Share

Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Nov 28, 2020

Words, words, words

 Polonius :What do you read, My Lord?


Hamlet : Words, words, words. 


'பூச்சி டயலாக் ' ஜானகிராமன் கதை. 


ஒரு கரப்பான் பூச்சி ஒரு கறுப்பு எறும்பிடம்

' என்சைக்ளோப்பிடியா பிரிட்டானிக்கா வாசிச்சதுண்டா? 

புக் ஆஃப் நாலெட்ஜ் படிச்சிருக்கியா? ' ன்னு கேட்கும். 


கறுப்பு எறும்பு பீற்றலாக "எங்களை என்ன வேலை மெனக்கெட்ட ஜாதின்னு நெனச்சியா, இப்படிப் புஸ்தகம் புஸ்தகம்னு அலையறதுக்கு? 

நாங்க என்ன கரையானா, ஒன்ன மாதிரி கரப்பானா? இல்ல மனுஷனா?" 


கரப்பு பதிலடி " ஞானசூன்யத்தைக் கௌரவமாச் சொல்லிக்கிற"


.. 


1972ல் டெல்லியில் 

தி. ஜானகிராமனை சந்திக்க வேண்டி செ.ரவீந்திரனை அழைத்துக்கொண்டு போனவர் பொன் ராஜாராம். 


தி. ஜானகிராமன் அப்போது 

ரவீந்திரனை

 கூர்ந்து பார்த்து கேட்டிருக்கிறார்.

 "உங்கள் வயதென்ன?" 


ரவி : "இருபத்தெட்டு" 


தி. ஜா : "முப்பத்தைந்து வயதிற்குள்ள நீங்க

 உலக இலக்கியம் படிச்சி முடிங்க."


..


இந்த புகைப்படம் இந்த 2020 ஜனவரியில். 

என்னுடைய நூல் 'சினிமா எனும் பூதம்' 


2019 புக்ஃபேர்ல சாரு நிவேதிதாவை 

ஏதோ ஒரு சேனலுக்காக காயத்ரி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். 


சாரு : பெண்கள் இருந்தாலும் 

உளவியல் நெருக்கடி. 

இல்லாவிட்டாலும் உளவியல் நெருக்கடி. 


காயத்ரி : அது Likewise. 

ஆண்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. 

Likewise.



Jul 30, 2020

சாரு நிவேதிதாவின் மயானக்கொள்ளை நாடகம்


இரண்டு வருடங்களுக்கு முன்
சாரு நிவேதிதா தன் ’மயானக்கொள்ளை’ நாடகத்தை
கூத்துப்பட்டறையில் வாசித்துக்காட்ட வந்திருந்தார்.
மு.நடேஷ் “ வா, மாப்ள” என்று அன்போடு வரவேற்றார்.
மயானக்கொள்ளை ஒரு அற்புதப் படைப்பு.
நான் தான் மயானக்கொள்ளையை நடிகர்களுக்கு வாசித்துக் காண்பித்தேன்.
இப்படி வாசிப்பது Closet Drama வகை.
அத்தனை கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நடிப்பையும் வாசிக்கும் போது கொண்டு வரவேண்டும்.
கேட்பவர்களுக்கு காட்சியாக விரியும்.
கேட்டவர்கள் அனைவரும் அதை உணர்ந்தனர்.
சாரு நிவேதிதா “ ராஜநாயஹம், ரொம்ப நல்லா வாசிச்சீங்க.
சத்தியமா என்னால நிச்சயமா
உங்கள மாதிரி வாசிச்சிருக்க முடியாது.” என்று
ரொம்ப விசாலமான மனத்துடன் பாராட்டினார்.
சாரு மேலும் சொன்னார்”உங்களுக்கு ஏதாவது செய்ய முடியலயேன்னு எனக்கு வருத்தமா இருக்கு”
எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அன்றைக்கு
அவர் நினைத்ததை
நடத்திக்காட்டி விட்டார்.
R.P. ராஜநாயஹம்”சினிமா எனும் பூதம்” நூல்
இந்த வருடம் ஜனவரியில்
புக் ஃபேரில் வெளி வந்தது.

Oct 9, 2019

சாருவின் காமரூப கதைகள் 15 - (R.P.Rajanayahem's guest appearance)

சாரு நிவேதிதாவின் ”காமரூப கதைகள்” நாவலின்
15வது அத்தியாயம் 
(R.P.Rajanayahem's guest appearance)





"Open my grave when I am dead, and thou shalt see a cloud of smoke rising out from it; then shalt thou know that the fire still burns in my dead heart -- yea, it has set my very winding-sheet alight."
ஹஃபீஸின் இந்த கஸலில் " yea, it has set my very winding-sheet alight" என்ற வாக்கியத்திற்கு பெருமாளுக்கு அர்த்தம் விளங்கவில்லை.
winding-sheet என்றால் சவத்தின் மீது போர்த்தப் படும் போர்வை என்று புரிந்தாலும் அர்த்தம் பூரணமாகவில்லை.
தமிழின் பிரபலமான மொழி பெயர்ப்பாளர்கள் என்றால் "அந்த நெருப்பில் என் போர்வை கருகாது" என்று கொலை செய்து இருப்பார்கள்.

