Share

Oct 4, 2008

அழகிய மிதிலை நகரினிலே!

ஹரிநாத் ராஜா ! பானுமதி நடித்த 'அன்னை' படத்தில் அவருக்கு வளர்ப்பு மகன் . தங்கை மகனை தத்து எடுத்து வளர்ப்பார் . தங்க தட்டில் தான் சோறூட்டி பொத்தி பொத்தி வளர்ப்பார் படத்தில் .

சச்சு உடன் ஹரி நாத் ராஜா வுக்கு ஒரு அருமையான பாடல் . அழகான காரில் .

அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள்

சுமை தாங்கி யில்

எல் .விஜய லக்ஷ்மி யுடன்

'ஒ மாம்பழத்து வண்டு '

சரஸ்வதி சபதம் படத்தில் ' நாட்டிய பேரொளி 'பத்மினிக்கு ஜோடி . பரமசிவனாக .

எங்கிருந்தோ வந்தாள் படத்தில் வில்லன் . சிவாஜி யை குடித்து விட்டு ஹரி நாத் ராஜா நிஜமாகவே நடிக்கும்போது கன்னத்தில் அறைந்து விட்டார் .பாலாஜி இவரை பெண்டு கலட்டி விட்டார் .

பாண்டி பஜார் ரோகினி இண்டெர்நேஷனல் லொட்ஜில் வைத்து ஒரு நாள் சுப்ரமணிய அய்யர் என்பவர் இவர் நடந்து போகும்போது காட்டி ' இவர் யார் தெரியறதோ ? ஹரி நாத் ராஜா . ' என சுட்டினார் . ஆர்வமாக பார்த்தேன் . வசதி இல்லை இப்போது அசதியில் இருப்பது பார்த்தவுடன் தெரிந்தது . குடித்தே வீணாக போய் விட்டார் . குழந்தைகளும் இவருக்கு அதிகம் என அறிய வந்தேன் .

ஹரி நாத் ராஜா போன சிறிது நேரத்தில் நான் கிளம்பினேன் . பஸ் ஸ்டாப் . ராஜா அங்கே பஸ் க்காக நின்று கொண்டிருந்தார் . நான் அவரை மீண்டும் பார்த்தேன் . தான் இன்னார் என்று எனக்கு தெரிந்து புரிந்து தான் அவரை கவனிக்கிறேன் என்பதை உணர்ந்து என்னை பார்த்தார் . அதற்குள் பஸ் வந்து விட்டது . சரியான கூட்டம் பஸ் நிறைய . ஏறவும் பலரும் பெரும் முயற்சி எடுக்க ஆரம்பித்தனர் .

இவர் பின்புற வாசல் கம்பியை பிடித்து ஏற பகீரத பிரயத்தனம் செய்கிறார் . நழுவி மீண்டும் முயல்கிறார் . கம்பியை பிடித்த பிடியை விடவில்லை . கண்டக்டர் ' இடமில்லைப்பா . அடுத்த வண்டியில் வாப்பா ' என்று கூப்பாடு போடுகிறார் . கூட்டம் முண்டிக்கொண்டு இருக்கிறது . பஸ் கிளம்ப விசில் கொடுத்த கண்டக்டர் கம்பியை பிடித்திருக்கிற ராஜாவின் கையில் அடித்து ' கைய எடுப்பா . கைய எடுக்க மாட்டே ' சத்தம் போடுகிறார் . ராஜா வின் பிடி தளர்ந்து தடுமாறி கடைசி படியிலிருந்த ஒற்றை காலை கீழிறக்கி தள்ளாடி தவித்து நிற்கமுடியாமல் இறங்கி நிற்கிறார் . நிலைப்பட சற்று நேரமாகிறது .

'அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் .'

அந்த பாடல் அந்த கணத்தில் அங்கிருந்த கடையொன்றில் நிஜமாக ஒலித்தது .

அவர் அவமானத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்தார் . உறுத்தும் உண்மையை காண சகியாமல் நான் நடக்க ஆரம்பித்தேன் .

அவர் அடுத்த பஸ் க்காக காத்துகொண்டிருந்தார் .

ரேடியோ பாடல் சரணம் பாடிகொண்டிருந்தது

"காவிய கண்ணகி இதயத்திலே

கனிந்தவர் யார் இளம் பருவத்திலே "

அவர் அந்த பாடலை கேட்டுகொண்டே தான் அடுத்த டவுன் பஸ் ஐ எதிர்நோக்கிகொண்டிருந்தார் .

5 comments:

  1. "அவர் அவமானத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்தார்" .

    "உறுத்தும் உண்மையை காண சகியாமல் நான் நடக்க ஆரம்பித்தேன் "

    வாழ்வின் அவலமான நிமிடங்கள்-இருவருக்கும்..அவருக்காவது பழகிப் போயிருக்கும்..உங்களுக்கு?? படிக்கும் போதே என் நெஞ்சு வெடிக்கிறது

    ReplyDelete
  2. வார்த்தைகளில் மனிதரின் நிலைமையை நன்றாக படம் பிடித்திருக்கிறீர்கள். எழுத்துக்கு பாராட்டுகள்.

    -Bags

    ReplyDelete
  3. தியாகராஜபாகவதர் நடந்தே எக்மோர் ரயில் நிலையத்துக்கு வந்து சென்றதை படித்ததுண்டு. காலப்புருஷனின் கண்ணீர்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.