Share

Showing posts with label அசோகமித்திரன். Show all posts
Showing posts with label அசோகமித்திரன். Show all posts

Sep 21, 2020

செருகளத்தூர் சாமா

 செருகளத்தூர் சாமா 


தஞ்சை மாவட்ட கிராமம் செருகளத்தூர். 


சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் 

ஒரு ரெண்டு மாதம் குமாஸ்தா. 

அதன் பின் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் குமாஸ்தா. 


இவருக்கு மூன்று பெண் புத்திரங்கள். 


இந்த செக்கு மாட்டு குமாஸ்தா வேலையில் இருந்து விடுபட்டு 

தமிழ் திரையுலகில் 1930களில் நுழைகிற வாய்ப்பு. 


சாஸ்த்ரீய சங்கீத ஞானமிக்கவர். 


முதல் படத்தில் நாரதராக நடித்தார். 

கிருஷ்ணர் வேடத்தில் மூன்று படங்கள். 


1937ல் சிந்தாமணியில் கிருஷ்ணராக

 இவர் பாடினார். 


அம்பிகாபதியில் கம்பராக 

செருகளத்தூர் சாமா. 


அப்புறம் மூன்று படங்கள் தானே தயாரித்து இயக்கி, முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். 

ஷேக்ஸ்பியர் மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ் 

'ஷைலக்' 1940ல்


'சுபத்ரா அர்ஜுனா' 1941 


' ராஜ சூயம்' 1942 


சொந்தமாய் தயாரித்த படங்கள் கை கொடுக்கவில்லை. 


1942ல் நந்தனாராக நடித்த தண்டபாணி தேசிகருக்கு இணையான கதாபாத்திரத்தில் வேதியராக சாமா நடித்தார். 

மயிலாப்பூர் ரமணி 

 ஒரு காட்சியில் பரம சிவனாக தலை காட்டினார். மயிலாப்பூர் ரமணி யார் தெரியுமா? நடிகர் ரஞ்சன். கொத்தமங்கலம் சுப்பு, அவர் துணைவி சுந்தரி பாய் கூட நந்தனார் படத்தில் நடித்திருந்தார்கள். 


ஜெமினி வாசன் தயாரித்த இந்த படத்தில் 

நந்தன் சரித்திரத்தை திரைக்கு எழுதியவர் மணிக்கொடி எழுத்தாளர் கி. ராமச்சந்திரன். 

A. K. ராமச்சந்திரன் என்ற கி. ரா.


தாடியோடு படங்களில் சாமா வர ஆரம்பித்தார். 


செருகளத்தூர் சாமா தாடி பிரபலம். 


தியாக ராஜ பாகவதரின் சிவ கவியில் நடித்துள்ளார். 


பின்னால் ஏழை படும் பாடு, 


எம். ஜி.ஆரின் மர்ம யோகியில் இவர் யோகி. 


மாயா பஜார் 


1962 ல் பட்டினத்தாராக பின்னணி பாடகர் 

டி. எம். எஸ் நடித்த படத்திலும் செருகளத்தூர் சாமா 

நடித்தார். 


இவருடைய மரணம் பற்றி தெரியவில்லை. 


அசோகமித்திரனின் சிறுகதை 'சுண்டல்'. 


அதில் மூன்று பாத்திரங்கள். 


பெருங்களத்தூர் சம்பு, 

நீலகண்டன், 

நாதன். 


மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ் 

'ஷைலக்' என்பதை அசோகமித்திரன் 

'கிங்லியர்' ஆக மாற்றி புனைந்திருக்கிறார். 


"நீ சினிமாக் காரன். தாடியை உருவிண்டு வந்தா ஊரே உன் பின்னால் வரும் "


அன்றைய திரையுலகம் பற்றிய

 ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் 'சுண்டல்' 

சிறுகதை. 


உதவிக் கரம் நீட்டும் நாதனால் காணக்கிடைக்கும் லாப பணம். 


இன்றைக்கும், புதிய அமைப்பிலும் 

சினிமாவுலகில் நடக்க கூடிய,

 நடக்கிற சாத்தியப்பாடு உண்டு. 


'கிங்லியர் திரைப்பட உலகில் மிகக் குறைந்த இடங்களில் - மிகக் குறைந்த காட்சிகள் காட்டப்பட்ட படங்களில் ஒரு சிறப்பிடம் சம்பாதித்துக் கொண்டது. ' என்ற வரிகளையடுத்து விரிகிற 

நீலகண்டன், சம்பு, நாதன் மூவரின் 

பிந்தைய வாழ்க்கை காட்சி விவரங்கள். 


நான் இந்த கதையை மட்டுமே 

ஒரு பத்து தடவை படித்திருக்கிறேன். 

ஈர்ப்பான சிறுகதை. 

நாவலாக எழுத வேண்டிய

 கரு, களம். 


குமாஸ்தா வேலை பார்த்தவரை பள்ளிக்கூட தலைமையாசிரியராக மாற்றி புனைந்திருப்பார் படைப்பாளி அசோகமித்திரன். 


'எல்லாமே கதைகள். அதே நேரத்தில் உண்மையைச் சாராம்சமாகக் கொண்டவை.'

என்பார் அசோகமித்திரன்.

Dec 24, 2019

Tiger Fight

ப்ரகதீஷ் ரவிச்சந்திரன் இந்த குறும்படத்தை கவனப்படுத்தினார்.
இந்த படத்தின் உதவி இயக்குநர்.
வசனமும் அவர் கை வண்ணம்.
ஆயூஷ்மான் பவ.

மார்ட்டின் ரெப்கா என்ற ஜெர்மானிய இயக்குநர்.
Superb presentation.
நாசர் இந்த குறும்படத்தில் பிரதான பாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார்.
கூத்துப்பட்டறை புரிசை பழனி,
அருண்மொழி துணை கதாபாத்திரங்கள்.
அசிஸ்டெண்ட் டைரக்டர் கதா பாத்திரத்தின் வசனங்கள் கூட ரசிக்கும்படியாக
ப்ரகதீஷ் எழுதியிருக்கிறார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட குறும்படம்.
அசோகமித்திரனின் பிரபலமான 'புலிக்கலைஞன்' சிறுகதை தான் படமாக்கப்பட்டிருக்கிறது.
அப்படியே கதையை ஈயடிச்சான் காப்பியாக வடிக்கவில்லை.
குறும்படத்தில் நிறைய மாற்றம்.
இப்படி செய்திருப்பது எந்த வருத்தத்தையும் தரவில்லை.
நிறைவாய் தெரிகிறது.
அசோகமித்திரனுக்கு கூட இந்த குறும்படம் சந்தோஷம் அளித்திருக்கும்.
.........