ராஜநாயஹத்தை போனில் அழைத்தான் பெருமாள். 
அவர் , இவன் முடிக்கும் முன்பே "நானே அழைக்கிறேன்" என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார். பொதுவாக அவனுடைய நண்பர்கள் அனைவருமே அவனுக்குச் செய்யும் உதவி அது. அவனுடைய தொலைபேசி செலவைக் குறைக்கிறார்களாம். பெருமாளுக்கோ அவருக்கு செலவு வைக்கக் கூடாது என்று எண்ணம். அதனால் அவர் அழைப்பை இவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அழைக்கும்போது எடுக்காமல் , மணி அடித்து ஓய்ந்ததும் இவன் அழைப்பான். அவர் எடுக்க மாட்டார். அவரும் இவனைப் போலவே நினைத்திருக்கிறார்.
சொன்னால் யாருமே நம்ப மாட்டீர்கள். சரியாக மூன்று மணி நேரம் நடந்தது இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம். ஒரு கட்டத்தில் பெருமாளுக்கும் பிடிவாதம் வந்து விட்டது. ' இவரோடு இன்று நாம்தான் பேச வேண்டும் ' என்று தீர்மானம் செய்து விட்டான். அவருக்கோ அப்படியெல்லாம் எதுவும் தீர்மானமோ பிடிவாதமோ எதுவும் இல்லை. பெருமாளின் தொலைபேசியில் சிக்னல் இல்லை என்று நினைத்துக் கொண்டு , விடாமல் பொறுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
முப்பது , நாற்பது அழைப்புகள் இரண்டு பக்கத்திலிருந்தும். நேரம் செல்லச் செல்ல பெருமாளுக்கு ஒரு வீம்பே வந்து விட்டது.
இதற்கிடையில் ஒரே ஒரு முறை பெருமாளிடம் சிக்கினார் ராஜநாயஹம். "என்ன ராஜநாயஹம்...இப்படி ஆகிக் கொண்டிருக்கிறது ?" என்று ஆரம்பித்தான் பெருமாள். அவர் அதற்குள் குறுக்கிட்டு "நானே கூப்பிடுகிறேன் பெருமாள்" என்றார்.
"ராஜநாயஹம்...ராஜநாயஹம்...ப்ளீஸ்...கேளுங்கள்...
எனக்கு ஒரே ஒரு வார்த்தைக்குத்தான் அர்த்தம் தெரிய வேண்டும். ஒரே ஒரு வார்த்தை...நீங்கள் கூப்பிட வேண்டாம்.
போனை வைத்து விடாதீர்கள்" என்று கதறி விட்டு கவிதையின் முதல் வரியிலிருந்து ஆரம்பித்தான்.
அப்போதுதானே முழுமையாகப் புரியும் ? ஆனால் அவரோ "சரி சொல்லுங்கள் , எழுதிக் கொள்கிறேன்" என்றார்.
" அடடா , ஒரே ஒரு வார்த்தைக்காக முழுக் கவிதையையும் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே ராஜநாயஹம் ?"
" இருங்கள் பெருமாள். நான் ஆபீஸ் போய் விடுகிறேன். அங்கிருந்து சாவகாசமாகப் பேசலாம்..."
" ஐயோ ராஜநாயஹம்...ஒரே ஒரு வார்த்தைக்காக நீங்கள் ஆபீஸ் போக வேண்டுமா ?"
" ஆபீஸ் என் வீட்டிலிருந்து இரண்டே இரண்டு கிலோ மீட்டர்தான் இருக்கிறது ; ஒரு சிரமமும் இல்லை..."
" ஐயோ ராஜநாயஹம்...ஒரே ஒரு வார்த்தைதான். இந்த ஒரே ஒரு வார்த்தைக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் போக வேண்டுமா ? யோசித்துப் பாருங்கள்... நாம் இவ்வளவு பேசியதற்குள் நீங்கள் சொல்லியிருக்கலாம்..."
அதற்குள் அவர் போனில் சிக்னல் பிரச்சினை. போனை வைத்து விட்டு ' இப்படி ஒரே ஒரு வார்த்தைக்காக இந்த நல்ல மனிதரைப் போட்டு இப்படிப் படுத்த வேண்டுமா என்று நினைத்து விஷாலுக்கு போன் போட்டான் பெருமாள்.
அவனோ "என் வீட்டுக்கு அக்கா கணவர் வந்திருக்கிறார் ; ஓடிக் கொண்டிருக்கிறேன்" என்றான் பதற்றத்துடன். "அடப் பாவி , நேற்றுதானே அக்கா வந்திருக்கிறார் ; ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாய் ?" என்று கேட்டேன்.
" ஆமாம் ; நேற்று அக்கா , இன்று அக்காவின் கணவர்."
கிட்டத்தட்ட ' ஆத்தீமூக்கா ' காரர்கள் ' அம்மா ' வுக்குப் பயப்படுவது போல் அல்லவா பயந்து சாகிறான் என்று கடுப்புடன் நினைத்துக் கொண்டு , " சரி சரி...ஓடு. அதற்கு முன் இதற்கு அர்த்ததைச் சொல்லி விட்டு ஓடு" என்றான்.
" ஐயோ , நான் இப்போது பைக் அல்லவா ஓட்டிக் கொண்டிருக்கிறேன் ?"
" அடப்பாவி , உனக்கு எத்தனை தடவை சொல்வது , பைக் ஓட்டும் போது போனை எடுக்காதே என்று ?"
" சரி சரி சொல்...நான் பைக்கை ஓரம் கட்டி விட்டேன்."
சொன்னான்.
" அடடா , அற்புதம்...இதற்கெல்லாம் ஒரு குவார்ட்டர் போட்டால்தானே சரியாக இருக்கும் ? ம்ம்ம்....உயிரின் சுடர் என்று போடு" என்று சொல்லி விட்டு அக்கா கணவரைப் பார்க்க ஓடி விட்டான் விஷால்.
இதற்கிடையில் ராஜநாயஹத்தை மீராவின் தொலைபேசியை வைத்துத் தந்திரமாக அமுக்கிய பெருமாள் , " என்ன ராஜநாயஹம்... ஒரே ஒரு வார்த்தைக்கு மூன்று மணி நேரமாக ஒரு அபத்த நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இது தேவையா ?" என்று கேட்டான்.
" ஆமாம் பெருமாள் , நினைத்தால் மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் ஆபீஸ்க்கு போய் பேசுகிறேன் என்று. நீங்கள விடமாட்டேன் என்கிறீர்கள். சரி போனை வையுங்கள். நான் கூப்பிடுகிறேன்”.
“அய்யோ ராஜ நாயகம்... நீங்கள் கூப்பிட்டால் நான் எடுக்கமாட்டேன். அது சரி, இந்த அபத்த நாடகத்தை ஏன் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறீர்கள் ? நிறுத்தி விட வேண்டியதுதானே? என்னுடைய அழைப்பை ஒரு முறையாவது எடுத்திருக்கலாம் அல்லவா “ என்று கேட்டு விட்டு ,
கவிதையை முழுமையாகச் சொல்லி கடைசி வரியின் அர்த்தத்தைக் கேட்டான். அதற்குள் மீண்டும் சிக்னல் பிரச்சினை.
ஆனால் ஒரே நிமிடத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
" உயிரின் சுடர்."
***
1.6.2008.
8.40 p.m.

