Share

Showing posts with label இந்திரா பார்த்தசாரதி. Show all posts
Showing posts with label இந்திரா பார்த்தசாரதி. Show all posts

May 30, 2020

தி. ஜா. கருத்தரங்கமும் திருப்பூர் கிருஷ்ணனும்

1989 
புதுவை பல்கலைக்கழகத்தில் 
தி. ஜா. கருத்தரங்கம் நடந்த போது அந்த ஊரில் பிரமுகர், தியேட்டர்கள், கல்யாண மண்டபம் போன்றவற்றிற்கு அதிபதி ஒரு பெரியவர். 
அவர் புரவலர். அந்த நிகழ்ச்சிக்கு நிதி தந்திருக்கலாம். விழா மலரை இந்திரா பார்த்தசாரதியிடம் இருந்து நான் பெற்ற போது பார்த்தார். ராஜநாயஹம் ஒரு இளைஞன் என்று கண்டு கொண்டார். 

விழா ஆரம்பித்த பிறகு அதன் பின்னர் வந்த திருப்பூர் கிருஷ்ணன் அந்த புரவலர் தான் ராஜநாயஹம் என்று நினைத்திருக்கிறார். 

அப்புறம் புரவலர் பேச எழுந்த போது தான் நான் இல்லை என்பதை புரிந்து கொண்டாராம். 

ராஜநாயஹம் என்ற பெயர் பெரியவர் என்பதாக தன்னை கருத வைத்து விட்டதாக விழா முடிந்த பிறகு திருப்பூர் கிருஷ்ணன் கூறினார். 

நான் தான் முதல் கட்டுரை வாசித்தேன். திருப்பூர் கிருஷ்ணனும் வாசித்தார். 

முன்னதாக புரவலர் பேசும் போது 'ராஜநாயஹம் போன்ற இளம் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார் என்றால் ஜானகிராமன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் என்பது புரிகிறது' என்றார். 

உடனே எழுதப்பட்ட ஒரு காகிதத்தில் இருந்து சிரத்தையாக வாசித்தார். 'ஜானகிராமன் பெரிய எழுத்தாளர். அவருக்கு மனைவி இரண்டு.' - pause.. 
இந்திரா பார்த்தசாரதி உடனே என்னைப் பார்த்து அதிர்ச்சியை தன் உடலை ஒரு குலுக்கு குலுக்கி வெளிப்படுத்திய காட்சி இப்போதும் மறக்க முடியாதது. 

புரவலர் தொடர்ந்தார் '.. மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' 

'அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' என்று எழுதிக்கொடுத்ததை அப்படி விபரீதமாக வாசித்திருக்கிறார். 

என்னிடம் ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு ' நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் புதுமைப்பித்தன்,
 கு. ப. ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி, க. நா. சு துவங்கி அழகிரி சாமி, லாசரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, வெங்கட்ராம், 
கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் என்று கோணங்கி வரை  படித்தவன் நான். யாரை படித்தாலும் தி. ஜானகிராமன் தான் விசுவரூபம் எடுத்து தெரிகிறார் 'என்று பயமறியா இளங்கன்றாக சொன்னேன். 
கிராவும், இ. பாவும் விழாவில் இருந்தார்கள். 

திருப்பூர் கிருஷ்ணன் கேட்ட கேள்வி கூட நினைவிருக்கிறது.' அன்பே ஆரமுதே குறைப்பட்டுப் போன நாவல் என்று எப்படி சொல்கிறீர்கள் ' என்றார். அவருக்கு பிடித்த பெண் பாத்திரம் அன்பே ஆரமுதே ருக்மணி. 
தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல்களில் அன்பே ஆரமுதே மட்டும் பாதிக்கப்பட்டது என்பது 
என் துணிபு. 

விழா முடிந்ததும் இந்திரா பார்த்தசாரதியுடன் திருப்பூர் கிருஷ்ணனும், நானும் அவர் வீட்டுக்கு சென்றோம். இந்திரா மாமியின் அன்பான உபசரனை. 

வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திருப்பூர் கிருஷ்ணன் என்னிடம் சொன்னார் :
" நீங்கள் கருத்தரங்கில் ஜானகிராமன் தான் விஸ்வரூபம் எடுத்து தெரிகிறார் என்று சொன்ன விஷயம் கி. ரா வையும் இ. பா. வையும் புண்படுத்தியிருக்கும் "

திருப்பூர் கிருஷ்ணன் 'தமிழின் தரமான எழுத்தாளர்களை விரல் மடக்கி எண்ண ஆரம்பித்தால் முதல் விரலையே ஜானகிராமனுக்காக தான் மடக்க வேண்டியிருக்கும்" என்று கணையாழியில் எழுதியிருந்ததையும் கூட முன்னதாக நான் வெளியிட்டிருந்த தி. ஜா. நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 

நான் வெளியிட்டிருந்த அந்த நினைவு மதிப்பீட்டு மடல் பார்த்து விட்டுத் தான் துணை வேந்தர்
 இந்த கருத்தரங்கம் நடத்த ஆணையிட்டார். 

