Share

Showing posts with label ந.முத்துசாமி. Show all posts
Showing posts with label ந.முத்துசாமி. Show all posts

Jun 22, 2021

ந. முத்துசாமி நாடகங்கள் பற்றி

 https://m.facebook.com/story.php?story_fbid=3084798668400245&id=100006104256328


மார்ட்டின் எஸ்லின் Theater of the Absurd என்கிற வகைமையை 1962ல் சொன்னார். 

இது பற்றிய பிரக்ஞையில்லாமலேயே 

ந. முத்துசாமி தமிழில் முதல் Absurd play 

 'காலம் காலமாக' எழுதி நடை பத்திரிகையில் 1969ல் வெளிவந்து விட்டது. 

'நாற்காலிக்காரர் ' 1970ல் கசடதபற பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. 


இதற்கு பிறகு 1971ல் தான் இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாடகம் 

' மழை ' கசடதபற இதழில் பொழிந்தது. 


இந்திரா பார்த்தசாரதியை விட ஐந்து வயது இளையவர் ந. முத்துசாமி என்றாலும் நாடகத்தைப் பொறுத்தவரை சீனியர் என்பதை தூக்கிப் பிடித்து இப்படி காட்ட வேண்டியிருக்கிறது. 


மேற்கண்ட காலம் காலமாக, நாற்காலிக்காரர் ரெண்டு நாடகம் தான் முத்துசாமி எழுதினார் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். 

யூஜின் அயனெஸ்கோ தரத்தில் இந்த நாடகங்கள் இருக்கின்றன என்று சொல்லப்பட்ட போது தான் அயனெஸ்கோவை தெரிந்து கொண்டார். 


முத்துசாமியின் பிரபலமான நாடகங்களில் இங்கிலாந்து ஒன்று. இதற்கு 'நூல் கண்டு' என்றும் பெயர் உண்டு. 

நாடகத்தின் பெயர் இங்கிலாந்து என்பதால் மொழிபெயர்ப்பு என்று நினைத்து விட வேண்டாம். 

அப்படி யாராவது சொன்னால் நம்பக்கூடாது. 

முத்துசாமி எழுதிய தமிழ் நாடகம் தான். 


நான் இந்து தியேட்டர் ஃபெஸ்டிவலில் இயக்கிய வண்டிச்சோடை,  சுவரொட்டிகள், உந்திச்சுழி, (உந்திச்சுழி நாடகத்தின் மூலம் பேராசிரியர் செ.ரவீந்திரன் ஒளியமைப்பாளராக பிள்ளையார் சுழி போட்டார்) கட்டியக்காரன், நற்றிணையப்பன், அப்பாவும் பிள்ளையும், படுகளம், காண்டவ வன தகனம், பிரஹன்னளை உள்பட இருபத்தியொரு நாடகங்கள் எழுதியிருக்கிறார். 

இந்த இருபத்தியொரு நாடகங்களுமே 

ஒவ்வொரு வகையில் விசேஷமானது. 

கே. எஸ். கருணாப்ரசாத் வெளியீடாக இன்று கிடைக்கிறது. 


கூத்துப்பட்டறை பல மொழி பெயர்ப்பு நாடகங்கள் போட்டிருக்கிறது என்பதற்காக முத்துசாமி தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் என்று தவறாக கருதி விடக் கூடாது.


வெ.ஸ்ரீராம் மொழி பெயர்த்த மீளமுடியுமா சார்த்தர் நாடகத்தில் நடேஷ், கலைராணி நடித்தார்கள். 


'The last five seconds of Mahatma Gandhi' கூட தமிழில் கூத்துப்பட்டறை நடிகர்கள் நடிப்பில் அரங்கேறியுள்ளது.

.. 

Nov 16, 2020

பூசாரித்தனம்

 ந. முத்துசாமி சார் அந்தக்கால 

கூத்துப்பட்டறை நிகழ்வுகளை 

மிகுந்த சிரமத்துடன் தான்

 ஈடேற்ற முடிந்திருக்கிறது.


க்ரீம்ஸ் ரோடு லலித்கலா அகாதெமியில் 

அப்போது செக்ரட்டரி ராஜாராம் கூத்துப்பட்டறைக்கு இடம் கொடுத்திருக்கிறார்.


ஆனால் அங்கேயும் பூசாரியாக ஒருவர். 


சிற்பியும் ஓவியருமான சி.தட்சிணாமூர்த்தி 

முகம் சுளித்திருக்கிறார். 


அவருக்கு கூத்துப்பட்டறை ந.முத்துசாமிக்கான                                       இந்த சலுகை 

அசூயை ஏற்படுத்தியிருக்கிறது.


 ”இவங்களுக்கு ஏன் இங்கே இடம் கொடுக்கிறீங்க?” என்று சொல்லி

 தடுத்து நிறுத்தி விட்டாராம்.


முத்துசாமி மனத்தை இந்த பூசாரித்தனம் 

ரொம்ப புண்படுத்தியிருக்கிறது. 

இந்த அவமானத்தை என்னிடம்

 அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.


நடேஷ் கோபப்பட்டு சொன்ன ஒன்று.

" போஸ் கிருஷ்ணமாச்சாரி Indian Art ஐ ஒழிச்சான். போஸ் கிருஷ்ணமாச்சாரியை

 அச்சுதன் கூடலூரும் திட்டுவார்.

 டெல்லிக்கு போன 

கேரளா ஓவியர்களெல்லாரும் கோடீஸ்வரர்கள். 

ஆனால் தமிழ் ஓவியன் கார் துடைச்சான். 

அதாவது pauper."


https://m.facebook.com/story.php?story_fbid=2925879714292142&id=100006104256328




Get well soon Cre-A Ramakrishnan



க்ரியா ராமகிருஷ்ணனின் 

துணைவியார் ஜெயா அவர்கள் மறைந்த போது

 ந. முத்துசாமி அங்கே போயிருந்திருக்கிறார். 

எல்லோரும் சோகமான ஒரு சூழலில்

 உறைந்த நிலையில். 


முத்துசாமி வாய் விட்டு தேம்பி அழுதிருக்கிறார். 

உடனே அங்கிருந்தவர்கள் எல்லோருமே உடைந்து அழுதிருக்கிறார்கள். 


"Only people who are capable of loving strongly can also suffer great sorrow, but this same necessity of loving serves to counteract their grief and heals them." 


- Leo Tolstoy


https://m.facebook.com/story.php?story_fbid=2927577984122315&id=100006104256328

.. 

Oct 19, 2020

ந. முத்துசாமியும் தி. ஜா. மரப்பசுவும்

 தி. ஜா மரப்பசு நாவலுக்கு 

சினிமாவுக்காக 

ந. முத்துசாமி முழுமையாக ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். 

மரப்பசு நாவலை படமாக்க ஸ்ரீதர் ராஜன் 

செய்த முயற்சிக்காக 

முத்துசாமி இதை செய்திருக்கிறார். 

எண்ணம் ஈடேறவில்லை. 


"மரப்பசு ஸ்கிரிப்ட் எங்கே சார்? "


முத்துசாமிக்கு சொல்ல முடியவில்லை. 

" இங்கே தான் வீட்டில எங்கேயோ இருக்கணும். "


அவருடைய பிறந்த ஊர் புஞ்சைக்கு 

மனம் தாவி விடும். 