Oct 3, 2019

”R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா” - சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா இன்று என் பதிவு எஸ்.வி.சுப்பையா படித்து விட்டு ”R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா” என்ற தலைப்பிட்டு எழுதியுள்ள கட்டுரை கீழே
R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா
October 3, 2019
நாகூரில் சிறுவனாக இருந்த போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஒரு எழுத்தாளன் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்த போது தெரிந்த முதல் ஊர் தில்லி. அங்கேதான் இந்திரா பார்த்தசாரதி, என்னுடைய பிரதி பிம்பம் என்று நான் சின்ன வயசிலேயே நம்பிய ஆதவன், கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன், என் குருநாதர் என மதித்த க.நா.சு., வெங்கட் சாமிநாதன் போன்ற பலர் வசித்தார்கள். தி. ஜானகிராமனும் அங்கேதான் இருந்தார். ஆனால் அவர் எழுத்து மீது அப்போது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் தில்லி போய்ச் சேர்ந்ததும் மேலே குறிப்பிட்ட யாரையும் பார்க்காமல் கடைசியில் குறிப்பிட்ட வெங்கட் சாமிநாதன் பார்வையில் விழுந்தேன். வெ.சா.விடம் ஒரு அபூர்வமான சக்தி இருந்தது. அவரிடம் வந்தவர்கள் மற்ற யாரையும் சந்திக்க மாட்டார்கள். எல்லோருமே வீண் என்று நம்மிடம் நிரூபித்து விடுவார். எனக்கு ரொம்பவும் பிடித்த ஆதவனைக் கூட நான் சந்திக்கவில்லை. வெ.சா.வின் காந்தப் பிடியிலிருந்து நான் விடுபட்ட போது தில்லியிலிருந்து சென்னை வந்திருந்தேன்.
வெ.சா.வின் உலகில் வாழும் போது நமக்குள் பல கட்டுக்கதைகளும் (myth), நம்பிக்கைகளும் இறங்கியிருக்கும். அப்படிப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றுதான், தமிழ் சினிமா ஒரு குப்பை. ரொலான் பார்த்தின் Image, Music, Text-ஐப் படிக்கும் வரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். வெகுஜன கலாச்சாரத்தைச் சேர்ந்த எல்லாமே குப்பை. அதனால்தான் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முதல் முதலாக வெகுஜன கலாச்சாரத்தைச் சேர்ந்த அக்னி நட்சத்திரம் சினிமாவை சென்னை அபிராமி தியேட்டரில் பார்த்த போது அதில் நடித்திருந்த நட்சத்திரங்களைப் பார்த்து அது யார் இது யார் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். 1978-இல் தில்லி சென்றேன். 1988 வாக்கில் சென்னை வந்த போது அக்னி நட்சத்திரம் பார்த்தேன். படம் வெளியாகி 200 ஆகியிருந்தது. பக்கத்தில் இருந்தவரிடம் ”படம் இவ்ளோ நல்லா இருக்கு, ஏன் கூட்டமே இல்லை?” என்று நான் கேட்டபோது அவர் அந்த விபரம் சொன்னார். அவரிடம்தான் ”அப்பாவாக நடிப்பவர் நன்றாக நடிக்கிறாரே, யார் அது?” என்று கேட்டேன். அந்த அளவுக்கு வெகுஜன கலாச்சாரத்திலிருந்து விலகி இருந்தேன்.
பிறகுதான் வெகுஜன கலாச்சாரம் பற்றிய ரொலான் பார்த்தின் ஆய்வுகளைப் படித்துத் தெளிந்தேன். அதன் பிறகு தமிழ் சினிமாவை என்னால் குப்பை என்று ஒதுக்க முடியவில்லை. பராசக்தி என்ற படத்தைப் பார்க்காமல் திராவிட இயக்கத்தின் எழுச்சியை ஒருவர் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? நாடோடி மன்னனில் நாடோடி எம்ஜியார் “நான் ஆட்சிக்கு வந்தால்…” என்று சொல்லி சில வாக்குறுதிகளை அளிப்பார். அப்போதெல்லாம் அவர் அதிமுக என்று ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வருவார் என்று யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. 1958-இல் வெளிவந்தது இந்தப் படம். அதிமுக ஆரம்பித்தது 1972. நாடோடி மன்னன் வசனத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என ஆக்குவேன் என்று வரும். கார்ல் மார்க்ஸ். வசனம் எழுதியவர் கண்ணதாசன். அந்தக் கால தமிழ் இலக்கியத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சி பற்றி நாம் ஒரு வார்த்தை காண முடியாது. அப்படி அவசியமும் இல்லை. சுதந்திரப் போராட்டம் பற்றியே நம் முன்னோடிகள் யாரும் – செல்லப்பாவைத் தவிர – எழுதவில்லை என்கிற போது திராவிடக் கட்சிகள் பற்றியும் நாம் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் பற்றி ஒருவர் ஆய்வு செய்ய வேண்டுமானால் வெங்கட் சாமிநாதன் திரும்பத் திரும்ப குப்பை என்று சொல்லிக் கொண்டிருந்த – நானும் சில காலம் அப்படி நம்பிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில்தான் அதற்கான தரவுகள் கிடைக்கும்.
அதேபோல் தமிழ் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒருவர் அணுக வேண்டிய இடம், தமிழ் சினிமா. தமிழர்களின் முக்கியமான குணம், இனப் பெருமை. வீரம். நட்புக்காக உயிரையும் கொடுப்பேன். மானம். என் கணவனை அநியாயமாகக் கொன்றால் என் முலையைப் பிடுங்கி எறிந்து ஊரையே எரிப்பேன். என் நடிகனின் படம் வெளியானால் அவனுக்கு அறுபது அடி கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணுவேன். அதற்கு ஆகும் செலவுக்கு என் பொண்டாட்டியின் தாலியை விற்பேன். என் தலைவி ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போனால் அல்லது தேர்தலில் தோற்றால் திருப்பது உண்டியலில் என் நாக்கை அறுத்துக் கொடுப்பேன்.
தமிழனின் இந்த முக்கியமான உளவியலை (psyche) புரிந்து கொள்ள தமிழ் சினிமாவில் கிடைக்கும் ஒருசில signifierகளில் ஒருவர்தான் எஸ்.வி. சுப்பையா. சிக்னிஃபயருக்குத் தமிழில் என்ன சொல்வார்கள் என்று எஸ். சண்முகத்தைத்தான் கேட்க வேண்டும். சிக்னிஃபயருக்கான கூகிள் விளக்கம்: In Saussurean analysis, which Barthes largely uses, the distinction between signifier and signified is crucial. The signifier is the image used to stand for something else, while the signified is what it stands for (a real thing or, in a stricter reading, a sense-impression).
தயவுசெய்து எஸ். சண்முகம் இதை இன்னும் விரிவாக விளக்க வேண்டும்.
திடீரென்று காலங்காலையில் நான் இந்த நினைவுகளில் மூழ்கக் காரணம், R.P. ராஜநாயஹம். எஸ்.வி. சுப்பையா பற்றிய அவர் பதிவைப் படித்ததும் எனக்கு இதெல்லாம் ஞாபகம் வந்தது. ராஜநாயஹத்திடம் அவ்வளவாக தன்முனைப்பு கிடையாது. இந்த அபூர்வமான குறிப்புகளெல்லாம் தொகுக்கப்பட்டு நூலாக வர வேண்டும். நானும் இந்தப் படங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு இந்த விஷயத்தில் எல்லாம் ஞாபக சக்தி அறவே கிடையாது. ராஜநாயஹத்தின் ஞாபக சக்தியும் அபூர்வமானது. அபாரமானது. கீழே ராஜநாயஹத்தின் பதிவு:
....



Sep 30, 2019

சாரு நிவேதிதா ஃபேஸ்புக்கில் R.P. ராஜநாயஹம்

27.09.2019
சாரு நிவேதிதா
R.P. ராஜநாயஹம் எனக்கு நன்றி சொல்லியிருந்தார். அதற்கு நான் எழுதிய பதில் இது:
இன்னும் அதிகம் அதிகம் அதிகம் எழுதுவதே எங்கள் எதிர்பார்ப்பு. இதையெல்லாம் எழுத இப்போது உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை இன்று. காருக்குறிச்சி அருணாச்சலம் என்று இப்போது சொன்னால் அப்படீனா என்னா என்றுதான் கேட்கும் நிலையில் இருக்கிறது இன்றைய தலைமுறை. இந்த நிலையில் சென்ற தலைமுறையை சென்ற தலைமுறையின் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் முக்கியமானவர்களுள் நீங்கள் ஒருவர். இரண்டு பெயர்கள் எனக்கு ஞாபகம் வருகின்றன. ஒன்று, தியடோர் பாஸ்கரன், இரண்டு, எஸ். முத்தையா. அடுத்து R. P. ராஜநாயஹம். இதில் எதுவும் வரிசைக்கிரமம் எல்லாம் கிடையாது.