திருப்பூர் கிருஷ்ணன் சென்னை சென்ற பிறகு இந்த புகைப்படம் அனுப்பி வைத்தேன். 

அன்போடு பதில் கடிதம் எழுதினார் 
'என் மனைவி ஜானகியிடமும், குழந்தை அரவிந்தனிடமும் புகைப்படத்தில் உங்களை காட்டி 
"இவர் தான் ராஜநாயஹம் "என்று சொன்னேன்"

.... 

http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_3967.html?m=0

Jun 11, 2019

கிரிஷ் கர்னாட்


Death is here, death is there, death is busy everywhere - Shelley
எந்த சாவுமே துயரமானது. ஆனால் ஒரே நேரத்தில் இருவர் இறக்கும்போது ஒரே தட்டில் வைப்பது, தோளோடு தோள் நிறுத்தினாற் போல் ஒப்பிடுவது பெரிய வினோதம்.
கிரீஷ் கர்னாட் நாடக ஆளுமை. கிரேஸி மோகனும் நாடக ஆளுமை என்பதாக சிலாகிப்பது அபத்தம். இருவருமே அப்பா நடிகர்கள் என்று ஒரு கண்டுபிடிப்பு வேறு.
நடிகராக கூட இவரை நினைக்கும் போது நசிருதீன் ஷா, அம்ரிஷ் பூரி, அனந்த் நாக், ஓம்பூரி, அமோல் பலேகர் ஞாபகம் வருவது தான் சீரான நியாய வரிசை.

நாடகாசிரியர் என்றால் இவரை மோஹன் ராகேஷ், விஜய் டென்டுல்கர், ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதியோடு சேர்ப்பது தான் ஒழுங்கு.
கிரீஷ் கர்னாட் எழுதிய துக்ளக் நாடகம் எவ்வளவு விசேஷமானது.
சோவும் தான் துக்ளக் நாடகம் எழுதினார் என அவரை கிரீஷ் கர்னாட் கூடவே நிறுத்த முடியுமா?

 ஞான பீட விருது பெற்றவர் கிரிஷ் கர்னாட். 
( ஏன் ந.முத்துசாமிக்கு, இந்திரா பார்த்தசாரதி நாடகங்களுக்காக ஞான பீட விருது கொடுக்கவில்லை?)
’காடு’ என்ற கன்னட ஒரு அற்புதமான parallel cinema இயக்கியதன் மூலம் தான் கிரீஷ் கர்னாட் பற்றி அறிய வந்தேன். அந்த படத்திற்கு சோமன துடி பி.வி கரந்த் தான் இசை. கமல் ஹாசன் ’காடு இன்ஸ்பைரேஸன் தான் தேவர் மகன்’ என்று சொல்லியதுண்டு.
ஷ்யாம் பெனகலின் ’மந்தன்’ ஹீரோ கிரிஷ் கர்னாட்.
ஷ்யாம் பெனகலின் செல்லுலாய்ட் காவிய நாயகன்.
திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் பார்த்த ஷ்யாம் பெனகல் படங்களெல்லாம் இன்னும் மறக்க முடியவே இல்லை.

க்ரியாவின் மூலமாக மொழிபெயர்ப்பாக கர்னாடின் துக்ளக் கிடைத்தது. கன்னடத்தில் இருந்து நேரடியாக மறைந்த வி.ஜெயலக்ஷ்மி மொழி பெயர்த்திருந்தார். க்ரியா ராமகிருஷ்ணனின் துணைவியார்.
கிரிஷ் கர்னாட் கடைசி வரை போராளியாக இயங்கியவர். ’ஆமாம் நான் அர்பன் நக்ஸல் தான்.’ தைரியமாக மார் தட்டியவர்.
A multi-faceted personality என்ற வார்த்தை கூட இப்போது Cliche தானே?

Feb 2, 2019

நுரை குமிழி


தி.மு.க பத்திரிக்கையில் ஒரு காலத்தில் தனித்தமிழ் அக்கறையிருந்திருக்கிறது. சம்கிருத வார்த்தைகளை போடக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தது. ராஜாஜி பெயரை ’ராசாசி’ என்று அச்சிட்டவர்கள் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் திருத்தம் எதுவும் எம்சியார் என செய்யவில்லை. எஸ்.எஸ்.ஆர் பெயரும் அப்படியே.
இப்போது ’ஆஹ’ என்ற வார்த்தையை எப்போதும் உச்சரிக்கும் தி.மு.க. தலைவர் பெயரை பழ.கருப்பையா தனித்தமிழில் ’இசுடாலின்’ என்று குறிப்பிடுகிறார். நக்கீரனில் பார்த்தேன். தனித்தமிழ் வைராக்கியம் இப்படி இருப்பது பற்றி நான் 2008 ஸ்டாலினை இவர்கள் சுடாலின் என்று குறிப்பிடுவார்களா என்று கேட்டிருந்தேன். ’சுடாலின்’ என்பதே தப்பு. அடடா ’இசுடாலின்’ என்பது இன்றல்லவோ புரிகிறது.
இந்திரா பார்த்தசாரதி பேட்டி பிப்ரவரி விகடன் தடத்தில். இந்திரா பார்த்தசாரதியை முழுமையாக படித்தவன் நான். “எந்த தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்” என்பதை ’ஆஹ’ என்ற வார்த்தையை தி.மு.க தலைவர் ஸ்டாலின் எத்தனை தடவை உச்சரித்தாரோ அத்தனை தடவை இ.பா இந்த ஸ்தாபனமாகும் தத்துவ விஷயத்தை உச்சாடனம் செய்து வந்திருக்கிறார். அவருடைய எழுத்தின் ஆதாரக்கவலை இதுவென்றே குறிப்பிடலாம். இதை நான் என்னுடைய “ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை” கட்டுரையில் (2002ல்) கூட குறிப்பிட்டேன்.