" புஞ்சயில தீட்டான பெண்கள் அதிகாலை                                   குளத்துக்குப் போய் குளிச்சிட்டு வந்து 

கொஞ்சம் பச்சரிசியுடன்

 ரெண்டு உப்பு சேத்து சாப்பிடுவாங்க"


" நேட்டால் ஆர். கே நாயுடு தென்னாப்பிரிக்காவில் இருந்தார். புஞ்சக்காரர். அங்க இருக்கும் போது இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை                  கிண்டல் செய்திருக்கிறார். பிரச்சினையாகிடுச்சு. அதனால தென்னாப்பிரிக்காவில் இருந்து கிளம்பி இங்க புஞ்சைக்கு வந்துட்டார். நேட்டால் நாயுடு எங்கப்பாவோட நல்ல சிநேகிதர். நான் சின்னப்பையனா இருக்கச்ச 

அந்த நேட்டால் நாயுடு வீட்ல சாப்பிட்டிருக்கேன். 

எனக்கு ஏழு வயசு இருக்கச்ச 

எங்கப்பா செத்துப்போயிட்டார் "


முத்துசாமி மனம் புண்படும்படி

 பிறர் நடந்து கொள்ளும் போது 

வேதனையோடு சொல்வார்

 " அற்ப சுபாவங்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை "


" விழாக்கள், அதி்ல் நடக்கும் சடங்குகள் மரபு சார்ந்த விஷயங்கள். சடங்குகள் அவசியம். ஒருவருடைய இழப்புக்கு சடங்குகள் தான் முற்றுப்புள்ளி வைக்கின்றன" என்பார்.


... 

Oct 14, 2020

மு. நடேஷ்

 தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பக்கமா     தாண்டி போக வேண்டியிருந்த போது 

ஒரு Associate memory 


மு. நடேஷ் சொன்ன விஷயம். 

கே. சி மணவேந்த்ர நாத் பற்றியது 

கிறிஸ்டியன் காலேஜ்ல ஒரு நாடகம். 

கே. சி நடிக்கும் போது நாய் ஒன்று நுழைந்து அவனை பார்க்கிறது. உடனே கலைஞன் கே. சி 

அந்த நாயிடம் பேசுகிறான். அதனிடம் டயலாக்.

 அது ஏதோ புரிந்து விட்டது போல கவனமாக கேட்டு விட்டு அந்த இடத்தை விட்டு போய் விடுகிறது.                  நாடகம் தொடர்ந்து நடக்கிறது 


நடேஷ் : சாதாரண விஜயங்கள்ள, வார்த்தைகள்ள மாட்டிக்கிட்டு இருக்கிறே. அதிலிருந்து வெளியே வந்தா தான் அனுபவம் கெடைக்கும்.


ஆசைய கையால பிடிக்க முடியுமா? 


Dynamic meditation. 


Inception படத்துல 

மனைவி போயிட்டா. ரொம்ப அறிவானவ. அவள மெமரிக்குள்ள போய் பாக்குறான். Dynamic meditation. 


போதை 

உயிரோட இருக்கிறதே ஒரு போதை. 


போதை 

ஒரு விஷயத்துக்குள்ள போய்

 அதுக்குள்ள இருக்கிறது தான் போதை. 


Body - mind ரெண்டும் சேர்ந்து தான் வேலை செய்யுது 


நடேஷ் பேசியதெல்லாம் இப்பவும் கேட்கிறது. 

சற்றும் அயர்ச்சி தராத, 

ஒவ்வொரு தடவையும் 

புதியதாக இருக்கும் நடேஷ் வார்த்தைகள். 


பயிற்சி மாணவர்களுக்கு நடேஷ் சொன்னது


பேச்ச சினிமாவும் சீரியலும் ஒழிச்சி கட்டியிருக்கு. 

கதையம்சம் விவரணையா கொண்டு வா. 

Sub Text ஆ படி. அப்ப வந்துடும் பேச்சு. Do it freely. 

சொல்லின் உள்ளர்த்தம் தொனியிலே ஏறனும். 


வெள்ளையும் கருப்பும் நெறமில்ல. இந்த ரெண்டு நெறத்தில எழுதிய வரிகளுக்கு உயிர் உண்டு. 


ஆலந்தூர் வருகிறது. 

அப்போது எனக்கு 

ந. முத்துசாமி நினைவு வருகிறது. 


அன்று ஆலந்தூரில இருந்த காலை 

தினமும்  குஞ்சலி மாமி ஆஃபிஸ் போன பின்

 இளைஞன் முத்துசாமி 

எழுதிக்கொண்டே தான் இருப்பார். 

'எமக்கு தொழில் எழுத்து, இமைப்பொழுதும் சோராதிருத்தல்'

Oct 4, 2020

புள்ளமங்கை பூத கணங்கள்

 தியோடர் பாஸ்கரன் 'அவசியம் நீங்கள் கும்பகோணம் அருகே யுள்ள புள்ளமங்கை பூதகணங்கள் பார்க்க வேண்டும்' என்று 

ந. முத்துசாமியிடம் சொல்லியிருக்கிறார். 

அகன்ற விழிகளுடன், விஷமப் புன்னகை பூக்கும்           குள்ள பூதங்கள். 


ந. முத்துசாமி (சிட்டி) சிவபாத சுந்தரத்தின் மருமகன் ராஜீவுடன் போய் அந்த புள்ளமங்கை பூதகணங்களை பார்த்திருக்கிறார். 


இதை என்னிடம் சொல்லி விட்டு 

அவர் சொன்ன அடுத்த வார்த்தை 

'கூத்துப்பட்டறை செலவில்'


இது தான் முத்துசாமி முத்திரை. 

இதை சொல்லத்தேவையில்லை.

 ஆனால் முத்துசாமி இப்படியெல்லாம் 

ஏதேனும் சொல்வார்.

"நம்ம ஒரு தடவை அங்க போய் 

பாத்துட்டு வருவோம்" 

மீசையை விரலால் தடவிக்கொண்டே ஆர்வமாக             என்னைப் பார்த்து சொன்னார். 

அப்படி வாய்க்கவில்லை. 

திருவாவடுதுறை ஆதீனம்


ந.முத்துசாமியுடன் பேசும் போது என்னிடம் அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே அபூர்வ முத்துக்கள்.


Loose words are gold coins. 


ஒரு நாள் அவர் சிந்தையில் திருவாவடுதுறை ஆதீனம் பற்றிய நினைவுகள்.


முத்து சாமி நினைவில் பால்யத்தில் பதிந்த முதல் மரம் பாதாம் மரம். ஆதீன வளாகத்தில் தான் பார்த்திருக்கிறார்.


 ஆதீன வளாக தோட்டத்தில் ஒரு மாமரத்தில் மாம்பழம் ரொம்ப ருசியாக இருக்கும். பாதிரிப்பழம். தோல் சுருங்கிக் கொண்டே இருக்கும். அதன் சுவை அற்புதம்.


திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆஸ்தான வித்வானாக மீனாட்சி சுந்தரம்பிள்ளை இருந்தார்.


உ.வே.சுவாமிநாதய்யரின் குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பது தெரிந்ததே. ஸ்தலபுராணம் பற்றிய விஷயம் தான் பலருக்கும் தெரியாததே.


ஸ்தல புராணம் இல்லாத பல பழம்பெரும் கோயில்கள் இருந்திருக்கிறது. அந்தக்கோவில்கள் உள்ள ஊர்களிலிருந்து முக்யஸ்தர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை வந்து சந்தித்து விண்ணப்பம் செய்வார்கள் -’எங்க ஊர் கோவிலுக்கு ஸ்தல புராணம் இல்லை. நீங்கள் தான் எழுதித் தரவேண்டும்’

இப்படி எவ்வளவோ பல கோவில்களுக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தன் பாண்டித்ய திறமையால் தன் சொந்தக் கற்பனையில் ஸ்தல புராணம் எழுதிக்கொடுத்திருக்கிறார். 


