Share

Showing posts with label ஞானக்கூத்தன். Show all posts
Showing posts with label ஞானக்கூத்தன். Show all posts

Sep 26, 2017

Classic Versatile


என்னுடைய ப்ளாக்கில் இது ஆயிரமாவது பதிவு

"என் நினைவில் பதிந்த முதல் மரம் பாதாம் மரம். நான் படித்த எலிமெண்டரி ஸ்கூலில் ஒரு வாதா மரம் இருந்தது. பாதாம் பருப்பு கிடைக்குமோன்னு உடைச்சி,உடைச்சி பார்ப்போம். பெரிசா ஒன்னும் இருக்காது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மரம்” இப்படி ந.முத்துசாமி என்னிடம் சொல்லியிருக்கிறார்.


ந.முத்துசாமி எலிமெண்டரி ஸ்கூல் சிறுவனாயிருக்கும் போது தர்மபுர ஆதீன தோட்டத்தில் ஒரு மாமரம். அந்த மரம் பற்றியும் சொல்லுவார். அந்த மரமாம்பழம் பாதிரி பழம். பறித்த பிறகு தோல் சுருங்கிக்கிட்டே இருக்கும். சிவப்பாய் இருக்கும். அழுகாது. ரொம்ப ருசியாய் இருக்கும்.


இப்போது நான் குடியேறியுள்ள ஆலப்பாக்கம் வீட்டின் ஃப்ரன்ச் விண்டோவை ஒட்டி ஒரு பாதாம் மரம். அணில்கள் அந்த வாதா மரத்தில் இருந்து பாதாம்பழம் பழுக்கு முன்னே துருவித்துருவி தின்னும் அழகை தினம் பார்க்கக்கிடைக்கிறது.

…………………………………..

1970களில் இலக்கிய அரசியல் காரசாரமாகவே இருந்திருக்கிறது.
ஒரு சாம்ப்பிள்

ஞானக்கூத்தன் : தூக்கிக்காட்டுறேன்..தெரியுதா பாரு

ந.முத்துசாமி: இவருக்கென்ன தங்கத்திலா தொங்குது?

………………………………………


’Neither – Nor’
 Said
 To ’Either – Or’
 From here
Where do we go?

- Nakulan's English poem in his small booklet of poems " Non - Being"

நகுலன் ஒரு சின்னஞ்சிறிய ஆங்கிலக்கவிதை இப்படி எழுதியிருக்கிறார். "What is right? What is left."

…………………

பல வருடங்களுக்கு முன் டி.வி. நிகழ்ச்சியில் கேள்வி.
”நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் ஒருவர் யார்?”

 நடிகர் சுரேஷ் பதில் : ”ஜான். என் முன்னாள் மனைவி அனிதாவின் இன்றைய கணவர். எனக்கும் அனிதாவுக்கும் பிறந்த குழந்தையை தன் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு வளர்ப்பதற்கு ஜான் எப்போதும் என் நன்றிக்குரியவர்.”

……………………………….





Dec 15, 2016

’மா பசி’ ம.பொ.சி


1950களில் ம.பொ.சியின் தமிழரசு கழகம், அண்ணாத்துரையின் தி.மு.க இரண்டு கட்சிக்குமே தங்கள் பொது எதிரியாக அறியப்படும் காங்கிரஸை விட பரஸ்பரம் ஒரு துவேசம் இருந்திருக்கிறது. 

1946ல் தமிழரசு கழகத்தை ஆரம்பித்த ம.பொ.சி 1954 வரை காங்கிரஸில் இருந்தவர் தான்.