இந்திரா பார்த்தசாரதிக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்ட போது திருச்சி வானொலி நிலையத்தில் “ராமானுஜர்” நாடகம் பற்றி நான் உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
அவருடைய ’கிருஷ்ணா கிருஷ்ணா’ நாவலுக்கு நான் எழுதிய விமர்சனம் எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில் விமர்சனம் வந்ததுண்டு.
இந்திரா பார்த்தசாரதி புதுவை பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த காலத்திலும் அதன் பின் இந்திரா மாமி மறைவுக்குப் பின் நான் பார்த்த போதும் அவரிடம் ஒரு விஷயம் கவனித்திருக்கிறேன்.
அவருடைய மூக்கிற்கு வெளியே ஒரு வெள்ளை முடி எப்போதும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை சின்ன சிசரால் கட் செய்ய முடியும் என்பது ஏன் அவருக்கு தோன்றவில்லை.
இப்போது தள்ளாத வயதாகி விட்ட அவர் புகைப்படத்தை விகடன் தடம் பத்திரிக்கையில் பார்த்த போது அந்த வெள்ளை முடி மூக்கிற்கு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறதா என்பதை செக் செய்தேன். அட்டையில் உள்ள புகைப்படத்திலும் உள்ளே பேட்டியின் முதல், இரண்டாவது புகைப்படத்திலும் வெள்ளை முடி காணப்படவில்லை. ஒரு ஆசுவாசம் எனக்கு ஏற்பட்டது. அந்தோ. நான்காவது புகைப்படத்தில் ஒரு வெள்ளை முடி அவருடைய இடது நாசித்துவாரத்தில் நீட்டிக்கொண்டிருக்கிறது..


விகடன் தடத்தில் கவிதையின் கையசைப்பு கட்டுரையில் வாஸ்கோ போபோ என்ற ஒரு செர்பியர் எழுதிய கவிதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ’ஆங்கில மூலத்தால்’ இருந்து தானே?

மௌனியின் ’சாவில் பிறந்த சிருஷ்டி’ எப்போதோ எழுதப்பட்டு விட்டது. அதை படித்து விட்டவர்கள் நாம். இந்த சிறுகதையை பெங்க்வின் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக சிறுகதைகளில் சேர்த்திருக்கிறது.
இந்த கவிதையில் பிரமிக்க என்ன இருக்கிறது?

’முன்னொரு காலத்தில் ஒரு கதை இருந்தது
அதன் முடிவு, கதை
தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் தொடக்கம் கதையின் முடிவுக்குப்
பின்பே வந்தது.
தங்கள் சாவிற்குப் பிறகு
கதையின் நாயகர்கள்
கதைக்குள் வந்தார்கள்
தங்கள் பிறப்பிற்குப்
பிறகு வெளியேறிப்போய் விட்டார்கள்.”
இதே முறையில் பல கவிதைகள் எழுதலாம். சலிப்பான கவிதை முறைமை.
’முன்னொரு காலத்தில் ஒரு ஓவியம் இருந்தது
அதன் கடைசி தீற்றல், ஓவியம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் முதல் வரி வடிவம் ஓவியம் முடிக்கப்படுவதற்கு
பின்பே வந்தது.
தாங்கள் அழிக்கப்பட்டதற்கு பிறகு
ஓவியத்தின் நிழல் பிம்பங்கள்
ஓவியத்திற்குள் வந்தன.
பிம்பங்கள் வண்ணத்தில் பிறப்பிக்கப்பட்ட
பிறகு வெளியேறிப் போய் விட்டன.’
இதை இசை, சிற்பம் இவற்றை வைத்தும் எழுதிப்பார்க்கலாம். ஏன் சினிமா பற்றி கூட.

’அந்த திரைப்படம் கடைசி சீனில் கடைசி ஷாட்டுக்கு முன்னரே
தொடங்கி விட்டது.
முதல் ஷாட் ஷுட் பண்ணும்போதே முடிந்து விட்டது’
மண்டையில் மரம் முளைக்காத வரை எழுதிப்பார்க்கலாம். அல்லது மண்டையில் மரம் முளைத்தபின்னும் பிடிவாதமாக எழுதிப்பார்க்கலாம்.
பெண்கள் ஐஸ்கிரீமை நாக்கால் நக்கி சாப்பிடக்கூடாது என்று துருக்கி நாட்டில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக காதில் சேதி விழுந்தது. இந்த காரசார செய்தி பெண்ணிய கவிதைகளுக்கு வழி வகுக்கலாம்.