Oct 12, 2019

அசோகமித்திரனின் 'பாண்டி பஜார் பீடா'




சித்தூர் வி. நாகையா,
சி. எஸ். ஆர் என்ற சிலகலபுடி சீதாராம ஆஞ்சநேயலு இருவரை வைத்து அசோகமித்திரன் ஒரு சிறுகதை ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார்.
'பாண்டி பஜார் பீடா. ' நாகையா இன்று சிலையாக நிற்கிற பனகல் பார்க் அருகிலுள்ள பாண்டி பஜார் தான் கதைக்களம்.

சி. எஸ். ஆர். பாதாள பைரவியில் மகாராஜாவாக நடித்தவர்.

கதையில் நாகையா வெங்கையாவாக. சி. எஸ். ஆர் அதே பெயரில்.
அப்பொழுதுதான்
இருவருக்குமே அசதியான காலம்.


நாகையா பீடா வாங்க வரும்போதே பீடா கடை கோபால கிருஷ்ணா' முதல் போணியாகட்டும் '.
அர்த்தம் - கடனுக்கு முதல் பீடா தரமுடியாது.

நாகையா காசு கொடுத்தே முதல் போணி செய்து விட்டு மீதி காசை வாங்க மறுத்து நாளைக்கு பீடா வுக்கு அவனிடமே இருக்கட்டும்.

கீதா கபே முன் நிற்கிறார்.

அந்த எட்டணா இருந்தால் டிபன் காபி சாப்பிட்ட பிறகு பீடா போட்டிருக்க முடியும். பீடாக்கடைக்காரனிடம் ரோஷப்பட்டதன் விளைவு.

பழைய கார் ஒன்றில் சி. எஸ். ஆர் வருகிறார்.

டிரைவர் தன்னை ரிலீவ் பண்ணச்சொல்லி எரிச்சல் படுகிறான். சி. எஸ். ஆர் காபி சாப்பிட்ட பின் வீட்டில் அவரையும் காரையும் வீட்டில் விட்ட பிறகு தான் அவன் கிளம்ப முடியலாம். கவனிக்க டிரைவருக்கு காபி கிடையாது.

நாகையா கீதா கபேக்குள் சி. எஸ். ஆர் தயவில்.
'சி. எஸ். ஆர் எங்கிட்ட ஒரு காசு கிடையாது. '
' பயப்படாதே. நான் பாத்துக்கிறேன் '

ரெண்டு பிளேட் இட்லி சாம்பார்.

' ஜீவிதம் ' தெலுங்கு படத்தில் நல்ல பேரும் பிரபலமும் பார்த்த சி. எஸ். ஆர் என்பது நாகையாவிற்கு ஞாபகம் வருகிறது.

வருத்தப்படுகிறார். பணம் வந்த போது, ஏன் ஜாக்கிரதையா இல்லை. நானாவது மூன்று படங்கள் எடுத்து வசதியை தொலைத்தேன். சி. எஸ். ஆர்., அவனாக ஒரு படம் கூட எடுக்கவில்லை.

இட்லிக்கு பிறகு ஒரே ஒரு கப் காபியை இருவரும் பகிர்ந்து குடிக்கிறார்கள். பில்லுக்கு சி. எஸ். ஆர் பணம் கொடுக்கிறார்.

'உங்களை வீட்டுல விட்டுட்டு போறேன். '

நாகையா பதில்' இங்கே நிக்கிறேன். எவனாவது கர்ணன் மாதிரி வருவான். '

சி. எஸ். ஆர் போன பின் நாகையா கொஞ்சம் நடந்து சலூன் பக்கம் வருகிறார்.

ஒரு இளைஞன் இவர் பாதங்களை தொட்டு வணங்குகிறான்.

சவுண்ட் அசிஸ்டெண்ட். சித்தூர் தான் அவனுக்கும்.
அமெரிக்கா வரை நாகையா பிரபலம் பற்றி சவுண்ட் எஞ்சினியர் அவனிடம் சொன்னதை குறிப்பிடுகிறான். பால் முனி கூட இவர் பாட்டை கேட்டு உருகியிருக்கிறார்.

நாகையா உடைந்து போய் சொல்வது " இந்த மாதிரி பேச்செல்லாம் நான் நிறைய கேட்டிருக்கேன். இதுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது."

இளைஞனுடைய அம்மாவுக்கு இவர் தான் யோகி வேமனா.

சித்தூருக்கு எங்க சவுண்ட் இஞ்சினியர் கார்லயே போவோம். என் அம்மா, அப்பா உங்கள பாத்தா சந்தோஷப்படுவாங்க.

அந்த சவுண்ட் அசிஸ்டெண்ட் தான் அன்று அவருடைய பால் கடனை தீர்க்கிறான்.

.........

புகைப்படத்தில் இரண்டாவதாக நாகையா நிற்கிறார். அதே வரிசையில் ஆறாவதாக நிற்கிற நடிகர்
சி. எஸ். ஆர்.
இந்த புகைப்படம் 1940களில் எடுக்கப்பட்டிருக்கிறது.


கால கண்ணாடியில் ஒரு அபூர்வ காட்சி.
எவ்வளவு கலைஞர்கள்.
தில்லானா மோகனாம்பாள் எழுதிய கொத்தமங்கலம் சுப்பு, வி. நாகையா,
ஆறாவதாக
சி. எஸ். ஆர்.
தண்டபாணி தேசிகர் அருகே கே. ஆர். ராமசாமி, ரஞ்சன், டி. ஆர். ராமச்சந்திரன்,
கடைசியில் நிற்பவர் டைரக்டர் கே. சுப்ரமணியம். (பத்மா சுப்பிரமணியம் அப்பா)
உட்கார்ந்து இருக்கும் பெண்கள் புஷ்ப வல்லி(ஜெமினி மனைவி, ரேகா அம்மா), பாதாள பைரவி கதாநாயகி மாலதி
நடுவில்
டி. ஆர். ராஜகுமாரி, சாந்தகுமாரி, பி. பானுமதி,
கீழே சுந்தரிபாய் கொத்தமங்கலம் மனைவி.
........
இந்த புகைப்படம் எனக்கு அனுப்பி பிரமிக்க வைத்தவர் சித்ரா சம்பத். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கிருஷ்ணன் நம்பியின் தம்பி வெங்கடாசலம் கூட என் கவனத்துக்கு கொண்டு வந்தார்.