உ.வே.சுவாமிநாதய்யரின் “ என் சரித்திரம்” நூலில் திருவாவடுதுறை ஆதீனம் பற்றி தகவல்கள் சொல்லியிருக்கிறார்.


மதுரை ஆதீனத்தை விட திருவாவடுதுறை ஆதீனமும், தர்மபுர ஆதீனமும் பெரியவை.


கோயில் கட்டளைகளை நிர்வகிப்பவர் கட்டளை தம்பிரான்.

ஒரு ஆதீனத்தில் பல கட்டளை தம்பிரான்கள் இருப்பார்கள்.


ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு கட்டளை தம்பிரான் இருப்பார்.

இந்த கட்டளை தம்பிரான்களில் ஒருவர் தான் அடுத்த ஆதீனகர்த்தாவாக வர வாய்ப்பு உள்ளவர்.


கட்டளை தம்பிரான் கை மேலே காவித்துணி. ஆதீன மஹா சன்னிதானம் அதில் கை வைத்துக்கொண்டு வருவார்.

இது தான் ’கைலாகு’


மாயூர நாத சுவாமி கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆளுகை. அதிலேயே குமார கட்டளையாகிய முருகன் சன்னதி தர்ம புர ஆதீனத்திற்கு பாத்தியப்பட்டது.


கோயில் விசேஷ பண்டிகை நாட்களில் இரு ஆதீன சார்பிலும் போட்டி போட்டுக்கொண்டு நாதசுரக்கச்சேரி நடக்கும்.


ஆதீனத்திற்கு பள்ளிக்கூடங்கள் உண்டு. 

அந்த பள்ளிக்கூடங்களில் வேலை பார்க்கும் ஆசிரியைகளுடன் மஹா சன்னிதானம் ’சரீர இச்சை’யை பூர்த்தி செய்து கொள்வதெல்லாம் உண்டு தான். 

அந்தக்காலத்தில் ஒரு ஆசிரியையின் முலையை கடித்த பண்டார சன்னதி உண்டும்.உண்டும்.


கட்டளை தம்பிரானாக இருக்கிற பிரகிருதி, உச்ச பதவியை கைப்பற்றும் முயற்சியில், கொட்டைப்பாக்கை பண்டார சன்னதியின் தொண்டைக்குழியில் வைத்து அழுத்தி ஆதினகர்த்தாவை கொன்று விடுவதும் நடந்திருக்கிறது.


..................


Jan 21, 2020

காரணச் செறிவு




திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில்                         பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. 
அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை.”
நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.
பாலகுமாரனின் கவிதைவரிகள் உடனே நிழலாடியது.
“ சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத்தெரியாக்குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையைக் கல்லென்று நினைக்க வேண்டாம்”
பாலகுமாரன் மிகவும் தளர்ந்து கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார்.எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்!
மிகவும் தளர்ந்து போய் இருந்த அவர் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை,
தள்ளாடிய பாலகுமாரனை
நான் அவர் கை பிடித்து நடத்தி
மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.
ஞானக்கூத்தன் பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்தார். சென் ட்ரல் லயன்ஸ் கிளப்பில் அழகான உரை நிகழ்த்தினார்.
அன்று அவர் அங்கு சொன்னதை இந்த திருவல்லிக்கேணி இரங்கல் கூட்டத்தில்
நான் நினைவு கூர்ந்தேன்.
“ராஜநாயஹம் கவிஞர் அல்ல. ஆனாலும் கவிஞர் ஞானக்கூத்தனின் மாணாக்கன் என்று சொல்லிக்கொள்ள முழு உரிமை இவருக்கு உண்டு.”

பாலகுமாரனும் ந.முத்துசாமியும் மறைவதற்கு சில மாதம் முன் ஒரு உணவுக்கூடத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.

அடுத்தடுத்து சில மாதங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து மறைய இருந்த தருணம் அது.
இருவருமே TAFE ல் வேலை பார்த்தவர்கள்.
இருவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலை.
பேராசிரியர் செ.ரவீந்திரன் கூட அப்போது முத்துசாமியுடன் இருந்திருக்கிறார்.
வர்த்தக எழுத்தாளர் பாலகுமாரன் மனம் விட்டு நெகிழ்ந்து முத்துசாமியை கனப்படுத்தி சொல்லியிருக்கிறார்.
“ முத்துசாமி மட்டும் இல்லேன்னா நான் TAFE ல கடைசி வரை க்ளார்க்காவே தான் இருந்திருப்பேன்.”
....
புகைப்படம் உதவி : ரவிவர்மா.
கூத்துப்பட்டறை நடிகர்.
பின்னால் சிரித்துக்கொண்டு நிற்பவர்

Aug 5, 2019

ந.முத்துசாமியும் இந்தி எதிர்ப்பு போராட்டமும்


வருடம் 1965. இந்தி திணிப்புக்கெதிரான போராட்டம். இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்  தி.மு.க கூட்டம்.
கோகலே ஹால். திரளான கூட்டம்.
எம்.ஜி.ஆர் தான் முன்மொழிந்து பேசுகிறார்.
வழி மொழிந்து பேசியவர்
இருபத்தொன்பது வயது ந.முத்துசாமி!
என்.வி.நடராஜன் அப்போது ‘திராவிடன்’ பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தார். அதில் முத்துசாமி சார் ‘மாணவ உலகத்தின் மகத்தான பணி’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதையே தான் அன்று கோகலே ஹாலில் முத்துசாமி பேசினார்.
இதை போன வருடம் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது ரசம் எடுத்துக்கொண்டு மாமி வந்தார். நான் எதுவும் சாப்பிட மறுப்பேன் என்பதால் மாமி என்னிடம் கேட்பதில்லை.

சார் ரசத்தை வாங்கி குடித்து விட்டு ”குஞ்சலி, ரசம் பிரமாதம்”
நான் “ரசம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ சார்”
முத்துசாமி சார் தன் தொடையில் வைத்திருக்கும் வலதுகையை பாம்பு படம் எடுப்பது போல் இருந்த நிலையிலேயே ஆட்டி, தலையையும் சிறிது இரு பக்கமும் ஆட்டுகிறார். அப்படி இல்லை என்று அர்த்தம்.
அதன் பின் பதில் “ சுவாரசியமா இருக்கில்லையா?”
என்ன ஒரு அழகான விளக்கம்.
சுவாரசியத்திற்காகவே தினமும் கொஞ்சம் தாமதமானாலும் குரல் கொடுப்பார் ”குஞ்சலி, ரசம்”
பள்ளியில் படிக்கிற காலம். மாயவரம் சலாமத் ஸ்டோரில் முத்து சாமி சார் எப்போதும் நிற்பார். இவருடைய தாய் மாமா கிட்டா (மூர்த்தி) கூட அங்கே நிற்பார்.
அடுத்து தன் பால்ய நினைவுகளை பேச ஆரம்பித்தார். அஞ்சாறு வயதில் நடந்தவை.
மூன்று உபயோகங்கள் கொண்ட ஒரு உபகரணம் ஒன்று. அதைக்கொண்டு ஆணி புடுங்கலாம். சுத்தியலாகவும் உபயோகப்படும். வெட்டுவதற்கும் பயன்படும். செம்பனார் கோவில் சிதம்பரநாத முதலியார் என்ற அப்பாவின் நண்பரின் கடை. அப்பாவோடு முத்துசாமி அந்தக்கடைக்கு தானும் போய் வாங்கி வந்த நினைவை சொல்கிறார்.
இன்னொரு முறை அப்பாவிடம் ஏலத்தில் டேபிள் வாங்கிக்கொண்டு வரச்சொன்னார். அப்பா வாங்கி வந்தார்.
முத்துசாமியின் அடுத்த வார்த்தை ” எனக்கு ஏழு வயசு இருக்கச்ச அப்பா செத்துப்போயிட்டார்”
....