Nov 22, 2017

திருச்சி ஆல் இண்டியா ரேடியோ


இந்திரா பார்த்தசாரதியின் ’ராமானுஜர்’ நாடகத்திற்கு சரஸ்வதி சம்மான் விருது கொடுக்கப்பட்ட போது திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில் நான் அந்த நாடகம் பற்றி ஒரு உரை (இருபது நிமிடத்திற்கு) நிகழ்த்தினேன்.

அப்போது ரவிசுப்ரமண்யன் இ.பா பற்றி ஒரு டாகுமெண்ட்ரி மூவி செய்ய இருந்த நேரம். இந்திரா பார்த்தசாரதி அவரிடம் என்னிடம் பேசச்சொல்லி ரவி போனில் பேசினதுண்டு. நான் வாசித்த கட்டுரையை அனுப்பி வைத்தேன்.


மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா பற்றி ஒரு இலக்கிய பேருரை ( அரை மணி நேரம் ) நான் திருச்சி ரேடியோவில் செய்திருக்கிறேன். வாசித்த அந்த நீண்ட கட்டுரையை நான் அந்த ரிக்கார்டிங் ரூமிலேயே விட்டு விட்டு வந்தேன்.

இந்தி கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து வாசித்திருக்கிறேன். அந்த கவிதைகளை ஆல் இண்டியா ரேடியோவில் அவர்களே தந்து மொழிபெயர்க்க சொல்லியிருந்தார்கள்.
ஒரு கவிதையை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்ப்பதில் சிரமம் இருந்த போது என் தகப்பனார் எனக்கு உதவியிருக்கிறார்.
மொழிபெயர்த்த கவிதைகளையும் கூட ரிக்கார்டிங் முடிந்ததும் அங்கேயே வைத்து விட்டு வந்தேன்.


நான் திருப்பூர் வந்த பிறகு கூட இவை ரேடியோவில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டதாக திருச்சி நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
………………………………………………..


Mar 16, 2013

சிட்டியை சந்தித்த விதம்




30 வருடத்திற்குப் பின் மீண்டும் ’நடந்தாய்; வாழி, காவேரி!’ படிக்கிறேன். லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் 1971ல் வெளியிட்ட நூலை 1983ல் வாங்கிப் படித்த என்னிடமிருந்து உறவினர் ஒருவர் 1984ல் இரவல் வாங்கிச்சென்று விட்டார்.அப்போது இந்த நூலுக்கு மறு பிரசுரமும் கிடையாது. அதனால் எங்கும் கிடைக்காது. அவரிடம் படித்து விட்டுத் திருப்பித் தரும்படி கெஞ்சியும் கிடைக்கவில்லை. இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். 2007ல் இருந்து 2011க்குள் நான்கு பதிப்பு வந்து விட்டது!


 தி.ஜானகிராமனுக்கு  நினைவு மதிப்பீட்டு மடல் பழனியில் நான் ஃபுட் ஆயில் பிசினஸ் செய்து கொண்டிருந்த நேரத்தில் முதல் முறையாக என் பிரத்யேக, வித்தியாசமான இன்லண்ட் லெட்டரில் அச்சிட்டு ஐநூறு பேருக்கு தபாலில் அனுப்பி வைத்தேன். மறு வருடம் பாண்டிச்சேரியில் என் லெட்டர் ஹெட்டில் அச்சிட்டு ஆயிரம் பேருக்கு அனுப்பியிருக்கிறேன்.

பழனியில் இருந்து நான் அனுப்பிய  தி.ஜா நினைவு மதிப்பீட்டு மடலை விஜயா பதிப்பகம் வேலாயுதத்திடம் பார்த்த ஒரு நண்பர்- மறைந்த கல்கண்டு தமிழ்வாணனின் நண்பராம் –  சிட்டியிடம் கொண்டு வந்து காட்டியிருக்கிறார். 

அதைப் பார்த்து விட்டு சிட்டி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
 “ அன்பு மிக்க நண்பர் ராஜநாயஹத்துக்கு, சிட்டி வணக்கம். என்னைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நான் தி.ஜானகிராமனுடன் நெருங்கிப் பழகியவன். தி.ஜா. நினைவின் பலனாக உங்கள் நட்பு கிடைப்பதில் மகிழ்ச்சி.” 