தமிழரசு கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டுமே தமிழர் நலன் சார்ந்தே இயங்கியவை. இரண்டுமே சிறந்த மனிதர்களாக அடையாளம் கொண்டவர்களினால் சூழப்பட்டிருந்தன.
சிலம்புச்செல்வர் என்று ம.பொ.சிக்கு பேராசிரியர் ரா.பி.சேது பிள்ளை பட்டம் சூட்டினார்.
அறிஞர் என்று அண்ணாத்துரை கட்சிக்காரர்களால் கௌரவப் படுத்தப்பட்டார்கள்.
தமிழரசுக்கழகத்தில் கா.மு.ஷெரிப், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி போன்ற திரை ஆளுமைகள் (கவிஞர்கள்) மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
கவிஞர் கண்ணதாசன் தி.மு.கவில் சிக்கிக்கொண்டார்.
ஏ.பி. நாகராஜன் தமிழரசு கழக ஆதரவாளர்.

1951ல் முதல் தி.மு.க மாநாட்டிலேயே புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மேடையேறி விட்டார்.

நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத், மேதை மதியழகன்.

என்.வி நடராசனுக்கு எதுவும் பட்டம் இருந்ததாகத்தெரியவில்லை.

சிந்தனைச் சிற்பி சிற்றரசு.

ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரல்லாதவராயிருந்தாலும் இன்னொருவர்- (தக்ஷ்ணாமூர்த்தி!)- கலைஞர் மு. கருணாநிதி என்று அறியப்பட்டார்.

பேருக்கு ஆசிரியராய் இருந்த Tutor -
’பேராசிரியர்’ அன்பழகன்.
குட்டிப்பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி.
இப்படி கலர் கதாநாயகன்களால் தி.மு.க ஜொலித்தது.
தமிழரசுக்கழகத்தில் ஜிகினாத்தலைவர்கள் யாரும் இல்லை போலும்.
முக்கிய வேற்றுமை தமிழரசு கழகம் கடவுள் நம்பிக்கை கொண்ட இயக்கம்.
தி.மு.க தலைவர் அப்போதெல்லாம் ‘ஒருவனே தேவன்’ பிரகடனம் செய்திருக்கவில்லை. திருப்பதிக்கு சென்ற சிவாஜிகணேசன் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டு “ தம்பி! எங்கிருந்தாலும் வாழ்க!” என்று ஆசீர்வதிக்கப்பட்டார்.
மாணவர்களிடையே அன்று தி.மு.க., தமிழரசு கழகம் இரண்டின் ஈடுபாடு பாதிப்பு இருந்திருக்கிறது.

மாயவரம் முனிசிபல் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த ந.முத்துசாமி தி.மு.க. 

அவருடைய வகுப்புத்தோழர் கவிஞர் ஞானக்கூத்தன் தமிழரசு கழகம். 

இந்த அரசியல் சிறுவர்களான முத்துசாமியையும் ஞானக்கூத்தனையும் பிரித்திருக்கிறது. இருவரும் அந்த சின்ன வயதில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால் நட்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.

முத்துசாமி அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இண்டர்மீடியட் படிக்கும் போது (1955- 1957) சிதம்பரத்தில் ஒரு தி.மு.க மீட்டிங்.
அண்ணாத்துரையுடன் தம்பித்தலைவர்களும் மேடையில்!
தம்பித்தலைவர்கள்!
ம.பொ.சிக்கு எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்ற ’மாபசி’! – இப்படித்தான் அன்று கிண்டலாக குறிப்பிடும் வழக்கம்.
மதராஸ் மனதே என தெலுங்கர்கள் சொன்ன போது அதை எதிர்த்து சென்னை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார்.
திருவேங்கடத்தை தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் தான் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும்
செங்கோட்டை( நெல்லை)யும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

சிதம்பரம் தி.மு.க மேடையில் பேசிய தம்பித்தலைவர்கள் அனைவரும் ம.பொ.சியை கடுமையாக விமர்சித்து திட்டி பேசியிருந்திருக்கிறார்கள். கடைசியில் அண்ணா எழுந்திருக்கிறார். அவருடைய மேலான நல்ல விஷயங்கள் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு தம்பித்தலைவர்களைப்பார்த்து கேட்டிருக்கிறார்: ”இப்படிப்பட்ட நல்லவரை நீங்கள் தாக்குவது என்ன நியாயம்?”