Jul 30, 2019

மணிக்கொடியில் ஒரு முஸ்லிம் எழுத்தாளர் ‘ம ஆலி சாஹிப்’


வரப்பு குறும்பூ பற்றி தி.ஜா அடிக்கடி கவனப்படுத்துவார்.

சிறுத்து,மலர்ந்து கிடக்கிற நீல, வெள்ளை மற்றும் மஞ்சள் என்று விதவிதமான பூக்கள். அவை என்ன நேர்த்தியாக, ஒரு ஒழுங்குடன் அமைந்திருக்கின்றன. அவற்றை யாரும் கவனிப்பதில்லை. பெண்கள் தலைக்கு வைத்துக்கொள்வதில்லை. பூஜையிலும் அவை இடம் பெறுவதில்லை. யாரையும் நின்று பார்க்க வைக்காத, யார் கண்ணையுமே உறுத்தாத இந்த குறும்பூக்களின் சௌந்தர்யம்.
ம ஆலி சாஹிப் என்ற எழுத்தாளர் பற்றி கேள்விப்பட்டிருக்க முடியுமா? ஒரு முஸ்லிம். புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, மௌனி, சி.சு.செல்லப்பா, ந,சிதம்பர சுப்ரமண்யம், கி.ராமச்சந்திரன், சிட்டியெல்லாம் எழுதிய மணிக்கொடியில் கூட ம ஆலி சாஹிப் ஒரு கதை எழுதியுள்ளாராம். அசோகமித்திரன் இவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அசோகமித்திரன் தன் எட்டு, ஒன்பது வயதில் ஆனந்த விகடனில் இவர் கதையொன்றை படித்திருக்கிறார். அவரை மிகவும் சங்கடப்படுத்திய கதை.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நோயாளியாக படுக்கையில் இருக்கும் தன் தகப்பனை ஒரு சிறுமி பொறுப்பாக கவனித்துக்கொள்கிறாள். வேளாவேளைக்கு உணவு கொடுத்து அன்போடு பாதுகாக்கிறாள். அந்த வீட்டில் அந்த குடிகார நோயாளி தகப்பனும் அந்த மகளும் தான் இருக்கிறார்கள். அவன் முற்றிய வியாதியால் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். பாவம் பிணம் எனத் தெரியாமல் அந்த குழந்தை அதற்கு உணவளிக்க முயற்சி செய்கிறாள். தகப்பனும் சிறுமியும் முஸ்லிம். கதையை எழுதியவர் கூட முஸ்லிம். ம ஆலி சாஹிப் தான் அவர்.
ஜெமினி ஸ்டுடியோவில் பின்னால் இவர் கதை இலாகாவில் வேலை பார்த்திருக்கிறார். அங்கே, வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அசோகமித்திரன் இந்த ம ஆலி சாஹிப்பை சந்திக்க வாய்த்திருக்கிறது.
மணிக்கொடி கி.ராமச்சந்திரனும் கூட ஜெமினி கதை இலாகாவில் வேலை பார்த்தவர் தானே.

அசோகமித்திரன் கதைகளில் வருகிற கோஹினூர் கட்டடம் மறக்கவே முடியாதது. இவருடைய மேஜையிருந்த அதே கட்டடத்தில் தான் அந்த முஸ்லிம் எழுத்தாளருக்கும் மேஜை ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் நான்கைந்து நாட்கள் ஜெமினி வாசன் தன் கதை இலாகாவினருடன் கலந்து உரையாடுவார்.ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட ஒரு அறை அது. கதை இலாகாவில் இருந்த ம ஆலி சாஹிப் உட்பட எல்லோரும் உரத்து பேசுவார்கள். வெற்றிலை பாக்கு, புகையிலை போடுவார்கள். டிபன் சாப்பிடுவார்கள். நண்பர்கள் விவாதம் நடத்துவது போல தோற்றம் தர இருப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோ சிக்கன நடவடிக்கையின் போது கதை இலாகா கலைந்து போகும்படியாயிருந்திருக்கிறது.
மாதச்சம்பளம் இனி இல்லாமல்  என்ன செய்ய முடியும், எங்க போவேன், என்ன செய்வேன் என்ற கவலையோடு     ம ஆலி சாஹிப் தன் மேஜையை காலி செய்யும்போது அசோகமித்திரன் அங்கே இருந்திருக்கிறார்.
வெளியே போன பின்னாலும் அந்த மணிக்கொடி எழுத்தாளர் எந்த வேலையிலும் பொருந்தக்கூடியவராய் இல்லையே என்ற துயரம் அசோகமித்திரனை ஆக்கிரமித்திருக்கிறது.
பொதுவாகவே ஜெமினி ஸ்டுடியோவில் சில வருடங்கள் யார் வேலை பார்த்தாலும் வெளி இடங்களில் வேலை பார்க்க தகுதியில்லாத அளவுக்கு அந்த நிறுவனம் அவர்களை மாற்றி விடும் என்று ஒரு சூழல் இருந்திருக்கிறது.

May 27, 2019

தி.ஜாவின் ”தீர்மானம்”


சென்ற வாரம் கூத்துப்பட்டறையில் தினமும் ஒரு சிறுகதை தேர்ந்தெடுத்து உரக்க வாசித்து விரிவாக பேசினேன்.
தி.ஜானகிராமனின் ’தவம்’, ’பரதேசி வந்தான்’, ’தீர்மானம்’ அசோகமித்திரனின் ‘காந்தி’, ’கடன்’.
அடர்த்தியான கதைகள்.

தி.ஜானகிராமனைப்பற்றி, 

அசோகமித்திரனைப்பற்றி

நிறைய சொன்னேன்.