....

28.09.2019
சாரு நிவேதிதா :
R.P. ராஜநாயஹம் இன்று எழுதியுள்ள ஏவிஎம் ஸ்டுடியோ என்ற பதிவு ஒரு அற்புதமான சிறுகதை.
எப்பேர்ப்பட்ட கலைஞன் அவன்.
அந்தப் பதிவை என் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

Sep 27, 2019

ராஜநாயஹம் பற்றி சாரு நிவேதிதா இன்று


ராஜநாயஹம் பற்றி சாரு நிவேதிதா
இன்று எழுதியுள்ள ஒரு கடிதம்

அன்புள்ள ராம்ஜி, காயத்ரி,

என்னுடைய நீண்ட கால நண்பர் R.P. ராஜநாயஹம் முகநூலில் எழுதி வரும் குறிப்புகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  இதை நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கூட சொல்லியிருக்க முடியும்.  ஆனால் அவரைப் பற்றி தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன்.  நான் அவரைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன்.  வீழ்ந்தாலும் லியர் மன்னன் லியர் மன்னனே என்ற என்னுடைய ஒரு கட்டுரை போதும், அவருடைய பெருமையைச் சொல்ல.  அவர் மாதிரி ஆட்கள் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்க வேண்டியவர்கள்.

எனக்கு ஷேக்ஸ்பியரில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவருக்குத்தான் போன் போட்டுக் கேட்பேன்.  நம்ப முடியாத அளவுக்கு ஞாபக சக்தியும் ஞானமும் கொண்டவர்.  அறிவுக் கடல் என்றே சொல்லலாம்.  அவர் சொல்லும் தகவல்களைக் கேட்டால் அவர் வயது 105 இருக்கும் என்று தோன்றும்.  ஆனால் வயது என்னவோ 55 தான்.  அதற்குக் குறைவோ என்னவோ?

லௌகீகம் என்றால் என்னவென்றே தெரியாது எனக்கு என்று நினைத்துக் கொள்வேன்.  ஆனால் ராஜநாயஹத்தைப் பார்த்தால் நானெல்லாம் லௌகீகத்தில் ஜாம்பவான் என்றே சொல்லிக் கொள்ளலாம்.  லௌகீகத்தில் ஒரு மண்ணும் தெரியாது.  பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.  வருகிறவன் போகிறவனுக்கெல்லாம் பணத்தை வாரி இறைத்து விட்டு இப்போது அந்தக் கால பாரதியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இரண்டு பையன்களுக்கும் திருமணம் செய்து விட்டார் என்பதுதான் அவரது லௌகீக சாதனை.  திருப்பூரில் அவர் வசித்த போது அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்னையிலிருந்து திருப்பூர் போய் பார்த்தேன்.

ராஜநாயஹம் ஒரு நடமாடும் நூலகம்.  அவரிடம் உள்ள தகவல்கள் அனைத்தும் புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டும்.  எழுதுங்கள் எழுதுங்கள் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் நச்சரித்துக் கொண்டிருக்கும் நண்பன் நான் என்பதால் இதையெல்லாம் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன்.  மற்ற பதிப்பகங்கள் அவரை அணுகுவதற்குள் அவரை அணுகி காண்ட்ராக்ட் போட்டு விடுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  அவருக்கு லௌகீகமே தெரியாது.  தாண்டவராயன் என்பவர் இப்போது இந்த க்ஷணம் ஒரு பதிப்பகம் ஆரம்பித்து உங்கள் எழுத்தையெல்லாம் எனக்குக் கொடுங்கள் என்று பேப்பரை நீட்டினால் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடுவார்.  டாக்ஸி செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்புவார்.  அந்த மாதிரி ஆள்.  அவரை அப்படி விட்டு விடாதீர்கள்.  அவர் தமிழின் சொத்து.  மேலும் ஒரு விபரம், தி.ஜானகிராமனை நான் ஒரு refined பாலகுமாரன் என்று முட்டாள்தனமாகத் திட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பொறுமையாக உங்கள் வாழ்நாளில் ஒருநாள் தி.ஜா.வை கடவுள் ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடப் போகிறீர்கள்; அதை நான் பார்க்கத்தான் போகிறேன் என்று முப்பது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இப்போது அவர் வாக்கு பலித்து விட்டது.

முகநூலில் இன்றைய அவரது குறிப்பைப் பாருங்கள்.

https://www.facebook.com/rprajanayahem/posts/2525200787693372

....

Aug 23, 2019

என்னை மாதிரியே, என்னை மாதிரியே


’எம்பியார் டபுள் ராக்கெட்ல
நடிச்ச படம் பாத்திருக்கியா?’
”நம்பியாருக்கும் எம்பியாருக்கும் கத்திசண்ட எந்த படத்தில?”

இப்படி தான் அப்ப எங்க பக்கத்து வீட்டு அஞ்சு வயசு ராதாக்ரிச்சு அடிக்கடி கேட்டுக்கிட்டே இருப்பான்.
Double act என்பது அவன் அகராதியில் டபுள் ராக்கெட். எம்.ஜி.ஆரை மழலையாக எம்பியார் என்பான்.
எம்.ஜி.ஆர் நடிச்ச நீரும் நெருப்பும் படத்தில ஒரு எம்.ஜி.ஆர அடிச்சா இன்னொரு எம்.ஜி.ஆருக்கு வலிக்கும். இப்படியே காதல் சமாச்சாரமும்.

நாகேஷ் ஒரு பழைய படத்தில் பேசுகிற டயலாக்
இது போல
“ எனக்கு பசிச்சா இவன் தான் சாப்பிடுவான்.
எனக்கு விக்கல் வந்தா இவன் தான் தண்ணி குடிப்பான்.
நான் சாப்பிட்டா இவன் தான் ஏப்பம் விடுவான்.
நான் செத்தா இவன தான் குழியில வக்கனும்.”
எனக்கு இந்த நாகேஷ் வசனம் ஞாபகம் வர காரணம்
போகன் சங்கரின் இந்த கவிதை

” என்னை மாதிரியே
இருக்கிறீர்கள் நீங்கள்
என்னை மாதிரியே
சிந்திக்கிறீர்கள் நீங்கள்
என்னை மாதிரியே அழுகிறீர்கள் நீங்கள்
என்னை மாதிரியே கவிதை எழுதுகிறீர்கள் நீங்கள்
எனக்குப் பதிலாக
எனது கல்லறையை நிரப்ப
உங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இது தான்.”
சாரு நிவேதிதா ஞாபகம் வருகிறது. யாராவது அசட்டு வாசகன் “சார், நான் நினைக்கிறத நீங்க எழுதுறீங்க. என்ன மாதிரி தான் நீங்க.” இந்த அர்த்தம் தொனிக்க சாருவிடம் தத்து பித்துன்னு உளறினால் அவருக்கு கோபம் ஏற்பட்டு பொங்கி விடுவார்.
போகன் சங்கரிடம் யாரோ இப்படி அடிக்கடி சொல்லியிருப்பார் போல. அல்லது பலராகவும் இருக்கலாம்.
’போகன் நீங்க என் கவித மாதிரி தான் எழுதுறீங்க.நான் நினக்கிறத நீங்களும் நினைக்கிறிங்க. என்ன மாதிரியெ, என்ன மாதிரியெ’ தகுதியற்ற ஒரு மடக்கவிங்கன் இப்படி அடிக்கடி அனத்தியெடுத்ததால் அவனை கல்லறையில் வைக்க தேர்ந்தெடுத்திருக்கிறாராயிருக்கும்.
ஒரு யூகம் தான்.

