Share

Oct 18, 2008

ஆதவன் தானா ?

யாரையாவது பார்த்து ' நீங்கள் தானே '
கேட்டால் அவர் முகம் இறுக்கமாகி பதில் சொல்வார் ' இல்லே . நான் வேறே ' .
எனக்கு இது போல அனுபவம் அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது .
அப்போது டெல்லியில் இருந்து ஆதவன் பெங்களூர் வந்து விட்டார் என தெரியும் . வருடம் 1986. சென்னையில் ஒரு வேலையாய் சென்று விட்டு வைகை எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி திரும்பிகொண்டிருந்தேன். ரயிலில் பிரயாணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் . பஸ் பிரயாணம் கொஞ்சம் கூட பிடிக்காது . ரயிலில் ஜாலியாய் வரும்போது கேன்டீன் போக எழுந்தேன் . நான் இருந்த பெட்டியிலே நான்கைந்து வரிசை தள்ளி உட்கார்ந்திருந்த ஒருவர் எழுத்தாளர் ஆதவன் மாதிரியே இருந்தார் . எனக்கு உடனே சிலிர்ப்பாய் இருந்தது . ஆதவனை நேரில் பார்த்ததில்லை . அவ்வப்போது பத்திரிகை, அவருடைய சிறுகதை நூல் நர்மதா வெளியிட்டதில் பார்த்திருக்கிறேன் .இமயபதிப்பகம் அவர் படத்தை அட்டையில் போட்டார்களா ? இல்லை என்று தான் தோன்றுகிறது . குமுதத்தில் ஒரு கதை அவர் எழுதியிருந்தார் . அப்போது அவர் ஸ்டைலாக கையை சுவரிலோ , கதவிலோ வைத்து நிற்கிறார்போல போட்டிருந்தார்கள் . அப்படி அவரை புகைப்படங்களில் பார்த்ததை ஒப்பிட்டு பார்த்தால் அவர் போல இருந்தது . ஆனால் குழப்பமாய் இருந்தது . ஒரு பரவசம் எனக்கு ஏற்படவும் செய்தது .
இவர் ஆதவனாய் மட்டும் இருந்து விட்டால் ! காகித மலர்கள் , என் பெயர் ராம சேஷன் ஆகிய இரு நாவல்களையும் மூன்று முறை படித்திருந்தேன் . அவருடைய சிறுகதைகளையும் முழுமையாக படித்திருந்தேன் . என்னவெல்லாம் அவரிடம் பேச முடியும் . தி.ஜா பற்றி , ஆதவனின் எழுத்து பற்றி , அசோகமித்திரனின் பற்றி , இடைவெளி சம்பத் பற்றி , இ .பா பற்றி .. நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது . கேன்டீன் போய்விட்டு திரும்பி வரும்போதும் பார்த்தேன் .
அவர் மாதிரி தான் தெரிந்தது . ஆனால் வேறு ஆளாய் இருந்தால் ? கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது .
கேட்டு இல்லை என பதில் வந்தால் அசடு வழியவேண்டுமே . கடைசி வரை கேட்கவே இல்லை . கையில்' ஹிந்து 'பேப்பர் .படித்துகொண்டிருந்தார் .
ஆள் பார்த்தால் பிராமணர் என்பதும் தெளிவாய் தெரிந்தது .ஆனால் ஆதவன் தானா ?
கடைசியில் அவர் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கினார் . அவர் பிளாட் பார்மில் நடந்து போவதை பார்த்து கொண்டே இருந்தேன் .
அடுத்த வருடம் ஆதவனின் அகால மரணம் பற்றி அறிந்த போது அவருக்கு ஏற்பட்ட கதியை நினைத்து கண்ணீர் விட்டு அழுதேன் .
ரயிலில் பார்த்த அந்த மனிதரிடம் பேசியிருந்திருக்கலாமே என இப்போது ஒரு பெரிய உறுத்தலாக இருக்கிறது .
புதுவை சென்ற பின் கி.ரா விடம் சொன்னேன் . கி.ரா வுக்கு ஆதங்கம் .' நீங்க பேசியிருக்கனும் . இனி அந்த வாய்ப்பே கிடையாதேய்யா ' என்றார் .

உயிர்மையில் பாரதிமணி ஆதவன் சொன்னதாக குறிப்பிட்ட விஷயம் போல என் அப்பா வும் அடிக்கடி சொல்வார் .
தெற்கே இந்தியா குறுகி இருப்பது போல மனிதர்களும் குறுகிய மனம் உடையவர்கள் .மதுரை , திருநெல்வேலி ,நாகர்கோவில் பக்கம் பெரும்பாலும் அப்படி தான் . பிரயாணத்தில் கூட பரந்த மனசு சுருங்குவதைபற்றி பாரதி மணி சொன்ன போது ஆதவன் பதில் ரொம்ப விஷேசமானது .

தெற்கே இனி அமைதி இருக்குமா ? ஜாதியை வைத்து தான் அரசியல் என்று இப்போது ஆகியிருப்பதே பாரதி மணியிடம் ஆதவன் சொன்னது சரி தான் என்பதை நிரூபிக்கிறது . மதம் , ஜாதி, ஏன்தமிழ் சினிமா கூட அங்குள்ள மக்களுக்கு இது எல்லாமே ஒரு Obsession ஆகி விட்டது .

3 comments:

  1. ராஜநாயஹம், நீங்கள் நண்பர் ஆதவனைப்பற்றிய நினைவுகளை தூண்டிவிட்டுவிட்டீர்கள்.