தி.ஜானகிராமனையும் அசோகமித்திரனையும் தான் எத்தனை முறை மறு வாசிப்பு செய்திருக்கிறேன். பிரமிப்பு விலகாத விசேஷமான அனுபவமாகவே ஒவ்வொரு முறையும்.
தி.ஜா ’தீர்மானம்’ கதையை வெள்ளிக்கிழமை வாசித்தேன்.
நான் கண் கலங்குவது, அழுவது எல்லாம் தனிமையில் தான்.
Sorrows find relaxation in solitude. Every man has his secret sorrows.
மற்றவர்கள் முன் இளகி கலங்குவதில்லை.
தீர்மானம் கதையை வாசிக்கும் போது அடக்க முடியாமல் விம்மினேன். கண்ணில் இருந்து நீர் வடிந்து விடாமல் இருக்க கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன். தொண்டை தழதழக்க மேலே வாசிக்க முடியாமல் நிறுத்தினேன்.

Charles Dickens, in his novel Great Expectation says
“We need never be ashamed of our tears.”

Shakespeare in Julius Ceasar “If you have tears, prepare to shed them now.
பத்து வயது விசாலம் எனும் சிறுமி தான் எப்பேர்ப்பட்டவள். தாயில்லா பிள்ளை. தந்தையுடன், அவருடைய சகோதரியின் பராமரிப்பில் இருப்பவள். அந்த அத்தை வாழாவெட்டியா, விதவையா?
ஆறு வயதில் விசாலிக்கு பால்ய விவாகம். அப்போது கணவனுக்கு இருபத்திரெண்டு வயது என்பது அவன் இப்போது அவளை அழைத்து வரச்சொல்லி இவள் வீட்டுக்கு வந்துள்ள கணவனின் உறவினர்கள் அவன் வயது இருபத்தாறு என்று சொல்வதிலிருந்து தெரிகிறது.
வந்திருப்பவர்கள் கணவனின் அண்ணா, பெரியப்பா, சித்தப்பா ஆகியோர். கணவனுக்கு அம்மா, அப்பா கிடையாது.
பத்து வயது குழந்தையை புகுந்த வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறார்கள்.
குழந்தை தன் தோழி ராதையுடன் சோலி விளையாடக் காத்திருந்தவள்.
அப்பா வீட்டில் இல்லை. நான்கு வருடங்களுக்கு விசாலியின் திருமணத்தின் போதே அப்பாவுக்கும் கணவன் வீட்டார்க்கும் மனஸ்தாபம். உறவு கெட்டுப் போய் விட்டது.
அத்தை தன் சகோதரன் வரட்டுமே என்று தவித்து அங்கலாய்க்கிறாள் இப்போது.
கணவன் வீட்டாரோ பச்சை தண்ணீர் கூட இந்த வீட்டில் குடிக்கத் தயாராயில்லை. சாப்பிட வேண்டிய குழந்தை விசாலியை அழைத்துக்கொண்டு வண்டியில் கிளம்ப தயாராகிறார்கள்.
விசாலி உடனே தீர்மானிக்கிறாள். ’அத்தை, அப்பா கிட்ட நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடு.’
கணவன் வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமாகிறாள். என்ன ஒரு தீர்மானம்.
என்னால் மேலே உரக்க வாசிக்கவே முடியவில்லை. கண்ணை நீர் மறைக்கிறது. தொண்டையில் இருந்து குரல் வரவில்லை.
ஒரு வழியாக சில நிமிடங்கள் உறைந்து விட்டு நிலை கொண்டு மீண்டும் கவனமாக வாசித்து முடிக்க முயன்றும் சிரமமாகவே இருந்தது.
என்ன ஒரு கதை. எத்தனை முறை வாசித்த கதை.
எத்தனை வருடங்கள் கழித்து வாசித்தாலும் நெஞ்சை அடைக்கும் கதை.
இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் கதை. இது இப்ப தேவையா? என்றெல்லாம் விகார மூளைகள் விவாதம் செய்யட்டும்.
தி.ஜாவின் கதைகள் அந்த கால கட்டங்களின் வரலாற்று ஆவணங்கள். உன்னத மனத்தால் மட்டுமே இப்படி காட்சிப்படுத்த முடியும்.
………………………

Oct 5, 2018

உப்பு விற்கப் போகவில்லை


உப்பு விற்கப்போகவில்லை.
7ந்தேதி அசோகமித்திரன் பற்றி பேசப்போகிறேன்.
மிக கனத்த மழை அன்று என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.What is likely to occur.

"For me, everything becomes allegory."
- Charles Baudelaire

இதையும் மீறி அன்று இந்த நிகழ்வு நடந்தேறட்டும்.
Rain, rain go away, Come again some other day.

Worrying about the bad weather is the last refuge of monotonous,conventional persons.
When we are together, why should we care about the weather.

............




Rev. Emmanuel Dossan greets R.P.Rajanayahem

"I'd read a few of your posts in your blog even before they appeared on the fb. They are witty, sarcastic and unique in its literary style. Besides your astounding memory exhibited in the details of your writing, they are mostly biographical and autobiographical. Any biographical note always influences the other. Whenever I read your writings I cannot but recall my own past. I think all the readers have the same feel. COngrats sir"
............

Jul 28, 2018

எம்.ஜி.ஆர் காலமான தினம்



இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை.
எம்.ஜி.ஆர் காலமான தினம் வேறு யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்த வேண்டியவர்கள் திண்டாடிப்போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கிலை யாரும் முன் கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்க மாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச்சின்னங்கள். எம்.ஜி.ஆர் இறந்த தினம் இந்தத் துக்கச்சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது.
தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால், பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி, பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச்சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது. ஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர்கள் உடலை மருத்துவ மனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது.
யாரிடம் எதற்கு அனுமதி?
“என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க.”
”எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது.”
”அதுக்குள்ளே எடுத்துப் போயிடறோம்.”
“எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம் தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு.”
அப்பா பிணவறையில் இருந்து எழுந்து நடந்து போனார்.

- அசோகமித்திரன் “ யுத்தங்களுக்கிடையில்..” நாவலில்



..........................

May 3, 2018

சைகல் பாடிய ’பாபுலு மோரா’


நவாப் வாஜித் அலி ஷா எழுதிய உருது பாட்டு ’பாபுலு மோரா’.
Baabul mora
Naihar chhuto hi jaae
Baabul mora
Naihar chhuto hi jaae
O My father! I'm leaving home.
O My father! I'm leaving home.
’அப்பா… நான் நம் வீட்டை விட்டு போகிறேன்.’ ஒரு மணப்பெண் திருமணமாகி தன் பிறந்த வீட்டை விட்டுப் பிரிந்து போகும் நிலையில் பாடுவதாக இந்த பைரவி ராக தும்ரி.