உடனே அந்த மேடையிலேயே அத்தனை தம்பித்தலைவர்களும் தங்கள் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ’அண்ணா! மன்னித்துக்கொள்ளுங்கள். ம.பொ.சியின் அருமை புரியாமல் பேசி விட்டோம்.’
ந.முத்துசாமி கல்லூரி மாணவராயிருந்த போது சிதம்பரத்தில் நடந்த இந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்வு இன்றும் பசுமரத்தாணி போல அவர் மனதில் நிறைந்திருக்கிறது.
1967ல் காங்கிரசை தமிழகத்தில் எதிர்ப்பதில் தி.மு.கவுடன் ராஜாஜியின் சுதந்திரா கட்சி கூட்டு சேர்ந்த போது ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இணைந்து நின்றது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியின் ரசிகராக மாறினார். 
எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி.ஆர் அபிமானியாகி ம.பொ.சி தமிழக மேல் சபை தலைவராக இருந்தார்.
……………………………………..

Nov 30, 2016

முதலில் ‘ நடை’ அப்புறம் ’கசடதபற’


மனுஷ்யபுத்திரன் ’விகடன் தடம்’ அக்டோபர் இதழில்  "கவிதை பற்றிய பார்வைகள்" கட்டுரையில் ‘1970களில் வெளி வந்த ‘கசடதபற’ இதழ் நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அதன் வழியே உருவாகி வந்த கவிஞர்களில் முதன்மையானவர் ஞானக்கூத்தன்.’ என்று எழுதியிருப்பதால் ஒன்றை சுட்டிக்காட்டுகிறேன்.

எழுத்து பத்திரிக்கையில் பிரசுர வாய்ப்புக்காக ஞானக்கூத்தன் ஐந்து கவிதைகளை சி.சு.செல்லப்பாவிடம் கொடுத்திருந்தார். கவிதைகள் பிரசுரிக்கப்படவேயில்லை. கவிதைகளில் இலக்கணம் இருக்கிறதாக சி.சு.செல்லப்பாவின் அபிப்ராயம்.

சி.மணி, ந.முத்துசாமி முயற்சியில் ’நடை’ பத்திரிக்கை கோ.கிருஷ்ணசாமியை ஆசிரியராகக் கொண்டு 1968ல் துவக்கப்பட்டது.

சி.சு.செல்லப்பாவிடம் இருந்த ஞானக்கூத்தனின் ஐந்து கவிதைகளை ந.முத்துசாமி போய் வாங்கி வந்தார். 
மீட்கப்பட்ட(!) அந்த ஐந்து கவிதைகளும் ’நடை’ முதல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதனால் நவீன தமிழ் இலக்கிய உலகில் ஞானக்கூத்தனுக்கு பிள்ளையார் சுழி.

அதன் பிறகு தான் 1970ல் ’கசடதபற’ பத்திரிக்கையில் ஞானக்கூத்தன் கவிதைகள் பிரசுரமாயின.
’நடை’ தான் கசடதபற இதழுக்கு முன்னரே நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ’நடை’ மூலம் ஞானக்கூத்தன் உருவாகி வந்தார். கசடதபற பங்களிப்பை மறுக்கவில்லை.
..........................
ஒரு நல்ல ஜோக்

பேராசிரியர் செ. ரவீந்திரன் ஆரம்ப காலத்தில் தன் பெயரை ’இரவீந்திரன்’ என்று தான் எழுதி வந்துள்ளார்.
’இ’ரவீந்திரன்.
ஒரு அமெரிக்க பெண் தமிழ் கற்றுக்கொள்ள மதுரை யுனிவர்சிட்டிக்கு வந்தவள்
இவர் பெயரை ” இரவு இந்திரன்” என்று உச்சரித்திருக்கிறாள்! அப்புறம் தான் தன் பெயரில் உள்ள ’இ’ யை ’நீக்கல்’ செய்து விட்டார்.

