் பார்த்து விட்டு ராதாவை வானளாவ புகழ்ந்து நாடகம் நடப்பதற்கு தடையேதும் இல்லை என தீர்ப்பு வழங்கினார் .



தான் காதலித்த ஒரு பெண்ணை சக நடிகர் சைட் அடித்தார் என்பதற்காக ராதா கோபமாகி அந்த நடிகர் மீது திராவகத்தை ஊற்றிய போதும் கணேசய்யர் அந்த கேசில் இருந்து காப்பாற்றினார்.

இந்த திராவகம் வீசப்பட்ட நடிகர் பின்னாளில் ராதா எம்ஜியாரை சுட்ட கேசில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார் .ஆனால் அவர் ராதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்துவிட்டார் . ஏனென்றால் அந்த நடிகர் அந்த நேரத்தில் ராதாவின் நண்பர் ஆகியிருந்தார் . நண்பரானது எப்படி என்பது புரியாத புதிர் என்கிறார் ராதா .

திராவிட கழக மாநாடு ஒன்றில் கொடி பிடித்து குதிரையில் ராதா வந்த போது அந்த குதிரையை ஒரு காங்கிரஸ் காரர் சீண்டி அதன் பின்னங்கால்களால் உதை வாங்கி இறந்து போனார் . அவரை எச்சரித்தும் அந்த ஆள் மீண்டும் குதிரையை சீண்டியதை தொடர்ந்ததால், ராதா தான் டெக்னிக் ஆக குதிரை கடிவாளத்தை பிடித்து உதைக்கும்படி செய்திருக்கிறார் . அந்த கேசில் இவருக்கு தூக்கு கூட கிடைத்திருக்க வேண்டியது. அப்போதும் ராதாவுக்கு ஆபத் பாந்தவராக கணேசய்யர் தான் காப்பாற்றியிருக்கிறார் .

இந்த தன் குற்றங்களை சொல்லும்போது ராதா இந்த விஷயங்கள் பத்திரிகையில் வெளிவரும்போது ஜட்ஜ் கணேசய்யர் கெளரவம் பாதிக்கப்படக்கூடாதே என்ற பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறார் .

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டீசாருக்காக யுத்த எதிர்ப்பு நாடகங்கள் நடத்துவதற்கு ராதாவுக்கு மிகப்பெரிய தொகையை ஏற்பாடு செய்து கணேசய்யர் உதவி செய்தார். அவர் வாழ்வில் மகத்தான திருப்பம் இந்த உதவி . அப்போது
எம்.ஆர்.ராதா தளுதளுத்து கண்ணில் நீர் பொங்க கணேசய்யரை கையெடுத்து கும்பிட்டு சொன்னார் " தெய்வம் வெளியே இல்லே. நமக்குள்ளே தான் இருக்குன்னு பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கிறேன் . இன்னிக்குத் தான் அந்த தெய்வத்தை நேருக்கு நேராப் பார்க்கிறேன். "

ராதா வாழ்விலிருந்து முழுவதுமாக வறுமையை அகற்றியவர் ஜட்ஜ் கணேசய்யர் தான். புகழ், பணம், செல்வாக்கு எல்லாமே அப்புறம் ராதாவைத்தேடி ஓடி வந்து குவிந்தது .

ராதா மதித்த இன்னொரு பிராமணர் திருவாரூர் சர் ஆர் . எஸ் . சர்மா. அவரைப் பற்றி ராதா பூரிப்புடன் சொன்னது " அவர் ஆரியர்களுக்கு கொடுத்ததை விட திராவிடர்களுக்குக் கொடுத்தது தான் அதிகம்."

பரத நாட்டிய கலைக்கு பிராமணர்களால் தான் உன்னதப் பெருமை கிடைத்தது என ராதா அழுத்தமாக நம்பினார்." ஒரு காலத்தில் தாசிகளுக்கே உரிய கலையாயிருந்த பரதக்கலை பிராமணர்களால் புனிதமான கலையாயிடிச்சி. அந்தக் கலைக்காக பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அர்ப்பணம் செய்றாங்களே!" பரவசமாக சொல்கிறார் .

'சிறைச்சாலை சிந்தனைகள் ' என்ற நூல் ராதா அப்போது எம்ஜியார் கேசில் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் விந்தன் அவரை பேட்டியாக எடுத்தது.
ராதாவின் ஒவ்வொரு அமர்க்களமான,அடாவடியான கருத்துகளுக்கும்
( அவருடைய அபிப்பராயங்கள் பல பாமரத்தனமானவை ) விந்தன் comments தான் நூலில் ஒரு செயற்கையான குறை. ஏனென்றால் ப்ளாகில் வருகின்ற பல அபத்த பின்னூட்டங்கள் போலவே இருக்கின்றன விந்தன் தன் பேட்டியில் எம் ஆர் ராதாவின் பேச்சில் பிரமித்து ஏதேதோ சொல்வது .

கதிரில் வெளிவந்த தொடரை முழுவதும் பைண்ட் செய்து ஒரு நண்பர் வைத்திருந்ததை 25வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன் . ஆனால் இப்போது வெளி வந்துள்ள நூலில் பல விஷயங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன என தெரிகிறது .

