வேடிக்க - 22
திருப்பூரில் முதலில் அவினாசி பழங்கரையில் வேலை. 2003 மார்ச் 24 - மே 24
கம்பெனியிலிருந்து ஆஃபிஸ் வேலை சம்பந்தமாக பெரும்பாலும் திருப்பூர் செல்ல வேண்டியிருக்கும்.
ஸ்டாஃப்ஸ் யாராவது கம்பெனி பைக்கில் செல்லும் போது கூடவே ராஜநாயஹம்.
ஏப்ரலில் வாட் வரி விதிப்பு பற்றிய அரசு விளக்கத்தையொட்டி நடந்த கூட்டம்.
கூட்டத்திற்கு வந்திருப்பவர்களுக்கு சின்ன நோட்டு, பேனா கொடுக்கப்பட்ட போது கூட வந்த கம்பெனி ஸ்டாஃப் (Brahmin youngster. கல்யாணமானவன்) தனக்கு வாங்கிக்கொண்டு ராஜநாயஹத்திடம் இருந்து உடனே கிட்டத்தட்ட பிடுங்கினான்.
'புதுசா வேலைக்கு சேந்தவனுக்கு எதுக்கு இதெல்லாம்.' னு அர்த்தம்.
கூட்டம் முடிந்தவுடன் 'இன்னொரு வேலையிருக்கு'ன்னு ராஜநாயஹத்தையும் பைக்கில் பின்னால் உட்கார வைத்து கிளம்பினான்.
"ஆசிரமத்துக்கு போய் சாமியார பாக்கணும்"
ஆசிரமத்தில் நுழைந்தவுடன்
" எறங்குங்க" சொல்லி பதட்டத்துடன் பைக்கை ஸ்டாண்ட் போடாமல் கீழே போட்டு விட்டு ஓட ஆரம்பித்தான். " சாமி வர்றாங்க "
நெறய்ய ஜனங்க. அவங்களோட இந்த கம்பெனி ஸ்டாஃப் ஓடினான்.
"இங்க இல்ல அங்க"
ஒடனே அங்க ஓடினான்.
"இங்க இல்லீங்க.. அங்க"
மாறி மாறி ஓடிக் கொண்டே...
தவித்தான்.தக்காளி வித்தான்.
அவன் கீழே போட்ட பைக்கை தூக்கி ஸ்டாண்ட் போட்டு விட்டு ராஜநாயஹம் இதையெல்லாம் வேடிக்க பார்த்துக் கொண்டு...
அரை மணி நேரம் கழித்து இரைக்க இரைக்க வந்து பைக்க ஸ்டார்ட் பண்ணி
" ஒக்காருங்க. சாமிய பாத்துட்டேன். அது போதும். சாமிய பாத்ததே போதும்"
ரெண்டு மாசம் அந்த கம்பெனி வேலை.
அடுத்து வேலை பாத்த கம்பெனியில் எட்டு வருஷம்.
அப்ப ரெண்டு வருஷம் இருந்த வீடொன்றில் இருந்து அதே ஆசிரமம் மிக பக்கம்.
ஞாயிற்றுக்கிழமை ஆசிரம அன்னதானம்.
அந்த வீட்டு ஓனர் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதிய சாப்பாடு குடும்பத்தோடு ஆஜர்.
வாக்கிங் எப்போதும் அந்த ஆசிரமம் முன்பாக சாலையையொட்டி ராஜநாயஹம் போவதுண்டு.
.....
நேற்று மாலை இங்கே சென்னையில் சம்பந்தமேயில்லாமல்
நிர்ப்பந்தம் காரணமாக, எங்கே போகிறோம் என்றே தெரியாமல் சென்ற போது யாரென்றே தெரியாத கார்ப்பரேட் குருஜியின் ஆசிரமம்.
கண்ண கட்டி காட்டுல விட்ட நெலன்னாலும் வேடிக்க வேடிக்க தான்.
சாமியை பார்க்க ஏகப்பட்ட ஆண்கள் பெண்கள் கூட்டம். ஜனங்க பிரச்சினைகள் ரொம்ப கூடிப் போய் விட்டதே.
கார் உள்ளே நுழைய ஏகப்பட்ட கெடுபிடி.
பன்னிரண்டு வருடங்களாக திருப்பூரில் பார்த்தேயறியாத சாமியார் இப்போது மூனு செகண்ட் காணக்கிடைத்தார்.
ராஜநாயஹம் வேடிக்க பார்க்கும் போது special, sophisticated and richdevotees புடை சூழ தாண்டிப்போன குருஜி.
அப்போது கூட யாரென்று தெரியவில்லை.
அங்கிருந்து காரில் வெளியேறிய பின்னர் போகிற வழியில்'யார் இவர்?' என்று விசாரித்த போது தெரிந்தது. திருப்பூர் ஆசிரம சாமியார் தான்.
கீழே 2008ல் திருப்பூர் சாமியாரின்
பக்தை பற்றி எழுதிய பதிவு.
க.நா.சுவின் பிரபல நாவல் 'பொய்த்தேவு'
தலைப்பு பதிவிற்கு.