ஓவியங்கள்

 R.P.ராஜநாயஹம் ( நன்றி: T சௌந்தர்)
ந.முத்துசாமி ( நன்றி: விகடன் தடம்)

Aug 4, 2019

What angel shall bless this unworthy husband?


வீட்டின் ஃப்ரன்ச் விண்டோவை ஒட்டியுள்ள பாதாம் மரத்தில் அண்டங்காக்கைகள் பெருகிவிட்டன. ந.முத்துசாமி இறப்புக்குப் பிறகு வந்த ஜோடி நிறைய பெருக்கம் செய்திருக்கிறது.
வாதாம் மரத்தை ஒட்டியுள்ள கார்ப்பரேஷன் பள்ளிக்கு முன் பகுதியில் கோவில். அருகிலேயே தான் பக்தர்கள் குடியிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் முதல் வார ஞாயிறு காது கிழிகிறபடி மிக கர்ண கடூர சத்தத்தில் பக்தி பாடல்கள். சமயபுரம் மாரியம்மா பாட்டிற்கு prelude ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் பாடலுக்கு வரும் ஆரம்ப இசை போலவே இருக்கிறது. அப்பட்டமான காப்பி. சரி பழனி பாடல் போல என எண்ணும்போது எல்.ஆர் ஈஸ்வரி ’சமயபுரம் மாரியம்மா’ என்று கூப்பாடு.
கோவிலில் மொட்டை போட்டு கிடா வெட்டி விருந்து, படையல் வழிபாடு.
மதிய விருந்து முடிந்த நேரத்தில் சாமியானா பந்தலில் புது மொட்டையான ஒரு ஆளை அவன் பொஞ்சாதி ஒரு சேரை தூக்கி தலையிலேயே சாத்து சாத்து என்று சாத்தி விட்டாள். 
Her anger, the wrath of a woman, is a sign there are somethings in this world that even the gods would dare not intervene
- Daniel Saint.

அன்றலர்ந்த புது மொட்டையில் ரத்தம் வழிகிறது.

What angel shall bless this unworthy husband? என்பார் ஷேக்ஸ்பியர்.
அவன் தலையை தடவி பார்க்கிறான். ரத்தம். வாட்டர் கேனை அப்படியே தூக்கி தலையில் ஊற்றி பெருகும் ரத்தத்தை கழுவுகிறான். தண்ணீர் தான் காலி.
பொஞ்சாதி பக்கத்தில் இருக்கும் வீட்டை நோக்கி ஓடுகிறாள். பத்து குடித்தனம் இருக்கும் சின்ன கட்டிடம். பொந்து பொந்தாய் வீடுகள். அந்த வீடுகளில் தான் இந்த கோவில் பக்தர்கள்.
ரத்தம் சொட்டும் தலையுடன் பக்கத்தில் திகைத்துப்போய் நிற்கும் தன் இரண்டு வயது பெண் குழைந்தையை தூக்கிக்கொள்கிறான். அந்த குழந்தையும் அன்றலர்ந்த மொட்டை தான். வீட்டை நோக்கி பெண்டாட்டியை விரட்டிக்கொண்டே ஓடுகிறான்.
குழந்தை இவன் தலையில் ரத்தம் வடிவதைப்பார்த்து தொடுகிறது. பாப்பா கையிலும் இப்போது ரத்தம் ஒட்டிக்கொள்கிறது. அதை தகப்பனுக்கு காட்டுகிறது.
வீட்டிற்கு சின்ன காம்பவுண்ட் சுவரில் ஏற ஒரு மர ஏணி. அதில் ஏறி விட்ட மனைவியை நெருங்கி கையை ஓங்கும்போது மனைவி விறுவிறுவென்று ஏறி அந்தப்பக்கம் குதித்து விட்டாள். இவன் ஏணியில் ஏறும் போது குழந்தை தவறி விழப்பார்க்கிறது. அங்கே நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் பிடித்து இறக்கி விடுகிறார். மற்றொரு பெண் இவனை பொஞ்சாதியை அடிக்க விடாமல் தடுக்கிறார்.
சிலையாய் நிற்கும் அவனிடம் தலையில் ரத்தம் வடிவதை சமிக்ஞையால் மீண்டும் அந்த பாப்பா தன் தலை தொட்டு தொட்டு காட்டுகிறது.
”I know the devil himself will not eat a woman. I know that a woman is a dish for the gods, if the devil dress her not. But, truly, these same devils do the gods great harm in their women, for in every ten that they make, the devils mar five.”
- Shakespeare in Antony and Cleopatra.







Jul 9, 2019

வாலாஜா ரோடு மாடி போர்ஷன் வீடு


க.நா.சுவின் ’இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் உள்ள கட்டுரைகள் படிக்க மிகவும் சந்தோஷம் தருபவை.
எப்படியோ ந.பிச்சமூர்த்தி பற்றி இதில் எழுதாமல் விட்டிருக்கிறார்.
சி.சு செல்லப்பாவை வேண்டும் என்றே தான் தவிர்த்திருப்பார்.
1985ல் இருந்து எத்தனை தடவை இந்த நூலை நான் வாசித்திருக்கிறேன்.

முதுமையில் குங்குமத்தில் தொடராக எழுதப்பட்ட கட்டுரைகள். எவ்வளவு ஆளுமைகள் பற்றி சின்ன சின்னதாக பேசுகிற தொனியிலேயே எழுதியிருக்கிறார். ஆராய்ச்சிக்காரனும், கல்வித்துறையாளனும், செக்குமாட்டு விமர்சகனும் ’இதில க.நா.சு. என்னத்த எழுதிட்டாரு. பொறுப்பே இல்லாத எழுத்து. தன்னப்பத்தியே எழுதியிருக்காரு. ஆளுமைகள பத்தி கூட தெளிவில்லாம சொல்லியிருக்காரு’ என்று கால் மேல கால் போட்டு, கண்ண விரிச்சி, உதட்ட பிதுக்கி தலைய ரெண்டு பக்கமும் ஆட்டுவான்.
இது பொக்கிஷம் என்பேன்.
பி.ஸ்ரீ.ஆச்சாரியா கிருஷ்ணன் நம்பியின் மாமா. அப்பாவின் சகோதரியின் கணவர்.

