Share

Oct 6, 2008

சுஜாதா

அன்புள்ள ராஜ நாயஹம்,
சுஜாதா என் ஆதர்ஷ எழுத்தாளர். அவரை, அவரது எழுத்துப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? சாரு என்னிடம் ஒரு முறை ப.சிங்காரம் அவரையும் தாண்டிய ஒருவர் எனச் சொல்லி உள்ளார். முகுந்த் நாகராஜனின் கருதும் அதுவே. நீங்களும் என்னிடம் புயலில் ஒரு தோணி படிக்கச் சொல்ல் உள்ளீர்கள்.
சுஜாதாவிடம் நேரடி அனுபவம் உண்டா? ஏதேனும் சுவையான சம்பவங்கள்?
சுஜாதா ஒரு Trend setter என்பதில் மாற்றுக் கருத்து உண்டா?
அன்புடன்
சூர்யா.
பின் குறிப்பு 1- இதை முதல் கேள்வியாய்க் கொண்டு கேள்வி பதில் பகிதி ஆரம்பிக்கலாம்.
2 மேற்கண்ட கேள்வியை மாற்றிக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு

......

அன்பு மிக்க மும்பை சூர்யா
உங்களுடைய ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா என்று சொல்லிவிட்டீர்கள் . இவரோடு பாலகுமாரனையும் உங்கள் ஆதர்ஷ எழுத்தாளர் என முன்பே சொல்லி விட்டீர்கள் .
உங்கள் கேள்வியில் ஓங்கி தெரிவது உங்கள் ஆக்ரமிப்பு . ஒருவகையான மிரட்டல் .
சுஜாதாவையும் ப . சிங்காரத்தையும் ஒப்பிடவே முடியாது .கூடவே கூடாது .
இன்னொன்று இங்கே ஒரு பதிவிற்கான பின்னூட்டத்தில் என்னை பாலகுமாரனுடைய உடையார் படிக்க சொல்கிறீர்கள் . Balakumaran – Poorman’s Janakiraman!
நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் . நான் சொல்கிற சில எழுத்தாளர்களை நீங்கள் படித்து விட்டு பின் பால குமாரன் பற்றி உடையார் பற்றி முடிவெடுங்கள் .உங்களுக்கு நான் பட்டியலிட வேண்டுமா . அசோகமித்திரன் , சுந்தர ராம சாமி ,புதுமைபித்தன் , ந .பிச்ச மூர்த்தி , கு.ப .ரா , மௌனி , தி .ஜா , எம் வி வெங்கட் ராம் , கரிச்சான் குஞ்சு , இந்திரா பார்த்தசாரதி , கி.ரா . ஆதவன் , சம்பத்,ஜி .நாகராஜன் , ப .சிங்காரம் ,நகுலன் ,பிரமிள் ,வண்ண நிலவன் போன்றவர்களை படித்து முடித்த பின் பால குமாரன் பற்றி முடிவெடுங்கள் .
நான் படிக்க நிறைய புத்தகங்கள் வரிசையில் உள்ளன . அந்த வரிசையை உடைத்து உடையாருக்கு முன்னுரிமை தந்து படிக்கவே மாட்டேன் .
பரந்த வாசிப்பு இல்லாத தாங்கள் சுஜாதாவையும் , பாலகுமாரனையும் ஆதர்சம் என்று சொல்கிறீர்கள் . நிறைய படித்து விட்டு இந்த முடிவுக்கு வரவே முடியாது .
இந்த தோரணையில் ஒரு ரமணி சந்திரன் , இந்திரா சௌந்தரராஜன் ரசிகர் கூட அவர்கள் நாவலை படிக்க சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தால் என்னாவது ? சொல்லுங்கள் .
இந்த ரமணி சந்திரன் போஸ்டர் நேற்று கவனித்தேன் .ஊர் பூரா ஒட்டியிருந்தது .
ரமணி சந்திரன் சொல்கிறார் : என்னுடைய ஹீரோக்கள் , ஹீரோயின்கள் உருவாவது எப்படி ?
இப்படி ஒரு போஸ்டர் . இந்த சூட்சுமத்தை படித்து கற்று தேறி எத்தனை குட்டி எழுத்தாளர்கள் உருவாக போகிறார்களோ ?
சில வருடம் முன் ராஜேஷ் குமார் நாவலுக்கு விளம்பரம் -போஸ்டர் கீழ்கண்டவாறு
கல்கிக்கு ஒரு "பொன்னியின் செல்வன் "
தி .ஜானகிராமனுக்கு ஒரு " மோக முள் "
ராஜேஷ் குமாருக்கு ஒரு " ஒரே ரத்தம் "