.....
2008 post
Sep 7, 2008
பொய்த்தேவு
- R.P. ராஜநாயஹம்
சென்ற வருடம் என் துணைவிக்கு பல் டாக்டரை பார்க்க அழைத்து சென்றிருந்தேன் . டாக்டரம்மா என் மனைவியை செக் செய்து ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டிருந்த போது வெளியே பொழுது போகாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன் . ஒரு அம்மாள் அங்கே ஒவ்வொருவரிடமும் ஏதோ சொல்லி ஒரு நகல் பிரதி ஒரு பக்கம் உள்ளதை நோட்டீஸ் போல கொடுத்துகொண்டிருந்தவர் என்னை பார்த்தவுடன் நான் வேலைவெட்டி இல்லாமல் அங்கே நிற்பதை புரிந்து கொண்டு உடனே என்னிடம் வந்து விட்டார் .
" சார் , நான் இங்கே ஆசிரமத்தை சேர்ந்தவள் . எங்க சாமி பெயரை தான் என் பெயருடன் வைத்திருக்கிறேன் பாருங்கள் . " அவர் கொடுத்த நோட்டீஸ் பார்த்தேன் .ஆமாம் . தன் பெயருடன் அந்த ஆசிரமத்தின் சாமியார் பெயரைத்தான் வைத்திருந்தார் ." என் கணவர் இங்கே பாங்கில் வேலை பார்க்கிறார் . எனக்கு இரண்டு பிள்ளைகள் கல்லூரியில் படிக்கிறார்கள் . ஆனால் என் கணவர் பெயரை என் பெயருடன் சேர்க்காமல் எங்க சாமியார் பெயரை தான் சேர்த்திருக்கிறேன் பார்த்தீர்களா ?"
நான் மையமான புன்னகையுடன் "ம்ம்ம் சொல்லுங்க " என்றேன் .
"சுவாமி சொல்லிட்டாங்க சார் . இனி இந்த சுனாமி பிரச்சினை கிடையாது . நான் பார்த்துகொள்கிறேன்ன்னு . கவலையே படவேண்டாம் சார் . எங்க ஸ்வாமி தான் சார் உலகத்தை காப்பாற்றியவர் . சுனாமி அழிவிலிருந்து உலகை காப்பாற்றியவர் . இதில் ஒரு பிரார்த்தனை இருக்கு பாருங்க .இதை சொன்னால் போதும் . எங்க சாமியார் உங்களுக்கு நீங்க கேட்டதெல்லாம் தருவார் . எப்போ சார் நீங்க எங்க ஆசிரமத்துக்கு வர்றீங்க "
என்னை பெருமையாக பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தார் ."இவ்வளவு சொல்றேனே . நான் யார் என்று நீங்க யோசிக்கிறீங்க . சொல்றேன் சார் . நான் வேறு யாருமில்லை சார் . ஸ்வாமி விவேகானந்தா இல்ல . சாட்சாத் விவேகானந்தாவோட மறு பிறப்பு சார் நான் . இந்த பிறவியிலே பெண்ணா பிறந்துருக்கேன் சார் ."
எனக்கு வேதனையாயிருந்தது . விவேகானந்தர் பெண்ணா பிறந்துட்டாரே என்பதற்காக இல்லை . இந்த பிறவியில் அவர் இன்னொரு சாமியாருக்கு இப்படி அடியாராக இருக்கிறாரே .....இப்படி நினைக்கும்போதே என் தவறை உணர்ந்து உடனே,உடனே திருந்திவிட்டேன் .யார் கண்டது . அந்த ஆசிரம சாமியார் தான் பரம ஹம்சரின் மறு பிறவியோ என்னவோ .
சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது . திருச்சியில் அந்த காலத்தில் பிரேமானந்தாவின் சிஷ்யர்களும்" எங்க சுவாமி வேறு யாருமில்லே . சுவாமி விவேகானந்தா வின் மறு பிறவி தான் ."என்று தான் பயமுருத்திகொண்டிருந்தார்கள் .
நாம் எப்போதும் நல்ல படியே நினைப்போம் . ஒருவேளை இப்படியும் இருக்கும் . விஷ்ணு ஒரே நேரத்தில் பரசுராமன் , பல ராமன் , ஸ்ரீகிருஷ்ணன் -இப்படி மூன்று அவதாரங்கள் எடுக்க வில்லையா . அது போல விவேகானந்தர் இப்போது பிரேமானந்தாவாகவும் இந்த திருப்பூரம்மாவாகவும் மறு பிறப்பு எடுத்திருப்பார்.
.....
Aug 25, 2008
பிரபலமான இரு வீடுகள்
- R.P. ராஜநாயஹம்
இல்லாதவனுக்கு பல வீடு.
நான் திருச்சியில் குடியிருந்த இரு வீடுகள் சற்றே விஷேசமானவை.