நான் அந்தக்கடிதத்திற்கு எழுதிய பதிலில் அவர் 1934ல் புரசைவாக்கம் ராக்ஸி தியேட்டரில் Queen Christina படம் பார்த்த போது பி.எஸ்.ராமையாவிடம் அடித்த ஜோக், 1988ல் வ.ரா.நூற்றாண்டு நிகழ்ச்சியில் சிட்டி அடித்த ஜோக் பற்றியெல்லாம் குறிப்பிட்டு, சி.என். அண்ணாத்துரையின் பச்சையப்பன் கல்லூரி வகுப்புத்தோழர் என்பதோடு, மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி எழுதிய அந்தி மந்தாரை, ரப்பர் பந்து, உடைந்த வளையல் போன்ற கதைகளையும் பற்றி, கு.ப.ராவும் சிட்டியும் இணைந்து எழுதிய ’கண்ணன் என் கவி’ நூல் பற்றி,தி.ஜானகிராமனுடன் சேர்ந்து அவர் எழுதிய “ நடந்தாய் வாழி காவேரி” நூல்பற்றியெல்லாம் எழுதி விட்டு வ.ரா., தி.ஜா போன்ற இலக்கிய மகான்களுடனெல்லாம் நெருங்கிப்பழகிய நீங்கள் ஒரு சாதாரண வாசகனான ராஜநாயஹத்தின் நட்பையும் மகிழ்ச்சியோடு  ஏற்றுக்கொள்வது என்பது ’காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று சொன்ன பாரதியின் பரந்த மனசு தான்” என்று முடித்திருந்தேன்.


 சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரம் சொல்லியிருக்கிறார். “ அப்பா! எப்படியும் ராஜநாயஹத்துக்கு நிச்சயம் உன் வயசு இருக்கும். நீ 1934ல் அடித்த ஜோக்கையெல்லாம் எழுதியிருக்கிறார்.” சிட்டிக்கு அப்போது 80 வயது.
தமிழ்வாணனுடைய நண்பர் சொன்னாராம் ” எப்படியும் அறுபது வயசுக்கு குறையாது.”

கோவைக்கு தன்னைப் பார்க்க வரமுடியுமா என்று கேட்டு சிட்டி கடிதம் எழுதினார்.
நான் கோவைக்குப் போய் அவரைப்பார்த்தேன்.
விஸ்வேஸ்வரம் : ராஜநாயஹம்! உங்களுக்கு எங்க அப்பா வயசு இருக்கும்னு சொல்லிண்டிருந்தேன்.உங்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணனும்னு நெனச்சிண்டிருந்தேன். இப்படி இவ்வளவு சின்ன வயசா வந்து நிக்கிறேளே!

…………………………………………………………………………..

அக்டோபர் 29, 2008

புதுவை தமிழ் துறையில் தி சானகிராமன்



அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக ( இரண்டாம் முறையாக ) ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன் . புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு ஆள் அனுப்பி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து என்னை வைத்து உடனே தி.ஜா வுக்காக ஒரு கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டார்.
. .அறவாணன் அப்போது தமிழ் துறை தலைவர்.
'தி.சானகி ராமன் கருத்தரங்கம் ' என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது .என் பெயர் ஆர்பி ராசநாயகம் ! கிரா (அப்போது புதுவை பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியர் )பெயர் கி 'ராச'நாராயணன் . விழாவுக்கு போனவுடன் இபா 'என்ன ராச நாயகம் , ராச நாராயணன்'என்று கிண்டல் செய்தார் . கிரா " நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன் !"என்று பட்டிகாட்டானாக மாறி இந்திரா பார்த்த சாரதியை பார்த்து சிரித்தார் . தி.ஜா படத்திலும்' தி சானகி ராமன்' என்று எழுதியிருந்தார்கள் .
பூனைக்கு யார் மணி கட்டுவது ? நான் எதற்கு இருக்கிறேன் ! பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன்! பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்று பலர் வேறு அந்த சபையில் .
நான் பேசும்போது இந்த தமிழ் வெறியை குறிப்பிடாமல் விடவில்லை.
I broke the ice!
" தமிழில் 'ஷ் , 'போன்ற வார்த்தைகள் இல்லை என்று சொல்வதை கேட்கும்போது நம்ம கன்னத்திலேயே இரண்டு கைகளாலும் அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.  இருக்கிற சிறகை பிய்த்து விட்டு தனி தமிழ் சிறகு ஒட்டவைப்பது அபத்தம்” - இப்படி தி ஜானகிராமன் சொல்வார். அவர் பெயரையே அவர் படத்திலும் அவர் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழில் அபத்தமாக ஆபாசமாக எழுதிவிட்டீர்கள் " என்று என் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தேன்.
அவ்வளவு தான் . தனித் தமிழ் வெறியர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். உடனே . .அறவாணன் மேடைக்கு வந்து மன்றாடினார் 'தயவு செய்து எல்லோரும் அமருங்கள் .உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் '
தமிழ் பேராசிரியர் அறிவு நம்பி ' தயவு செய்து ராசநாயகத்திடம் சானகிராமன் பற்றி மட்டும் கேளுங்கள். தனித்தமிழ் பற்றி தயவு செய்து கேட்கவேண்டாம் . உங்களை கையெடுத்து கும்பிட்டு மன்றாடி கேட்டுகொள்கிறேன் '
விழா முடிந்த பிறகு புதுவை தமிழ் துறைக்கு பல 'கன்னட' கடிதங்கள் அது என்ன அது ஆங் .. கண்டன கடிதங்கள் !
"தமிழ்த் துறை நடத்திய விழாவில் ஒருவன்  தமிழை பழிக்கிறான் . எங்கள் கையையும் வாயையும் கட்டிப்போட்டு விட்டீர்களே "
டெல்லியில் இருந்து திஜாவின் மகன் சாகேத ராமன் எனக்கு ஒரு கடிதம் நொந்து எழுதினார்.
"சாணி உலகம் ! இந்த சாணியில் 'சானகிராமன்'தான் நிற்க முடியும். "