Sep 4, 2016

சில மின்னல்கள் சிறு சிறு இடியுடன்


’கர் மண் யே வாதிகா ரஸ்தே
மா பலே ஷுக் தாசன’
இதற்கு அர்த்தம் எல்லோரும் அறிந்தது தான்! பிரபலமான வரிகள் - ”கடமையை செய். பலனைப் பற்றி நினைக்காதே.”
Do your duty. Do not look for the consequences.
நான்கைந்து நாட்களாக இதை நினைக்க வேண்டியிருந்தது.


”தெரிந்த சில நட்சத்திரங்களை விட
தெரியாத பல சூரியன்கள் இன்னும்
கொட்டிக் கிடக்கின்றன
யுகங்களின் மறைவில்.”
இந்த எஸ்.வைதீஸ்வரன் கவிதைக்கும் 

“ ஒற்றைக்காலில் நடக்குது சரித்திரம்
பார்க்க வாரும் சகத்தீரே” எனும் ஞானக்கூத்தனின் கவிதைக்கும் ஒரு சங்கிலித்தொடர்பு இருக்கிறது.
ஒற்றைக்காலில் நொண்டி நடக்கும் சரித்திரத்தின் Authenticityயில் நம்பிக்கையில்லாமல் தான் வண்டிச்சோடை நாடகத்தில் ந.முத்துசாமி சொல்கிறார்.

“ நிகழ் காலத்தைப் புரிஞ்சிக்க இறந்த காலத்தைப் புரிஞ்சிக்க வேண்டியது அவசியம்னு தோணுச்சு. நமக்கு எங்கே எழுதப்பட்ட வரலாறு இருக்கு? அதான் நேரே வரலாற்றுக் காலத்துக்குப் போக வேண்டியது அவசியமாச்சு.”
…………………………………………………………………

மாயவரம் முனிசிபல் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் காலத்திலேயே ந.முத்துசாமி தி.மு.கவிலும் ஞானக்கூத்தன் தமிழரசு கழகத்திலும் மிகுந்த பற்று கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த அரசியல் ஈடுபாடு காரணமாக ஒரு கருத்து வேறுபாடும் அதன் காரணமாக நெருக்கமின்றியும் இருந்திருக்கிறார்கள்.

தமிழரசு கழகம் ம.பொ.சி ஸ்தாபித்த கட்சி.
ம.பொ.சி கட்சியில் இருந்த பிரமுகர்கள் என்றால் கவி.கா.மு.ஷெரிப், ஏ.பி. நாகராஜன், சின்ன அண்ணாமலை ஆகியோர். ஞானக்கூத்தனும் தமிழரசு கழகத்தில் இருந்தவர் தான்.
ஞானக்கூத்தனின் உவமான வரி ஒன்று. ’வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்தது’. இப்படி ம.பொ.சி எனும் வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்துப்போன காலமும் உண்டு.

1970களில் ம.பொ.சிக்கு துக்ளக் பத்திரிக்கை கார்ட்டூன்களில் டவுசர் தான் மாட்டி விட்டிருப்பார். சின்னப்பையனாகத் தான் மீசை தொங்க துக்ளக் கார்ட்டூன்களில் தோற்றப்படுத்தப்பட்டிருந்தார். ம.பொ.சி அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு பெரிய ஜால்ராவாக இருந்ததால் இந்த நிலை. கருணாநிதிக்குப் பக்கத்தில் டவுசர் போட்டு கைகளை ஆட்டிக்கொண்டு, அவரை பரவசமாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு சந்தோஷமாக ஆடும் சிறுவனாக ம.பொ.சி நிற்பார்.சட்டையில்லாமல் வெறும் உடம்போடு டவுசர் போட்ட சிறுவனாய் சிலம்புச் செல்வர்! 
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் இவருக்கு டவுசர் தான்.
இது பற்றி ஒருவர் சோவிடம் கேட்ட கேள்வி “என்ன இப்படி செய்கிறீர்கள். ம.பொ.சி எவ்வளவு பெரியவர். அவருக்கு இப்படி டவுசர் மாட்டி சின்னப் பையனாக கார்ட்டூனில் சித்தரிப்பது நியாயந்தானா?”