பி.ஸ்ரீ ஆச்சாரியா பற்றி அவர் எழுதியதை மீண்டும் நேற்றிரவு வாசித்துக்கொண்டிருந்தேன்.
வெள்ளக்காரன் காலத்தில் ஆச்சாரியா போலீஸ்காரர். அரசு ஆணையின் பேரில் பாரதியாரை ஃபாலோ செய்து, அவர் பிரசங்கங்கள் பற்றி சர்க்காருக்கு ரிப்போர்ட் செய்தவர்.
தமிழ் பண்டிதர்களின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு மக்களுக்குக் கிட்டாததாக இருந்ததை, பத்திரிக்கை வாயிலாக எல்லோருக்கும் விளங்கும்படியாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தவர்களில் முதலாமவர் பி.ஸ்ரீ.ஆச்சாரியா தானாம். அவருடைய கம்ப சித்திரம் ஆனந்தவிகடனில் தொடராக வந்து பின் நூலாகி மதிப்பும் கவனமும் பெற்றதாம்.
பி.ஸ்ரீ.ஆச்சார்யா எழுதிய ஸ்ரீராமானுஜர் நூலுக்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது பற்றி க.நா.சு. முதல் தடவை ஒரு இலக்கிய நூலுக்கு கொடுக்கப்பட்டதாக திருப்தி தெரிவிக்கிறார
(1965ல் பி.ஸ்ரீக்கு சாஹித்ய அக்காடமி விருது கிடைத்தது)
பி.ஸ்ரீ. 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார் என்று எழுதியிருப்பதைப் படித்தவுடன் என் பார்வைக்கு மட்டும் சில விஷயம் கவனப்பட்டது.
ஒரு நூலை அடுத்தடுத்த கால கட்டத்தில் மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கும் போதும் புதிய விஷயங்கள் புலப்படும்.

ந.முத்துசாமியுடன் அவருடைய கடைசி மூன்று வருடங்கள் நெருங்கி பழகியவன் என்பதால் அவர் மூலம் எனக்கு தெரிய வந்த விஷயங்கள் ’ பி.ஸ்ரீ 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார்’ என்ற வரியில் ரொம்ப கனமானது.
இந்த வரியை வேறெவரும் சுலபமாக கடந்து செல்வார். ராஜநாயஹத்தால் முடியவில்லை.
Reading is a multi-faceted process.
க.நா.சு. குடியிருந்த அந்த வீட்டுக்கு தான் க.நா.சுவுக்கு பின் முத்துசாமி மாட்டாங்குப்பத்தில் இருந்து குடியேறியிருந்திருக்கிறார்.
க.நா.சு. சென்னையில் இருந்து பின்னால் ராஜி மாமியுடனும் மகள் ஜமுனாவுடனும் (பின்னால் இவர் தானே பாரதி மணியின் மனைவி) டெல்லிக்கு போகும்போது முத்துசாமியை அந்த வீட்டில் குடியமர்த்த ஏற்பாடு செய்திருக்கிறார்.
க.நா.சு வின் அயலார் ஒரு சாஸ்திரி. கீழ் வீட்டில் குடியிருந்த சாஸ்திரிக்கு க.நா.சு.வின் நடவடிக்கைகள் அவ்வளவு சிலாக்கியமாக தெரிவதில்லை. அனாச்சாரமாக தோன்றியிருந்திருக்கிறது.
முத்துசாமி மீசையை திருகி விட்டுக்கொண்டு மாடி போர்ஷனுக்கு குடி வந்த போது இவர் காது படவே சாஸ்திரிகள் “ஒரு சூத்திரன் போனான். இன்னொரு சூத்திரன் வந்திருக்கான்” என்று சலிப்பாக சொல்லி தன் அதிருப்தியை வெளியிட்டிருந்திருக்கிறார்.
க.நா.சுவின் கட்டில் ஒன்றை முத்துசாமிக்கே கொடுத்து விட்டார். அந்த கட்டில் சென்ற வருடம் வரை இங்கே இப்போது கூத்துப்பட்டறை வீட்டில் இருந்தது. அதை காட்டி முத்துசாமி ‘இது க.நா.சு கொடுத்த கட்டில்’ என்று பல முறை காட்டியிருக்கிறார்.
இங்கே அய்யப்ப நகர் வீட்டுக்கு 1987ல் சொந்த வீட்டுக்கு குடி வரும் வரை அந்த திருவல்லிக்கேணி வாலாஜா ரோடு மாடி வீட்டில் தான் முத்துசாமியும் மாமியும் குழந்தைகளாய் அப்போது இருந்த நடேஷ், ரவி இருவருடனும் இருந்திருக்கிறார்கள். சென்னை வாழ்வின் கணிசமான பகுதி அந்த வாலாஜா ரோடு மாடி போர்ஷன் வீட்டில் தான்.

க.நாசுவுக்கு பின் முத்துசாமி அந்த வீட்டில் குடியிருந்த போது அங்கே மௌனி வந்திருக்கிறார். முத்துசாமியை பார்க்க வந்தவர் நடேஷ் சிறுவனாக ஓவியம் வரைவதை பார்த்து ரசித்திருக்கிறார். 
அசோக மித்திரன் வரும்போதெல்லாம் ஒரு மாங்காய் கொண்டு வந்திருக்கிறார். மாங்காய் பிராமணர்.
 பிரமிள் அடிக்கடி வந்திருக்கிறார். அவர் குண இயல்பு படி வம்பு வளர்த்து முத்துசாமியிடம் மனஸ்தாபம் ஆகியிருக்கிறார்.

’ பி.ஸ்ரீ 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார்’ என்ற ஒரு செய்தி தான் எவ்வளவு விஷயங்களை மேலெழுப்புகிறது.








Jul 4, 2019

ந.முத்துசாமியின் ஆப்த நண்பர் சி.மணி


”முக்காலம் தொடர்பில்லா முக்கூடு” என்பவரும் 
“போனது வராது, வருவது தெரியாது,
நடப்பதைக் கவனி” என்பவரும் அறிவிலிகள்;
நினைவும் நம்பிக்கையும் உள்ள மட்டும்
போவது எதுவுமில்லை, வருவது ஒன்றுமில்லை.
எல்லாம் இருப்பதுவே, நடப்பதுவே.
முற்றிய வித்து
பழமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம்.
மின்னும் விண்மீன்
சென்றதன் தன்னொளி; வருவதன் சின்னம்.
பிறந்த குழந்தை
முன்னோரின் வாரிசு; புதுமனிதனின் மூலம்.
முக்காலம் மூன்றல்ல
ஒன்று – ஒரே முக்கோணம்;
மனித இனத்தைச் சுற்றி வளைத்திருக்கும்
முக்கோணம்.
- சி.மணி

சி.சு செல்லப்ப்பாவின் ’எழுத்து’ சிற்றிதழில் 1959ம் ஆண்டில் வெளிவந்த கவிதை இது.
ந.முத்துசாமிக்கு ஒரு தோழமை மிகுந்த இணக்கமாக இருந்ததென்றால் கவிஞர் சி.மணியுடனானது தான்.அசோகமித்திரன், பிரமிள், வெங்கட் சாமிநாதன் ஆகியோருடனான நட்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கால தோழர் ஞானக்கூத்தனுடன் கூட அவ்வப்போது உரசல் இருந்ததுண்டு.


(ஞானக்கூத்தன் : ’தூக்கிக்காட்டுறேன்..தெரியுதா பாரு’

ந.முத்துசாமி: ’இவருக்கென்ன தங்கத்திலா தொங்குது?’)

முத்துசாமியின் குர்ஜீஃப் மீதான ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு கூட சி.மணி தான் காரணம்.
சி.மணி மீது அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒரு பிரமிப்பு கலந்த மயக்கம் இருந்தது.
முத்துசாமி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் படிக்க சேர்ந்த போது அவருடைய நண்பர் தாமோதரன் சொல்லியிருக்கிறார். “ மூன்று பைத்தியங்கள் இங்கே வந்திருக்கின்றன.”
அந்த மூவரும் சி.மணி, வி.து.சீனிவாசன், வெங்கடேசன் ஆகியோர்.
இந்த மூவரிலும் சி.மணி தான் முத்துசாமியின் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரியவரானார்.
சி.மணியின் அறிவுத்திறன் கண்டு மெய் சிலிர்த்திருக்கிறார். அவருடைய ஆங்கிலப்புலமை முத்துசாமியை மிகவும் கவர்ந்திருக்கிறது.

உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதி பெயர் பெறுவார், நோபல் பரிசு பெறுவார்  என முத்துசாமி உறுதியாக நம்பியிருக்கிறார். 
இதனால் சி.மணியின் ஒரு சட்டையை கேட்டு வாங்கிப்பெற்று பத்திரப்படுத்திக்கொண்டார்.
முத்துசாமி இளைஞராக சென்னை நகரில் பவனி வந்ததெல்லாம் சி.மணி கொடுத்த சைக்கிளில் தான். அந்த சைக்கிளின் பயன்பாடு சொல்லி முடியாது என்பார்.
சி.மணியின் பணத்தில் நடத்தப்பட்ட நடை பத்திரிக்கையில் தான் முத்துசாமியின் முதல் நாடகம் “காலம் காலமாக” வெளி வந்தது.
……………..

Jun 30, 2019

குஞ்சலி மாமி


திராவிட முன்னேற்ற கழகத்தில் முதன்முதலாக மகளிர் அணி அமைக்கப்பட்ட போது தி.மு.க நிறுவன தலைவரின் மனைவி ராணி அண்ணாத்துரை, பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையின் மனைவி ஆகியோருடன் ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் என்ற குஞ்சலி மாமியும் உறுப்பினர்.
திராவிட நாடு பத்திரிக்கையின் தீவிர வாசகராய் இருந்தவர் குஞ்சலி மாமி.
முத்துசாமியின் திராவிட கொள்கைப்பற்று எல்லோருக்கும் தெரிந்தது தான்.

முத்துசாமி சாரும், குஞ்சலி மாமியும் பள்ளி மாணவப்பருவத்திலேயே காதலர்கள்.
மாமி பிரமாதமான பாடகி. தேவாரப்பண் அற்புதமாக பாடுவார்.
பள்ளியிலேயே பாட்டுப்போட்டிகளில் பரிசு வாங்கியவர்.

ந.முத்துசாமி இளைஞனாயிருக்கும்போது பாரதி தாசன் மாயவரத்திற்கு ’நடராஜன் வாசகசாலை’யின் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்.

பாரதி தாசனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முத்துசாமிக்கு.
பாரதி தாசன் புதுவையில் உள்ள தன்னுடைய பிராமண நண்பர் ஒருவரின் மகளை முத்துசாமிக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். 
முத்துசாமி சின்னவயதில் இருந்தே தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அந்தப்பெண்ணை நான் பார்க்கவேண்டுமே என்று பாரதி தாசன் சொன்னாராம். பாரதி தாசன் தங்கியிருந்த வீட்டின் அருகே தான் அந்தப்பெண்ணின் வீடு. முத்துசாமி அந்தப்பெண்ணை அழைத்து வந்து காட்டியிருக்கிறார். கறுப்பு சேலையில் சிவப்பு பார்டர் போட்ட சேலையில் வந்தார் அந்தப்பெண்.
அந்தப்பெண் தான் குஞ்சலி என்ற அவயாம்பாள் மாமி.

முத்துசாமி திருமணத்தில் கலந்து கொண்ட ஒரே எழுத்தாளர் லா. ச. ராமாமிர்தம். 'இது என்ன கல்யாணம்?' என்று கேட்டாராம்.

மாநில அரசு அதிகாரியாக பணியாற்றிவர்.
திருமணத்திற்கு பின்னரும் வேலையில்லாமல் இருந்த ந.முத்துசாமிக்கு TAFEயில் வேலை வாங்கிக்கொடுத்தவரே மாமி தான்.
தன் சங்கீதம் பாடும் திறமையை குடும்பத்திற்காக தியாகம் செய்தவர்.
முத்துசாமியின் சிறுகதைகளுக்கும், நாடகங்களுக்கும் முதல் வாசகர் மாமி தான்.
கூத்துப்பட்டறை ஆரம்பித்த போது மாமி தான் ஸ்பான்ஸர்.
41 ஆண்டுகளாக மாமி தான் கூத்துப்பட்டறையில் கணவரின் செயல்பாடுகள் அனைத்திலும் பெரும்பங்கு ஆற்றியவர்.

தன் தந்தையுடன் தோளோடு தோள் நின்று கூத்துப்பட்டறையை வளர்த்தெடுத்த நடேஷின் பணிக்கு மாமியும் துணை நின்றவர்.

குஞ்சலி மாமியின் ஞாபக சக்தி கடைசி வரை மிகவும் அபாரம். அறுபது, எழுபது வருஷ சங்கதிகளை புள்ளி சுத்தமாக சொல்வார்.
அந்த காலத்தில் முத்துசாமியை பார்க்க அசோகமித்திரன் வரும்போதெல்லாம் தன் வீட்டிலிருந்து ஒரு மாங்காய் கொண்டு வருவார். அதனால் அவரைப்பற்றி அடையாளமிட “மாங்காய் பிராமணன்” என்றே சொல்வார்.
முதுமையின் பாதிப்பால் முத்துசாமி சாருக்கு ஞாபகசக்தி குறைபாடு ஏற்பட்ட போது மாமி தான் அவரை ஒரு குழந்தையாகவே போஷித்தவர். அவருடைய மருத்துவம் மருந்து மாத்திரை எல்லா விபரமும் மாமிக்கு தான் தெரியும்.
ஒரு நாளில் முத்துசாமி குஞ்சலி, குஞ்சலி என்று கூப்பிட்டுக்கொண்டு தான் இருப்பார்.
”குஞ்சலி, ரசம் பிரமாதம்”


தள்ளாமையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மாமி சலிக்காமல் வீட்டு வேலைகளை சமையல் உட்பட தானே தான் கவனிப்பார்.
சின்ன சின்ன உதவி கூட யாரும் செய்ய விடமாட்டார்.
Workaholic.
அவருடைய உலகமே முத்துசாமி சாரும், பிள்ளைகள் நடேஷும் ரவியும் தான்.
மகன்களை ”கொழந்தே” என்றே இருவரும் பாசத்துடன் அழைப்பார்கள்.
நடேஷ் சாரை பார்க்க போனால் மாமி சொல்வார் “ கொழந்த இப்ப தான் சாப்பிட்டுண்டு படுத்தான். அவன் எழுந்தவுடன் நான் சொல்றேன்”
எல்லா முதிய தம்பதிகளைப் போல மாமியும் சாரும் குழந்தைகளாகவே மாறி விட்டார்கள். இருவருக்கும் செல்ல சண்டை எப்போதும் உண்டு. மறு நிமிடமே முகமலர்ந்து முத்துசாமி “ குஞ்சலி” என்று பரவசமாக கூப்பிடுவார்.
மாபெரும் கலைஞனான முத்துசாமிக்கு முதுமையில் வீட்டில் இருக்கும்போது வேறு வழியில்லாமல் பெரும்பாலும் டி.வியின் முன் உட்கார வேண்டிய நிர்ப்பந்தம் தான்.
குழந்தையாகவே மாறி விட்ட முத்துசாமி சீரியல்களை வேடிக்கை பார்ப்பார்.
மாமி டி.வி.சீரியல்கள் சம்பந்தமாக நிறைய விளக்கம் சொல்வார்.
சீரியல் கதாபாத்திரங்கள் பற்றி தினமும் விரிவாக சொல்வார்.
இரண்டு குழந்தைகள் பேசுவது போலவே இருக்கும்.
”இவ ரொம்ப கெட்டவ. இவளால தான் அவ்வளவு பிரச்னையும். நல்லவ தான்னு அவ நம்பிண்டு இருக்கா. பாவம்.”
”இவன் ஒரு அயோக்கியன். இவன இன்னும் போலீஸ் ஜெயில்ல போடாம இருக்காங்களே” இப்படி மாமி சலிக்கும்போது முத்துசாமி சார் அந்த கதா பாத்திரத்தை கெட்ட வார்த்தையால் உரக்க திட்டுவார்.
ஒரு நாள் நான் கூத்துப்பட்டறைக்குள் நுழைகிறேன்.
முத்துசாமி “ அய்யய்யோ” என்று கத்தினார். நான் பதற்றத்துடன் அவரை நெருங்கினேன். சீரியல் சோகம் என்று உடனே தெரிந்தது.
“குஞ்சலி, எதுக்கு குஞ்சலி இந்த அயோக்கிய பயலுக அந்த ரெண்டு பொண்ணுங்களயும் வேனுல வலுக்கட்டாயமா ஏத்துறானுங்க. அய்யய்யோ..“
சமையல் வேலை பாத்துக்கொண்டிருந்த மாமி ஹாலுக்கு வந்து டி.வியை பார்த்து விட்டு சாரிடம் சொன்னார்.” இப்படி நடக்கும்னு நேக்கு நேத்தே தெரியும். இவ பாவம் வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிண்டு ஏமாந்து போறா. இவ மன்னி தான் இவ்வளவுக்கும் காரணம். நேருல பாக்கும்போது நல்லவ மாதிரி நடிப்பா. வழிச்சிண்டு சிரிப்பா. நண்டு வளையில நானும் தான் இருக்கேன்னு மூக்க நுழப்பா. இப்ப என்னாச்சி பாத்தேளா.."