………………………………………………………………………………………

செப்டம்பர் 8, 2008

என் கனவில் தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமனை நான் நேரில் பார்த்ததில்லை . ஆனால் இன்று கனவில் வந்தார் .இது வரை கனவில் கூட வந்ததே இல்லை .

அவரை பார்த்தவுடன் அழுகை வந்தது . என் வாழ்க்கையின் அதிர்ச்சிகள் சோகங்கள்  எல்லாவற்றையும் சொல்லி அழுதேன்.  காலம் கற்பித்த பாடத்தின் அடி தாள முடியாமல் தப்பித்து திருப்பூர் வந்ததை சொன்னேன். ‘ கேளுமையா கதை கேளுமையா வாழ பிறந்தோர் நிலை பாருமையா’  என்றும் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் என்று திருப்பூர் வந்த கதையை சொல்லி தேம்பி தேம்பி  அழுதேன்.
தொலைத்து விட்ட எல்லாவற்றையுமே  அவரிடம் வரிசைப்படுத்தி சொன்னேன்.  காயங்கள் ,அவமானங்கள் ,சிறுமை எல்லாவற்றையுமே சிறு குழந்தை போல விக்கி அழுதுகொண்டே .........
அவருடைய ' சத்தியமா ' கதையில் வருகிற மாசில்லா சிறுவன் நான் தான் , அந்த' பரதேசி வந்தான் ' கதையில் வருகிற பரதேசி யும் நான் தான் என்றேன் .

அந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை இருந்த போது பூஜை அறையில் பிள்ளையார்,முருகன் ,லிங்கம் , விஷ்ணு , ஆண்டாள்  படங்களுடன் தி.ஜா படத்தையும் வைத்து கும்பிட்ட கதையை சொன்னேன் . இதை சொன்னவுடன் மட்டும் வேதனையுடன் முகம் சுழித்து " ஏன் அப்படி செய்தீர்கள் " என்று பதறி வருத்தப்பட்டார் .

கனவு எப்போது முடிந்தது .
தெரியவில்லை .
கனவுக்கு அர்த்தம் என்ன ? கடவுளை தூக்கிபோட்டு விட்ட  என்னால் தி. ஜா படைப்புகளை புறம் தள்ள முடியவில்லை . தி.ஜா வும் என்னோடு இருக்கிறார் .
ஒரு நாள் என் கனவில் அந்த ரஷ்யனும் வருவான் . வெகு துயரங்களை அனுபவித்தவன் , கரமசாவ் சகோதரர்களை எழுதிய கலைஞன் . இது என் நம்பிக்கை . அவனிடமும் நான் தேம்பி தேம்பி அழுவேன்.

...................................................



http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_23.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html


Dec 13, 2008

ஏகாதசி தோசையும் இளைய குடியா மாகையும்

பழைய பழமொழிகளை கேட்கும்போது சில பழமொழிகள் புரியாது . இந்த பழமொழியை பாருங்கள் .
"ஏகாதசி தோசையும் இளையகுடியா மாகையும்"
கி ரா என்னிடம் சொன்னார் ! அவரே விளக்கம் சொன்னார் .
ருசி சம்பந்தப்பட்டது . முக்கியத்துவம் குறித்தது .
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முடியும்போது அந்த காலத்தில் தோசை சாப்பிடுவார்கள் . நல்ல பசியில் இருக்கும்போது சாப்பிடும் தோசை ருசி எப்படி இருக்கும் !!
இளைய குடியா - இரண்டாவது மனைவி , அபிமான தாரம் .
மாகை - மாய்கை
அபிமான தாரம் போடும் தலையணை மந்திரம் ,சொக்குபொடி - இதன் சக்தி ,சுவை , முக்கியத்துவம் ..
'என்ன மாயம் போட்டா .. இவன் ஆளே மாறிட்டானே '- கிழவிகள் முனுமுனுப்பு !
...
The other woman is always powerful!
..
ராதாகிருஷ்ணன் ன்னு தானே பெயர் வச்சுகிறான் . எவனாவது ருக்மிணி கிருஷ்ணன் நு பேர் வச்சிக்கிரானா ?
இந்திரா பார்த்தசாரதி என்னிடம் ஒரு முறை இப்படி கேட்டார் !
...........
ரெண்டாவது பொண்டாட்டி பேரை தான் முதல்ல சொல்ற வழக்கம் இங்கே .
முருகனோட ரெண்டு பொண்டாட்டிங்க " வள்ளி -தெய்வானை !"