விதி செய்யும் விளைவு. வாஜித் அலி ஷா பிரிட்டிஷாரால் நாடு கடத்தப்பட்டார். வெள்ளையர்கள் அவரை இருட்டு பிரியும் முன் லக்னோவை விட்டு வெளியேறி விட வேண்டும் வற்புறுத்தியுள்ள நிலையில் அப்படியே நவாப் கிளம்பிப்போகிறார். விஷயம் ஊருக்கு அதற்குள் தெரிந்து விட்டது. நல்ல இருட்டில் மக்கள் சாலையின் இரு பக்கமும் கூடி விடுகின்றனர். வாஜித் அலியின் அரண்மணை பாடகன் அவர் இயற்றிய பாடலை உரக்கப் பாடுகிறான். மக்கள் தேம்பித் தேம்பி அழுகின்றார்கள். விம்மலுடன் பாடிய பாடகனுக்கு, அந்த நிலையிலும் நவாப் ஒரு பரிசு தருகிறார். அதை ஏற்க அவன் மறுத்து விடுகிறான்.
இந்த தும்ரி பாடல் அதன் பின் எவ்வளவோ பேர் காலம் காலமாக பாடினார்கள்.
ஜம்முவில் பிறந்தவன் கே.எல்.சைகல். ரயில்வே டைம் கீப்பர், ரெமிங்க்டன் டைப்ரைட்டர் சேல்ஸ்மன், ஓட்டல் மானேஜர் என்று எவ்வளவோ வேலை பார்த்தவன்.

ஹிந்தி திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் சைகல். அப்போதெல்லாம் கல்கத்தாவில் தான் ஹிந்தி திரையுலகம் இயக்கம் கொண்டிருந்தது.
சைகல் தான் என் குரு என்று லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார் என்று பலரும் பேட்டியில் எப்போதும் குறிப்பிட்டிருக்கிறார்கள். முகேஷ் அப்படியே ஒரு copycat ஆக சைகலை பின்பற்றி பாடியவர்.
சைகல் பாடல்கள் அகில இந்தியாவையும் பைத்தியமாக்கியது. பாபுலு மோரா, சோ ஜா ராஜ்குமாரி, மேரே சப்னோ கி ராணி, ஏக் பங்களா பனே நியாரா, கம்தியே முஸ்த்து கில்லு கித்துனா பாடல்களை முணு முணுக்காதவர்கள் யாரும் இல்லை.
’நெஞ்சில் ஓர் ஆலயம்’ கல்யாண் குமார் கூட என்னிடம் சொன்னார். சைகல் பாடல்கள் தான் அவருக்கு பிடிக்கும். சைகல் பாடல்களை மனப்பாடமாக பாடுவார்.
பாபுலு மோரா பாடல் 1938ல் ’ஸ்ட்ரீட் சிங்கர்’ என்ற படத்தில் சைகல் பாடி மிகவும் பிரபலம்.

இந்தப் பாடல் பாடுகிற காட்சியை தத்ரூபமாக படமாக்க வேண்டும் என சைகல் ஆசைப்பட்டார். தனியாக ரிக்கார்டிங் செய்ய அவர் மனம் ஒப்பவில்லை. இயக்குனரையும் இதற்கு சம்மதிக்க வைத்தார். படப்பிடிப்பின் போது சைகல் இதை பாடிக்கொண்டே நடக்கும் போது கேமராவிற்குள் வராமல் இசைக்குழுவினர் பின்பற்றி நடந்து கொண்டே வாசித்திருக்கிறார்கள்.
நாற்பத்திரெண்டு வயதில் சைகல் அற்பாயுசில் இறந்து போனார்.
அதன் பின் இந்த பைரவி ராக பாடலை பண்டிட் பீம்ஷன் ஜோஷி, கிஷோரி அமோங்கர், ஜக்ஜித் சிங் என்று எத்தனையோ பேர் கச்சேரிகளில் பாடியிருக்கிறார்கள்.
ராஜேஷ் கன்னா, ஷர்மீளா டாகூர் நடித்த அவிஷ்கார் படத்தில் கூட இந்தப்பாடல் இடம்பெற்றிருந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன் தினமணி தீபாவளி மலரில் அசோகமித்திரன் ‘அகோர தபசி’ சிறுகதை எழுதியிருந்தார். காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘இரண்டு விரல் தட்டச்சு’ சிறுகதைத் தொகுப்பில் பிரசுரமாகியுள்ளது.

’ நான் அந்த மனிதனை ஒரு பஜனை மடத்தில் தான் பார்த்தேன்.
எல்லோரும் கிருஷ்ணா ராமா என்று பாடினால் இவன் சைகல் பாடல்களைப் பாடினான். சைகல் பாட்டு இந்தி அல்லது உருதுவில்.
எதைப்பற்றி கூறுவதாக இருந்தாலும் அந்த மனிதன் அப்பாட்டுக்களைப் பாடும்போது கேட்போர் மனதை அவை எங்கெங்கோ அழைத்துச் சென்றன.

அதிலும் அவன் ’பாபுலு மோரா’ என்ற பாட்டைப் பாடும்போது மனம் அன்று வரை அறியாத எல்லைகளுக்கு இழுத்துச் செல்லப்படும்.
என் மூடிய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. எனக்கு மட்டும் என்றில்லை. வேறு பலரும் அவன் பாட்டைக் கேட்டு அவர்களையறியாது கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தார்கள்.’
இந்தப் பாத்திரத்தை ’சைகல் மனிதன்’ என்றே அசோகமித்திரன் தன் சிறுகதையில் அடையாளமிடுகிறார்.
அவன் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடுகிறது.
சைகல் மனிதன் பசுபதியின் மனைவி சொல்கிறாள் ‘அவரோட கூடப்பொறந்தவா ஆறு பேர். நிறைய பணம் காசோட சௌக்கியமா வேறே வேறே இடங்கள்ளே இருக்கா. இப்போ வீட்டை வித்துப் பாகம் பிரிக்கணும்கறா. இவருக்கு இந்த வீட்டை விட்டா எங்கே போறதுன்னு கவலை.’
’அகோரத் தபசி’ கதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது. ‘ ஒரு வாரத்திற்குப் பிறகு கோட்ஸ் ரோடு சென்றேன். அந்த வீடு பூட்டுப் போட்டிருந்தது. ஒரு மாதத்திற்குப்பிறகு காலி வீட்டை யாரோ வெள்ளை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஏழு பேரும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு விட்டார்கள் என்று ஊகித்துக்கொண்டேன்’
பசுபதியின் நிர்க்கதியான சோகம், உணர்விறுக்கம், பிரிவாற்றாமை பற்றி புரிய பாபுலு மோரா பாடல் பற்றி, பாடல் எழுதிய நவாப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். சைகல் பாடலையும் கேட்டு ரசித்திருக்க வேண்டும்.

