புதுவை பல்கலைக்கழக "திஜானகிராமன் " கருத்தரங்கம் காலையில் ஆரம்பித்து முடிந்த பின்னால் மாலை இந்திரா பார்த்த சாரதி தன் வீட்டுக்கு என்னை கூப்பிட்டார் .
இந்திரா மாமி முகம் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறது . அவர் வீட்டில் இரு முறை எனக்கு அந்த காலத்தில் நல்ல சுவையான பட்சணங்கள் கிடைத்தன . பாதாம் அல்வா சாப்பிட்டதை மறக்கவே முடியாது . பின்னால் அடுத்த வருடம் இ பா சாகித்திய அகாதேமிக்காக திஜா பற்றி ஒரு நூல் எழுத வேண்டி என்னிடம் உள்ள அனைத்து திஜா நூல்களையும் வாங்கினார் .புத்தகங்கள் கொடுத்து நான் சில மாதங்களில் ஊரை விட்டு செல்லவேண்டி வந்த போது புத்தகங்களை இபா திருப்பி கொடுத்தார் .'மரப்பசு' நாவல் மட்டும் எங்கோ எப்படியோ தவறி விட்டது .கிடைக்கவில்லை . அதற்காக மாமி என்னிடம் மிகவும் வருந்தியதுடன் மன்னிப்பும் கேட்டார் . 'ஐயோ ஒன்னும் இல்லே மாமி . அது கிடைக்க கூடிய புத்தகம் .நான் விலை கொடுத்து வாங்க முடியும் . நீங்கள் கவலையே படாதீர்கள் ' என்றேன் நான் அப்போது .
விஷயத்துக்கு வருவோம்.திஜாநிகழ்வு முடிந்து அவர் வீட்டுக்கு போய் பேசிகொண்டிருந்தேன் .திஜா விடம் பள்ளிகூடத்தில் படித்த மாணவர் இ பா . இபா விடம் படித்த கல்லூரி மாணவர்கள் ஆதவனும் சம்பத்தும் . இபா சாகித்ய அகாடெமி விருது 'குருதிப்புனல்' நாவலுக்காக வாங்கிய பின்னால் தான் ' சக்தி வைத்தியம் ' சிறுகதைநூலுக்காக சாகித்திய அகாடெமி விருது ஜானகி ராமன் வாங்கினார் .குருவுக்கு முந்தி சீடனுக்கு விருது !
இலக்கிய அரசியல் பற்றி பேச்சு திரும்பியது . அப்போது அந்த காலத்தில் டெல்லியில் இ பா வுக்கும் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி .
மாமி கணவர் மீது பரிவுடன் பேசுவது இயல்பான விஷயம் .' உங்க மீது வெங்கட் சாமிநாதனுக்கு பொறாமை . நீங்க சாகித்திய அகாடமி அவார்ட் வாங்கியதுனால பொறாமை தான் உங்க மேல கோபத்துக்கும் காரணம் ' - சத்தமாக சொன்னார் .
சாதாரணமாக புருஷன் இப்படி பொஞ்சாதி பேசும்போது தலையாட்டி தானே பார்க்க முடியும் . ஆனால் !
உடனே இ பா அதை மறுத்து சொன்னார் " ச்சே ச்சே .. அதெல்லாம் வெங்கட் சாமி நாதன் விருது க்கு ஏங்குகிற ஆள் இல்லே . அப்படி ஆசை அவனுக்கு கிடையவே கிடையாது . ரொம்ப நேர்மையான ஆள் . நீ சும்மா இரு "
உடம்பில் எனக்கு சிலிர்ப்பு ஏற்பட்டது .
அந்த நேரத்தில் இந்திரா பார்த்த சாரதி , வெங்கட் சாமி நாதன் இருவரும் என்னில் உயர்ந்து விசுவரூபம் எடுத்தார்கள் !
"எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு"
தியாக பிரும்மத்தின் ஸ்ரீ ராக கீர்த்தனை என்னுள் வியாபித்த தருணங்களில் இதுவும் ஒன்று !
Exciting....
ReplyDeleteMark of great men, always humble...your posts are simply irresistable
ReplyDeleteநிறைகுடங்கள் ததும்பாது...
ReplyDelete