Jul 7, 2008

லீலார்த்தம்


இந்திரா பார்த்தசாரதி தன் படைப்புகளில் பாரதி, கிருஷ்ணன், ராமாநுஜர், ஆண்டாள், மகாத்மா காந்தி, ஷேக்ஸ்பியர் அவ்வப்போது பேசுவதை நாம் காணமுடியும். ராமாநுஜர் பற்றி நாடகம் எழுதி ‘சரஸ்வதி சம்மான்' விருது கிடைத்ததை அறிவோம். இப்போது ‘கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஒரு நாவல் எழுதி வெளிவந்திருக்கிறது. கிருஷ்ணன் என்ற அரசியல்வாதியை, அவனுடைய லீலைகளை, லீலைகளின் அர்த்தபுஷ்டியை கிருஷ்ணனே ஜரா என்ற வேடனிடம் சொல்லி ஜரா என்ற அந்த வேடன் அந்த லீலார்த்தத்தை நாரதர் என்ற உலகின் Frist Ever journalist இடம் சொல்லி அதை வாய்மொழியாகச் சொல்வதாக ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவல் அமைந்திருக்கிறது. கிருஷ்ண லீலார்த்தம் எவ்வளவு கனமானதாக அடர்த்தியானதாக இப்போதும் சாசுவதத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை இயல்பாக இ.பா. சொல்லியிருக்கிற நாசூக்கு அவருடைய புத்திசாலித்தனமான எழுத்துக்கு அந்நியமான விஷயமில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் நான் புதுவையில் இந்திரா பார்த்தசாரதியுடன் இரண்டு வருடம் பழகிய நாட்களில் ஒரு முறை வி.என்.ஜானகி - ஜெயலலிதா அரசியல் போட்டியில் Power Monger ஆக ஜெயலலிதா விஸ்வரூபமெடுத்து ‘கட்சி' அவர் கைவசமாக ‘தொண்டர்கள்' காரணமான விஷயம் பற்றி பேச்சு வந்தது. அப்போது இ.பா. சொன்னார். ‘ நம்முடைய கலாச்சாரம்' அப்படி. யாராவது 'ருக்மணி கிருஷ்ணன்' என்று பெயர் வைக்கிறார்களா? ‘ராதா கிருஷ்ணன்' என்ற பெயர்தானே பிரபலம். யோசித்துப் பார்க்கும்போது சுவாரசியமாக இருந்தது. ஆமாம் முன்னாள் ஜனாதிபதி முதல் இன்னாள் ஆபீஸ்பாய் வரை ராதாகிருஷ்ணன் என்ற பெயர் அமைந்தவர்கள்தான் !. The other Woman is Always Powerful !!

ராதா என்ற அந்தப் பெண் கிருஷ்ணனுக்கு அத்தை முறை. இன்னொருவனின் மனைவி. கிருஷ்ணனை விட ஏழு வயது மூத்தவள். ஆனால் கிருஷ்ணனுக்கு ராதா மேல் தான் ப்ரீதியும் பிரேமையும் மிக அதிகம்.

அவனுடைய அவதாரம் பற்றி பேசப்படுகிற பாகவதம், பாரதம் என்று எந்தக் காவியத்திலும் கிருஷ்ணன் கதா நாயகன் இல்லை. அவன் அரசனாகவும் இல்லை. கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய எதிரி ஜரா சந்தனை கிருஷ்ணன் கொல்லவில்லை. பீமன் தான் கொல்கிறான். கிருஷ்ண லீலார்த்தம் ஒழுங்கமைவை சீர் குலைத்து விடுகிறது.

பிருந்தாவனப் பெண்களுக்கு கிருஷ்ணனால் கிடைக்கும் விடுதலையுணர்வு, ராதவுடனான Bridal Misticism இவற்றை உணரும்போது தான் கிருஷ்ண லீலார்த்தப் பரிமாணம் புரிகிறது. கிருஷ்ணன் இல்லாது போயிருந்தால் நம் இந்தியக் கலைகள், இசை, நடனம், காவியங்கள் யாவுமே உலர்ந்து போய் ஒரு ‘ Ennui ' கவிழ்ந்திருக்கும்.

வாழ்க்கை எனும் அலகிலா விளையாட்டின் அர்த்தத்தை கிருஷ்ணனின் முரண்பட்ட குணச்சித்திரத்தின் மூலம் நுட்பத்துடனும் ஒரு அலட்சிய பாவத்துடனும் இந்திரா பார்த்தசாரதியே பேசுவது போன்ற நடை. நாவல் ஒரு காவிய சம்பந்தப்பட்டது என்பதற்காக செயற்கை இறுக்கமாக உரை நடையை அவர் அமைக்கவில்லை என்பது வாசகனுக்கு ஆசுவாசம் தருகிறது. நாரதன் ‘ திரிலோக சஞ்சாரி. சகஜமாக Macbeth பற்றி பேசுகிறான். முனிவர்கள், ரிஷிகள் எப்போதுமே Kill - Joys தான் என்கிறான்.