“I am never merry when I hear sweet music”
-Shakespeare in ‘The Merchant of Venice’



Apr 14, 2018

அசோகமித்திரனின் நாவல் ’யுத்தங்களுக்கிடையில்’


”நான் கடைசியாக எழுதி முடித்த நாவல் யுத்தங்களுக்கிடையில்’ நர்மதா பதிப்பாக வந்து பல மாதங்கள் ஆகின்றன. அது வெளிவந்ததாகவே உலகுக்குத் தெரியாது. இந்தப் பத்திரிக்கைகள் அந்த நூலைப் பார்த்து ஒரு குறிப்பு எழுதலாம்.” அசோகமித்திரன் இப்படி தவிக்க வேண்டி இருந்தது.
நாவல் வெளி வரும் முன்னர் திலகவதியின் ’அம்ருதா’ பத்திரிக்கையில் சின்ன ட்ரெய்லர் போல அந்த நாவலின் ஒரு அத்தியாயம் ’ஆற்றில் குளிப்பது எப்படி?’ (முதல்வரி ’செப்டம்பர் 3,1939. யுத்தம் வந்து விட்டது’) பிரசுரமாகியிருந்தது.
நாவல் முதல் உலக யுத்தத்திற்கும் இரண்டாம் உலகயுத்தத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கே மாயவரம் துவங்கி செகண்ட்ராபாட் வரை ஒரு குடும்ப நிகழ்வுகளை உள்ளடக்கியது.
நாவல் நடக்கிற காலம் இப்படியென்றால் இதை எழுதிய காலம் “ Sorrows never come singly”யை நினைவுபடுத்தும் விதமாக இருந்திருக்கிறது. அசோகமித்திரன் ஐம்பது வருடங்களாக குடியிருந்த தி.நகர் தாமோதரன் ரெட்டி தெரு வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தார். அந்த 2000 மாவது ஆண்டில் அவருடைய குடும்பத்தில் மூன்று பேருக்கு எலும்பு முறிவு, வாரக்கணக்கில் மருத்துவமனை சிகிச்சை. மூவருக்கும் நிரந்தரமாக நினைவு படுத்தும் வகையில் காயங்கள். அந்த நெருக்கடியான காலத்தில் தான் இந்த கடைசி நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறார் ஆசிரியர்.