சோ பதில்“ அவருக்கு வேட்டி கட்டி ப்ரமோஷன் கொடுக்க நானுந்தான் தவிக்கிறேன். ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் டவுசர் மாட்டி கார்ட்டூன் போடுமளவுக்குத்தான் இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்!”
ஹண்டே சுதந்திரா கட்சியில் இருந்தவர். இவர் ராஜாஜியின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் அதிமுகவில் சேர்ந்தார். அதன் பின் ஹண்டேக்கும் துக்ளக் கார்ட்டூனில் அப்போது டவுசர் தான்!

ஹண்டேயிடம் ஒரு ரோஷம் இருந்தது. எம்.ஜி.ஆர் அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் கையில் கட்சிக்கொடியை பச்சை குத்திக்கொள்ள வற்புறுத்திய போது நாஞ்சில் மனோகரன் கூட பச்சை குத்திக்கொண்டார். ஆனால் ஹண்டே மறுத்து விட்டு வெளியேறினார். ஆனால் 1977ல் பாராளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவில் மீண்டும் இணைந்து உற்சாகமாக பிரச்சாரம் செய்தார்.
1980ல் பாராளுமன்றத்தில் அதிமுக படுதோல்வியைத் தழுவிய நிலையில் சட்டசபை தேர்தலில் ஹண்டே அண்ணா நகரில் கருணாநிதியை எதிர்த்துப்போட்டியிட்டு கதி கலங்க வைத்தார். கருணாநிதி மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் ஜெயித்தார். ’கான முயலெய்த அம்பினும் யானை பிழைத்த வேல் அரிது’ என்ற நிலையில் ’வென்றிலன் என்ற போதும்’ ஹண்டேக்கு அமைச்சர் பதவி. அமைச்சர் பதவியேற்க கலைவாணர் அரங்கில் ஹண்டே எழுந்த போது மட்டும் மிக பலத்த கரகோஷம். எம்.ஜி.ஆர் வாய் நிறைய சிரிப்புடன் இதை ரசித்தார்.
……………………………………………………………….

Aug 29, 2016

காரணச் செறிவு


திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை!”

நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.
பாலகுமாரனின் கவிதைவரிகள் உடனே நிழலாடியது.
“ சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத்தெரியாக்குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையைக் கல்லென்று நினைக்க வேண்டாம்”
பாலகுமாரன் மிகவும் தளர்ந்து கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார்.எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்!
மிகவும் தளர்ந்து போய் இருந்த அவர் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை, தள்ளாடிய பாலகுமாரனை நான் அவர் கை பிடித்து நடத்தி மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.

ஞானக்கூத்தன் பத்து வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்தார். 

அன்று அவர் அங்கு சொன்னதை இந்த திருவல்லிக்கேணி இரங்கல் கூட்டத்தில் நான் நினைவு கூர்ந்தேன். “ராஜநாயஹம் கவிஞர் அல்ல. ஆனாலும் கவிஞர் ஞானக்கூத்தனின் மாணாக்கன் என்று சொல்லிக்கொள்ள முழு உரிமை இவருக்கு உண்டு!”
தமிழ் நாட்டில் ராஜநாயஹத்தைத் தவிர மற்றவர்கள் எல்லோரும், எல்லோருமே கவிஞர்கள் தானே!
………………………………….