இதுவும் ஒரு வகையான மிரட்டல் தான் . கல்கிக்கும் ராஜேஷ் குமாருக்கும் இடையில் கிடுக்கிபிடியில் தி.ஜானகிராமன் !
சுஜாதா பற்றி எல்லோரும் இப்போது தான் நிறைய சொல்லி முடித்திருக்கிறார்கள் .
அவரை பற்றி சொல்ல இனி ஒன்றுமில்லை .
சுஜாதா ஒரு தமிழில் Trend setter என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்கமுடியாது .
ஆனால் சுஜாதாவை நான் முழுமையாக படித்தவன் .அவருடைய சிறுகதைகள் கனமானவை . அப்புறம் அந்த 'வானமென்னும் வீதியிலே' , நைலான் கயிறு '
அதோடு நல்ல வழிகாட்டி . அவருடைய 'விருப்பமில்லாத திருப்பங்கள் ' நாயகன் கையில் பூமணியின் "பிறகு " .
கணையாழியின் கடைசிப்பக்கங்கள் . அறிவியல் கட்டுரைகள் .
அவருடைய பத்தி எழுத்து .
சுஜாதாவை ' கரையெல்லாம் செண்பகப்பூ ' டப்பிங் போது அவரை மிக அருகில் இருந்து ஒரு இரண்டு மணி நேரம் கவனித்து கொண்டிருந்தேன் . மனோரமா வந்தவர் உடனே டப்பிங் பேச ஆரம்பித்தார் . விளக்கை மீண்டும் போட்டவுடன் மனோரமா சுஜாதாவை பார்த்து விட்டு 'அய்யோயோ சார் நீங்க இங்கேயா உட்கார்ந்திருன்தீங்க ? நீங்க இருப்பது தெரிந்திருந்தா பயத்திலே என்னாலே பேசியிருக்கவெ முடிந்திருக்காது .உளறி கொட்டியிருந்திருப்பேன் ' என்றார் . பச்சை கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தார் சுஜாதா . மனோரமா விடம் அவர் சமீபத்தில்பார்த்த 'திருமலை தென்குமரி ' படத்தில் அவருடைய நடிப்பில் ஒரு குறிப்பிட்ட இடம் பற்றி " ஒரு எழுத்தாளருக்குடைய அப்சர்வேசன் அது ' என பாராட்டினார் .மனோரமா எப்போதும் போல் பரவசமாகி ' சார் உங்க கிட்ட பாராட்டு வாங்க கொடுத்து வச்சிருக்கணும் சார் . ' என்றார் .
டப்பிங் காக லூப்களை பின்னோக்கி ஓட்டும்போது ரிவர்சில் நடிகர்கள் அபத்தமாக விகாரமாக செய்கைகள் மாறுவது பற்றி " கொடுமை கொடுமைங்க . சம்பந்தபட்டவங்க பார்க்கும்போது நொந்து போயிடுவீங்களே " என்று மனோரமா , ஸ்ரீப்ரியா , தப்புத்தாளங்கள் சுந்தர் ஆகியோரை கிண்டல் செய்தார் . நான் அவரிடம் பேசவே இல்லை . இரண்டு மணி நேரமும் அவரை அப்சர்வ் செய்துகொண்டிருந்தேன் . அவரோடு வாசகனுக்கு பேசும் சூழல் இல்லை அது .சினிமாக்காரர்கள் சூழ சினிமா கனவுகளுடன் அந்த சுஜாதா .
மேலும் நானும் அப்போது அவரை (அதுவரை அவர் எழுதியிருந்த அத்தனையும் )முழுமையாக படித்திருந்த போதும் ரொம்ப சின்னவயது .
அன்று அதன் பின் எனக்கு ஒரு ஓட்டை சமாதானம் செய்து தேற்றி கொண்டேன் . ஒரு நொண்டி சாக்கு .
அவருடைய வார்த்தைகள் " உண்மையான ரசிகர்கள் , வாசகர்கள் நேரில் சந்திக்கிற ,பேசுகிற ஜாதியில்லை ."
உங்கள் நண்பர் முகுந்த் நாக ராஜன் கவிதைகளை எனக்கு பிடிக்கும் .