இப்படி சந்தர்ப்பங்களில் எனக்கு எப்போதும் ஞாபகம் வருகிற விஷயம்.
’ஒரு நல்ல கவிஞனை சித்திரவதை செய்ய சுலபமான வழி உண்டு. அவனுடைய கவிதையை விரிவாக விளக்கி பொழிப்புரை எழுதுவது.’ என்று சொல்வார் நஸ்ஸிம் நிகோலாஸ் தாலிப் என்ற லெபனான் நாட்டு தத்துவ மேதை.
இவர் எழுதிய ’கறுப்பு அன்னப்பறவை’ (The Black Swan) புத்தகம் முக்கியமானது.
விளக்க பொழிப்புரை கவிதையின் வாசகன் எழுதுவது இல்லாமல் இன்னொன்று,
அந்த கவிஞனையே ’நீயே சொல்லு, நடந்தது என்னவென்று நீயே சொல்லு’ன்னு விளக்கச்சொல்லி கேட்பதும் அபத்தம்.
”நீ எழுதுன்னது இன்னொருத்தர் எழுதுன்னது போல தன்னென்னு சொன்னால் அவனுக்குக் கடும் கோபம் வரும்.தான் சுயம்.கொச்சு என்னுதுன்னு காமிக்க தலைகீழா நின்னு தண்ணி குடிப்பான்”ன்னு பாருக்குட்டி சொன்னதை போகன் இன்னக்கி சுட சுட எழுதியுள்ளதை பார்க்கலாம்.

To be a poet is a condition, not a profession. – Robert Frost
..

Sep 17, 2017

சாரு நிவேதிதாவின் முதல் நாவல் - ராஜநாயஹம் விமர்சனம் (1990)


’மேலும்’ இதழ் மே மாதம், 1990ல் பிரசுரமானது.

எக்ஸிஸ்டென்ஸியலிசமும் ஃபேன்ஸி பனியனும்
-    R.P.ராஜநாயஹம்

இந்த நாவலுக்கான முன்னுரையில் ‘ ஒரு நவீன இலக்கியப் பிரதி என்பது சமநிலையைக் குலைக்கக்கூடியதும், ஒழுங்கமைவைச் சிதைக்கக் கூடியதுமாக இருந்தே ஆக வேண்டும்’ என்பதாகவும் இவ்வகையான ‘ சமநிலையைச் சிதைக்கக் கூடியதான பலவித மொழியமைப்பையும் சொல்லாடல்களையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு இலக்கியப் பிரதி தத்துவங்களுக்கும் அறவியலுக்கும் எதிரான ஒரு கலகத்தை முன்வைக்கிறது என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது. இப்படி இந்தப் படைப்பை அறிமுகப்படுத்தும்போது ஏற்கனவே இந்த மாதிரி சமநிலையைச் சிதைத்து தத்துவத்துக்கும் அறவியலுக்கும் எதிரான கலகம் நடந்ததேயில்லையா என்ற கேள்வி எழுகிறது.

புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி ஆகியோர் தங்கள் காலத்தில் அந்நியப்பட்டுப் போய் தான் இயங்கியல் மாற்றம்  செய்தார்கள்.
கு.ப.ராவின் ‘சிறிது வெளிச்சம்’ கதை ஒழுங்கமைவை சிதைத்த இலக்கிய பிரதி தான். தி.ஜானகிராமன் மோகமுள்ளில் Adultryயோடு Fornicationஐயும் கொண்டு வருகிறார்.

புதுமைப் பித்தன் " புதிய நந்தன் ", "அவதாரம் " ஆகிய சிறுகதைகளில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் Homosexuality பற்றி எழுதியிருக்கிறார்.

கு.ப.ரா எட்டடி பாய்ந்தாரென்றால் கரிச்சான் குஞ்சு ‘பசித்த மானிடம்’ நாவலில் பதினாறடி பாய்ந்து Homo Sexuality பற்றி எழுதி ஒழுங்கமைவையும் சமநிலையையும் சிதைத்துக் கலகம் செய்துள்ளார்.

சம்பத் ‘ ஒரு சாமியார் ஜூவுக்குப் போகிறார்’ கதையில் இரண்டு பெண்களுக்கிடையிலான உரையாடலில் lesbianism தெளிவாகக் காண்பிக்கிறார்.
ஜி. நாகராஜன் தன்னுடைய ‘ மிஸ்.பாக்கியம் கதையில் lesbian rape (!) காட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கி கலகம் செய்தார்.

ஓரினப்புணர்ச்சி, பாலியல் வன்முறை போன்றவற்றிற்கு ராமகிருஷ்ணனின் ’கோணல்கள்’, சா.கந்தசாமியின் ‘தேஜ்பூரிலிருந்து’ என்று இப்படி கதைகளை காட்ட முடியும்.

ஈழ எழுத்தாளர் சாந்தனின் கதை ‘ நீக்கல்கள்’ masturbation சம்பந்தப்பட்டது.

Beastryக்கு கதை தமிழில் இருக்கிறதா? Zoophilia. கி.ராஜநாராயணனின் ‘கனா’ கதை இந்த வகையைச் சார்ந்தது என்று கொள்ளலாமா

மிகச் சமீபத்தில் பாதசாரி எழுதிய ’காசி’ மீட்சி 16வது இதழில் பிரசுரமானது. காசி என்னும் மன நோயாளி ராத்திரியில் தான் காணும் கனவில் புணர்கிற பெண்ணின் முகம் அவனுடைய தமக்கையினுடையது. Incest.