எங்க குஞ்சலி மாமி இப்ப முத்துசாமி சாரிடம் சென்று விட்டார்.

Jun 16, 2019

அப்பப்பா


இன்னக்கி Father’s day. அப்பா பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமோ?
ந.பிச்சமூர்த்தி அப்பா பெயரும் நடேசன் தான்.
ந.முத்துசாமி அப்பா பெயரும் நடேசன் தான்.
ந. பிச்சமூர்த்திக்கு ஏழு வயது இருக்கும்போது தான் அவருடைய அப்பா செத்துப்போய் விட்டார்.
ந.முத்துசாமி தன் ஏழு வயதில் தான் தகப்பனை இழந்தார்.

”இந்த அப்பாவால வந்த வினை, இன்னக்கிச் செத்தாப்பலே இருக்கு. எனக்கு ஏழு வயசில செத்தார்.  ( ஏக்கத்துடன்) இன்னும் கொஞ்ச வயசு வந்த பின்னாலே மட்டும் செத்து இருந்தார்னா?” ந.முத்துசாமியின் ’அப்பாவும் பிள்ளையும்’
நாடக வசனம். 

…..
’வெண்ணிலா குடை பிடிக்க
வெள்ளி மீன் தலை அசைக்க
விழிவாசல் வழி வந்து இதயம் பேசுது’
கதை பேசும் தேனிசையாய் சினிமா பாடல் இணையத்தில் கேட்டு ஒரு நிமிடத்தில்
ஒரு டி.வி சேனலில் செய்தி ஒன்று கவனிக்க நேரிட்டது
‘வயிற்று வலிக்கான மாத்திரைக்குள் சேஃப்டி பின் போன்ற சின்ன கம்பி. மாத்திரையை உடைத்து பாதியாக சாப்பிட நினைத்த போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.’
When fate arrives, the patient becomes an idiot.
Pharmaceutical drug snatches away the health.
(என் அப்பா பற்றிய இரண்டு பதிவுகளின் லிங்க் கீழே)

புகைப்படத்தில் நானும் என் அப்பாவும் என் மூத்த மகனும்

Jun 11, 2019

கிரிஷ் கர்னாட்


Death is here, death is there, death is busy everywhere - Shelley
எந்த சாவுமே துயரமானது. ஆனால் ஒரே நேரத்தில் இருவர் இறக்கும்போது ஒரே தட்டில் வைப்பது, தோளோடு தோள் நிறுத்தினாற் போல் ஒப்பிடுவது பெரிய வினோதம்.
கிரீஷ் கர்னாட் நாடக ஆளுமை. கிரேஸி மோகனும் நாடக ஆளுமை என்பதாக சிலாகிப்பது அபத்தம். இருவருமே அப்பா நடிகர்கள் என்று ஒரு கண்டுபிடிப்பு வேறு.
நடிகராக கூட இவரை நினைக்கும் போது நசிருதீன் ஷா, அம்ரிஷ் பூரி, அனந்த் நாக், ஓம்பூரி, அமோல் பலேகர் ஞாபகம் வருவது தான் சீரான நியாய வரிசை.

நாடகாசிரியர் என்றால் இவரை மோஹன் ராகேஷ், விஜய் டென்டுல்கர், ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதியோடு சேர்ப்பது தான் ஒழுங்கு.
கிரீஷ் கர்னாட் எழுதிய துக்ளக் நாடகம் எவ்வளவு விசேஷமானது.
சோவும் தான் துக்ளக் நாடகம் எழுதினார் என அவரை கிரீஷ் கர்னாட் கூடவே நிறுத்த முடியுமா?

 ஞான பீட விருது பெற்றவர் கிரிஷ் கர்னாட். 
( ஏன் ந.முத்துசாமிக்கு, இந்திரா பார்த்தசாரதி நாடகங்களுக்காக ஞான பீட விருது கொடுக்கவில்லை?)
’காடு’ என்ற கன்னட ஒரு அற்புதமான parallel cinema இயக்கியதன் மூலம் தான் கிரீஷ் கர்னாட் பற்றி அறிய வந்தேன். அந்த படத்திற்கு சோமன துடி பி.வி கரந்த் தான் இசை. கமல் ஹாசன் ’காடு இன்ஸ்பைரேஸன் தான் தேவர் மகன்’ என்று சொல்லியதுண்டு.
ஷ்யாம் பெனகலின் ’மந்தன்’ ஹீரோ கிரிஷ் கர்னாட்.
ஷ்யாம் பெனகலின் செல்லுலாய்ட் காவிய நாயகன்.
திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் பார்த்த ஷ்யாம் பெனகல் படங்களெல்லாம் இன்னும் மறக்க முடியவே இல்லை.

க்ரியாவின் மூலமாக மொழிபெயர்ப்பாக கர்னாடின் துக்ளக் கிடைத்தது. கன்னடத்தில் இருந்து நேரடியாக மறைந்த வி.ஜெயலக்ஷ்மி மொழி பெயர்த்திருந்தார். க்ரியா ராமகிருஷ்ணனின் துணைவியார்.
கிரிஷ் கர்னாட் கடைசி வரை போராளியாக இயங்கியவர். ’ஆமாம் நான் அர்பன் நக்ஸல் தான்.’ தைரியமாக மார் தட்டியவர்.
A multi-faceted personality என்ற வார்த்தை கூட இப்போது Cliche தானே?