அவர் காலத்து மற்ற நடிகர்களைப் போலவே ராதா நிறைய..நிறைய்ய பலவீனங்கள் கொண்ட மனிதர். ஆனால் அவரிடம் ஏனைய நடிகர்களிடம் இருந்த hypocrisy கிடையாது என்பது தான் அவரின் குண விஷேசம். தான் செய்த மோசமான தவறுகளைக்களைக்கூட வெளிப்படையாக பேசிய ஒரே தமிழ் நடிகர் ராதா மட்டுமே.
ராதா அவருடைய அபூர்வமான தனித்துவமான நடிப்புக்காக மிகுந்த கவனத்துக்குரியவர்.

Feb 9, 2009

Over Action

ஜெமினி கணேஷ் இறந்தபோது காலச்சுவடில் நான் எழுதிய இரங்கலில் குறிப்பிட்டேன் : " தமிழ் திரையின் உக்கிரமான ஆகிருதிகள் எம் ஆர் ராதா , சிவாஜி கணேசன் , நாகேஷ் ஆகியோர் . நேர் எதிர் திசையில் மென்மையாக சாதித்தவர்கள் : ஜெமினி கணேஷ் , எஸ் வி ரங்காராவ் , டி .எஸ் . பாலையா மூவரும் "

( நாகேஷ் இறப்பதற்கு ஐந்து தினம் முன் 'மத்திய அரசின் பத்ம விருதுகள்' என்ற பதிவில்
"தமிழ் திரை கண்ட நகைச்சுவை நடிகர்களில் சத்தியமாக முதன்மையானவர் நாகேஷ் தான் . " என நான் குறிப்பிட்டிருந்தேன் .)
உக்கிரமான ஆகிருதிகள் மூவரிடமும் ஓவர் ஆக்சன் இருந்தது .
இவர்களில் சிவாஜியின் ஓவர் ஆக்சன் மக்களால் ரசிக்கப்படவில்லை . சிவாஜியின் நடிப்பில் மிகை யை ஒரு குறையாக த்தான் திரை ரசிகர்கள் எழுபதுகளில் அதிகம் கண்டு எரிச்சலுற்றார்கள் என்பது தான் உண்மை .
நாகேஷும் அப்படித்தான் . ஓவர் ஆக்சன் அவர் தத்துவவாதியாக மாறி ' தத்துவத்துக்கு அம்மா 'கற்பனை 'அப்பா கவலை ' என்று சாதாரணமாக சினிமாவுக்கு வெளியே கூட தத்துவம் பேச ஆரம்பித்தவர் நாகேஷ் . திரையில் நாகேஷ் ஓவர் ஆக்சன் சொல்லி முடியாது .
'கடல் மீன்கள் ' படத்தின் எடிட்டிங் போது கமல் ஹாசன் வந்திருந்து அவருடன் நாகேஷ் கடல் போட் சீனில் செய்திருந்த சகிக்க முடியாத ஓவர் ஆக்சன் பகுதிகளை எடுத்து விட சொன்ன போது நான் அங்கிருந்தேன் . கமல் ஜி என் ரங்கராஜனிடம் சொன்னார் : நாகேஷ் ஷாட்ஸ் நிறைய நீக்கிடனும் . ஓவர் ஆக்சன் ரொம்ப . நாகேஷை எல்லாம் எங்க வாத்தியார் ( பாலச்சந்தர் ) தான் சரியா வேலை வாங்க முடியும் . மத்தவங்க அவர லூசா விட்டா ரொம்ப சொதப்பிடுவார் .மத்தவங்களுக்கு நாகேஷை வேலை வாங்கறது சிரமம் "
அன்று கடல் மீன்கள் படத்தில் தங்கவேலு நடிப்பை பிரமாதமா கமல் புகழ்ந்தார் .

பின்னால் கமல் படங்களில் நாகேஷ் நடிப்பை நன்கு கவனமாக பதிந்ததில் கமலின் இந்த எச்சரிக்கை உணர்வு தான் காரணம் .

எம் ஆர் ராதாவின் நடிப்பில் அவர் எவ்வளவு தான் ஓவர் ஆக்சன் செய்தாலும் தமிழ் மக்கள் அதை முழுமையாக அங்கீகரித்தார்கள் . அவருடைய நடிப்பில் 'மிகை' என்பது கூடுதல் அணிகலனாக மாறி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது .
ஐம்பது ,அறுபதுகளில் மிகை நடிப்பில் கொடிகட்டியவர் ராதா ! எவ்வளவு பெரிய ஆள் அவர் பக்கத்தில் நின்றாலும் அமுங்கி போய் தான் தெரிவார் . ஓவர் ஆக்சன் செய்து சிவாஜியும் நாகேஷும் எழுபதுகளில் எரிச்சலுக்கு தான் ஆளானார்கள் .

...
இன்னொரு விஷயம் இதை இங்கு குறிப்பிட்டேஆகவேண்டும் .
இன்றைய நடிகர்களில் கமல் ஹாசன் நடிப்பு பற்றி ஒரு விஷயம் . அவர் நடிக்கும் போது ஒரு "கர்வம் " தெரிவதை கவனித்திருக்கிறீர்களா ? அவர் நடிக்கிற தோரணை " ஆமா , இந்த படத்தில் எனக்கு நிறைய வேலை !" என்று கேமரா முன் கர்வத்துடன் நிற்பார் கமல் .
இன்றைக்கு அகில இந்தியாவிலும் கதாநாயகர்களில் கேமரா முன் நடிக்கும்போது கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் படு ஸ்மார்ட் ஆ நடிப்பவர் மோகன் லால் மட்டுமே !