எழுபத்தேழாம் வயதில் ‘ ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகள் முன்பே தொடங்கப்பட்டது. மனதளவில் ஏதோ எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது.அதை மீறித் தான் அவ்வப்போது எழுத முற்படுகிறேன். இந்த 2009ம் ஆண்டில் அதை முடித்து விட வேண்டும்.’
எழுபத்தெட்டாம் வயதில் ‘ இறுதியாக, பல ஆண்டுகளாக எழுதி வரும் நாவலை ஒரு சிறிய அளவிலேயே முடித்து விட்டேன். இன்னும் ஏராளமான பாத்திரங்களை விரிவு படுத்த வேண்டும். இந்த வயதில் பெரிய திட்டங்கள் எனக்கென வைத்துக்கொள்வது அசாத்தியமானது.’
Perhaps life is Just that….a dream and a fear ....ஜோசப் கான்ராட் தான் இப்படி கவலைப்பட்டான். Byron's Incomplete "DON JUAN"....... Keats's Fractional "HYPERION".....
அசோகமித்திரனின் அப்பா முதல் உலகயுத்த காலத்தில் ஒரு வெள்ளைக்கார துரையிடம் நிஜாம் சமஸ்தானத்தில் வேலைக்கு சேர்ந்து அந்த வேலை யுத்தம் முடிந்தவுடன் முடிவுக்கு வந்த பின் அந்த துரை உதவியுடனேயே ரயில்வேயில் தனக்கும் தன் தம்பிகள் இருவருக்கும் கூட வேலை வாங்கி அங்கே செட்டிலாகி இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் ஒரு ஐந்து வருடங்களில் சகோதர்கள் தங்கள் மனைவிகளையும், படிப்பை முடிக்காத குழந்தைகளையும் விட்டு விட்டு செத்துப்போகிறார்கள்.
நாவல் மிக கனமான உருக்கமான, இறுக்கமான தளங்களை உள்ளடக்கியது.
இன்று நான்கு முறைக்கு மேல் நான் 2010லிருந்து நாவலை மறு வாசிப்பு செய்து விட்டேன். இன்னும் என் காலம் முடியும் வரை எத்தனை முறை வாசிப்பேனோ?
மாயவரத்தை ஒட்டிய ஒரு கிராமத்திலிருந்து நிஜாம் சமஸ்தானத்திற்கு அந்த சகோதரர்களை எது கொண்டு சேர்த்தது. முற்றிலுமாக வேறு கலாச்சார சூழலில் நடுத்தர வயதில் அன்னியப் பிரதேசத்திலே உயிரையும் விட வைத்தது. இதற்கெல்லாம் சில வரி பதில் சொல்வது அபத்தம்.
18வது அட்சக்கோடு நாவல், எத்தனை சிறுகதைகள், கட்டுரைகள் அந்த ஹைத்ராபாத், செகண்ட்ராபாத் பற்றி எழுதித் தீர்த்திருக்கிறார்.
ஐந்நூறு கோப்பைத்தட்டுகள், மாறுதல் (சாய்னா), சுந்தர், நடனத்துக்குப் பின், பங்கஜ் மல்லிக், தந்தைக்காக, கதர், அபவாதம், அவள் ஒருத்தி தான், உத்தர ராமாயணம், அப்பாவின் சிநேகிதர், சாயம், முனீரின் ஸ்பானர்கள், சில்வியா, இன்ஸ்பெக்டர் செண்பகராமன், திருநீலகண்டர், சகோதரர்கள், மண வாழ்க்கை, இரு முடிவுகள் உடையது, அழகு, பைசா, விடுமுறை, பாதாளம், பாண்டி விளையாட்டு, ஹரிகோபாலின் கார்பன் பிரதி, சேர்ந்து படித்தவர்கள், அலைகள் ஓய்ந்து.., அடுத்த மாதம், கொடியேற்றம், மறதி, ஆறாம் வகுப்பு, 1946ல் இப்படியெல்லாம் இருந்தது, தோஸ்த், கல்யாணி குட்டியம்மா, பரிட்சை, பாலாமணி குழந்தை மண்ணை தின்கிறது, மீரா- தான்சேன் சந்திப்பு, பார்த்த ஞாபகம் இல்லாது போதல், கோபம் ஆகிய சிறுகதைகளெல்லாம் நினைவில் நிழலாடி நிற்கிறது.
அசோகமித்திரனின் பாத்திரங்கள் காலகாலமாக திரும்பத் திரும்ப அவருடைய எழுத்தில் பயணிப்பவர்கள்.
’ஒற்றன்’ நாவல் களத்தில் அமெரிக்க அயோவா சிடி கதைகள் ‘அம்மாவின் பொய்கள்’ (1986), இப்போது நேரமில்லை (1985), ஒரு நாள் அதிகாலைப் போதில் (1975), அழிவற்றது (2004)
‘நான் ஒரு முறை ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் இருக்க நேர்ந்தது. அங்கு கூட வெகு விசித்திரமாக ஒரு கொரியாக்காரன், ஓர் இந்தோனேஷியாக்காரன், ஒரு ஜப்பானிய மாது, ஓர் அமெரிக்கப்பெண், ஒரு ஹங்கேரிய அம்மாள்- இவ்வளவு பேர்கள் அவர்களுடைய துக்கங்களை என் தோள் மீது கசிய விட்டிருக்கிறார்கள். ஆனால் என் உடம்பெல்லாம் நிறைந்திருக்கும் துக்கத்தை நான் தணித்துக்கொள்ள எனக்கு இன்னும் ஒரு தோள் கிடைக்கவில்லை.” ஒற்றன் நாவல் சூழலைப் பற்றி இப்படி ‘ நானும் ஜே.ராமகிருஷ்ணராஜூம் சேர்ந்து எடுத்த சினிமாப்படம்’ கதையில் சொல்லியிருக்கிறார்.
18வது அட்சக்கோடு நாவலில் வருகிற ஜாபர் அலியை 2002ல் எழுதிய ’சகோதர்கள்’ களத்தில் காணலாம். நாகரத்தினத்தை 1982ல் எழுதிய ‘அப வாதம்’ காட்டுவதுண்டு. 2010ல் எழுதப்பட்ட கதை ’தோஸ்த்’ ரெய்னால்ட்ஸ் காரில் வரும், பளபள ஷேர்வாணி அணிந்த பையன்.
சில்வியா, இன்ஸ்பெக்டர் செண்பகராமன், அப்பாவின் சினேகிதர் சையது மாமா. டாக்டருக்கு மருந்து புருஷோத்தம் டாக்டர்.
18வது அட்சக்கோடின் இறுதி அத்தியாயமாக இருந்திருக்க வேண்டியது ‘ஒரு நாள் நூலகத்திற்குப் போகும் வழியில் நின்று பார்த்த கிரிக்கெட் ஆட்டம்’ என்ற சிறுகதையென்று அசோகமித்திரன் சொன்னார்.
யுத்தங்களுக்கிடையில் அசோகமித்திரனின் அத்தை பணக்கார விதவை சீதா. இவளை மையம் கொண்டு எத்தனை கிளை கதைகள்.
யுத்தங்களுக்கிடையில் ராமசுப்பு ’மானசரோவர்’ நாவலில் ஜபர்தஸ்து பண்ணிய சாமா.
’கோபம்’ சிறுகதை மன்னி யுத்தங்களுக்கிடையில்.
’லீவு லெட்டர்’ குறு நாவல் கேசவராவ் யுத்தங்களுக்கிடையில்.
இந்த நாவலை படிப்பவர்கள் ஆசிரியர் எழுதி 2010ல் வெளிவந்த  குறு நாவல் ’பம்பாய் 1944’, 2014ல் வெளியான நாவல் ‘இந்தியா 1948’ இரண்டையும் அவசியம்  படிக்க வேண்டும். சிவப்பு அண்ணா தான் சுந்தரம். பம்பாய் அண்ணா. யுத்தங்களுக்கிடையில் பம்பாய் அண்ணா பெயர் ராகவன். மூத்த மகன் தான் பம்பாய் அண்ணாவாக மாறினான்.
இளையவன் மணி தான் தத்து எடுக்கப்படுவதை இழந்தான்.
யுத்தங்களுக்கிடையில் கடைசி பாரா ‘ ஒரு தலைமுறை முடிந்தது’ (1988) சிறுகதையை நினைவு படுத்தும்.
“அவங்க அண்ணன் தம்பி ஒருத்தர் கூட அறுபது வயசைத் தாண்டலை. எங்கப்பா போறப்போ ஐம்பத்து மூணு. உங்கப்பாவுக்கென்ன ஐம்பத்தஞ்சு இருக்குமா?’
‘ஐம்பத்தாறு.”
பல வருடங்களாக நாவல் எழுதப்பட்டிருப்பதால் அசோகமித்திரனின் நினைவுக்குழப்பம் ராமேசனை இரண்டொரு இடங்களில் சபேசன் என குறிப்பிட்டிருப்பது பெரிய தவறல்ல.
………..

உலகத்தில் தான் ஒருவரைச் சுற்றி எவ்வளவு கதைகள்! கதைகளுக்கு முடிவே இல்லை. மேலும் எந்தக்கதையும் பூரணமான கதையல்ல.
- அசோகமித்திரன்.

...........................................