4 comments:

 1. சார், இன்னும் எழுதப்படாத கதைகள் இருக்கின்றனவா? எப்படி புதிது புதிதாக எழுத முடியும் ?
  கதைகள் எழுத தொடங்கி ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டதல்லவா !

  ReplyDelete
 2. அன்புள்ள ராஜ நாயஹம்,

  முதலில் என் மனமார்ந்த நன்றி விரிவான பதில் அளித்தமைக்கு.

  நான் வாசகன் என்பதை விட வாசிக்க விரும்புபவன் என்று சொல்லிக் கொள்ள விழைகிறேன்.
  நான் வாசிக்கத் துவங்கிய காலத்தில் எனக்கு அறிமுகமானவர்கள் இவர்கள்தான். நான் ஒரு காலத்தில் ராஜேஷ் குமாரின் தீவிர வாசிப்பாளன் என்பதை இப்போது சொல்கையில் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது.

  இப்போதுதான் வாசிப்பு என்றால் என்ன என்று தெரிகிறது. இத்தனை மாணிக்கங்களை விட்டு கூழாங் கற்களுடன் கும்மி அடித்து இருப்பது தெரிய வருகிறது.
  நீங்கள் ஏற்கனெவே தொலை பேசியில் படிக்கச் சொன்ன அத்தனை பேரையும் தேடி தேடிப் படிக்கிறேன்.

  என் கேள்வியில் தெரிவது மிரட்டல் ஆனால் அது காதலியிடம் செல்லமாய்
  மிரட்டி முத்தம் வாங்குவோமே ...தாயிடம் மிரட்டி சினிமாவுக்கு காசு வாங்குவோமே......அப்பாவை மிரட்டி சைக்கிள் வாங்குவோமே...அந்த வகையறாக இருக்கலாம்.
  உடையார் படிக்கச் சொன்னது பால குமாரன் சிறந்த இலக்கியவாதி எனபதற்காக அல்ல. ஒரு வர்த்தக எழுத்தாளரால் அப்படி ஒரு புத்தகம் எழுத முடியாது என்பதற்காகவே. இன்னமும் உங்கள் கருத்தான “பால குமாரன்' வர்த்தக எழுத்தாளர் என்ற கருத்தில் இப்போது உடன்பாடு இல்லை.

  நான் நீங்கள் குறிப்பிட அத்தனை பேரையும் படிக்க முயற்சி செய்கிறேன்.
  ”பரந்த வாசிப்பு இல்லாத தாங்கள் சுஜாதாவையும் , பாலகுமாரனையும் ஆதர்சம் என்று சொல்கிறீர்கள் . நிறைய படித்து விட்டு இந்த முடிவுக்கு வரவே முடியாது '.

  பரந்த வாசிப்புக்கு தங்கள் வழி காட்டுதல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். ஒரு வேளை நான் அத்தனை பேரையும் படித்த பிறகு என் ஆத்ர்ஷ எழுத்தாளர் மாறலாம். யார் கண்டது.சரியான அறிவுரைக்கு என் மனமார்ந்த நன்றி.
  'உங்கள் நண்பர் முகுந்த் நாக ராஜன் கவிதைகளை எனக்கு பிடிக்கும்' . இதற்கும் நன்றி.
  அன்புடன்
  சூர்யா.

  ReplyDelete
 3. உண்மையில் பாலகுமாரனுக்கு மேல் படிக்காதவர்கள்தான் தமிழ்ச்சமூகத்தின் பெரும்பான்மை.
  அவரின் எழுத்துக்களுக்கான சரியானதாக நான் கருதும் ஒரு விமர்சனம் வைத்தபோது நான்தான் மோசமாக விமர்சிக்கப்பட்டேன்.

  அத்தகைய 'படிப்பாளிகள்' இருக்கும் சமூகம் இது !

  ReplyDelete
 4. I was introduced to Balakumaran's books by my friend in 1992, I stopped reading him back in 1995.

  I used to read atleast 3/4 novels from the local library.then on I never touched Balakumaran,ramani chandran etc..

  RP Sir, please introduce more writers from "world literature"...

  ReplyDelete