Share

Sep 4, 2016

சில மின்னல்கள் சிறு சிறு இடியுடன்


’கர் மண் யே வாதிகா ரஸ்தே
மா பலே ஷுக் தாசன’
இதற்கு அர்த்தம் எல்லோரும் அறிந்தது தான்! பிரபலமான வரிகள் - ”கடமையை செய். பலனைப் பற்றி நினைக்காதே.”
Do your duty. Do not look for the consequences.
நான்கைந்து நாட்களாக இதை நினைக்க வேண்டியிருந்தது.


”தெரிந்த சில நட்சத்திரங்களை விட
தெரியாத பல சூரியன்கள் இன்னும்
கொட்டிக் கிடக்கின்றன
யுகங்களின் மறைவில்.”
இந்த எஸ்.வைதீஸ்வரன் கவிதைக்கும் 

“ ஒற்றைக்காலில் நடக்குது சரித்திரம்
பார்க்க வாரும் சகத்தீரே” எனும் ஞானக்கூத்தனின் கவிதைக்கும் ஒரு சங்கிலித்தொடர்பு இருக்கிறது.
ஒற்றைக்காலில் நொண்டி நடக்கும் சரித்திரத்தின் Authenticityயில் நம்பிக்கையில்லாமல் தான் வண்டிச்சோடை நாடகத்தில் ந.முத்துசாமி சொல்கிறார்.

“ நிகழ் காலத்தைப் புரிஞ்சிக்க இறந்த காலத்தைப் புரிஞ்சிக்க வேண்டியது அவசியம்னு தோணுச்சு. நமக்கு எங்கே எழுதப்பட்ட வரலாறு இருக்கு? அதான் நேரே வரலாற்றுக் காலத்துக்குப் போக வேண்டியது அவசியமாச்சு.”
…………………………………………………………………

மாயவரம் முனிசிபல் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் காலத்திலேயே ந.முத்துசாமி தி.மு.கவிலும் ஞானக்கூத்தன் தமிழரசு கழகத்திலும் மிகுந்த பற்று கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த அரசியல் ஈடுபாடு காரணமாக ஒரு கருத்து வேறுபாடும் அதன் காரணமாக நெருக்கமின்றியும் இருந்திருக்கிறார்கள்.

தமிழரசு கழகம் ம.பொ.சி ஸ்தாபித்த கட்சி.
ம.பொ.சி கட்சியில் இருந்த பிரமுகர்கள் என்றால் கவி.கா.மு.ஷெரிப், ஏ.பி. நாகராஜன், சின்ன அண்ணாமலை ஆகியோர். ஞானக்கூத்தனும் தமிழரசு கழகத்தில் இருந்தவர் தான்.
ஞானக்கூத்தனின் உவமான வரி ஒன்று. ’வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்தது’. இப்படி ம.பொ.சி எனும் வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்துப்போன காலமும் உண்டு.

1970களில் ம.பொ.சிக்கு துக்ளக் பத்திரிக்கை கார்ட்டூன்களில் டவுசர் தான் மாட்டி விட்டிருப்பார். சின்னப்பையனாகத் தான் மீசை தொங்க துக்ளக் கார்ட்டூன்களில் தோற்றப்படுத்தப்பட்டிருந்தார். ம.பொ.சி அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு பெரிய ஜால்ராவாக இருந்ததால் இந்த நிலை. கருணாநிதிக்குப் பக்கத்தில் டவுசர் போட்டு கைகளை ஆட்டிக்கொண்டு, அவரை பரவசமாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு சந்தோஷமாக ஆடும் சிறுவனாக ம.பொ.சி நிற்பார்.சட்டையில்லாமல் வெறும் உடம்போடு டவுசர் போட்ட சிறுவனாய் சிலம்புச் செல்வர்! 
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் இவருக்கு டவுசர் தான்.
இது பற்றி ஒருவர் சோவிடம் கேட்ட கேள்வி “என்ன இப்படி செய்கிறீர்கள். ம.பொ.சி எவ்வளவு பெரியவர். அவருக்கு இப்படி டவுசர் மாட்டி சின்னப் பையனாக கார்ட்டூனில் சித்தரிப்பது நியாயந்தானா?”

சோ பதில்“ அவருக்கு வேட்டி கட்டி ப்ரமோஷன் கொடுக்க நானுந்தான் தவிக்கிறேன். ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் டவுசர் மாட்டி கார்ட்டூன் போடுமளவுக்குத்தான் இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்!”
ஹண்டே சுதந்திரா கட்சியில் இருந்தவர். இவர் ராஜாஜியின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் அதிமுகவில் சேர்ந்தார். அதன் பின் ஹண்டேக்கும் துக்ளக் கார்ட்டூனில் அப்போது டவுசர் தான்!

ஹண்டேயிடம் ஒரு ரோஷம் இருந்தது. எம்.ஜி.ஆர் அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் கையில் கட்சிக்கொடியை பச்சை குத்திக்கொள்ள வற்புறுத்திய போது நாஞ்சில் மனோகரன் கூட பச்சை குத்திக்கொண்டார். ஆனால் ஹண்டே மறுத்து விட்டு வெளியேறினார். ஆனால் 1977ல் பாராளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவில் மீண்டும் இணைந்து உற்சாகமாக பிரச்சாரம் செய்தார்.
1980ல் பாராளுமன்றத்தில் அதிமுக படுதோல்வியைத் தழுவிய நிலையில் சட்டசபை தேர்தலில் ஹண்டே அண்ணா நகரில் கருணாநிதியை எதிர்த்துப்போட்டியிட்டு கதி கலங்க வைத்தார். கருணாநிதி மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் ஜெயித்தார். ’கான முயலெய்த அம்பினும் யானை பிழைத்த வேல் அரிது’ என்ற நிலையில் ’வென்றிலன் என்ற போதும்’ ஹண்டேக்கு அமைச்சர் பதவி. அமைச்சர் பதவியேற்க கலைவாணர் அரங்கில் ஹண்டே எழுந்த போது மட்டும் மிக பலத்த கரகோஷம். எம்.ஜி.ஆர் வாய் நிறைய சிரிப்புடன் இதை ரசித்தார்.
……………………………………………………………….

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.