1984ம் ஆண்டு ‘ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு விமர்சனம்’ என்ற ஒரு சின்ன புத்தகம் சாரு நிவேதிதா எழுதியிருந்தார். ஜே.ஜே சில குறிப்புகளை கடுமையாக விமர்சிக்கையில் ஜே.ஜே ஏன் ஸாண்டவரி என்ற எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட் போல இல்லை என்று கேட்டு, அரவிந்தாட்ச மேனன் ஏன் சார்த்தர் மாதிரியில்லையே என அதிருப்தியுற்று, மாஸேதுங் அழுக்காகவும் குளிக்காமலும் இருந்ததை மிகவும் சிலாகித்து, ஜெனேயை விடவா ஜே.ஜே பெரிய கொம்பன் என்றெல்லாம் சாரு நிவேதிதா கொந்தளித்திருந்தார். இந்த விமர்சனக்கட்டுரையிலேயே, விரைவில் வெளிவரவிருக்கும் என் ‘எக்ஸிஸ்டென்ஸியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் என் நண்பன் மிஸ்ரா பற்றிய குறிப்புகளைக் காணலாம் என்று எழுதி இந்த நாவல் வெளிவர உள்ளதை ஆறு வருடம் முன்பே குறிப்பிட்டிருந்தார். அப்புறம் கணையாழியில் 1985ம் ஆண்டு எழுதிய ‘மொகலாயத் தோட்டம்’ சிறுகதையில் தான் முக்கால் வாசி எழுதியுள்ள நாவலையாவது எழுதிப்பார்க்கலாமா என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை யோசிக்கிறார்.


இந்த நாவலின் 91ம் பக்கத்தில் ’நானூற்றி முப்பத்தேழு பக்கங்கள் உள்ள நாவலை மாற்றி மாற்றி எழுதிய சூரியா துவக்கப் பகுதியைத் தவிர மற்றெல்லாப் பக்கங்களையும் எரித்து விட்டான். இப்பொழுது மிஞ்சியது இவ்வளவு தான்’ என்ற கிளிங்கோவிட்ஸின் குறிப்புமாக தன்னுடைய படைப்பு பற்றி இயன்ற மட்டும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

இந்த நாவலில் Autobiographical Elements அதிகம். நாவலின் துவக்கம் முகவுரை பகுதி சூர்யா – பாலா – நீரஜா ஆகிய இலக்கியவாதிகளுக்கிடையேயான பனிப்போரை விவரிக்கிறது. நகுலன் ‘நினைவுப்பாதை’, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே துவங்கி, சமீபத்தில் இதை மலிவாக்கி குமுதம் கிசு கிசு புறணி பாணியில் நீல பத்மநாபனின் ‘தேரோடும் வீதி’ என பலபேர் அவரவர் பாணியில் கையாண்ட சமாச்சாரம்.

சாரு நாவலின் அடுத்த பகுதியான இரண்டு அத்தியாயம் குடும்பம் ஒரு பாற்கடல் புராணம். ஆலகால விஷமும் அதிலே தான். அமிர்தமும் அதிலே தான் என்றார் லா.ச.ரா.
இங்கே சூரியாவின் குடும்பம் தாய் வழியும் தந்தை வழியும் விலாவரியாக விவரிக்கப்படுகிறது. ஆல கால விஷம் தன் அதிகம். சகட்டு மெணிக்கு சூர்யா குடும்பத்தாரின் கற்பை சூறையாடுகிறார் சாரு. ‘கற்பு’ என்கிற வார்த்தை சாரு நிவேதிதா முகம் சுழிக்கிற விஷயம். ‘ ஒரு முறை என்னை சந்திக்க வந்த போது என் நேர் பேச்சில் Saint என்ற பதம் வந்ததும் அவருக்கு ஒரு அருவருப்பான விஷயத்தைக் கேட்ட முகச்சுழிப்பு உண்டாயிற்று’ என்று பிரமிள் ‘திசை நான்கு; முதல் இதழில் குறிப்பிட்டிருந்தார். கற்பு என்ற வார்த்தைக்குப் பதிலாக Character Assasination எனச் சொல்லலாம்.

ஆனாலும் பாருங்க. ஒரு பெரிய அதிசயம். கிருஷ்ணசாமி நாயுடு பற்றியும் பார்வதி பற்றியும் ஒரு கிசு கிசு கூட இல்லை. அவர்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். கிருஷ்ணசாமி நாயுடு தன் இளமைப்பருவத்தில் ஏதாவது ஒரு கோயிலின் குருக்களின் குறியைச் சுவைத்ததாக, மோகனாவின் அம்மாவோடு உடலுறவு கொண்டதாக. பார்வதி தன் மகள் ஆர்த்தியை யாருக்குப் பெற்றாள், உஷா யாருக்குப் பிறந்தவள், மூர்த்திக்கு உண்மையான அப்பா யார் என்றெல்லாம் எழுதியிருக்கலாம் தான். ஆனால் பார்வதியும் கிருஷ்ணசாமி நாயுடுவும் கதாநாயகன் சூர்யாவின் பெற்றோர் என்பதால் ஒழுங்கமைவைச் சிதைக்காமல் ஒரு சமநிலைத் தோற்றத்தை இந்த விஷயத்தில் மட்டும் ஏற்படுத்தி இயங்கியல் மாற்றம் செய்யாமல் விட்டிருக்கிறார்.

சூர்யா சராசரியான ஆளாகத் தோன்றவில்லை. பாலாவுக்கு சூர்யா அணியும் ஃபேன்ஸி பனியன்கள் உறுத்தியுள்ளது. மிஸ்ரா பார்வைக்கு சூர்யா ஒரு ப்ரூஸ் லி பனியன் அணிந்த, அநியாயத்தை தட்டிக்கேட்கும் எம்.ஜி.ஆர். சூர்யாவோடு கொஞ்ச நாள் பழகும் கிரண் சூர்யாவின் சாயல் கமல்ஹாசன் போல் இருப்பதாக கூறுகிறாள். கிரணைப் பொருத்தவரை சூர்யா ஒரு Ultra modern casanova.

இந்தியா போன்ற நாட்டில் எக்ஸிஸ்டென்ஸியலிசம் பற்றிப் பேச என்ன தேவையிருக்கிறது. எக்ஸிஸ்டென்ஸியலிசமாவது மயிராவது என்ற கோபம்.

சாரு நிவேதிதாவின் உண்மை நண்பன் மிஸ்ரா கதையில் சூர்யாவின் நண்பனாக வந்து தாஸ்தயேவ்ஸ்கியைப் படித்து, பின் பைத்தியமாகி ஒரு கொலை செய்து ஜெயிலில் தற்கொலை செய்து கொள்கிறான்.

சூர்யா, பாலாவுக்கு எழுதும் பதில் கடிதம் – நீங்கள் பாதலேர் பற்றிய சார்த்தரின் ஆய்வைப் படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் Dandyism பின்னணி உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எழுதும் ஆசிரியர் Dandyism உளவியல் பின்னணி என்பதை உடைத்தே எழுதியிருக்கலாம். மற்றொரு உதாரணம் சிமோன் தி போவா – சார்த்தர் பற்றிய சம்பவம் எழுதப்பட்டுள்ள முறை குழப்பமாக உள்ளதோ?

உயர்தர இலக்கியத்துக்கு ஒரு வக்ரத்துவம் வேண்டும் என்று வலியுறுத்தி சம்ஸ்கிருத விமர்சகர் குண்டகர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லியிருக்கிறார்.

