Share

Oct 2, 2008

கரிச்சான் குஞ்சு என்ற அதிமானிடன்

சாரு நிவேதிதா வின் முதல் நாவல் விமர்சனத்தில் நான் குறிப்பிட்டேன் .

"கு.ப .ரா எட்டடி பாய்ந்தால் கரிச்சான் குஞ்சு தன் 'பசித்த மானிடம் ' நாவலில் பதினாறடி பாய்ந்து விட்டார் ."

முப்பது வருடங்களுக்கு முன் மீனாக்ஷி நிலையம் வெளியிட்ட நாவல் .

தி.ஜா தான் மீனாக்ஷி நிலையம் செல்லப்பனிடம் இந்த நாவலை பிரசுரிக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் . நாவலின் தனி தன்மைக்காக மட்டுமல்ல . கரிச்சான் குஞ்சு வின் மகளுக்கு அப்போது கல்யாண செலவுக்கு பணம் தேவை பட்டது . செல்லப்பன் வியாபார நோக்குடனும் , இதை வெளியிடுவதினால் பின்னால் கலாச்சார காவலர்களின் அச்சுறுத்தல் களுக்காக வும் தயங்கியிருக்கிறார் . தி .ஜா வின் வற்புறுத்தல் தான் 'பசித்த மானிடம்' நூலை பதிப்பிக்க காரணம் ஆகியிருக்கிறது . என்னிடம் செல்லப்பன் இந்த விஷயத்தை நாவல் வெளியான மூன்றாம் ஆண்டு நான் நாவலை வாங்கிய போது தெரிவித்தார் . கலாச்சார காவலர்களின் பார்வைக்கு இது தப்பி விட்டதற்கு காரணமே இந்த நாவல் வெளியான விஷயமே அவர்கள் கவனத்திற்கு செல்ல வில்லை என்பது தான் . (அரசியல் கட்சிகாரர்களுக்கும் அப்போதெல்லாம் இப்போது போலவே படிக்கிற வேலையெல்லாம் கிடையாது .)அதன் காரணமாகவே விற்பனையும் படு மந்தம் . செல்லப்பன் என்னிடம் பேசும்போது பசித்த மானிடம் நாவல் பிரசுரம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை பற்றி தான் ஆதங்கமாக பேசினார் .

இலக்கிய பத்திரிகைகள் கூட இந்த நாவலை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை . க . நா . சு . சுந்தர ராம சாமி , வெங்கட் சுவாமிநாதன் , பிரமிள் போன்றோர் கூட பசித்த மானிடம் பற்றி பிரமாதமாக பேசவில்லை .

ஒரு மிக சிறந்த நாவலின் கதி பாருங்கள் . கோவை ஞானி , அ .மார்க்ஸ் கொஞ்சம் தாமதமாக கரிச்சான் குஞ்சு பற்றி கட்டுரை எழுதி பிற கட்டுரைகளுடன் புத்தகங்களாக வந்தன .

ஆதவன் தான் கரிச்சான் குஞ்சு ஆளுமை பற்றி மிக அழகாக சொன்னார்

' அறிவை மறைத்து வைத்து இயல்பாய் இருப்பது சிரமமான காரியம் . அது கரிச்சான் குஞ்சுவுக்கு சாத்தியம் ஆகியிருக்கிறது '

முன்பெல்லாம் மறு வாசிப்பு செய்கிற நாட்களில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மூன்று மாதம் ஒதுக்குவேன் . அப்படி மறு வாசிப்புக்காக கரிச்சான் குஞ்சுவுக்கு ஒதுக்கி ' பசித்த மானிடம் ' நாவல் மற்றும் அவரது சிறுகதைகள் மறு வாசிப்பு செய்த போது அவரை கண்டடைந்ததற்காக மிகவும் சந்தோசம் அடைந்திருக்கிறேன் .

தேவர்களுக்கு வாகனங்கள் !

சனீஸ்வரனுக்கு வாகனம் காகம் . பிள்ளையாருக்கு எலி . முருகனுக்கு வாகனம் மயில் . எமனுக்கு வாகனம் எருமை .

இப்படி குபேரனுக்கு வாகனம் என்ன தெரியுமா ? மனிதன் !

கரிச்சான் குஞ்சு ஒரு சிறுகதையில் சொல்வார் " பேஷ் பேஷ் . என்ன அழகாக வேதத்தில் எழுதி இருக்கிறான் . குபேரனுக்கு வாகனம் மனிதன் . பணக்காரன் மனிதர்கள் மீது தானே சவாரி செய்கிறான் . அதிலும் ஏழை எளியவர்கள் பணம் படைத்தவனுக்கு வாகனம் என்பது சரிதானே . பேஷ் பேஷ் ."

ஏழை எளியவர்கள் தானே பணம் படைத்த குபேரனுக்கு வாகனம் .

இப்போது என்னுடைய முந்தைய பதிவை -' விவசாயி - உழவும் வாழ்வும்' மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் .

2 comments:

  1. அந்தக் காலகட்டத்தில் கலாச்சார புனித வேடம் பூண்டு கொண்டிருந்த தமிழ் புதினங்களில் homo-க்களைப் பற்றி குறி்ப்பிடப்பட்ட முதல் நாவல் இதுதான் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. ”பசித்த மானிடம்” நாவலை தற்சமயம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இத்தனை காலம் இத்தனை சிறந்த எழுத்தாளரின் படைப்புகளை படிக்காமல் போனது நட்டமே.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.