Share

Jul 29, 2012

கலைந்த ஒப்பனை

மீள் பதிவு     30-11-2008



அந்த படத்தில் ஏற்கனவே இரண்டு முறை எனக்கு கதாபாத்திரம் இயக்குனரால் ஒதுக்கப்பட்டு நான் மேக்கப் முடித்து ஷூட்டிங் ஸ்பாட் போனபின் கடைசி நிமிடத்தில் வேறு நிர்பந்தங்களால் வேறு யாராவது ஒருவர் அதற்கு நடிக்கும்படி யானது .
அப்போதே அந்த யூனிட்டில் R P ராஜநாயஹம் நடிப்பதற்கு ஏன் இப்படி ஏதாவது தடை வருகிறது என பலரும் பேசும் நிலை ஆனது.
அதன் பின் ஒரு இன்ஸ்பெக்டர் ரோல் கொஞ்சம் வித்தியாசமான ரோல் . நான்இன்ஸ்பெக்டர் ஆக வந்து கதாநாயக இயக்குனர் , கதாநாயகி , காமெடியன் ஆகியோரிடம் சும்மா சரம் பட்டாசு போல வெடிக்கும் படியாக காட்சி படமாக்கப்பட்டது.


ஷூட்டிங் ஆறு முறை ஒத்திபோடப்பட்டது.
ஒரு முறை கிளம்பும்போதே ஒரு அசோசியட் டைரெக்டர்
  இயக்குனர் கதாநாயகனிடம் " சார்ஒரு நல்ல நடிகர் செய்ய வேண்டிய ரோல் !ராஜநாயஹம் இதை செய்வது கடினம் . ஷூட்டிங் இன்னொரு நாள் ஒரு நல்ல நடிகரை வைத்து செய்தால் என்ன ?" என்று கதாநாயக இயக்குனர் காரில் ஏறும்போது காதை கடித்தான் ."ராஜநாயஹம் செய்வாரு யா ." இயக்குனர் இப்படி சொல்லி காரில் ஏறி ஷூட்டிங் ஸ்பாட் போன பின் கூட அன்று நான் காக்கி டிரஸ் போட்டு நடித்து ஒரு ஷாட் எடுத்த பின் கேமரா மேனுக்கு உடம்பு சரியில்லை என்று பேக் அப் ஆனது . அடுத்து ஆறு முறை ஷூட்டிங் கான்செல் ஆனது . ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தால் தடங்கல் ! தடை !

ஒரு வழியா அருணாசலம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் செய்யப்பட்டு நான் நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கப்பட்டது . அன்று ஷூட்டிங் பார்க்க வந்த ஒரு கதாநாயக நடிகரின் தம்பி ( இவர் சினிமாவில் ஸ்ரீதர் ,பாலச்சந்தர் படங்களில் வில்லனாக நடித்தவர் ) என்னிடம் " பிரமாதம் சார் ! நீங்க இப்படி நடிப்பதை மற்றவர் செய்ய முடியாது .ரொம்ப கஷ்டம் .என்னாலே செய்ய முடியாது " என்றார் .

ராஜநாயஹம் சீன் என்றே அதற்கு பெயர் . இன்ஸ்பெக்டர் பேட்ஜ் கூட R.P.Rajanayahemஎன்றே எழுதி காக்கி டிரஸ் இல் குத்தப்பட்டு வசனத்தில் கூட நான்
”இந்த இன்ஸ்பெக்டர் R P ராஜநாயஹம் ”என்று என்னை குறிப்பிட்டு கதாநாயகனிடம் மிரட்டுவேன் . இரண்டு ஜீப்பில் பன்னிரண்டு கான்ஸ்டேபிள் இரண்டு சப் இன்ஸ்பெக்டர் சகிதம் வந்து நான் செய்யும் ரைட் தான் அந்த காட்சி !

எடிட்டிங் செய்ய போனபோது
'ராஜநாயஹம் சீன் 'மூவியாலாவில் போட்டவுடன் மூவியாலா Out of order!
தடை தடங்கல்!R P ராஜநாயஹம் நடிப்பது தான் தடைபட்டது . எடிட்டிங் கில் கூட தடை வருகிறதே ! எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள் .

எடிட்டிங் முடிந்து டப்பிங் பேச டப்பிங் தியேட்டர் வந்து 'ராஜநாயஹம் சீன் ' புரஜக்டரில் மாட்டப்பட்டவுடன் புரஜெக்டர் Out of order!
எல்லோருக்கும் புல்லரித்து விட்டது ! இது தற்செயல் கிடையாது .
 எனக்கு மனம் சோர்ந்து போனது .
 ஒரு வழியாக புரஜெக்டர் சரி செய்து ராஜநாயஹம் சீன் ' ஓடிய போது அசோசியட் இயக்குனர் ரிகார்டிங் அறையிலிருந்து இண்டெர்காமில் தியேட்டரில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படியாக சொன்னான் "ராஜநாயஹம்! நம்ம கதாநாயக இயக்குனருக்கு கூட நேச்சுரல் ஸ்கின் கலர் கிடைக்காது .உங்களுக்கு தான் கிடைச்சிருக்கு . க்ளோஸ் அப் எல்லாம் லட்டு மாதிரி வந்திருக்கு "

அந்த படத்தில் கதாநாயகியின் தந்தை ரோல் பண்ணியவருக்காக டப்பிங் பேச வந்தவர் சொன்னார்." நான் நாற்பத்தைந்து படங்கள் உதவி இயக்குனராய் வேலை பார்த்தவன் . நானூறு தமிழ் படம் பார்த்திருக்கிறேன் . தமிழ்த்திரையில் இன்னைக்கு தான்Young Smart ஆ ஒரு இன்ஸ்பெக்டர் ஐ நான் பார்க்கிறேன். இவர் யாரோ எனக்கு தெரியாது .இவரை முகஸ்துதி செய்ய எனக்கு அவசியமும் இல்லே . ஆனா நான் உணர்ந்ததை சொல்றேன் "