கடந்த சில வருடங்களில் மிகுந்த மன அவசமூட்டும் வாசிப்பு அனுபவம் சில புத்தகங்கள் மூலம் ( சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என்ற பேதமில்லாமல் ) கிடைத்திருக்கிறது. சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், இந்திரா பார்த்தசாரதியின் ‘ஏசுவின் தோழர்கள்,அசோக மித்திரன் ‘ஒற்றன்’, தி.ஜானகிராமன் ’நளபாகம்’, கி.ராஜநாராயணன் ‘கரிசல் காட்டு கடுதாசி’, ந.முத்துசாமியின் ‘நீர்மை’ சம்பத் ’இடைவெளி’, திலீப்குமாரின் மூங்கில் குருத்து, விமலாதித்த மாமல்லனின் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், ஆதவன் ‘முதலில் இரவு வரும்’, பிரமிள் ‘லங்காபுரி ராஜா’, கோணங்கி ‘மதினிமார்கள் கதை’. அந்த வரிசையில் சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஸியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ உறுதியாக இடம் பெறுகிறது என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை.

இந்த நாவலில் முரண்பாடு மிக்க வாழ்க்கையில், குடும்பச்சிக்கல்களின் பூதாகரமான கொடும் அமைப்பில் ஒரு அறிவி ஜீவி கேலிக்குரியவனாக, அற்பமாகிப் போகும் அவலத்தை சாரு சொல்ல விரும்புவதாகத் தெரிகிறது. ஆதவன் இந்த விஷயத்தை தன்னுடைய ‘என் பெயர் ராமசேஷன்’ நாவலில் அழகாகச்சொல்லியிருக்கிறார்.

இயங்கியல் மாற்றம் என்பது தமிழிலக்கியத்தில் மணிக்கொடி காலம் தொட்டு நடந்து கொண்டிருப்பது தான். இந்த நாவலை எழுதியவருக்கும், நாவலுக்கு முன்னுரை எழுதியவருக்கும் அந்த நம்பிக்கை இல்லை போல் தெரிகிறது. அறிவின் தளத்திலும் பூர்ஷ்வாத்தன்மை இருக்கிறது.

…………………………


Dec 20, 2015

சாருவும் திஜாவும் ராஜநாயஹமும்



நவம்பர் முதல் வாரத்தில் மணிஜி தண்டோரா
’தினமணி.காமில் உங்களைப் பற்றி சாரு நிவேதிதா குறிப்பிட்டிருக்கிறார்’ என்றார்.


சாரு சொல்லியிருப்பது”அப்போதெல்லாம் என்னுடைய நண்பர்
 R.P. ராஜநாயஹம் ’தி.ஜா.வின் சிறுகதைகளைப் படித்துப் பாருங்கள்’ என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போதுதான் தெரிகிறது, ராஜநாயஹம் சொன்னது எவ்வளவு சரி என்று.”


தி.ஜா பற்றி எப்போதும் சாரு நிவேதிதா கடுமையாக கடந்த காலங்களில் அலட்சியப்படுத்தி எழுதியவர். ஆனால் இவ்வளவு திறந்த மனதோடு தி.ஜாவை அங்கீகரித்திருப்பது அவருடைய மேலான பண்பை காட்டுகிறது.
சாரு பற்றி நான் எப்போதும் ‘ A saint among the writers!' என்றே மலைத்துப்போய் சொல்லியிருக்கிறேன். என்னுடைய எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது அவருடைய இந்த கூற்று.

ரொம்ப வெள்ளந்தியாக இப்படி மற்ற எழுத்தாளர்கள் யாரும் தங்கள் அபிப்ராயங்கள் தவறு என்றெல்லாம் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.வரட்டுப்பிடிவாதமும், ஹிப்போக்ரஸியும் நிறைந்த இண்டலக்சுவல் பூர்ஷ்வாக்கள் நிறைந்த தமிழ் எழுத்துலகில் சாரு நிவேதிதா உன்னதமானவர்.

இதே போல சுந்தர ராமசாமியின் எழுத்தையும் சாரு நிவேதிதா சீராட்டி பாராட்டும் காலம் வர வேண்டும்!


......................................


Feb 2, 2013

கிருஷ்ணன் நம்பி




ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை ’கிருஷ்ணன் நம்பியின் நினைவு’க்கு சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி.

 சமர்ப்பணம் என்பது ஒரு பக்கத்தில் ஒரு வார்த்தையில் வருகிற விஷயம். ஆனால் இது உள்ளடக்கியுள்ள விஷயம் எப்போதும் பெருங்காவியம்.
கமலம் குறுநாவல் தொகுப்பை தி.ஜானகிராமன் சமர்ப்பணம் செய்திருந்த விதம் இப்படி “ இந்த தொகுப்பில் உள்ள கதையொன்றில் ஒரு பாத்திரமாக வருகிற என் இரண்டு சகோதரிகளின் கணவர் ராமச்சந்திரனுக்கு இந்நூல் சமர்ப்பணம். “
இந்த சமர்ப்பணம் சொல்லிவிடுகிற குடும்ப ரகசியம்! 




இரண்டு வருடம் முன் திருப்பூர் புத்தக கண்காட்சியில் 'உயிர்மை' ஸ்டாலில் சாரு நிவேதிதா எழுதிய ’சினிமா சினிமா’ என்ற நூலை தற்செயலாகப் புரட்டிய போது எதிர்பாராத ஆச்சரியம். சமர்ப்பணம் R.P.ராஜநாயஹத்துக்கு.


சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல்கள் எட்டு படித்திருக்கிறேன். க.நா.சு, ஜீவா, சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, பிரமிள், தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், கு. அழகிரிசாமி ஆகிய மகத்தான ஆளுமைகள் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடைகள். அரவிந்தன் தொகுத்தவை.



கிருஷ்ணன் நம்பி பற்றிய நினைவோடை படித்த போது உடைந்து போய் அழுது விட்டேன். நம்பியும், சுராவும் பார்த்த ( ஜே.ஜே யில் கூட விவரிக்கப்பட்டிருக்கும் )அந்த சூரியோதயக்காட்சி! இதை சுந்தர ராமசாமியிடம் அப்போது தொலைபேசியில் தெரிவித்த போது இன்னும் சிலர் கூட நம்பி நினைவோடை படித்து விட்டு கலங்கிப் போனதாகத் தன்னிடம் தெரிவித்ததாக சொன்னார்.
“No tears in the writer, no tears in the reader. No surprise in the writer, no surprise in the reader.”-
-Robert Frost 



ஜே.ஜே சில குறிப்புகளில் எடுத்தவுடனே சு.ரா ஜே.ஜே வின் மரணம் பற்றி ஆல்பெர் காம்யு இறந்ததற்கு மறு நாள் ஜே.ஜே. இறந்ததாகக் குறிப்பிட்டு விட்டு தமிழிலும் நாற்பதை ஒட்டிய வயதில் புதுமைப் பித்தன், கு.ப.ரா., கு. அழகிரி சாமி, மு.தளைய சிங்கம் என்று எத்தனை இழப்புகள் என்பார்.
புதுமைப் பித்தன், கு.ப.ரா., கு.அழகிரி சாமியெல்லாம் படித்து முடித்திருந்த நேரம். சுந்தர ராமசாமி மூலம் தெரிய வந்த கிருஷ்ணன் நம்பி, பிரஞ்சு எழுத்தாளன் ஆல்பெர் காம்யூ, இலங்கை எழுத்தாளன் தளைய சிங்கம் இவர்களெல்லாம் யார்?