1986 ல் பீமநகர் ராஜா காலனியில் நான் குடியிருந்த வீடு பின்னால் ஒரு பதினான்கு வருடத்தில் சரித்திர புகழ் பெற போவது எனக்கு அப்போது தெரியாது. அந்த வீடு தான் பின்னால் கார்கில் யுத்த தியாகி மேஜர் சரவணனின் வீடு. பத்து வருடங்களுக்கு முன் பல பெரிய அரசியல்வாதிகள் அந்த வீட்டிற்குள் நுழைந்து சரவணனின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன போது மிகவும் popular. ஜெருசலேம் , மெக்கா போலாகியிருந்தது.
அந்த வீடு பிரபலமான கால கட்டத்தில் நான் ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்தேன்..
புதுவையிலிருந்து கிளம்பி 1990 டிசெம்பரில் திருச்சியில் எடமலைபட்டி புதூர் ஸ்டேட் பேங்க் காலனியில் நான் குடியேறிய வீடு அதற்கு ஏழு வருடங்களுக்கு முன் குடி இருந்த ஒருவரால் ஏற்கனவே பிரபலமாயிருந்தது.
1990 ல் அதற்கு சிலவருடம் முன்னரே அவர் பெரிய பணக்கார சாமியாராகி பாத்திமா நகரில் பெரிய ஆசிரமம் அமைத்து கோலோய்ச்சிகொண்டிருந்தார்.
அப்புறம் நான் ஸ்ரீவில்லி புத்தூர் போன பின் தான் 1994ல் அவர் அரசாங்க விருந்தாளியானார்.
1983 ல் அவர் அகதியாக வந்த போது குடியேறிய வீடு பின் எனக்கு 1990 ல் வீடாகி இருந்தது.
அக்கம் பக்கம் இருந்த அவருடைய பக்தர்கள் என் வீட்டை பற்றி அப்போது "சுவாமி குடியிருந்த வீடு எங்களுக்கு ஜெருசலேம் " என என்னிடம் சொல்வார்கள்.
ஒரு நாள் நான்காவது வீட்டில் குடியிருந்தஅவருடைய உப சாமியார் கமலானந்தா வின் தகப்பனார் இறந்த போது, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அந்த சாமியார் நடந்து வந்த போது என் வீட்டையும்(Nostalgia. அவர் குடியிருந்த வீடல்லவா ) அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த என்னையும் உற்று பார்த்தார்.
நான் உடனேயே " பன்னி போல இருக்கிறான். இவனை சாமியார் ன்னுறாங்களே " என்று வாய் விட்டே சொன்னேன். அது உண்மையென்றே ஆகிபோனது.
அந்த சாமியார் பிரபலமான பிரேமானந்தா.
.......
எம்.ஜி. சுரேஷ் சொன்ன
சம்பவம் கீழே.
சுரேஷ் தன் அலுவலக பணியில் ஏதோ ஊருக்கு இன்ஸ்பெக்சன் போயிருந்த போது நடந்தது.
அந்த ஊரில் விஷேசமான சாமியார் என நம்பப்பட்ட ஒருவர் இருந்திருக்கிறார்.
அவரை போய் பார்த்தால் என்ன என சுரேஷ் எண்ணியிருக்கிறார்.
அலுவலக ஊழியர்கள் சிலருடன் அந்த சாமியாரை பார்க்க கிளம்பியிருக்கிறார்.
அப்போது கூடவே வந்த உள்ளூர் அலுவலக பியூன், வழியெல்லாம் அந்த சாமியாரை மிக கடுமையாக விமர்சித்துக்கொண்டு வந்திருக்கிறார்.
" தேவிடியா பய சார் இந்த சாமியார். ஒண்ணாம் நம்பர் அயோக்கியன். இவனை போய் நீங்க பார்க்கனுமா ?"
'சரியான பொம்பளை பொறுக்கி. எத்தனை பொம்பளையை அசிங்கம் பண்ணியிருக்கான் தெரியுமா? தேவிடியா பய இந்த சாமியார் "
" பிராடு பய சார். ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கான். இவனையும் சாமின்னு இந்த ஜனங்க நம்பிகிட்டு இருக்கு. த்தூ.சாக்கடை பன்னி.ஏன் சார் இந்த பன்னியை போய் நீங்க பார்க்க வர்றீங்களே "
''பணக்காரங்களை தான் இந்த சாமியார் மதிப்பான்.காசுலே தான் குறி. என்னைக்குனாலும் இவன் போலிஸ் கிட்ட கட்டாயம் ஒரு நாள் மாட்டுவான். எவ்வளவு நாள் தான் இவன் மோசடி நடக்கும். பேமானி சிக்குவான் பாருங்க ஒரு நாள் .ரொம்ப நாள் எல்லாரையும் ஏமாத்த முடியாது சார்.''
ஆசிரமம் வந்தவுடன் இந்த பியூன்
'குடு ,குடு ' என்று வேகமாக,
அவசரமாக ஓடி,
பய பக்தியோடு நடுங்கி தோப்பு காரணம் போட்டு ''சாமி, என் தெய்வமே, ஒங்க ஆசீர்வாதம் வேணும் சாமி '' என்று கூப்பாடு போட்டு சாஸ்டாங்கமாக சாமியார் காலில் விழுந்து விட்டாராம்.
......
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.