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து பற்றி ஒரு ஜோக் இலக்கிய வட்டாரங்களில் உண்டு. ‘இ.பா.வின் நாவலை தமிழில் மொழிபெயர்க்க அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் ‘ என்று. ஓரளவு ஆங்கில பரிச்சயம். ஓரளவு என்ன நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்கள் இ.பாவை ரசிக்க முடியும். இந்த நாவலிலும் ஆங்கிலம் எந்த reservation னும் இன்றி இயல்பாக வந்து விழுகிறது. தனித்தமிழ் அன்பர்கள் திசைச்சொற்கள் அதிகமாகயிருப்பதால் முகம் சுளிக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை.

மு.கருணாநிதி சமீபத்தில் சென்ற 10.09.2004 முரசொலியில் கிருஷ்ணன், ராதா பற்றி எதிர்மறையாக உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் எழுதியிருந்த வேடிக்கை வினோதம் பற்றி இலக்கிய உலகம் அறியுமா என்று தெரியவில்லை.

‘கிருஷ்ணன் அடுத்தவன் மனைவி ராதாவுடன் உறவு கொண்டவன். பாஞ்சாலி ஐந்து பேருடன் படுத்தவள். கிருஷ்ணன், ராதா, பாஞ்சாலி ஒழுக்கமில்லாதவர்கள் - துரியோதனன் குடும்பம் கண்ணியமான குடும்பம். அவனுடைய மனைவி பானுமதி ஒரு பத்தினி என்றெல்லாம் கருணாநிதி உடன் பிறப்புக்கு கடிதமெழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதம் எனக்குப் படிக்க வாய்த்தபோது இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவலுக்கு எழுதப்பட்ட திராவிட இயக்க விமர்சனம் போல தோன்றியது கூட ஒரு Irony தான்.

துரியோதனனும் பீமனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். இன்னொரு சுவையான தகவல் இந்த நாவலில் தெரிய வருகிறது. இருவருக்கும் உள்ள ஒரு முக்கிய உறவு இருவரும் சகலைபாடிகளும்கூட. பானுமதியின் தங்கை ஜலந்தரா பீமனை மணக்கிறாள். கிருஷ்ணன் தான் இதற்கும் தூது போகிறான்.

கிருஷ்ணன் ஒரு சமுதாயக் கனவு என்பதை நிறுவிக் காட்டுவதில் இந்திரா பார்த்தசாரதிக்கு வெற்றி கிட்டியிருக்கிறது.

கிருஷ்ணன் தன் ஆத்ம அன்பன் பார்த்தனிடம் ‘ எனக்கு எட்டு மனைவியர் உண்டு. ஆனால் ஒரே ஒரு காதலி தான்' என்று அந்தரங்கமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறான்.

அப்படிப்பட்ட ஒரே காதலி ராதாவைத்தான் தன் அந்திமக் காலத்தில் சந்திக்க விரும்புகிறான். Classical Situation.

ராதாவின் குடிசைமுன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவளுடைய பேரப்பிள்ளைகள். ‘ராதா எங்கே' என்று அந்தச் சிறுவர்களிடம் கேட்கிறான். அவர்கள் ‘ராதாப் பாட்டியா ? ' என்று கிருஷ்ணனைக் கேட்கிறார்கள். இவனுடைய அழகு நளினம், குழல் நரைத்து தளர்ந்து கூனி கண்ணில் கைய குடையாக்கி இவனைப் பார்ப்பதை பார்க்கவேண்டுமா ? வேண்டாம். அங்கிருந்து கிளம்பி ஜரா என்ற வேடனை காண வருகிறான். ஜரா தான் கிருஷ்ணவதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறவன்.

Fate Proves Stronger than Misfortune !

விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ ?

‘ தந்திர பூமி' கஸ்தூரி. 'சுதந்திர பூமி' முகுந்தன் போன்றவர்களிடம் கூட கிருஷ்ணனின் சாயலைக் காண முடியும். இந்திரா பார்த்தசாரதியின் ‘மாயமான் வேட்டை' நாவலிலும் கிருஷ்ண லீலார்த்தம் விரவிக் கிடக்கும். அவருடைய ‘ ஒளரங்கசீப்' நாடகத்திலும் கூட. Krishna is a colorful, Multi - Dimensional Evergreen Charactor. He is not a Hero. But he is the dominating charactor.

நாம் அனுபவிக்கும் துயரங்கள் தாம் நம் மன வலிமையை நிர்ணயிக்கும் அளவுகோல். மனிதனுடைய பிரச்சினைகள் தீராதவை என்பதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் இருக்கிறது.

The Intray is never Finished

கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் – இந்திரா பார்த்தசாரதி.

புதுப்புனல் வழங்கும் பன்முகம் ஏப்ரல் – ஜூன் & ஜூலை – செப்டம்பர் 2005