Share

Jan 10, 2024

விஜய்காந்த் வீரமுத்து


பழனியில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் வீட்டம்மாவுடன்  போய்க்கொண்டிருந்தேன். கீர்த்தி இரண்டு வயது குழந்தை. 

வடமதுரையில் ஏறிய சிறுவன் (15வயது)எங்களோடு வந்து உட்கார்ந்தான். 
பத்தாம் வகுப்பு படிக்கிறான். வீரமுத்து.
வீட்டம்மாவிடம் ரகசியமாக 'இவனப் பாத்தா ரஜினி ரசிகன் மாதிரி தெரியுது' என்று பையன் காதில் விழும்படியா சொன்னேன்.
வீரமுத்து சட்டென்று தலையை ஆட்டி மறுத்து " நான் விஜய் காந்த் ரசிகன்"
" ஓஹோ நம்ம ஆளா. நானும் விஜய் காந்த் ரசிகன் தான். திருச்சியில எங்க ஏரியாவில்  நான் தான் விஜய் காந்த் ரசிகர் மன்ற தலைவர். நீயும் நம்மாள் தானா. சூப்பர்"

வீரமுத்துக்கு வாயெல்லாம் பல்லு. கண்ணுல பல்ப்.

"கூலிக்காரன் சூப்பர் படம்யா" அப்ப சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகியிருந்த விஜய் காந்த் படம். 

" திண்டுக்கல்ல அத்த வீட்டுக்கு போறேன். போனவுடனே இன்னக்கே கூலிக்காரன் பாத்துடுவேன்"

"நான் திருச்சியில ரெண்டு வாட்டி பாத்துட்டேன். பழனியில நேத்து மூனாவது வாட்டி கூலிக்காரன் பாத்தேன். இப்ப திருச்சி போனதும் நாளக்கி நாலாவது வாட்டி பார்ப்பேன். ஆஹா சூப்பர் படம்யா "

வீரமுத்து ஆர்வமா"கத என்ன"

" கத கேக்காத. அப்றம் சஸ்பென்ஸ் ஒடஞ்சிடும். சொல்ல மாட்டேன் " 

வீரமுத்து உற்சாகமாக ஒன்பதாம் க்ளாஸ் படிக்கும் போது பாத்த"கரிமேடு கருவாயன்" படக்கதய விரிவா சொல்ல ஆரம்பிச்சிட்டான். அவன் சொல்ல சொல்ல நான் தலைய ஆட்டி
' இந்த சீன் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.' 'இந்த சீன்ல கை தட்னேன்.'
 'என்னா சூப்பர் சீன் ' ஆகாகாரம் செய்தேன்.

" வீரமுத்து நீ விஜய் காந்தும் எம்ஜியாரும் நடிச்ச படம் பாத்ருக்கியா?"

'தெரியாது' - தலையாட்டினான்.

குழம்பி கேட்டான் "படத்து பேரு?"

" பட்டிக்காட்டு பொன்னையாவை காத்த கரிமேடு கருவாயன்"

'இன்னொருக்க சொல்லுங்க' கேட்டு படத்தோட பேரெ எப்டியாவது மனப்பாடம் செய்ய முயற்சி செய்தான்.

இந்த படம் பாத்தப்றம் தான் விஜய் காந்து ரசிகரானேன்.
படத்தோட கத க்ளைமாக்ஸ் உடனே சொன்னேன்.
எம்ஜியார கொள்ளக்கூட்டக்காரங்கெ பிடிச்சிட்டு போயிடுவாங்கே. தூண்ல கட்டிப் போட்டு எம்.ஜியார கொல்ல பாப்பாங்கே. விஜயகாந்து கரெக்டா அங்க போயி ஓட்ட பிரிச்சி குதிச்சி அவிங்கள அடி வெளுத்து எம்.ஜி.ஆர காப்பாத்திடுவாரு. 
சூப்பர் படம்யா. வீரமுத்து ஏய்யா அந்த படத்த பாக்காம விட்ட." 

" நான் பார்த்ததில்லயே. எனக்கு இந்த படம் தெரியவே தெரியாதே"
 வீரமுத்து தவித்து தக்காளி வித்தான்.

திண்டுக்கல்லில் இறங்கிய
வீரமுத்துக்கு 'தேடல்' உறுதி. 
கயிறு போட்டு விட்டாச்சி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.