என் தேடலில் அன்று கிருஷ்ணன் நம்பி, ஆல்பர் காம்யூ, மு.தளைய சிங்கம் இடம் பெற்றது இங்கனம் தான். 


சில வருடங்களுக்கு முன்  எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார்: ”தளைய சிங்கத்தை நினைத்தால் இனி ராஜநாயஹத்தை நினைக்காமல் இருக்க முடியாது!” 




கிருஷ்ணன் நம்பி கூட காலத்திற்கு முந்தியே நாற்பதையொட்டிய வயதில் தான் மரணமடைந்திருக்கிறார். அப்போது 44 வயதாம்.
தி.ஜானகிராமனின் எழுத்து மீது கிருஷ்ணன் நம்பிக்கு இருந்த ப்ரேமை!
சு.ரா சொல்வது : ’ஜானகிராமன் மீதான அவனது வியப்பு கடைசி வரை நீடித்திருந்தது. ஜானகிராமனை நேரில் சந்திக்க வேண்டும் என்பது அவனது மிகப்பெரிய கனவு. நேரில் பார்த்தால் என்ன பேசுவாய் என்று கேட்டேன். ஒன்றுமே பேச மாட்டேன். அவரைப் பார்க்கப் போவதற்கு முன் ஒரு தங்க மோதிரத்தைச் செய்து ரெடியாக பாக்கெட்டில் வைத்திருப்பேன். அவரைப் பார்த்ததும் கையைக் கொஞ்சம் நீட்டுங்கள் என்று சொல்வேன். அவர் நீட்டுவார். நான் அந்த மோதிரத்தை அவர் கையில் போட்டு விட்டு எதுவும் பேசாமல் அப்படியே வந்து விடுவேன் என்பான். ஆனால் அப்படி தங்க மோதிரத்தைப் போடும் வாய்ப்பு அவனுக்கு வாழ்க்கையில் கிடைக்கவேயில்லை.’



கிருஷ்ணன் நம்பி, ஆதவன் இருவரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் கூட தி.ஜானகிராமன் சாதனை எழுத்து பற்றி இந்தத் தலைமுறையினருக்கு எவ்வளவோ சொல்லியிருப்பார்களே!


ஜே.ஜே படித்த வேகத்தில் மீனாட்சி புத்தக நிலையத்தால் 1964ல்வெளியிடப்பட்டு பதினேழு வருடங்களாக அன்று 1981லும் கூட விற்பனையில் இருந்த 
(எவ்வளவு வருடமாக ஒரே பதிப்பு விற்கப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது!)கிருஷ்ணன் நம்பியின் ’நீலக்கடல்’ வாங்கிப் படித்து விட்டு நானும் என் நண்பன் M.சரவணனும் அசந்து போய் விட்டோம்.
குழந்தையுலகத்தை அழகாக கண் முன் விரித்துக்காட்டும் அதிசயக்கலைஞன்!  
அந்த சிறுகதைத் தொகுப்புக்கு அழகான சின்ன முகவுரை கிருஷ்ணன் நம்பி எழுதியிருக்கிறார். அந்த முகவுரையை மட்டுமே நாங்கள் எத்தனை முறை அப்போதெல்லாம் படித்திருக்கிறோம் !


கிருஷ்ணன் நம்பியின் முழுத்தொகுப்பு இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இலக்கியக்குறிப்புகள், கட்டுரைகள், கடிதங்கள், என்று எல்லா ஆக்கங்களும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன என்ற குறிப்புடன் வெளி வந்துள்ள  இந்த நூலை வாங்கியவுடன் ’நானும் கடவுளும் அறிஞனும்’ தலைப்பிலான  அந்த நீலக்கடல் முகவுரையைத் தான் தேடினேன். 
அதனை இங்கே தந்துள்ளேன். 



 கிருஷ்ணன் நம்பி நீலக்கடல் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முகவுரை.

நானும் கடவுளும் அறிஞனும்


நான் உள்ளத்தாலேயே சிந்திக்கிறேன்; உணர்ச்சியாலேயே சிந்திக்கிறேன். என் புத்தி தன் போக்கில் இயங்கி, அதிலிருந்து அறிவின் சாரம் -அறிவு ரஸம் - ( ’ஸீரம்’) என் உள்ளத்தில் இறங்கி என் உணர்ச்சிகளில் கலக்கிறது. கவியின் அறிவுக்கேந்திரம் உணர்ச்சி தான். அறிஞனுக்கு உணர்ச்சி வேலைக்காரன் என்றால், கவிக்கு அறிவு வேலைக்காரன். அறிவின் தீட்சண்யம் கதிரவன் என்றால், உணர்ச்சியின் தீட்சண்யம் சந்திரன். சந்திரன் தண்மை நிறைந்தது; மென்மை நிறைந்தது. மக்கள் மனத்தில் கனவுகளையும், காதலையும் எழுப்பவல்லது. இன்பமயமானது; இனிமையானது. ஓ, அறிஞனே, நீ சூரியன். நீ உஷ்ணமானவன். உன் உஷ்ணம், உன் வெம்மை, அத்தியாவசியமானது எனினும், சக்தி வாய்ந்தது எனினும், நீ இன்பமானவன் அல்ல. உன் தழுவல் சுறுசுறுப்பை, உழைப்பை, செயலைத் தூண்டும் எனின், சந்திரனாகிய என் தழுவல் இன்பத்தை, கனவை, கவியை, போதையைத் தூண்டும். உனக்கு மாபெரும் வெற்றிகள் சித்திக்கலாம். ஆனாலும் உன் வெற்றியை ஒப்புக்கொள்ள எனக்குப் பிடிக்காது. சூரியனே சந்திரனுக்கு ஆதாரம் என்றாலும் சூரியன் சூரியன் சூரியன் தான்; சந்திரன் சந்திரன் தான்! நான் பலவீனமானவன் என்றாலும் நான் உன்னதமானவன். நான் கடவுளின் செல்லக்குழந்தை. நீ கடவுளின் போர்வீரன். உன்னைக் கண்டு நான் அஞ்சி ஓடக்கூடும் எனினும், நான் கடவுளின் மார்பில் கொடியாய்த் தவழக்கூடிய செல்ல மதலை. நீயோ கடவுளருகில் கம்பீரமாய் நிற்கவேண்டிய காவல் வீரன். நீ அழுதால் சினந்து சீறும் கடவுள், நான் அழுதால் என்னைத் தோளில் போட்டுத் தழுவுவான். முத்த வெள்ளம் சொரிவான். உன்னை அழைத்து, “ ஓ, போர் வீரா! ஓடிப்போய் இந்தப் பயலுக்குப் பாரிஜாத மலர்கள் பறித்து வா; ஓடிப்போ!” என்பான் ஈசன்.


...............................................

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_22.html