    தில்லியில் என் வீட்டுக்குப்பக்கத்தில் இருந்ததால், க.நா.சு.வைப்பார்க்க அடிக்கடி வருவார். He was an intravert. பேசும்போது அவரிடமிருந்து வார்த்தைகளை பிடுங்கவேண்டும். பழக ஆரம்பித்துவிட்டால், சகஜமாக உரையாடுவார். நானும் அவரது Inferiority Complex-ஐ களைவதற்கு மிகுந்த பாடு பட்டேன்.

    1982-ல் பாரதியின் நூற்றாண்டுவிழாவை தில்லியில் விமரிசையாகக்கொண்டாடினோம். பாரதி பாலு, நான், ஆதவன், லா.சு. ரங்கராஜன் போன்றோர், பாரதியின் நூறாண்டு பூர்த்தியானதால், ‘பாரதி-200’ என்ற அமைப்பைத்தொடங்கி, குடியரசுத்தலைவர் தொடங்கிவைத்து, சீனி. விசுவநாதன், ரா.அ. பத்மநாபன் மற்றும் பல கலைஞர்கள் கலந்துகொண்டு ஒருவார விழா அமர்க்களமாக நடந்தேறியது. அதில் ஆதவனுடன் நெருங்கி பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆதவன் ‘புழுதியில் வீணை’ என்ற பெயரில் பாரதியின் வாழ்க்கையை ஒரு சிறந்த நாடகமாக எழுதியிருந்தார். நேரக்குறைவு காரணமாக, அந்த நாடகத்தை என்னால் மேடையேற்ற முடியவில்லை. சனிக்கிழமை தோறும் நடக்கும் ‘பாரதி கூட்டத்தில்’ Play Reading முறையில் நான் அதை வாசித்தேன். பாரதியைப்பற்றி ஆழமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நாடகம் அது. அது புத்தகமாக வெளிவந்ததாகத் தெரியவில்லை.’பாரதி’ படப்பிடிப்பின்போது, நாடகப்பிரதியைத்தேடினேன். கிடைக்கவில்லை.அவர் தெற்கே வந்தபிறகு, அவருடனான தொடர்பு குறைந்தது.

    மனம்விட்டுப்பழகும் நல்ல நண்பர். அவரை நினைவுபடுத்தியதற்கு நன்றி!

    பாரதி மணி

    ReplyDelete
  2. வருடம் 1974 -இறுதிப்பகுதி. நான் ஆதவனை முதலில் பார்த்தது என் அண்ணாவின் வீட்டில் (சரோஜினி நகர், புது டில்லி). ஏதோ புத்தகம் கொடுக்கவோ, வாங்கவோ வந்திருந்தார். சில நிமிடங்களே இருந்துவிட்டுப் போனதாக ஞாபகம். என் அண்ணாவின் நண்பர். அவருடன் ரயில்வே மினிஸ்ட்ரியில் வேலை செய்துகொண்டிருந்தார் அப்பொழுது. அண்ணாவின் மூலம் அவர் எழுத்து பற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். {அவருடைய ‘இரவுக்கு முன் வருவது மாலை' (if I remember the title right) பற்றி (சிறுகதைத் தொகுப்பு?) - என் அண்ணா சிலாகித்ததாக நினைவு.} அவருடைய கட்டுரை ஒன்று (சாகித்ய அகாதமி விருது பற்றி என்பதாக நினைவு)கணையாழியில் படித்திருந்தேன்.

    கடைசி முறையாக அவரைப் பார்த்தது டில்லி மௌளங்கர் ஆடிட்டோரியத்தில்,'பாரதி 200'விழாவின் போது. அவர் அதில் பேசினார். அவ்வப்போது கையில் வைத்திருந்த குறிப்புகளைப்பார்வையிட்டபடி, பாரதியின் எழுத்துக்கள், கருத்துக்கள் பற்றி ஒரு unorthodox சொற்பொழிவாற்றினார். மென்மையான, sensitive-ஆன மனிதர் எனத் தோன்றியது.

    அவருடைய அகால மறைவு பற்றி, சோமாலியாவில் நான் இருந்தபோது கேள்விப்பட்டு சோர்வுற்றேன்.

    ஆதவனின் ‘காகித மலர்கள்' நாவலைக் கடந்த வருடம்தான் படிக்க நேர்ந்தது. இன்னும் நிறைய இவர் எழுதியிருக்கக் கூடாதா என ஏங்க வைத்த எழுத்து.

    இந்தியா திரும்பியவுடன் படிக்கவிரும்பும் நாவல்கள் முக்கியமாக இரண்டு: ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்', மற்றும் சாரு நிவேதிதாவின் ‘ஸீரோ டிகிரி'.

    உங்களுடைய வலைப்பதிவுகளை கொஞ்ச நாளாகப் படித்துவருகிறேன். நன்றி : சாரு நிவேதிதாவுக்கு,
    உங்கள் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்காக.

    அன்புடன்,
    - விஜய் (ஹவானா, கூபா).

    ReplyDelete
  3. ஆதவன் என்ற ஒற்றை வரியை மேற்கோள் காட்டி விட்டாலே, ஓடி போய் அவர் என்ன சொல்லவரார் அதவான பத்தி என கேட்க்கும் வாசக மனநிலை தான் எனக்கும். பாரதி மணி அவர்கள், "பல நேரங்களில் பல மனிதர்களில்" ஓரிடத்தில் நானும் ஆதவனும் அந்த கேண்டீனில் மதிய உணவு சாப்பிடுவோம் என்ற வரியையே அத்தனை நேரம் பார்த்து கொண்டு இருந்தேன்.
    உங்கள் பதிவு, அவரை பற்றிய எண்ணங்களை அழகாய் ஒன்று சேர்த்து உள்ளது.

    நன்றி,
    மதன். எஸ்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.