கலாப்ரியாவால் இப்படி திகட்டவே திகட்டாத கவிதைகளை தொடர்ந்து எழுத முடிகிறது.
எவ்வளவு முறை நாதஸ்வர வாசிப்பு பார்க்கவும் கேட்கவும் கிடைக்கிறது.
எவ்வளவு முறை இரட்டை நாதஸ்வரக் கச்சேரி பார்த்திருக்கிறோம்.
’இசை மழையில் நனைவது’ கூட cliché தான். கவிஞனுக்குத் தானே அபூர்வ விஷயங்கள் கண்ணுக்குப் புலப்படுகிறது.
இனி நாதஸ்வரம், தவில் வாசிக்கக்கேட்கும்போதும் நாதஸ்வர வித்வான்களோ, தவில் வித்வான்களோ வியர்வை துடைத்துக்கொள்ளும்போதெல்லாம் கலாப்ரியாவின் இந்த கவிதை நினைவில் வரும்.
அந்த வியர்வையும், வியர்வை துடைக்கும் துண்டும்!
“ இரட்டை நாதஸ்வரம்
வாசிக்கிறார்கள்
ஒருவர் சற்றே நிறுத்த
மற்றொருவர் தொடர
துடைத்துக்கொள்கிறார்கள்
மாற்றி மாற்றி
அவை மட்டும் இசை
மழையில் தொடர்ந்து
நனைந்து கொண்டு”
இன்னொரு கலாப்ரியா கவிதை
“விதையின் ஒற்றைக்
கலவியை நாள் தோறும்
காற்றிடம் கிசுகிசுக்கிறது
ரகசியமாய் மரம்
வெட்கமின்றி அவற்றை
வானெங்கும் பிதற்றித் திரிகின்றன
ஒட்டுக்கேட்ட பறவைகள்”
…………………………….

Aug 8, 2016

எடுத்துக்கூறுவது



ஸ்பெயின் நாட்டில் 65 வயதிற்கு அதிகமானவர்கள் உடலுறவு கொள்வதில் தீவிரமாக உள்ளதாக ஒரு செய்தி. ஏன் இது எல்லா நாட்டிற்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கக்கூடாதா?

சந்தோஷம் என்பது ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறாக இருக்கும். குஷ்வந்த் சிங் 90 வயது வாக்கில் தெளிவாகச் சொன்னார்: ’குசு விடுவது தான் ஆகச்சிறந்த ஆனந்தம். நீண்ட, திருப்தியான குசு விடுகிற பாக்கியம்! I do not desire sex; instead I pray for a long, satisfying fart. Farting is one of the greatest joys of life. Farting now tops my list of life’s pleasures.’
Art is fart! இது ஒரு புறமிருக்க குஷ்வந்த்சிங்குக்கு Fart is art!


ஒரு விஷயத்தை தீர்மானமாகச் சொன்ன பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பினால் அதே விஷயத்தை தீர்மானமாக அப்படியே சொல்வது சிரமம். கடும் எதிர்ப்புக்கு மன்னிப்பு கேட்டாலும் கூட, தான் முன்னர் சொன்னதிலிருந்து மாறாமல் கருத்தை வெளியிட முடியுமா?

ஆங்கில நாடகாசிரியர் ஷெரிடன் இதனை கவனமாக செய்தார்.
நாடாளுமன்றத்தில் ஒருமுறை பேசிய போது ‘இந்த நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் பாதி பேர் கழுதைகள்’ என்றார்.
’நீ பேசியதை வாபஸ் வாங்கு,மன்னிப்பு கேள் ’ – கூச்சல்
ஷெரிடன் அமைதியாக “ மன்னிக்கவேண்டும். இந்த நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் பாதி பேர் கழுதைகள் அல்ல.”


லட்சுமி கல்யாணம் என்ற ஒரு படத்தில் சிவாஜி பாடல் “யாரடா மனிதன் இங்கே, கூட்டி வா அவனை இங்கே, இறைவன் படைப்பில் விலங்கு தான் மீதி இங்கே”
’நான் ஏன் பிறந்தேன்’ எம்.ஜி.ஆர் பாடலில் “ ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றானாம். மனிதன் எங்கே காணவில்லை. தேடுகிறேன் நான் என்றானாம்”