Mar 27, 2018

எஸ்.எஸ்.வாசன் மீதான அசோகமித்திரனின் கசந்த நினைவுகள்


ஜெமினி ஸ்டுடியோ பற்றி எஸ்.எஸ்.வாசன் பற்றி எத்தனை சிறுகதைகளில், நாவல்களில், கட்டுரைகளில் கூட குறிப்பிட்டிருக்கிறார்.அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் வருகிற ராம ஐயங்கார் பாத்திரம் ஜெமினி அதிபர் வாசன் தான். ’மானசரோவர்’ ஸ்டுயோ முதலாளியும் வாசனே.
மிகக் கடுமையான வார்த்தைகளால் ’வண்ணங்கள்’ கதையில் ஜெமினி முதலாளியைப் பற்றி “தேவடியாளுக்கெல்லாம் கொட்டி அளந்தாங்க. வீடு வீடாக் கட்டிக் கொடுத்தாங்க. காரு வாங்கிக்கொடுத்தாங்க. எங்களுக்குப் பத்தணா கொடுக்க பிசிநாறித்தனம்..”
”எத்தினி தொழிலாளிங்க வயத்தெரிச்சலையும் வேதனையையும் வாங்கிக் கட்டிட்டாங்க. அந்த படுபாவிங்க! அவுங்க வம்சமே உருப்படாமத் தெருத் தெருவா நாறும்.”
ஜெமினி ஸ்டுடியோவில் ஆஃபிஸ் பாய் அந்தோணியின் சாபம்.

”பதினெஞ்சு வருஷம் என் பொண்டாட்டி பிள்ளையைச் சாகக் கொடுத்து உழைச்சேன், வெளியில போறப்போ கையிலே ஆயிரம் ரூபா கூடத் தரலே..எட்டு நூறு ரூபா கொடுத்தான் அந்த முதலாளி”
”லிங்கிச்செட்டி தெருவிலே, பதினாறு வருஷம்.. அந்த மார்வாடி எவ்வளவு கொடுத்தான் தெரியுமா? இருபத்தைந்தாயிரம்!”
அசோகமித்திரனின் கதைகளில் நூறு கதைகள் படித்து விட்டு ஒரு கதையைக்கூட மறக்கத்தான் முடியுமா?
‘.
ஜெமினி ஸ்டுடியோவில் தன் மனமும், உடலும் அனுபவித்த தாள முடியாத வியாகுல துயரங்களைப் பற்றி எவ்வளவு கதைகளில் கோடிட்டிருக்கிறார்.

பழைய நினைவுகள் மனதைக் குதறிப் போடாமலிருக்க காலம் தேவைப்படுகிறது.’ என்பார் அசோகமித்திரன்.
காலத்தையும் மீறித்தான் அசோகமித்திரனின் மனம் பழைய நினைவுகளால் குதறிப்போடப்பட்டிருக்கிறது.
சும்மா யாருன்னாலும் “ There is no wound that time cannot heal” என்று சொல்லிக்கொள்ளலாம் தான். புண் உமிழ் குருதி. சீழ் கோர்க்கும் புண்களாய் கடந்த கால கசந்த நினைவுகள்.
’வண்ணங்கள்’ கதையில் எஸ்.எஸ்.வாசன், ஜெமினி ஸ்டுடியோ மீதான தன் தீராத கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வண்ணங்கள் தொடும் பரிமாணங்கள் தான் எத்தனை?
அந்தோணிக்கு சென்னையில் எந்தெந்த இடங்களில் எல்லாம் பேய், பிசாசு இருக்கிறது என்பதைப்பற்றி தீர்மானமான அபிப்ராயம்.
அசோகமித்திரன் “ நிஜமான பிசாசு எது தெரியுமா? இவன் பணக்காரன், இவன் ஏழை, இவன் எஜமானன், இவன் வேலைக்காரன், இவன் சம்பளம் தர்றவன்னு இருக்கே. இந்த அமைப்பு. இது தான் நிஜமான பிசாசு. இந்தப் பிசாசு இல்லேன்னா அரை வயத்துக்குச் சாப்பிட்டாக்கூட நீயும் நானும் எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம். இந்தப் பிசாசுக்கு ஆயிரக்கணக்கான வருஷம் வயசாயிருக்கு. அது பெரிசாயிண்டே போறது. இந்தப் பிசாசை ஒழிச்சுட்டா நீ சொல்ற பிசாசெல்லாம் தானாகவே செத்துப்போயிடும்..”
‘அப்போதெல்லாம் எங்கள் முதலாளி தொழிற்சங்கம், அரசு அமல்படுத்த விரும்பிய தொழிற்சட்டங்கள் மீது மிகுந்த சந்தேகம் உடையவராக இருந்தார். யூனியன், கம்யூனிஸ்ட் இதெல்லாம் அங்கு தொடர்ந்து வேலையிலிருக்க வேண்டுமானால் அபாயகரமான சொற்கள், சிந்தனைகள்.’
அந்தோணி, மாணிக்கராஜ், மாணிக்க வாசகம், முனுசாமி, நாயர்…
“ இவர்கள் எல்லோருக்கும் நான் அதிகாரி என்று தோன்றினாலும், நடைமுறையில் நாங்கள் எல்லாரும் ஒரே மாதிரி வேலை, ஒரே அளவு வேலை பார்த்தோம்” என்று போட்டு உடைக்கிறார் அசோகமித்திரன்.
தவிர பத்து டிரைவர்கள், இரண்டு கிளீனர்கள், பெருக்குபவர்கள், தோட்டிகள், வாச்சுமென்கள், தோட்டவேலைக்காரர்கள் என்று ஒரு சைன்யம்.
இவர்களுக்காக கடன் விண்ணப்பங்கள், சம்பள அட்வான்ஸ் விண்ணப்பங்கள், பதினைந்து நாட்கள் காணாமல் போய் விட்டதற்கு மனமுருகும் மன்னிப்பு கடிதம்...என் பேனாவில் மையூற்றி எழுதவில்லை. கண்ணீரையூற்றி எழுதினேன். கண்ணீரை வரவழைக்க வெங்காயச்சாறு நிரப்பி எழுதினேன் என்று அசோகமித்திரன் எத்தனை கதைகளில் எழுதி விட்டிருக்கிறார்.
ஜெமினி ஸ்டுடியோவின் Sister concern ஆனந்த விகடனில் இவர் வேலை பார்த்திருந்தால் நன்றாயிருந்திருக்குமா? ஒரு மகத்தான இலக்கியவாதியாக கணையாழியில் தன் எழுத்துக்கு மேடை கண்ட அசோகமித்திரன்.
சினிமா ஸ்டுடியோவில் இளமை கழிவதற்கு பதிலாக பத்திரிக்கையில் தானே ஒரு எழுத்தாளன் சேர்ந்திருந்திருக்க முடியும்.
ஆனால் பின்னால் தமிழ் இலக்கியத்திற்கு அவருடைய ஜெமினி வாழ்க்கை அனுபவங்கள் கிடைத்திருக்காதே.