May 26, 2019

முத்துசாமி நாடகங்களும், இளைய மகன் ரவியும்


தன் நாடகங்கள் இருபத்தொன்றையும் க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிடுவார் என்று தான் ந.முத்துசாமி நம்பியிருந்தார்.
அது சாத்தியப்படவில்லை.
அந்த நேரத்தில் சிங்கப்பூரில் இருக்கும் அவருடைய இளைய மகன் ரவி கை கொடுத்தார்.
முத்துசாமி நாடகங்கள் நூல் வடிவம் பெறுவதற்கு தேவையான முழு தொகையையும் ரவி தான் கொடுத்தார்.
இதை முத்துசாமி சார் என்னிடம் எப்போதும் நெகிழ்ந்து சொல்வார்.
பெரிய நிகழ்வாக நூல் வெளியீட்டு விழா நடத்தப்பட்டது.
Credit goes to Muthuswamy Ravi only.
அப்படி வெளி வந்த புத்தகத்தின் பிரதிகளை ந.முத்துசாமி இலவசமாகவே எவ்வளவு நூற்றுக்கணக்கான பேருக்கு கொடுத்திருக்கிறார் தெரியுமா?
ரவி இதிலிருந்து எந்த பெரிய லாபமும் பெற விரும்பவில்லை என்கிற மேன்மையான இயல்பும் தெரிகிறது.

May 24, 2019

ந.முத்துசாமி எனும் உன்னத அதி மானிடன்


ந.முத்துசாமி எனும் உன்னத அதி மானிடன்

சென்ற வருடம் அக்டோபர் 24 தேதியில் முத்துசாமி மறைந்த போது ஏற்பட்ட துக்கம் வாழ்நாளில் காணாதது. நொறுங்கிய நிலை.

வேப்பிலை சாறு குடித்தால் இழப்பின் பெருந்துக்கம் குறையும் என்று பலமுறை குடிக்க வேண்டியிருந்தது.
ஒரு பெரியவர் ”இப்படி தாங்க முடியாத துயரம் ஆறு மாதம் வரை மனதை ரொம்ப வருத்தும். அதற்கு பிறகு நிவாரணம் உண்டு” என்றார்.

இன்று முத்துசாமி சார் இறந்து 7 மாதம் முடிந்து விட்டது.
துக்கம் கொஞ்சமும் நீங்கிய பாடில்லை. இழப்பின் துயரம் அகலவில்லை.
உதாரணப்படுத்திக்காட்டவே முடியாத அளவிற்கு, எவரோடுமே ஒப்பிட்டு காட்ட முடியாத ஒரு அற்புத மனிதர்
Muthuswamy's death leaves a heartache no one can heal.
His special face, his special smile ...

Dec 19, 2018

அது மனிதருக்கு தோழனடி - 2


எங்க வீட்டு பாதாம் மரத்தில் காலை பத்தரை போல வந்தமரும் அண்டங்காக்கைகள் இரண்டும் 12 மணி போல தான் கிளம்புகிறது. பிற காகங்கள் போல சமையலறை ஜன்னலில் அமர்ந்து, கொடுப்பதை சாப்பிடுகின்றன.
.
முத்துசாமி சார் இறந்த பின்னால் தான் இந்த ஜோடி அண்டங்காக்கைகள் எங்களின் அனுதின அதிதிகளாக இருக்கின்றன. முத்துசாமி தேடிப்போய் பார்க்க ஆசைப்பட்ட அண்டங்காக்கைகள்.  பால்ய பருவத்தில் அவர் மனதில் முதலில் பதிந்த பாதாம் மரத்தில் இன்று.
ஆத்மீக அனுபவம்.
காக்கை குருவி எங்கள் ஜாதியென்றான் கவி. குருவிகளை காணமுடியவில்லை. காக்கை எங்கள் ஜாதி.
பழகாத நாயைப்பார்க்கும் போது தான் திகில், பயம். நம்மிடம் பழகும் நாய்கள் மனிதருக்கு தோழர்கள் தானே.

கூத்துப்பட்டறை தெருவில் இருக்கும் ஒரு வெள்ளை நாய் (வெள்ளக்கண்ணு என்று பெயர் வைத்திருக்கிறேன்.) முத்துசாமி சாருக்கும் எனக்கும் நல்ல நண்பன். எப்போதும் இதற்காக பொறை போடுவேன். சார் அவ்வளவு சந்தோஷப்படுவார். ”இதோட பேர் என்ன சொன்னீங்க” என்று அடிக்கடி கேட்டுக்கொள்வார். குஞ்சலி மாமி கூட பொறை தருவார்.

முத்துசாமிக்கும் பூனைகளுக்குமான பந்தம் பூர்வ ஜென்ம பந்தம். அது பற்றி தனியாக எழுதவேண்டும்.
இப்போது வெள்ளக்கண்ணு என்னைப்பார்த்தவுடன் கூடவே வருகிறது. A very interesting one. இதற்காகவே நான் பட்டறையில் பொறை எப்போதும் வைத்திருப்பேன்.
சென்ற வருடம் வரை எதிர்த்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு கறுப்பு பெண் நாய். ப்ளாக்கி என்று பெயர். அதை முத்துசாமி சார் ஒரு நாளில் பல முறை கூப்பிடுவார். ஓடி வந்து அவர் காலடியில் உட்கார்ந்து விடும்.
அதற்கு எப்போதும் பொறை வீட்டில் இருக்கிறதோ இல்லையோ அப்போது என்னிடமிருந்த ஸ்கூட்டரில் இருக்கும். பொறை போடும் போது சார் முகம் மலர்வதை பார்க்க வேண்டும். அவ்வளவு சந்தோஷப்படுவார்.
அதன் பாய் ஃப்ரெண்ட் தான் வெள்ளக்கண்ணு. ப்ளாக்கியை பார்க்க பட்டறைக்கே வந்து விடும்.
வெள்ளக்கண்ணு இருக்கும்போது பொறை போட்டால் ப்ளாக்கி எப்போதும் வாய் வைக்காது.“அதிதியை கவனியுங்க” என்ற தோரணையில் இருக்கும். வெள்ளக்கண்ணு பொறைகளை அவுக்கு, அவுக்குன்னு தின்னும்.
ஒரு நாள் நான் சாரோடு வீட்டுக்குள் இருக்கும் போது “ ஐயய்யோ” என்று பதறிப்போய் மிக சத்தமாக சொன்னார். ப்ளாக்கியை அதன் எஜமானரே ஆட்கள் மூலம் பிடித்து ஒரு வேனில் ஏற்ற முயற்சித்த போது பட்டறைக்குள் ஓடி வந்து விட்டது. சார் விடாமல் ’ஐயோ, ஐயோ’ என்று கத்தினார்.
நாயின் எஜமானரும், எஜமானியும் என்னிடம் “ அதற்கு தோல் வியாதி. ட்ரீட்மெண்ட் முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்கு வந்து விடும்.” என்றார்கள். சாரிடம் இதை சொல்லி சமாதானப்படுத்தினேன்.
அந்த நாய் வேனில் கட்டி ஏற்றப்பட்ட போது என்னை பரிதாபமாக பார்த்த பார்வை… Its eyes had the power to speak a great language.
அப்போது என்னருகில் இருந்த இஸ்ரேலி ஜென் மாஸ்டர் கில் ஆலன் “ I suspect it’s a lie. They won’t bring the dog back, I think” என்று சொன்னது தான் உண்மை என்றாயிற்று. ப்ளாக்கி திரும்பி வரவேயில்லை.
வெள்ளக்கண்ணு அந்த கறுத்தம்மா ப்ளாக்கி இழப்பை எப்படி தாங்கிக்கொண்டதோ தெரியவில்லை.
முத்துசாமி சாரையும் தான் வெள்ளக்கண்ணுவால் கூட மறக்க முடியுமா?
மிலன் குந்தேரா சொன்னது போல “Dogs are our link to paradise.”
…………..