’ஏழையாய் இருந்தால் என்ன? ஏழைக்கு கிடைக்கிற சந்தோஷம் பணக்காரனுக்கு கிடைக்காது’ என்பதை நம்பவே கூடாது. ’Poor but happy’ is not a phrase invented by a poor person.
பெர்டோல்ட் ப்ரக்ட் அபிப்ராயப்படுகிறார்: ‘Poverty makes you wise, but it’s a curse.’
ஆமாம் Curse தான்.
Tragedy does make me more sensitive, but it also makes me more cautious.
“கடந்து போன நாட்களைப் பற்றி நினைத்துப் பார்க்க ஒவ்வொரு காலத்திலும் ஒரு தனிச்சின்னம் கிடைக்கிறது” – அசோகமித்திரனால் இப்படி தெளிவாக எழுத முடிகிறது.



பார்ப்பதை எழுதும் ஒரு கவிஞன். கற்பனையால் உருவகித்து எழுதும் கவிஞன்.

கீட்ஸ் வித்துவச் செருக்கோடு தன்னையும் பைரனையும் வகைப்படுத்துவது இப்படி – “You speak of Lord Byron and me!? There is this great differnce between us. He describes what he sees – I describe what I imagine – Mine is the hardest task.”



பெயர் சொல்லிக்கூப்பிட்டவுடன் வருகிற ஒரே பறவை காக்கா!
கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய கவிதை “அயர்ச்சியில் ஒரு காக்கை”

’கடலின் அலைகளுக்குக் கிட்டும் தொலைவில்
கிடந்தது ஒரு பெரிய மாட்டின் எலும்புக்கூடு
எலும்புக்கூட்டின் மேல் வந்தமர்ந்த
காக்கைக்குத் திகைப்பு
யார் தான் தின்றார்கள் முழுமாட்டை?’


கவிஞனைப் பற்றி ‘பல மரணஸ்தர்’ என்பார் ஞானக்கூத்தன்.
‘இரு முறை பிறப்பதாய் சொல்லப்படுகின்ற
அந்தணர் கூட ஒரு முறை தான் இறப்பார்.
ஆனால் கவிஞனோ பலமுறை இறக்கிறான்.
எல்லோரையும் போல ஒரு முறை. மற்றவர்
படிக்கப் படிக்கப் பலமுறை பலமுறை’


சமீபத்தில் மூன்று பதிவுகளில் ஞானக்கூத்தனின் கவிதைகளை குறிப்பிட நேர்ந்த போது அவரது மரணம் மிக, மிக சமீபத்தில் இருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை.
…………………………………….

Jul 23, 2016

தூறலாய் சாரல்


வேலைய சரியா செய்யாட்டி
“என்னய்யா திருப்பதி அம்பட்டயன் செரைச்ச மாதிரி”.
இது தேய்ந்த சொலவடை.
கி.ராஜநாராயணனுடன் போனில் ஒரு மணி நேரத்துக்கு மேல் உரையாடிக்கொண்டிருந்த போது இதற்கு மாற்றாக ஒன்று சொன்னார். மாற்றாக சொல்வதற்காக சொல்லவில்லை. அந்த நேர பேச்சில் சொல்ல வந்த ஏதோ ஒரு விஷயத்துக்கு பொருத்தி இதை சொன்னார்.
”ஊரான் பிள்ளைக்கு ஒரு பொம்பள குண்டி கழுவி விட்ட மாதிரி…” தன் பிள்ளைக்கு கழுவற மாதிரி ஊரான் பிள்ளை குண்டிய அவ சரியா, சுத்தமா கழுவி விட மாட்டா. 


……………………………………………

அகமெம்னான் நாடகம் மொழிபெயர்த்த ஜம்புநாதனுக்கு ஒரு ஓவியம் பெசண்ட் நகரில் பரிசளிக்கப்பட்டது. அந்த ஓவியத்தை வரைந்தவர் மு.நடேஷ்.
அதில் நடேஷ் ஒரு வாக்கியம் எழுதியிருந்தார்.
“சுவாதிகள் இல்லையடி பாப்பா”

நடேஷ் தன் ஓவியங்கள் பற்றி பேசும்போது சொன்ன விஷயம்: ”பிக்காஸோ தான் எனக்கு Reference point.ஆனா அவன் செஞ்சதுக்கு எதிரா தான் நான் செய்யறேன்!”