டப்பிங் தியேட்டரில் லஞ்ச் சாப்பிடும் போது என்னிடம் சௌன்ட் எஞ்சினியர் சொன்னார் " சார் . நான் சாதரணமா சீன்ஸ் ரசிப்பதில்லை . லூப் மாற்றி வாய்ஸ் பதிவது மெக்கானிகல் வொர்க் பாருங்க . ஆனா உங்க ரோலையும் சீனையும் ரொம்ப ரசிச்சேன் . நீங்க நடிகர் முரளி மாதிரி Soft romantic rolesசெய்யலாம் சார் "

ஒருபோலீஸ் டெபுடி கமிசனர்(அப்போது சட்டம் ஒழுங்கு )பெயர் பாஸ்கர் (இவர் மூன்று வருடம் முன் இறந்து விட்டார் )கதாநாயக இயக்குநரிடமே சொன்னார் " 'ராஜநாயஹம் இன்ஸ்பெக்டர் ரோல் தான் நல்லாருக்கு . இன்னொரு ரெண்டு இன்ஸ்பெக்டர் சகிக்கலே . மூணு இன்ஸ்பெக்டர் ரோலும் ராஜநாயஹம் செய்திருக்கணும் .ஒரு ஊர்லே மூணு இன்ஸ்பெக்டர் ஆ ? அது எப்படி ?"

ப்ரிவியூவின் போது பலரும் படத்தில் என் காட்சியை பார்த்து விட்டு பாராட்டினார்கள் .கை கொடுத்தார்கள் . அந்த யூனிட்டில் இருந்த ஒரு ஆள் ' இந்த மாதிரி ஒரு ரோல் எனக்கு கொடுக்கமாட்டாரா டைரக்டர் என்று தான் பன்னிரண்டு வருடமாக இவர் கிட்டே வேலை செய்யறேன் " என்றார் .

இயக்குனரே சொன்னார் ' 'ராஜநாயஹம் மாதிரி ஒரு சீன்லே வந்தாலும் நிக்கணும்யா ! படம் பூரா நிறைய பிரேமுலே சிவராமன்,செல்லத்துரை மாதிரி வந்து என்ன புரயோஜனம் ?"

கதாநாயக இயக்குனர் ஏனோ கொஞ்சநாளில்என்னிடம் என் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக ' ராஜநாயஹம் ! ரோல் (எதிர்பார்த்த அளவு )நல்லா செய்யலையே ' என்றார் !

கடைசியில் படத்தில் நீளம்-Footage காரணமாக அந்த 'ராஜநாயஹம் சீன் ' நீக்கப்பட்டது .

இந்த விஷயம் தீபாவளி ரிலீஸ் போது பலரும் பார்த்துவிட்டு வந்து என்னிடம் நான் நடித்த காட்சி படத்தில் இல்லை என்று சொன்ன போது தான் எனக்கு தெரிந்தது .

இன்றைக்கு பதினாறு வருடம் ஓடி விட்டது !

படத்தின் பெயர் ராசுக்குட்டி ! அந்த கதாநாயக இயக்குனர் கே .பாக்ய ராஜ் .

இப்போதும் படத்தில் டைட்டில் ஓடும்போது 'ராஜநாயஹம்' என்று பெயர் வரும்!
ஆனால் சீன் இருக்காது !!


நான் எவ்வளவோ வாழ்க்கையில் இழந்திருக்கிறேன் . ஆனால் இப்போதும் ஏதேனும் ஓர் சேனலில் அந்த படம் ஓடும்போது மனத்தில் ஒரு வேதனையும் தன்னிரக்கமும் வர தான் செய்கிறது !

Everything for me becomes Allegory .

- Baudelaire


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.html



4 comments:

  1. மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு சின்ன ரோலுக்கே அசூயை உண்டாகி விட்டிருக்கிறது -அதிலும் ஏற்கெனவே தனக்கென ஓர் இடத்தை சம்பாதித்துக் கொண்டவருக்குக்கூட. என்ன உலகம் இது! :(

    ReplyDelete
  2. What a sad story!

    Is it possible to get a clip of that film...un-edited version??

    Perhaps, if you had acted on it immediately, you could have at least gotten it for private viewing -

    ReplyDelete
  3. முடிந்தால் அந்தக் காட்சியை வலையேற்றுங்களேன். நாங்களும் பார்த்து இரசிப்போம்.

    ReplyDelete
  4. TBCD Sir!
    ஒரு மூவி சிங்கிள் ஃப்ரேம் நெகட்டிவ் கூட எனக்கு கிடைக்கவில்லை.அதை புகைப்படமாகவாவது போட்டு வைத்துக்கொள்ளலாம் என்று. எடிட்டிங் செக்‌ஷனில் அப்போது ஒத்துக்கொள்ளவில்லை.ஒரு வேளை தெலுங்கு டப்பிங் செய்யும்போது ‘ராஜநாயஹம் சீன்’ சேர்க்கப்பட்டால்...என்று சப்பைக் காரணம் சொல்லி மறுத்தார்கள்.இயக்குனரின் கோபம் அப்படி. எனக்கே அதை வீடியோ ரிக்கார்டிங் செய்து கொள்ள ஆசை. ஆனால்அன்று முடியவேவில்லை.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.