நடேஷ் சார்த்தரின் ”மீள முடியுமா” நாடகத்தில் நடிக்கும்போது
83 பக்க text ஐ நாலரை மணி நேரத்தில் மனப் பாடம் செய்தவர்!

இங்கே கூத்துப்பட்டறையில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி
பரத நாட்டிய மாணவிகளுக்கு வகுப்பு எடுக்கும் போது நடேஷ் சொன்ன வார்த்தை “தமிழனின் தலையெழுத்துக்கு அண்ணாத்துரையின் மூக்குப்பொடி தான் மூலம்!” 
தமிழ் மண்ணில் திராவிட இயக்க அரசியல் தாக்கம் பற்றிய ரத்தினச் சுருக்க Sarcasm!
………………………………………………………………………

சில விளம்பரங்கள் எப்போதும் மறக்க முடியாதவையாய் மனதில் நிலைத்து விடும்.
ரொம்ப வருடங்களுக்கு முன் ரொம்ப funny ஆக ஒரு விளம்பரம்.
ஒரு கௌபாய் டைப் பாரில் பலர் குடித்துக்கொண்டிருப்பார்கள். Chubby ஆக தலையில் தொப்பி போட்ட ஒருவனை கிண்டலாக மற்ற குடிகாரர்கள் கவனிப்பார்கள். அந்த குண்டு ஆள் “ இந்த ஸ்ட்ராங்க் பீர் மஹாவீருக்கு எந்த சரக்கும் சர்பத் தான்டா!” என்று ஒரு ’மக்’கில் உள்ளதை கட,கட,மட,மடவென்று குடித்து விட்டு ஃப்ளாட் ஆகி விடுவான்.

மூன்று நான்கு வருடங்கள் முன் டி.வியில் அடிக்கடி காட்டப்பட்ட விளம்பரம்.
சிக்னல் நிறுத்தத்தில் ஒரு கார். பக்கத்தில் வியர்த்து விறுவிறுத்து ஒரு பள்ளிச்சிறுவன் சைக்கிளில் வந்து நிற்பான். காரில் உள்ளவர் பையனைப் பார்த்து முகம் சுளிப்பார். சிறுவன் தன் அழுக்கான ஆடையை அவசரமாய் திருத்தி, கழுத்து டையை ஒழுங்கு செய்து கொள்வான். புறப்பட பச்சை சிக்னல் விழும்போது பையன் சைக்கிளை அழுத்திக்கொண்டே காரில் உள்ள பணக்காரரைப் பார்த்து சொல்வான்
”ரெண்டு சக்கரம் தான் வித்தியாசம் அங்க்கிள். ஒரு நாள் அதுவும் வந்திடும்.”

நகைக் கடை விளம்பரங்கள் எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை.அப்படியிருந்தும் ஒரு விளம்பரம் கொஞ்ச நாட்களுக்கு முன் நெகிழ்த்தியது.
தன் அம்மாவுக்கு நகைகள் வாங்கித்தருகிறாள் ஒரு யுவதி. நகைக்கடையில் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டு அம்மா அழுகிறாள்.
”அசடாட்டம் அழாதம்மான்னு நான் சொன்னப்ப ‘ம்..ம்..ம்…’னு தலையை ஆட்டிக்கிட்டே அம்மா என் கண்ண துடைச்சி விட்டா…”
……………………………………………………..


மணிகள் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன்
’சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை’
இந்த மணிகள் கவிதைக்கு என்றில்லை, உரைநடைக்கு மட்டுமில்லை
இன்னும் பலவற்றுக்குமான இலக்கணம் தான்.
…………………………..
photos
1.M.Natesh
2. Ki.Rajanarayanan with Kamal
3.Gnanakoothan
4.R.P.Rajanayahem
..........................................